Advertisement

“அப்படிச் சொல்லாத நந்திதா. அவள் இங்க இருக்கா. இப்போ மட்டுமில்லை எப்பவும்.” என்று அவனது இதயத்தைத் தொட்டுக் காட்டிக் கூற, நந்திதாவின் முகம் ஒரு நொடிச் சுருங்கி மீண்டும் சாதாரணமாக மாறியது. அவளுக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது விபீஷணன் மனதில் அவள் இடம்பிடிக்கப் பிரியா கூறியது போல் நிறையப் போராட வேண்டும் என்பது. அதை நினைத்தாளே அவளுக்குத் தலை சுற்றியது. அவள் அப்படியே எதுவும் பேசாமல் இருப்பதைப் பார்த்த விபீஷணன்,

“என்னாச்சு? அப்படியே நின்னுட்ட?” என்று அவன் கேட்க,

அவள் தலையை இரு பக்கமும் ஆட்டி,”அதலாம் ஒன்னுமில்லை விபீ. உங்க வைஃப்க்கு உங்களோட அன்பை அனுபவிக்க முடியாமல் போயிடுச்சுனு நினைச்சு வருத்தமா இருக்கு.” என்று அவள் கூற, விபீஷணன் அதற்கு ஏதோ பதில் கூற வர, அதற்குள் அங்கு வந்த செவிலியர் அர்ச்சனா,

“மேடம் இங்க இருக்கீங்களா? எல்லாரும் வந்துட்டாங்க சீஃப் டாக்டரும் வந்துட்டாங்க. நீங்க வந்துட்டீங்களானு பார்க்கத் தான் நான் வந்தேன்.” என்று அவளுடைய செவிலியர் கூற, மனதில் அர்ச்சனாவை தாளித்தபடியே நந்திதா விபீஷணனிடம்,”ஓகே விபீ அடுத்த முறை என்னைப் பார்த்தா பழையபடி முறைச்சுட்டு போகாமல் கொஞ்சம் சிரிங்க.” என்று கூறிவிட்டு அவள் அர்ச்சனாவுடன் சென்றுவிட, விபீஷணனுக்குத் தான் இவளை நம்பலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே அவனும் பொங்கல் கொண்டாடும் இடத்திற்குச் சென்றான்.

அந்த மருத்துவமனையில் இருக்கும் அனைவருக்கும் பொங்கல் செய்ய வேண்டும் என்பதால் அங்கிருக்கும் அனைவருமே சேர்ந்து அனைத்துப் பொருட்களையும் போட்டே கூட்டாகப் பொங்கல் வைக்க அந்த மருத்துவரின் உரிமையாளரின் மனைவி அந்தப் பொங்கலை சாமிக்குப் படைத்துக் கும்பிட, அனைவரும் அவரைத் தொடர்ந்து சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் வாழை இலையில் வைத்துக் கும்பிட்ட பொங்கலைத் தர, அதை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் அவரவர் நட்புகளுடன் தனியாகச் சென்று சாப்பிட, விபீஷணன் அவர்கள் கொடுத்த பொங்கலை வாங்கிக் கொண்டு அவனது அறைக்குச் சென்று விட, அவனையே பார்த்துக் கொண்டிருந்த நந்திதாவும் அவள் பேசிக் கொண்டவர்களிடம் இருந்து விலகி அவனைத் தொடர்ந்து சென்றாள்.

நந்நிதா தன்னைப் பின் தொடர்ந்து வருவது தெரியாமல் விபீஷணன் அவனது அறைக்குச் சென்று அந்தப் பொங்கலை மேஜை மீது வைத்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தான். நந்திதா அப்போது கதவைத் தட்டிவிட்டு அவன் பதில் சொல்வதற்கு முன்பே உள்ளே நுழைய, அவளை அங்கு எதிர்பார்க்காத விபீஷணன் புருவச் சுழிப்புடன் அவளைப் பார்க்க, அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல் அவனுக்கு எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்து,

“என்ன விபீ உங்களுக்குப் பொங்கல் பிடிக்காதா? சாப்பிடாமல் அப்படியே வைச்சுட்டீங்க?” 

“ப்ச் இப்போ தான் வீட்டுல சாப்பிட்டு வந்தேன். அதனால கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கிறேன். நீ இங்க என்ன பண்ற?” என்று அவன் கேட்க,

“இல்லை விபீ நாம பேசிட்டு இருக்கும் போது அர்ச்சனா வந்து கூப்பிட்டு போயிட்டாங்களா அதான் இங்கப் பேசலாம்னு வந்தேன்.”

“ஓ! ஆனால் நாம பேச என்ன இருக்கு?” என்று அவன் பிடிக் குடிக்காமல் பேச,

“என்ன விபீ இப்படிச் சொல்றீங்க? நாம பேச நிறைய இருக்கு.” என்று அவள் கூற,

“நந்திதா நீ பேசுறது ஒரு மாதிரியும் நடந்துகிறது ஒரு மாதிரியும் இருக்கு. இதுல எது உண்மை?” என்று அவன் கடுமையாகக் கேட்க,

“விபீ நீங்க என்னைத் தப்பா பார்த்தா தப்பா தான் தெரியும். சரி நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லுங்க. இப்போ நம்ம காலேஜ்ல படிச்ச யாராவது ஒரு பையன் வந்து உங்ககிட்ட நான் பேசின மாதிரி வந்து பேசி இருந்தால் இப்படித் தான் ரியாக்ட் பண்ணுவீங்களா?” முகத்தைச் சாதாரணமாக அவள் வைத்துக் கேட்டிருந்தாலும் வார்த்தைச் சற்று கடுமையாகத் தான் இருந்தது.

அவளது கேள்வி விபீஷணனைச் சற்று ஆட்டித் தான் பார்த்தது. உண்மை தானே, இதுவே ஒரு ஆண் வந்து பேசியிருந்தால் கண்டிப்பாக அவன் சாதாரணமாகத் தான் பேசியிருப்பான். ஆனால் அவன் இப்படிப் பேசவும் காரணம் இருக்கிறது. நந்திதா ஒரு பெண் என்பதால் அவன் அவளை ஒதுக்கவில்லை. அவள் அவனிடம் காதல் சொன்னதும் இல்லாமல் இன்னும் அவள் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் தான் அவன் அவளை ஒதுக்கினான்.

“ஓகே ஐ ஆம் ஒன்ஸ் அகைன் சாரி.” என்று அவன் கூற,

“சரி விடுங்க விபீ. தப்புப் பண்றது மனுஷ இயல்பு தான். அதை விடுங்க.” என்று பெருந்தன்மையாக அவள் கூறவும்,

“ம்.” என்று மட்டும் கூறினான்.

“சரி அப்போ நான் கேட்கும் போது தான் சொல்லை. இப்போ சொல்லுங்க நான் எப்படி இருக்கேன்?” என்று அவள் எழுந்து நின்று புடவையின் முந்தானையைக் கையில் எடுத்து விரித்து அவள் கேட்க, விபீஷணன் தடுமாறி விட்டான். அவளது அழகில் அவன் தடுமாறவில்லை என்ன பதில் கூறுவதெனத் தெரியாமல் தடுமாறினான்.

சட்டென்று,”ம் நல்லா இருக்கு.” யுனிவர்சல் டையலாக்கை அவன் கூற, 

நந்திதா சிரித்துக் கொண்டே,”பொய் தான சொல்றீங்க?” என்று கேட்க, விபீஷணனுக்குத் தடுமாற்றம் வந்தது. எதுவும் பேசாமல் அமைதியாக அவன் இருக்க, அதைப் புரிந்து கொண்ட நந்திதா,

“சரி சரி விடுங்க. இப்போ உங்களை எப்படிப் பேச வைக்கிறேன் பாருங்க.” என்று அவள் கூற, புரியாமல் விபீஷணன் அவளைப் பார்க்க,

“உங்க வைஃப் நந்தனா பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்.” என்று அவள் கூற, அவன் முகம் நந்தனா என்ற பெயரைக் கேட்டதுமே பிரகாசமாகி ஜொலி ஜொலித்தது. அது நந்திதாவை வருத்தமுற செய்தாலும் அவனைப் பேச வைக்கவும் அவளிடம் பலக வைக்கவும் அவளுக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லை.

ஒருத்தரிடம் நாம் பேசி நட்பாக வேண்டும் என்றால் அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றைப் பற்றி நாம் பேசினால் உடனே அவர்கள் நம்மிடம் பேச ஆரம்பித்து விடுவார்கள் என்ற சூட்சுமத்தைப் புரிந்து கொண்டே நந்திதா மனதைக் கல்லாக்கிக் கொண்டு நந்தனா பற்றிய பேச்சை எடுத்தாள்.

“நந்தனா பத்தி என்ன சொல்லனும்?” என்று அவன் கேட்க,

“அட விபீ என்ன இப்படிச் சொல்றீங்க? நீங்க அவங்களை எப்போ எங்க பார்த்தீங்க? எப்படி உங்களுக்குள்ள லவ் வந்துச்சு? உங்க இரண்டு பேரோட வீட்டுல உடனே உங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்களா? எப்படி உங்க கல்யாணம் நடந்துச்சு. இப்படி நிறையா இருக்கே விபீ.” என்று அவள் கூற,

“ஹா ஹா ஆமா நிறையா இருக்கு. என் நந்தனா பத்திச் சொல்லனும்னா நான் நேரம் போறது தெரியாமல் சொல்லிட்டே இருப்பேன். பட் உனக்கு அதைக் கேட்க நேரமிருக்குமா?” என்று அவன் கேட்க,

“அதெல்லாம் நேரம் இருக்கும் விபீ. முழுசா இப்பவே சொல்லாட்டியும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சொல்லுங்க. ப்ராப்ளம் சால்வ்ட்.” என்று அவள் கூற,

“நந்தனா பத்தித் தெரிஞ்சுகிறதுல நீ ஏன் இவ்ளோ இன்ட்ரெஸ்ட் காட்டுற?” என்று அவன் கேட்க,

‘அவள் பெயர் சொன்னால் தான நீங்க பேசுறீங்க. அதுக்கு தான்.’ என்று அவள் மனதில் பேசிக் கொள்ள,

“சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்கிறேன் விபீ.” என்று அவள் கூற,

“ம் சொல்றேன். என் லட்டு அதான் நந்தனா அவளோட முழு பெயர் யது நந்தனா. நான் அவளை லட்டுனு தான் கூப்பிடுவேன். நான் அவளை முதல் முதல்ல…” அடுத்து அவன் கூற வருவதற்குள் நந்திதாவின் கைப்பேசி ஒலி எழுப்ப,

“ஒன் மினிட் விபீ.” என்று அவனிடம் கூறிவிட்டு அவள் கைப்பேசியை எடுக்க, அர்ச்சனா தான் அழைத்திருந்தார்.

‘ப்ச் இவங்க ஒருத்தங்க.’ என்று மனதில் அர்ச்சனாவை வசைபாடிய படியே அவளது கைப்பேசியை எடுத்துப் பேசினாள்,”சொல்லுங்க அர்ச்சனா.”

“மேடம் அந்த பேஷன்ட் ஜென்சிகு லேபர் பெயின் வந்துடுச்சு மேம். நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க.”

“அதுக்குள்ளயுமா? அவங்களுக்கு இன்னும் டேட் இருக்கே? சரி நீங்க செக் பண்ணீங்களா இது லேபர் பெயின் தானா? இல்லை ஃபால்ஸ் பெயினா கூட இருக்கலாம்ல?”

“இல்லை மேம் செக் பண்ணிட்டு தான் உங்களுக்குக் கூப்பிடுறேன் மேம்.” என்று அவர் கூற,

“சரி ஓகே இருங்க, நான் வரேன்.” என்று அர்ச்சனாவிடம் கூறிவிட்டு, விபீயின் பக்கம் திரும்பி,

“விபீ ஒரு பேஷன்ட்கு லேபர் பெயின் வந்துடுச்சு. நான் பார்த்துட்டே வரேன். நீங்க கண்டிப்பா எனக்கு நந்தனா பத்தி சொல்லனும்.” என்ற நிபந்தனையுடனே அவன் அங்கிருந்து சென்றாள்.

விபீஷணனைப் பேச வைக்க மட்டும் அவள் நந்தனாவைப் பற்றி கேட்கவில்லை. அவன் மனதில் இடம்பெற்று இருக்கும் நந்தனாவைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்தால் தான் அவள் நந்தனாவை ஞாபகம் படுத்தும் எதையும் பிற்காலத்தில் செய்யாமல் இருக்க முடியும் என்றும் தான் அவள் அவனிடம் கேட்டது. ஆனால் அவளுக்குப் புரியவில்லை, நந்தனா கல்வெட்டு போல் அவனது மனதில் அழியாது இடம்பெற்று இருக்கிறாள் என்று.

Advertisement