Advertisement

நந்திதா நிதர்சனத்தைப் புரியாமல் ஆர்வமாகவும் ஆசையாகவும் விபீஷணனைப் பார்க்க மருத்துவமனை வந்தாள். அன்று அவளுக்கு இரவு வேளையில் தான் வேலை. விபீஷணன் மருத்துவமனையில் இருக்கிறானா என்று கேட்காமலே அவனைச் சந்திக்க அவனது தளத்திற்கு அவள் சென்றாள். அன்று இவளுக்கு நல்ல நேரம் சரியாக அவள் அவனின் தளத்திற்கு வரவும் விபீஷணன் அவனது உடைமைகளை எடுத்துக் கொண்டு அவனது அறையிலிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

அவன் வருவதைப் பார்த்த நந்திதா கண்களில் கனவுடன் மெல்ல நடைபோட்டு அவனிடம் சென்றாள். அவளை அந்த நேரம் அங்கு எதிர்பார்க்காத விபீஷணன் புருவத்தைச் சுருக்கி யோசனையாக அவளைப் பார்க்க, நந்திதா சன்னச் சிரிப்புடன் அவனை நெருங்கி,”ஹாய் விபீ. வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?”

இதுவரை சீனியர் என்று அழைத்தவள் இன்று விபீ என்று அழைப்பதுப் பார்த்து அவனுக்குச் சந்தேகம் வந்தது. ஏற்கனவே அவள் ஒரு முறை அவனிடம் காதலைச் சொன்னவள். ஒருவேளை இன்னும் தன்னை அவள் காதலிக்கிறாளோ என்று யோசித்தான். அப்படி அவள் இன்னும் தன்னைக் காதலித்தால் கண்டிப்பாக அவளைத் தள்ளி நிறுத்து வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டு பட்டும் படாமல்,”ம் ஆமா.” என்று கூறிவிட்டு அவன் அவளைத் தாண்டிச் செல்ல, நந்திதாவுக்கு முகமே விழுந்து விட்டது. சுத்தமாக விபீஷணனிடம் இருந்து அவள் இப்படி ஒரு செயலை எதிர்பார்க்கவில்லை. இருந்தும் மனதைத் தளர விடாமல் அவனைத் தொடர்ந்து சென்று,

“என்ன விபீ நீங்க நான் ஒரு கேள்வி கேட்டால் நீங்க அதுக்கு பதில் சொல்லிட்டு திரும்ப என்கிட்ட ஏதாவது கேட்டால் தான நமக்குள்ள ரிலேஷன்ஷிப் நல்ல வளரும். இப்படிப் பதில் மட்டும் சொன்னால் போதுமா? உங்களுக்குப் பேசவே தெரியலை விபீ.” என்று அவனுடன் நடந்து கொண்டே அவள் கூற, அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.

நடந்து கொண்டிருந்தவன் சட்டென்று நின்று,”நந்திதா முதல்ல நமக்குள்ள எதுக்கு ரிலேஷன்ஷிப் வளரனும்? நீ காலேஜ்ல என்னோட ஜூனியர் அவ்ளோ தான். அதுக்கு மேல நமக்குள்ள எதுவுமில்லை. அண்ட் நீ கேட்ட கேள்விக்குத் தான் நான் பதில் சொன்னேன். அதோட என் வேலை முடிஞ்சது. அப்புறம் உனக்குத் தான் நான் என்ன செய்றேன்னு தெரிஞ்சுக்கனும்னு என்கிட்ட கேள்வி கேட்ட. ஆனால் எனக்கு உன்கிட்ட எதுவும் தெரிய வேண்டாம். அதனால நான் திரும்பிப் பேசலை. விளக்கம் போதுமா இல்லை இன்னும் வேணுமா?” என்று கேட்க,

“இல்லை விபீ அது வந்து….” என்று அவள் ஏதோ கூற வர, அவன் கையைக் காட்டி அவளை மேலும் பேச விடாமல் தடுத்து,

“எனக்கு டையர்டா இருக்கு. ஐ ஹேவ் டூ கோ ஹோம் நவ்.” என்று கூறிவிட்டு அவளது பதிலை எதிர்பாராமலே படி இறங்கத் தொடங்கி விட்டான் விபீஷணன்.

நந்திதாவுக்கு தான் என்ன செய்வதெனப் புரியவில்லை. இப்படிப் பிடிக் குடுக்காமல் பேசும் அவனிடம் எப்படித் தன் காதலைக் கூறி அவனைச் சம்மதிக்க வைப்பது என்று தெரியாமல் அப்படியே படியிலே தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டாள். அவள் அப்படி உட்கார்ந்திருப்பதைப் போவோர் வருவோர் ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு செல்ல, சூழ்நிலை உணர்ந்து எழுந்து அங்கிருந்து கிளம்பினாள்.

வீட்டிற்கு வரும் வழியில் எல்லாம் நந்திதாவுக்கு யோசனை தான். இத்தனை வருடம் மனசில் இருக்கும் விபீயை தூக்கி எறிந்து விட்டுக் கண்டிப்பாக அவளால் வேறு ஒருவனைத் திருமணம் செய்ய முடியாது. அதனால் விபீயின் மனதைத் தான் மாற்ற வேண்டும். அவனது நடவடிக்கைகளில் அது அவ்வளவுச் சுலபமாக நடக்கும் என்று கூற முடியாது. அதை நடத்த வேண்டும் என்றால் அதற்குப் பொறுமையாக இருக்க வேண்டும். அனைத்தையும் மனதில் யோசித்து ஒரு தெளிவுப் பெற்றே அவளது வீட்டிற்குச் சென்று சேர்ந்தாள்.

விபீஷணன், நந்திதாவிடம் பேசிவிட்டு அவனது வாகனத்தை எடுத்துக் கொண்டு மருத்துவமனையிலிருந்து வீடு வரும் வரை அவனும் யோசனையுடனே தான் வந்தான். நந்திதாவின் செயல் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனால் கண்டிப்பாக அவனது லட்டுவை(நந்தனா) தவிர வேற யாரையும் அவனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இன்னொரு முறை நந்திதா அவனிடம் பேச வந்தால் கண்டிப்பான முறையில் அவளிடம் கூற வேண்டும். அதன் பின் அவனை அவள் தொந்தரவு செய்ய மாட்டாள் என்று எண்ணினான். ஆனால் அவனுக்குப் புரியவில்லை அவன் எண்ணினால் மட்டும் அது நடக்குமா? அவளும் எண்ண வேண்டும். அதை விட இவனது வீட்டில் அவளை அந்த வீட்டு மருமகளாக எப்போதோ ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பதுத் தெரிந்தால் இவன் என்ன ஆவான்? காலம் தான் அனைத்திற்கும் உகந்த பதிலைத் தர வேண்டும்.

நந்திதா விபீஷணனைச் சந்தித்து மூன்று தினங்கள் ஆனது. அவள் அவனை அதன் பின்புப் பார்க்கவே இல்லை. அவனை விட்டுப் பிடிக்க வேண்டுமென்று முடிவெடுத்து அமைதியாக இருந்தாள் நந்திதா. ஒரு வாரம் சென்ற பிறகு அவனிடம் பேச வேண்டுமென நினைத்திருந்தாள். ஆனால் அன்று அவளை மீறி அவளே சென்று அவனிடம் பேசுவாள் என்று அவளே நினைக்கவில்லை.

அன்று தை ஒன்று, தமிழகம் முழுவதும் தைத் திருநாளைச் சிறப்பாக அனைவரும் கடவுளிற்குப் பொங்கல், கரும்பு படைத்துக் கும்பிட்டனர். வீட்டில் அன்று தொலைக்காட்சியில் போடும் சிறப்பு நிகழ்சிக்களையும் புதுப் படங்களையும் குடும்பத்துடன் கரும்பைத் தின்று கொண்டே பார்த்து ரசிப்பார்கள். மற்றவர்களுக்குத் தான் அன்று விடுமுறை தினம் எல்லாம். ஆனால் மருத்துவர்களுக்கு அந்த மாதிரி எந்தச் சலுகையுமில்லை. அனைவரும் எப்போதும் போல் மருத்துவமனை வந்து தான் ஆக வேண்டும்.

விபீஷணன் வீட்டில் எப்போதும் சாமிக்கு முதலில் வரும் நல்ல நேரத்திலே பொங்கல் படைத்துக் கும்பிட்டு விடுவர். ஏனென்றால் விபீ அன்று மருத்துவமனை செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் வீட்டில் சீக்கிரமே சாமி கும்பிட்டு விடுவர்.

அன்றும் எப்போதும் போல் சீக்கிரம் சாமி கும்பிட்டு விட்டு விபீஷணன் வேட்டிச் சட்டையிலே மருத்துவமனைக்குக் கிளம்பினான். அவர்கள் மருத்துவமனையில் ஒவ்வொரு விழாவும் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். அதனால் அங்கும் இன்று பொங்கல் வைத்து சாமி கும்பிடச் செய்வார்கள் என்பதால் வேட்டிச் சட்டையிலே மருத்துவமனைச் சென்றான்.

விபீஷணன் மருத்துவமனை உள்ளே நுழையும் அதே நேரம் நந்திதாவும் நுழைந்தாள். மருத்துவமனைக்குப் பின்னால் உள்ள பூங்கா பகுதியில் தான் அன்றைய பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

நந்திதா விபீஷணனின் வண்டியைப் பார்த்தாலும் அவனைக் கண்டு கொள்ளாமல் செல்ல வேண்டுமென முடிவு செய்திருந்தாள். ஆனால் விபீஷணன் அவனது வண்டிக் கதவைத் திறந்து இறங்கும் பாணியிலே அவள் மனம் கவுந்து விட்டது. அவளது மனம் ஆயிரம் முறை அவனைப் பார்க்காதே பார்க்காதே என்று கட்டளையிட்டாலும் அவளது கண்கள் அதைச் செவி சாய்க்காமல் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது. அவளது கால்களோ ஒரு படி மேலே சென்று அவனை நோக்கி அடி எடுக்க வைத்து விட்டது. மனம் அத்தனை முறை கூறிய எதையும் காதில் வாங்காமல் அவள் பாட்டிற்கு அவனை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டாள்.

சரியாக விபீஷணன் வண்டியிலிருந்து இறங்கி அவனது சட்டை மற்றும் வேட்டியைச் சரி செய்யவும் நந்திதா விபீ என்று அழைத்துக் கொண்டே அவன் அருகில் வரவும் சரியாக இருந்தது.

அந்த அழைப்பே விபீஷணனுக்கு யார் அழைப்பது என்று புரிய அவனுக்கு எரிச்சலாக வந்தது. இன்று முடிவோடு அவளிடம் கூறிவிட வேண்டும். இதை வளர்த்துக் கொண்டே இருக்கக் கூடாதென முடிவெடுத்து அவள் தன்னிடம் வரும் வரை அங்கேயே இருந்தான்.

“ஹாய் விபீ. வேட்டிச் சட்டை உங்களுக்குச் சூப்பரா இருக்கு.” சிரித்த முகமாக அவள் கூற,

“தாங்க்ஸ்.” என்று மட்டும் அவன் கூற,

“அட என்ன விபீ நான் எப்படி இருக்கேன்னு கேட்க மாட்டீங்களா?” என்று நந்திதா ஆசையாக அவனைப் பார்த்துக் கேட்க,

விபீஷணன் அவளை முறைத்துப் பார்த்து,”இங்கப் பார் நந்திதா நான் நேரா விஷயத்துக்கே வரேன். நீ என்கிட்ட என்ன எதிர்பார்க்கிற?” என்று அவன் கேட்க, நந்திதாவின் முகம் சட்டென்று மாறிவிட்டது. இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம்,

“விபீ நான் உங்ககிட்ட எதுவும் எதிர்பார்க்கலை. நீங்க என் காலேஜ்ல என் கூடப் படிச்ச சீனியர். அதனால தான் நான் உங்ககிட்ட வந்து பேசுனேன். நீங்க தான் ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டீங்க.” என்று அவள் மனதில் இருக்கும் ஆசையை மறைத்து அவள் பொய் கூற, விபீஷணன் அவளை நம்பாமல் பார்த்தான்.

“உங்களுக்கு இன்னும் என் மேல சந்தேகம் போகலையா?”

“அப்புறம் எதுக்கு என்னை விபீனு கூப்பிடுற?” என்று அவன் கேட்க,

“அட இது தானா! அய்யோ நாம என்ன இன்னும் காலேஜ்லயா இருக்கோம் சீனியர்னு கூப்பிட? அதுவுமில்லாம கொஞ்சம் யோசிச்சு பாருங்க இத்தனைப் பேருக்கு முன்னாடி நான் உங்களை சீனியர்னு கூப்பிட்டால் நல்லா இருக்குமா? எல்லாரும் சிரிக்க மாட்டாங்க?” என்று அவள் கேட்க, விபீஷணன் மனதில் தாம் தான் அதிகமாக யோசிக்கிறோமோ என்று நினைத்து,

“சாரி. நீ காலேஜ்ல என்னை ப்ரோபோஸ் பண்ண. அந்த ஐடியா உனக்கு இன்னும் இருக்கோனு ஒரு டவுட்ல தான் நான் அப்படி நடந்துகிட்டேன். ஐ ஆம் சாரி.” என்று அவன் மனப்பூர்வமாக மன்னிப்பு வேண்ட,

“அச்சோ என்ன இது சாரினு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் விபீ. எனக்குப் புரியுது நான் இன்னும் உங்களை லவ் பண்றேன்னு உங்களுக்கு டவுட் இருக்குனு. அதை க்ளியர் பண்ணத் தான் நான் இன்னைக்கு வந்தேன். டோண்ட் வொர்ரி எனக்கு அந்த மாதிரி எந்த தாட்டும்(thought) இல்லை. என் கூட வொர்க் பண்ற டாக்டர்ஸ் எல்லாம் முன்னாடியே சொல்லிட்டாங்க உங்க மனைவியை நீங்க எந்த அளவுக்கு லவ் பண்றீங்கனு. அதைக் கேட்டு எனக்குப் பிரமிப்பா இருந்துச்சு. அவங்க இறந்து…” அவள் முடித்திருக்கக் கூட மாட்டாள் விபீஷணன் அவளைத் தடுத்து,

Advertisement