Advertisement

“ப்ச் என்னத்தை சொல்றது மா எல்லாம் விதி. அவனுக்கு விருப்பம்னு சொல்லி நாங்க ஜாதகம் கூடப் பார்க்காமல் கல்யாணம் பண்ணி வைச்சோம். ஆனால் அது தப்போனு இப்போ தோனுது. சரி அதை விடு மா அது முடிஞ்சு போயிடுச்சு. நீ சொல்லு மா, உனக்கு இன்னும் விபீ மேல விருப்பம் இருக்கா?” கண்களில் ஆசைப் பொங்க சசிகலா கேட்க,

“ஆன்ட்டி சீனியர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா இந்த உலகத்திலே ரொம்ப சந்தோஷமான பொண்ணு நானா தான் இருப்பேன் ஆன்ட்டி. ஆனால் சீனியர் ஒத்துக்குவாரா?” கேள்வியாக அவள் கேட்க,

“அதைப் பத்தி நீ எதுவும் கவலைப்படாத மா. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் போதும். மத்தது தானா நடக்கும்.” என்று சசிகலா கூற, சந்தோஷமாக அவரைக் கட்டிக் கொண்டாள் நந்திதா.

“உங்க அப்பா அம்மா இதுக்கு ஒத்துக்குவாங்களா நந்திதா?” அதுவரை அமைதியாக இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த ராஜாராம் கேட்க,

“அங்கிள் அவங்களுக்கு என்னோட சந்தோஷம் மட்டும் தான் முக்கியம். சீனியர் மட்டும் தான் ஒத்துக்கனும். அவர் ஒத்துக்கிட்டா எங்க கல்யாணம் நடக்கிறதை யாராலயும் தடுக்க முடியாது அங்கிள்.” அவள் உறுதியாகக் கூற,

“அப்புறம் என்னங்க? நம்ம விபீகிட்ட உடனே பேசுவோம். அவனை எப்படிச் சமாளிக்கிறதுனு எனக்கு நல்லாவே தெரியும்.” என்று அவர் கூற, ஏனோ ராஜாராமிற்கு சரியாகப்படவில்லை. அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவரது அமைதி இருவருக்கும் வித்தியாசமாகத் தெரியாததால்,

“சரி மா வீட்டுல சுவாதி வெயிட் பண்ணிட்டு இருப்பா. நாங்க கிளம்புறோம் மா. விபீகிட்ட பேசிட்டு நானே உனக்கு கால் பண்றேன். அதுக்கு அப்புறம் உங்க வீட்டுல பேசலாம்.” என்று சசிகலா கூற,

“ஆன்ட்டி அந்தக் கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். அப்பா அம்மாவை நான் பார்த்துக்கிறேன் ஆன்ட்டி.”

“இன்னும் என்ன மா ஆன்ட்டினு கூப்பிட்டு? அத்தைனு வாய் நிறையா கூப்பிடு.”

“சரிங்க அத்தை. நான் இனிமேல் உங்களை அத்தைனே கூப்பிடுறேன்.” அவளும் சந்தோஷமாகக் கூறினாள்.

“சசி லேட்டாகிடுச்சு.” என்று ராஜாராம் கூற, சசிகலாவும் நந்திதாவிடம் கூறிவிட்டுக் கிளம்ப, அவர்கள் போகும் திசையைப் பார்த்த நந்திதாவுக்கு ஏதோ சாதித்த உணர்வு தோன்றியது. வேகமாக சாமி இருக்கும் பக்கம் திரும்பி கையை எடுத்து கும்பிட்டு,”அம்பாளே நான் நினைச்சது நடக்கப் போகுது. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க விபீ எனக்குக் கிடைக்க மாட்டாரோனு ரொம்ப பயந்துட்டேன் நான். தாங்க்ஸ் அம்பாளோ தாங்க் யூ ஸோ மச் அண்ட் ஐ லவ் யூ.” என்று கூறிவிட்டு அவள் வீட்டிற்கு மிகவும் சந்தோஷத்துடன் கிளம்பிச் சென்றாள்.

நந்திதாவிடம் பேசிவிட்டு வெளியே வந்த சசிகலா ராஜாராமிடம்,”பாருங்க நான் சொன்னேன்ல நந்திதாவுக்கு விபீய பிடிச்சுருக்குனு நீங்கத் தான் நான் சொன்னதை கேட்கவே இல்லை. இப்போ என்ன சொல்றீங்க?” என்று அவர் கேட்க,

“சசி இப்போவும் என் மனசு ஒத்துக்கலை. எனக்கு எப்படிச் சொல்றதுனு புரியலை. அந்தப் பொண்ணு விபீயை இத்தனை வருஷமா நினைச்சுட்டே இருந்தானு சொல்லும் போது எனக்கும் சந்தோஷமா தான் இருந்துச்சு. ஆனால் மனசு உறுத்திக்கிட்டே இருக்கு சசி. ஒரு பக்கம் இந்தக் கல்யாணம் நடக்கனும்னு மனசு அடிச்சுக்குது. ஆனால் இன்னொரு பக்கம் விபீக்கும் நமக்கும் நடுவுல பிரச்சனை வந்துருமோனு பயமா இருக்கு சசி.” கவலையாக அவர் கூற,

“எனக்குப் புரியுது. விபீ நம்மகிட்ட சண்டை போட்டாலும் பராவலங்க அவனை எப்படியாவது நான் சம்மதிக்க வைச்சுடுவேன். விபீ சரினு சொன்னால் உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைல?”

“எனக்கு இதுல எந்த ஆட்சேபனையும் இல்லை சசி. விபீ இதுக்கு சரினு சொன்னால் ரொம்பவே சந்தோஷப்படுவேன் நான். என் பையன் சந்தோஷமா பிள்ளைக் குட்டியோட வாழ்றதை பார்க்கத் தான் ஆசையா இருக்கேன்.”

“அப்புறம் என்ன? கவலையை விடுங்க. இனி என்ன பண்றதுனு தான் யோசிக்கனும். நான் விபீகிட்ட பேசுறதுக்குள்ள நீங்க எதுவும் அவன்கிட்ட உளறிடாதீங்க சரியா.”

“ப்ச் நான் என்னத்த சொல்லப் போறேன்? சரி அவன்கிட்ட எப்படிப் பேசப் போற நீ?”

“இப்போ வேண்டாம். ஒரு இரண்டு நாள் போகட்டும். அதுக்குள்ள நாம கவுதம், நர்மதாகிட்ட பேசுவோம். அவங்க ஏதாவது ஐடியா தருவாங்க. இல்லாட்டி எல்லா நாடகத்திலும் கதையிலும் வர மாதிரி இந்தக் கல்யாணத்துக்கு அவன் சம்மதிக்காட்டி நான் செத்துருவேன்னு சொல்ல வேண்டியது தான்.” சாதாரணமாக சசிகலா கூற, வாயைப் பிளந்து ஆ என்று பார்த்தார் ராஜாராம்.

அவரைப் பார்த்து சசிகலாவுக்கு சிரிப்பு வந்து விட,”வாயை மூடுங்க. நான் சும்மா சொன்னேன்ங்க. வேற ஏதாவது பண்ணுவோம். நீங்கக் கவலைப்படாம இருங்க.” என்று அவர் கூறவும் தான் ராஜாராமிற்கு சற்று ஆசுவாசமாக இருந்தது. ஆனால் இருவரும் நந்திதா விபீயை காதலித்ததைக் கூறியதும் அவள் கூறிய ஊரின் பெயரைச் சுத்தமாக மறந்து விட்டார்கள். அப்படி அவர்கள் அதை ஞாபகம் வைத்து அவளிடம் தெளிவாகக் கேட்டிருந்தால் பின்னால் வரப் போகும் பிரச்சனைகளைத் தடுத்திருக்கலாம்.

சசிகலாவும் ராஜாராமும் வீட்டிற்கு வர, அவர்களுக்காக அங்குக் காத்திருந்தாள் நர்மதா. அவளைப் பார்த்த சசி,”என்ன நர்மதா? வீட்டுக்கு வரதா நீ சொல்லவே இல்லை? மாப்பிள்ளை வரலையா?”

“இல்லை மா. என்னை இறக்கி விட்டுட்டு அவர் போயிட்டார். மதியம் வரைக்கும் இங்கத் தான் இருப்பேன். மாமாகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். மதியம் லன்ச் சாப்பிட்டுத் தான் ஆபிஸ் வருவேன்னு. அதனால மதியம் வரைக்கும் இங்கத் தான் மா. சரி நீ கோவில்ல நந்திதாவை பார்த்தியா? என்ன சொன்னா?” ஆர்வமாக நர்மதா கேட்க, அவள் கேட்டக் கேள்வி அறையில் தயாராகிக் கொண்டிருந்த கவுதம் மற்றும் சுவாதிக்கும் கேட்க, அவர்களும் சசிகலா என்ன கூறப் போகிறார் என்று கேட்கக் கூடத்திற்கு வர, சசிகலா கோவிலில் நந்திதா கூறியதை அப்படியே வார்த்தை மாறாமல் கூற, கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“என்னமா சொல்ற? அந்தப் பொண்ணு நம்ம விபீயை இன்னும் மனசுல நினைச்சுட்டு தான் இருக்காளா? இப்படிப் பட்டப் பொண்ணை நிராகரிக்க அவனுக்கு எப்படி மனசு வந்துச்சு?” கோபமாக நர்மதா கேட்க,

“நர்மதா அப்போ விபீ செஞ்சது சரி தான். படிக்கிற வயசுல அவர் படிக்காமல் காதலிச்சுட்டு இருப்பாரா? அதுவும் இல்லாமல் அவருக்கு அந்தப் பொண்ணு மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்லை. அப்படி இருந்திருந்தா படிப்பு அவருக்கு ஒரு விஷயமாகவே இருந்திருக்காது.” என்று சுவாதி கூற,

“அண்ணி உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் நாங்க விபீக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கிறதைப் பத்திப் பேசினாலே நீங்க இப்படி நெகட்டிவா ஏதாவது பேசிட்டு இருக்கீங்க? ஏன் விபீக்கு கல்யாணமாகுறது உங்களுக்குப் பிடிக்கலையா?” என்று நேரடியாகவே கேட்டு விட, எது நடக்கக் கூடாதெனச் சுவாதி நினைத்தாளோ அது நடந்து விட்டது.

சுவாதி பதில் பேசும் முன் ராஜாராம் மகளிடம்,”நர்மதா என்ன பேசுற நீ? சுவாதி உன்னோட அண்ணி. நீ எப்படி உன்னோட கருத்தை சொல்றியோ அது மாதிரி தான் அவளும் அவளுக்கு தோன்றதை சொல்றா. இதுல என்ன தப்பு இருக்கு? இப்படிப் பேசுறது ரொம்ப தப்பு. முதல்ல சுவாதிகிட்ட மன்னிப்பு கேள்.” என்று கறாராக அவர் கூற,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாமா. இப்படி ஏதாவது பேச்சு வரும்னு தான் நான் அமைதியா இருந்தேன். ஆனால் அதுக்கும் நீங்க யாராவது இதே கேள்வியை என்கிட்ட கேட்டா என்ன பண்றது? அதனால தான் வாயைத் திறந்து பேசுனேன். நீங்க எல்லாரும் விபீ நந்தனாவை எவ்ளோ லவ் பண்ணார்னு மறந்துட்டு அவருக்கு இன்னொரு கல்யாணத்தை ஈசியா பண்ணிடலாம்னு நினைக்கிறாங்க. எனக்கு அவர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்த வருத்தமும் இல்லை. நானும் அவர் சந்தோஷமா இருக்கனும்னு தான் நினைக்கிறேன். எப்படி காயினுக்கு இரண்டு பக்கம் இருக்கோ அது மாதிரி ஒரு செயலை செய்றதுக்கு முன்னாடி சாதக பாதகத்தை அலசி ஆராய்ஞ்சு தான் செய்யனும். நீங்க எல்லாம் பாசிட்டிவ்வா பேசுறீங்க. அதுல என்ன நெகடிவ் இருக்குனு நான் சொன்னேன். அப்போ தான் விபீகிட்ட நாம பேசுறதுக்கு முன்னாடி தயாராகிப் போக முடியும். அதனால தான் நான் அப்படிச் சொன்னேன். எனக்கு என்னைப் பத்தித் தெரியும். கவுதமும் நீங்களும் என்னை நம்புனா போதும். நர்மதா என்னைப் பத்தித் தப்பா நினைச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்லை.” என்று கூறிவிட்டு சுவாதி அவளது அறைக்குச் சென்று விட, மற்றவர்களுக்குத் தான் என்ன பேசுவது என்று புரியவில்லை.

“என்ன பண்ணி வைச்சுருக்க நர்மதா நீ? உண்மையிலே இதுல சுவாதிக்கு இஷ்டமில்லைனாலும் அதுல உனக்கு என்ன கவலை? நமக்கு விபீயோட சம்மதம் தான் வேணும். ப்ச் நீ என்ன சின்ன பொண்ண?” சசிகலா நர்மதாவை கடிந்து விட்டு கவுதம் பக்கம் திரும்பி,”நீ ஏன் டா இன்னும் இங்கேயே இருக்க? போய் சமாதானப்படுத்து அவளை.”

“அம்மா பேசுனது நர்மதா, நான் போய் என்னத்தை சமாதானப்படுத்த? விடுங்க அவளே கொஞ்ச நேரத்துல சரியாகிட்டு வந்துடுவா.” என்று கவுதம் கூற, நர்மதாவுக்கு சிறிது குற்றவுணர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் அவள் சுவாதியைச் சமாதானப்படுத்த எழுந்து செல்லவில்லை. சந்தோஷமாகப் பேச ஆரம்பித்த விஷயம் கடைசியில் இப்படி முடிந்து விட்டதே என்று சசிகலா வருத்தப்பட, மறுபடியும் ராஜாராம் மனதில் சஞ்சலம் குடி கொண்டது.

இரண்டு நாட்கள் ஆகிவிட்டது நந்திதா சசிகலாவிடம் கோவிலில் பார்த்துப் பேசி, இதுவரை எந்தத் தகவலும் அவரிடம் இருந்து வரவில்லை. மிகுந்த ஆர்வத்துடன் இருந்தவள் சசிகலா அவளுக்கு அழைக்காமலிருந்ததில் மொத்தமாக வடிந்து விட்டது.

எதையோ இழந்துவிட்டதைப் போல் உட்கார்ந்திருந்தாள் நந்திதா. அங்கு வந்த பிரியா அவளின் நிலையைப் பார்த்து,”இப்படியே இன்னும் எத்தனை நாள் இருக்கிறதா நினைப்பு?” என்று கேட்க,

“ப்ச் விபீயோட அம்மா பேசிட்டு போனதும் நான் ரொம்ப நம்பிக்கையா இருந்தேன் அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுடுவார்னு. ஆனால் இரண்டு நாள் ஆகியும் அத்தை எனக்கு கால் பண்ணவே இல்லை. அதை நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு.” விட்டால் அழுது விடுவது போல் முகத்தை வைத்துக் கொண்டு அவள் கூற,

“ஏய் இத்தனை வருஷம் காத்திருந்த, இன்னும் கொஞ்ச நாள் உன்னால காத்திருக்க முடியாதா? அதுவுமில்லாம விபீ எப்படி அவ்ளோ சீக்கிரம் இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிப்பார்னு நீ நினைக்கிற?” என்று பிரியா கேட்க,

“அப்போ நான் என்ன பண்றது பிரியா? அவரை மனசுல நினைச்சுட்டு என்னால வேற யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது.” என்று அவள் கூற,

“ப்ச் நான் அப்படிச் சொல்லலை நந்து. நீ ஏன் விபீயோட அம்மா அவர்கிட்ட பேசிச் சம்மதம் வாங்கனும்னு நினைக்கிற? நீயே நேரடியா போய் அவர்கிட்ட பேசுனா என்ன? நமக்கு ஏதாவது வேணும்னா நாம தான் அது கிடைக்க ஏதாவது முயற்சி செய்யனும். நீ அப்படி இது வரைக்கும் ஏதாவது செஞ்சியா?” என்று பிரியா கேட்கவும் தான் அவளுக்கும் புரிந்தது. தான் இதுவரை எதுவும் செய்யவில்லை என்று. வேகமாக பிரியாவை அனைத்து அவளது கண்ணத்தில் முத்தம் வைத்துவிட்டு,

“தாங்கஸ் டீ என் பட்டுக் குட்டி. இனி என்ன பண்றது நான் பார்த்துக்கிறேன்.” என்று வேகமாக அவளது அறைக்குச் சென்று தயாராகி மின்னல் வேகத்தில் கிளம்பி மருத்துவமனைக்குச் சென்றாள் விபீஷணனைச் சந்திக்க.

Advertisement