Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 1

சென்னை நுங்கம்பாக்கம் முக்கியச் சாலையில் காலை நேர பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. எட்டு மணியாக ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது, வீட்டில் இருந்து வெளியே வந்த ஈஷ்வர், வாகனத்தை எடுக்க வேண்டிய அவசியமின்றி, அடுத்து இருந்த கட்டிடத்திற்கு வந்தவன், தன்னிடம் இருந்த சாவியால் கடையைத் திறந்தான்.

நகரின் முக்கிய இடத்தில் இருந்த ஸ்போர்ட்ஸ் ஷாப். அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான அனைத்து பொருட்களும் இங்குக் கிடைக்கும். அதோடு உடற்பயிற்சி கருவிகளும் விற்பனைக்கு உண்டு.

முன்தினம் கடை மூடுவதற்கு முன்பே சுத்தம் செய்யப்பட்டிருந்ததால்…. ஈஸ்வர் சாமி படத்திற்கு அவன் எடுத்து வந்த பூவை போட்டு, விளக்கு ஏற்றி, ஊதுபத்தி காட்டிக் கொண்டிருக்க.. இரண்டு ஆண்கள், ஒரு பெண் என அங்கே வேலை செய்யும் பணியாளர்களும் வந்து விட்டனர்.

சனி ஞாயிற்றுக் கிழமைகளில் தான் கூட்டம் அல்லும். மற்ற நாட்களில் மாலையில் பள்ளி விட்ட பிறகுதான் கூட்டம் இருக்கும். காலை நேர பரபரப்பு அடங்கிய பின்னர், பணியாளர்களிடம் கடையை ஒப்படைத்துவிட்டு ஈஸ்வர் வீட்டுக்கு வந்து விட்டான்.

அவன் அம்மா ஊர்வசி எடுத்து வைத்த காலை உணவை உண்டு முடித்துவிட்டு, தனது மடிகணினியை எடுத்துக் கொண்டு வேலைப் பார்க்க ஆரம்பித்தான்.

அப்போது அவனின் அம்மா வந்தவர், “அவந்திகாவுக்குக் காலேஜ்க்கு லேட் ஆகிடுச்சாம், கொஞ்சம் போய் அவளை ரயில்வே ஸ்ட்ஷன்ல விட்டுட்டு வாயேன்.” என்றதும், அவனுக்கு வந்ததே கோபம்.

இவளுக்கு இதே தான் வேலையா… நான் என் வேலையைப் பார்க்க வேண்டாமா?” எனக் கத்தியவன், “இன்னைக்கு ஒரு நாள் விட்டுட்டு வா… இல்லைனா மாமா தான் போகணும்.” என்றதும், வேண்டா வெறுப்பாக எழுந்து சென்றான்.

அடுத்த வீடு தான் அவனின் அத்தை வைஜயந்தியின் வீடு. நகரின் முக்கியப் பகுதி என்பதால்…வீட்டின் முன்புறம் நிறைய இடம் எல்லாம் கிடையாது. ஈஷ்வர் சென்று பைக்கை எடுத்த பிறகும் அவந்திகா வரவில்லை. அவன் பொறுமையை வெகுவாகச் சோதித்தவள், ஆடி அசைந்து மெதுவாக வர… ஈஸ்வர் எதுவும் பேசி விடக்கூடாது என்று வாயை இறுக மூடிக் கொண்டான்.

அவந்திகாவுடன் வந்த அவளின் பாட்டி ருக்மணி, ஈஸ்வரை நலம் விசாரிக்க… அவருக்குப் பதில் சொல்லியபடி வண்டியை எடுத்தான். வழியிலும் அவன் அவந்திகாவிடம் எதுவும் பேசவில்லை.

இப்படி வேண்டா வெறுப்பா எல்லாம் யாரும் என்னைக் கொண்டு போய் விட வேண்டாம்.” அவந்திகா அவனின் முகத்தை எட்டி பார்க்க முயன்றபடி சொல்ல…

இதை ஆயிரம் தடவை சொல்லி இருப்ப… கொஞ்சம் பின்பற்றினா நல்லா இருக்கும்.” என்றான் அவனும் கடுப்பாக. அவந்திகாவுக்குச் சிரிப்பு வந்துவிட…

பின்பற்றத்தான் நினைக்கிறேன். ஆனா முடியலையே…” என்றதும், “உனக்கு நான் இருக்கேன்னு தைரியம். ஆனா எல்லா நேரமும் வரமாட்டேன். அதையும் நியாபகம் வச்சுக்கோ.” என்ற ஈஸ்வருக்கும் லேசாகச் சிரிப்பு எட்டிப் பார்க்க… அதற்குள் ரயில் நிலையம் வந்துவிட அவளை இறக்கி விட்டான்.

வண்டியில் இருந்து இறங்கியதும் யாரையோ ஆவலாகத் தேடிய அவந்திகா, தேடிய நபர் கிடைத்ததும், “அத்தான் இன்னைக்காவது அஷ்வினை பார்க்கிறீங்களா?” என்றதும்,

நீ லவ் பண்றேனா அதை வீட்ல சொல்ல உனக்குத் தான் தைரியம் இருக்கணும். என்னை ஆள விடு…” என்றவன் வண்டியை திருப்பிக் கொண்டு சென்று விட்டான்.

போடா போ என நினைத்தபடி நடந்தவளின் முன்பு அஷ்வின் வந்து நின்றான்.

என்ன சொல்றார் உன் அத்தான்.” என்றதும்,

எங்க நானும் உன்னை அவருக்கு அறிமுகம் செஞ்சு வைக்கனும்னு தான் பார்க்கிறேன். மனுஷன் பிடியே கொடுக்க மாட்டேங்கிறார். இவர் எங்க அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும், என் அப்பா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்குவார்.” என்றவள், “எனக்குக் காலேஜ்க்கு லேட் ஆகிடுச்சு நான் போகணும்.” என்றதும், சாயங்காலம் பார்ப்போம் என்ற அஷ்வினும் அவளிடம் விடைபெற்றுச் சென்றான்.

வீட்டிற்கு வந்த ஈஸ்வர் கடையை ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வந்து மீண்டும் அவன் மடிக்கணினியில் வேலை பார்க்க உட்கார்ந்து விட்டான்.

மதிய உணவிற்குப் பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுத்தவன், பிறகு மீண்டும் வேலை பார்த்துவிட்டு மாலை ஐந்து மணிக்கு டி குடித்ததும் கடைக்குச் சென்று விட்டான்.

இரவு ஒன்பது மணிக்குக் கடை மூடியதும் வீட்டிற்கு வந்தவன், இரவு உணவு உண்டுவிட்டு, அவனுக்குக் கைபேசியில் வந்த அழைப்புகளை ஏற்றவன், பிறகு உறங்கி போனான்.

மறுநாள் அவந்திகா அவளே நேரத்திற்குக் கிளம்பி சென்று விட்டதால் பிரச்சனை எதுவும் இல்லை. அவளுக்கு எப்படியாவது ஈஸ்வர் அஷ்வினை சந்தித்துப் பேசிவிட வேண்டும். அதற்குத் தான் வேண்டுமென்றே தாமதமாகக் கிளம்பி ஈஸ்வருடன் செல்வது. அது ஈஸ்வருக்கும் தெரியும்.

இந்த வருஷம் உன் மகளுக்குப் படிப்பு முடிஞ்சதும், நீயும் உன் பொண்டாட்டியும் ஊர்வசிகிட்ட பேசி, ஈஸ்வர் அவந்திகா கல்யாணத்துக்கு நாள் குறிங்க.” ருக்மணி பாட்டி மகனிடம் இதைப் பலமுறை சொல்லி இருந்தாலும் இன்றும் சொன்னார்.

ஈஸ்வர் தான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு தான இருக்கான். இல்லைனா இப்படி முப்பது வயசு வரை கல்யாணம் பண்ணாம இருப்பானா?” என்றதும், ‘

அது எல்லாம் பேசுறபடி பேசினா கல்யாணத்துக்கு ஒத்துப்பான். இருக்கிற நல்ல பையனை விட்டுட்டு எங்க போய் நாம மாப்பிள்ளை பார்க்கிறது.” என்ற ருகம்ணி பாட்டி அவர் அறைக்குச் சென்றுவிட… சதாசிவம் மனைவியைப் பார்த்தார்.

உங்க அம்மா சொல்றாங்கன்னு எல்லாம் பேச முடியாது. எங்க அண்ணன் இருந்தாலும் பரவாயில்லை… நான் உரிமையா கேட்கலாம். எங்க அண்ணன் பண்ணி வச்ச வேலைக்கு, நான் அவங்ககிட்ட உரிமையா மாப்பிள்ளை கேட்க முடியாது.”

அதோட நாம் இருக்கிற வீடு கூட எனக்கு எங்க அப்பா கொடுத்த சொத்து. அவங்க வசதியை பார்த்து கேட்கிறதா நினைச்சுட்டா… அதனாலே நாம பேச வேண்டாம். அவங்களுக்கு விருப்பம்னா அவங்களே கேட்கட்டும். இல்லைனா நாம நம்ம வசதிக்கு ஏத்த இடத்தில பார்ப்போம்.” என்றார் வைஜயந்தி. அவர் சொல்வதும் சரி என்பதால்… சதாசிவமும் சரி என்றார்.

நாட்கள் வேகமாகச் செல்ல… அவந்திகா படிப்பு முடித்து வேலையிலும் சேர்ந்து விட்டாள்.

ஈஸ்வரின் அக்கா ராகவி சிங்கப்பூரில் வசிப்பவள், விடுமுறைக்குத் தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பிறந்த வீடு வந்திருக்க… வீடு களைகட்டியது. . ஊர்வசி மகளுக்கும் அவளின் பிள்ளைகளுக்கும் வாய்க்கு ருசியாக விதவிதமாகச் சமைத்து போட… அம்மா நீங்க ரெஸ்ட் எடுங்க என மகனும் மகளும் சொன்னாலும், காதில் வாங்காமல் இருந்தார்.

ராகவிக்கு இரண்டுமே ஆண் பிள்ளைகள். பிறகு சண்டைக்குக் கேட்கவா வேண்டும். ஈஸ்வர் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டான். அவன் கடையில் தான் பாதி நேரம் இருப்பார்கள். விளையாட்டுச் சாமான்கள் கடை வேறு… அதனால் எதாவது எடுத்து விளையாடிக் கொண்டே இருப்பார்கள். ஊருக்கு எடுத்து செல்ல நிறைய மூட்டை கட்டியும் வைத்துக் கொண்டனர்.

இரண்டு வாரங்கள் வேகமாகச் சென்றுவிட… ராகவி ஊர் கிளம்பும் நாளும் நெருங்கிக் கொண்டிருக்க… அந்த வார ஞாயிற்றுக்கிழமை ஊர்வசி பெரிய விருந்தே சமைத்து இருந்தவர், தனது நாத்தனார் வீட்டையும் உணவு உண்ண அழைத்திருந்தார்.

மகனும் மருமகளும் தாங்களாகப் பேசப் போவது இல்லை என்று ருக்மணி புரிந்து கொண்டதால்… எல்லோரும் சாப்பிட்டு முடித்துப் பேசிக் கொண்டு இருக்கும் போது… தனது விருப்பத்தை ஊர்வசியிடம் சொல்லியே இருந்தார்.

மகனின் மனது புரிந்து இருந்ததால்தான். இதுவரை ஊர்வசி அவனிடம் திருமணத்தைப் பற்றிப் பேசாமல் இருந்தார். அவனுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ… தனக்காக அவன் எதையும் செய்வான் என்று அவருக்குத் தெரியும். வெளிநாட்டில் கிடைத்த வேலையில் கூடச் சேராமல்… அவன் இங்கிருப்பது தனக்காக என்று அவருக்குத் தெரியும்.

திருமணத்தையும் தான் வற்புறுத்தினால் செய்து கொள்வான்தான். ஆனால் அப்படித் திருமணம் செய்து அவன் கடமைக்காக வாழ்வதில் அவருக்கு விருப்பம் இல்லை. அவன் விரும்பி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

ஈஸ்வருக்குத் தன் அம்மா சொல்லி மறுக்க வேண்டியது வந்து விடுமோ என்ற அச்சத்தில், “பாட்டி, உங்க பேத்தி ஏற்கனவே மாப்பிள்ளை எல்லாம் பார்த்து தான் வச்சிருக்கா…” என அவந்திகாவை போட்டுக் கொடுத்து விட்டான்.

எல்லோருக்குமே அதிர்ச்சி தான் என்றாலும், அவந்திகாவின் வீட்டினருக்கு அதிக அதிர்ச்சி தான்.

யார்?” என்று ருக்மணி பாட்டி அவனிடம் கேட்க… “எனக்கு அதெல்லாம் தெரியாது.” என்று கழண்டு கொண்டான்.

சதாசிவமும் வைஜயந்தியும் அப்போது எதுவும் மகளிடம் பேசவில்லை. அவர்கள் சொல்லிக் கொண்டு வீட்டிற்குச் செல்ல… உடன் ருக்மணியும் சென்றார். அவந்திகா வீட்டுக்கு செல்ல பயந்து கொண்டு அங்கேயே இருந்தவள்,

என் விஷயத்தை நீங்க எப்படிச் சொல்லலாம்? உங்களுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டு போக வேண்டியது தான… என்னை எதுக்கு மாட்டி விட்டீங்க.” என ஈஸ்வரிடம் சண்டை பிடிக்க…

தப்பு தான். நான் சொல்லி இருக்கக் கூடாது தான். எப்படியும் நீ உங்க வீட்ல சொல்லணும் தான… அது இன்னைக்குத் தெரிஞ்சதா நினைச்சுக்கோ.” என ஈஸ்வர் சற்று அலட்சியமாகத்தான் சொன்னான்.

நீங்க சரியான சுயநலவாதி அத்தான். நீங்க தப்பிக்க என்னை மாட்டி விட்டுட்டீங்க இல்ல… உங்க அப்பாவுக்கு இருக்கப் புத்தி தானே உங்களுக்கும் இருக்கும்.” என அவந்திகாவும் தேவையில்லாமல் வாய் விட்டாள்.

ஹே… எனக் கையை ஓங்கிக் கொண்டு ஈஸ்வர் எழுந்தவன்,

ஈஸ்வர்…” எனத் தன் அம்மாவின் குரல் கேட்டு….

அந்த ஆளை என்னோட ஒப்பிட்டு பேசின… உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” எனக் கத்தியவன், உள்ளே சென்று விட்டான்.

அவன் ஏற்கனவே உடைஞ்சு போய்த் தான் இருக்கான். நீ இன்னும் அவனைப் போட்டு நொறுக்கிடாதே… உன் விஷயத்தை அவன் பேசினது தப்பு தான். அதுக்காக நீ இப்படிப் பேச வேண்டாம்.” என ராகவியும் சொல்ல…

சாரி அண்ணி… கோபத்துல பேசிட்டேன்.” என்ற அவந்திகா, சாரி அத்தை என்று ஊர்வசியிடமும் சொல்லிவிட்டு சென்றாள்.

ஊர்வசி மகன் இருந்த அறைக்குச் செல்ல… பிள்ளைகளை விளையாட சொல்லிவிட்டு ராகவியும் பின்னே சென்றாள்.

ஈஸ்வர், அவ எதோ சின்னப் பொண்ணு கோபத்துல பேசிட்டா… நீயும் கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் இல்லைன்னு சொல்லி இருக்கலாம். அவ விஷயத்தை ஏன் சொன்ன? ஏற்கனவே அவ பாட்டி ஒருமாதிரி.” என்றதும்,

தப்பு தான்மா…நான் சொல்லி இருக்கக் கூடாது.” என்றான்.

நான் அவளைக் கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லிடுவேன்னு நீ பயந்திட்ட….’

நான் இப்பவும் சொல்றேன்… உங்க அப்பா போல எல்லோரும் கிடையாது. கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷம வாழுற எத்தனையோ பேர் இருக்காங்க. உனக்குப் பிடிச்ச பெண்ணா பார்த்து, உன் முழு விருப்பதோட நீ கல்யாணம் பண்ணிக்கணும். எனக்கும் அந்த அசை இருக்கு.” என்றதும்,

சரிமா அப்படி யாரையாவது பார்த்தா நிச்சயம் பண்ணிக்கிறேன்.” என்றான். இப்போது திருமணத்தில் இருந்து தப்பித்துவிட்ட சந்தோஷத்தில் மகன் சொல்கிறான் என்று ஊர்வசிக்கும் புரிந்து தான் இருந்தது.

அக்காவின் பிள்ளைகளைச் சற்று மிரட்டி விட்டோமோ என்று நினைத்தவன், அவர்களை வெளியே அழைத்துச் செல்ல நினைக்க… மாலை குடும்பமாகக் கடற்கடைக்குச் சென்றுவிட்டு வந்தனர்.

இரவு வீட்டிற்கு வந்ததும், அவனே அவன் அத்தையின் வீட்டிற்குச் சென்று, “மாமா அந்தப் பையனை பார்த்தா நல்ல மாதிரிதான் தெரியுது. நாம எல்லாம் விசாரிச்சு பார்ப்போம். நல்ல இடமா இருந்தா அங்கயே செய்யலாமே…” என்றதும், சதாசிவமும் நானும் அப்படித்தான் நினைச்சிருக்கேன் என்றார்.

ருக்மணி உறங்கிய பின்னர் தான் மகளிடம் விசாரிக்க வேண்டும் என்று சதாசிவமும் வைஜயந்தியும் இதுவரை மகளிடம் எதுவும் கேட்காமல் இருந்தனர். இப்போது ஈஸ்வர் வந்து சொன்னதும், முதலில் பையனை பற்றி விசாரித்துப் பார்ப்போம் என்று நினைத்து, “நாங்க பையனை பத்தி விசாரிச்சிட்டு, எங்களுக்குப் பிடிச்சா தான் சம்மதம் சொல்வோம்.” என்றதற்கு, அஷ்வின் மீது இருந்த நம்பிக்கையில் அவந்திகாவும் ஒத்துக் கொண்டாள்.

அவன் கிளம்பும் போது வெளியே வந்த அவந்திகா, “தேங்க்ஸ் அத்தான்.” என்றதும்,

என்னால முடிஞ்சதை நான் செஞ்சிட்டேன்.” என்றவன், “ஆனா அதுக்காக நீ மதியம் பேசினது எல்லாம் சரின்னு ஆகிடாது. இனிமே அப்படிப் பேசாத. என்னை அந்த ஆளோட ஒப்பிட்டுப் பேசுறது எனக்குப் பிடிக்காது.” என்று சொல்லிவிட்டு வந்தான்.

இரண்டு நாட்களில் ராகவி தனது பிள்ளைகளுடன் சிங்கப்பூர் கிளம்பி சென்றாள். அவள் சென்றதும் வீடு பழைய மாதிரி அமைதியாகி போனது.

சதாசிவம் அஷ்வினை நேரில் சென்று பார்த்து பேசினார். ஈஷ்வரும் தன் பங்குக்குத் தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் விசாரித்துப் பார்த்தான். எல்லோரும் நல்ல விதமாகத்தான் சொன்னார்கள்.

இரண்டு பக்கமும் பேசி திருமணத்தை ஆறு மாதங்கள் சென்று வைப்பது என்று தீர்மானித்தனர். பெற்றோருக்குத் தெரியாமல் காதலிக்கிறோம் என்ற உறுத்தல் இல்லாமல்… இப்போது அவந்திகாவால் அஷ்வினுடன் பழக முடிந்தது.

ஒருநாள் காலை ஈஸ்வர் கடைதிறக்க கிளம்பிக் கொண்டிருக்கும் போது, அவனுக்குக் கைபேசியில் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

அவன் தந்தை தேவநாதன் இறந்து விட்டதாகச் சொல்லி தகவல் வர… ரொம்பச் சந்தோஷம் எனச் சொல்லிவிட்டு வைத்தான்.

மகனின் முகத்தில் தெரிந்த ரவுத்திரத்தை பார்த்த ஊர்வசி, யார் என்று கேட்க, சொல்லவும் முடியாமல்… சொல்லாமல் இருக்கவும் முடியாமல்… நிலை இல்லாத மன நிலையில் தடுமாறிக் கொண்டிருந்த போது, அவன் அத்தையின் குடும்ப மொத்தமும் வந்தது.

வைஜயந்திக்கு என்ன சொல்வது என்று புரியாமல் நின்றவர், “அண்ணன் இறந்திட்டாராம் அண்ணி.’ என்றதும், ஊர்வசி எந்த உணர்வையும் காண்பிக்கவே இல்லை.

எவ்வளவு கோபம் இருந்தாலும், இறந்ததுக்குப் போகலைனா நல்லா இருக்காது.” என ருக்மணி ஈஸ்வருக்குப் பயந்து கொண்டு தான் சொன்னார்.

எங்களைப் பொறுத்தவரை அவர் எப்போவே செத்துட்டார். நாங்க அப்பவே தலை முழுகிட்டோம்.” என்றான் ஈஸ்வர். அவன் சொல்வது தான் சரி என்பது போல ஊர்வசி நின்றிருந்தார்.

நீ கொல்லி போட்டாத்தான் உன் அப்பா ஆத்மா சாந்தி அடையும்.” என்றார் ருக்மணி.

எங்க அம்மா உயிரோட இருக்கும் போதே… மனசால கொன்னு போட்டவர் அவர், அவருக்குக் கொல்லி வச்சு… ஒரு நிம்மதியான இறுதி பயணத்தை நான் அவருக்குக் கொடுக்கவே மாட்டேன். அவர் பேரை சொல்லிட்டு இங்க யாரும் வராதீங்க.” என்றவன், சாவியை எடுத்துக் கொண்டு கடை திறக்க சென்று விட்டான்.

ஒரு வருடமாக மனைவியிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடத் தேவநாதன் முயன்று கொண்டு தான் இருந்தார். “நான் அவரை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போகக் கூடத் தயங்க மாட்டேன்.” என்று ஈஸ்வர் உறுதியாக நின்றதால் தான் வர முடியாமல் இருந்தார்.

தங்கள் திருமணத்தை, தாம்பத்தியத்தைக் கொச்சை படுத்திவிட்டு போன மனிதரை…. திரும்பத் தன் வாழ்வில் இணைத்து, தன் சுயத்தையும் சுயமரியாதையையும் இழக்க நேராமல்… அவரைக் காத்து நிற்கும் மகனின் பக்கம் தான் ஊர்வசி எப்போதும்.

இப்போதும் என் மகன் எடுத்த முடிவு தான் என்பது போல நிமிர்வாக அவர் நிற்க… வைஜயந்தியின் குடும்பம் அங்கிருந்து சென்றது.

அதன் பிறகு அவர்கள் கேத வீட்டிற்குச் சென்றார்களா… இல்லையா என்று எதுவும் இவர்கள் கேட்டுக்கொள்ளவில்லை.

வெளியே அம்மா நிமிர்வாகக் காட்டிக் கொள்கிறார், உள்ளே எப்படி இருக்கிறார் என்று ஈஸ்வருக்குத் தெரியவில்லை. அதனால் அவரை ராகவியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றவன், அம்மா சிறிது நாட்கள் இங்கயே இருக்கட்டும் என்று அவரை அங்கேயே விட்டுவிட்டு அவன் மட்டும் ஒரு வாரத்தில் சிங்கப்பூரில் இருந்து திரும்பி விட்டான்.

அதன் பிறகு நாட்கள் வேகமாகச் செல்ல… அவந்திகாவின் திருமணதிற்கு இரண்டு மாதங்கள் இருக்கும் போது, அவளது திருமணம் நின்று விட்டது. திருமணத்தை நிறுத்தியது அவந்திகா தான்.

Advertisement