Advertisement

மறுவாரம் ஈஸ்வர் பக்க உறவில் ஒரு திருமணம். மறுநாள் வேலை நாள் என்பதால்… முன்தினம் வரவேற்பிற்கு ஈஸ்வர் பாவனி மற்றும் ஊர்வசி மூவருமே சென்றனர். பாவனி கணவன் வாங்கிக் கொடுத்த நகைகளை அணிந்து கொண்டு சென்றிருந்தாள்.

பட்டுப் புடவையில் லேசான ஒப்பனையில் இருந்த மனைவியின் மீது இருந்து பார்வையைத் திருப்பத்தான் ஈஸ்வருக்குச் சிரமமாக இருந்தது. மறுநாள் திருமணத்தை முடித்து விட்டுத்தான் ஊர்வசி வருவதாக இருக்க… இவர்கள் இருவரும் மட்டும் இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பினர்.

சற்றுத் தூரம் அதிகம் தான். வீட்டிற்கு வந்து சேரும்போது கிட்டத்தட்ட பதினோரு மணிக்கு மேல ஆகிவிட்டது. அந்நேரம் பாவனியின் வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க… சாதாரணமாக இந்நேரம் உறங்கி இருப்பார்கள்.

பாவனி வீட்டிற்கு வந்தவள் உடைமாற்றிவிட்டு அவள் வீட்டுக்கு செல்ல… ஈஸ்வரும் அவளோடு சென்றான்.

அழைப்பு மணியை அடித்தால்… வெகு நேரம் சென்று விமல் தான் வந்து கதவைத் திறந்தான்.

அம்மா எங்க டா?” என்றாள்.

நான் தூங்கிட்டேன். இப்போ சத்தம் கேட்டு தான் வந்தேன்.” என்றவனோடு  இருவரும் உள்ளே செல்ல… அங்கே சமையல் அறையில் வளர்மதி தரையில் விழுந்து கிடந்தார். அதைப் பாத்ததும் பிள்ளைகள் இருவரும் கதறி விட்டனர்.

இவர்கள் பதற்றத்துடன் சென்று பார்க்க… அவருக்கு உணர்வு இருந்தது. ஆனால் அவரால் பேசவோ… எழுந்து கொள்ளவே முடியவில்லை. ஈஸ்வரும் விமலும் சேர்ந்து அவரை ஹாலுக்குத் தூக்கிக் கொண்டு வந்தனர்.

பாவனிக்கு பார்த்ததுமே புரிந்து விட்டது. இது பக்கவாதம் என்று. அவள் துறையில் அவள் இது போல எத்தனை பேரை பார்த்து இருக்கிறாள். நேர விரயம் செய்யக் கூடாது என்று உணர்ந்தவள், ஈஸ்வரிடம் சொல்ல… அவன் உடனே ஆம்புலன்ஸ்க்கு அழைத்து விட்டான். இவர்கள் காரில் சென்றால் போக்குவரத்தில் மருத்துவமனை செல்ல மிகவும் தாமதமாகிவிடும்.

உடனே ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. அதில் அவர்கள் மூவரையும் அனுப்பிவிட்டு, ஈஸ்வர் அவனது பைக்கில் பின்னே சென்றான்.

இருபது நிமிடத்தில் மருத்துவமனை சென்று சேர்ந்து விட்டனர். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர் சோதித்துப் பார்த்துவிட்டு, “எவ்வளவு நேரம் ஆகுது?” என்று கேட்க… ஈஸ்வர் விமலை கேட்க…” நான் பத்தரை மணி வரை படிச்சிட்டு இருந்தேன். அதுவரை அம்மா நல்லத்தான் இருந்தாங்க.” என்றான்.

ஒரு மணி நேரத்திற்குள் வந்து விட்டதால்… முடிந்தவரை சரி செய்யலாம் என்றார் மருத்துவர்.

மூளைக்குச் செல்லும் ரத்த குழாயில் இருந்த அடைப்பை சரி செய்ய மருத்துக்கள் வளர்மதிக்குக் கொடுக்கப்பட்டது. பாவனியும் விமலும் முற்றிலும் உடைந்து போனார்கள் என்பது உண்மை. ஈஸ்வர் இல்லையென்றால் இருவரும் அந்த நிலையை எப்படிக் கடந்திருப்பர்களோ… அவன் தான் முழுவதும் பொறுபேற்றுக் கொண்டான்.

மறுநாள் திருமண வீட்டில் இருந்து வந்த ஊர்வசிக்கு அதற்குப் பிறகுதான் விஷயம் தெரியும்.

ஏன் டா உடனே சொல்றதுக்கு என்ன?” என அவர் மகனிடம் கோபிக்க…. 

“நீங்க உடனே அங்க இருந்து கிளம்பினா.. அங்க இருக்கிறவங்க எல்லாம் காரணம் கேட்பாங்க. எல்லோருக்கும் சொல்லணும். அதெல்லாம் எதுக்கு? அதுதான் சொல்லலை.” என்றான்.

மறுநாள் வளர்மதிக்கு முற்றிலும் உணர்வு திரும்பி விட்டது. ஆனால் அவரால் முன்பு போலப் பேச முடியவில்லை. ஒருபக்க கையும் காலும் முழுவதுமாகச் செயல் இழக்கவில்லை என்றாலும், முழுமையாகப் பயன்படுத்த சில மாதங்கள் ஆகும்.

ஊர்வசியின் வயது மற்றும் நேரத்திற்கு மருத்துவமனைக்கு வந்ததால்தான், இந்த அளவுக்கு இருக்கிறார் இல்லையென்றால்… இன்னும் மோசமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் முறையான மருத்துவம் மற்றும் உடற்பயிற்சி எடுத்துக் கொண்டால் கண்டிப்பாகச் சரி செய்யலாம் என்றார் மருத்துவர்.

இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்கட்டும், பிறகு வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

வீட்டிற்கு வர மறுத்த விமலை ஈஸ்வர் சமாதானம் செய்து அழைக்க… “நான்தான் இருக்கேன் இல்ல… நான் அம்மாவை பார்த்துக்கிறேன். நீ ஸ்கூல் போகணும் தான… நீ அவரோட போ.” எனப் பாவனி அனுப்பி வைத்தாள்.

பகலில் வீட்டு வேலை முடிந்ததும் ஊர்வசியும் சென்று பாவனியோடு மருத்துவமனையில் இருப்பார். விமல் பள்ளி செல்லும் நேரம் தவிர ஈஸ்வர் விமலை தனியே விடாமல் தன்னுடனே வைத்துக் கொண்டு இருந்தான்.

ஒரு வாரம் சென்று மாதம் ஒருமுறை செக்அப் வர வேண்டும். தினமும் மருந்து மாத்திரையோடு, கைக்கும் காலுக்கும் பிசியோதெரபி பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி வளர்மதியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் வீட்டுக்கு வந்ததும் தான் ஊர்வசிக்கு நிம்மதியாக இருந்தது. இதோடு போனதே… இந்த அளவுக்கு வளர்மதி இருப்பதே இப்போதைக்குப் போதும் என்று நினைத்தார்.

அம்மா வீட்டுக்கு வந்ததும் விமல் கூட மகிழ்ச்சியாக இருந்தான்.

பாவனி முகத்தில் எப்போதும் யோசனைதான். ஆனால் வெளியே அப்படி ஒரு அமைதியை காண்பித்தாள்.

ஈஸ்வருமே நிறைய முறை “ரொம்ப யோசிக்காத… சீக்கிரம் சரியாகிடும்.” என்பான். ஆனால் பாவனியிடம் இருந்து பதிலே இருக்காது.

பாவனி அவள் அம்மா வீட்டில் தான் இருந்தாள். வேலைக்கும் செல்ல முடியவில்லை. விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தாள்.

ஊர்வசி வீட்டு வேலை முடித்து விட்டுக் குழம்பு பொரியல் என்று இவர்களுக்கும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, இங்கும் சிறிது நேரம் இருந்து விட்டு செல்வார். 

பாவனி வீட்டு வேலையோடு அவள் அம்மாவையும் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவரைக் குளிக்க வைத்து, சாப்பாடு கொடுத்து, அவளே அவரின் கைக்கும் காலுக்கும் உடற்பயிர்சியும் செய்ய வைத்து விடுவாள்.

ஈஸ்வரும் இரவு கடையில் இருந்து வந்தால்…. உறங்கும் நேரம் வரை இங்கே இருந்துவிட்டு தான் செல்வான்.

ஈஸ்வர் தான் மருத்துவமனைக்குப் பணம் கட்டி இருந்தான்.

அன்று வந்தவனிடம் பாவனி மருத்துவமனைக்கு எவ்வவளவு பணம் செலவானது என்று கேட்க…

இப்போ அதைப் பத்தி என்ன? முதல்ல உங்க அம்மாவுக்குச் சரி ஆகட்டும்.” என்றதற்கு,

எங்ககிட்ட பணம் இருக்கு ஈஸ்வர்.” என பாவனி சொல்ல…

ஏன் நான் கொடுக்கக் கூடாதா…” என்றவன், “நீ இப்போ எதையும் யோசிக்காத. ஆறு மாசத்துக்குள்ள உங்க அம்மாவுக்கு எவ்வளவு சரியாகுதோ அவ்வளவுக்கு நல்லது. முதல்ல அவங்களைச் சரி பண்ண பார்ப்போம்.” என முடித்துக் கொண்டான்.

பாவனியும் சரி என்பதாகத் தலையசைத்தாள்.

ராஜீவுக்கு மனைவிக்கு இப்படி ஆனது தெரியாது. அவர் எதேட்சையாகப் பார்க்க வந்திருக்க… பாவனி அவரை வீட்டிற்குள் கூட விடவில்லை.

இந்த ஆளின் அனுதாபமெல்லாம் தன் அம்மாவுக்குத் தேவையில்லை என்று நினைத்தவள், அவரை உள்ளே விடவே இல்லை.

அவர் ஈஸ்வரின் கடைக்குச் சென்று அவனிடம் முறையிட… அவன் உண்மையைச் சொல்லிவிட்டான்.

உங்ககிட்ட எப்படி அவளுக்கு அவங்க அம்மாவை காட்ட மனசு வரும். அவங்களைத் தொந்தரவு பண்ணாதீங்க. நான் பார்த்துக்கிறேன்.” என்றான்.

அன்று இரவு ஈஸ்வர் பாவனியிடம் அவள் தந்தை வந்தது பற்றிச் சொல்ல…

அந்த ஆளுகிட்ட ஏன் சொன்னீங்க? எங்க அம்மாவை இளக்காரமா தான நினைப்பார். அவருக்கு நடந்த இன்னொரு கல்யாணத்துல அவருக்குக் குழந்தை இல்லை.. அதனால தான் அவர் என்னைப் பார்க்க வரார்… இல்லைனா என்னையும் கண்டுக்க மாட்டார்.” என்றாள்.

சரி விடு.” என்றான்.

மூன்று மாதங்கள் சென்றிருக்கும், இப்போது வளர்மதி ஓரளவுக்கு பேச ஆரம்பித்தார். அதோடு வாக்கரின் உதவியோடு நடக்கவும் செய்தார். 

அன்று விமல் வீட்டில் இருந்ததால்… பாவனி அவனிடம் வளர்மதியை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, இங்கே ஈஸ்வரின் வீட்டுக்கு வர… அப்போது ருக்மணி வந்திருந்தவர், “உன் நாத்தனார் பெண்ணை எடுக்காம வெளியில எடுத்த… இப்ப அவங்க குடும்பத்தையும் சேர்த்து சுமந்திட்டு இருக்கீங்க. கல்யாணமானா குழந்தை குட்டின்னு இல்லாம… இவ என்ன அவங்க அம்மாவுக்குச் சேவை பண்ணிட்டு இருப்பாளா?”

இதுக்குதான் பெரியவங்க பேச்சைக் கேட்கணும். உன் நாத்தனாரும் என் பேச்சை கேட்கலை… நீயும் கேட்கலை… ஈஸ்வரும் சந்தோஷமா இல்லை. அவந்திகாவும் வர்ற சம்பந்தத்தை எல்லாம் தட்டி விடுறா…” என்று சொல்ல…

இவரிடம் பேசினாலும் பயன் இல்லை… அவர் புலம்புவதைப் புலம்பட்டும் என ஊர்வசியும் விட்டு விட்டார். இவரெல்லாம் பேசுவது போல ஆகிவிட்டதே என்று அவருக்கு கவலை. 

ருக்மணி பாட்டிக்கு நல்ல வெண்கல தொண்டை. அதுவும் ஈஸ்வர் இல்லாத நேரம் பார்த்து தான் வந்திருந்தார். அதனால் சத்தமாகத் தான் பேசினார். பாவனி அனைத்தையும் கேட்டவள், தான் வந்தது போலக் காட்டிக்கொள்ளாமல் திரும்பி விட்டாள்.

ஈஸ்வர் சில நாட்களில் மனைவியின் மாற்றத்தை உணர்ந்தான். அவள் எதையும் அவனிடம் சொல்வதே இல்லை. ஊர்வசியின் உதவியையும் நாசுக்காக மறுத்திருந்தாள். வளர்மதியின் அக்காவும் வந்திருக்க… ஊர்வசி பெரிதாக நினைக்கவில்லை. அவரை அவள் அம்மாவுக்குத் துணைக்கு வைத்துவிட்டு, வேலைக்கும் சென்று வர ஆரம்பித்தாள். அதுவும் அவள் இரவு நேரம் வரை வேலைக்குச் சென்றுவிட்டு வர… ஈஸ்வருக்கும் அவளோடு பேச கூட முடியவில்லை.

அன்று அவன் கைபேசிக்கு மெசேஜ் ஒன்று வர… என்னவென்று பார்த்தால் பாவனி தான் அவன் மருத்துவமனைக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பி அனுப்பி இருந்தாள்.

என்ன நினைத்துக் கொண்டு இதெல்லாம் செய்கிறாள் என்று புரியவில்லை.

பணம் வந்து விட்டது நன்றி என ஈஸ்வர் மனைவிக்கு மெஸ்சேஜ் அனுப்பினான்.

அவன் அப்படியே எல்லாம் தன்னை விட மாட்டன் என பாவனிக்கு தெரியும். கணவனிடம் என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும் என அவள் நிறைய யோசித்து வைத்திருக்க… அவள் எதிர்பார்த்திருந்த நேரமெல்லாம் ஈஸ்வர் வரவேயில்லை.

 

Advertisement