Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 9

ஈஸ்வர் பாவனி திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருந்தது. அன்று காலை பாவனி கிளம்பும் போதே தாமதமாகிவிட்டது. வீட்டில் இருந்து கிளம்பியவள், அவள் அம்மாவையும் சென்று எட்டிபார்த்து வேலைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு சென்றவள், கடையைத் தாண்டி செல்லும் போது அவளையும் அறியாமல் பார்வை ஈஸ்வரை தேடியது.

ஈஸ்வர் பில் போடும் இடத்தில் தான் நின்று கொண்டிருந்தான். அவன் இவளைக் கவனிக்கவில்லை. இவள் அவனைப் பார்த்துக் கொண்டே கடந்து செல்ல… ஏதோ தோன்ற ஈஸ்வர் திரும்பி பார்க்கும் போது பாவனி சென்றிருந்தாள்.

அவன் வெளியே வந்து பார்க்க…. தூரத்தில் செல்லும் மனைவியைப் பார்த்தவன், கடையில ஆள் இல்லை… இல்லைனா வண்டியில போய் விட்டுட்டு வந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.

பாவனியும் அதையே தான் நினைத்துக் கொண்டு சென்றாள். வண்டியில கொண்டு போய் விடலாம் தானே… அதெல்லாம் தோணாது என நினைத்துக் கொண்டு சென்றாள்.

இவளும் அவனிடம் என்னைக் கொண்டு போய் விடுங்கள் என்று கேட்டிருக்கலாம் தானே… ஏனோ தனக்கு என்று அவனிடம் எதையும் அவளுக்கு உரிமையாக கேட்க வருவது இல்லை. 

அந்த வாரம் ஈஸ்வரின் பிறந்தநாள் வர… பாவனி அவனுக்கு உடையும் கைக்கடிகாரமும் வாங்கி வைத்திருந்தாள்.

காலையில் அவன் எழுந்ததும், முதலில் பாவனி தான் அவனை வாழ்த்தினாள்.

அவன் குளித்துவிட்டு வந்ததும், அவள் வாங்கி வைத்திருந்த உடையைக் கொடுக்க… “எதுவும் சொல்லாமல் வாங்கி அணிந்து கொண்டான்.”

அடுத்து அவள் கைகடிகாரத்தை எடுத்து போட்டுவிட… “ஹே இதெல்லாம் நான் போடவே மாட்டேன்.” என அவன் கையை இழுக்க…

பரவாயில்லை… இனிமே போடுங்க.” என்றவள், போட்டுவிட்ட பிறகே அவன் கையை விட்டாள்.

எதுக்கு இதெல்லாம்?” என்றான் சிரித்தபடி.

நான் உங்களுக்குப் பண்ணதுனால நீங்களும் எனக்கு இதெல்லாம் பண்ணனும்னு நான் எதிர்பார்க்க மாட்டேன் ஈஸ்வர். அதனால பயப்படாதீங்க.” என்றதும்,

நானும் அதையே தான் சொல்றேன். என்கிட்டே இதையெல்லாம் எதிர்பார்த்திடாத. எனக்கு இதெல்லாம் ஞாபகம் வச்சுக்கிறது கஷ்ட்டம்தான். அம்மா தான் எனக்கு நினைவு படுத்துவாங்க.” என்றான்.

மனசுக்கு நெருக்கமானவங்களா இருந்தா… நாம அவங்க சம்பந்தப்பட்ட எதையும் மறக்க மாட்டோம். நாளைக்கு உங்களுக்குப் பையனோ பெண்ணோ பிறந்தா… அவங்க பிறந்த நாளை மறந்துடுவீங்களா என்ன” என்றதும்,

ஹே… இப்போ ஏன் அதைச் சொல்ற? யாராவது சீக்கிரம் வர வாய்ப்பிருக்கா என்ன?” என்றான் ஆவலாக.

ம்ம்… அதெல்லாம் ஒண்ணுமில்லை…. ஆனா கல்யாணம் வேண்டாம்னு சொன்னவர், கல்யாணத்துக்குப் பிறகு உங்க விஷயத்துல எல்லாம் சரியா இருக்கீங்களே… அதுதான் புரியலை.” என்றதும்,

உன்னைப் பக்கத்துல வச்சுகிட்டு என்னைச் சாமியாரா இருக்கச் சொல்றியா? காதல் கல்யாணம் இதுல எல்லாம் கமிட் ஆகிறதுக்கு முன்னாடி எப்படி வேணா இருக்கலாம். கமிட் ஆகிட்டா உண்மையா இருக்கணும்.”

நீயும் தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்த… ஆனா உனக்கு இப்போ எந்த ஆசையும் இல்லையா?” என்றதும்,

இல்லைன்னு நான் எப்ப சொன்னேன்?” என்றாள் பாவனி.

சொல்லித்தான் பாரேன்.” எனச் சிரித்தபடி அவன் வெளியே செல்ல…பாவனியும் உடன் சென்றாள்.

ஊர்வசி மகனின் பிறந்தநாள் என்று காலை உணவுக்குச் சக்கரை பொங்கல், வெண் பொங்கல், சாம்பார், வடை என நிறையச் செய்திருந்தார்.

மகனை பார்த்ததும் அவனைத் திருநீறு வைத்து வாழ்த்தியவர், “கோவிலுக்குப் போயிட்டு வா டா.” என்றார்.

சரி மா என்றவன் காலை உணவு உண்டதும் கோவிலுக்கு அவன் மட்டும் கிளம்ப… பாவனி தானும் வருவதாகச் சொன்னாள்.

நீ வேலைக்குப் போவியேன்னு நினைச்சேன்.” என்றதும்,

பரவாயில்லை உங்களோட வந்திட்டு போறேன்.” என்றாள்.

இருவரும் அவன் வண்டியில் கோவிலுக்குச் செல்ல… கோவிலில் அர்ச்சனை செய்து, சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். அப்படியே ஈஸ்வர் சென்று பாவனியை அவள் வேலை செய்யும் இடத்தில் விட்டுவிட்டு வந்தான்.

இரவு கடை மூடும் நேரம் விமல் அவன் பங்குக்குக் கேக் வாங்கிக் கொண்டு கடைக்கு வந்தான்.

அவர்கள் கடையில் வைத்து விமல் கேக்கை வெட்ட வேண்டும் என்றான்.

ஏன் டா உனக்கு இந்த வேலை” என்றான் ஈஸ்வர் சிரித்தபடி.

பாவனி, அவள் அம்மா, ஊர்வசி என இவர்களும் கடைக்கு வர… கடை பணியாளர்களும் இருந்தனர்.

ஈஸ்வர் கேக்கை வெட்டி விமலுக்குத் தான் முதலில் கொடுத்தான். பிறகு அவன் அம்மாவுக்குக் கொடுத்தவன், பாவனிக்கு ஊட்டி விடாமல் கையில் கொடுத்தான்.

யாரோ போலக் கையில் கொடுத்ததும் பாவனிக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவள் அப்போது எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

நான் வீட்டுக்கு போறேன்.” என்று சென்று விட்டாள். உடன் அவள் அம்மாவும் சென்றார்.

மனைவிக்குக் கேக்கை கையில் கொடுத்தது ஈஸ்வருக்கே ஒருமாதிரி தான் இருந்தது. எல்லோரையும் வைத்துக் கொண்டு அவனுக்கு ஊட்டிவிடவும் வரவில்லை. கடையைப் பூட்ட சொல்லிவிட்டு கேக்கோடு வீட்டுக்கு வந்தால்… பாவனி வீட்டில் இல்லை. அவள் அம்மா வீட்டில் இருந்தாள்.

சரி அவள் வரட்டும் என்று இருந்தான்.

கேக்கை கையில் கொடுக்கிறான். இவன் என்ன நினைச்சிட்டு இருக்கான். இவனுக்கு நான் பொண்டாட்டி தானே என பாவனிக்கு சரி கோபம் தான்.

மனதில் ஏமற்றம் பரவி இருக்க… அவள் அறைக்குச் சென்று கட்டிலில் படுத்து விட்டாள்.

ஏன் டா பிறந்தநாள் அதுவுமா எங்காவது வெளிய போவீங்கன்னு பார்த்தேன். மதியம் தான் போகலை… நைட்டாவது வெளிய போய்ச் சாப்பிட்டிருக்கலாமே…” என ஊர்வசி சொன்னதும், நேரத்தை பார்த்த ஈஸ்வர், “ஒன்பது தான ஆகுது. இப்ப கூடப் போகலாமே…” என்றவன், “நீங்களும் வர்றீங்களா மா..” என அவன் அம்மாவை அழைக்க…

எனக்கு நைட் அதிகம் சாப்பிட முடியாது. இன்னொரு நாள் மதியம் போகலாம். நீங்க இப்போ போயிட்டு வாங்க.” என்றார்.

சரி என்றவன், தயாராகிச் சென்றான்.

இவன் சென்ற போது பாவனி, அவள் அறையின் கட்டிலில் குப்புற படுத்திருந்தாள்.

அவள் அருகில் சென்று கட்டிலில் உட்கார்ந்வதவன், அவளின் முதுகில் தடவிக் கொடுத்தபடி, “என்ன ஆச்சு பாவனி? ஆர் யூ ஓகே…” என்று கேட்க… இல்லை என்று அவன் சட்டையைப் பிடித்து அவளுக்கு உலுக்க வேண்டும் போலத்தான் இருந்தது. ஆனால் அமைதியாக இருந்தாள்.

இப்போ வெளிய போய்ச் சாப்பிடலாம். எழுந்து கிளம்பு.” என்றவன், விமலையும் கூட்டிட்டு போகலாமா?” என்றதும்,

அவனுக்குப் பரிட்சை வருது. வெளியப் போனா இஷ்டத்துக்குச் சாப்பிடுவான். அப்புறம் உடம்புக்கு முடியலைனா கஷ்டம்.” என்றதும்,

சரி அப்போ விமல், உங்க அம்மா எங்க அம்மாவை எல்லாம் இன்னொரு நாள் கூட்டிட்டு போவோம். இப்போ நாம மட்டும் போயிட்டு வரலாம்.” என்றான்.

பாவனி வேறு நல்ல சுடிதார் மாற்றிக் கொண்டு கணவனோடு கிளம்பினாள்.

நல்ல பெயர் பெற்ற உணவகத்திற்குத் தான் அழைத்து வந்திருந்தான். பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டதால்… உணவகத்தில் ஆட்களும் குறைவு தான். ஈஸ்வர் அவளைத்தான் ஆர்டர் கொடுக்கச் சொன்னான். ஆனால் அவள் அவனையே கொடுக்கச் சொன்னாள்.

ஈஸ்வர் ஆர்டர் செய்த உணவுகள் வந்ததும் இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

அவள் எதோ மூட் அவுட் என ஈஸ்வருக்குப் புரிந்துதான் இருந்தது. பாவனியும் ஈஸ்வரிடம் சண்டை போட்டிருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. காதலை கேட்டு பெறக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

உனக்கு இன்னைக்கு வேலை நாள் இல்லையா… அதனால வார கடைசியில வெளிய போய்ச் சாப்பிடலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அம்மா தான் எங்கையும் வெளிய போகலையான்னு கேட்டாங்களா… அதனால இன்னைக்குப் போவோம்னு நினைச்சேன்.”

நீ வந்த பிறகு தான் என் பிறந்தநாள் இவ்வளவு ஸ்பெஷல் ஆகிடுச்சு. சின்ன வயசுல கொண்டாடி இருக்கேன். அப்புறம் காலேஜ் படிக்கும் போது பிரண்ட்ஸ்க்கு ட்ரீட் கொடுத்திருக்கேன். ஆனா இப்போ கொஞ்ச வருஷமா கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவேன். அம்மா எனக்குப் பிடிச்சதா சமைச்சு தருவாங்க.” என்றான்.

எதோ இதாவது சொன்னனானே என நினைத்தவள், அதன் பிறகு கொஞ்சம் சரியாகினாள்.

உண்டதும் அவள் ஐஸ்கிரீம் கேட்க… ஈஸ்வர் ஆர்டர் செய்தவன், ஐஸ்கிரீம் வந்ததும் மனைவியின் அருகே சென்று உட்கார்ந்து கொண்டான், இருவருக்கும் பொதுவாக இரண்டு மூண்டு வகைகள் சேர்த்து பெரிய கண்ணாடி குட்வையில் இருக்க… அதிலிருந்து ஸ்பூனால் எடுத்து இருவரும் உண்டனர்.

வீடு வந்து சேர்ந்தவர்கள் உடைமாற்றிக் கட்டிலுக்கு வர…. ஈஸ்வர் மனைவியின் அருகே உட்கார்ந்தான்.

இருவரும் சேர்ந்து வெளியே சென்று வந்தது அவனுக்கு மனதுக்குப் புத்துணர்ச்சியாக இருந்தது. இனிமே மாசம் ஒரு தடவையாவது எங்காவது போகணும் பாவனி என்ற ஈஸ்வர் மனைவியின் மடி மீது கை வைக்க… பாவனி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

கல்யாணம் ஆகி ஒரு மாசத்துக்கு மேல ஆகுது. இன்னும் உன்னோட கூச்சம் போகலை இல்ல…” என்றவன், “என்னோட பிறந்த நாளுக்கு எதுவும் ஸ்பெஷல் இல்லையா…” என அவளைத் தாபமாகப் பார்க்க…

பாவனியும் கொஞ்சம் வெட்கத்தை விட்டு, அவனின் முன் உச்சி கேசத்தை ஒதுக்கியவள், அவனின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட…. அடுத்து அவளுக்குத் தன்னுடைய இதழைக் காட்டினான். அவள் அங்கேயும் அழுத்தமாக முத்தமிட… மனைவியை ஆசையாகத் தழுவி கொண்டான்.

Advertisement