Advertisement

பாவனி குளியல் அறை சென்று உடைமாற்றி விட்டு வர…

நீ இந்தக் காதல் வசனம் எல்லாம் என்கிட்டே எதிர்பார்த்தா… எனக்கு அது எப்பவுமே வராது. ஆனா எனக்கு உன்னைப் பிடிக்கும். பிடிக்காம எல்லாம் கல்யாணம் செஞ்சுக்கலை.” என்றான்.

சரி எனத் தலையசைத்தவள், கட்டிலில் மறுபக்கம் திரும்பி படுத்துக்கொள்ள… ஈஸ்வருக்கு மிகவும் ஏமாற்றம் தான்.

அவன் வெகு நேரம் அவன் கைபேசியில் மூழ்கி இருந்தவன், உறக்கம் வந்ததும் தான் படுத்தான்.

மறுநாளில் இருந்து ஈஸ்வர் பகல் வேளையில் எப்போதும் போல அவன் அலுவலக வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டான். பாவனி மறுவாரத்தில் இருந்து தான் வேலைக்குச் செல்வதாக இருந்தது. அவள் பகலில் இங்கேயும், மாலை விமல் வரும் நேரம் அவள் வீட்டிலும் இருந்துவிட்டு வருவாள்.

ஈஸ்வர் இரண்டு மூன்று முறை அவளை நெருங்கிப் பார்த்துவிட்டு, உண்மையிலேயே அவள் கூச்சப்படுகிறாள் என்றதும் விட்டு விட்டான்.

திருமணமாகி ஆறாம் நாள் பாவனி வந்து படுத்துவிட்டாள். ஆனால் ஈஸ்வர் இன்னும் அறைக்கு வரவில்லை. அவன் இல்லாமல் அவளுக்கு உறக்கமும் வரவில்லை. சற்று நேரம் பொறுத்தவள் எழுந்து சென்று பார்க்க… அவன் அலுவலக அறையில் மடிக்கணினியில் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

தூங்க வரலையா?” அவள் கேட்க…

நான் வர டைம் ஆகும். நீ போய்த் தூங்கு.” என்றான்.

நீங்க வாங்க அப்போதான் எனக்குத் தூக்கம் வரும்.” என்றதும்,

உனக்கே அநியாயமா இல்லை… நீ தூங்கிறதுக்கு நான் வரணுமா”

அவன் கேட்ட விதத்தில் பாவனிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

ப்ளீஸ் வாங்க.” என்றாள்.

அநியாயம் பண்ற டி.” என்றவன், அவன் செய்து கொண்டிருந்த வேலையை மூடி வைத்துவிட்டு வந்தான்.

அவன் வந்து கட்டிலில் படுக்க… பாவனி அவளே அவனை நெருங்கிப் படுக்க… ஈஸ்வரும் அவளை மெல்ல அனைத்துக் கொண்டான்.

பாவனி இப்படி இருந்தா… எனக்குத் தூக்கம் வராது டி.” அவன் அவள் காதில் சொல்ல…

நான் உங்களைத் தூங்க சொல்லலை…” என அவளும் அவன் காதில் சொல்ல… புரிந்து கொண்டவன் அதற்கு மேல் தள்ளி இருப்பானா என்ன? ஆனால் அவளின் கூச்சத்தைப் போக்குவதற்குள் அவன் ஒருவழியாகி இருந்தான். அவன் நினைத்தது நடந்து முடிக்கக் கிட்டத்தட்ட விடியற்காலை ஆகியிருந்தது.

உறங்குவதற்கு முன், “நீ எனக்காகத் தான் சரின்னு சொன்ன…. தேங்க்ஸ்.” என்றான்.

பாவனி பதில் சொல்லாமல் கணவனைப் பார்த்து புன்னகைத்தவள் கண்களை மூடிக்கொள்ள… அவளை அனைத்துக் கொண்டு உறங்க நினைத்தவன், அவளுக்குத் தொந்தரவாக இருக்குமோ என்ற எண்ணத்தில் விலகி படுத்து உறங்கிப் போனான்.

மறுநாள் ஈஸ்வர் காலை ஒன்பது மணி வரை எழுந்துகொள்ளவே இல்லை. பாவனியுமே எட்டு மணி போலத்தான் எழுந்து குளித்துவிட்டு வெளியே சென்றிருந்தாள்.

அவள் சென்ற போது, ஊர்வசி சமையல் அறையில் இருந்தார்.

அவர் என்ன நினைப்பாரோ என்று பயந்தவள், “ரொம்ப நேரம் தூக்கிட்டேன்.” என்று சொல்ல…

ஈஸ்வர் வீட்ல இருந்து தானே வேலை பார்க்கிறான். காலையில ஒன்னும் பெரிசா வேலை இருக்காது பாவனி. நீ மெதுவாவே எழுந்துக்கோ ஒன்னும் அவசரம் இல்லை.” என்றார்.

இப்போ தூங்கினாதான் குழந்தை எல்லாம் வந்திட்டா தூங்க நேரம் இருக்காது.” என்றும் சொல்ல… குழந்தை என்றதும் பாவனி முகம் சிவந்து போனாள்.

பாவனி சென்று ஈஸ்வரை எழுப்ப…. அவன் எழுந்துகொள்ளாமல் இருக்க. “டைம் என்ன தெரியுமா? ஒன்பது மணி ஆச்சு.” என்றதும்,

நான் நேத்து தூங்கும் போது டைம் என்ன தெரியுமா? மனுஷனை போட்டு அந்தப்பாடு படுத்திட்டு… இப்போ எழுப்ப வந்திட்டா…” என்றவன் திரும்பி குப்புற படுத்துக்கொள்ள… பாவனிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

எழுந்துக்கோங்க ஈஸ்வர். அத்தை என்ன நினைப்பாங்க. கடை பையன் வேற சாவி வாங்க வந்தவன், அண்ணனுக்கு உடம்பு சரியில்லையான்னு கேட்டுட்டு போறான்.” என்றதும் எழுந்து உட்கார்ந்தவன், “நான் வரேன் நீ போ…” என்றான்.

ஈஸ்வர் நிதானமாகக் குளித்துவிட்டு வர… ஊர்வசி இருவருக்கும் தோசை ஊற்றிக் கொடுக்க… இருவரும் உண்டனர்.

உண்டதும் ஈஸ்வரும் அவன் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு உட்கார்ந்துவிட…

எங்கையாவது ரெண்டு பேரும் போயிட்டு வாங்களேன்.” என்றார் ஊர்வசி.

எங்க போகச் சொல்றீங்க?” ஈஸ்வர் புரியாமல் கேட்க…

ஹனிமூன் போயிட்டு வாங்களேன்.” என்றார்.

இவளோட வீட்லையே போராட முடியலை… இதுல வெளி இடத்தில சுத்தமா வாய்ப்பில்லை என ஈஸ்வர் நினைக்க… அவள் அம்மாவையும் தம்பியையும் தனியே விட்டு செல்ல பாவனியும் மிகவும் யோசித்தாள். அதுவும் இப்போது தானே விமல் உடல்நலம் சரியில்லாமல் மீண்டு வந்தான். அவன் இன்னும் பழைய மாதிரி ஆகவில்லை.

ஈஸ்வர் பாவனியை பார்க்க அவள் வேண்டாம் என்றாள்.

இருக்கட்டும் மா… கொஞ்ச நாள் கழிச்சு போறோம்.” என்றான்.

குழந்தை வந்திட்டா எங்கையும் போக முடியாது. இப்போ போனாத்தான் உண்டு.” என ஊர்வசி புலம்பிக் கொண்டே உள்ளே செல்ல…

அடுத்து இது வேறா என்று நினைத்தவன்,

அம்மா எங்களுக்குப் பத்து மாசமாவது டைம் இருக்கா?” எனச் சத்தமாக ஈஸ்வர் கேட்க… ஊர்வசி எதுக்கு டா என்றார்.

குழந்தை பெத்துக் கொடுக்கத்தான். நீங்க பேசுறதை பார்த்தா… இன்ஸ்டண்டா கேட்பீங்க போல…” என்றதும்,

ஏற்கனவே நீ கல்யாணம் பண்ணது லேட்… அதனால டைம் எல்லாம் இல்லை.” என ஊர்வசி கறாராகச் சொல்ல…

உங்க அவசரத்துக்கு எல்லாம் பெத்துக்க முடியாது மா… வரும் போது தான் வரும்.” என்றான் ஈஸ்வரும் இலகுவாக.

அடுத்து வந்த நாட்கள் இனிமையாகச் சென்றாலும், இரவில் தான் அவர்கள் சரமெல்லாம். பகலில் இருவரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். புதிதாக மனம் ஆனவர்கள் என்று அவர்களைப் பார்த்தால் சொல்ல முடியாது. வயதுக்கேற்ற பக்குவம் இருவரிடமும் இருந்தது.

ஈஸ்வர் சொன்னது போல… அவனுக்குக் காதலாக எல்லாம் பேச தெரியவில்லை அவனின் அக்கறை கூடச் சில நேரம் அதட்டலாகத் தான் வரும். பாவனி அவனுக்குப் பழகி இருந்தாள்.

அவள் மறுவாரம் வேலைக்குச் செல்லக் கிளம்பிய போது… “உனக்குத் தான் வேலைக்குப் போகப் பிடிக்கலை தான… ஏன் போற” என்றான்.

விமல் செட்டில் ஆகிற வரை போறேன்.” என்றாள்.

அப்போ என்கிட்டே இருந்து வாங்கிக்க மாட்ட அப்படித்தானே.” என்றான்.

அப்படி இல்லை ஈஸ்வர். இப்போ என்னால முடியும். முடியலைனா பார்க்கலாம்.” என்றாள். ஈஸ்வர் அவளின் விருப்பதிற்கே விட்டான்.

சரி காலையில மட்டும் போ…” என்றதற்குச் சரி என்று ஒத்துக் கொண்டாள்.

மதியம் வரை என்றாலும் பாவனி வீடு வர மூன்று மணி போல ஆகிவிடும். அதற்குப் பிறகு சென்று வளர்மதிக்கு சிறிது நேரம் அவர் வேலையில் உதவிவிட்டு வருவாள்.

ஊர்வசி பாவனியை வீட்டு வேலைக்கு எதிர்ப்பார்க்க மாட்டார். “எனக்கும் செய்ய எதாவது வேணுமே… இப்போ தெம்பா இருக்கிறவரை… நான் பார்த்துக்கிறேன். அப்புறம் நீ பண்ணு.” என்றுவிட்டார்.

பாவனி வந்ததால்…. ஈஸ்வர் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். அவனாக எல்லாம் யாரையும் பார்த்துத் திருமணம் செய்திருக்க மாட்டான் என ஊர்வசிக்கு தெரியும். அதனால் அவர் மாமியார் என்று எதுவும் அதிகாரத்தைக் காட்டவில்லை. அதோடு பாவனியின் உதவி அவளின் குடும்பத்துக்குத் தேவை என்பதையும் புரிந்து தான் வைத்திருந்தார்.

வளர்மதியுமே பாவனியிடம் அதைத்தான் சொல்லுவார். அவங்க விட்டுக் கொடுக்கிறாங்கன்னு நாம அதிகமா இடம் எடுத்துக்க வேண்டாம் என்றாலும் பாவனி கேட்க மாட்டாள்.

இருக்கட்டும் மா… அத்தைக்குச் சமையல் வேலை தான். மத்த வேலைக்கு ஆள் வச்சிருக்காங்க. நான் அவங்களுக்கும் ஹெல் பண்ணாம இல்ல…. ஈஸ்வர் அப்படி அவங்க அம்மா கஷ்ட்டப்பட எல்லாம் விட்டுட மாட்டார்.” என்பாள். அது என்னவோ உண்மை தான்.

விமல் இரவில் கடை அடைக்கும் நேரம் சென்று ஈஸ்வரோடு இருப்பான். பிறகு அவனுடனே வீட்டிற்கு வருவான். இரவு உணவு இவர்களுடனே உண்டுவிட்டு… சிறிது நேரம் இங்கயே படித்துவிட்டு செல்வான்.

பாவனி எவ்வளவு நகை போட்டு வந்தாள் என்றெல்லாம் ஊர்வசிக்குத் தெரியாது. அவள் சின்னச் சின்னதாக அணிந்து தான் பார்த்திருக்கிறார். அதிகம் வைத்திருந்தால் ஒன்று அவரிடமோ அல்லது ஈஸ்வரிடமோ தானே கொடுத்து பத்திரப்படுத்தி இருப்பாள். அதனால் அவளிடம் அதிக நகைகள் இல்லை என்பதை ஊகித்திருந்தார்.

ஈஸ்வர் இத்தனை நாள் நீ தனி ஆள். எந்த விசேஷத்துக்கும் போகாம இருந்திட்ட… இனி அப்படி இருக்க முடியாது. நாம் வீட்லயே அடுத்தடுத்து ஓவ்வொரு விசேஷம் வரும். பாவனிகிட்ட ரொம்பப் பகை இருக்க மாதிரி தெரியலை… நீ பணம் வச்சிருந்தா ஒரு செட் வெளிய போட்டுட்டு போற மாதிரி வாங்கிக் கொடேன்.” என்றார் மகனிடம்.

முதலில் யோசித்தவன், “பாவனிக்கு இஷ்டம்னா வாங்கித் தரேன.” என்றான்.

அந்த வார இறுதியில் ஈஸ்வர் பாவனியிடம், “உனக்கு ஒரு செட் நகை வாங்கலாம்னு இருக்கேன். போய் வாங்கிட்டு வந்திடலாமா?” என்றான்.

இப்போ எதுக்கு நகை வாங்கணும்? பணம் நிறைய வச்சிருக்கீங்களா?” என்றவள், “உங்களுக்கு என்ன வாடகையே நிறைய வருது.” என்றாள்.

வாடகை பணம் எல்லாம் அம்மா கணக்குக்கும், லோன் கட்டவும் தான் போகும். இது என்னோட பணம் பாவனி.”

இன்னும் லோன் கட்ட வேண்டியது இருக்குன்னா… எதுக்கு இப்போ நகை வாங்கணும்? உங்ககிட்ட இருக்கப் பணத்தை வச்சு லோனை கட்டி முடிக்கலாமே…”

நானே டேக்ஸ் கன்சல்ட்டண்ட் தான். நீ எனக்கே கிளாஸ் எடுக்காத… அதோட நகையும் ஒரு இன்வெஸ்மெண்ட் தான்.” என்றதும்,

சரி நீங்க வாங்கிக் கொடுத்தா வாங்கிக்கிறேன்.” என்றாள்.

இருவரும் நகை கடைக்குச் செல்ல… ஈஸ்வர் பாவனியை தேர்ந்தெடுக்கக் சொல்ல… அவன் சொன்ன தொகைக்கு, ஆரமும் இல்லாமல் நெக்லஸ் போலக் கழுத்தை ஒட்டியும் இல்லாமல் மத்தியத்தில் அணிவது போலக் கண்ணுக்கு நிறைவாகத் தேர்ந்தெடுத்தவள், காதுக்கும் பெரிய குடை ஜிமிக்கி வாங்கினாள். அந்த ஜிமிக்கி அணிந்து கொள்ள வேண்டும் என்பது அவளது வெகு நாள் ஆசை.

அவள் இரண்டையும் அணிந்து கொண்டு காட்ட… ஈஸ்வர் நன்றாக இருக்கிறது என்றான்.

இருவரும் நகை வங்கிக் கொண்டு வீட்டுக்கு வர… ஊர்வசியும் பார்த்துவிட்டு “நல்லா வாங்கி இருக்க… வெளிய போட்டுட்டு போக நல்லா இருக்கும்.” என்றார்.

அவள் அம்மாவிடம் சென்றும் காட்டி விட்டு வந்தவள், ஈஸ்வரிடம் எங்கே வைக்க என்று கேட்க…

அம்மா தான் உனக்கு வாங்க சொல்லி சொன்னாங்க பாவனி. நீ அவங்ககிட்டயே கொடுத்திடு. நமக்கு இந்த நகையைப் பத்திரபடுத்துறது எல்லாம் ஆகாது.” என்றான்.

அப்போ அவர்கள் சொல்லித்தான் நகையை வாங்கினானா… எதோ கணவன் ஆசையில் வாங்கிக் கொடுத்தான் என நினைத்துக் கொண்டு இருந்தாள்.

உண்மையில் அவளுக்கு ஈஸ்வரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. இவனுக்கு உண்மையில் தன்னைப் பிடித்திருக்கிறதா… இல்லை திருமணம் செய்து கொண்டோமே என்று அவன் கடமைக்காக எல்லாம் செய்கிறானா என்று புரியவில்லை.

உனக்கு வாங்கிக் கொடுக்க ஆசை…” என்று சும்மா கூடச் சொல்லி இருக்கலாம் தானே என நினைத்தவள், நீ எப்போது இதெல்லாம் எதிர்பார்க்க ஆரம்பித்தாய். உனக்கு அவனைப் பற்றித் தெரியும் தானே…” எனத் தன்னையே கேட்டுக் கொண்டவள், நகையைச் சென்று ஊர்வசியிடம் கொடுத்துவிட்டு வந்தாள்.

பாவனி திரும்பி வந்த போது ஈஸ்வர் அவன் மடிக் கண்ணினியுடன் வேலை பார்க்க உட்கார்ந்து விட்டான்.

காலையில் இவள் வேலைக்குச் செல்லும் போது அவன் கடையில் இருப்பான். மதியம் இவள் வருவதற்குள் அவன் உண்டு விடுவான். இரவு நேரம் ஒருவேளை தான் இருவரும் சேர்ந்து உண்பது. இவனுக்கு நாம் இந்த வீட்டில் இல்லையென்றால் கூட வித்தியாசம் தெரியாதோ…. என நினைத்தவள், கணவனையே பார்க்க…. அப்போது அவனும் அவளை நிமிர்ந்து பார்த்தவன், அவள் பார்வையைக் கவனித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை கூட வேலை செய்கிறானே என நினைக்கிறாளோ என நினைத்தவன், “ஒரு முக்கியமான வேலை இப்ப முடிஞ்சிடும்.” என்றான்.

இவள் முதலில் அவள் மனதை அவனுக்குத் திறந்து காட்டி இருக்கிறாளா என்ன? இவளுமே அப்படித்தான்.

Advertisement