Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 8

மதியம் பெரிய விருந்தே ஊர்வசி தயார் செய்திருந்தார். செய்து முடித்ததும் ராகவி மற்றும் பாவனியிடம் வளர்மதிக்கும் விமலுக்கும் உணவு கொடுத்து விட்டார். அவர்களையும் இங்கே தான் உணவுண்ண அழைத்திருந்தார். ஆனால் விமல் உடல்நலமில்லாமல் இருப்பதால்… வளர்மதி வர யோசிக்க… மட்டன் பிரியாணி, விமலுக்கு என வைத்த ரசம், காரம் குறைவாகப் போட்ட உப்புக்கறி என அங்கேயே அவர்களுக்குக் கொடுத்து அனுப்பினார்.

நான் இன்னைக்கு மதியம் உங்களை எல்லாம் இங்க சாப்பிட கூப்பிடனும்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள இவனுக்கு முடியலை.” என வளர்மதி சொல்ல…

அதனால என்ன பரவாயில்லை… அடுத்த முறை வரும் போது சாப்பிடுறோம். நீங்களும் நைட் எல்லாம் தூங்கலைன்னு ஈஸ்வர் சொன்னான். சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க.” என்றாள் ராகவி.

ராகவி விமலை பார்த்துவிட்டு… அப்போதே தான் இன்று ஊருக்குப் போவதாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டாள். ராகவியும் பாவனியும் வீடு வந்தனர். வளர்மதி வைஜயந்தி வீட்டிற்கும் சென்று அவரகளைப் பிரியாணி கொடுத்துவிட்டு வர சொன்னார். பாவனி வேண்டாம் ராகவி மட்டும் போகட்டும் என்றான் ஈஸ்வர்.

அப்போது தான் நினைவு வந்து பாவனி, “அவந்திகா ஏன் கல்யாணத்துக்கு வரலை? உடம்பு எதுவும் சரியில்லையா…” என்றாள்.

ராகவியிடம் பிரியாணியைக் கொடுத்து அனுப்பிவிட்டு வந்த ஊர்வசி மருமகளிடம் ருக்மணி செய்து வைத்த வேலையைச் சொன்னவர், “அவங்கதான் வயசானவங்க புரிஞ்சிக்காம பண்றாங்கன்னு பார்த்தா… இந்த அவந்திகாவும் சேர்ந்திட்டு பண்றா… அதுதான் ஏன்னு புரியலை?” என்றார்.

அப்போ தானே நாம எதோ அவங்களை நம்ப வச்சு ஏமாத்தின மாதிரி மத்தவங்க நினைப்பாங்க. அவந்திகாவுக்கு எப்பவுமே அவ நினைச்சது நடக்கணும். இல்லைனா இப்படித்தான்.” என்றான் ஈஸ்வர்.

பாவனிக்கு இந்த விஷயத்தைக் கேட்டு என்ன நினைப்பது என்று புரியவில்லை. ஆனால் தன்னிடம் பேசாமல் அவந்திகா விலகி போனதற்குக் காரணம் இதுதான் என்று மட்டும் புரிந்தது.

ராகவி வந்ததும் எல்லோரும் சேர்ந்து மதிய உணவை உண்டனர். மாலை ராகவியின் குடும்பம் கிளம்ப… தம்பியையும் தம்பி மனைவியையும் சிங்கபூருக்கு வரும்படி அழைத்து விட்டு ராகவி சென்றாள். ராகவியின் கணவன் உடன் செல்வதால்… ஈஸ்வர் விமான நிலையம் செல்லவில்லை.

விமலை பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லி பாவனியும் அவள் வீட்டிற்குச் சென்றிருக்க… ஈஸ்வரும் கடைக்கு வந்து விட்டான்.

எட்டு மணி போல ஈஸ்வர் கடையை விட்டு வெளியே வர… அவர்கள் வீட்டுப் பால்கனியில் நின்று பாவனி போன் பேசிக் கொண்டு இருந்தாள்.

சிவப்பு நிறத்தில் புடவையும், கழுத்தில் தாலி சங்கிலியோடு ஒரு சின்னச் செயின் கழுத்தை ஒட்டி அணிந்திருக்க… தலையில் பூ வைத்திருந்தாள்.

காலையில் சுடிதாரில் தான் இருந்தாள். இப்போது அவள் அம்மா வீட்டில் மாற்றி இருக்க வேண்டும்.

பாவனி உயரம் குறைவும் இல்லை அதிகமும் இல்லை. நடுத்தர உயரம். அதிக நிறம் இல்லையென்றாலும், மாநிறத்தில் பளிங்கு முகம். மெனக்கெட்டு ஒப்பனை செய்ய வேண்டியது இல்லை… அவள் சாதாரணமாக இருந்தாளே…அழகி தான்.

ஈஸ்வர் கடைக்குள் சென்றவன் கடை பணியாளரிடம் ஒன்பது மணி ஆனதும் கடையை மூடி சாவியை வீட்டில் கொடுத்துவிட்டு செல்ல சொன்னவன், பாவனியின் வீட்டிற்குச் சென்றான்.

வளர்மதி கதவை திறந்து விட… ஈஸ்வர் சென்று விமலைப் பார்க்க… அவன் படித்துக் கொண்டிருந்தான். அதனால் தான் வந்தது காட்டிக்கொள்ளாமல் மாடிக்குச் சென்றான்.

பால்கனியில் நின்று பாவனி இன்னமும் போன் பேசிக் கொண்டிருக்க… ஈஸ்வர் சென்று அவள் அருகில் நெருங்கி நிற்க… கணவனைப் பார்த்ததும், பிறகு பேசுவதாகச் சொல்லி கைபேசியை அணைத்தவள், “என்ன அதுக்குள்ள வந்துட்டீங்க?” எனக் கேட்க…

ஏன் வரக் கூடாதா? என்றான்.

தெரியாம கேட்டுட்டேன் விடுங்க.” என்றவள், “நிஜமாவே அவந்திகா உங்களைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பினாளா? என மனதில் இருந்ததை அவள் கேட்டே விட…

எனக்குத் தெரியாது. நான் அவளைப் பத்தி பேச இப்போ வரலை.” என்றான் வெடுக்கென்று. கணவனுக்கு அதைப் பத்தி பேச விருப்பம் இல்லை என்றதும், அந்தப் பேச்சை விட்டு விட்டவள், “இன்னைக்கு நல்ல காத்து இல்ல…” என்றாள்.

ம்ம்….” என்றவன் அவளின் முகத்தில் விழுந்த கூந்தலை ஒதுக்கிவிட…

ஷு… சும்மா இருங்க யாராவது பார்க்க போறாங்க.” என,

இப்போ என்ன பண்ணேன் நான்? நீதான் நைட் என்னைக் கட்டிபிடிச்சிட்டு தூங்கின…” என இவன் செய்ததை அவள் செய்ததாகச் சொல்ல…

நானா… என்பது போல ஆச்சர்யமாகப் பார்த்தவள், “எனக்கு யாராவது பக்கத்துல இடிச்சிட்டு தூங்கினாலே பிடிக்காது. நான் தனியாத்தான் படுப்பேன்.” என்றாள்.

அப்போ நான் பொய் சொல்றேனா?

அப்படிச் சொல்லலை… ஆனா நான் தூக்கத்துல அப்படிப் பண்ண கூட வாய்ப்பு இல்லை…” என்றதும்,

நேத்து நீ என் மேல சாஞ்சு அழுதிட்டு இல்லை…” என்றதும்,

ஆமாம் ஒருவேளை அப்படியே தூங்கிட்டேன் போல… ஆனா நான் முழிக்கும் போது, நீங்கதான்” என்றவள், ஈஸ்வரின் முகத்தில் இருந்த ஆர்வத்தைப் பார்த்தும் மேலும் சொல்லாமல் நிறுத்தி விட்டாள்.

இவன் தன் வாயை பிடுங்கிறான் என்பதை உணர்ந்தவள், “அம்மா கூப்பிடுறாங்க.” எனக் கீழே செல்ல… ஈஸ்வரும் அவள் பின்னே இறங்கி வந்தான்.

இருவரும் சென்று விமலிடம் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, வீட்டிற்கு வர… கடைப் பையனும் கடையைப் பூட்டிவிட்டு சாவியைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் சென்றான்.

மதியம் செய்ததே மிச்சம் இருக்க, அதையே சூடு செய்து உண்டு இரவு உணவை முடித்தனர்.

ஊர்வசி அப்போதே சமையல் அறையை ஒதுங்க வைத்துப் பாத்திரம் தேய்க்க… பாவனியும் அடுப்பையும் அடுப்பு மேடையையும் துடைத்து எடுத்தாள்.

நைட் முடிச்சு வச்சிட்டுப் படுத்தாதான் எனக்கு நிம்மதியா தூக்கம் வரும். காலையில டென்ஷன் இல்லாம வேலை பார்க்கலாம்.” என்றார்.

வேலை முடித்ததும், “நீ போய்ப் படு டா…” என்று அவர் சொல்ல… பாவனி கணவன் இருந்த அறைக்குள் சென்றாள்.

அங்கிருந்த குளியல் அறைக்குச் சென்று அவள் பல் துலக்கி, முகம் கழுவிக்கொண்டு வந்தவள், உடைமாற்ற நைட்டியை எடுக்க…

இப்பவே மாத்தணுமா… கொஞ்ச நேரம் என்னோட பேசிட்டு இருக்கலாமே…” என்றான் ஈஸ்வர்.

பேசுறதுக்கு எந்த ட்ரெஸ்ல இருந்தா என்ன என்று நினைத்தவள், அவனிடம் கேட்டால் எதாவது எக்கு தப்பாகச் சொல்வான் என்று தெரியும், அதனால் கட்டிலின் மறுபக்கம் உட்கார்ந்துகொள்ள… ஈஸ்வரே அவளின் அருகே நெருங்கி வந்தான்.

நெருங்கி தான் வந்தான் ஆனால் சற்று இடைவெளி விட்டுதான் உட்கார்ந்திருந்தான். இருவரும் பேச வசதியாகக் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டனர்.

அப்புறம் எங்க வீடு எப்படி இருக்கு? உனக்குப் பிடிச்சிருக்கா?”

ம்ம்… பிடிச்சிருக்கு. இப்போ கட்டினதா?”

முன்னாடி இருந்த வீடு எங்க தாத்தா கட்டினது. இப்போ மூணு வருஷம் முன்னாடி தான் இடிச்சிட்டு கட்டினோம்.”

நல்லா பிளான் பண்ணி கட்டி இருக்கீங்க. வீடு கடைன்னு. மாடியிலையும் வீடு வாடகைக்கு விட்டிருக்கீங்க தான.”

நான் ரெண்டு மூன்னு வருஷம் வெளிய வேலை பார்த்தேன். ஆனா எனக்கு அது செட் ஆகலை. அப்புறம் எனக்குன்னு சொந்தமா ஒரு கன்சர்ன் தொடங்கினேன். நிரந்தர வருமானம் இல்லை. சில மாசம் அதிகமாவும் வரும் சில மாசங்கள் கம்மியாவும் வரும். வாடகையும் ஒரு வருமானம் தானே… அதனால தான் வாடகை வர்ற மாதிரி பண்ணேன். எதுக்கும் ஒரு கடையும் இருக்கட்டும்னு தான் கடையும் வச்சேன்.”

நீங்க பெரிய ஆளு தான் போங்க. இருந்த இடத்துல இருந்தே சம்பாதிக்கிறீங்க. ஆனா எனக்கு எல்லாம் அப்படி இல்லை. நான் எல்லாம் காலையில எழுந்து வேலைக்கு ஓடனும்.” என்றதும்,

உனக்கு இஷ்ட்டம் இல்லாமலா வேலைக்குப் போற…” ஈஸ்வர் கேட்டதும், பாவனியும் எதையும் மனதில் வைக்காமல் சொல்லிவிட்டாள்.

எனக்கு வீட்ல இருக்கிறது கூடப் பிடிக்கும்.”

உனக்கு வேலைக்குப் போக இஷ்ட்டம் இல்லைனா… நீ அப்படிக் கஷ்ட்டப்பட்டு எல்லாம் போக வேண்டாம். நமக்கு இருக்கிறது போதும் பாவனி.” என்றான்.

நான் இப்போ போறேன், எனக்கு எப்போ முடியலையோ அப்ப விட்டுடுறேன்.” அவள் சொல்ல…

உன் இஷ்டம்.” என்றான்.

இன்னைக்கு என்ன சேலை எல்லாம் கட்டி இருக்க…” என்றவன், அவளின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துகொள்ள… அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் கேட்ட கேள்வியை மறந்து விட்டிருந்தாள்.

இன்னைக்கு என்ன புடவை கட்டி இருக்கேன்னு கேட்டேன்.” என அவன் மீண்டும் கேட்க…

அம்மா தான் கல்யாணமான பொண்ணு மாதிரி இருன்னு சொன்னாங்க. வேலைக்குச் சுடிதார் தானே போட்டுட்டு போறேன். வீட்ல இருக்கிற நேரமாவது கட்டுன்னு சொன்னாங்க.” என்றவள், மெதுவாக அவள் கையை அவனிடம் இருந்து இழுத்து பார்க்க… அவளால் இழுக்க முடியவில்லை. ஈஸ்வர் அதைக் கவனித்தும் கவனிக்காதது போல இருந்தான்.

அவள் பக்கம் திரும்பியவன், எட்டி அவளின் பளிங்கு கன்னத்தில் முத்தமிட… பாவனி எழுந்தே விட்டாள்.

இப்போ என்ன?” அவன் கேட்க…

ஏன் திடிர்ன்னு இப்படிப் பண்றீங்க “என்றாள்.

உன்னைப் பண்ணாம யாரை பண்ணுவாங்க.”

உங்களுக்கு என்னைப் பிடிக்காது தான…”

நான் எப்ப அப்படிச் சொன்னேன்.”

அப்படிச் சொல்லலை… ஆனா பிடிச்சிருக்குன்னும் சொன்னது இல்லையில்லை…” பாவனி சரியாகத்தான் கேட்டாள்.

இப்போ அதுக்கு என்ன? கல்யாணமானா இதெல்லாம் சாதாரணமா நடக்கிறது தானே… எல்லோரும் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்களா என்ன?”

இல்லை தான்… ஆனா நீங்க திடிர்ன்னு இப்படிப் பண்ணா எனக்கு ஒரு மாதிரி இருக்கு. எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்.”

எவ்வளவு நாள் சரியா சொல்லு.”

அதெல்லாம் தெரியாது. ஆனா எனக்கு டைம் வேணும்.” அவள் சொல்ல… சரி என்றவன், கட்டிலில் விலகி உட்கார்ந்வதவன் படுத்து தூங்கு என்றான்.

Advertisement