Advertisement

இருவரும் இதுவரையில் காதலாகப் பேசி இருக்கிறார்களா என்ன? அப்படி ஒருவரையொருவர் பார்த்தது கூட இல்லை. பிறகு எப்படி எல்லாம் உடனே நடக்கும். அவன் தன்னை வம்பிழுக்கத் தான் சொன்னான் என பாவனிக்கும் புரிந்துதான் இருந்தது.

இவள் இன்னும் பத்து நிமிடங்கள் சென்று வந்திருக்கலாம் என்று ஈஸ்வருக்குத் தோன்றியது. அவளது அருகாமையில் அவனுக்கு இயல்பாக உறங்க முடியவில்லை. அதே தான் பாவனிக்கும். இருவரும் உறங்குவது போல ஆளுக்கொரு பக்கம் திரும்பி படுத்திருந்தாலும் உறக்கம் வரவில்லை.

கண்ணை மூடி படுத்திருந்தாலும் இருவரும் மற்றவர் உறங்கவில்லை என்பதை உணர்ந்து தான் இருந்தனர்.

சிறிது நேரத்தில் ஈஸ்வர் எழுந்து உட்கார… பாவனி அவனைத் திரும்பி பார்த்து எதாவது வேணுமா என்று கேட்க..

தண்ணி வேண்டும் என்றவன், அவனே எழுந்து சென்று எடுத்து குடித்துவிட்டு வந்து, கட்டிலில் இருந்து தலையணையை எடுத்துத் தரையில் போட்டவன், பாவனியை பார்க்க வசதியாகப் படுத்துக்கொண்டு, “தூக்கம் வர்ற வரை பேசிட்டு இருக்கலாமா?” என்றதும்,

ம்ம்…” என்றவள், கட்டிலில் படுத்தபடியே அவனைப் பார்த்தாள்.

உனக்கு என்கிட்டே எதாவது எதிர்பார்ப்பு இருக்கா பாவனி.?”

எங்க அம்மாவே இப்போ நல்லத்தான் சம்பாதிக்கிறாங்க. விமலுக்கு நாம எப்பவும் சப்போர்ட்டா இருந்தா போதும். நான் வேற எதுவும் எதிர்பார்க்கலை.” என்றவள், “உங்களுக்கு என்கிட்டே இருக்கா?” என்றதும்,

எங்க அம்மா எங்க அப்பாவால் ரொம்பக் காயபட்டுட்டாங்க. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எதோ சண்டையின்னு தான் எனக்குத் தெரியும். எதனாலன்னு எனக்கு அப்போ தெரியாது.”

அப்பா அம்மா பிரிஞ்சிடுவாங்கலோன்னு நான் பயந்திட்டேன். என்னால படிக்கவே முடியலை… நான் ரொம்ப அழுதிட்டேன். அதனாலலையோ என்னவோ… எங்க அம்மா எங்க அப்பாவை எங்களுக்காகவே பொறுத்திட்டு இருந்தாங்க. அவங்களை அந்த நிலையில வச்சிட்டோமேன்னு… நான் பின்னாடி ரொம்ப வருத்தபட்டிருக்கேன்.”

அவங்க ரொம்பக் கஷ்ட்டபட்டிருக்காங்க. எனக்கு அவங்களைக் கடைசி வரை நல்லா பார்த்துக்கணும்.” என்றான்.

எனக்குப் புரியுது.” என்றாள்.

ஈஸ்வர் சிறிது நேரத்தில் உறங்கிப் போனான். அதன் பிறகு தான் பாவனி உறங்கினாள். காலையில் எழுந்தவன் குளித்துவிட்டு கீழே வர… வளர்மதி அவனுக்குக் காபி கொடுக்க… அதைக் குடித்துவிட்டு அவன் வெளியே சென்றுவிட்டு வருவதாகச் சொல்லி சென்றுவிட்டான். பாவனி இன்னும் உறங்கிக் கொண்டே இருந்தாள்.

அவன் வீட்டிற்குச் சென்றவன், கடையின் சாவியை எடுத்துக் கொண்டு கடை திறக்க கிளம்ப… “உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா டா?” என ராகவி தம்பியை பார்த்து வியக்க… ஈஸ்வர் சிரித்தான்.

காபி குடிச்சிட்டியா?” ஊர்வசி கேட்க…

ம்ம்… அதெல்லாம் என் மாமியார் எழுந்ததும் கொடுத்திட்டாங்க.” என அவன் விட்டுக் கொடுக்காமல் பேச….

இப்படி மாமியார் வீடு எதிர்க்கவே இருக்கிறது வசதிதான் போல… இங்கயும் இருந்துக்கலாம் அங்கயும் இருந்துக்கலாம்.” என்றாள் ராகவி.

என்னைப் பார்த்து பொறாமைப்படாத.” என அக்காவை பார்த்து சொல்லிவிட்டு ஈஸ்வர் கடைக்குச் சென்று விட்டான்.

ஒன்பது மணி போலப் பாவனி அவனை அழைத்தவள், “என்னை எழுப்பி விட்டுட்டுப் போயிருக்கலாம் இல்ல… இங்க அம்மா என்னைத் திட்டுறாங்க. சாப்பிட வருவீங்களாம்.” என்றவள், “ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வாங்க, நான் குளிச்சிட்டு வந்திடுறேன்.” எனப் போன்னை வைத்தாள்.

ஈஸ்வர் ஒரு மணி நேரம் சென்று தான் வந்தான். “எனக்குப் பசிக்குது. எங்க அம்மா நீங்க வந்தா தான் எனக்கும் டிபன் தருவாங்க.” என அவள் அழைத்த பிறகே வந்தான்.

இருவரும் சேர்ந்து தான் உண்டனர். விமல் அன்று வீட்டில் இருந்தான். அவனும் இவர்களோடு உண்டான். அவன் சரியாகவே உண்ணவில்லை. களைப்பாக இருக்கிறது உறங்கப் போகிறேன் என உறங்க சென்று விட்டான்.

விமலும் இல்லாமல் ஈஸ்வருக்குப் போர் அடிக்க… கடைக்குக் கிளம்பலாமா என அவன் யோசிக்க… அதை உணர்ந்த பாவனி, “நாம எங்காவது வெளியப் போகலாமா?” என்றதும் ஈஸ்வரும் உடனே கிளம்பி விட்டான்.

ஈஸ்வர் சென்று அவன் வீட்டில் சொல்லிவிட்டு வண்டி சாவி எடுத்துக் கொண்டு வந்தான். இருவரும் ஒரு மாலுக்குச் சென்றவர்கள் அங்கே சுற்றிவிட்டு அப்படியே அங்கேயே ஒரு திரைப்படமும் பார்த்துவிட்டு வெளியே வந்தனர்.

இங்கயே சாப்பிட்டு போகலாமா ஈஸ்வர் கேட்க… பாவனியும் சரி என்றாள். அங்கயே மதிய உணவையும் முடித்துக் கொண்டு ஷாப்பிங் சென்றனர்.

பாவனி ஈஸ்வருக்குச் சில சட்டைகள் எடுக்க… “நான் இது மாதிரியெல்லாம் போட மாட்டேன்.” என்றான்.

உங்களுக்கு நல்லா இருக்கும் ஈஸ்வர்.” என்றால் அவன் கேட்கவில்லை. பாவனி எடுத்ததைத் திருப்பி வைத்து விட்டாள்.

உனக்கு எதாவது வாங்கணும்னா வாங்கிக்கோ…” என்றான்.

என்ன வாங்கிறது? நீங்களே வாங்கிக் கொடுங்க. நான் உங்களை மாதிரி இல்லை. எனக்கு எப்படி இருந்தாலும் ஓகே….” என்றதும்,

உனக்குப் பிடிக்காததை எனக்காக எல்லாம் நீ போட வேண்டாம். உனக்குப் பிடிச்சதா வாங்கு.” என்றான்.

முதல் தடவையாக வெளியே வந்துவிட்டு எதுவும் வாங்காமல் செல்லவும் மனமில்லை. அவளே அவளுக்குத் தேர்ந்தெடுத்தவள், விமலுக்கும் சட்டை வாங்கிவிட்டு, ஈஸ்வரின் அக்கா பிள்ளைகளுக்கும் வாங்கினாள். ஈஸ்வர் தான் பணம் கொடுத்தான்.

வீடு வர மாலை ஆகிவிட்டது. நேராக ஈஸ்வரின் வீட்டுக்குத்தான் சென்றனர். அவள் வாங்கியதை ஈஸ்வர் வாங்கிக் கொடுத்ததாகச் சொல்லி பாவனி காட்ட… ஈஸ்வரும் ஒன்றும் சொல்லவில்லை.

பாவனி அவள் வீட்டிற்குச் செல்ல.. ஈஸ்வரும் கடைக்குச் சென்று விட்டான். பாவனி வீட்டிற்கு வந்த பிறகுதான் அவளுக்கு விமலுக்கு உடம்பு முடியவில்லை என்று தெரியும். திருமண அலுப்பில் அவனுக்குக் காய்ச்சல் வந்திருந்தது.

வளர்மதியே அவனை மருத்துவமனை அழைத்துச் சென்று வந்திருந்தார். மாலை விமல் கடைக்கு வரவில்லை என்றதும், ஈஸ்வரே என்னவென்று பார்க்க வந்துவிட்டான்.

காய்ச்சல் என்றதும் விமலை சென்று அவன் அறையில் பார்த்தவன், “கொஞ்சமாவா ஆடின நீ… ரெஸ்ட் எடு சரியாகிடும்.” என்றவன், விமல் அறையிலேயே சிறிது நேரம் இருந்தான்.

வளர்மதி இரவு உணவு உண்ண அழைக்க… பிறகே எழுந்து வந்தான். பாவனி உண்ண மறுக்க… ஏன் என்று ஈஸ்வர் கேட்க… “சின்னதுலையே இப்படித்தான். அவ தம்பிக்கு உடம்பு முடியலைனா இவளும் சாப்பிட மாட்டா…” என்ற வளர்மதி, “விமலுக்கு வச்ச கஞ்சி இருக்கு. அதையாவது குடி.” என்றார்.

காய்ச்சல் வர்றது சகஜம் தான… இதுக்கெல்லாமா டென்ஷன் ஆகிறது.” ஈஸ்வர் சொல்ல…

அவன் எப்படிச் சுருண்டு படுத்திருக்கான். எனக்குப் பார்க்கவே பயமா இருக்கு.” என்றாள்.

ஓ… உனக்குக் காய்ச்சல் வந்தா, நீ ப்ரேக் டேன்ஸ் ஆடுவியா…. நானும் பார்க்கத்தானே போறேன்.,” என ஈஸ்வர் சிரித்துக் கொண்டு சொன்னதும் வளர்மதியும் சிரித்து விட்டார். 

பாவனி அவனை முறைத்துவிட்டு சென்றவள், அந்தக் கஞ்சியைத் தான் எடுத்து வந்து உண்டாள்.

இன்று இரவு அவர்கள் வீட்டிற்குச் சென்றுவிட வேண்டும் என நினைத்திருந்தான். இப்போது விமலுக்கு உடல் நலமில்லை என்றதும் இங்கயே தங்கும் முடிவுக்கு வந்தான்.

ஈஸ்வர் இன்றும் முன்பே வந்து படுத்திருக்க, சற்றுத் தாமதமாகத்தான் பாவனி வந்தாள்.

நேற்று அவன் கீழே படுத்ததால்… இன்று அவள் கீழே படுக்கச் செல்ல… “மேலையே படு பாவனி. நேத்து எனக்குப் புது இடம்னு ஒரு மாதிரி இருந்துச்சு, வேற ஒன்னும் இல்லை.” என்றதும், கட்டிலில் ஓரமாகப் படுத்துக் கொண்டாள்.

ஈஸ்வர் பேசத்தான் நினைத்தான். ஆனால் பாவனி மறுபுறம் திரும்பி படுத்திருக்க… அவளுக்கு உறக்கம் வந்து விட்டதோ என நினைத்து அமைதியாக இருந்தான். ஆனால் சிறிது நேரத்தில் அவள் விசும்பும் சத்தம் கேட்க… சட்டென்று அவளின் தோளைப் பற்றித் தன் பக்கம் திருப்பி இருந்தான்.

பாவனிக்கு முகம் முழுக்கக் கண்ணீர் தான். அவள் எதற்கு அழுகிறாள் என்று அவனுக்குப் புரியாமல் இல்லை.

பாவனி காய்ச்சல் வர்றது எல்லாம் சாதாரணம்.” என்றதும்,

அப்படியில்லை… விமலுக்குக் காய்ச்சல் வந்தா… அவன் ரொம்ப வீக் ஆகிடுவான். அவன் திரும்பப் பழைய மாதிரியாக ரொம்ப நாள் ஆகிடும். ஒருமுறை அவனுக்குக் காய்ச்சல் அதிகமாகி பிட்ஸ் கூட வந்திருக்கு. அதுதான் பயமா இருக்கு.” என்றாள் முகத்தை துடைத்தபடி.

இப்போது ஈஸ்வருக்குமே கவலை அதிகமாகியது.

இந்த முறையும் அப்படித்தான் ஆகும்னு இல்லை. இப்போ பெரிய பையன் ஆகிட்டான். நாளைக்குக் காலையில அவனுக்கு நல்லா ஆகலைனா.. எனக்குத் தெரிஞ்ச டாக்டர் இருக்கார். அங்க அட்மிட் பண்ணி கூடச் சீக்கிரம் தேத்திடலாம். நீ பயப்படாத.” என்றான்.

பேசிக்கொண்டே இருவரும் எப்போது நெருங்கினார்களோ தெரியாது. பாவனி ஈஸ்வரின் கைகளுக்குள் இருக்க… ஈஸ்வர் அவளை அனைத்துப் பிடித்திருந்தான். பாவனி அதை உணரவே இல்லை. அவள் விமல் பற்றிய கவலையில் இருந்தவள், ஈஸ்வர் இருக்கும் தைரியத்திலோ என்னவோ… சிறிது நேரத்தில் அவன் தோளில் முகம் புதைத்து உறங்கியும் விட்டாள்.

அவள் நன்றாக உறங்கும் வரை ஈஸ்வர் அப்படியே படுத்திருந்தவன், பிறகு மெதுவாக விலகி எழுந்தவன், கீழே விமலை பார்க்க சென்றான்.

ஊர்வசி உறங்காமல் ஹாலில் தான் உட்கார்ந்து இருந்தார்.

இப்போ எப்படி இருக்கான் அத்தை.”

இப்போ காய்ச்சல் குறைஞ்சு இருக்கு.” 

ஈஸ்வர் சென்று அவனைப் பார்த்துவிட்டு வந்தவன், “காய்ச்சல் அதிகமானா எங்களைக் கூப்பிட யோசிக்கக் வேண்டாம் அத்தை. நாம உடனே டாக்டர்கிட்ட போயிடலாம்.” என்றதும் சரி என்றார்.

ஈஸ்வர் மீண்டும் அறைக்கு வந்து கட்டிலில் படுத்தவன், முன்பு போல மனைவியை அனைத்துக் கொண்டு படுத்துக் கொண்டான்.

தான் அவளுடன் இயல்பாக ரொம்ப நாட்கள் ஆகும் என நினைத்திருந்தான். ஆனால் மனைவியின் அருகாமை மிகவும் பிடித்திருக்க… அவளை அனைத்துக் கொண்டு உறங்க முயன்றான்.

அவன் உறங்கிய சற்று நேரத்திற்கெல்லாம், பாவனி எழுந்து விட்டாள். ஈஸ்வர் அவளைக் கட்டிக் கொண்டு உறங்க… அவன் உறக்கம் கலைக்காமல் அணைப்பில் இருந்து வெளி வருவதே பெரிய பாடாக இருந்தது.

என்ன டா இது…. நேத்து பக்கத்துல படுக்கக் கூட அவ்வளவு யோசிச்சான், இன்னைக்கு எப்படி? தூக்கத்துல தெரியாம இருக்குமோ என நினைத்தவள், விமலின் நினைவு வர கீழே சென்றாள்.

அவள் சென்று பார்க்க காய்ச்சல் ஏறாமல் தான் இருந்தது. வளர்மதியும் உறங்கி இருந்தார். சிறிது நேரம் விளக்கை போடாமல் ஹாலில் உட்கார்ந்து இருந்தவள், ஹால் சோபாவிலேயே படுத்து உறங்கி இருந்தாள்.

காலையில் ஈஸ்வர் எழுந்து பார்க்கும் போது, பாவனி அறையில் இல்லை. எப்ப எந்திருச்சு போனா என நினைத்தவன், குளித்துவிட்டு கீழே வர… அவள் சோபாவில் படுத்து உறங்குவதைப் பார்த்தான்.

காபி கொண்டு வருவதாகச் சொன்ன வளர்மதியிடம் மறுத்துவிட்டு, ஈஸ்வர் அவன் வீட்டிற்குச் சென்று விட்டான்.

ஊர்வசியிடம் விமலுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னவன், பாவனியின் கவலையையும் சொல்ல… அப்போதே ஆட்டுக் காலை வாங்கிச் சூப்பு வைத்துக் கொண்டு ஊர்வசி அவனைப் பார்க்க கிளம்பி விட்டார்.

விமலுக்குக் காய்ச்சல் விட்டிருந்தாலும், ஆள் சோர்வாக இருக்க…. “நீ ஒழுங்கா சாப்பிட்டாத்தானே தெம்பு இருக்கும். நீ எப்பவுமே சாப்பாட்டை  கொறிக்கிற.” என்றவர், அவன் கூடவே நின்று அவனைச் சூப் குடிக்க வைத்து விட்டே சென்றார்.

அன்று இரவு ராகவி சிங்கப்பூர் கிளம்புவதால்… வளர்மதியே பாவனியை அவள் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார். விமலுக்கும் காய்ச்சல் விட்டிருந்தது.

அவள் வரும்போது ஈஸ்வரும் வீட்டில் தான் இருந்தான். பாவனி ஈஸ்வரின் முகம் பார்க்க கூச்சப்பட்டு அவனைப் பார்ப்பதைக் கூடத் தவிர்க்க… ஆனால் ஈஷ்வருக்கு அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்க…. அவன் அவள் இருக்கும் இடத்தையே சுற்றிக் கொண்டு இருந்தான்.

Advertisement