Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 7

ஈஸ்வர் பாவனி திருமணம் காலையில் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் நடந்தது. ராகவி தம்பியின் திருமணதிற்கு ஒரு வாரம் முன்பே வந்திருந்தாள். திருமணத்திற்கு ஐம்பது பேர் போல் வந்து கலந்து கொண்டனர். அவர்களுக்கு அருகில் இருந்த உணவகத்தில் உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அன்று கோவிலிலும் இவர்கள் சார்பாக அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

திருமணத்திற்கு வைஜயந்தியும் சதாசிவமும் மட்டுமே வந்து கலந்து கொண்டனர். அவந்திகாவும் ருக்மணியும் வரவில்லை. ஊர்வசிக்கு இது ரொம்பவும் அநியாயமாகபட்டது. அவர் அதைச் சொன்ன போது, “வரலைனா விடுங்க.” என்றான் ஈஸ்வர் அலட்சியமாக.

திருமணம் முடிந்து பாவனி அவளது புகுந்த வீட்டில் அடியெடுத்து வைத்தாள். திருமணம் முடிந்து உறவினர்களும் வந்திருக்க… வீடு ஆட்களால் நிரம்பி இருக்க… அவ்வளவு கூட்டம் எல்லாம் ஈஸ்வருக்கு ஆகாது. பாவனி பூஜை அறையில் விளக்கேற்றியதும், பட்டு வேஷ்ட்டி சட்டையை மாற்றிவிட்டு கடைக்குச் சென்றுவிட்டான்.

மதியம் உணவு உண்ண அவனைப் போன் செய்து தான் அழைக்க வேண்டியதாக இருந்தது. அவன் வந்ததும் அவனும் பாவனியும் சேர்ந்து உண்டனர். ராகவி இருவருக்கும் பரிமாறினாள்.

கல்யாணம் பண்ணியும் அடங்கிறானா பாரு. இன்னைக்குக் கல்யாணம் ஆனாவன் மாதிரியா இருக்க…” ராகவி சொல்ல.. ஈஸ்வர் பதில் சொல்லாமல் உண்டான்.

பாவனியை தனியா விட்டுட்டு போயிட்டியே… அவன் என்ன நினைப்பா?” என ராகவி பாவனியையும் இழுத்து விட…

நான் எங்க தனியா இருந்தேன். அதுதான் நீங்க இத்தனை பேர் இருந்தீங்களே… அதுவும் கடை பக்கத்தில தான் இருக்கு.” எனப் பாவனி கணவனின் செயலை சாதாரணம் போலக் காட்டினாள்.

நீ இவனுக்கு ரொம்பப் பரிஞ்சு பேசாத… அப்புறம் இப்ப பண்ற மாதிரி தான் எப்பவும் இருப்பான்.”

தன் அக்கா சொன்னதற்கு ஈஸ்வர், “நான் நேத்து ஒரு மாதிரி, இன்னைக்கு ஒரு மாதிரி, நாளைக்கு மாதிரி இருக்க மாட்டேன். எப்பவும் ஒரே மாதிரி தான் இருப்பேன்.” என்றபடி கைகழுவ சென்றான்.

என்னவோ போ டா…” என்றாள் ராகவி.

மாலை நான்கு மணி போல… வரவேற்புக்கு அலங்காரம் செய்யப் பாவனி அழகு நிலையம் செல்ல… ஈஸ்வர் தான் அவளைக் காரில் அழைத்துச் சென்று இறக்கி விட்டான்.

அவளைக் கடையின் வாயிலில் இறக்கி விட்டவன், “நீ திரும்பி வரும் போது எனக்கு அடையாளம் தெரியலைனா…” எனச் சந்தேகம் கேட்க… அவனைப் பார்த்து முறைத்தவள், “நான் வேஷம் போட போகலை… அதெல்லாம் அடையாளம் தெரியும். அப்படி உங்களுக்கு என்னை அடையாளம் தெரியலைனாலும், எனக்கு உங்களைத் தெரியும். அதனால கவலைப்படாம போங்க.” என்றாள்.

அப்படியா சொல்ற…” என அவன் வாயிக்குள் சிரிப்பை அடக்கியபடி கேட்க… அதைப் பார்த்து பாவனிக்கும் சிரிப்பு வந்துவிட்டது. கணவனைப் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

அவளை அங்கே விட்டுவிட்டு அவன் வீடு வர… வந்திருந்த உறவினர்கள் சிலர் வைஜயந்தியின் வீட்டிற்கும் சென்றிருந்தனர். அங்கே ருக்மணி அவர்களிடம், எங்க பெண்ணை விட்டுட்டு வெளிய சம்பந்தம் பண்ணி இருக்காங்க. அவளோட தம்பி உடம்பு முடியாதவன் எனப் புலம்ப… அவர்கள் இங்கே வந்து ஊர்வசியிடம் சொல்லிவிட்டனர்.

அவங்க அவந்திகாவை எடுக்கலைன்னு எதோ பேசுறாங்க. பேசிட்டு போறாங்க.” என்றவர், அவர்களை வரவேற்புக்குக் கிளம்பச் சொல்லி அறைக்குள் அனுப்பினார்.

அது எப்படி அவங்க விமலை பத்தி பேசலாம்.” என்ற ஈஸ்வர், அவன் அத்தையின் வீட்டுக்கு கிளம்ப…

அவனைப் பிடித்து அடக்கிய ஊர்வசி, “இன்னைக்கு அங்க போய் நீ சண்டை போட்டா…. விஷயம் இன்னும் பெரிசாகும் பேசாம இரு.” என்றதும், ஈஸ்வர் தனது அத்தைக்குக் கைபேசியில் அழைத்தவன், “அத்தை, பாட்டிக்கு கோபம்னா என்னைப் பத்தி எங்க வீட்டை பத்தி மட்டும் பேச சொல்லுங்க. ஆனா பாவனியை அவன் தம்பியை பத்தி பேசுறது ரொம்பத் தப்பு. அதுக்கு அவங்களுக்கு ரைட்ஸ் இல்லை. நானும் பார்த்திட்டு சும்மா இருக்க மாட்டேன்.” என்றதும்,

சரி நான் சொல்லி வைக்கிறேன்.” என வைஜயந்தி வைத்தவர், தனது கணவரிடம் சொல்லி மாமியாரை கண்டித்தார்.

மாலையில் வரவேற்பு ஹோட்டலில் நடந்தது. ஈஸ்வர் பக்கம் இருநூறு பேரும், பாவனியின் பக்கம் ஐம்பது பெரும் வந்திருப்பார்கள். ஈஸ்வர் வெளிமாநில கல்லூரியில் படித்ததால் அவனுக்கு இங்கே நண்பர்கள் என்று அதிகம் பேர் இல்லை. இரண்டு மூன்று பேர் மட்டும் குடும்பத்துடன் வந்திருந்தனர். எல்லோருக்கும் ஏற்கனவே திருமணமாகி இருந்தது. வரவேற்பில் விமல் தான் கலக்கிக் கொண்டு இருந்தான். அவன் நண்பர்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். அவர்கள் ஆடல் பாடல் என அசத்திக் கொண்டு இருந்தனர்.

விமலின் பெண் தோழிகளும் வந்திருக்க… “பார்த்தியா உன் தம்பியை. எனக்கு இதுவரை ஒரு கேர்ள் ப்ரண்ட் கூட இல்லை….” என ஈஸ்வர் பாவனியிடம் சொல்ல…

இனிமேலும் ஒன்னும் லேட் இல்லை.” என அவள் அவனைப் பார்க்க…

நல்ல பொண்டாட்டி டி நீ.” என்றான். அப்போது இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. ஈஸ்வர் எதோ சொல்ல வந்தவன், அப்போது தான் பாவனியை நன்றாகப் பார்த்தான்.

ஹோட்டலுக்கு வரும் வழியில் அப்படியே பார்லர் சென்று பாவனியை அழைத்து வந்திருந்தனர். ஏற்கனவே நேரம் ஆனதால்… அப்போது அவன் அவளைக் கவனித்துப் பார்த்திருக்கவில்லை.

அதிகப்படி என்று சொல்லும்படி எதுவும் இல்லை. ஆடை, ஆபரணங்கள், ஒப்பனை எல்லாமே அளவாக இருந்தாலும், அழகாகவும் இருந்தது.

அவன் பார்ப்பதை கவனித்து, “என்ன அடையாளம் தெரியுதா?” என அவள் புன்னகைக்க…

இப்போ உன் குரலை வச்சு தெரியுது.” என ஈஸ்வர் அப்போதும் ஒத்துக்கொள்ளாமல் பேச…. எப்படியோ தெரியுது தானே… அதே போதும்.” என்றாள் பாவனியும்.

என்ன நீ டென்ஷனே ஆக மாட்டேங்கிற?”

இதுதான் நீங்க ஈஸ்வர். நீங்க வேற மாதிரி பேசினாதான் ஆச்சர்யம்.” என்றவளைப் பார்த்து அவன் புன்னகைக்க… அப்போது விமல் வந்தான்.

வியர்த்து விறுவிறுத்து வந்து நின்றவனைப் பார்த்து, “நல்ல ஆட்டமா உன் ப்ரண்ட்ஸ் கூட… அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்களா?” ஈஸ்வர் கேட்க…

ம்ம்… கிளம்பிட்டாங்க. என் பிரண்ட்ஸ் சொன்னாங்க உன் அங்கிள் சூப்பர்ன்னு. ஆனா நீங்க இந்தக் கோட் போடுறதுக்குள்ள என்ன பாடு படுத்தினீங்க. இந்தக் கோட் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு.” விமல் சொல்ல…

அப்போ இந்தக் கோட் போட்டதுனாலதான் நல்லா இருக்கேன். இல்லைனா இருந்திருக்க மாட்டேன்னு சொல்றியா?” என ஈஸ்வர் மடக்க…

விமல் எதோ மறுத்து சொல்ல வர… “நீ இன்னைக்கு நைட் முழுக்கப் பேசினாலும், அவர் சொல்றதுல தான் அவர் நிற்பார். பேசுறது வேஸ்ட் விடு.” என்றாள் பாவனி.

நாங்க ரெண்டு பேர் பேசிக்கிறோம், நீ எதுக்கு வர…” என்றவன், “இந்தக் கோட் போட்டதுனாலதான் டா நான் நல்லா இருக்கேன். நான் இதை ஒத்துக்கிறேன். ஏன்னா இது நீ வாங்கினது. உன் அக்கா வாங்கி இருந்தா இந்த அளவுக்கு நல்லா இருந்திருக்குமா தெரியாது.”

நான் ஏன் உங்களுக்கு வாங்கணும்? உங்களுக்குத்தான் கோட் போட பிடிக்காதுன்னு சொன்னீங்க தானே…”

என்னோட விருப்பத்துக்கு நீ எப்பவுமே இது போல மதிப்புத் தந்தா சாரிதான்.”

இருவரும் பேசிக்கொள்வதைப் பார்த்து, “நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிறீங்களா என்ன?” என விமல் புரியாமல் பார்க்க…

அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லை விமல். உங்க அக்காவுக்கு என்னைப் பத்தி இவ்வளவு தெரியும் போது எப்படிச் சண்டை வரும்.” என ஈஸ்வர் சிரித்துக் கொண்டு சொல்ல… பாவனியும் புன்னகைக்க… அதைப் பார்த்து விமலும் சிரித்தான்.

வரவேற்பு முடிந்து இப்போது மணமக்கள் பாவனியின் வீட்டிற்கு வந்தனர். வளர்மதியின் பக்க சொந்தங்கள் எல்லாம் சென்னை தான் என்பதால்… அவர்கள் ஹோட்டலில் இருந்தே கிளம்பி இருக்க… தம்பதிகள் இங்கே இரவு தங்குவதால்… வளர்மதியும் யாரையும் இருங்கள் என்று சொல்லி இருக்கவில்லை. ராஜீவும் அவர் குடும்பத்துடன் வந்துவிட்டுச் சென்றிருந்தார்.

ராகவியும் அவள் கணவனும் உடன் வந்திருக்க… பாவனிக்கு அலங்காரம் கலைக்க உதவி விட்டுத்தான் ராகவி அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தாள். அப்போதே நேரம் பத்து மணியைத் தாண்டி இருக்க… ஈஸ்வர் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்க்க… “பால் இருக்கு, அவருக்குக் கொடுத்து நீயும் குடி.” என்று சொல்லிவிட்டு வளர்மதி விமல் இருந்த அறைக்குள் சென்றார்.

தூக்கம் வந்தா நீங்க மாடிக்கு போங்க ஈஸ்வர்.” பாவனி சொல்ல… ஈஸ்வரும் எழுந்து மாடி அறைக்குச் சென்றான். மாடியில் ஒரு அறை மட்டும் தான். அதோடு ஒரு பால்கனி இருந்தது.

குளியல் அறைக்குள் சென்று வந்தவன், உடைமாற்றிக் கட்டிலில் படுத்துவிட… பாவனி கீழே இருந்த அறையிலேயே உடைமாற்றிக் கொண்டு மேலே வந்தாள்.

அவள் வந்த போது ஏற்கனவே உறக்கத்திற்குச் சென்றிருந்த ஈஸ்வர், அவள் கதவை திறக்கும் சத்தத்தில் கண் திறந்து பார்த்தான்.

சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா…” என்றவள், “பால் கொண்டு வரட்டுமா?” என்று கேட்க….

எனக்கு வேண்டாம். ஆனா கண்டிப்பா இன்னைக்குக் குடிக்கனும்னா கொண்டு வா…. ஆனா இந்தச் சம்ப்ரதாயத்தைக் கடைபிடிச்சா…. அப்புறம் எல்லாத்தையும் இன்னைக்கே ஆரம்பிக்கணும். அதுக்கு ஓகேவா…” என ஈஸ்வர் அவளைக் குறும்பாகப் பார்க்க….

எங்க வீட்ல பால் இல்லை. நான் தெரியாம கேட்டுட்டேன். நீங்க தூங்குங்க.” என்றவள், கட்டிலில் இருந்து போர்வையை எடுத்துத் தரையில் விரிக்கச் செல்ல…

எனக்கு மட்டும் இவ்வளவு பெரிய கட்டில் வேண்டாம்.” என்றவன் தள்ளிப் படுக்க… பாவனி கட்டிலின் ஓரத்தில் படுத்துக் கொண்டாள்.

Advertisement