Advertisement

வளர்மதியும் பாவனியும் ஆளுக்கு ஒரு பக்கம் விமலை பிடித்துக் கொண்டிருக்க.. அவன் கையில் இன்னும் அந்த ஸ்டூல் இருந்தது. ராஜீவ் சற்று பயந்து போய்த் தான் நின்றிருந்தார்.

விமல் என ஈஸ்வர் அழைத்ததும், ஈஸ்வரை பார்த்த விமல் ஸ்டூலை வைத்துவிட… பாவனி விமலின் கன்னத்தில் பட்டென்று அடித்து விட்டாள்.

விமல் அதிர்ச்சியில் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நின்றுவிட…

இவனுக்கு எதுவும் இல்லைன்னு சொல்வீங்க… பார்த்தீங்களா இப்போ என்ன ஆச்சுன்னு?” என ராஜீவ் ஆரம்பிக்க…

முதல்ல நீங்க இந்த வீட்ல இருந்து வெளியே போங்க…. இனிமே இந்த வீட்டுப் பக்கம் வந்தீங்க. நானே அவனை விட்டு உங்களை அடிக்க வைப்பேன்.” எனப் பாவனி கத்த…

எதுவும் வேண்டாம்னு தான போனீங்க. இப்போ ஏன் வந்து தொந்தரவு பண்றீங்க? அவன் இவ்வளவு நாள் நல்லத்தான் இருந்தான். இப்போ உங்களால தான் இப்படி ஆகிட்டான். இனிமே இங்க வராதீங்க.” என்றார் வளர்மதியும்.

ராஜீவ் சென்றதும், “உனக்கு என்ன கோபம் வந்தாலும் அவரை அடிக்கக் போவியா? இனிமே என்னோட பேசாத.” என்றாள் பாவனி விமலைப் பார்த்து.

அவர் மட்டும் என்னைப் பார்த்து லூசு சொல்லலாமா?” என்றான் விமல்.

நீயும் தான் அவனை அடிச்ச…” என ஈஸ்வர் சொன்னதும், பாவனி அவனை முறைக்க…

பாவனி இப்போ நீ எதுவும் பேசாத.” என்ற ஈஸ்வர் விமலிடம், விமல் கடையில் ஆள் இல்லை… நீ போய்க் கடையில இரு.” என விமலும் கடைக்குச் சென்று விட்டான்.

ஈஸ்வர் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்துகொள்ள… அவர்கள் இருவரும் பேசட்டும் என வளர்மதி சமையல் அறைக்குச் சென்றுவிட்டார்.

விமல் ரொம்ப நல்லா வந்திட்டு இருக்கான்னு நினைச்சேன். இன்னைக்கு இப்படி நடந்துகிட்டவன் நாளைக்கு வெளி ஆளுங்ககிட்டயும் இப்படித்தானே நடந்துப்பான். இவனை நம்பி எப்படி வெளிய அனுப்புறது? எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு….” என்றபடி பாவனி அவன் எதிரில் தரையில் உட்கார… ஈஸ்வரும் எழுந்து தரையில் உட்கார்ந்து சோபாவில் சாய்ந்து கொண்டான்.

நீ ரொம்ப யோசிக்கிற… கோபம் வர்றது இயல்பு… எல்லா நேரமும் நாம கண்ட்ரோல்ல இருப்போமா என்ன? சில நேரம் எனக்கே சில பேரை தூக்கி போட்டு மிதிக்கணும் போலத்தான் இருக்கும். அதுக்காக எனக்குப் பிரச்சனைன்னு அர்த்தமா?”

இன்னைக்கு நீ கூடத்தான் விமலை அடிச்ச… கல்யாணத்துக்குப் பிறகு நீ எதாவது எக்குத்தப்பா பேசினா… நானுமே கை நீட்டலாம். அதெல்லாம் அந்தந்த நேரத்துல நடக்கிறது.” என ஈஸ்வர் சொல்ல… உள்ளே இருந்து அவன் பேசியதைக் கேட்ட வளர்மதி சிரித்துக் கொண்டே சப்பாத்திக்கு தேய்த்தார். என்னது அடிப்பியா என்பது போலப் பாவனி ஈஸ்வரை முறைத்தாள்.

நீங்க எப்பவும் விமலுக்குத் தான் சப்போர்ட் பண்ணுவீங்க.”

ஒருத்தரை பார்த்து லூசுன்னு சொல்றது சாதாரண வார்த்தையா… அதுக்கு யாரா இருந்தாலும் கோபம் வரும். ஒரு ஆக்ஷன் இருந்தா… கண்டிப்பா அதுக்கு ரியாக்ஷன் இருக்கும் தானே… அதுதான் சொல்ல வந்தேன்.”

பாவனி அமைதியாக இருக்க… “ரொம்ப யோசிக்காத விடு. நீ திரும்பத் திரும்ப இதையே விமல்கிட்ட பேசினா… அவனுக்கு அது இன்னும் பதிஞ்சு… அதைத் திரும்பச் செய்யணும்னு தோணும். அவனை வேற விஷயத்துல டைவேர்ட் பண்ணி விடு.” என்றான்.

நீ இப்போ ஓகே தானே… நான் கிளம்புறேன்.” என ஈஸ்வர் எழுந்துகொள்ள…

இருங்க சாப்பிட்டு போகலாம்.” என்ற வளர்மதி அவனுக்குச் சூடான சப்பாத்தியை கொண்டு வந்து வைக்க.. ஈஸ்வரும் மறுக்காமல் உண்டான்.

அவன் செல்லும் போது பாவனியும் அவனுடன் சென்றாள்.

இன்னைக்கு என்னைப் பார்த்து அவசரப்பட்டுக் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டோம்னு நீங்க நினைக்கலை…” என்றதும்,

ஏன் அபப்டி கேட்கிற? நீ எதுவும் முடிவை மாத்திக்கிற ஐடியாவுல இருக்கிறியா?” என ஈஸ்வர் பதிலுக்குக் கேட்க…பாவனி இல்லை என்றாள்.

விமல் கடையில் வாடிக்கையாளர் ஒருவருக்குப் பில் போட்டுக் கொண்டு இருந்தான்.

பார்த்தியா நம்ம ட்ரைனிங்க… விமலே தனியா கடையைப் பார்த்துப்பான் தெரியுமா?” என்றான்.

முன்னாடி எல்லாம் நான் ரொம்பக் கவலைபட்டிருக்கேன். படிச்சு முடிச்சாலும் இவனுக்கு வேலை கிடைக்குமான்னு…”

அதெல்லாம் அவனே சொந்த பிஸ்னஸ் செய்யுற அளவு முன்னேறிடுவான்.”

இருவரும் பேசிக் கொண்டே உள்ளே வர… விமல் அக்காவைப் பார்த்ததும், “நீ என்னை அடிச்சதுக்குச் சாரி சொல்லு.” என்றான்.

நீ பண்ணது தப்பு. இன்னொருமுறை நீ இப்படி எதாவது பண்ண நான் உன்னோட பேச மாட்டேன்.” என்றாள் பாவனி.

அங்கிள் யார் மேல தப்பு நீங்களே சொல்லுங்க.” என்றான் விமல் ஈஸ்வரிடம்.

தப்பா… சரியான்னு விடு…. முதல்ல நாம எல்லாத்துக்கும் ரியாக்ட் பண்ணனும்னு அவசியம் இல்லை விமல். உன் அம்மா, உன் அக்கா, அப்புறம் உன் மேல அக்கறை இருக்கிறவங்க பேசினா நீ அதுக்கு ரியாக்ட் பண்ணலாம். யாரோ பேசுறதுக்கு எல்லாம் ஏன் ரியாக்ட் பண்ற?”

அதுக்குப் பதில் அவங்களை ஜஸ்ட் ஒதுகிட்டு போயிடு. இன்னைக்கு அவர் அப்படிப் பேசினதும், உனக்கு எல்லாம் நான் ப்ரூப் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டு நீ போயிருந்திருக்கணும். அதுவே அவருக்கு அவமானம் தான். அவர் பேசினதுக்கு, நீ ஒரு தப்புச் செய்யப் போய்… இப்போ அவர் பண்ணது ஒண்ணுமே இல்லைன்னு ஆகிடுச்சு.”

எல்லோருக்கும் நாம ப்ரூப் பண்ணனும். இல்லைனா பதில் கொடுக்கணும்னு அவசியம் இல்லை. உனக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான்னு நாம போயிட்டே இருக்கணும்.”

உனக்குப் புரியுதா மேன்?” ஈஸ்வர் கேட்க…

ம்ம்…” என்றான் விமல்.

எல்லோருக்கும் நாம நல்லவங்களா இருக்க முடியாது. என்னைப் பிடிக்காதவங்களும் இருப்பாங்க. எனக்குப் பின்னாடி அவங்க பேசத்தான் செய்வாங்க. அவங்களோட போய் நான் சண்டை போட்டுட்டு இருக்க முடியுமா?”

உங்களுக்கு என்ன? ஏன் உங்களைப் பிடிக்காது?” விமல் ஆச்சர்யப்பட…

என்னைச் சரியான சிடுமூஞ்சி… சாமியாரு… திமிர் பிடிச்சவன், யாரையும் மதிக்க மாட்டான் இப்படி எல்லாம் என் சொந்தக்காரங்ககிட்ட எனக்குப் பேர் இருக்கு… நான் போய் ஒவ்வொருத்தர்கிட்டயும் சண்டை போட்டுட்டு இருக்க முடியுமா? நமக்குத் தெரியும் இல்ல நாம யாருன்னு… நமக்குத் தெரிஞ்சா போதும்.” ஈஸ்வர் சொல்ல… விமல் யோசிக்க ஆரம்பித்தான்.

இன்னொன்னும் நியாபகம் வச்சுக்கோ… நம்ம வளர்ச்சி பிடிக்காதவங்களும், நம்மைக் குறை சொல்லத்தான் செய்வாங்க. அவங்க பேசுறதுனால மட்டும் அது உண்மையாகிடாது.”

அடுத்தத் தடவை உனக்கு யார் மேலையாவது கோபம் வரும் போது… இவங்க நமக்கு யாருன்னு மட்டும் யோசிச்சு பாரு… தேவையில்லாம எனர்ஜியை வேஸ்ட் பண்ணக் கூடாது.” என்றான் ஈஸ்வர் தெளிவாக.

சரி அங்கிள். ஆனா இனிமே பேச மாட்டேன்னு அக்கா சொன்னா இல்ல… அதை வாபஸ் வாங்க சொல்லுங்க.” விமல் சொல்ல… ஈஸ்வர் பாவனியை பார்க்க…

இனி ஒரு தரம் இப்படிப் பண்ண கண்டிப்பா உன்னோட பேச மாட்டேன். அது உன் ஈஸ்வர் அங்கிள் சொன்னாலும்.” என்றவள் வீட்டிற்குச் செல்ல… ஈஸ்வர் விமலையும் அனுப்பி வைத்தான்.

அக்காவையும் தம்பியையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துவிட்டு, பிறகு அவன் கடை மூடிவிட்டு வர வெகு நேரம் ஆகிவிட்டது.

ஊர்வசி அவனுக்குத் தோசை ஊற்ற செல்ல… ஏற்கனவே சாப்பிட்டேன் என்றான்.

எங்க டா சாப்பிட்ட… நீ வெளிய எங்கையும் போனியா?” என்றதும், இல்லை பாவனி வீட்ல சாப்பிட்டேன் என்றான்.

அவனை அவர் ஆச்சர்யமாகப் பார்க்கும் போதே…. “எப்போ தான் கல்யாணத்தை வைப்பீங்க?” என்று வேறு அவன் கேட்க…

ருக்மணி அத்தை சொன்னது சரிதான் டா… உன் பையன் கல்யாணத்துக்கு அப்புறம் மாறிடுவான்னு சொன்னாங்க. அது உண்மை தான் போல….. ஆனா என்ன கல்யாணத்துக்கு அப்புறம் மாறுவேன்னு சொன்னாங்க. நீ கல்யாணத்துக்கு முன்னாடியே மாறிட்ட…” என்றதும்,

அக்காவும் தம்பியும் சண்டை போட்டாங்க. அதுக்குப் பஞ்சாயத்து பண்ணிட்டு வரேன். சீக்கிரம் கல்யாணத்தை வச்சா… ஒரு டிக்கெட் இங்க இருக்குமே… சண்டை இருக்காதுன்னு நினைச்சு சொன்னேன்.”

கல்யாணம் வேண்டாம்னு சொன்னவனைப் புலம்பியே கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சிட்டு, இப்போ என்னையே குத்தம் சொல்றீங்களா?” என்றான்.

இங்க பாரு இந்தக் கதை எல்லாம் சொல்லாத…. இத்தனை நாள் உனக்குப் பிடிச்ச பெண்ணை நீ பார்க்கலை… இப்போ பார்த்ததும் நீ கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு…. என்னைக் காரணம் சொல்லாத… அப்படியே நான் சொல்றதை நீ கேட்கிறவன் தான்.”

ம்ம்… இப்போ கல்யணம் நடக்கப் போகுதுன்னதும், உங்களுக்கு ஏத்த மாதிரி எல்லாத்தையும் மாத்துங்க. சரி நீங்க அப்படியே வச்சுக்கோங்க.” என்றவன் அறைக்குள் செல்ல… ஊர்வசி சிரித்துக் கொண்டார்.

ஈஸ்வர் அறைக்குள் வந்ததும், அவன் அம்மா சொன்னதை தான் யோசித்துக் கொண்டிருந்தான். ஒருவேளை அம்மா சொன்னது தான் உண்மையா… தனக்கு பாவனியை முன்பே பிடித்திருந்ததா என நினைத்தவன், பிறகு எப்படியும் இருந்து விட்டு போகட்டும் என விட்டுவிட்டான். 

இன்னும் திருமணதிற்கு மூன்று வாரங்களே இருக்க… ஊர்வசி சென்று திருமணம் குறித்த எல்லா விஷயத்தையும் தனது நாத்தனார் வீட்டில் சென்று சொல்லத்தான் செய்தார். ஆனால் அவர்கள் ஒரு விலகலை காண்பிக்க…. அவர் பக்கம் அவர் தம்பி தங்கையை வைத்து திருமண வேலைகளை முடித்துக் கொண்டார்.

திருமணதிற்கு முன்பு பேசிக்கொள்ளும் ஸ்வீட் நத்திங்ஸ் என்று எதுவும் இல்லாமலே… ஈஸ்வரும் பாவனியும் திருமணம் வரை வந்திருந்தனர்.

Advertisement