Advertisement

உண்மையில் ஈஸ்வர் அதை விமலுக்குக்காகத்தான் சொன்னான். பிறகு அவனுக்காகவே குடிப்பதை விட்டு விட்டான்.

தான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என்று இப்போது பாவனிக்கு தோன்றியது. அவள் எதோ ஈஸ்வரை விரும்புவது போல வளர்மதி நினைத்துக் கொண்டார். 

வீட்டுக்கு வந்த மகனிடம் ஊர்வசி எதையுமே காட்டிக்கொள்ளவில்லை. அப்போது விமல் வந்தான்.

என்ன டா வராதவன் வந்திருக்க?” என ஈஸ்வர் கிண்டலாகக் கேட்க…

அக்காதான் போகச் சொன்னா…” என்றான்.

டேய், எனக்காக எல்லாம் யாரும் வர வேண்டாம். உனக்கே இஷ்ட்டம்னா வா…” என்றதும்,

எனக்கு இஷ்ட்டம் தான் அங்கிள்.” என்றவன், வேறு பேசிக் கொண்டிருக்க…  அப்போது ஊர்வசி இருவருக்கும் தோசை சுட்டுக் கொண்டு வர… இருவரும் சேர்ந்து உண்டனர்.

உண்டு முடித்துச் சிறிது நேரம் சென்று, விமல் அவன் வீட்டுக்கு செல்ல… ஈஸ்வர் அவன் வீட்டுக்குள் செல்லும் வரை வாயிலில் நின்று பார்த்துவிட்டு வந்தான்.

ரொம்பத்தான் அக்கறை.” என அதைப் பார்த்து நொடித்து விட்டு ஊர்வசி சென்றார்.

அவருக்கு உண்மையாகவே மகனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று தெரியவில்லை.

இப்போது விமல் எப்போதும் போலவே வந்து போக ஆரம்பித்தான். ஆனால் பாவனியை பார்ப்பது அரிது தான். அவள் வேலைக்குச் செல்லும் நேரம் மட்டும் தான் வெளியில் வருவாள்.

ஈஸ்வரும் பாவனியும் எதிர் எதிரே பார்த்தாலும் யாரோ போலத்தான் இருந்தனர். அதை பார்த்து இருவரின் அம்மாக்களுக்குத் தான் வருத்தமாக இருந்தது. பார்க்க பொருத்தமான ஜோடி இருவரும். திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

ஒருநாள் ருக்மணி பாட்டி வீட்டுக்கு வந்தவர், மீண்டும் ஈஸ்வர் அவந்திகா திருமணப் பேச்சை ஆரம்பிக்க…

நீங்க உங்க பேத்திகிட்ட முதல்ல கேளுங்க, அவளுக்குச் சம்மதம்னா சொல்லுங்க. நான் ஈஸ்வர்கிட்டே பேசுறேன்.” என்றார் ஊர்வசி.

ருக்மணி பாட்டிக்கு இதுவே போதும் என்றிருந்தது. வீட்டில் இருந்த ஈஸ்வர் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

அவந்திகா சம்மதிக்க மாட்டாள் என்ற தைரியத்தில் அப்போது அவன் எதுவும் பேசவில்லை. 

ருக்மணி வீட்டில் சென்று மகனிடமும் மருமகளிடமும் அவந்திகாவுக்கு இஷ்ட்டம்னா அவங்களுக்கும் இஷ்ட்டமாம் என்றதும், வைஜயந்திக்கு நம்பவே முடியவில்லை. ஊர்வசி அப்படிச் சொல்லவே இல்லை. ஊர்வசி சொன்னது, நீங்கள் அவந்திகாவிடம் பேசுங்கள், நானும் ஈஸ்வரிடம் பேசுகிறேன் என்றுதான்.

மாலை வேலை முடித்து வந்த பேத்தியிடம் ருக்மணி பொறுமையாக எடுத்து சொல்ல…. அவந்திகாவும் சரி என்று சொல்லி விட்டாள்.

இனிமேல் ருக்மணி பாட்டி விடுவாரா என்ன? உடனே இங்கே வந்து சம்மதம் சொல்லிவிட… ஊர்வசி மகனிடம் பேசுகிறேன் என்றவர், பேசவும் செய்தார்.

அம்மா என்ன விளையாடுறீங்களா? யாரைக் கேட்டு அப்படிச் சொன்னீங்க?” நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.” என்றான்.

உனக்கு உங்க அப்பா மாதிரி உறவுகளோட அருமையே தெரியலை ஈஸ்வர்…அவர் என்னை ஒருமாதிரி கஷ்ட்டபடுத்தினா… நீ வேற விதத்துல கஷ்ட்டபடுத்துற.” என்றதும், அவனுக்கு மிகவும் கோபம் வந்துவிட… அந்த ஆளை பத்தி பேசாதீங்க என்றான்.

நீ கல்யாணம் பண்ணிகிட்டா நான் இங்க இருக்கேன். இல்லைனா… நான் இப்பவே எதாவது ஹோம்ல போய்ச் சேர்ந்துக்கிறேன். எப்படியும் எனக்குப் பிறகு நீ தனியா தான இருக்கப் போற.. அதை இப்பவே இரு.” என்றதும்,

என்னைக் கார்னர் பண்றீங்களா மா?” என்றான்.

நீ என்ன வேணா நினைச்சுக்கோ… ஆனா இனியும் உன்னை இப்படியே விட முடியாது. எனக்கு ஒரு முடிவு சொல்லு.” என்றார்.

ஊர்ல என்னென்ன பேசுறாங்க தெரியுமா? உங்க பையனுக்குக் காதல் தோல்வியா? இல்லைனா சாமியாரா எதுவும் போகப் போறானா… இப்படி எத்தனை கேள்வி… உனக்கு உடம்புக்கு எதுவுமான்னு கூட என்னைக் ஜாடையா கேட்டுடாங்க.”

எல்லாம் உங்கப்பா பண்ண வேலை… அவர் ஒழுங்கா இருந்திருந்தா… நீ இப்படிக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லி இருப்பியா… நீ கூட என் பேச்சை கேட்க மாட்டேங்கிற.” என ஊர்வசி புலம்பி தள்ள…

இதுக்குத் திருமணமே செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு ஈஸ்வர் வந்துவிட்டான். வளர்மதிக்கு அதுதானே வேண்டும். அவர் இன்னும் என்னென்னவோ சொல்ல… 

கல்யாணம் பண்ணிக்கிறேன், ஆனா நான் சொல்ற பொண்ணு தான். விமலோட அக்கா பாவனிக்கு இஷ்ட்டமான்னு கேளுங்க.” என்றவன்,

ஆனா அவங்க வேண்டாம்னு சொல்லிட்டா… என்னை வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லக் கூடாது.” என்றதும்,

ஊர்வசிக்கு இது தானே வேண்டும். ஆனால் வேண்டுமென்றே அவங்க வீட்ல என்ன சொல்வாங்களோ தெரியலையே என்றார்.

எனக்கு அதெல்லாம் தெரியாது. நீங்களே பேசிக்கோங்க.” என்றுவிட்டான்.

மறுநாளே நல்ல நாள் என்பதால்… ஊர்வசி சென்று வளர்மதியிடம் பேச அப்போது பாவனியும் அங்குத் தான் இருந்தாள்.

எனக்குக் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் ஆன்டி.” என்றாள்.

நான் கேட்கிறது கேட்டுட்டேன். உங்க இஷ்ட்டம் தான். ஆனா நீ வேண்டாம்னு சொன்னா… ஈஸ்வரும் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான். அவன் உன்கிட்ட தான் கேட்க சொன்னான்.”

அவரே சொன்னாரா…” என அவள் சந்தேகமாகக் கேட்க…

இல்லை… நான்தான் கல்யாண பேச்சை ஆரம்பிச்சேன். அவன் நீன்னா சரின்னு சொன்னான்.” என்றவர், யோசித்துச் சொல்லுங்க என அவர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

அவர் சென்ற பிறகும் பாவனி யோசித்துக் கொண்டே இருந்தாள். இப்போது திடிரென்று ஈஸ்வர் திருமணதிற்கு ஒத்துகொள்ளும் காரணம் புரியவில்லை. இந்தத் திருமணம் சரி வருமா என அவளுக்குத் தெரியவில்லை.

மகளைப் பார்த்த வளர்மதி, “இந்த இடம் இல்லைனாலும், உனக்குச் சீக்கிரமா மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணனும்.” என அவர் பங்குக்கு அவர் ஒரு செக் வைக்க…

மாலை நேரமும் வந்துவிட… அப்போதும் பாவனி யோசித்துக் கொண்டே இருக்க… பள்ளியில் இருந்து வந்த விமலிடம், “உன் ஈஸ்வர் அங்கிளுக்குக் கல்யாணம் பண்ண உன் அக்காவை கேட்கிறாங்க, நீ என்ன சொல்ற?” என வளர்மதி கேட்டார். 

ஈஸ்வர் அங்கிளுக்கா… எனக்கு ஓகே ஓகே…” எனச் சந்தோஷபட்டவன், “நான் நம்ம வீட்டுக்கு நிறையத் தடவை அங்கிளை கூப்பிட்டிருக்கேன். அவர் வரவே மாட்டார். இனிமே அவர் வருவார் தான.” என்றவன், “நான் போய் அவரைக் கூட்டிட்டு வரேன்.” என அப்போதே அவன் அங்கே செல்ல…

உன் தம்பி இனிமே விடவே மாட்டான். இனி நீ இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவ…” என மகளைப் பார்த்து சிரித்துவிட்டு வளர்மதி சென்றார். 

இன்னும் பாவனிக்கு ஈஸ்வர் என்ன காரணத்தால் திருமணதிற்கு ஒத்துக் கொண்டான் என்று புரியவில்லை. இந்த திருமணம் தங்கள் இருவருக்கும் சரி வருமா என யோசித்துக் கொண்டே இருந்தாள்.

விமல் அங்கே சென்ற போது, ஈஸ்வர் கடைக்கு செல்லக் கிளம்பிக் கொண்டு இருந்தான். 

“நீங்கதான் எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?” என அவன் ஈஸ்வரிடம் கேட்க, அவர்கள் வீட்டிற்கும் சம்மதம் என புரிந்துவிட… ஊர்வசி சிரித்துக் கொண்டே ஆமாம் என்றார்.

“இனிமே எங்க வீட்டுக்கு வருவீங்க தான… இப்போ வாங்க.” என விமல் ஈஸ்வரை அழைக்க…

“இன்னொரு நாள் வரேன்.” என ஈஸ்வர் மறுக்க… விமல் கேட்க வேண்டும் அல்லவா… இப்பவே வாங்க என கைபிடித்து இழுத்தான்.

“அவன் ஆசையா கூப்பிடுறான் போயிட்டு வா…” என்றார் ஊர்வசியும்.

விமல் ஈஸ்வரின் கைபிடித்து அழைத்து செல்ல… “அம்மா, நீங்களும் வாங்க மா.” என்றான் ஈஸ்வர். ஊர்வசியும் கதவை சாற்றிக் கொண்டு அவர்கள் பின்னே சென்றார்.

ஈஸ்வர் வருவான் என்று பாவனி எதிர்பார்க்கவே இல்லை. அவள் சோபாவில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருக்க… அவளை பார்த்தபடி தான் ஈஸ்வர் உள்ளே நுழைந்தான். அவனை பார்த்ததும் பாவனி எழுந்து நிற்க… வளர்மதி வந்து அவர்களை வரவேற்றார்.

பாவனிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

வளர்மதி வீட்டில் இருந்த இனிப்பு காரங்களை தட்டில் வைத்து எடுத்து சென்றவர், பாவனியை காபி போட சொல்லிவிட்டு சென்றார்.

“அங்கிள் நீங்க என் ரூம் பாருங்க…” என விமல் ஈஸ்வரை அவனின் அறைக்கு அழைத்து சென்றிருந்தான். வளர்மதி அங்கேயே சென்று அவனுக்கு உண்ண கொடுத்தார். ஈஸ்வரும் விமலோடு பேசியபடி சாப்பிட்டான். 

அப்போது பாவனி அவனுக்கு காபி எடுத்துக் கொண்டு வந்தவள், அவனிடம் கொடுத்து விட்டு, விமலை பார்த்து, “டேய் உன்னை அம்மா கூப்பிட்டாங்க.” என அவனை அனுப்பி வைத்தவள், 

“என்ன அன்னைக்கு அவ்வளவு பேசினீங்க? இப்போ கல்யாணத்துக்கு ஒத்துகிட்டீங்க.” என்றதும்,

“ம்ம்… எங்க அம்மா என்னை கார்னர் பண்ணிட்டாங்க. இனிமே கல்யாணம் பண்ணிக்காம விடமாட்டாங்க.”

“நீயும் காதல் கணவனை எல்லாம் எதிர்பார்க்கலை தான… உனக்கு விமல் தானே முக்கியம். எனக்கும் அது ஒகே தான்.” என்றான் காபியை பருகியபடி.  

“உண்மையை சொன்னதுக்கு தேங்க்ஸ்.” என்றாள்.

“வெல்கம், ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் காபி மட்டும் நீ போட்டுடாத…” என்றபடி டம்ளரை அவளிடம் கொடுத்தவன், காபியில சக்கரையே இல்லை என்றான்.

ஐயோ என அவள் தலையில் தட்டிக் கொண்டாள். பதட்டத்தில் போட மறந்திருந்தாள். அப்போது விமலும் வந்துவிட… 

“உனக்காகத்தான் வந்தேன். இப்போ ஹப்பியா… நான் கிளம்புறேன்.” என விமலிடம் சொன்னவன், அங்கிருந்து விடைபெற்று செல்ல… ஊர்வசியும் பிறகு வருவதாக சொல்லிக் கிளம்பினார்.

 

  

Advertisement