Advertisement

வெளியே வந்த பிறகு, “தேங்க்ஸ், நானும் எடுத்து சொன்னேன் தான். ஆனா அவங்க கேட்கவே இல்லை.” என்றவளின் கண்கள் கலங்க…

அடுத்து நான் பேசிட்டு மட்டும் இருக்க மாட்டேன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.” என்றதும், பாவனி நிமிர்ந்து அவனின் முகம் பார்க்க…

நம்ம பையனையே வேண்டாம்னு சொன்ன பிறகு… நானும் நாலு காட்டு காட்டிட்டு தான் வந்திருப்பேன்.” என்றான் ஈஸ்வர் கோபமாக.

சரி விடுங்க இப்போத்தான் எல்லாம் சரி ஆகிடுச்சு தானே… விமலை எப்படியாவது எல்லாம் சப்ஜெக்ட்லையும் நல்ல மார்க்க எடுக்க வச்சிடணும்.” என்றாள்.

ம்ம்…” என்றவன், “இப்போ நீ எங்கப் போற?” என்றதும்,

வீட்டுக்குத்தான்.” என்றாள்.

சரி வா நானே கூடிட்டு போறேன்.” என்றவன் ஹெல்மெட்டை எடுத்து அணிந்து கொண்டு அவளை வண்டியில் உட்கார சொல்ல…

முதலில் தயங்கினாலும், அவன் எதாவது நினைத்துகொள்ளப் போகிறான் என்று வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

பாவனிக்கு அவன் வண்டியில் பிடிக்க எதுவும் இல்லாததால்… பிடிக்காமல் உட்கார்ந்து இருந்தாள். ஈஸ்வரும் வண்டியை மெதுவாகத்தான் ஒட்டிக்கொண்டு சென்றான்.

இப்படித்தான் உருட்டிட்டு போவீங்களா… நான் உங்க பக்கத்தில நடந்தே வரலாம் போல…” என்றதும், அவன் சட்டென்று வண்டியின் வேகத்தைக் கூட்ட… அவன் முதுகில் நன்றாக மோதியவள், அவனின் சட்டையைப் பிடித்துக்கொள்ள… ஈஸ்வர் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டான்.

இதுக்குதான் மெதுவா போனேன் புரியுதா?” என்றவன், “முதல்ல வண்டியில பிடிச்சிட்டு உட்காரு.” என்றான்.

பிடிக்கிறதுக்கு ஒன்னும் இல்லையே…” என அவள் கைப்பிடியை தேட… அவளது வலது கையை எடுத்து, பிடித்துகொள்ள இருந்த கம்பியில் வைத்துக் காட்டினான்.

இப்படிச் சீட்டுக்கு உள்ள புதைச்சு வச்சா எப்படித் தெரியுமாம்?” என்றவள், இப்போது ஒழுங்காக உட்கார… வண்டி வேகமெடுத்தது.

நேராக ஈஸ்வரின் வீட்டிற்குத்தான் சென்றனர்.

ஊர்வசி அவர்களைப் பார்த்ததும் போன வேலை என்ன ஆனது என்று கேட்டார்.

பாவனி அவரிடம் விவரம் சொன்னவள், “அம்மாவுக்குத் தெரிய வேண்டாம் ஆன்டி… அவங்க வேற வீணா மனசு கஷ்ட்டபடுவாங்க.” என்றதும், “நான் சொல்லலை.” என்றார்.

பாவனி சென்றதும், ருக்மணி வந்தவர், “என்ன ரெண்டு பேரும் ஒண்ணா பைக்கில எல்லாம் வராங்க. நீ எதுவும் சொல்ல மாட்டியா?” என்றதும்,

ஏன் அவந்திகாவையும் தான் ஈஸ்வர் வண்டியில கூட்டிட்டு போவான்.” அது போலத்தான் இதுவும்.” என்றார் விட்டுக் கொடுக்காமல்.

அதுவும் இதுவும் ஒன்றா…” என்றவர், “இது எதுல போய் முடியப் போகுதோ…” என அவர் சொல்லிவிட்டு செல்ல…

ஊர்வசி வீட்டுக்குள் வந்தவர் மகனிடம் ருக்மணி சொன்னதைச் சொல்ல… அவங்களுக்கு வேற வேலை இல்லை என்றான்.

ஈஸ்வருக்கும் பாவனிக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஊர்வசிக்கே இருந்தது. அதனால் இதைச் சாக்காக வைத்து, மகனிடம் பேசினார்.

டேய் உனக்கு விமல் மேல அக்கறை இருக்கா இல்லையா? அவன் எதிர்காலம் நல்லா இருக்கணும்முன்னு நினைக்கிற தான….”

அவனுக்குச் செய்யணும்னு நினைக்கிறதை உரிமையா செய்யேன் டா… நீ பாவனியைக் கல்யாணம் பண்ணிக்கோ… அப்புறம் யாரு உங்களைப் பத்தி தப்பா பேசப் போறா?” என்றதும், “மத்தவங்க பேசுறதுக்காக எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது.” என்றவன், அன்றிலிருந்து பாவனியோடு பேசுவதை நிறுத்திக் கொண்டான்.

அவள் கடைக்கு வந்தாலும் வேலையில் கவனமாக இருப்பது போல நகர்ந்து விடுவான். ஆனால் விமலிடம் எப்பவும் போலத்தான் இருந்தான்.

விமலுக்கு மனப்பாடம் செய்வது தான் வரவில்லை என்பதால்.. ஈஷ்வர் அவனுக்குக் கதை போலச் சொல்லிக் கொடுக்க… விமலும் கதையை நினைவு வைத்துக் கொண்டு எழுதுவதால்… இப்போது நினைவு வைத்துக் கொள்வது அவனுக்குப் பிரச்சனையாகவும் இல்லை.

பாவனி எப்படி அவனைப் படிக்க வைப்பது என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தாள்… ஆனால் ஈஸ்வர் அதை எளிதாகச் சரி செய்து விட்டான். இப்போது பாவனியுமே அவனுக்குக் கதை போலச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

பள்ளியில் நடந்த தேர்வில்… அவன் எல்லாப் பாடங்களிலும் தேர்வாகி செய்திருக்க… பள்ளி நிர்வாகத்திற்கும் அவன் மீது நம்பிக்கை வந்தது.

சிறிது நாட்கள் சென்றுதான் பாவனிக்கு ஈஸ்வர் அவளிடம் பேசுவதைத் தவிர்க்கிறான் என்று புரிந்தது. அதன் பிறகு அவளுமே விலக ஆரம்பித்தாள். ஆனால் எதோ ஒன்று அவனிடம் இருந்து முழுவதும் விலக விடாமலும் செய்து கொண்டிருந்தது.

ராஜீவ் திரும்ப வந்து மகளின் திருமணத்தைப் பற்றி வளர்மதி மட்டும் இருக்கும் போது வந்து பேசினார்.

அவ பண்ணிக்க மாட்டேங்கிறா நான் என்ன பண்றது?” என்றார் வளர்மதி.

இந்த வீட்ல இருந்தா சந்தோஷமா வாழவோ… அதை நினைச்சு பார்க்கவோ முடியாது. அதனால தான் நானே போனேன்.”

நீங்க கிடைச்சது சாக்குன்னு போனீங்க. கடமையில இருந்து விலகிட்டு இப்போ நல்லவர் பேசுறீங்களா?”

நான் நமக்கு ஒரு குழந்தையே போதும்னு சொன்னேன். நீ கேட்காம ரொம்ப லேட்டா இன்னொன்னு பெத்துகிட்ட… அதுலயும் பிரச்சனை. என்னை என்ன செய்யச் சொல்ற… நான் என் வாழ்க்கையை வாழ நினைச்சது தப்பா?”

தப்பான்னு எனக்குத் தெரியாது. ஆனா அது சுயநலம். உங்களைப் போல என்னால சுயநலமா இருக்க முடியலை..” என்ற வளர்மதி,

உங்க பொண்ணு உங்களைப் பார்த்து தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றா… நீங்க அவ முன்னாடி வராம இருங்க அதே போதும்.

அவளுக்குப் பிடிச்சவனைப் பார்க்கும் போது… அவ கல்யாணம் பண்ணிப்பா… எனக்கு என் பெண்ணை வாழ வைக்கத் தெரியும். நீங்க கிளம்புங்க.” என்றார் வளர்மதி கோபமாக.

என்னவோ பண்ணு… என்னைப் பொண்ணுக்கு கூடக் கல்யாணம் பண்ணி வைக்கலைன்னு குத்தம் சொல்லக் கூடாது.” என்று சொல்லிவிட்டு ராஜீவ் சென்றார்.

சிறிது நேரம் சென்றதும் ஊர்வசி எப்போதும் போல வந்தார். அவரைப் பார்த்ததும் வளர்மதி தன் மனதில் இருப்பதைக் கொட்டினார்.

பொண்ணு கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறான்னு அதுக்கும் என்னையே குத்தம் சொல்றார்.”

பையனுக்கு இப்படின்னு தெரிஞ்சதும் விட்டுட்டு போயிட்டார். பையனை ஹோம்ல விட்டா… வீட்ல வந்து இருக்கேன்னு சொன்னார். நீங்க அப்படி ஒன்னும் இருக்க வேண்டாம்னு சொல்லிட்டேன். அங்க யாரு எப்படிப் பார்த்துப்பான்னு நமக்கு என்ன தெரியும்?” வளர்மதி கண் கலங்கியபடி சொல்ல…

நீங்க பண்ணது எல்லாம் சரிதான். இன்னைக்கு விமல் இப்படி இருக்கக் காரணம் நீங்கதான். நீங்க அதை நினைச்சு சந்தோஷப்படாம… அவர் பேசுறதை போய்ப் பெரிசா எடுக்கலாமா?” என்றார் ஊர்வசி.

எனக்கும் என் பொண்ணு என்னைப் போல இல்லாம …. கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழணும்னு தான் இருக்கு. ஆனா அவ பண்ணிக்க மாட்டேங்கிறா நான் என்ன பண்றது?”

இதுக்கெல்லாம் நீங்க கலங்கலாமா… நானே உங்க தைரியத்தைப் பார்த்து ஆச்சர்யபட்டிருக்கேன்.”

அப்போது பாவனி கிளினிக்கில் இருந்து வந்து விட்டாள். எப்போதுமே மதிய நேரம் வந்துவிட்டு மீண்டும் மாலை நான்கு மணி போலச் செல்பவள், ஏழு மணிக்கு திரும்ப வருவாள். சில நேரம் வேலை இல்லை என்றால் மாலை நேரம் செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடுவாள்.

தன் தாயின் கலங்கிய முகத்தைப் பார்த்தவள், “என்ன மா?” என்று கேட்க…

வேற யாரு உங்க அப்பா தான் என்னை வந்து பேசிட்டு போறார்.”

அவருக்கு என்னவாம்?”

நீ கல்யாணம் பண்ணிக்காததுக்கு நான்தான் காரணமாம். இந்த வீட்ல சந்தோஷமே இருக்காதாம்.”

அவர் என்ன லூசா?” என்றவள், “நீங்க ஏன் அவர் பேசுவதை எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க? நல்லா நாக்கை பிடிங்கிற மாதிரி கேட்டு அனுப்ப வேண்டியது தான…”

கேட்டுத்தான் அனுப்பினேன். ஆனாலும் நீயும் ஒன்னு தெரிஞ்சிக்கோ… எல்லோரும் உங்க அப்பா மாதிரி இல்லை. உன் தம்பியை பத்தி கூட எனக்கு இப்போ கவலை இல்லை. உன்னைப் பத்தி தான் கவலையா இருக்கு.”

நாம கஷ்ட்டபடுற காலம் இருந்துச்சு கஷ்ட்டப்பட்டோம். ஆனா இப்போ அப்படி இல்லை. நம்ம வீட்லையும் ஒரு நல்லது நடக்க வேண்டாமா? எல்லோரையும் போல நாமும் இருந்தாதானே… உன் தம்பியையும் எல்லோரும் சாதாரணமா பார்ப்பாங்க.” என வளர்மதி கேட்க…

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவருக்கு என்னை பிடிக்கல்லைனாலும் விமலை கண்டிப்பா பிடிக்கணும். அதனால விமலை பிடிச்ச யாராவது வந்தா கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்றாள் பாவனி.

இவளை பிடிக்கலைனாலும் பரவாயில்லையா? இவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது போல வளர்மதியும் ஊர்வசியும் பார்த்தனர்.

வீட்டுக்கு வந்த ஊர்வசி மகனிடம் பாவனி வீட்டில நடந்ததை சொல்லி… கடைசியில் பாவனி சொன்னதையும் சொல்லியவர், “அது என்ன டா, என்னை பிடிக்கலைனாலும் என் தம்பியை பிடிக்கணும்னு சொல்றா? அப்படி யாரு டா வருவா?” என்ற ஊர்வசிக்கு நிஜமாகவே புரியவில்லை.

விமல் பழக்கிக் கொண்டிருக்கும் ஒரே ஆள் ஈஸ்வர் தான் அவனுக்கா புரியாது.

“இவளை பிடிக்காதவனை கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ண போறா? இவ கேட்கிற மாதிரி எல்லாம் எவனும் வரமாட்டான்னு… நான் சொன்னேனே சொல்லுங்க.” என்றான் ஈஸ்வர். 

Advertisement