Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 4

இதற்கு முன்பிருந்த வீடுகளில், அக்கம் பக்கம் யாரிடமும் நெருங்கி பழகியது இல்லை. இதற்கு முன்பிருந்தது எல்லாம் அபார்ட்மெண்ட் தான். இப்போது வகுபிற்க்கு நிறைய மாணவர்கள் வருவதால்… வகுப்பெடுக்க வசதியாக என்றுதான் தனி வீடாகப் பார்த்துக் கொண்டு வந்தனர்.

விமலும் ஈஸ்வரும் நெருங்கிப் பழகியதால்… இருவரின் குடும்பமும் நெருக்கமாகியது.

ஊர்வசி சென்று வளர்மதியுடன் பேசிக் கொண்டு இருப்பார். செல்லும் போது பிள்ளைகளுக்கும் வீட்டில் செய்தது எதாவது எடுத்து சென்று கொடுப்பார். வளர்மதிக்கு நேரம் இருக்காது. அதனால் பாவனியுமே சில நாட்கள் வளர்மதி எதாவது கொடுத்தால் வந்து கொடுப்பாள். அப்போது ஈஸ்வர் இருந்தால்… அவனுமே அவளிடம் பேசுவான். அவந்திகா முதலில் இருவரையும் குறுகுறுவெனப் பார்த்தவள், பிறகு இருவரிடமும் ஏதும் வேறுபாடாகத் தெரியாதால் விட்டு விட்டாள்.

அவந்திகாவும் பாவனியுமே சற்று நெருக்கமாகப் பழகினார்கள். ஆனால் ருகம்ணி பாட்டி, விமலை பார்த்தால் முகத்தைத் தூக்குவதால்… பாவனி அவர்கள் வீட்டுக்கு எல்லாம் செல்ல மாட்டாள். பார்த்தால் பேசுவதோடு சரி.

அன்று மாலை ஏழு மணி போலப் பாவனியின் அப்பா வந்திருக்க… அவரைப் பார்க்க பிடிக்காமல் மாடி பால்கனிக்கு சென்று நின்று கொண்டாள். ராஜீவ் அவளோடு தான் பேச வந்திருந்தார். அதனால் அவளைத் தேடி அங்கே வந்தவர், “நான் உன்கிட்ட தான் பேச வந்தேன்.” என்றார்.

எனக்கு உங்ககிட்ட பேச ஒன்னும் இல்லை.” என்றாள் எடுத்தெறிந்து.

நான் உன்னை விடலை பாவனி. உன்னை என்னோட வச்சு வளர்த்துகிறேன்னு உங்க அம்மாகிட்ட சொல்லத்தான் செஞ்சேன். அவ விடலை… நீயும் வரலை…”

எனக்கும் எதாவது குறை இருந்தா விட்டுட்டு தான போயிருப்பீங்க. விமலை வேண்டாம்னு சொன்னவர், எனக்கும் வேண்டாம். இபோ எதுக்கு வந்தீங்க? அதை மட்டும் சொல்லிட்டு போங்க.”

உனக்கு ஒரு வரன் வந்திருக்கு. அதைப் பற்றிப் பேசத்தான் வந்தேன்.”

உங்ககிட்ட நான் படிச்ச பாடமே போதும், இனியொரு ஆம்பிளையை நம்பி நான் என் வாழ்க்கையைக் கொடுக்கிறதா இல்லை.” என்றாள் நறுக்கென்று.

சத்தியமா சொல்றேன்… விமல் இந்த அளவுக்கு இருப்பான்னு எல்லாம் நான் நினைக்கவே இல்லை. ஆட்டிசம்ன்னு சொன்னதும் பயந்திட்டேன். ரொம்ப ஸ்ட்ரெஸ் அதிகமாகி.. வீட்லயே இல்லாம சுத்திட்டு இருந்தேன். எனக்கு டிப்ரஷன் வந்த பிறகுதான் இந்தச் சூழ்நிலையில இருந்து விலகனும்னு விலகிட்டேன்.” என்றவரை ஏளனமாகப் பார்த்தவள்,

இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டதும் உங்க ஸ்ட்ரெஸ் டிப்ரஷன் எல்லாம் போயிடுச்சா?”

ஸ்ட்ரெஸ் டிப்ரஷன் இதெல்லாம் நீங்க தப்பிக்கப் பயன்படுத்தின வழி… அம்மாவை விட உங்களுக்கு ஸ்ட்ரெஸ்ஸோ… டிப்ரஷனோ இருந்திருக்காது.”

அம்மா நினைச்சிருந்தா விமலை ஹோம்ல கூட விட்டிருக்கலாம். ஆனா அவங்க போராடினாங்க. அதனால தான் விமல் இந்த அளவுக்கு இருக்கான். இது முழுக்க முழுக்க அம்மாவால சாத்தியமாச்சு.”

எனக்கு இப்போ கல்யாணத்துல எல்லாம் விருப்பம் இல்லை. விமலை இன்னும் பெரிசா உருவாக்கி உங்க முன்னாடி எல்லாம் பெருமையா நிறுத்தனும். எனக்கு அது மட்டும்தான். உங்க அக்கறைக்கு நன்றி. நீங்க கிளம்புங்க.” என்றவள், இன்னும் ராஜீவ் அங்கயே நிற்பதைப் பார்த்து கடுப்பனவள், எதிர்கடையில் ஈஸ்வரும் விமலும் பேசிக் கொண்டிருப்பது பார்த்து கீழே இறங்கியவள், அவள் அம்மாவிடம் சொல்லிவிட்டு அங்கே சென்று விட்டாள்.

கடைக்குச் சென்றவள், எதுவும் பேசாமல்… வாடிக்கையாளருக்காகப் போடப்பட்டிருந்த இருக்கையில் சட்டமாகக் காலை மடக்கி உட்கார்ந்து கொண்டாள்.

ஈஸ்வர் அவளைப் பார்த்து என்ன என்றான்.

நான் சும்மா உட்கார்ந்திருக்கேன். இவன் பொழுதன்னைக்கும் இங்கதான் இருக்கான், இவனை எதாவது சொல்றீங்களா? என்னை மட்டும் ஏன் கேட்கறீங்க?” என அவள் சண்டை போடுவது போலப் பேசி வைக்க… கடை பணியாளர்கள் எல்லாம் ஒருமாதிரி பார்க்க…

என்னனு தான டா உங்க அக்காகிட்ட கேட்டேன் அதுக்கு இவ்வளவு லெந்தியா பேசணுமா…” என ஈஸ்வர் விமலிடம் கிசுகிசுக்க…

அப்பா வந்திருக்கார்… அவர் வந்தாலே இவ டென்ஷன் ஆகி சண்டை போடுவா.” என்றான் விமல்.

இதுதான் எங்கையோ போற மாரியாத்தா… என் மேல வந்து ஏறு ஆத்தான்னு ஏறுவதா…” என நினைத்தவன், அன்று கடையில் ஒன்றும் கூட்டம் இல்லாததால்… ஏழு மணிக்கே பணியாளர்களைச் செல்ல சொன்னான்.

அங்கிள், நான் என் பிரண்டுக்குக் கிஃபிட் வாங்கணும்.” என விமல் ஈஸ்வரிடம் சொல்ல…

“இங்கயே எதாவது ஒன்னு பார்த்து எடுத்துக்கோ.” என்றதும், “கேர்ள் ப்ரண்ட் அங்கிள்.” என்றான் கிசுகிசுப்பாக.

விமலை ஒருமாதிரி பார்த்த ஈஸ்வர், “ஏன் பொண்ணுங்க விளையாட மாட்டாங்களா?” என்று கேட்டு வைக்க…

ஐயோ இவன்கிட்ட போய்ச் சொன்னோமே என்பது போலப் பார்த்த விமல், “விளையாடுவாங்க தான். ஆனா கேர்ள் திங்க்ஸா இருந்தா அவங்களுக்குப் பிடிக்கும். வேற எதாவது கிஃபிட் சொல்லுங்க.” என்றான்.

டேய் நான் இந்தச் சப்ஜெக்ட்ல ரொம்ப வீக் டா… இல்லைனா முப்பது வயசு வரை கல்யாணம் பண்ணாமலா இருந்திருப்பேன்.” ஈஸ்வர் சொல்ல…

நீங்க வேஸ்ட் அங்கிள்.” என விமல் சிரிக்க… ஈஸ்வருக்கும் சிரிப்பு வந்தது.

இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த பாவனி, “என் தம்பியை கெடுக்காதீங்க.” என்றதும், புருவத்தை உயர்த்திய ஈஸ்வர், “யாரு நான்னு? இதை உன் தம்பிகிட்ட சொல்லு… அவன்தான் எதோ சொல்லிட்டு இருக்கான்.” என்றதும்,

என் பிரான்ட் பர்த்டேக்குக் கிஃபிட் வாங்கிறேன். இது ஒரு தப்பா.” என்றான் விமல்.

முதல்ல படிக்கிற வேலையைப் பாரு… ஒரு சப்ஜக்ட்ல மார்க் எடுத்தா இன்னொண்ணுல எடுக்கிறது இல்ல… உன் ஸ்கூல்ல வேற நாளைக்கு வர சொல்லி இருக்காங்க. என்ன சொல்லப் போறாங்களோ தெரியலை.” என்றதும்,

உனக்கு எப்பப்பாரு படிக்கணும்.” என்ற விமல் கோபமாக அங்கிருந்து சென்று விட்டான்.

ஏன் விமல் நல்லா படிக்க மாட்டான்னா? என ஈஸ்வர் பாவனியிடம் கேட்க…

கணக்கு பாடத்துல எல்லாம் நூத்துக்கு நூறு கூட வாங்குவான். ஆனா நிறைய எழுதுற பாடத்துல முக்கியமா தமிழ், இங்கிலீஷ் எல்லாம் நிறைய எழுத மாட்டான். அதுல தான் மார்க் குறைஞ்சிடும்.” என்றாள்.

அதுல எல்லாம் பாசானா கூடப் போதும். மார்க் மட்டும் முக்கியம் இல்லை. நமக்கு என்ன தெரியுது, நாம என்ன கத்துக்கிறோம்னு தானே முக்கியம்.” என ஈஸ்வர் சொல்ல…

எனக்கு இதெல்லாம் புரியலைன்னு நினைக்கிறீங்களா… அவன் ஸ்கூல்ல இதெல்லாம் ஒத்துக்கணுமே… “ என்றதும்,

நான் வேணா வந்து பேசுறேன்.” என்றான் ஈஸ்வர்.

பாவனி சற்று நேரம் யோசிக்க.. “இவன் யாருன்னு நினைக்கிறியா?” என்றதும்,

அப்படி நினைக்கலை… இன்னும் அம்மாவுக்குத் தெரியாது. அவங்க நிறையப் போரடிட்டாங்க. எனக்கு இன்னும் அவங்களுக்குக் கஷ்ட்டம் கொடுக்க இஷ்டம் இல்லை. அதனால இப்ப விமல் விஷயம் எதுனாலும் நான்தான் பார்த்துப்பேன்.” என்றவள், “சரி நீங்க வாங்க.” என்றாள்.

மறுநாள் காலை பத்து மணி போல ஊர்வசியிடம் சொல்லிவிட்டு ஈஸ்வர் கிளம்பி சென்றான். முன்பே பாவனி பள்ளிக்கு சென்றிருந்தாள். பள்ளி வளாகத்தில் ஈஸ்வர் பைக்கை நிறுத்திவிட்டு செல்ல… உள்ளே அவனுக்காகப் பாவனி காத்திருந்தாள்.

நான் நினைச்ச மாதிரி தான் சொல்றாங்க. அவன் பாஸ் ஆகலைனா… ஸ்கூல் பேர் கெட்டுடுமாம். அதோட அவங்களுக்குச் சென்ட்பெர்சன்ட் ரிசல்ட் போகிடுமாம். அதனால பன்னிரெண்டாவது பரீட்சையை ப்ரைவேட்டா எழுத வைக்கக் சொல்றாங்க.” என்றதும் ஈஸ்வருக்கு வந்ததே கோபம், “நான் பேசிக்கிறேன் வா.” என்றான்.

உள்ளே பள்ளியின் தாளாளரும், முதல்வரும் இருக்க… ஈஸ்வரும் பாவனியும் சென்று எதிரே உட்கார்ந்தனர்.

ஈஸ்வர் அவனை அறிமுகம் செய்து கொண்டவன், “இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறேன், எந்தப் பிரச்சனையும் இல்லாம… நல்லா படிக்கிற பசங்களை… பாஸ் பண்ண வச்சு, நல்ல மார்க் வாங்க வைக்கிறதில… உங்களுக்கு என்ன பெருமை இருக்க முடியும்?” என்றான்.

பள்ளி தாளாளரும், முதல்வரும் அவனை யோசனையாகப் பார்க்க… “இந்த மாதிரி சாவாலான குழந்தைகள் உங்க ஸ்கூல்ல படிக்கிறதே… உங்களுக்குப் பெருமை தான… அதிலும் அவன் பாஸ் பண்ணி வெளியப் போனா… அந்தப் பெருமையும் உங்களைத்தானே சேரும்.”

உங்க ஸ்கூலுக்கு நூறு சதவீதம் ரிசல்ட் வரணும்னு ஒரே காரணத்துக்காக அவனை வெளிய போகச் சொல்றது என்ன நியாயம்?” என்றான்.

எந்தக் குறையும் இல்லாத பையனா இருந்து, அவன் நல்லா படிக்கலைனா கூட… அந்தப் பையனையும் படிக்க வச்சுப் பாஸ் பண்ண வைக்க வேண்டியது உங்க பொறுப்புதான். ஆனா இவனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சு… அவனை வெளிய போகச் சொல்றது. எனக்கு நியாயமாப்படலை….”

முதல அந்தப் பையன் மனசை இது எவ்வளவு காயப்படுத்தும்.” என ஈஸ்வர் எடுத்து சொல்ல…

நீங்க சொல்றது எல்லாம் சரிதான்.” எனப் பள்ளி தாளாளர் இழுக்க…

அவனும் எல்லாரையும் போலச் சாதாரணமா வாழத்தான் அவங்க வீட்ல போராடிட்டு இருக்காங்க. நீங்க அவனை இப்போ நீ வேறன்னு பிரிச்சு காட்டினா… அவன் மனசு உடைஞ்சு போயிடாதா… அதையும் கொஞ்சம் நினைச்சு பாருங்க.” என்றதும்,

விமல் மேற்கொண்டு அங்கேயே படிக்கப் பள்ளி தாளாளர் ஒத்துக் கொண்டார். பாவனியும் ஈஸ்வரும் நன்றி சொல்லவிட்டு வந்தனர்.

Advertisement