Advertisement

ராகவி கல்லூரி படிப்பு முடிந்ததும், மேற்கொண்டு படிக்க விரும்பியவளை… நீ திருமணதிற்குப் பிறகு படி என, அவளுக்கு ஒரு வரனை தன் மாமனாருடன் சேர்ந்து பார்த்து ஊர்வசி திருமணத்தை முடித்து விட்டார்.

பிள்ளைகள் இருவருமே இல்லை என்றதும், தேவனாதனை ஊர்வசி இந்த வீட்டுக்கு வரக் கூடாது என்று சொல்லிவிட்டார். தேவநாதனுக்கு அப்பா மட்டும் தான். அப்போதுதான் கணவனைப் பற்றி ஊர்வசி அவரிடம் சொன்னார்.

அவர் மருமகள் பக்கம் தான் நின்றார். சென்னையில் அவர்களுக்கு இருந்த சொத்துக்களைப் பேரப்பிள்ளையான ஈஸ்வருக்கு என எழுதி கொடுத்து விட்டார்.

மகளின் முதல் பிரசவத்திற்குக் கூட ஊர்வசி தான் சிங்கப்பூர் சென்று பார்த்துக் கொண்டார். குழந்தை எல்லாம் பிறந்து பிறகு கணவன் சொல்லித்தான் ராகவிக்கு அவள் அப்பாவும் அம்மாவும் பிரித்து விட்டது தெரியும். பிறகு அவள் சொல்லித்தான் ஈஸ்வருக்குத் தெரியும்.

ஈஸ்வர் கணக்கியல் மற்றும் நிர்வாகப் படிப்பில் நான்கு வருட மாஸ்டர்ஸ் கோர்ஸ் எடுத்திருந்தான். அது முடித்து அவன் வெளிநாட்டுக்கு சென்று மேல்படிப்புப் படித்துக் கொண்டே வேலைப் பார்ப்பதாக இருந்தது. விஷயம் தெரிந்ததும், வெளிநாட்டுக்கு செல்வதை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டுச் சென்னை திரும்பி விட்டான்.

ராகவியும் அப்போது சென்னை வந்திருக்க… எங்களால தான மா நீங்க அவரைப் பொருத்து போனீங்க எனப் பிள்ளைகள் இருவருமே தங்கள் அம்மாவிடம் சொல்லி அழுதனர்.

உங்க அப்பாவுக்கும் எனக்குமான உறவு முடிஞ்சிடுச்சு. ஆனா அதுக்காக உங்க எதிர்காலத்தை நான் கேள்விக்குறியாக்க முடியாது. எனக்கு உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் ரொம்ப முக்கியம். நான் ஒரு மனைவியா தோத்து போனாலும், அம்மாவா ஜெயிச்சிருக்கேன். என் பிள்ளைகள் வாழ்க்கையில் தடம் புரண்டு போகலை… எனக்கு அதே போதும்.” என்றார்.

பிள்ளைகள் வந்திருப்பது தெரிந்து தேவநாதன் அவர்களைப் பார்க்க வர… “எங்க அம்மாவுக்குத் துரோகம் செஞ்ச அப்பா எங்களுக்கு வேண்டாம்.” என ஈஸ்வர் அவரை வெளியே போகச் சொன்னான்.

நீ இப்போ படிச்சு முடிச்சிட்ட உனக்கு என் தயவு தேவை இல்லை. அதுதான் என்னை வெளிய தள்ளுற…” தேவநாதன் சொன்னதற்கு,

எனக்கு மட்டும் முன்னாடியே தெரிந்திருந்தா… அப்பவும் இதைத்தான் செஞ்சிருப்பேன். படிக்க முடியாம போனாலும், வேலைக்குப் போயாவது எங்க அம்மாவை காப்பாத்தியிருப்பேன். ஆனா எங்க அம்மாவுக்குத் துரோகம் செஞ்ச உங்களை ஒருநாளும் பொருத்து போக மாட்டேன்.

இதுதான் நடக்கும் என்று தெரிந்து தான். ஊர்வசி எதையுமே பிள்ளைகளிடம் சொல்லாமல் இருந்தார்.

தந்தையும் இல்லாத நிலையில் தாயை தனியே விட்டு வெளிநாடு செல்ல ஈஸ்வருக்கு மனம் இல்லை. ஈஸ்வர் பிடிவாதமாக வெளிநாடு செல்ல மறுத்துவிட்டான்.

திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் பெற்று இருபது வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் செய்து விட்ட தந்தையைப் பார்த்த பிறகு… அவனுக்குத் திருமணத்தின் மீதே விருப்பம் இல்லாமல் போய்விட்டது.

மதியம் இரண்டு மணிக்கு மேல் வந்த ஈஸ்வர் தாயைப் பார்த்ததும், “என்ன மா உடம்பு சரி இல்லையா?” என்றான்.

ஒன்னும் இல்லை டா தலைவலி.”

தலைவலிக்கே இப்படி இருக்கீங்க. வாங்க ஹாஸ்பிடல் போயிட்டு வந்திடலாம்.” என்றான்.

ஒன்னும் இல்லாததுக்கு எல்லாம் ஹாஸ்பிடல் போக முடியாது. மாத்திரை போட்டிருக்கேன் இப்போ பரவாயில்லை. சாப்பிட்டு படுத்து எழுந்தா சரி ஆகிடும்.” என்றார்.

இன்னும் நீங்க சாப்பிடலையா?” என்றவன், முகம் கை கால் கழுவி கொண்டு வந்து அவனே உணவை எடுத்து வைத்தான்.

இருவரும் உண்ணும் போது, விமல் வந்த கதையைச் சொன்னார்.

நான் சொல்லாமலே உடம்பு சரியில்லைன்னு புரிஞ்சிகிட்டு, இருங்க மாத்திரை எடுத்திட்டு வரேன்னு வீட்டுக்கு போய், அவங்க அம்மாவை கூட்டிட்டு வந்து…” என ஊர்வாசி சொல்லிக் கொண்டிருக்க…

எல்லாரையும் ஒரு வழியாக்கி இருக்கான்னு சொல்லுங்க.” என்றான் ஈஸ்வர் புன்னகையுடன்.

உனக்கு அவனைப் பத்தி தெரியும் தான… நீ என்கிட்டே கூடச் சொல்லலை.” என்றதும்,

அவனுக்குப் பெரிசா எல்லாம் எதுவும் இல்லை. அதோட நீங்க பயந்திட்டு அவங்ககிட்ட இருந்து விலகினா.. அவனுக்குக் கஷ்ட்டமா இருக்கும். அதுதான் சொல்லலை. சரி உங்களுக்கு எப்படித் தெரியும்?”

இவன் பண்ண கலாட்டவுல அவன் அம்மாவே இங்க வந்திட்டாங்க. அவங்க தான் சொன்னாங்க”. என்றவர், எல்லா விவரமும் சொல்லிவிட்டு, கடைசியில் வளர்மதியின் கணவர் பற்றியும் சொன்னார்.

பாரு இந்த நிலையிலும் பசங்களை நல்லா வளர்த்திருக்காங்க. புருஷன் துணையும் இல்லாம… அதுவும் இந்த மாதிரி பையனை வளர்க்கிறது எவ்வளவு கஷ்ட்டமா இருந்திருக்கும். தைரியமான ஆளு தான்.”

இருக்காங்க மா… இதுமாதிரி இன்னும் நிறையப் பெண்கள் இருக்காங்க. இது மாதிரி குறை இருக்கிற குழந்தை பிறந்தா… அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க முடியாம நிறைய ஆண்கள் விட்டுட்டு போயிடுறாங்க. அம்மாக்களால் அப்படி விட்டுட்டு போக முடியுறது இல்ல… தன் குழந்தையும் மத்த குழந்தை மாதிரி வாழணும்னு அவங்க போராடிட்டு தான் இருக்காங்க.”

உண்மையிலேயே ஆண்களை விடப் பெண்கள் தான் மனவலிமை அதிகம் இருக்கிறவங்க. சில சூழ்நிலையில ஆண்கள் மிரண்டு அடுத்து என்னன்னு புரியாம பின்வாங்கும் போது… பெண்கள் அதே சூழ்நிலையை மனதைரியத்தோட கடந்து வந்திடுவாங்க.”

இருபது வருஷம் வெளி உலகமே தெரியாம அப்பாவையே சார்ந்து இருந்த நீங்க… அவர் வேண்டாம்னு தைரியமா முடிவு எடுக்கலையா… ஆனா வீராப்பா போன அவர்… சில வருஷத்திலேயே என்னை மன்னிச்சுத் திரும்பச் சேர்த்துக்கோன்னு உங்களைக் கேட்டுட்டு தானே இருந்தார்.”

இங்க மனவலிமை யாருக்கு இருந்தது.” என மகன் பேச பேச…. அவனை ஆச்சர்யமாகப் பார்த்த ஊர்வசி…. “பெண்களைப் பத்தி இவ்வளவு உயர்வா எண்ணம் வச்சிருக்க… அப்புறம் ஏன் டா கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிற?” என்றதற்கு,

காதல் கல்யாணம் எல்லாம் கமிட்மென்ட் மா… இப்போ எந்தக் கமிட்மென்ட்டும் இல்லை… நான் ஜாலியாத்தானே இருக்கேன். இப்படியே இருந்திட்டு போறேன்.” என்றான்.

நீ இப்படியே பண்ணிட்டு இருந்தினா… உனக்கு அவந்திகாவை பிடிச்சு ருகம்ணி பாட்டி கட்டி வச்சிடுவாங்க. அவங்க அதுக்குதான் பிளான் போட்டுட்டு இருக்காங்க.” என்றார்.

அவங்க எதாவது சொல்லிட்டே இருக்கட்டும் அவங்களுக்கு வேற வேலை இல்லை.” என்றான்.

வளர்மதியை பார்த்த பிறகு எனக்கும் எதாவது பண்ணும் போல இருக்குடா… நான் அவங்களுக்கு எதாவது உதவி செய்யட்டுமா?” என்றதும், “அதை நீங்க அவங்ககிட்ட பேசிக்கோங்க.” என்றவன், “இந்த மாதிரி குழந்தையை வச்சிட்டுத் தனியா கஷ்ட்டபடுற அம்மாக்களுக்கு எதாவது பண உதவி தேவைபட்டா சொல்ல சொல்லுங்க.

நம்மால முடிஞ்சதை செஞ்சு… இன்னும் மத்தவங்ககிட்ட இருந்தும் உதவி வாங்கிக் கொடுக்கலாம்.” என்றான் ஈஸ்வர். ஊர்வசியும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டார்.

பாவனிக்கும் அவள் அம்மாவின் மூலம் ஈஸ்வரின் குடும்பத்தைப் பற்றித் தெரிய வந்தது. ஊர்வசியும் வளர்மதியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்தனர்.

பாவனிக்குக் கல்யாணம் வயசு ஆகிடுச்சே…. வரன் எதுவும் பார்க்கலையா?” என ஊர்வசி கேட்க…

அவ தம்பிக்காகக் கல்யாணமே பண்ணிக்கப் போறது இல்லையாம்.” என்றார்.

ஏன் விமலுக்குக் கல்யாணம் பண்ண முடியாதா?”

அப்படியில்லை… ஆனா அவனைப் புரிஞ்சிகிட்டு ஏத்துகிற துணை வரணுமே… அப்படி வராம போயிட்டான்னு பயப்படுறா.”

ஏன் கல்யாணம் பண்ணாலும் தம்பியை பார்த்துக்கலாமே…” என ஊர்வசி சொல்ல… அவர்கள் பேசுவதை அதுவரையில் உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த பாவனி, “பெத்த அப்பாவே பையன் இப்படின்னு தெரிஞ்சதும் விட்டுட்டு போயிட்டார். இதுல என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவன், விமலை பார்த்துப்பான்னு எல்லாம் நீங்க என்னை நம்பச் சொல்றீங்களா ஆன்டி.” எனக் கேட்டாள்.

ஊர்வசிக்கும் அந்த நம்பிக்கை குறைவு தான். அவர் பதில் சொல்லாமல் இருக்க… கல்யாணம் பண்ணாமலும் சந்தோஷமா வாழலாம் ஆன்டி என்றாள்.

எங்க வீட்லயும் ஒன்னு இப்படித்தான் சொல்லிட்டு இருக்கு.” என்றவர், “நீங்களா மனம் மாறினாத்தான் உண்டு.” என்றார்.

Advertisement