Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 3

அன்று சனிகிழமை ஈஸ்வர் வீட்டில் இல்லை. சில வெளி வேலைகள் இருக்க, எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வந்து விடலாம் என வெளியில் சென்றிருந்தான். அன்று விமலுக்கும் பள்ளி இல்லை. பொதுவாக ஈஸ்வர் சனிக்கிழமைகளில் கடையில் தான் இருப்பான். விமல் அங்கே சென்று பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.

அழைப்பு மணியின் சத்தம் கேட்டு எழுந்து வந்த ஊர்வசிக்கு தலைவலி என்பதால்…. கதவை திறந்து விட்டவர், அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து தலையைப் பிடித்துக் கொண்டார்.

அங்கிள் எங்க?” விமல் பார்வையால் வீட்டை ஆராய்ந்தபடி கேட்க…

அவன் வெளிய போயிருக்கான். நீ என்ன இந்த நேரம் வந்திருக்க, உனக்கு ஸ்கூல் இல்லையா?”

இல்லை…” என்றவன் பிறகு தான் ஊர்வசியைக் கவனித்துவிட்டு, உங்களுக்கு உடம்பு சரி இல்லையா என்றான்.

தலை வலிக்குது என்றதும்,

எங்க அம்மா எப்பவும் நிறைய மருந்து வச்சிருப்பாங்க. நான் போய் வாங்கிட்டு வரேன்.” என்றவன், ஊர்வசி மறுத்ததைப் பொருட்படுத்தாமல் அவன் வீட்டுக்கு ஓடியே இருந்தான்.

வீட்டுக்கு சென்றவன், “ஊர்வசி ஆன்டிக்கு தலை வலிக்குதாம் மருந்து தாங்க.” என அவன் அம்மாவை நச்சரிக்க… சரியாகத் தெரியாமல் அவர் எப்படி மருந்து தருவார். அதனால் அவரும் மகனோடு ஊர்வசியைப் பார்க்க வந்தார்.

வளர்மதி ஊர்வசியிடம் உடல்நலம் பற்றி விசாரிக்க… “தலைவலி தான் ஏற்கனவே மாத்திரை போட்டிருக்கேன். வேண்டாம்ன்னு சொல்ல சொல்ல கேட்காம ஓடிட்டான். நீங்க இந்நேரம் எதோ கிளாஸ் எடுப்பீங்களே…. உங்களை வேற தொந்தரவு பண்ணிடானா…” என்றதும்,

இல்லை இன்னைக்கு எதுவும் கிளாஸ் இல்லை.” என்றவரிடம், “ஸ்கூல் நேரத்துல பசங்க ஸ்கூலுக்குப் போகாம, இங்க எதுக்கு டியூஷன் வராங்க?” என்றார் ஊர்வசி கேள்வியாக.

வளர்மதி மகனை பார்த்தவர், “நான் இங்க இருக்கேன். வீட்ல அக்கா மட்டும் இருக்கா… நீ வீட்டுக்கு போ.” என்றார். விமலும் சென்று விட்டான்.

ஊர்வசி அப்போது தான் கவனித்தார், வளர்மதியின் கை கழுத்துகளில் எல்லாம் நகத்தால் பிராண்டிய காயங்கள் இருந்தது.

இதெல்லாம் என்ன காயம்?” என்றார்.

நான் ஆட்டிசிம் பசங்களுக்குக் கிளாஸ் எடுக்கிறேன். சில பசங்களுக்குத் தனிப்பட்ட கவனம் தேவை. அந்த மாதிரி பசங்களை அவங்க அப்பா அம்மாவே அழைச்சிட்டு வருவாங்க. அப்போ சில குழந்தைங்க முரட்டுத் தனமா நடந்துப்பாங்க. அதுல சில நேரம் காயம் ஆகிடும்.” என்றார்.

ஓ… நீங்க அதுக்காகப் படிச்சிருக்கீங்களா?” என்றதும், “ஆமாம், விமலுக்காக நான் கிளாஸ் போய்த் தெரிஞ்சிகிட்டேன்.” என்றதும்,

விமலுக்காகவா ஆனா அவனைப் பார்த்தா அப்படி இல்லையே…” என்றார் ஊர்வாசி ஆச்சர்யமாக…

எதோ கடவுள் அருளால… அவனுக்குச் சின்னப் பாதிப்பு தான் இருந்தது. இவனுக்காகக் கத்துகிட்டது. இப்போ மத்த குழந்தைகளுக்கு உதவுது. இப்போ இது என்னோட தொழிலும் ஆகிடுச்சு. அதுல வர்ற வருமானத்தை வச்சு தான் ரெண்டு பசங்களையும் படிக்க வைக்கிறேன். பொண்ணு பிசியோதெரபி முடிச்சிருக்கா… பயிற்சிக்காக ஒரு இடத்தில் வேலையும் பார்க்கிறா…” என்றார்.

விமலோட அப்பா அவர் இல்லையா?” என்றதும், வளர்மதி முகத்தில் ஒரு கசந்த முறுவல்.

விமலுக்கு இப்படின்னு தெரிஞ்சதும், அவர் எங்களை விட்டுட்டு போயிட்டார்.” என்றார்.

ஏன்?”

அவருக்கு ஸ்ட்ரெஸ்ஸா இருக்காம். அவரால இந்தச் சூழ்நிலையில இருக்க முடியாதாம்.”

அந்த ஸ்ட்ரெஸ் உங்களுக்கு இல்லையா? எப்படா பொறுப்புல இருந்து கழண்டுக்கலாம்னு இருப்பாங்க போலிருக்கு. எங்க வீட்ல என் புருஷன் எனக்கு உடம்பு முடியலைனதும், அப்படித்தான் கழண்டு போயிட்டார்.” என்றார் ஊர்வசி.

உங்களுக்கு உடம்புக்கு என்ன பிரச்சனை?”

ஒன்னும் இல்லைங்க… பசங்க ரெண்டு பேரும் பருவ வயசுல இருந்தாங்க. எனக்கு மெனோபாஸ் கொஞ்சம் படுத்தி வச்சது. இவரைச் சரியா கவனிக்கலைன்னு வேற ஒன்னு தேடிக்கிட்டார். இவரை எல்லாம் என்ன சொல்றது?”

எவ்வளவு சுயநலவாதிங்க இல்ல… இவங்களைப் பத்தி தெரியாமலே இவங்களோட வாழ்ந்து குழந்தையும் பெத்திருக்கோமே… நம்மைச் சொல்லணும்.” என்றார் வளர்மதி.

இப்படிப்பட்டவங்க நிறையப் பேர் இருக்காங்க. ஆனா நமக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்ததுனால இவங்களைப் பத்தி வெளிய தெரிஞ்சது. இல்லைனா தெரியாமலே போயிருக்கும்.” ஊர்வசி சொல்ல.. அது உண்மை என வளர்மதியும் ஒத்துக்கொண்டார்.

வளர்மதி விடைபெற்று செல்ல… ஊர்வசியும் அவரை அனுப்பிவிட்டு உள்ளே வந்தவர், மதியத்திற்குச் சமைக்க ஆரம்பித்தார். கைபாட்டுக்குச் சமைத்தாலும் மனம் வேறு எதையோ நினைத்துக் கொண்டு இருந்தது.

தேவநாதன் எப்போதுமே சற்று சுயநலமானவர் தான். அதற்கு ஏற்றார் போல ஊர்வசியும் கணவருக்கு எந்தக் குறையும் இல்லாமல் கவனித்து வந்தார். வாயிக்கு ருசியாகச் சமைத்து போட்டு, கணவரின் தேவைகள் அனைத்தும் சரியாகக் கவனித்து வந்தார். பிள்ளைகளின் பொறுப்பும் ஊர்வசியுடையது தான். ஆனால் பிள்ளைகள் மீது பாசம் பொங்கி வழிவதாகத் தேவநாதன் காட்டிக் கொண்டு இருந்தார்.

ராகவி கல்லூரியிலும், ஈஸ்வர் பள்ளி இறுதியிலும் இருக்கும் போது தான் வீட்டில் பிரச்சனை ஆரம்பித்தது.

தேவநாதன் அன்றும் அலுவலகத்தில் இருந்து வந்தவர், அதிக உதிரபோக்கின் காரணமாகச் சோர்வாக இருந்த மனைவியைக் கண்டுகொள்ளாமல்… அவர் இரவு உணவு செய்து வைக்கவில்லை எனச் சண்டைக்குச் செல்ல… ஊர்வசி அந்த நிலையிலும் எழுந்து கணவருக்குச் சமைத்துக் கொடுத்தார்.

ஈஸ்வர் ஆண் பிள்ளை என்பதால்… படிப்பு, நண்பர்கள் என வெளியே தான் அதிகம் இருப்பான். வீட்டில் என்ன நடக்கிறது என அவனுக்கு நிறையத் தெரியாது. ஆனால் ராகவிக்குத் தந்தை செய்வது எல்லாம் பார்த்து மனதுக்குக் கஷ்ட்டமாக இருந்தது.

தேவநாதன் இப்போது எல்லாம் வீட்டில் எதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார். வரவர இந்த வீட்ல இருக்கவே பிடிக்கலை. இங்க நிம்மதியே இல்லை எனப் புலம்ப ஆரம்பித்தார்.

தந்தை திட்டுவதையும் அம்மா அதற்கு அழுவதையும் பார்த்துப் பிள்ளைகளுக்கு வீடு நிம்மதி இல்லாத இடமாக மாறிக்கொண்டு இருந்தது.

இந்தக் குடும்பத்துல எனக்கு நிம்மதியே இல்லை.” என தேவநாதன் சொல்ல ஆரம்பித்தார். திடிரென்று கணவர் இப்படிப் பேச என்ன காரணம் என ஆராய்ந்த ஊர்வசிக்கு, அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிய வர… அவரும் கணவருடன் சண்டை பிடித்தார்.

அப்பாவும் அம்மாவுக்கும் இடையே பிரச்சனை என்று தெரியும். ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியாது. இருவரும் பிரிந்து விடுவார்களோ என்பது பிள்ளைகளுக்கு ஒரு பாதுகாப்பின்மையைக் கொடுக்க… அம்மா என்ன ஆவார்கள்? தாங்கள் என்ன ஆவோம் என்பது அவர்களுக்கு ஒரு பதட்டத்தைக் கொடுத்தது.

அதிலும் பள்ளி இறுதியில் இருந்த ஈஸ்வருக்குப் படிப்பில் கவனம் செலுத்தவே முடியவில்லை. தான் பரிட்சையில் தோற்று, வாழ்க்கையிலும் தோற்க போகிறேன் என்று அழுத போதுதான் ஊர்வசி ஒரு முடிவுக்கு வந்தார்.

சிறு வயது பிள்ளைகளுக்குக் கூடப் பெற்றவர்கள் பிரிந்தால் தெரியாது. ஆனால் பருவ வயது பிள்ளைகள் இதை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம். மனம் ஒடிந்து போவார்கள். கணவரால் பிள்ளைகளின் வாழ்க்கை தடம் புரண்டு போய் விடுமோ என்று நினைத்த ஊர்வசி, கணவரிடம் சண்டை போடுவதை நிறுத்தி விட்டார்.

நீங்க ஏன் இப்படிப் பேசுறீங்கன்னு எனக்குப் புரியாம இல்லை. என் பசங்க ஒரு நிலைக்கு வராம, நான் உங்களுக்கு விவாகரத்து கொடுக்க மாட்டேன். இந்த வீட்டுக்கு வெளியே என்ன வேணா செஞ்சுக்கோங்க. ஆனா என் பிள்ளைங்களுக்கு எதுவும் தெரியக் கூடாது. எனக்கு என் பிள்ளைகள் நிம்மதி ரொம்ப முக்கியம்.” என்றுவிட்டார்.

மனைவி உடனே விவகாரத்துக்குச் சம்மதிக்க மாட்டாள் எனத் தேவநாதனுக்கும் தெரியும். ஆனால் இனிமேல் திருட்டுத்தனமாக எதுவும் செய்ய வேண்டாம் என்ற மகிழ்ச்சியில் இருந்தவருக்கு, ஊர்வசி கணவருக்கு என்று செய்து கொண்டிருந்த அனைத்து பணிகளையும் நிறுத்திக் கொண்ட போது, அவர் ஈகோ அடி வாங்கியது.

பிள்ளைகளுக்காக மட்டும் இங்கே வந்து போக ஆரம்பித்தார். அப்போதும் ஊர்வசி அவருக்கு ஒரு காபிக் கூடப் போட்டுக் கொடுக்க மாட்டார்.

தேவநாதன் அவர் வரும் போது வெளியில் இருந்து உணவு வாங்கிப் பிள்ளைகளுடன் சேர்ந்து உண்பார். எதோ தங்களுக்காக அப்பா வாங்கியது போலப் பிள்ளைகளும் நினைத்துக் கொள்வார்கள்.

முன்பே கணவனும் மனைவியும் காதலில் கசிந்துருகி பிள்ளைகள் பார்த்தது இல்லை. தேவநாதன் மனைவியிடம் அதிகாரம் தான் செலுத்துவார். அதனால் பிள்ளைகளுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்து பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

ஈஸ்வர் பள்ளி படிப்பு முடித்ததும், அவனை மங்களூரில் இருக்கும் பிரபல கல்லூரியில் சேர்த்துவிட… அவனுக்கு வீட்டில் நடப்பது எதுவுமே தெரியாமல் போனது.

Advertisement