Advertisement

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம், விமலின் தோழி தீப்தியும் அவள் அப்பாவும் இவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.

வார இறுதியில் மகள் இங்கயே இருக்க…. சந்தேகம் வந்து அவர் மகளிடம் விசாரிக்க…. தீப்தி விமலை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்ல… விமலைப் பற்றித் தெரிந்ததால்… இது நடக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்டு செல்ல வந்திருந்தார்.

விமலையும் கூப்பிடுங்க நான் அவன்கிட்டயும் பேசணும்.” என அவர் குதிக்க…

அப்பா நான் விமல்கிட்ட லவ் பண்றேன்னு சொன்னதே இல்லை. விமலும் சொன்னது இல்லைப்பா.” என்றாள் தீப்தி.

அவனுக்கு எமொஷினல் ஹாண்டில் பண்ண தெரியாது. நீங்க கோபபட்டா பதிலுக்கு அவனும் கோபப்படுவான். உங்களுக்கு என்ன பேசணுமோ எங்ககிட்ட பேசுங்க.” என பாவனி சொல்ல…

நீங்களே சொல்றீங்களே… எமொஷினல் ஹாண்டில் பண்ணத் தெரியாதுன்னு, அவன் என்னைக்கு என் பொண்ணு மேல எதைத் தூக்கி அடிப்பான்னு என்னைப் பயந்திட்டே இருக்கச் சொல்றீங்களா?” என அவர் கேட்க….

அவ்வளவு வயலன்ஸா அவன் போக மாட்டான் சார். அந்த அளவுக்கு யாரு அவனைத் தூண்டி விடப் போறாங்க சொல்லுங்க. அவன் எல்லோரையும் போல நார்மல் தான்.” என்றான் ஈஸ்வர்.

இருந்தாலும் என்னால பயந்திட்டே இருக்க முடியாது சார்.” என்றார் தீப்தியின் தந்தை மூர்த்தி.

நான் கொஞ்சம் தீப்திகிட்ட பேசணும்.” என்ற ஈஸ்வர்,

உனக்கு விமல்கிட்ட என்ன பிடிக்கும்.” எனக் கேட்க…

அவன் உண்மையா இருக்கிறது தான். அவனுக்குப் பொய்யா எதுவும் சொல்ல வராது. அப்படி இருக்கிறவனோட அன்பும் உண்மைத்தானே இருக்கும். எனக்கு அவனோட உண்மையான அன்பு தான் வேண்டும்.” என்றாள்.

சின்னப் பெண்ணாக இருந்தாலும், என்ன ஒரு தெளிவு என ஈஸ்வர் பாவனி இருவருமே வியந்தனர்.

அதோட எனக்கு அவனை ஸ்கூல்ல இருந்து தெரியும். சில நேரம் ஹைப்பரா இருந்தாலும், அவனுக்கு க்ளோசா இருக்கிறவங்க சொன்னா கேட்பான். எனக்கு அவனை ஹேண்டில் பண்ண தெரியும்.” என தீப்தி நம்பிக்கையாகச் சொல்ல…

தீப்தி சொல்றதை தான் சார் நானும் சொல்றேன், விமலை எனக்கு அஞ்சு வருஷமா தெரியும். அவன் கண்ட்ரோல் மீறி போனதே இல்லை.” என்ற ஈஸ்வர், விமலைப் பற்றி அவன் வேலை மற்றும் அவனுக்கு இருக்கும் சொத்துக்கள் விவரம் எல்லாம் சொன்னவன், “அவனுக்குக் கல்யாணம் ஆனதும் எங்க கடமை முடிஞ்சுதுன்னு நாங்க அவனை விட்டுட மாட்டோம். அவன் எப்பவும் எங்க பார்வையில தான் இருப்பான்.” என எல்லாம் விளக்கி சொன்னான்.

நானும் தான் படிச்சு நல்ல வேலைக்குப் போவேனே…. என்னால விமலோட சந்தோஷமா இருக்க முடியும்.” என்றாள் தீப்தி நம்பிக்கையாக. யார் என்ன சொன்ன போதிலும் மூர்த்திச் சமாதானம் ஆகவில்லை.

எனக்கு உங்க நிலைமை புரியுது சார். உங்க பெண்ணைப் பத்தி நீங்க எத்தனையோ கனவுகள் வச்சிருப்பீங்க. என் தம்பியால உங்க பொண்ணுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது, அதனால நீங்க அதை நினைச்சு பயப்பட வேண்டாம். உங்க பெண்ணுக்கு புரிய வைங்க. வீணா என் தம்பிகிட்ட பேசி அவனை நோகடிக்க நான் விடமாட்டேன்.” என்றாள் பாவனியும் தெளிவாக.

முடிவு நீங்களும் உங்க பெண்ணும் தான் எடுக்கணும். அதை உடனே எடுக்கனும்னு இல்லை. இப்போ அவங்களுக்குக் கல்யாணம் பண்ற வயசும் இல்லை.” என்ற ஈஸ்வர்,

நீயும் நல்லா யோசிச்சுக்கோ தீப்தி. ஒன்னும் அவசரமில்லை… நிறைய நேரம் இருக்கு.” என்றதும், தீப்தியும் மூர்த்தியும் விடைபெற்று சென்றனர்.

இரண்டு வாரங்கள் சென்று விமல் தான் புலம்பிக் கொண்டு இருந்தான்.” தீப்தி இப்போ எல்லாம் வர்றதே இல்லை. ஐ மிஸ் ஹேர்.” என்று.

பையனுங்க மாதிரி பொண்ணுங்க நினைச்ச இடத்துக்குப் போயிட்டு வர முடியாது. அவங்க வீட்ல எதாவது சொல்லி இருக்கலாம். அவளை நீயும் வர சொல்லி தொந்தரவு பண்ணாத. அவளுக்கு வரணும்னா அவளே வருவா.” என்றாள் பாவனி தம்பியிடம். அதன் பிறகு விமலும் வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.

போன முறை குழந்தை உண்டாகி இருந்த போது இருந்த மனக்குழப்பம் இப்போது பாவனிக்கு இல்லை. தன் பிறந்த வீட்டினரை பற்றிக் கவலையும் இல்லை. அதனால் இந்த முறை தனது குழந்தையைப் பற்றி மட்டுமே அவளது யோசனைகள் இருந்தது.

பிரசவ நாட்களை நெருங்க நெருங்க அவளுக்கு இரவில் தாமதமாகத்தான் உறக்கம் வரும். அவளும் உறங்காமல் ஈஸ்வரையும் போட்டு உறங்க விடாமல் படுத்திக்கொண்டு இருந்தாள். அப்போது தான் கணவனும் மனைவியும் மனம் விட்டு அவர்கள் சிறு வயது நாட்களைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டு இருப்பார்கள்.

ஈஸ்வர் அப்போதுதான் அவளிடம் மனம் திறந்து அவன் தந்தையைப் பற்றிப் பகிர்ந்து கொண்டது எல்லாம்.

ஏன் ஈஸ்வர் உங்க அப்பா இறந்ததுக்குக் கூடப் போகலை? அவ்வளவு கோபமா அவர் மேல.”

கோபத்தை விட வருத்தம் தான் அதிகம். இந்த மாதிரி தப்பு செய்யற ஆம்பிளைங்களுக்கு என்ன தைரியம்னா… எப்படியும் நம்ம குடும்பத்துல நம்மைச் சேர்த்துக்குவாங்கன்னு நம்பிக்கைதான். இனி ஒருத்தருக்கு அந்தத் தைரியம் வரக் கூடாதுன்னு தான், நான் அவரை மொத்தமா தள்ளி வச்சேன்.”

எங்க அப்பாவுக்கும் அது புரிஞ்சது. அதோட சுத்தி இருக்கிறவனுக்கும் புரிஞ்சு இருக்கும் தான… எங்க அம்மா அனுபவிச்ச வேதனையும் வலியும் அவருக்கும் கிடைக்கனும்னு தான் அப்படிச் செஞ்சேன்.”

எங்க அம்மாவை எதோ இவருக்கு வேலைக்காரி போல நடத்தி, துரோகம் செஞ்சு…. அவர் பண்ணது கொஞ்ச நஞ்ச அட்டகாசமில்லை…”

சரி விடுங்க டென்ஷன் ஆகாதீங்க.” என்றவள் கணவனை ஆறுதலாக அனைத்துக் கொண்டாள்.

அதன் பின் நாட்கள் நத்தை வேகத்தில் சென்றாலும், ஒரு நன்நாளில் ஈஸ்வர் பாவனி தம்பதிகளுக்கு மகன் பிறந்திருக்க…. மொத்த குடும்பமும் கொண்டாடியது.

ராகவி வருவதற்காக மூன்று மாதம் சென்றுதான் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாவை வைத்தனர். திருமண நேரத்தில் பாவனிக்குச் சரியாகச் சீர்வரிசை செய்யவில்லை… இப்போது விமலின் தொழிலும் நன்றாக நடக்க… வளர்மதி இப்போது மகளுக்கு மேலும் சில நகைகள் வாங்கிக் கொடுத்தார். பாவனியிடம் சொன்னால் வேண்டாம் என்பாள் என்பதால்… அவரும் ஊர்வசியும் மட்டும் சென்று வாங்கி வந்தனர்.

விழா சிறப்பாக நடக்க… குழந்தைக்குக் கார்த்திகேயன் எனப் பெயரிட்டனர். மகனும் வந்த பிறகு ஈஸ்வருக்கும் பாவனிக்கும் இன்னும் கடமைகள அதிகமாகி இருக்க… அவர்களுக்கான நேரம் இல்லாமல் போனது. 

நான்கு வருடங்களுக்குப் பிறகு….

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்….. சற்று நேரம் உறங்கலாம் என்று பார்த்தால்…. கார்னிகா வந்து பாவனியை எழுப்பினாள்.

அம்மா நானும் கார்த்திக்கும் மாமா வீட்டுக்கு போறோம். டிரஸ் எடுத்து கொடுங்க.” என்றாள்.

ஏன் டி உன் மாமா பாரீன்லையா இருக்கான். பக்கத்து தெருவுல தான இருக்கான். இப்போ அவசரமா அங்க எதுக்குப் போகணும்?” என பாவனி கேட்க…

அத்தை தான் கூப்பிட்டாங்க.” என்றாள் கார்னிகா.

வார கடைசியில் தான் அவளே வீட்ல இருப்பா…. உங்களை எதுக்கு அவளே இழுத்து வச்சுக்கிறா தெரியலை.” என்றதும்,

அப்பா உங்களை இன்னைக்கு வெளிய கூட்டிட்டு போறேன்.” என ஈஸ்வர் எழுந்து கொண்டே சொல்ல…. மகளும் சந்தோஷமாகச் சரி என்றாள்.

விமலுக்கும் தீப்திக்கும் திருமணமாகி பக்கத்துத் தெருவில் தான் ஒரு அபார்ட்மெண்டில் இருக்கிறார்கள். அங்கே மின்தூக்கியும் இருப்பதால்… வளர்மதிக்கும் ஏறி இறங்கும் சிரமம் இல்லை. விமல் உதவிக்கு என்று ஆள் வைத்திருக்க…. மருமகளும் வேலைக்குச் செல்வதால்… வளர்மதியும் வீட்டை பார்த்துக் கொண்டு இருந்து விட்டார். 

சில பிரபலமான கடைகளுக்கும் விமல் தான் கேக் செய்து அனுப்புகிறான். அதனால் நல்ல வருமானம் தான். 

தீப்தியின் தந்தை அவ்வளவு சுலபத்தில் திருமணதிற்கு ஒத்துகொள்ளவில்லை. ஆனால் ஈஸ்வரும் பாவனியும் அவரை நெருக்காமல்…. முடிவை அவரிடமே விட்டு விட்டதால்… சற்று யோசித்துச் செயல்பட்டார்.

முதலில் விமலிடம் வேலை பார்க்கும் ஒரு நபரையே அவருக்கு உளவு பார்க்க வைத்திருந்தார். அவர் மூலம் விமலின் நடவடிக்கைகளைத் தெரிந்து கொண்டார். பிறகு அவருக்குத் தெரிந்த மருத்துவர்கள், நண்பர்கள் என நிறையப் பேரிடம் விசாரித்தார்.

எத்தனை பேர் கல்யாணத்துக்குப் பிறகு பொண்டாட்டியை சந்தேகப்பட்டுக் கொடுமை படுத்துறாங்க….சிலர் குடிச்சிட்டு வந்து அடிக்கிறாங்க. இப்படிச் சைக்கோ தனமா நடந்துக்கிறவங்க வெளிய தெரியாம எவ்வளவு பேர் இருக்காங்க.

ஆட்டிசமா இருந்தாலும் எத்தனையோ பேர் கல்யாணம் பண்ணிட்டு சாதாரணமா வாழுறவங்க எல்லாம் இருக்காங்க. அதனால இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று புரிந்ததற்குப் பிறகு அவர் ஒத்துக் கொண்டார். ஆறு மாதங்களுக்கு முன்பு தான் அவர்கள் திருமணம் முடிந்திருந்தது.

வெகு நாட்கள் கழித்து ஈஸ்வரின் குடும்பம் அன்று வெளியே சென்றிருந்தனர். குழந்தைகள் என்று ஆகிவிட்ட பிறகு, கணவன் மனைவிக்கு இடையே ஒரு இடைவெளி ஏற்படத்தான் செய்கிறது. ஆண்கள் வேலை, சம்பாத்தியம் என்று இருக்க… பெண்கள் குழந்தை வளர்ப்பில் மூழ்கி போய் வேறு எதையும் சிந்திக்க நேரம் இருப்பது இல்லை.

எதோ ஈஸ்வர் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால்…. அவன் அருகில் இருக்கிறான் என்பதே பெரிய அறுதல் தான்.

ரெண்டு குழந்தைங்க வந்ததும் நமக்கே நமக்கான நேரம் குறைஞ்சு போயிடுச்சு இல்ல பாவனி. இனி நமக்காகவும் நாம வாழனும்.” என்றான் ஈஸ்வர்.

அடுத்த மாதம் மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிங்கப்பூர் சென்று வந்தான். உடன் ஊர்வசியும் தான். இரண்டு நாட்கள் அக்கா வீட்டில் எல்லோரோடும் சேர்ந்து ஊர் சுற்றியவன், பிள்ளைகளை ஊர்வசியின் பொறுப்பில் விட்டுவிட்டு, மனைவியை மட்டும் அழைத்துக் கொண்டு, இரண்டு நாட்கள் மலேஷியா சென்று வந்தான்.

என்னை எதுக்குக் கூடக் கூட்டிட்டு வந்தான்னு எனக்கு இப்போத்தான் புரியுது.” என்றார் ஊர்வசி மகளிடம்.

எதோ இப்பவாவது வந்தானே…” என்றாள் ராகவி.

மேலும் ஒரு வாரம் அங்கிருந்துவிட்டு ஊர்வசியை மகள் வீட்டில் விட்டுவிட்டு இவர்கள் மட்டும் ஊர் திரும்பினர்.

கார்த்திக் பள்ளி செல்ல ஆரம்பித்ததால் கணவன் மனைவி இருவருக்கும் மீண்டும் தனிமை கிடைத்தது. அது இனிமையாகவும் சென்றது.

நான் கல்யாணமே வேண்டாம்னு இருந்தேன். என்னை உன் கூட உள்ள இழுத்துவிட்டு, அதோட விட்டியா….ஒரு குழந்தை போதும்னு நினைச்சா… அப்புறம் அது ரெண்டாச்சு…. இப்போ மூணாச்சுன்னு வை…. நான் தாங்க மாட்டேன். நான் என் வேலையைப் பார்க்க போறேன் பா…” என ஈஸ்வர் எழுந்துகொள்ள…

அவனை இழுத்து தன் அருகில் உட்கார வைத்த பாவனி, “நான்தான் ஆபேரஷன் பண்ணிகிட்டேனே… அதனால இன்னொன்னு எல்லாம் வர வாய்ப்பு இல்லை…. பயப்படாதீங்க.” என்றாள்.

ஈஸ்வர் அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொள்ள… அவன் சிகையைக் கோதிக் கொடுத்தவள், “எப்படி ஈஸ்வர் நான் கேட்டதும் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டீங்க.” என்றதும்,

அது தான் இப்போ வரை தெரியலை…. உன் தம்பி அந்த நல்லவன் இருக்கானே அவன் பண்ண வேலை. முதல்ல அவன் வந்தான், அப்புறம் நீ வந்த.” என ஈஸ்வர் கிண்டலாகச் சொல்ல…

வீட்ல எலி தொல்லைக்குப் பூனை வளர்த்து, பிறகு அதுக்குப் பாலுக்காக மாடு வளர்த்து, அதைப் பார்த்துக்க ஒரு பெண்ணைக் கூட்டி வந்து, கடைசியில அவளையே கல்யாணம் பண்ண சாமியார் கதை தான் நியாபகம் வருது.” என பாவனி சிரிக்க…

ஹேய்…. ரொம்பப் பேசாத…. நான் எப்படியும் கல்யாணம் பண்ணி இருப்பேன் தான். ஆனா நீ கேட்டதுனால தான் உன்னைக் கல்யாணம் பண்ணிகிறது பத்தி யோசிச்சேன்.” என்றான்.

நான் கேட்கலைனா வேற யாரையாவது கல்யாணம் பண்ணி இருப்பீங்க. சரி போங்க, இப்ப கூட ஒன்னும் லேட் இல்லை. வேற பொண்ணு பாருங்க.” என்றவள், அவனை மடியில் இருந்து தள்ளிவிட…

ஹே தள்ளாத டி…. நீ என்னைக் கல்யாணத்துக்குக் கேட்கலைனா… நான் உன்னைக் கேட்டிருப்பேனா இருக்கும். நீதான் அதுக்கு டைம் கொடுக்கலைன்னு சொல்ல வந்தேன்.” என்றான்.

எப்போ சார் உங்களுக்கா தோணி இருக்கும்.” என்றதும்,

அது தெரியலை…. உன்கிட்ட தான் மாட்டிக்கனும்னு விதி இருந்தா… அது எப்போ வேணா நடந்திருக்கும்.” என்றான்.

ஏன் உங்க அத்தை பொண்ணு… பக்கத்துல தான இருந்தா… பார்த்திருக்க வேண்டியது தான….”

தெரியலை… ஒருவேளை பக்கத்துலேயே இருந்ததுனால தோனலையோ என்னவோ….”

இபோதான் தள்ளி போயிட்டாளே….”

அவ புருஷன் நல்ல விவரம். இவளோட மல்லு கட்ட முடியலை… புது அபார்ட்மெண்ட் வாங்கி முடியுற வரை பொறுமையா இருந்தவன், எங்க அப்பா அம்மா வந்து போக வீடு வேணும்னு சொல்லி அவளைத் தனியா கூட்டிட்டு போயிட்டான். அத்தை இப்போ நிம்மதியா தான் இருக்காங்க.”

உங்க அத்தை இருக்காங்க. ஆனா அந்தப் பாட்டி என் காது படவே சொல்லுது. அவங்க பேத்திக்கு என்னைப் போலத் திறமை இல்லைன்னு.”

ஆமாம் அவங்க பேத்தி கேட்டதும், நான் சரின்னு சொல்லி இருப்பேனா என்ன?”

எனக்கும் உன்னைப் பிடிச்சிருந்தது பாவனி. இல்லைனா நீயா கேட்டாலும் ஒத்திருப்பேனா என்ன?”

பாவனிக்கும் இதெல்லாம் தெரியும் தான். ஆனால் கணவன் வாயில் இருந்து கேட்கும் போது தனி மகிழ்ச்சி தானே….

சரி கேட்க வேண்டியது எல்லாம் கேட்டுட்ட… இப்போவாவது நான் வேலை பார்க்க போகலாமா?” என ஈஸ்வர் கேட்க….

ஒரு நிமிஷம்…” என்ற பாவனி, அவன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட….

தேங்க்ஸ் என்றவன் எழுந்துகொள்ள… பதிலுக்கு முத்தம் கொடுப்போம்னு தோணுதா பாரு என அவள் நினைக்கும் போதே… கும்மென்ற அவள் கன்னத்தில் அவன் முத்தமிட…. பாவனியின் மனம் குளிர்ந்தது.

திருமணமான புதிதிலேயே கணவன் மனைவிக்குள் வருவது மட்டும் தான் காதல் என்று இல்லை. சில தம்பதிகளுக்குத் திருமணமாகி குழந்தைகள் எல்லாம் பெற்று, வளர்த்த பிறகு தான் அவர்களுக்கான நேரம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும் பட்சத்தில்… அந்த இடைவெளியை கூடக் கடந்து விடலாம்.

ஈஸ்வருக்கும் பாவனிக்கும் திருமணமான புதிதில் வேறு கடமைகள் இருந்ததால்… அதோடு குழந்தைகள் குடும்பம் என்றே நேரம் சென்றதால்… அவர்கள் வாழ்க்கையை இப்போதுதான் அனுபவித்து வாழ ஆரம்பித்தனர். இனியும் நல்லபடியாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில் நாம். 

 

Advertisement