Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 20

பாவனி வேலைக்குச் சென்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகி இருக்கும். வீட்டில் இருந்ததாலோ என்னவோ… எடை கூடி அவளின் கொழுக் மொழுக் கன்னங்களும் திரும்பி இருக்க… இப்போது ஈஸ்வருக்குப் பார்க்க மனைவியும் மகளும் ஒரே மாதிரி தெரிந்தனர்.

மதியம் பள்ளியில் இருந்து வந்த மகளுக்கு உணவு கொடுத்து விளையாட விட்டுவிட்டு கணவனும் மனைவியும் உண்டு கொண்டிருந்தனர். பாவனி மூன்றாம் முறை சாதம் வைத்து தயிர் போட்டுக் கொண்டு உண்ண….

போற போக்கை பார்த்தா வீட்டு வாசலை இடிச்சிட்டுப் பெரிசா கட்டனும் போல இருக்கே…” என ஈஸ்வர் மனைவியைப் பார்த்து கிண்டலாகச் சொல்ல…

வர வர ரொம்பச் சாப்பிடுறேன் இல்ல….வீட்ல இருக்கிறதுனால ரொம்பச் சாப்பிடுறேனோ…” என்றவள், “ஆனா எனக்கு இப்போ அதிகம் பசிக்குது.” என்றதும்,

ஹே…. நல்லா சாப்பிடு. உனக்காக நான் வாசலை மட்டும் இல்ல…. வீட்டை கூட இன்னும் பெரிசா கட்டுவேன்.” என்றான்.

என்ன ஒரு தாராள மனசு… ஒருவேளை எனக்குத் தைராய்ட் வந்திருக்குமோ… எதனால வெயிட் போடுது?”

குழம்பு குழம்பு, ரசம் ரசம், தயிர் தயிர்ன்னு போனா வெயிட் போடாம.”

நான் ஒன்னும் அவ்வளவு எல்லாம் சாப்பிடுறது இல்லை.” என்றவள், “எதுக்கும் செக் பண்ணனும். எனக்கு இந்த மாசம் பீரியட்சும் வரலை… ஒருவேளை தைராய்டா இருக்கலாம்.” என்றதும்,

என்னது பீரியட்ஸ் வரலையா?” என அதிர்ச்சியான ஈஸ்வர், “அப்போ குழந்தை தான்.” என்றான்.

நீங்க தான என் பொண்ணு மட்டும் போதும்னு சொன்னீங்க.”

சொன்னேன்தான் ஆனா அதுக்காகச் சும்மாவா இருந்தேன்.” என்றதும்,

உங்களைப் போய் நம்பினேன் பாருங்க.” என்றவள், “நாளைக்குக் காலையில முதல்ல செக் பண்ணி பார்க்கணும்.” எனச் சொல்லிவிட்டு உண்ண,

முதல் பிரசவத்தில் அவள் எவ்வளவு சங்கடப்பட்டுப் போனாள் என்பது ஈஸ்வருக்குத் தெரியும். அதனால் அவள் என்ன எண்ணத்தில் இருக்கிறாள் என்று தெரிந்துகொள்ள….

குழந்தையா இருந்தா என்ன டி பண்ணுவ?” என்றான்.

என்ன பண்ணுவாங்க? பெத்துக்கத் தான் வேணும். ஆனா என்ன சந்தோஷம்னா… அப்பாவும் பெண்ணும் சேர்ந்திட்டு என்ன ஆட்டம் போட்டீங்க, இனிமே எனக்கும் ஒரு ஆள் வருது.”

மனைவி பேசியதை கேட்டதும் ஈஸ்வரின் மனம் நிம்மதியுற… “உனக்கு ஒகே தானே பாவனி, நான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கலாம் இல்லையா?” என,

நமக்குன்னு இருக்கிறது நமக்குக் கிடைச்சு தானே ஆகும். அதுவும் இது சந்தோஷமான விஷயம் தானே… நமக்கு ஒன்னும் அப்படி வயசாகிடலையே…” என்றதும்,

உனக்கு ஓகேன்னா எனக்கு ஒகே….” என்றான் ஈஸ்வர்.

மறுநாள் மருத்துவமனை செல்லலாம் என பாவனி இருக்க… அன்று மாலையே ஈஸ்வர் பாவனியை மருத்துவமனை அழைத்துச் சென்று வந்தான். மருத்துவரும் குழந்தை என உறுதி செய்துவிட… இருவரும் வீடு வந்தனர்.

இரவு படுக்கையில் ஈஸ்வர் எதோ யோசனையிலேயே இருந்தான். 

என்ன யோசிக்கிறீங்க?” 

இப்போ இன்னொரு குழந்தை வரப் போகுதே… அதுதான் எப்படி வளர்க்க போறோம்னு யோசிச்சு பார்க்கிறேன்.”

நம்ம வீட்ல தான் நாம இத்தனை பேர் இருக்கோமே. அதோட நான் இனி வேலைக்குப் போறதாவும் இல்லை. அதனால நல்லபடியாவே வளர்க்கலாம் கவலைபடாதீங்க.” என்றாள் பாவனி.

நீயேதான் இப்போ வேலைக்குப் போகலைன்னு சொல்ற… நாளைக்கு என்னை எதுவும் குறை சொல்லக் கூடாது பாவனி.”

இதுல உங்களைக் குறை சொல்ல ஒன்னும் இல்லை ஈஸ்வர். நான் நல்லா யோசிச்சு தான் முடிவெடுத்தேன்.”

அப்ப சரி. ஆனா உனக்கு எப்போ வேலைக்கு போக விருப்பமோ நீ அப்ப போகலாம். உனக்கே உனக்குன்னு ஒரு கிளினிக் கூட வச்சிடலாம்.”

““அதுக்கு இப்போ ஒன்னும் அவசரம் இல்லை ஈஸ்வர். நான் பணத்துக்காக வேலைக்கு போற அவசியம் இல்லை. ஆனா வசதி இல்லாத  குழந்தைகளுக்கு மட்டும் இலவசமா செய்யலாம்னு இருக்கேன். ஆனா அதுவும் இப்போ இல்லை. பசங்க பெரிசாகட்டும்.”

“உன் இஷ்டம் பாவனி.”

மறுநாள் ஈஸ்வர் அவன் அம்மாவை அழைத்துப் பாவனி உண்டாகி இருப்பதைச் சொல்லிவிட… நான் உடனே கிளம்பி வரட்டுமா என ஊர்வசி கேட்க….

வேண்டாம் இப்போ அவ நல்லாத்தான் இருக்கா… அடுத்தக் குழந்தையும் பிறந்திட்டா… கொஞ்ச வருஷம் உங்களால எங்கையும் போக முடியாது. நீங்க இன்னும் கொஞ்ச நாள் அக்கா வீட்ல இருந்திட்டே வாங்க.” என்றான்.

பாவனியும் தனக்கு ஒன்றும் இல்லை… தான் நலமாக இருப்பதாகச் சொல்ல… ஊர்வசியும் சரி என்றார்.

மகளைக் காலையில் குளிக்க வைத்து ஈஸ்வரே பள்ளிக்கு தயார் செய்து விடுவான். மகளுக்குக் காலை உணவு கொடுத்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு பாவனி நிதானமாக மதிய சமையல் செய்வாள். நடு நடுவே கடைக்கும் சென்று பார்த்துக்கொள்வாள். விமலின் கேக் கடையும் நன்றாகச் சென்று கொண்டிருந்தது. நிறையப் பிறந்தநாள் கேக் ஆர்டர்களும் வருவதால்… விமல் அதிகாலையில் இருந்தே கேக் தயாரிப்பில் தான் இருப்பான்.

மேலும் ஒரு மாதம் சென்றிருக்க… மூன்று மாதங்கள் மகள் வீட்டில் இருந்துவிட்டு ஊர்வசி ஊர் திரும்பினார். அவரைப் பார்த்ததும் கார்னிகா அவரிடம் தொத்திக் கொண்டாள். இப்போது பாவனி வேலைக்குச் செல்லாததால்… இரவு வேலையும் ஊர்வசியே பேத்தியை தன்னுடன் உறங்க வைத்துக் கொண்டார்.

ஒருநாள் நண்பகலில் ராஜீவ் வந்திருந்தார். இப்போது அவரது உடல்நலம் பரவாயில்லை. பாவனி அவரது உடல்நலத்தைப் பற்றிக் கூட விசாரிக்கவில்லை. அவர் வந்த போது ஈஸ்வர் வீட்டில் இல்லை. வளர்மதியும் இங்கே மகள் வீட்டில் தான் இருந்தார்.

பாவனி இப்போதும் அவரை மதிக்காமல் தான் இருந்தாள். ராஜீவ் கேட்ட கேள்விகளுக்குக் கூடப் பாவனி பதில் சொல்லவில்லை. வளர்மதி தான் சொன்னார்.

உங்க மகன் செஞ்ச கேக்.” என ஊர்வசி தான் அவரை உண்ண குடிக்க வைத்து உபசரித்தார்.

இன்னும் என்ன பாவனி, நான்தான் என் சொத்தை கூட விமலுக்குத் தானே கொடுத்திருக்கேன். உனக்குக் கூடக் கொடுக்கத் தயாரா தான் இருந்தேன். மாப்பிள்ளை தான் வேண்டாம்னு சொல்லிட்டாரு.” என ராஜீவ் பேசி வைக்க….

சொத்தை கொடுத்திட்டா… நீங்க பண்ணது எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா?”

இந்த அளவுக்கு விமலை உருவாக்கி விட்டது அம்மா…. இப்போ ஈஸ்வர். நீங்க எவ்வளவு சொத்துக் கொடுத்தாலும் அவங்களுக்கு ஈடாகாது.”

விமல் கடவுளோட குழந்தை. அதுதான் அவனுக்கு எப்பவும் யாராவது துணை இருக்காங்க. அவர் எப்படி அவனைப் பார்த்துக்கிறார் தெரியுமா?”

வீட்ல இடம் கொடுத்து, அவர் கடையிலேயும் பாதியைக் கொடுத்து, அவனுக்கு ஒரு சின்னப் பிரச்சனையும் வந்திடக் கூடாதுன்னு தான், அவனை அவர் கண் பார்வையிலேயே வச்சிருக்கார். ஆனா அவர்கிட்ட போய் இதைச் சொன்னா… நான் என்ன பண்ணேன், எல்லாம் உன் தம்பியோட உழைப்புன்னு சொல்லுவார்.”

நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. சொத்தை நீங்க தாரை வார்த்ததாவா? உங்களுக்கு ஈஸ்வரை பத்தி தெரியாது. அவர் விமலுக்காக என்ன வேணா செய்வார். இந்தச் சொத்தை எப்படியும் உங்ககிட்ட இருந்து வாங்கி இருப்பார்.”

உங்க சொத்து தானே… முடிஞ்சா அதை ஈஸ்வர்கிட்ட இருந்து திரும்ப வாங்கிடுங்க பார்க்கலாம்.” பாவனி சவாலாகச் சொல்ல….

மாப்பிள்ளை வர்ற வரை எனக்குச் சொத்து கொடுக்கிற எண்ணம் இல்லை தான். ஆனா நான் கொடுத்தது கொடுத்தது தான். எனக்கு உடம்பு முடியாம இருந்த போதுதான், எனக்கு உங்க அம்மாவோட கஷ்ட்டம் புரிஞ்சது.”

விமலுக்கு நான் எதுவுமே செய்யலை… எதோ இதாவது நான் செஞ்சதா இருக்கட்டும்.” என ராஜீவ் சொல்ல…

சரி விடுங்க, முடிஞ்சதை பத்தி ஏன் பேசணும்?” என்ற ஊர்வசி, “உங்க மகன் என்ன அழகா கேக் செய்வான் தெரியுமா? வாங்க போய்ப் பார்ப்போம்.” என ராஜீவை ஊர்வசி அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றுவிட… அவர்களுடன் வளர்மதியும் சென்றார்.

மதிய உணவை உண்டுவிட்டு பாவனி சென்று படுத்துவிட… மூன்று மணி போல வந்த மகனுக்கு ஊர்வசி தான் உணவு பரிமாறினார்.

பாவனி சாப்பிட்டாளா?” என்றவன், “சாப்பிட்டாளான்னு கேட்கிறேனே… இப்போ அவ இன்னொரு கோட்டா கொடுக்கிற நேரம் ஆச்சே…” என்றதும்,

அவளே வெயிட் போட்டுட கூடாதுன்னு பயந்து பயந்து தான் சாப்பிடுறா… நீ அவளை எதுவும் சொல்லாதே.” என்றதும்,

ஹப்பா… மருமகளுக்கு என்னமா வக்காலத்து வாங்கிறீங்க மா…” என்றபடி ஈஸ்வர் உண்ண…

நான் என்ன அவளுக்கு வக்காலத்து வாங்கிறது., அவ இன்னைக்கு அவங்க அப்பாகிட்ட உனக்குப் பரிஞ்சிகிட்டு எவ்வளவு எகிறினா தெரியுமா?” என்றதும்,

அவங்க அப்பாகிட்ட அவ எப்பவுமே அப்படித்தான் பேசுவா.” என்றவன், என்ன நடந்தது எனக் கேட்க…

முதல்ல நீ சொல்லு… அவங்க அப்பா விமலுக்குச் சொத்துக் கொடுக்கலைனா நீ என்ன பண்ணி இருப்ப?” என்று கேட்க….

நான் அவர் கொடுக்கலைனா… அத்தையை விட்டு அவர் மேல கேஸ் கொடுக்கிறது போலச் செய்யணும்னு இருந்தேன்.” என்றான்.

உன் பொண்டாட்டிக்கு தான் டா உன்னை நல்லா தெரியுது.” என்றவர், பாவனி சொன்னதைச் சொல்ல….ஈஸ்வருக்கு முகம் கொள்ளா புன்னகை தான்.

என் பொண்டாட்டி வாயில இருந்து எப்பவோ ஒருமுறை தான் இப்படி முத்து எல்லாம் உதுறும்.” என்றான்.

விட்டா பேசி பேசி… அந்த மனுஷன் கொடுத்த சொத்தையும் திருப்பிக் கேட்க வச்சிடுவா போலிருக்கு. எதுக்கும் உன் பொண்டாட்டியை கொஞ்சம் கம்மியாவே முத்தை சிதற விடச் சொல்லுப்பா….” என்றதும், ஈஸ்வர் வாய் விட்டுச் சிரித்தான்.

உண்டுவிட்டு மனைவியைப் பார்க்க சென்றவன், அவளை லேசாகத் தட்டி எழுப்பி, “ஒழுங்கா சாப்பிட்டியா டி.” என்றதும்,

உங்க மாமனார் வந்து டென்ஷன் பண்ணிட்டார். அதனால சரியாவே சாப்பிடலை… இப்போ பசிக்குது.” என்றதும், மீண்டும் சமையல் அறை சென்றவன், தட்டில் சோறு போட்டு எடுத்துச் சென்றான். ஊர்வசி அதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மனைவியிடம் தட்டைக் கொடுத்தவன், கட்டிலில் அவள் அருகே உட்கார்ந்து கொண்டு, “நான் இப்போ தான் பாவனி உங்க வாழ்க்கையில வந்தேன். நான் இல்லைனாலும், உன் அளவுக்கு நீ விமலை நல்லாதான் பார்த்திட்டு இருந்த… ஆனா இப்போ எல்லாம் என்னாலதாங்கிற மாதிரி…. எனக்கே எல்லா நல்ல போரையும் கொடுத்திடுற.” என்றான்.

என் தம்பிக்கு நான் செய்யுறது பெரிய விஷயமே இல்லை ஈஸ்வர். ஆனா நீங்க செய்யுறது பெரிய விஷயம் தான். நீங்க செய்யுறதுக்கு முன்னாடி நான் செஞ்சது எல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு தான் எனக்குத் தோணுது.” என்றாள் பாவனியும் மனதை மறைக்காமல்.

நான்தான் சொன்னேனே நம்ம குடும்பத்துக்குள்ள செஞ்சுக்கிறது ஒண்ணுமே இல்லைன்னு. இனி அப்படிச் சொல்லாத… என்னைப் பிரிச்சு வெளி ஆளா காட்டுகிற மாதிரி இருக்கு.” என்றதும்,

சரிப்பா இனிமே உங்களைப் புகழ மாட்டேன். வேணா நல்லா திட்டுறேன்.” என பாவனி புன்னகையுடன் சொல்ல… ஈஸ்வரும் சிரித்து விட்டான்.

ஊர்வசி மகளுக்கு அழைத்தவர், இன்று நடந்ததைச் சொல்லி… “ரெண்டும் பேசிக்கிற நேரம் எல்லாம் சண்டை தான் அதிகம் போடுங்க. பாவனி வீட்லயும் அதிகம் இருக்க மாட்டா… வேலை வேலைன்னு தான ஓடிட்டு இருந்தா… என்னத்த புரிஞ்சு வச்சிருக்கப் போறாங்கன்னு நினைச்சேன். ஆனா ஈஸ்வரை பத்தி எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கா தெரியுமா என் மருமகள்.” என்றார் பெருமையாக.

எந்நேரமும் கணவனும் மனைவியும் சேர்ந்தே இருந்தால் மட்டும் அவர்கள் அன்னியோன்யமான தம்பதிகள் ஆகிவிட மாட்டார்கள். அவர்கள் எப்படி இருந்தாலும், தம்பதிகளுக்கு இடையே புரிதல் இருக்க வேண்டும்.

அவந்திகாவும் உண்டாகி இருக்க… அதைச் சாக்கு வைத்து மாமியார் வீட்டுக்கு செல்வது இல்லை. அவள் கணவன் மட்டும் பெற்றோரை பார்க்க சென்று வந்து கொண்டிருந்தான்.

Advertisement