Advertisement

ஹாய்கா…நம்ம வீட்டுக்கு எதிர்ல ஒரு ஸ்போர்ட்ஸ் ஷாப் இருக்கு. அங்கதான் இருக்கேன்.”

எனக்கு எதாவது வாங்கணும்.” என அவன் சிணுங்கலாகச் சொல்ல… அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ…. “நான் என்னோட சேவிங்க்ஸ் மணி எடுத்திட்டு வந்து வாங்குவேன்.” என்றவன், ஈஸ்வரிடம் பாய் அங்கிள் எனச் சொல்லிவிட்டுச் சென்றான். ஈஸ்வர் அவன் சாலையை ஒழுங்காகக் கடக்கிறானா எனப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனின் நடத்தை ஈஸ்வரை குழப்பியது. பல நேரங்களில் அவனின் வயதிற்கு ஏற்றபடி நடந்து கொண்டாலும், சில நேரம் சட்டென்று சின்னப் பிள்ளை போல எதாவது செய்து விடுகிறான். அதோடு பேச்சும் சரளமாக வரவில்லை. கொஞ்சம் திக்கித்தான் பேசினான்.

அவன் வீட்டு வாயில் கதவு இவனை எதிர்பார்த்து திறந்தே இருக்க… உள்ளே சென்று விட்டான்.

அடுத்த இரண்டு நாட்கள் பள்ளிக்குச் செல்லும் போது கடையில் இருக்கும் ஈஸ்வரை பார்த்து கையசைத்து விட்டு செல்வான். பள்ளி பேருந்தில் தான் செல்வான். மூன்றாம் நாள் ஞாயிறுக்கிழமை காலை உறங்கிக் கொண்டு இருந்தவனை ஊர்வசி வந்து அழைத்தார்.

ஈஸ்வர் உன்னைத் தேடி ஒரு பையன் வந்திருக்கான்.” என்றதும்,

பையனா யாரு என ஈஸ்வர் விழிக்க…

பேரு கூட விமல்ன்னு சொன்னான்.” என்றதும் ஈஸ்வர் வேகமாக எழுந்து வெளியே வந்தான்.

அங்கிள் இன்னைக்கு எனக்கு லீவு. புட்பால் விளையாட கிரௌண்ட் போகலாமா?” என்றான்.

அன்று அவன் பேச்சுக்கு சொன்னதை நியாபகம் வைத்து வந்து நிற்பவனிடம் முடியாது என்று சொல்ல முடியாமல், “கிவ் மீ டென் மினிட்ஸ்.” என்றவன், உள்ளே சென்று தயாராகி வந்தவன், “உங்க வீட்ல சொல்லிட்டு வந்தியா?” என்றதும்,

அம்மாகிட்ட சொன்னேன்.” என்றான். அவர்கள் கிளம்பும் போது ஊர்வசியும் உடன் சென்றார். எதிர்வீட்டின் வாயிலில் ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார். ஈஸ்வரை பார்த்ததும் அருகில் வந்தவர், “உங்களுக்குத் தொந்தரவா இருந்தா வேண்டாம்.” என்றதும்,

இல்லை… நான்தான் கூட்டிட்டு போறேன்னு சொன்னேன். நாங்க போயிட்டு வரோம்.” என்றதும், அவர் எதோ சொலல் வந்து தயங்க.

நீங்க பயப்படாதீங்க. நான் பத்திரமா விளையாட வச்சு கூட்டிட்டு வரேன்.” என்றான். அந்தப் பெண்மணியின் முகத்தில் நிம்மதி தெரிய… ஈஸ்வர் தனது பைக்கில் விமலை அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் சென்றதும் ஊர்வசி அவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டவர், “நீங்க இங்க புதுசா வந்திருக்கீங்களா?” என்றதும், ஆமாம் என்றவர், தன்னுடைய பெயர் வளர்மதி என்றார்.

பக்கத்தில் இருந்த கிரௌண்டில் அரைமணி நேரம் விளையாடி இருப்பார்கள், அதற்குள் விமலின் கைபேசிக்கு அழைப்பு வந்துவிட்டது.

அக்கா இன்னும் கொஞ்ச நேரம்,” என்றான் கெஞ்சலாக… அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ…

வாங்க அங்கிள் போகலாம். இப்போ போனாத்தான் அடுத்த வாரம் விடுவாங்க.” என்றான்.

ஈஸ்வரும் சரியென்று கிளம்ப… அந்நேரம் ஒரு மரத்தடியில் இருந்த நாய்க் குட்டிகளைப் பார்த்துவிட்டு அதன் அருகில் சென்றவன், அதைத் தூக்கி கொஞ்ச ஆரம்பித்தான்.

ஐயோ எவ்வளவு க்யூட்டா இருக்கு இல்ல…” என்றவனுக்கு அந்தக் குட்டியை விடவே மனம் இல்லை.

நாம எடுத்திட்டு போயிடலாமா?” என்றான் ஆவலாக.

அதோட அம்மா வந்து தேடும்.” என்றதும், “ஓகே ஓகே…” என்றவன், அதை விட்டுவிட்டு மனமே இல்லாமல் கிளம்ப… ஈஸ்வர் அவனை அழைத்துச் சென்று அவன் வீட்டில் விட்டுவிட்டு பிறகு தன் வீட்டிற்கு வந்தான்.

ஈஸ்வர் குளித்துவிட்டு வர ஊர்வசி அவனுக்குக் காலை உணவை எடுத்து வைத்தவர், “நீ யார்கிட்டயும் ஓட்ட மாட்டியே… எப்படி உன்னை வீட்டுக்கே வந்து கூப்பிடுறான். நீயும் போற..” என்றதும்,

நான் போகலைனா விட்டிருப்பான்னு நினைக்கிறீங்களா…” என்றான் ஈஸ்வரும் சிரிப்புடன்.

நான் ஊர்ல இல்லாத போது வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். பகல்ல கூடச் சில பசங்க வந்திட்டு போறாங்க. ஒரு வேலை டியூஷன் எதுவும் எடுக்கிறாங்களோ… ஆனா பசங்க எப்படிப் பகல்ல வர முடியும்? ஸ்கூல் இருக்குமே.” என்றார்.

ஈஸ்வருக்குச் சில விஷயங்கள் புரிந்தும் புரியாமல் இருக்க… தெரியாமல் எதுவும் பேச வேண்டாம் என நினைத்து அமைதியாக இருந்தான்.

மாலை பள்ளி விட்டு வந்ததும், இப்போது தினமுமே விமல் சிறிது நேரம் கடையில் வந்து ஈஸ்வருடன் இருப்பான். விடுமுறை நாட்களில் வீட்டுக்கும் வருவான். இருவரும் செஸ் விளையாடுவார்கள். இதுவரை ஒருமுறை கூட ஈஸ்வரால் விமலை ஜெயிக்க முடிந்தது இல்லை.

வீட்டுக்கு வருபவன் ஊர்வசி எதாவது உண்ண கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லி விடுவான். அன்று ஊர்வசி முறுக்கு சுட்டுக் கொண்டிருந்தார். நடுவில் சூடான முறுக்குகளைத் தட்டில் வைத்துக் கொண்டு வந்து வைத்துவிட்டு செல்ல… “ஹை… நீங்க முறுக்கு சுடுறீங்களா?” என்றவன், “நானும் சுடுறேன்.” எனச் சமையல் அறைக்கு வந்தவன், முறுக்கு பிழியும் குழாயை கையில் எடுத்துக் கொண்டான். சட்டியில் எண்ணை கொதித்துக் கொண்டு இருக்கிறது, மேலே கவிழ்ந்தால் என்ன ஆகும்? ஊர்வசி பயந்து விட… ஈஸ்வருக்கும் அவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று தெரியவில்லை,.

இத்தனை நாட்களில் விமல் அவன் அக்கா சொன்னால் கேட்கிறான் என்பதைத் தெரிந்து வைத்திருந்தவன், “உங்க அக்காவை கூப்பிடுறேன் இரு.” என்றதும், விமல் வேண்டாம் எனச் சமையல் அறையில் இருந்து வெளியே வந்துவிட்டான். அப்போது தான் ஊர்வசிக்கு போன உயிர் வந்தது.

அவன் போனதும் சுட்டுக் கொள்ளலாம் என அவரும் அடுப்பை அணைத்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.

விமல் அங்கிருந்த புத்தக அலமாரியை ஆராய… “ஒரு நிமிஷம் நான் பயந்தே போயிட்டேன். அக்கான்னு சொன்னதும் அப்படியே அடங்கிக்டானே… அவன் அக்காவை உனக்குத் தெரியுமா?” என்றதற்கு, சிரித்த ஈஸ்வர், “நான் பார்த்தது இல்ல… ஆனா அவன் அக்கா சொன்னா கேட்கிறான். அவன் போன்ல பேசும்போது பார்த்திருக்கேன்.” என்றான்.

அக்கானா இவனை விட ரெண்டு மூணு வயசு தானே அதிகம் இருக்கும். ஆனா பரவாயில்லை அக்கா சொன்னா கேட்கிறானே…” என ஊர்வசி ஆச்சர்யப்பட்டார்.

ஈஸ்வர் விமலை கடைக்கு அழைத்துக் கொண்டு சென்றான். எட்டு மணிக்குப் பணியாளர்கள் சென்றதும்,

புதுஸ்டாக் வந்திருக்க… ஈஸ்வர் அந்தப் பெட்டிகளைப் பிரிக்க… “நான் அடுக்கிறேன்.” என்ற விமல் அவனே சென்று அடுக்க…

புதுசை எல்லாம் பின்னாடி அடுக்கிட்டு, பழசை முன்னாடி வை.” என்றான் ஈஸ்வர்.

அவன் சொன்னது போல விமலும் அடுக்கினான்.

ஈஸ்வர் தனது மடிக்கணினியில் குனிந்து கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்க…

அப்போது அங்கிள் என விமல் அழைத்ததும், எதற்கோ அழைக்கிறான் என்று தலை நிமிர்ந்து பார்த்தவன், ஒரு பெரிய பந்தை இவனை நோக்கி தூக்கி எறிய விமல் தயாராக நிற்பதை பார்த்ததும், ஒரு நொடி அவன் அரண்டுவிட்டது என்னவோ உண்மை.

நோ விமல்… உங்க அக்காகிட்ட சொல்லிடுவேன்.” எனச் சட்டென்று அவன் வாயில் இருந்தே வந்துவிட்டிருந்தது.

அவனைப் பார்த்து சிரித்த விமல், “சும்மா உங்களை மிரட்ட பண்ணேன்.” என்றான்.

ஆனாலும் நீ ரொம்ப என்னை மிரட்டுற டா... உங்க அக்காவை வச்சு தப்பிச்சிட்டு இருக்கேன். உன் அக்காவை பார்த்தா… என்னைக் காப்பாத்தின தெய்வமேன்னு கால்ல தான் விழணும் போல….”

அக்கான்னு சொன்னாலே பயப்படுறியே… அவ்வளவு முரட்டு பீசா உன் அக்கா…” என ஈஸ்வர் பேசிக் கொண்டே திரும்பியவன், அங்கே கதவின் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்தாதும் வாடிக்கையாளர் என நினைத்து, “உள்ள வாங்க.” என்றவன், “என்ன வேணும்.” என்றதும்,

விமல் அவனாகவே சென்று பந்து, கிரிக்கெட் மட்டை எல்லாம் எடுத்து சென்று கொடுக்க…

இவன் என்ன கேட்கிறதுக்கு முன்னாடியே கொடுக்கிறான் என நினைத்த ஈஸ்வர், “அவங்களுக்கு என்ன வேணும்னு சொல்லட்டும் இரு.” என்றான்.

இதெல்லாம் எனக்கு வேணும், இதுதான் என் அக்கா.” என்றான் விமல்.”

என்னது அக்காவா? பேசினது எல்லாம் கேட்டிருக்குமோ…” என ஈஸ்வர் அந்தப் பெண்ணைப் பார்க்க… அவள் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. நல்லவேளை கேட்கவில்லை போல என நினைத்துக் கொண்டான்.

எனக்கு இதெல்லாம் வேண்டும் என்று விமல் சொல்ல… “உன்கிட்ட இதெல்லாம் இருக்கு.. இல்லாதது வாங்கு.” என்றவள், தம்பியிடம் இல்லாதது பார்த்து வாங்கினாள்.

பணம் செலுத்த அவள் ஈஸ்வரை பார்க்க… ஈஸ்வர் பில் போட்டுக் கொடுத்தான்.

அவள் தம்பியை அழைக்க… “நான் இதை அங்கிளுக்கு அடுக்கி கொடுத்திட்டு தான் வருவேன்.” என அவன் முன்பு செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர… அதை முடிக்காமல் அவன் செல்ல மாட்டன் என்பதை உணர்ந்த விமலின் அக்காவும் அமைதியாக நிற்க… ஈஸ்வரும் சேர்ந்து வேகமாக எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

அடுக்கி முடித்து விட்டு பந்தை எடுத்துக் கொண்டு விமல் கிளம்ப…

விமல் அவர்கிட்ட சாரி சொல்லு… நீ விளையாட்டுக்கு செஞ்சாலும் பந்தை அவர் மேல போடுற மாதிரி பயம் காட்டினது தப்பு.” என அவன் அக்கா சொன்னதும். விமலும் சாரி அங்கிள் என்றவன், வீட்டுக்கு சென்று விட…

அவனுக்காக நான் சாரி கேட்டுக்கிறேன். அவன் சில நேரம் கொஞ்சம் ஹைப்பர் ஆகிடுவான். மத்தபடி பயப்படுற மாதிரி எல்லாம் இல்லை.” என்றதும்,

எனக்குக் கொஞ்சம் அவனைப் பத்தி புரியுதுங்க. ஆனா நீங்க கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும். அவன் என்னோட தான் இப்போ அதிக நேரம் இருக்கான். எனக்கு அவனைப் பத்தி தெரிஞ்சா… அவனைக் கையாள்வது எனக்கு ஈஸியா இருக்கும்.” என்றதும்,’

அவனுக்குச் சின்ன வயசுல ஆட்டிசம் இருந்தது தெரிஞ்சது. முதல்ல ஸ்பெஷல் சைல்ட் ஸ்கூலுக்குத் தான் போனான். ஆனா அப்புறம் அவன் நல்லா இருக்கிறது பார்த்து, நார்மல் ஸ்கூலுக்கு மாத்திட்டாங்க. நார்மலா தான் இருப்பான். ஆனா சில நேரம் ஹைப்பர் ஆகிடுவான். அதனால அவனுக்கு அதிகச் சோடியம் இருக்கிற சாப்பாடு, வெளியே டின்ல அடச்சு வச்சது எல்லாம் கொடுக்க மாட்டோம். மத்தபடி அவன் நார்மல் தான்.” என்றாள்.

எனக்குமே பார்த்த முதல் நாளே புரிஞ்சது. இனிமே இன்னும் கவனிச்சு பார்த்துக்கிறேன்.” என ஈஸ்வர் புன்னகைக்க…

விமலைப் பற்றித் தெரிந்ததும் அதுவரையில் நன்றாகப் பேசிக் கொண்டிருப்பவர்கள் கூட விலகி சென்று விடுவார்கள். ஆனால் முதல் நாளில் இருந்தே தெரிந்தாலும், அவனை ஒதுக்கி வைக்காமல்… அவனுடன் பழகிய ஈஸ்வரை அந்தப் பெண் இன்னும் நம்பாமல் தான் பார்த்தாள்.

அவள் சென்றதுமே ஈஸ்வரும் கடையை அடைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று விட்டான். அவன் ஊர்வசியிடம் கூட எதுவும் விமலைப் பற்றிச் சொல்லவில்லை. தேவைபட்டால் அப்போது சொல்லிக்கொள்ளலாம் என நினைத்தான்.

மறுநாள் பகல் வேளையில் தான் சுட்ட முறுக்கை எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு ஊர்வசி செல்ல… கதவைத் திறந்த பெண்ணைப் பார்த்து அவர் திகைத்து நிற்க…

வாங்க, நீங்க எதிர்த்த வீட்டு ஆன்டி தானே… அம்மா கிளாஸ்ல இருக்கிறாங்க.” என்றாள்.

பரவாயில்லை… நேத்து முறுக்குச் சுட்டேன். உன் தம்பி வாங்கவே இல்லை.. அதுதான் கொண்டு வந்தேன்.” என்றதும்,

தேங்க்ஸ் என்றபடி வாங்கிக் கொண்டவள், உள்ளே வாங்க என அழைக்க…

இல்லைமா வேலை ஒருக்கு. இன்னொரு நாள் வரேன்.” என்றவர், “உன் பேர் என்ன?” என்று கேட்க,

பாவனி.” என்றாள்.

நல்ல பேர் என்றவர், வீட்டுக்கு திரும்பியதும்,

இன்னைக்கு அந்தப் பாவனி பெண்ணைப் பார்த்தேன். எதோ சின்னப் பொண்ணுன்னு நினைச்சிட்டு இருந்தோமே… அந்தப் பெண்ணுக்கு கல்யாண வயசு இருக்கும் போலையே… என்றதும், வேலையில் கவனமாக இருந்த ஈஸ்வர், “யார் பாவனி?” என்றான்.

விமலோட அக்கா டா…” என்றதும்,

பேரு மட்டும் தான் தெரிஞ்சிட்டு வந்தீங்களா…. இன்னும் வேற எதுவும் தெரியுமா?” என்றதும்,

நீ வேணா அந்தப் பெண்ணைப் பிடிச்சிருக்குன்னு சொல்லு… அந்தப் பெண் ஜாதகத்தையே கேட்கிறேன்.” என ஊர்வசி சிரித்துக் கொண்டே சொல்ல…

நீங்க பேசினது மட்டும் தெரிஞ்சது கட்டையை எடுத்திட்டு வருவா… உங்களுக்கு அவளைத் தெரியாது.” என்றான்.

உனக்கு ரொம்பத் தெரியுமா?” என்றதும்,

விமல் பயப்படுறதுல இருந்து தெரியலை…” என்றவன், “உங்களுக்கு யாரை பார்த்தாலும் எனக்குக் கல்யாணம் செஞ்சு வச்சிடணும். இது என்ன போஃபியாவா இருக்கும்?” என அவன் யோசிக்க…

காலாகாலத்துல கல்யாணம் பண்ணாம இருந்திட்டு, எனக்குப் பேரு வைக்கிறான்.” என்று முனங்கியபடி ஊர்வசி செல்ல… ஈஸ்வர் சிரித்துக் கொண்டான்.

 

Advertisement