Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 2

திருமணம் தான் உறுதி ஆகிவிட்டது என்று நினைத்தார்களோ என்னவோ அஷ்வினின் பெற்றோர் அவந்திகாவிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டனர். இப்போதே அவள் அவர்களிடம் ஒவ்வொன்றும் சொல்ல வேண்டும் என எதிர்பார்த்தனர். முதலில் அதெல்லாம் அவந்திகாவுக்கும் மகிழ்சியாகத்தான் இருந்தது. போகப் போக அவளுக்கு எதோ அவளை இப்போதே கட்டுப்படுத்துவது போலத் தோன்றது.

இப்போதே இப்படி இருக்கிறார்கள் திருமணதிற்குப் பிறகு இன்னும் எப்படி இருப்பார்களோ… தன்னுடைய வாழ்க்கையைத் தான் வாழ முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் அவந்திகாவுக்கு வந்துவிட்டது. அவள் அஷ்வினின் பெற்றோர் சொல்படி ஆடுவதை முதலில் நிறுத்தி விட்டாள்.

அஷ்வின் அன்று அலுவலகம் விட்டு வீட்டுக்கு வர இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. அவன் அம்மா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்க… “என்னமா ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?” என்றான்.

கல்யாணத்துக்கு முன்னாடியே எங்களை மதிக்கிறது இல்லை. இதுல கல்யாணத்துக்கு அப்புறம் எங்க மதிக்கப் போறா…” என்றார் சடவாக.

நம்ம அளவுக்கு வசதி இல்லைனாலும் நாங்க உனக்காகத் தான் சரின்னு சொன்னோம்.” என்று வேறு அவன் அம்மா சொல்ல… மறுநாள் அவந்திகாவை சந்திக்கும் போது அஷ்வின் அதைப் பற்றி அவளிடம் கேட்டான்.

எனக்கு எதுவும் பேசுறதுக்கு இல்லை… அவங்களுக்குப் பேசணும்னா அவங்க பேச வேண்டியது தானே,” என்றாள்.

எதுவம் பேச இல்லைனாலும், எப்படி இருக்கீங்கனாவது போன் பண்ணி கேட்டு இருக்கலாம் தான… அவங்க எதிர்பார்ப்பாங்கன்னு உனக்குத் தெரியாதா?”

எங்க வீட்ல நான் நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்கன்னே நினைக்கலை… என் விருப்பத்துக்கு அவங்க மதிப்பு கொடுத்தாங்க தானே… நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்தா தான் என்ன?”

ஓ… உங்க அப்பா அம்மா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதுனால…நான் காலம் எல்லாம் அவங்க சொல்படி அடங்கிக் கிடக்கணும்னு எதிர்பார்க்கிறீங்களா… அதெல்லாம் என்னால முடியாது.” என்றாள்.

அம்மா தாயே… நீ எங்க இஷ்ட்டப்படி தான் இருக்கணும்னு சொல்ற ஆள் நானும் இல்லை. என் அப்பா அம்மாவும் இல்லை. அவங்க நம்ம மருமகள்னு உன்கிட்ட இப்பவே கொஞ்சம் உரிமை எடுத்துக்கிறாங்க அவ்வளவு தான். அது கூட உனக்குப் புரியலைனா நான் ஒன்னும் பண்ண முடியாது.”

அப்போ நான்தான் எல்லாத்தையும் தப்பா எடுத்துக்கிறேன். நீங்க எல்லாம் சரியா இருக்கீங்க.”

நீ இவ்வளவு யோசிக்கிற அளவுக்கு எதுவும் நடக்கலைன்னு தான் நான் நினைக்கிறேன். நான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னதும், உங்க வீடு, வசதி எதைப் பத்தியும் யோசிக்காம… உனக்குப் பிடிச்சா சரின்னு சொன்னாங்க.” என அஷ்வின் சொன்னதும்,

தங்கள் வசதியைப் பற்றிப் பேசியதும் அவந்திகாவுக்கு அவள் தன்மானத்தைச் சீண்டி பார்ப்பது போல ஆகிவிட்டது. “உங்க அளவுக்கு வசதி இல்லைங்கிறதுனால… நான் உங்களுக்கு அடங்கிக் கிடப்பேன்னு நீங்க நினைக்கிறாங்களோ என்னவோ… என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது.” என்றாள்.

நீ குதர்க்கமா யோசிக்கிற… அவங்களுக்கு மறுக்கக் காரணம் நிறைய இருந்தும், அவங்க மறுக்காம நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க. நான் அதுதான் சொல்ல வந்தேன்.”

அதுக்காக என்னால யார்கிட்டையும் பணிஞ்சு போக முடியாது.” என்றவள், வீட்டுக்குச் சென்றதும் தனக்கு இந்தத் திருமணம் வேண்டாம் என்றாள்.

என்ன உன் இஷ்ட்டத்துக்கு நினைச்சு நினைச்சு பேசுற? கல்யாணம் வேண்டாம்னு சொல்ற அளவுக்கு என்ன நடந்தது.” என வைஜயந்தி மகளிடம் கேட்க….

அஷ்வினோட எனக்கு ஒத்து வரும்னு தோணலை…” என்றாள்.

நான் ஆரம்பத்திலேயே இந்தக் காதல் எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராதுன்னு சொன்னேன்.” என ருக்மணி ஒருபக்கம் ஆரம்பிக்க…

நீ முடிவா என்ன தான் சொல்ற?” என அவள் அப்பா கேட்டதற்கு. தனக்கு இந்தத் திருமணம் வேண்டாம் என்றாள் உறுதியாக.

ஈஸ்வரை அவந்திகாவிடம் பேசி பார்க்கும்படி சதாசிவம் சொன்னார்.

என்னதான் உனக்குப் பிரச்சனை?” என ஈஸ்வரும் தனியே சந்தித்து அவளிடம் கேட்க…

எனக்கு எதோ உறுத்தலாவே இருக்கு. நான் கல்யாணம் பண்ணி அங்க சந்தோஷமா இருக்க முடியாம திரும்ப வந்துட்டா… அப்ப அது இன்னும் எல்லோருக்கும் வருத்தம் தானே… நான் எனக்கு இந்தக் கல்யாணம் ஒத்து வாரதுன்னு இப்பவே விலக்கிறது என்ன தப்பு?” என அவந்திகா நியாயம் பேச…

கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்க மாட்டோம்னு நீயே நினைச்சா… உன் முடிவு சரிதான். ஆனா நீ எதோ காரணமாத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்க… அந்தக் காரணம் சரியானதான்னு மட்டும் பார்த்துக்கோ.” என்றான் ஈஸ்வர்.

அஷ்வினியின் அம்மா அழைத்தவர், “கல்யாணம் வரை வந்திட்டு நிறுத்தினா நாங்க மத்தவங்களுக்கு என்ன பதில் சொல்றது? வேணா எங்க பையனையும் உங்க பெண்ணையும் கல்யாணத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம் வச்சிடுறோம். நீங்க உங்க பொண்ணுகிட்ட பேசுங்க.” என்றனர். ஆனால் அஷ்வின் முடியவே முடியாது என்றுவிட்டான்.

எங்க அப்பா அம்மாகிட்ட கொஞ்சம் மனம் கோணாமல் நடந்துக்கோன்னு நான் சொன்னது உண்மை தான். ஆனா உங்க பெண்ணை அவங்களுக்கு அடிமையாக்கி வச்சுக்கனும்னு எண்ணம் எல்லாம் எனக்கு இல்லைவே இல்லை. என் மேல நம்பிக்கை இல்லாதவளை நானும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.” என்று சொல்லிவிட்டான்.

என்ன காதலித்தார்களோ… இருவருக்குள்ளும் சரியான புரிதலோ நம்பிக்கையோ இல்லை. பிறகு எப்படித் திருமணம் செய்வது என அவந்திகாவின் பெற்றோரும் விட்டு விட்டனர். ஆனால் அஷ்வினின் பெற்றோருக்கு தங்களால் தான் திருமணம் நடக்கவில்லையோ என்று ரொம்பவே உறுத்தலாக இருந்தது. தாங்கள் அதிக உரிமை எடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று இப்போது நினைத்தனர். ஆனால் அஷ்வின் தான் சின்ன விஷயத்தைக் கூடப் பெரிதாக யோசிப்பவள், திருமணம் முடிந்து வந்தாலும், பிரிவதற்குக் காரணத்தைத் தான் தேடிக் கொண்டிருப்பாள் அதனால் விட்டு விடுங்கள் என்றுவிட்டான்.

ஊர்வசி மகள் வீட்டில் இருந்து வந்துவிட்டார். அவரிடம் ஈஸ்வரும் அதைத்தான் சொன்னான். “என்ன காதலோ போங்க. இந்தக் காதல் கல்யாணம் எல்லாம் இல்லாம இருக்கிறது ஒரு பக்கம் நிம்மதியா தான் இருக்கு.” என்றான்.

ஏற்கனவே திருமணம் செய்யாமல் இருக்கக் காரணம் தேடிக் கொண்டிருந்தவனுக்கு, இப்போது இப்படி ஒரு சம்பவம் நடந்ததும், அதைத் தனக்குச் சாதகமாக உபயோகிக்கும் மகனைப் பார்த்து, ஊர்வசிக்குச் சிரிப்பு தான் வந்தது.

உன் அக்கா எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழலையா? உனக்கு ஒரு வருஷம் தான் டைம். ஒன்னு நீயா கல்யாணம் பண்ணிக்கணும். இல்லைனா நான் பண்ணி வைப்பேன். என்னால உன்னைத் தனியா எல்லாம் விட முடியாது.” என்றார்.

இன்னும் ஒரு வருஷம் இருக்கே… அப்புறம் பார்த்துக்கலாம் என ஈஸ்வரும் மெத்தனமாகத் தான் இருந்தான்.

பேத்தியின் திருமணம் நின்றதும் ருக்மணி பாட்டிக்கு எப்படியாது ஈஸ்வருக்கும் அவந்திகாவுக்கும் திருமணம் முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் ரொம்ப அதிகமே இருக்க… அவர் இரு வீட்டுக்கும் குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

உன் அண்ணன் மகன் தானே… எங்கையோ செய்யுறதுக்கு இங்க செய்யலாமே….. உன் பெண்ணும் பக்கத்தில இருப்பா.” என்று மருமகளிடமும்,

உன் நாத்தனார் பெண்ணையே எடுத்தா… உன்கிட்ட அனுசரணையா இருப்பா… உன் மகனும் உன்னை விட்டுப் பிரியாமல் இருப்பான்.” என ஊர்வசியிடமும் சொல்லிப் பார்த்தார்.

வைஜயந்தி ஊர்வசி இருவருமே… அது பிள்ளைகளின் விருப்பம். அவர்கள் வந்து தங்களுக்குத் திருமணம் செய்ய விருப்பம் என்று சொன்னால்… அப்போது பார்க்கலாம் என்று முடித்து விட்டனர்.

அன்று எதோ விசேஷ நாள் என்று கடையில் இருந்த பணியாளர்களில் இருவர் மாலை சீக்கிரமே சென்று விட… ஒருவனை மட்டும் உடன் வைத்துக் கொண்டு ஈஸ்வரே கடையைப் பார்த்துக் கொண்டான்.

அப்போது ஒரு பையன் பதினைந்து அல்லது பதினாறு வயது இருக்கும் எதிர்சாரியில் இருந்து இந்தக் கடையைப் பார்த்துவிட்டு வந்தான். ஈஸ்வர் அவன் சாலையைக் கடக்கும் போதே பார்த்திருந்தான். சற்று அவசரமாகத்தான் கடந்து வந்தான்.

ஹாய்.” என ஈஸ்வர் சொல்ல…

ஹாய் அங்கிள்.” என்றவன், “நான் இன்னைக்குத் தான் இந்தக் கடையைப் பார்த்தேன்.” என்றவன், கடையை முதலில் பார்வையால் ஆராய்ந்தவனுக்கு எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியவில்லை. ஒரு கால்பந்தை கையில் எடுத்து பார்த்தவன், கால்பந்து விளையாட்டின் வரலாறையே சொல்ல… ரொம்ப அறிவாளியா இருப்பான் போலிருக்கு என ஈஸ்வர் நினைத்துக் கொண்டான்.

பிறகு அதை வைத்து விட்டு வேறு ஒன்றை கையில் எடுத்தான். எடுக்கும் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அவனுக்குத் தெரிந்ததைச் சொன்னான். சிறிது நேரத்தில் அதிகப் படபடப்புடன் பேச ஆரம்பித்தான். ஈஸ்வருக்கு எதோ நெருடலாக இருந்தது.

அதுவரை நன்றாக இருந்தவன், சட்டென்று ஒரு கால்பந்தை எடுத்து நடுக் கடையில் வைத்து காலால் உதைக்க…

ஹே… நோ…” என ஈஸ்வர் சொல்ல…

நல்லவேளை அவன் உதைத்தது அத்தனை வேகம் இல்லாததால்… சேதாரம் எதுவும் இல்லை. அவனே என்ன நினைத்தானோ “சாரி.” என்றான்.

சுத்தி கண்ணாடி இருக்கு உடைஞ்சா என்ன ஆகும். கிரௌண்ட்ல தான் விளையாடனும். வேணா நானே உன்னை ஒருநாள் கூடிட்டு போறேன்.” என்றதும், “எப்போ போகலாம்?” என அவன் நச்சரிக்க…

உனக்கு ஸ்கூல் லீவ் இருக்கும் போது போகலாம்.” என்றான்.

அவன் எதையும் வாங்குவது போலவும் இல்லை. கிளம்புவது போலவும் இல்லை. ஈஸ்வர் அவன் யார் என்று விசாரிக்க..

நாங்க எதிர் வீட்டுக்குப் புதுசா குடி வந்திருக்கோம்.” என்றான்.

நான் ஈஸ்வர் இங்க பக்கத்தில தான் வீடு.” என்றதும்,

நான் என் பேர் சொல்லலை இல்ல…” என்றவன், “விமல், பதினோறாம் வகுப்பு படிக்கிறேன்..” என்றான்.

விமல் நைஸ் நேம். நீ வந்து ரொம்ப நேரம் ஆகுது, வீட்ல தேடப் போறாங்க.” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… விமலின் கைபேசி அழைத்தது. அவன் எடுத்துப் பேசினான்.

Advertisement