Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே 

அத்தியாயம் 19 

ஈஸ்வர் மகளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வது போலத்தான் இருக்கும். ஆனால் அதற்காக மகள் என்ன சொன்னாலும் கேட்டு விடுவானா என்றால் அதுவும் இல்லை. அதற்காக மகளைத் திட்டவும் மாட்டான். மென்மையாகவே நோ என மறுத்து விடுவான். 

மகள் அவள் காரியம் சாதிக்க நினைத்து வந்தாலும், தந்தை நோ என்று விட்டால் பிறகு என்ன செய்தாலும் கிடைக்காது எனப் புரிந்து வைத்து இருந்தாள். முதல் இரண்டு மூன்று முறை முரண்டு பிடித்து அழுதிருக்கிறாள் தான். ஆனால் அவன் கண்டுகொள்ளாததைப் பார்த்து தன் அப்பாவிடம் அழுதெல்லாம் காரியம் சாதிக்க முடியாது எனத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தாள். அதை ஈஸ்வர் மகளுக்கும் புரிய வைத்து இருந்தான் என்பது தான் உண்மை. 

பாவனி அதைக் கவனித்துக் கணவனிடம் கேட்டும் இருந்தாள். 

பொண்ணு கேட்டுக் கூட இல்லைன்னு சொல்வீங்களா ஈஸ்வர்.” 

எங்க அவந்திகா மாதிரி இருந்திடுவாளோன்னு பயம்தான்.” என்றான் அவனும் சிரித்தபடி. உண்மையில் சில பிள்ளைகள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தான் நினைத்தது தான் நடக்க வேண்டும். 

அவந்திகா திருமணதிற்குப் பிறகும் அப்படித்தான் இருந்தாள். அவளின் கணவன் ஜகன் அவன் வேலை உண்டு என்று இருப்பான். திருமணம் ஆன புதிதில் எல்லாம் நன்றாகவே சென்றது. 

மாதம் ஒரு முறை மனைவியோடு தன் பெற்றோரை பார்க்க ஊருக்கும் சென்று வந்தான். இரண்டு முறை அவனோடு சென்று வந்த அவந்திகா, பிறகு அவனோடு செல்ல தகராறு செய்தாள். அங்கே சென்றால் மாமியார் வீட்டு வேலை வாங்குகிறார் என்று காரணம் சொன்னாள். 

நாம இங்க தனியா இருந்தா கூட என் அப்பா அம்மா வந்து நம்மோட தங்கிட்டு போவாங்க. நாம உங்க வீட்ல இருக்கும் போது அவங்களை எப்படி வர சொல்றது?” 

வந்தாலும் எங்க அம்மாவால வேலை பார்க்க முடியாது.” என்றாள் அவந்திகா திமிராக. 

தெரியுதுல்ல இல்ல… அப்போ நீ ஒழுங்கா வர்றதுக்கு என்ன? மாசத்துல ஒரு தடவை ரெண்டு நாள் போயிட்டு வரோம். அதுகூட வர முடியலைனா எப்படி?” 

எங்கே தனிக்குடித்தனம் செல்லலாம் என்று சொல்லி விடுவானோ என நினைத்தவள், அதன் பிறகு வேண்டா வெறுப்பாக அவனுடன் ஊருக்கு சென்று வர ஆரம்பித்தாள். 

ஈஷ்வர் கடையின் மாடியில் எதோ கட்டிடம் கட்ட ஆரம்பித்து இருந்தான். கீழேயும் கடையை இரண்டு பகுதிகளாக மாற்றி அமைத்தான். 

என்ன டா கட்டிட்டு இருக்க?” என்ற ஊர்வசியிடம்

கட்டி முடிச்சதும் தெரியும்.” என்றான். தான் கேட்டாலும் அந்தப் பதில் தான் கிடைக்கும் எனத் தெரிந்ததால் பாவனி அமைதியாக இருந்து கொண்டாள். 

கீழே கடையைப் பாதியாகத் தடுத்து இருந்ததால்… இவர்களின் ஸ்போர்ட்ஸ் ஷாப்பை கீழேயும் மாடியிலும் என மாற்றிவிட்டு, மாடியில் மீதம் இருந்த இடத்தில் பெரிய அறையாகக் கட்டி இருந்தான். அதோடு ஒட்டி ஒரு குளியல் அறை மட்டும். 

இவ்வளவு பெரிய அறை எதற்கு என பாவனி யோசனையில் இருக்க… வந்து இறங்கிய பொருட்களைப் பார்ததும் விமலுக்காக எனப் புரிந்துவிட்டது. மேலே கேக் தயாரித்து விற்பனை செய்யத் தான் கீழே இருந்த கடையைப் பிரித்து இருக்கிறான் என்றும் புரிந்தது. 

பெரிய முதலீடு என்று புரிந்தது. வளர்மதி மருமகன் வீட்டில் இருக்கும் நேரம் வந்து அதைப் பற்றிக் கேட்க…. 

நானும் விமலும் பார்ட்னர் அத்தை. வர்ற லாபத்துல நான் என் பங்கு பணத்தை எடுத்துக்கிறேன்.” என்றான். ஆனாலும் மனம் கேட்காமல் வளர்மதி அவரின் சேமிப்பில் இருந்தும், பாவனி அவளது சேமிப்பில் இருந்தும் எடுத்துப் பாதித் தொகையைக் கொடுத்த போது, ஈஸ்வர் மறுக்காமல் வாங்கிக் கொண்டான். 

விமலின் குணத்திற்கு அவன் வெளியில் சென்று வேலை செய்வது எல்லாம் ஒத்து வராது. அவன் சில விஷயங்களில் தன்னை மாற்றிக் கொள்ளவே மாட்டான். அது புரிந்து தான் ஈஸ்வர் சொந்த தொழிலுக்கு ஏற்பாடு செய்தது. 

பாவனிக்கு இப்போதும் அவள் தம்பி தான் முதலில். தந்தையை வேண்டாம் என ஒதுக்கியதும், திருமணதிற்குப் பிறகு கூடக் கணவனை விட்டு பிரிய நினைக்கும் அளவுக்குச் சென்றது எல்லாம் அவள் தம்பிக்காகத் தானே… விமலுக்கு என்று ஒரு எதிர்காலம் உருவாவதில் அவளை விட யார் மகிழ்ந்து விடப் போகிறார்கள். பாவனி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். 

யாரை வைத்துக் கடை திறப்பது எனப் பேச்சு வந்ததும், விமல் ஈஸ்வர் என்றுதான் சொல்ல வந்தான். அது புரிந்த ஈஷ்வர் மனைவியின் பக்கம் கண்ணைக் காட்ட…. 

அக்கா நீதான் கடை திறக்கனும்.” என்றதும்

நான் இல்லை… எல்லாம் பண்ணது உன் அத்தான், கடை திறக்கிறது மட்டும் நானா… நீ உன் அத்தானை வச்சு திறந்துக்கோ.” என்றாள். 

என்னை இழுத்து விடாத.” என்றான் ஈஸ்வர். 

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து திறந்து வைங்க. கூட இந்தப் பட்டுக் குட்டியும்.” என்றான் விமல் கார்னிகாவை காட்டி. 

டேய்…. உன் அக்கா வேணா சும்மா வந்து திறந்து வைக்கலாம். ஆனா என் பொண்ணு வந்தா… அதுக்குத் தனிப் பேமென்ட்.” என ஈஸ்வர் சொல்ல… 

நான் சம்பாதிக்கிறது எல்லாம் இந்தக் குட்டிக்கு தானே.” என்றான் விமல் சிரித்தபடி. அவர்கள் பேசுவதை ஊர்வசியும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். 

“நாம எல்லாம் யாரும் வேண்டாம். அதுக்கு இன்னும் நிறைய சந்தர்ப்பம் வரும். இப்போ உங்க அம்மாவையும் என் அம்மாவையும் வச்சு திறக்கலாம்.” என ஈஸ்வர் சொன்னதும், பாவனியும் விமலும் சந்தோஷமாக சரி என்றனர்.

அக்கம் பக்கம் இருப்போர் மற்றும் விமலின் நண்பர்கள் வந்திருக்கக் கடை திறப்பு விழா நன்றாகவே நடந்தது. வளர்மதியும், ஊர்வசியும் சேர்ந்து கடையைத் திறந்து வைத்தனர். 

விமல் முதலில் உதவிக்கு ஆள் வைத்துகொள்ளவில்லை. அவனே தான் எல்லா வேலைகளையும் செய்தான். வளர்மதி அவனுக்கு உதவினர். ஊர்வசியும் வீட்டில் வேலைகளை முடித்து விட்டால் கடையின் மாடிக்கு வந்து விடுவார். அவருக்குக் கேக் செய்வதைப் பார்க்க மிகவும் பிடிக்கும். 

துண்டுகள் போட்டு விற்கும் கேக்குகள் விதவிதமான ரகங்களில் செய்தாலும், சின்னப் பிறந்த நாள் கேக்குகளும் செய்து வைக்க…. அதுவும் விற்று தீர்ந்து போகும். அதோடு பிறந்த நாள் மற்றும் மற்ற கொண்டாட்டங்களுக்குப் பெரிய கேக் செய்து கொடுக்கும் ஆர்டர்களும் கிடைத்தது. 

விமல் கேக் தயாரிப்பில் பிஸியாக இருப்பதால்…. விற்பனையைக் கவனிக்கத் தன் கடையில் இருந்த பணியாளரை ஈஸ்வர் நியமித்து இருந்தான். 

முதல் இரண்டு வாரங்கள் மந்த கதியில் சென்ற போதும், அடுத்தடுத்து வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதுவும் வார இறுதியில், இங்கே ஸ்போர்ட்ஸ் ஷாப் வருபவர்கள், இங்கே வந்துவிட்டு அங்கே செல்லாமல் இருந்தது இல்லை. 

சிலர் இனிப்போடு காரமும் சேர்ந்து உண்ண விரும்புவார்கள் என்று, சமோசா, பன்னீர் ரோல் போன்றவைகளை வேறு இடத்தில் இருந்து தருவித்து அதையும் விற்பனை செய்தனர். 

கேக்கின் ஆர்டர்கள் குவிய தொடங்க… ஊர்வசி அவரின் வேலையை விட்டுவிட்டு மகனுக்கு முழு நேரமும் உதவ ஆரம்பித்தார். அவருக்கு உட்கார்ந்து கொண்டு செய்யும் வேலைகள் தான். அவர் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுக்கச் சிறிய கட்டிலும் அங்கே உண்டு. 

மகனுக்காகச் செய்யும் போது அவருக்குக் களைப்பும் தெரிவது இல்லை. 

கார்னிகாவுக்குக் கேக் மிகவும் பிடிக்கும். அவள் தினமும் தின்ன கேட்டால்… எப்படிக் கொடுப்பது. அதை ஈஸ்வர் சொல்ல…. வெள்ளை சக்கரைக்குப் பதில் நாட்டு சர்க்கரை, மற்றும் இயற்கை சுவையூட்டியை வைத்து விமல் கேக் செய்ய ஆரம்பிக்க… அதையும் பெயர் குறிப்பிட்டு விற்பனைக்கு வைத்தனர். 

நமக்குப் பிடித்த, நாம் ரசிக்கும் விஷயமே பணம் ஈட்டிக் கொடுப்பதாகவும் அமைந்து விட்டால்…. அந்த வேளையில் சலிப்போ, களைப்போ தெரியாது. அப்படித்தான் விமலுக்கும். அவனுக்குப் பிடித்த விஷயமே தொழிலாக அமைத்ததால்… அவனும் ரசித்துச் செய்தான். 

கார்னிகாவுக்கு இரண்டரை வயது ஆகி இருக்க… விஜயதசமிக்கு அவளைப் பக்கத்தில் இருந்த விளையாட்டுப் பள்ளியில் சேர்த்தனர். காலையில் குடும்பமாகக் கோவிலுக்குச் சென்றுவிட்டு, அப்படியே பள்ளிக்கும் சென்று சேர்த்துவிட்டு வந்தனர். 

பாவனியின் தந்தைக்கு உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகத் தகவல் வர… ஈஸ்வர் அதைச் சொன்ன போது, பாவனி காதில் விழுந்தது போலக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை. 

அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று ஈஸ்வர் சொல்ல… பாவனி வர முடியாது என்றாள். 

சரி எனத் தோளைக் குலுக்கியவன், “நானும் விமலும் போயிட்டு வரோம்.” என்றதும்

யாரும் போக வேண்டாம்.” என பாவனி சொல்ல… ஈஸ்வர் அதைக் கேட்கவில்லை. மறுநாள் விமலை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான். 

“கொஞ்சமாச்சும் மதிக்கிறானா பாரு…” என பாவனி மனதிற்குள் குமுறியபடி இருந்தாள். அவன் காரணமில்லாமல் எதுவும் செய்ய மாட்டான் என்பதால் வளர்மதி அவனைத் தடுக்கவில்லை. 

தனது தந்தை இறப்பிற்குக் கூடச் செல்லாதவன், மாமனாரை பார்க்க சென்றது ஊர்வசிக்கும் ஆச்சர்யம் தான். அவர் அதை வாய்விட்டு சொல்லவும் செய்தார். 

மகனும் மருமகனும் தன்னைப் பார்க்க வந்தது ராஜீவுக்கு ஆச்சர்யமே…. அப்போதும் அவரது கண்கள் மகளைத் தேடவே செய்தது. 

அவ வரலை வரவும் மாட்டா.” என்றான் ஈஸ்வர். 

விமலின் இப்போதைய நிலையைச் சொன்னவன், “நீங்க அவனை விட்டுட்டாலும், அவன் நல்லாத்தான் இருக்கான்.” என்றான். 

பேரனைப் பார்த்த ராஜீவின் பெற்றோர் கண்கலங்கினர். 

இவன் தேவையில்லாதது கற்பனை பண்ணி… எங்களையும் குழப்பிட்டான்.” என்றனர். 

நீங்க உங்க மகனுக்குச் செய்ய வேண்டிய எதையும் செய்யலை… ஆனா உங்களுக்கு எதாவது தேவைனா நீங்க கண்டிப்பா அவன்கிட்ட கேட்கலாம். இப்போ அவன் செய்யுற நிலையில இருக்கான்.” எனச் சொல்லிவிட்டு ஈஸ்வர் வந்தது ராஜீவை யோசிக்க வைத்தது. 

ராஜீவ் தனது சொத்துக்களைத் தனக்குப் பிறகு தன் பிள்ளைகளுக்கும் சிலவற்றைத் தனது இரண்டாவது மனைவிக்கும் எழுதி வைக்க நினைத்தவர், ஈஸ்வரை வர சொல்லி அழைத்தார். 

ஈஸ்வரும் அவரைப் பார்க்க சென்றிருந்தான். ராஜீவ் அவரது விருப்பத்தைச் சொல்ல… 

பாவனி கண்டிப்பா வாங்கிக்க மாட்டா… எனக்கு அவளைத் தெரியும். நீங்க அவளோடதையும் சேர்த்து விமலுக்குக் கொடுங்க. அவனுடைய பிற்காலத்துக்கு உதவலாம்.” என ஈஸ்வர் சொல்ல… ராஜீவும் சரி என்றார். 

இரண்டு மூன்று நாட்களாக அதே வேலையாக ஈஷ்வர் அலைய…. 

“தனது முதல் மனைவியின் பிள்ளைக்கு சொத்துக் கொடுப்பதை அவரது இரண்டாவது மனைவி தடுக்கவே பார்த்தார். ஆனால் ராஜீவும் அவரது பெற்றோரும் ஒத்துகொள்ளவில்லை. 

பத்திரம் பதியும் அன்று ஈஸ்வர் விமலை அழைத்துக் கொண்டு வந்தான். 

விமலுக்கு அங்கே சென்ற பிறகே தெரியும்.  

அம்மாவை கேட்கணும். அக்கா என்ன சொல்வாளோ…” என்றான். 

ஒன்னும் சொல்ல மாட்டா…. நான் இருக்கேன் போடு.” என்றவன், எல்லாம் முடிந்து பத்திரத்தை வாங்கிக்கொண்டு தான் வந்தான். 

விமல் சொல்லித்தான் பாவனிக்கு விஷயம் தெரியும். அன்று இரவு கணவனுக்கு மனைவிக்கும் இடையே பெரிய சண்டை நடந்தது. 

என்னைக் கேட்காம நீங்க எப்படி முடிவு எடுக்கலாம் ஈஸ்வர்.” பாவனி கோபத்தில் கத்த…. 

நான் உன்னை வாங்கிக்க சொல்லலை…. விமலுக்கு வர்றதை தடுக்க உனக்கு உரிமை இல்லை.” என ஈஸ்வரும் கத்தினான். 

அவர் தான் அவனை வேண்டாம்னு தானே போனார். அவரோடது எங்களுக்கு எதுக்கு?” 

நீ இப்படிக் கத்தினா சரிதான் போடின்னு போயிடுவேன். பொறுமையா பேசினா… நானும் பொறுமையா பதில் சொல்வேன்.” என ஈஸ்வர் சொல்ல… 

ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காம பேசுங்க.” என்றார் ஊர்வசி. பாவனி அமைதியாக இருக்க…. 

அதை சம்மதமாக எடுத்துக் கொண்டு, “நானும் தான் எங்க அப்பா வேண்டாம்னு தூக்கி போட்டேன். ஆனா அவர் சொத்து வேண்டாம்னு சொல்லலை…. எங்க அப்பா திமிர் எடுத்து போனதுக்கு, எங்க அம்மா ஏன் டி கஷ்ட்டபடனும்?” 

இப்போ நீ சொத்து வேண்டாம்னு சொன்னா… அந்தச் சொத்து யாருக்கு போகும் தெரியுமா? உங்க அப்பாவோட ரெண்டாவது சம்சாரத்தோட சொந்தக்கரங்களுக்கு. அவங்க யாரு இந்தச் சொத்தை அனுபவிக்க?” 

“இன்னைக்கு உன் தம்பிக்கு அந்தச் சொத்து தேவையில்லாம இருக்கலாம். ஆனா நாளைக்கு அவன் யாரையாவது கல்யாணம் பண்ணா…. அவங்க எந்த நம்பிக்கையில உன் தம்பிக்கு பொண்ணு கொடுப்பாங்க. உன் தம்பி நிலை உனக்கு தெரியும். எல்லாத்தையும் யோசிச்சு பார்த்துதான் வாங்கி இருக்கேன்.” 

உங்க அப்பா உனக்கும் கொடுக்கிறேன்னு தான் சொன்னார். உனக்குத் தேவையில்லைன்னு நானே சொல்லிட்டேன்.” 

அதனால வாயை மூடிட்டு இருக்க. இனி இதைப் பத்தி நீ பேசவே கூடாது.” எனச் சொல்லிவிட்டு ஈஸ்வர் அறைக்குள் சென்றுவிட…. 

அவன் சொல்றது சரிதானே பாவனி. உன் அம்மா இத்தனை நாள் கஷ்ட்டபட்டாங்க. இனிமேலாவது மகனை பத்தி கவலையில்லாம இருப்பாங்க தானே….” என்றவர், மறுநாள் வீட்டுக்கு வந்த வளர்மதியிடம் அதை எடுத்து சொல்லவும் செய்தார். 

வளர்மதிக்கும் புரிந்ததால் அமைதியாக இருந்தார். ஈஸ்வர் பத்திரத்தை சென்று அவரிடம் கொடுக்க… உங்ககிட்டயே இருக்கட்டும் என்றுவிட்டார். 

பாவனிக்கு தான் இன்னும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதன் பிறகு அவள் அதைப் பற்றிப் பேசவும் இல்லை. அவள் எப்போதும் போல வேலைக்குச் சென்று வந்தாள். 

பாவனி தன் நாத்தனாரின் விருப்பத்தையும் மறக்கவில்லை. தனக்குப் பதில் அவளது தோழியைச் சில மாதங்கள் அவளது பணியிடத்துக்கு வேலை மாற்றி விட்டவள், மாமியாரை சிங்கப்பூர் சென்று வர சொன்னாள். 

ஊர்வசி மகனை பார்க்க… அவனும் சென்று வாருங்கள் என அனுப்பி வைத்தான். 

பாவனி வீட்டில் இருந்ததால்… மகள் பள்ளிக்குச் சென்றதும், அவள் சென்று கணவன் மற்றும் தம்பியின் கடையைப் பார்த்துக் கொள்வாள். காலையிலேயே சமையல் முடித்து விடுபவள், மகள் பள்ளியில் இருந்து வரும் வரையில் கடையில் தான் இருப்பாள். மகள் வரும் நேரத்திற்கு வந்து சூடாகச் சாதம் மட்டும் வைப்பாள். 

முதலில் மகளுக்கு ஊட்டிவிட்டு பிறகு கணவனும் மனைவியும் சேர்ந்து உண்ணுவார்கள். மகள் உறங்கி எழுந்ததும் அவளையும் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று விடுவாள். 

விமலின் நண்பர்கள் வேறு துறை சார்ந்த படிப்பில் இருந்தாலும், சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் கடையில் தான் இருப்பார்கள். அவனது தோழி தீப்தி விமலுக்குக் கேக் தயாரிப்பில் உதவுவதும் உண்டு. 

ஈஸ்வர் கவனிக்காதது போல இருந்தாலும், விமலிடமும் அவன் நண்பர்களிடமும் தன் கவனத்தை எப்போதுமே வைத்திருப்பான். அதன் பலனாக அவனுக்குச் சில விஷயங்கள் புரியவும் செய்தது. 

விமலின் நண்பர்கள் இருப்பதால் வார இறுதியில் பாவனி கடைக்கும் செல்ல மாட்டாள். இவர்கள் குடும்பமாக வெளியே சென்றுவிட்டு வருவார்கள். 

திங்களன்று ஈஸ்வர் மகளைச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தவன், உடைமாற்ற அறைக்குள் வர… பாவனி அப்போது தான் குளித்துவிட்டு வந்திருந்தாள். 

மனைவியைப் பார்த்ததும் ஈஸ்வருக்கு வேறு எண்ணங்கள் தலைதூக்க…. வீட்டில் தான் யாரும் இல்லையே… அவன் சென்று மனைவியை அணைக்க… 

வேண்டாம்.” என்று பாவனியின் வாய் தான் சொன்னது. ஆனால் கைகள் என்னவோ கணவனை அணைக்கத் தான் செய்தது. 

அன்று நடந்த சண்டைக்குப் பிறகு இருவரும் பேசிக்கொள்வார்கள் தான். ஆனால் பொதுவான விஷயங்கள் தான். அதுவரை இருவருக்கும் இருந்த சிறு பிணக்கும் மறைந்து இருக்க… அதன் பிறகு வந்த நாட்கள், காலை வேளையும் கணவனுக்கும் மனைவிக்கும் இனிமையாகச் சென்றது. அதன் பலனாகப் பாவனி மீண்டும் கருவுற்றாள். 

Advertisement