Advertisement

வாயில் வரை சென்ற ஈஸ்வர், “அம்மா கவனமா பார்த்துக்கங்க. துறு துறுன்னு இருக்கா.” என்றான்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.” என்றவர், “ஏன் டா எப்பவும் நானே சமைச்சு சாப்பிடனுமா? எனக்கு எதோ அவ சமைச்சு போட்டுட்டு இருந்தா… அது பொறுக்கலையா உங்களுக்கு. எனக்குத் தெரியாது, அவ சமைக்கலைனா நீ சமைச்சு வை… இல்லைனா உன் மாப்பிள்ளையைக் கூப்பிட்டு ரெண்டு பேருமா செய்யுங்க. என்னால எல்லாம் சமைக்க முடியாது. நான் இன்னைக்கு லீவ்.” எனச் சொல்லிவிட்டு சென்றார்.

ஈஸ்வர் வீட்டிற்குள் வந்தால் பாவனி இன்னும் கோபமாகத்தான் இருந்தாள். கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ என நினைத்தவன், “பாவனி, விளையாட்டுக்குப் பேசுறது எல்லாம் யாராவது சீரியஸா எடுத்துப்பாங்களா… நான் சும்மா தான் சொன்னேன்.” எனச் சமாளித்தான்.

“விமல் விளையாட்டுக்கு கூடப் பொய் சொல்ல மாட்டான் ஈஸ்வர். அப்போ இத்தனை நாள் என் சமையல் நல்லா இல்லை அப்படித்தானே…”

“ஐயையோ… இப்படி ஒன்று இருக்கா…” என நினைத்தவன், உண்மையைச் சொல்லி காலில் விழுந்து விட வேண்டியது தான் என முடிவு செய்து, “பாவனி அம்மாவோட கம்பேர் பண்ணா… உன்னோடது கொஞ்சம் கம்மி தான். அம்மாவுக்கு இருக்க அனுபவம் உனக்கு இல்லை இல்லையா…. அதுவும் அம்மா கொஞ்சம் எண்ணெய் அதிகம் சேர்ப்பாங்க. நீ அளவா தான் சேர்ப்ப… அதுவும் நல்லதுக்குத்தானே…” என்றவன், “முதல்ல நீ சாப்பிடு. அப்புறம் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து மதியத்துக்குச் சமைப்போம்.” என்றான்.

“ஒன்னும் வேண்டாம் நான் சமைக்கலை.” என்றாள்.

“அம்மா சமைக்க மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. மத்த நாள் அவங்க செய்யுறாங்க. இன்னைக்குக் கண்டிப்பா செய்ய மாட்டாங்க.” என்றதும்,

“சரி நானே பண்றேன்.” என்றாள்.

“நான் உனக்கு உதவி பண்றேன். என்ன சமைக்கலாம்?” என ஈஸ்வர் யோசிக்க…

“அப்புறம் உங்களால தான் நல்லா வந்துச்சுன்னு சொல்றதுக்கா.” என்றவள், நீங்க கடைக்குப் போங்க.” என்றவள், கணவனைப் பிடித்து வெளியே தள்ளி கதவை சாற்றி விட்டாள்.

கடைக்குச் சென்ற ஈஸ்வர் அங்கே இருந்த விமலை பார்த்தவன், “டேய் உண்மை விளிம்பி, உன்னால உன் அக்கா என்னை வீட்டை விட்டு துரத்திட்டா டா….” என்றதும், விமலுக்கும் சிரிப்பு தான்.

“சரி அதை விடு.” என்றவன், “உன் படிப்பு இந்த வருஷம் முடியப் போகுது, இன்னும் வேற என்னென்ன கத்துக்கணுமோ கத்து வச்சுக்கோ…” என்ற ஈஸ்வர் அவனுடைய விருப்பத்தையும் கேட்டு தெரிந்து கொண்டான்.

கணவனை அனுப்பிவிட்டுக் கைபேசியில் சமையல் வீடியோ பார்த்தபடி சாப்பிட்டு முடித்த பாவனி, தேங்காய் பால் சாதமும் சிக்கென் மசாலாவும் செய்வோம் என நினைத்தவள், கடைக்குப் போன் செய்து சிக்கன் கொண்டு வர சொன்னாள். மற்றது எல்லாம் வீட்டிலேயே இருந்தது.

அவள் அம்மாவுக்கும் அழைத்து மதியம் தானே சமைப்பதாகச் சொல்லி இங்கே சாப்பிட வர சொன்னாள். அப்படியே அவரிடம் அரிசியின் அளவு கேட்டுக் கொண்டாள்.

பாஸ்மதி அரிசியை ஊற வைத்துவிட்டு நறுக்க வேண்டியதை நறுக்கிக் கொண்டு இருக்க… அதற்குள் சிக்கென் வந்து விட்டது. அதைக் கழுவி மசாலா சேர்த்து ஊற வைத்தவள், குக்கரில் தேங்காய் பால் சாதம் செய்துவிட்டு, இன்னொரு அடுப்பில் பெரிய கடாய் வைத்து சிக்கென் மசாலா செய்தாள்.

ஊர்வசி என்றால் பரபரவென்று சீக்கிரம் செய்து விடுவார். பாவனிக்கு மெதுவாகத்தான் செய்ய வரும். சாதத்தை இறக்கி விட்டு முட்டையை வேக வைத்தவள், தயிர் பச்சடிக்கு நறுக்கிக் கொண்டு இருக்க… ஊர்வசியும் பேத்தியை தூக்கிக் கொண்டு வந்து விட்டார். அவர் வருவதைப் பார்த்த ஈஸ்வரும் விமலை அழைத்துக் கொண்டு வந்தான்.

வாசலில் வைத்தே… “வாயை தீதிறக்காம சாப்பிடுற.” என்றான்.

“வாயை திறக்காம எப்படிச் சாப்பிடுறது அத்தான்?” என விமல் சந்தேகம் கேட்க…

சாப்பிடுறதுக்கு மட்டும் திறக்கிற…. என்றவன் விமலுடன் வீட்டுக்குள் சென்றான்.

தனியாகவே எல்லா வேலைகளும் செய்து பாவனி சற்று களைப்பாகத்தான் தெரிந்தாள்.

“நீ உட்கார் பாவனி, நாங்க எல்லாம் டுத்திட்டு வரோம்.” என ஈஸ்வரும் விமலும் சென்று உணவு வகைகளைக் கொண்டு வந்து உணவு மேஜையில் வைத்தனர்.

“அம்மாவை வர சொல்லி இருக்கேன்.” எனப் பாவனி பொதுவாகச் சொல்ல… ஈஸ்வர் விமலை அனுப்பி அவரை அழைத்து வர சொன்னான்.

விமல் சென்று வளர்மதியை அழைத்து வர….. அவர் வந்ததும் சாப்பிட உட்கார… தான் பிறகு மகளுடன் சாப்பிடுவதாக வளர்மதி சொல்ல… ஊர்வசி மகனுக்கும் விமலுக்கும் பரிமாறிவிட்டு, தனக்கும் போட்டுக் கொண்டு அவர்களுடன் உட்கார்ந்து உண்டார்.

பாவனி மகளுக்கு இன்னும் சாதத்தில் கூடுதாலாக நெய் விட்டு, சிக்கென் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டிக் கொண்டு இருந்தாள். அவள் வேறு பக்கம் திரும்பி நின்றிருந்தாலும், காதெல்லாம் இந்தப் பக்கம் தான் இருந்தது.

ஆளுக்கு முன் ஈஸ்வர் சொல்லி விட்டான். ரொம்ப நல்லா இருக்கு பாவனி என்று. அடுத்து ஊர்வசி, “இது எப்பவும் பண்றது போல இல்லை. நல்லா இருக்கு.” என்றபடி உண்டார்.

ஈஸ்வருக்குத் தெரியும், அவர்கள் என்ன சொன்னாலும் பாவனி நம்ப மாட்டாள். அவளுக்கு விமல் சொல்ல வேண்டும் என, விமல் அப்போது தான் சிரத்தையாக உணவில் தேவையில்லாததை எல்லாம் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான்.

விமல் இரண்டு மூன்று வாய் உணவு உண்ணும் வரை ஒன்றுமே சொல்ல வில்லை.

“அக்கா நீ தான் செஞ்சியா?” எனச் சந்தேகமாகக் கேட்டவன், “ரொம்ப நல்லா இருக்கு.” என்றான்.

அவன் சொன்ன வித்தகத்தில் ஈஸ்வருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. பாவனி மனம் இலகினாலும், வெளியே விறைப்பாகவே முகத்தை வைத்திருந்தாள்.

ஈஸ்வர் உண்டுவிட்டு வந்தவன், “கொடு அவளுக்கு நான் கொடுக்கிறேன். நீயும் உங்க அம்மாவும் சாப்பிடுங்க.” என அவளை அனுப்பி வைத்தான்.

பாவனி அவள் அம்மாவுக்குப் பரிமாறி விட்டு அவளும் உண்டாள்.

சமைக்கும் போது சுவை பார்த்திருந்தாள் தான். ஆனால் இவர்களுக்கு எல்லாம் பிடிக்குமா என்று தெரியவில்லை. நமக்குக் கூட நல்லா சமைக்க வருது என நினைத்துக் கொண்டு உண்டாள்.

கார்னிகாவுக்குச் சற்றுக் காரம் அதிகம் தான். உஸ் உஸ் என்று தண்ணீரையும் குடித்தபடி அவள் உண்ணுவதைத் தொடர….

“உனக்கு எல்லாம் இப்பவே இவ்வளவு டேஸ்ட் கேட்குது.” என ஈஸ்வர் மகளுக்கு ஊட்டிக் கொண்டே சொன்னான்.

“அவளுக்குச் சிக்கென் ரொம்பப் பிடிக்கும் டா…” என்றார் ஊர்வசி.

“என் ராசாத்திக்கு சிக்கென் பிடிக்குமா? தினமும் செய்யச் சொல்லலாமா… எங்க பட்டு குட்டிக்கு.” என ஈஸ்வர் மகளைப் பார்த்து கேட்க… அந்த வாண்டு ஆமாம் என்பது போலச் சிரித்தது.

ஈஸ்வர் அப்போது எதேட்சையாக மனைவியைப் பார்க்க… அவள் பார்வையில் எதோ இருந்தது. என்ன என்று அவன் யோசிக்க…. அவனுக்குப் புரியவே இல்லை.

சாப்பிட்டு சிறிது நேரம் இருந்துவிட்டு வளர்மதியும் விமலும் அவர்கள் வீட்டிற்குச் சென்றனர். ஊர்வசியும் அவர் அறைக்குள் சென்று விட்டார். ஹாலில் இருந்த திவானில் மகளை மடியில் படுக்க வைத்து பாவனி தட்டிக் கொடுக்க… ஈஸ்வர் மனைவியின் எதிரில் உட்கார்ந்தவன், “அப்போ ஏன் என்னை அப்படிப் பார்த்த?” என்றான்.

“என்னவோ எனக்கு மானே தேனேன்னு சொல்ல வராதுன்னு சொன்னீங்க. உங்க பொண்ணுகிட்ட மட்டும் எல்லாம் வருது. என்கிட்டே மட்டும் உனக்காக எதுவும் செய்வேன்னு சொல்றது கூடக் கோபமாத்தான் சொல்வீங்க இல்ல ஈஸ்வர்.” என்றதும், சரணடைவது போலத் தன் கை இரண்டையும் உயர்த்திய ஈஸ்வர், “தப்பு தான்.” என்றான்.

“பொண்டாட்டிகிட்ட எல்லாம் பார்த்து பேசணும், நாங்க எல்லாம் பதிலுக்கு ரிவஞ்ச் எடுத்தா நீங்க தாங்க மாட்டீங்க.” எனப் பாவனி மிரட்டுவது போலப் பேசி வைக்க…

“ஓகே மேடம் நீங்க சொல்லிடீங்க இல்ல… இனி பார்த்து நடந்துக்கிறேன்.” என்றான் ஈஸ்வர் சிரிப்பை அடக்கியபடி. அதைப் பார்த்து பாவனிக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

நேற்று பேசும் போது ஈஸ்வர் ஒன்று சொல்லி இருப்பான். “யாருன்னே தெரியவங்களுக்கு உலகத்தில எதோ ஒரு மூலையில் இருந்து யாரோ எல்லாம் உதவி பண்றாங்க. நீ உன் குடும்பத்துக்குப் பண்றதோ… இல்ல நான் பண்றதோ… பெரிய விஷயமே இல்லை. எப்படிப் பார்த்தாலும் நாம ஒரு குடும்பம். நாம செய்யாம யாரு செய்வா?” எனக் கேட்டிருப்பான்.

அவன் சொன்னது பாவனியை நல்ல விதத்தில் யோசிக்க வைத்திருந்தது.

Advertisement