Advertisement

இவர்கள் சென்ற சற்று நேரத்திற்கு எல்லாம் இருட்டி விட்டது. சிறிது நேரம் மணலில் உட்கார்ந்து இருந்து விட்டு, இரவு உணவையும் வெளியவே முடித்துக் கொண்டு வீடு வந்தனர்.

மகளுக்கும் உடல் கழுவி விட்டு பாவனியும் குளித்துவிட்டு வர… ஈஸ்வரும் உடைமாற்றி விட்டு முகம் கைகால் கழுவி கொண்டு வந்தான்.

“போன வாரம் ஊர் சுத்தி இருக்கு. இந்த வாரமும் வெளிய போயிட்டு வந்திருக்கோம். அம்மாவும் பொண்ணும் ஒரு மாசத்துக்கு வெளிய கூட்டிட்டுப் போகச் சொல்லி வாயை திறக்க கூடாது.” என ஈஸ்வர் மனைவி மகள் இருவரையும் பார்த்து சொல்ல…

“என்னை ஏன் சேர்த்துக்கறீங்க? உங்க பொண்ணு கேட்டா… அதனால நீங்க கூட்டிட்டு போனீங்க.” என்றாள் பாவனி.

“என்னது அவ கேட்டாளா…பீச்சுக்கு போகலாம்னு சொன்னது யாரு?”

“பாவனி, நான் உனக்காக எதுவுமே செஞ்சது இல்லையா…” என ஈஸ்வர் கேட்க… பேச்சு வேறு பக்கம் செல்வது உணர்ந்து, “நான் விளையாட்டுக்கு சொன்னேன் ஈஸ்வர்.” என்றாள்.

ஈஸ்வர் எதுவும் பேசாமல் கட்டிலில் சென்று படுத்துக்கொள்ள… பாவனி சென்று மகளுக்குப் பால் எடுத்து வந்து குடிக்கச் செய்தவள், மகளைத் தன் அருகில் மெத்தையில் போட்டு தட்டிக் கொடுக்க…. கார்னிகாவும் ஏற்கனவே களைத்து போய் இருந்ததால் உறங்கி விட்டாள்.

மகள் உறங்கியதும் கணவனைப் பார்த்தவள், :ஈஸ்வர் என் பக்கத்துல வாங்களேன்.” என அழைக்க…

“போடி உன் இஷ்ட்டத்துக்கு எல்லாம் ஆட முடியாது.” என்றான்.

பாவனி மகளைக் கட்டிலின் ஓரத்திற்கு நகர்த்திவிட்டு, அவள் புரண்டு விடாமல் இருக்கத் தலையணையை வைத்துவிட்டு கணவனின் பக்கம் சென்றவள், அவன் மார்பில் வைத்திருந்த கையை இறக்கி, அவன் தோளில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

“என் மேல கோபமா?”

“நம்ம கல்யாணத்துல இருந்து எல்லாம் உன் இஷ்ட்டப்படி தான் நடந்தது. என்னைக்கு நான் உன் விருப்பத்தை மதிக்காம இருந்தேன். எனக்கு மானே தேனேன்னு பேச வராது தான். ஆனா உன் கூடச் சந்தோஷமாத் தானே இருக்கேன். அப்புறம் ஏன் உனக்கு, நான் உனக்காக எதுவும் செய்வேன்னு நம்பிக்கை வர மாட்டேங்குது.”

“அந்த முரளியை அடிச்சு பல்லை உடைக்கணும் போலத்தான் இருந்தது. நான் அடிச்சிட்டு வந்திடுவேன். அது இன்னும் அவனைத் தூண்டி விட்டது போல ஆகிடக் கூடாது. நீ வேலைக்கும் போயிட்டு வரணும். அதை நினைச்சு தான் உன் சீப்கிட்ட பேசினதோட நிறுத்திகிட்டேன்.”

“உங்க அம்மாவுக்கு மாடி வீட்டை கூடக் காலி பண்ணி கொடுக்கத் தான் நினைச்சேன். அப்புறம் அவங்களுக்கு ஏறி இறங்க கஷ்ட்டமா இருக்குமேன்னு தான் விட்டுட்டேன்.”

“விமலுக்கு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு தான் இருக்கேன். யாருக்காக இதெல்லாம் பண்றேன்? உனக்காகத்தான். நீ எதையும் நினைச்சு கவலைப்படாம நிம்மதியா சந்தோஷமா இருக்கணும்னு தான். நான் இவ்வளவு யோசிக்கிறேன்.”

“நான் உனக்காக நிறையச் செய்வேன் தான் பாவனி. உனக்குத் தான் அதை ஏத்துக்க மனசு இல்லை. நானும் உன்னை வற்புறுத்தலை… உன் இஷ்ட்டத்துக்குத் தான் விடுறேன்.”

“இதுக்கு மேல நீ என்ன எதிர்பார்க்கிற? நீயும் என்கிட்டே பெரிசா உன் அன்பை காட்டினது எல்லாம் இல்லை. ஆனா எனக்குத் தெரியும், நீ என்னை ரொம்பப் பிடிச்சு தான் கல்யாணத்துக்குக் கேட்டேன்னு…. நீ வேற யாரையும் இப்படிக் கேட்டிருக்க மாட்ட, அது எனக்கும் தெரியும். நீயே பிரிஞ்சு போறேன்னு சொன்ன போதும், அது என் மேல இருந்த அக்கறையில தான்னு எனக்குத் தெரியும். உன்னால நானும் கஷ்ட்டபட்டுட கூடாதுன்னு நினைச்ச… எனக்கு எல்லாமே புரியத்தான் செய்யுது. ஆனா சில நேரம் நீ பண்றது தான் எனக்கே நான் சரியில்லையோன்னு நினைக்க வச்சிடுது.”

ஈஸ்வர் இன்று அவள் பேசியதை வைத்து இப்படிப் பேசவில்லை. இத்தனை நாட்கள் தன் மனதிற்குள் இருந்த குமுறல்களைத் தான் கொட்டிக் கொண்டிருந்தான்.

பாவனிக்கு எல்லாமே புரிகிறது. கணவனைப் பற்றியும் தெரிகிறது. அவனும் தானே அவளைப் பற்றிப் புரிந்து தானே வைத்திருக்கிறான், இன்னும் என்ன அவனிடம் விளக்குவாள். கணவனின் பக்கம் திரும்பி படுத்தவள், அவன் இதழில் அழுத்தி முத்தமிட…. ஈஸ்வரின் பேச்சு நின்று விட்டது.

இப்படித்தான் இவனின் பேச்சை நிறுத்த முடியும் என்று நினைத்தவள், இடைவெளி கொடுத்தால் மீண்டும் ஆரம்பித்து விடுவானோ என்ற பயத்தில், அவன் மீது ஏறி படுத்துக் கொண்டாள். அதற்கு மேல் ஈஸ்வர் பேசுவானா என்ன?

காலையில் பாவனி கண் விழித்த போது, மகளுக்கு அந்தப்பக்கம் ஈஸ்வர் படுத்திருந்தான். அவள் உறங்கிய பிறகு எழுந்து சென்றிருக்க வேண்டும்.

ஞாயிறுக்கிழமை என்பதால்…. வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால்… பாவனி நிதானமாகக் குளித்துக் கிளம்பினாள். இன்னும் கணவனும் மகளும் உறங்கிக் கொண்டு இருக்க… சமையல் அறைக்குச் சென்றவள், என்ன சமைப்பது என யோசனையில் இருக்க…கணவனுக்குப் பிடித்த பூரி செய்வோம் என அதைச் செய்ய ஆரம்பித்தாள்.

ஊர்வசியும் தாமதமாகத்தான் எழுந்து இருந்தார். மருமகள் கொடுத்த காபியை குடித்துவிட்டுக் குளிக்கச் சென்றார்.

கடைப்பையன் வந்து சாவி கேட்க… பாவனி எடுத்துக் கொடுத்தவள், பத்து நிமிடங்கள் கழித்துச் சென்று கடையில் விளக்கேற்றி ஊதுபத்தி பொருத்தி வைத்து விட்டு வந்தாள்.

ஈஸ்வர் தானும் குளித்து மகளையும் குளிக்க வைத்து அழைத்து வர… காலை உணவு தயாராக இருந்தது.

நேற்று தான் பேசியது அவள் மண்டையில் எவ்வளவு தூரம் ஏறியது என ஈஸ்வருக்கு ஒன்றும் புரியவில்லை. மனைவி அதைப் பற்றிப் பேச விரும்பாததால்… அவனும் அதோடு அதை விட்டு விட்டான். இனி அவன் அதைப் பற்றிப் பேசுவதாகவும் இல்லை.

பாவனி பூரி சுட்டு எடுக்க… விமல் அப்போது வீட்டிற்கு வந்தான். தம்பியை பார்த்ததும் பாவனி அவளாகவே அவனைச் சாப்பிட சொன்னாள்.

விமல் வேண்டாம் என மறுக்க…. “ஏன் டா சாப்பிடுறதுக்கு என்ன?” என ஈஸ்வர் கேட்க….

“அத்தை பண்ணி இருந்தா டேஸ்ட் நல்லா இருக்கும். இவ பண்ணது அது தான் யோசிக்கிறேன்.” என்றதும், பாவனி தம்பியை முறைக்க… ஈஸ்வர் பக்கென்று சிரித்தவன், “உனக்கு இருக்கத் தைரியம் எனக்கு இல்ல டா…” என்றான்.

“ரெண்டு பேரும் போயிடுங்க. எண்ணெய் சூடா இருக்கு, அப்படியே தூக்கி மேல ஊத்திடுவேன்.” என்றாள் பாவனி கடுப்பாக.

“காலையில ஏன் டா அவளை டென்ஷன் பண்றீங்க?” என்ற ஊர்வசி அவருக்குப் பூரி எடுத்துக் கொண்டு சொல்ல…

“உண்மையைத் தான சொன்னோம்.” என்றான் விமல்.

எண்ணெய் சட்டிக்குக் குறையாத கொதிப்பு பாவனி முகத்திலும் தெரிய…. அதைப் பார்த்த ஈஸ்வர், “போதும் டா, ஒரு நாளைக்கு இதுக்கு மேல உண்மை பேசக் கூடாது.” என்றான்.

பாவனிக்கு மிகவும் கோபம் வந்து அடுப்பை அணைத்தவள், “நான் யாருக்கும் இனி சமைக்கிறதா இல்லை.” என்றவள், மகளுக்கு மட்டும் தட்டில் பூரிகளை எடுத்து சென்று ஊட்டினாள்.

“பூரி சுடுறது பெரிய வேலையா… நாங்களே செஞ்சுப்போம்.” என்றான் ஈஸ்வர். அதுதானே என்ற விமல் பூரிக்கு தேய்க்க… ஈஸ்வர் சுட்டு எடுத்தான்.

இருவரும் சுட்டு முடித்ததும் ஹாலுக்கு எடுத்து வந்து உண்டனர்.

“மான ரோஷம் இருக்கிறவங்களா இருந்தா…. நான் செஞ்ச உருளைக் கிழங்கை தொடாதீங்க.” எனப் பாவனி சொல்ல….

“அதெல்லாம் உன்னைக் கட்டின அன்னைக்கே விட்டாச்சு.” என்ற ஈஸ்வர், “விமல் உனக்கு இருக்கா….” என்றதும், அவனும் இல்லை எனத் தோளைக் குலுக்க…. “அப்புறம் என்ன, நாம சாப்பிடலாம்.” என்றவன், தனக்கு எடுத்துக் கொண்டு விமலுக்கும் பரிமாற…. இருவரும் உண்டனர்.

உருளைக் கிழங்குக்குப் பதில் மட்டனோ சிக்கனோ செஞ்சிருக்கலாம் என ஈஸ்வர் மனைவியைச் சீண்ட…

“இனிமே உங்களுக்குப் பழைய சோறு தான்.” என்றாள் பாவனி பதிலுக்கு.

சாப்பிட்டதும் விமல் வீட்டுக்கு சென்று விட்டான்.

“இனிமே நான் சமைக்கலை அத்தை… நீங்களே சமையல் பண்ணுங்க.” என்றாள் பாவனி. அதைக் கேட்டு ஊர்வசி மகனை முறைத்தார்.

இப்போது பேசினால் இருவரும் தன்னைத் தொலைத்து விடுவார்கள் என ஈஸ்வருக்குத் தெரியும். அதனால் அமைதியாக இருந்தான்.

பத்தரை மணி போலக் கார்னிகாவை தூக்கிக் கொண்டு ஊர்வசி அவர் தோழி வீட்டிற்குக் கிளம்பினார். “அங்க சின்னப் பசங்க இருக்காங்க. விளையாட வச்சு கூட்டிட்டு வரேன்.” என அழைத்துச் சென்றார்.

Advertisement