Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 16

ஈஸ்வர் பாவனியின் நாட்கள் எப்போதும் போலச் செல்ல…. வெகு நாட்கள் கழித்து வைஜயந்தி அன்று தான் வீட்டிற்கு வந்திருந்தார். அன்று சனிக்கிழமை என்பதால் ஈஸ்வர் கடையில் இருந்தான். கார்னிகா மதிய உணவிற்குப் பிறகு உறங்கி இருந்தாள்.

வந்த நாத்தனாருக்கு ஊர்வசி குடிக்கக் கொறிக்கக் கொண்டு வந்து வைக்க… “நான் என்ன விருந்தாளியா? வாங்க நீங்களும் வந்து உட்காருங்க.” என வைஜயந்தி சொல்ல….

“பக்கத்துலேயே இருந்தாலும், இப்போ தானே வீட்டுக்கு வந்திருக்க… வந்த நாத்தனாரை கவனிக்க வேண்டாமா…” என ஊர்வசியும் இடக்காகத் தான் சொன்னார்.

“வரக் கூடாதுன்னு இல்லை அண்ணி. சும்மாவே என் மாமியார் என்ன பிரச்சனை பண்ணலாமான்னு பார்த்திட்டே இருப்பாங்க. இதுல வந்து போய் இருந்தா… அவங்க வாயிக்கு நாமே அவல் கொடுத்தது போல ஆகும்.”

“நான் இப்பவும் சொல்றேன். ஈஸ்வர் பாவனியை பார்த்ததும் தான் கல்யாணத்துக்குச் சரின்னு சொன்னான். அவன் வேற யாரையும் எல்லாம் கல்யாணம் பண்ணி இருக்க மாட்டான்.”

“எங்க மாமியாருக்கு அதெல்லாம் புரியாது. அவங்க சொல்றதையே தான் சொல்லிட்டு இருப்பாங்க.”

“சரி இப்போ அவந்திகா என்னதான் சொல்லுறா?”

“வீட்டோட மாப்பிள்ளைன்னா சரின்னு சொல்றா… ஏற்கனவே நான் என் மாமியாரை வச்சிட்டு படுற பாடு போதாதா… இதுல மாப்பிள்ளையும் வீட்ல வச்சுகிட்டு… நாங்க மட்டும் இருந்தா இருக்கிறதை வச்சு சாப்பிட்டுப்போம். வீட்டோட மாப்பிள்ளை இருந்தா அப்படி இருக்க முடியுமா? நாம அவருக்கு ஒன்னு செய்யத்தானே வேணும்.”

“அதுக்கு மேல இவ அப்பா… என்ன பண்றது நாம தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்னு சொல்றாரு.”

வைஜயந்தி பேசிக் கொண்டிருக்கும் போதே கார்னிகா எழுந்துவிட… அப்போது ஈஸ்வரும் கடையில் இருந்து வந்து விட்டான். அவனைப் பார்த்ததும் கார்னிகா அவனிடம் தாவ…. மகளை ஓய்வறைக்கு அழைத்துச் சென்று வந்தவன், ஊர்வசி கொடுத்த பாலை வாங்கி மகளைக் குடிக்க வைத்தான்.

அம்மா சென்று வெகு நேரம் ஆகியும் வரவில்லையே என அவந்திகாவும் இவர்கள் வீட்டுக்கு வர…. ஊர்வசி அவளுக்கும் குடிக்கக் கொண்டு வந்து கொடுத்தார். வைஜயந்தி ஊர்வசியிடம் சொன்னதையே ஈஸ்வரிடமும் சொன்னார்.

“பாவனியும் தான் வேலைக்குப் போறா, அத்தை பார்த்துக்கலையா? இல்ல பொண்டாட்டிக்காக அத்தான்தான் அவங்க வீட்டையே தூக்கி சுமக்கலையா…நீங்க மட்டும் தான் பெண்ணையும் மாப்பிள்ளையும் சேர்த்து வச்சுக்கக் கூட யோசிக்கிறீங்க.”

அவந்திகா பேசியதை கேட்டு ஊர்வசிக்கே அதிர்ச்சி தான். மகன் என்ன சொல்லப் போகிறானோ என்பது போல அவர் பயந்து போய்ப் பார்க்க….

“உனக்கு முழு உண்மையும் தெரியாம, எதைப் பத்தியும் பேசக் கூடாது அவந்திகா.” என்றான் ஈஸ்வர் கண்டிப்பது போல….

“என்ன தெரியாது, எல்லாம் நாங்க பார்த்திட்டு தானே இருக்கோம்.” என்றாள் அவந்திகா அலட்சியமாக.

“என்ன தெரியும் உனக்கு? பாவனி வீட்டை நான் தூக்கி சுமக்கிறதா நீ எப்படிச் சொல்லுற? வசதிக்காக எங்க பக்கத்தில இருக்காங்க அவ்வளவு தான். அவங்களுக்கு நான் எந்தச் செலவும் செய்யலை…. இருக்க வீட்டுக்கு கூட வாடகை கொடுத்திட்டு தான் இருக்காங்க.”

“பாவனி வேலைக்குப் போனாலும், அம்மாவுக்குக் கூடமாட வேலை செஞ்சு வச்சிட்டு தான் போவா… வேலை விட்டு வந்தும் செய்வா…. வீட்ல அவ இருக்கும் போது கார்னிகாவை அவ தான் பார்த்துப்பா. ஆனா நீ அப்படி இருப்பியா சொல்லு? நீ உங்க அம்மாவைத்தான் எல்லா வேலையும் செய்யப் போடுவ… அதுதான் அவங்க உன்னைக் கூட வச்சுக்க யோசிக்கிறாங்க.”

“அவங்களுக்கு வேற யாரு இருக்கா… அவங்க எனக்குப் பண்ணாம யாருக்கு பண்ணுவாங்க. நாளைக்கு அவங்களுக்கு வயசாகிட்டா நான்தானே பார்க்கணும்.” என அவந்திகா அப்போதும் அவள் நினைப்பதே சரி என்று பேச…

இப்படிப் பேசுபவளிடம் என்ன சொல்வது, உன் இஷ்ட்டம் என்பது போல ஈஸ்வர் தோலைக் குலுக்கியவன், “ஆனா எங்க வீட்டு விஷயம் இனி நீ பேசக் கூடாது. அது எனக்குப் பிடிக்காது.”

“தேவைபட்டா…. பாவனிக்காக, அவ வீட்டுக்காக நான் என்ன வேணா செய்வேன். அது எங்க குடும்ப விஷயம். அதெல்லாம் உனக்குத் தேவையில்லாதது.” என்றான் கடுமையாக.

“அம்மா வாங்க மா போகலாம்…” என அவந்திகா அவள் அம்மாவை அங்கிருந்து இழுத்துக் கொண்டு சென்றாள்.

“இவ என்ன டா இப்படி இருக்கா…. என்னைக்கு இருந்தாலும் உங்களுக்கு நான்தான் பார்க்கணும், அதனால இப்போ நீங்க எனக்குப் பாருங்கன்னு என்ன சட்டமா சொல்றா…” என ஊர்வசி கவலையாகப் பேச…

“இவ அப்பவும் அவங்க அப்பா அம்மாவை பார்க்கப் போறாளா என்ன? அப்ப எதாவது சாக்கு சொல்லுவா.” என்றான் ஈஸ்வர்.

பெற்றோரின் கஷ்ட்டத்தைப் புரிந்து கொள்ளாத பிள்ளைகள் என்ன பிள்ளைகள் என ஊர்வசிக்கு தோன்றியது. ஊர்வசி சற்று சோர்வாக இருப்பது போலத் தெரிந்தாலே… ஈஸ்வர் அவரை அடுத்து எந்த வேலையும் பார்க்க விட மாட்டான். பெற்றோரின் கஷ்ட்டத்தைப் புரிந்து கொண்ட பிள்ளைகள் கிடைப்பதும் வரம் தான்.

இந்த அவந்திகா வந்து விட்டுச் சென்றதில் ஈஸ்வருக்குத் தலை வலிப்பது போல ஆகிவிட்டது.

“அம்மா காபி கொடுங்க.” என்றவன் ஊர்வசி கொண்டு வந்து கொடுத்த காபியை குடித்து விட்டு, உடை மாற்றி வந்தவன், அம்மாவை போய்க் கூட்டிட்டு வரலாமா என மகளைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டான்.

அவன் மருத்துவமைனை சென்ற போது நேரம் ஐந்து மணி தான். வண்டியை நிறுத்துவிட்டு மகளைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.

வரவேற்பில் இருந்த பெண்ணிடம் பாவனி எங்கே இருக்கிறாள் என்று கேட்டுக் கொண்டு, அவள் இருக்கும் தளத்திற்கு மின்தூக்கியில் சென்றான்.

பாவனி அப்போது ஓய்வாகத்தான் இருந்தாள். உடன் பணி புரியும் நர்ஸிடம் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தாள்.

“வாங்கிற காசுக்கு வேலை எல்லாம் பார்க்கிறது இல்லை.” என ஈஸ்வர் கேட்க…. திடிரென்று கணவனையும் மகளையும் பார்த்து பாவனிக்கு இன்ப அதிர்ச்சி தான்.

“இவ்வளவு நேரம் வேலை இருந்தது. இப்போ தான் வந்தேன்.” என்றவள், அவளிடம் தாவிய மகளைப் பார்த்து, “அம்மா டிரஸ் மாத்திட்டு வரேன்.” எனச் சொல்லிவிட்டு சென்றாள்.

ஈஸ்வர் அந்த அறையைப் பார்வையால் ஆராய… நர்ஸ் அவனை உட்கார சொன்னார். மகளோடு அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்து ஈஸ்வர் காத்திருக்க… அப்போது சீனியர் டாக்டர் வந்தார்.

அவரிடம் அவன் தன்னை அறிமுகம் செய்து பேசிக் கொண்டு இருக்க… அதற்குள் பாவனியும் வந்துவிட… இனி யாருக்கும் பிசியோதெரபி கொடுக்கும் வேலை இல்லை எனச் சொல்லிவிட்டு பாவனி கணவனோடு கிளம்பினாள்.

இருவரும் சேர்ந்து நடக்கும் போது ஈஸ்வரின் பார்வை மனைவியை ஆராய்ந்தது. வண்டியின் அருகே வந்ததும், “எல்லாம் ஓகே தானே…” என அவன் கேட்க…

“ம்ம்… இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை. எல்லாம் ஓகே தான்.” என்றாள்.

எங்கோ வெளியில் செல்கிறோம் என நினைத்துக் கொண்டிருந்த கார்னிகா, வீட்டின் அருகே வந்ததும், “வீடு வேணா டாட்டா போகலாம்.” என்று சிணுங்க…..

“பார்த்தியா ஊர் சுத்தணுமாம் இவளுக்கு.” என்றதும்,

“இன்னைக்குச் சனிக்கிழமை தானே ஈஸ்வர், பீச்சுக்கு போவோமா… வீட்டுக்கு போய் அத்தையையும் கூட்டிட்டு போகலாம்.” என்றாள் பாவனி.

“இனிமே வார வாரம் வெளிய கூட்டிட்டுப் போகச் சொல்வான்னு போன வாரம் தானே டி சொன்ன… சொன்னது இவளுக்குக் கேட்டுடுச்சோ….” என்றவன்,

“கார்ல தானே போறோம், விமலை, உங்க அம்மாவையும் கூடக் கூட்டிட்டு போகலாம்.” என்றான்.

வீட்டிற்கு வந்ததும் தேவையானதை எடுத்துக் கொண்டு அப்போதே எல்லோரும் காரில் கடற்கரைக்குச் சென்றனர்.

அதிகம் நடக்கத் தேவையில்லாத இடமாகப் பார்த்து ஈஸ்வர் காரை நிறுத்த… வளர்மதி ஊன்றுகோலை பிடித்தபடி மெதுவாக நடந்து வர…. பாவனி அவள் அம்மாவுக்குத் துணையாக உடன் நடத்து வந்தாள்.

ஈஸ்வர் மணலில் இறக்கி விட்டதும் கார்னிகா நிற்கவே இல்லை. அவள் ஓட அவளைத் துரத்திக் கொண்டு ஈஸ்வரும் ஓடினான்.

மகளை எட்டி பிடித்த ஈஸ்வர், “எங்க ஓடுறீங்க குட்டிமா, உங்களுக்கு இங்க தெரியுமா…” என்றவன், அவள் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான்.

ஊர்வசியும் வளர்மதியும் மணலில் உட்கார்ந்துகொள்ள… ஈஸ்வரும் பாவனியும் மகளைக் கடல் அலையில் கால் நனைக்கச் செய்ய… சின்னப் பிள்ளைகளுக்குத் தண்ணீரில் ஆடுவது என்றால் கேட்கவா வேண்டும். கடல் அலை காலை தொடும் நேரம் எல்லாம் கார்னிகா சந்தோஷத்தில் ஆர்பரித்தாள். விமல் அவர்களைக் கைபேசியில் படம் பிடித்தான்.

Advertisement