Advertisement

ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் பாவனி வீட்டில் இருப்பாள். ஆனால் அன்று ஈஸ்வர் வீட்டில் இருக்க மாட்டான். காலையில் விமலுடன் கால் பந்து விளையாட சென்று விடுவான். பிறகு வந்ததும் குளித்துவிட்டு காலை உணவை உண்டுவிட்டு கடைக்குச் சென்றால்… பிறகு மதியம் உண்பதற்கு வருபவன், உண்டதும் மீண்டும் கடைக்குச் சென்று விடுவான்.

ஞாயிற்றுக்கிழமை தான் குடும்பமாகக் கடைக்கு வருவார்கள். கடை கூட்டமாக இருக்கும்.

அன்றும் அது போல மதிய உணவு உண்டதும், ஈஷ்வர் கடைக்குக் கிளம்ப…. மகளும் தந்தையிடம் தாவ……

“நீங்களும் வர்றீங்களா பாப்பு.” என்றவன் மகளைத் தூக்கிக்கொள்ள…

“இன்னைக்கு ஒருநாள் தான் என்கிட்டே இருக்கா… அவளைக் கொடுங்க.” என ஈஸ்வரிடம் இருந்த மகளை வாங்கியவள், “இப்பவே நான் இல்லாம தான் இருக்கா… இன்னும் கொஞ்ச நாள் போனா என்னை மறந்திடுவா போல…” என்றாள்.

ஈஸ்வர் அவளைப் பார்த்து முறைத்தவன், “அதுக்கு யார் காரணம்?” என்றவன்,

“என்னவோ உன்கிட்ட இருந்து உன் குழந்தையை வேணும்னே பிரிச்ச மாதிரி பேசுற. உன்னை நாங்க யாரும் வேலைக்குப் போகச் சொல்லலை. நீ வேலைக்குப் போறியேன்னு நாங்க தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்.”

“அம்மாவுக்குப் பகல்ல கூட ரெஸ்ட் இல்லை. என்னையும் தான் பார்க்கிற நேரம் எல்லாம் தொத்திக்கிறா… என் வேலையும் தான் கெடுது. நாங்க உனக்காக அட்ஜஸ்ட் பண்ணி போனா… நீ எங்களையே குத்தம் சொல்வியா?” என்றவன், மகளை வாங்கிக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

பாவனி வீட்டில் இருந்தால்… ஊர்வசி மதியம் சிறிது நேரம் படுத்து எழுந்து கொவ்ளார். இன்றும் அவர் அது போலப் படுத்திருக்க…. கணவன் மனைவி பேசியது அவர் காதிலும் விழுந்தது.

குழந்தையை விட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறோம். அதனால் மாமியாருக்கு தான் அதிக வேலை எனப் புரியாமல் இல்லை. இதையெல்லாம் நினைத்து பாவனிக்கு மனதில் ஏற்கனவே நிறைய அழுத்தம். வேலை செய்யும் இடத்திலும் நிம்மதி இல்லை.

எங்கோ காட்ட வேண்டிய கோபத்தை வீட்டில் காட்டி… கணவனின் கோபத்தைச் சம்பாதித்தவள், படுக்கையில் படுத்து அழுது கொண்டிருந்தாள்.

ஈஸ்வர் மகளின் ஆசைக்குக் கடைக்குத் தூக்கி சென்றவன், சிறிது நேரம் மட்டும் வைத்துக் கொண்டு இருந்துவிட்டு உடனே வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான்.

மகளை மனைவியின் அருகே கட்டிலில் விட்டவன், “பாப்பு அம்மா கூட இருங்க.” எனக் கடைக்குச் செல்ல திரும்ப… பாவனி அவனின் கை பிடித்தவள், “ஈஸ்வர் ப்ளீஸ் என்னோட இருங்களேன் என்றாள்.

ஈஸ்வர் கட்டிலில் சாய்ந்து உட்கார… தலையணையில் இருந்து தலையைக் கணவனின் மடிக்கு மாற்றியவள், அவன் மடியில் படுத்துக்கொண்டு ஒரே அழுகை.

“என்ன பாவனி எதுக்கு இப்போ இவ்வளவு அழுகை. நீ பேசின நானும் பதிலுக்குப் பேசினேன்.” என்றான். அவள் எதுவும் சொல்லவில்லை.

கட்டிலில் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்த கார்னிகா படுத்து உறங்கி விட…. பாவனியும் சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்திவிட்டு எழுந்துகொள்ள… ஈஸ்வரும் கடைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து விட்டான்.

“கார்னிகாவுக்கு முதல் பிறந்த நாள் வருதே…. இன்னைக்குப் போய் டிரஸ் நகை எல்லாம் வாங்கிட்டு வரக் கூடாது.” என்று ஊர்வசி சொல்ல…

மகளை அழைத்துக் கொண்டு சென்றால்… பொறுமையாகப் பார்த்து வாங்க முடியாது என்று அவள் உறங்கும் போதே… ஈஸ்வரும் பாவனியும் கடைக்குக் கிளம்பி சென்றனர்.

காலை கோவிலுக்குச் செல்ல அணிய பட்டுப் பாவடையும், மாலை விழாவுக்கு என இன்னொரு உடையும் வாங்கிக் கொண்டு பிறகு நகை கடைக்குச் சென்றனர். குட்டியாக ஒரு நெக்லஸ்… அதற்குப் பொருத்தமாகத் தோடு எனப் பார்த்தனர்.

பாவனிக்கு நகை எடுக்கும் போது, எனக்கு இதெல்லாம் பத்தி ஒன்றும் தெரியாது என்றவன், இப்போது மகளுக்கு மட்டும் அவனே தேர்வு செய்ய… பாவனி கணவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பார்வையைக் கவனித்தவன், “உனக்கும் எதாவது வாங்கிக்கிறியா?” என்றான்.

“எனக்கு இப்போ பார்த்து வாங்க மூட் இல்லை.” என்றாள்.

அப்படி மனைவி சொன்னாலும் விட்டு விடலாமா? ஆனால் ஈஸ்வர் சரி என்று விட்டு விட்டான்.

இவ்வளவு தான் இவன் அக்கறை என அதற்கும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாள்.

மனைவியின் முகத்தைப் பார்த்தவன், அவனே அவளுக்கு ஒரு கம்மலை தேர்வு செய்து நன்றாக இருக்கிறதா என்று கேட்க….அப்போது தான் பாவனியின் முகம் மலர்ந்தது.

“நல்லா இருக்கு.” என்றாள்.

“இது பிடிக்கலைனா பரவாயில்லை… நீயே உனக்கு வேற எதாவது பிடிச்சிருக்கா பாரு.” என்றதும்,

“இல்லையில்ல இதே நல்லா இருக்கு, இதே இருக்கட்டும் என்றாள்.

ஆனால் ஈஸ்வருக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை. அவன் வேறு பார்த்தவன், அவனே இரண்டு மூண்டு தேர்வு செய்து… மனைவியை அணிந்து பார்க்க சொல்லி… அதில் ஒன்றை தேர்வு செய்தான்.

இந்த நகை பாவனியால் வாங்க முடியாதது அல்ல… அவள் சம்பாதிக்கும் எல்லாவற்றையும் அவள் வீட்டில் கொடுப்பது இல்லை என ஈஸ்வருக்குத் தெரியும். கணவனாகத் தனக்கு வாங்கித் தர வேண்டும் என எல்லாப் பெண்களுமே எதிர்ப்பார்ப்பார்கள்….அந்த ஆசை அவளுக்கும் இருந்தது.

வெகு நாட்கள் கழித்து மனைவியின் முகத்தில் இருந்த மலர்ச்சி ஈஸ்வருக்கும் இதமாக இருக்க… அதை இழக்க விரும்பவதவன் வெளியவே சாப்பிட்டு போவோமா என்றான்.

இருவரும் சேர்ந்து ஹோட்டலுக்குச் சென்று இரவு உணவை அருந்தினர். “பாப்புவையும் கூட்டிடு வந்திருக்கலாம், அவளும் இருந்திருந்த நல்லா இருக்கும்.” எனப் பாவனி சொல்ல… இன்னொரு நாள் வருவோம் என்ற ஈஸ்வர் மனைவி கேட்ட ஐஸ்கிரீமும் வாங்கிக் கொடுத்தான்.

இருவரும் வீடு வரும் போது ஒன்பது மணி ஆகிவிட்டது. வீட்டிற்குள் சென்றால்… கார்னிகா அழுது கொண்டிருந்தாள்.

மகள் அழுவதைப் பார்த்ததும் இருவரும் வாங்கி வந்தவைகளை ஹாலிலேயே போட்டுவிட்டு மகளிடம் செல்ல… கார்னிகா அம்மா என்று பாவனியிடம் தான் தாவினாள்.

“நீ ஆபீஸ் போயிட்டேன்னு நினைச்சிட்டு இருந்திருப்பா போல… நீ எப்பவும் வர்ற நேரத்துக்கு வரலைனதும், அம்மா அம்மான்னு ஒரே அழுகை.” என ஊர்வசி சொல்ல…

பாவனி மகளைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றவள், மகளைக் கொஞ்சி சமாதனம் செய்து, “அம்மாவை தேடினீங்களா குட்டி….” என்றவள், மகளுக்குப் பால் கொடுக்க… அந்த வாண்டும் அழுகையை நிறுத்து விட்டு பால் குடிக்க ஆரம்பித்து விட்டது.

வாங்கி வந்தவைகளை அவன் அம்மாவிடம் காட்டிவிட்டு, அவருக்கு ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த உணவையும் கொடுத்து உண்ண சொல்லிவிட்டு, ஈஸ்வர் அறைக்கு வந்தவன், உடைமாற்றி விட்டுக் கட்டிலில் உட்கார்ந்தான்.

பால் குடித்து முடித்திருந்த அவன் மகள் அவனிடம் தாவ….

“வேண்டாம் நீ உங்க அம்மாகிட்டயே இரு. உன் அம்மாவைத் தான தேடின நீ…. என்னைத் தேடலை தான…”

“உங்க அம்மா ஆபீஸ் போற நேரம் மட்டும் நான் வேணும். உங்க அம்மா ஆபீஸ்ல இருந்து வர்ற நேரம் தெரிஞ்சு வச்சிருக்க நீ.”

“அப்படியே அம்மா போலத்தான் பெண்ணும்.” என அவன் பேச பேச பாவனியின் முகம் புன்னகையால் விரிய… அவன் மகளுக்கு அவன் சொல்வது புரியுமா என்ன? இப்போது தான் அடியெடுத்து நடக்க வைக்க ஆரம்பித்திருந்தவள், சென்று தந்தையின் மீது விழுந்து படுத்துக் கொண்டாள்.

“ஈஸ்வர் என்னைச் சொல்லுங்க? அவளை ஏன் சொல்றீங்க? சின்னக் குழந்தைக்கு என்ன தெரியும்? நீங்க எப்பவும் அவளோட இருக்கீங்க? நான் தான வெளியே போறேன். அதனால தேடியிருப்பா.” என்றாள் பாவனி மகளுக்குப் பரிந்து கொண்டு.

“மதியம் நீதானே என் குழந்தை என்னை மறந்திடுவா போலன்னு சொன்ன. நீ எதுனாலும் பேசலாம், நான் பேசக் கூடாது.” என்றதும்,

“ஐயோ அப்போ தெரியாம சொல்லிட்டேன் விடுங்க.” என்றாள்.

“எதுக்குப் பாவனி அழுத?” என்றதற்கு, “அது என்னவோ அப்ப ஒருமாதிரி இருந்துச்சு.” என்றாள்.

தன் மேலிருந்த மகளை நிமிர்த்திய ஈஸ்வர், “உனக்கு அப்பா பிடிக்குமா அம்மா பிடிக்குமா?” என்றதற்கு, கார்னிகா அப்பா என்றது, உடனே பாவனி மகளின் முகத்தைத் தன் பக்கம் திருப்பி, “உனக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா? எனக் கேட்டதும் அம்மா என்றது.

இருவரும் இப்படியே மாற்றி மாற்றிக் கேட்க…. சின்னக் குழந்தை தானே அப்பா அம்மா என்று சேர்த்து சொல்ல தெரியவில்லை…. திருமணமாகி இத்தனை நாட்களில் மனம் விட்டு பேசி, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அன்பை புரிந்துகொள்ள அவள் பெற்றோருக்கே தெரியாத போது… சின்னக் குழந்தைக்கு மட்டும் என்ன தெரியும்.

பாவனி காலையில் சீக்கிரம் எழுந்து ஊர்வசிக்கு வீட்டு வேலைகளில் உதவிவிட்டு வேலைக்குச் செல்பவள், மாலை நேரமாவது மகளோடு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆறு மணிக்கே வீடு திரும்ப ஆரம்பித்தாள்.

கார்னிகாவின் முதல் வருட பிறந்த நாளை வீட்டிலேயே சிறப்பாகக் கொண்டாடினர். காலையில் ஊர்வசி வளர்மதியையும் அழைத்துக் கொண்டு குடும்பமாகக் கோவிலுக்குச் சென்று வந்தவர்கள், மாலையில் அக்கம்பக்கம் இருப்போரை அழைத்து வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடினர்.

விமல் அவனே மூன்று அடுக்கலாகச் சாக்லேட் கேக் செய்திருக்க…. அதன் சுவையும் அருமையாக வந்திருக்க… வந்திருந்த விருந்தினர் எல்லாம் ஆச்சர்யபட்டு தான் போனார்கள். யாருக்கு என்ன திறமை இருக்கும் என்று கணிக்க முடியாதே….

எங்களுக்கு இது போலச் செஞ்சு தர முடியுமா என ஆளாளுக்குக் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

தன் மகளின் பிறந்த நாளில்… தம்பியின் வாழ்க்கையிலும் சிறு ஒளி தென்பட… விமலும் வாழ்க்கையில் முன்னேறி விடுவான் என்ற நம்பிக்கை பாவனிக்கு வந்திருந்தது. கணவனோடு அதைப் பற்றிப் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

Advertisement