Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 14

மகளுக்குப் பத்து மாதங்கள் நிறைவு ஆனதும், பாவனி அவள் துறை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு விண்ணபித்தாள். இந்தமுறை சற்று நகரில் இருக்கும் பெரிய மருத்துவமனைகளில் மட்டும்தான் விண்ணபித்தாள். சம்பளமும் நிறைய வரும், அதோடு ஒரே இடமாக வேலை பார்க்கலாம் என நினைத்தாள்.

ஈஸ்வரிடமும் விண்ணப்பிபதற்கு முன்பே சொல்லிவிட்டாள். அவனும் யார் வீட்டுக்கும் செல்லாமல்… ஒரே இடமாக இருந்து வேலை பார்க்க சொன்னான்.

அவள் எதிர்பார்த்தது போல நகரில் பிரபலமாக இருந்த ஆர்த்தோ மருத்துவமனை ஒன்றில் இருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தனர். கை கால் எலும்பு அறுவை சிகிச்சைக்குப் பெயர் பெற்ற மருத்துவமனை. நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை முடிந்தும் கொடுக்க வேண்டிய பிசியோதெரபி பயிற்சிக்கு அவர்களுக்கு மருத்துவர் தேவைப்பட்டது. ஏற்கவனே சீனியர் பிசியோதெரபி மருத்துவர் ஒருவர் இருந்தார். பெண் மருத்துவரும் தேப்வைபட்டதால் அந்த இடத்திற்குப் பாவனியை தேர்வு செய்தனர்.

முதல் நாள் பாவனி புடவையில் வேலைக்குச் செல்லக் கிளம்பி கொண்டிருக்க… “நீ வெளிய வேலைக்குப் போகனுமா பாவனி? நம்ம கடையைப் பார்த்திட்டு இருக்கக் கூடாதா?” என்று ஊர்வசி கேட்க…

பாவனி என்ன சொல்வதென்று யோசிக்க… அதற்குள் ஈஸ்வர், “அம்மா உங்க மருமகளைப் பத்தி நீங்க என்ன நினைச்சீங்க? ஒரு மணி நேரத்துக்கு ஐநூறு ரூபா வாங்கிற டாக்டர்… அவளுக்கு நான் சம்பளம் கொடுத்து கட்டுபடி ஆகுமா.” என்றான் கேலியாக.

“ஓ…அப்படியா?” என்ற ஊர்வசிக்கு அவள் வேலைக்குச் செல்வதில் அவ்வளவு விருப்பம் இல்லை எனப் புரிந்து தான் இருந்தது.

“அக்கௌன்ட்ல இருந்து பணம் குறையலை… ஆனா கடைக்கு எப்படி ஆர்டர் போட்ட” என்று ஈஸ்வர் கேட்க… “உங்க பணம் தான் என்கிட்டே இருந்ததே ஈஸ்வர், அதை வச்சு போட்டுட்டேன்.” என்றாள்.

என்னோட பணம் இவகிட்ட என்ன என்று யோசித்தவனுக்கு முதலில் ஞாபகம் வரவில்லை. அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள், “வாடகை பணம் ஈஸ்வர். நீங்க வாங்கிக்கிற மாதிரி தெரியலை… இப்போ கடைசியா ரெண்டுமுறை அதை வச்சு தான் ஆர்டர் போட்டேன் என்றாள்.

ஈஷ்வர் முகம் மாறினாலும் அவன் அமைதியாக இருக்க… ஊர்வசி சமையல் அறைக்குச் சென்றுவிட்டார்.

ஹால் தரையில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த மகளைத் தூக்கியவள், “பாப்பு குட்டி, அப்பாவுக்கும் அப்பம்மாவுக்கும் தொல்லைக் கொடுக்காம சமத்தா இருக்கணும்.” என,

“அவளைப் பாத்துக்க எங்களுக்குத் தெரியும், உன் ப்ரீ அட்வைஸ் எல்லாம் என் பொண்ணுக்கு தேவையில்லை. நீ கிளம்பிட்டே இரு.” என்றான்.

“ஏன் ஈஸ்வர் எவ்வளவு கோபம்?”

“எனக்கு அப்படித்தான் பேச தெரியும். நீ எல்லா விஷயத்துலையும் கறாரா இருக்க இல்ல… இனி நானும் அப்படி இருக்கேன்.” என்றவன் மகளை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டேன்.

“நீங்க வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொன்னா என்னால என்ன செய்ய முடியும்? இல்லை அத்தை பாப்பாவை பார்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டா…. என்னால வேலைக்குப் போக முடியுமா? உங்க சப்போர்ட் இல்லாம நான் இல்லை ஈஸ்வர். ஆனா என் குடும்பச் செலவுக்கும் நான் உங்களை எதிர்பார்த்திட்டு இருக்க முடியாது.”

பாவனி பேசுவது சமையல் அறையில் இருந்த ஊர்வசிக்கும் கேட்டுத்தான் இருந்தது. அதுவரை அவருக்கு இருந்த மனத்தாங்கல் குறைந்தது.

சமையல் அறையில் இருந்து வந்தவர், “நாங்க உன் பெண்ணைப் பத்திரமா பார்த்துக்கிறோம். கவலை இல்லாம வேலைக்குப் போயிட்டு வா.” என்றார்.

“என்னை இன்னைக்கு ஒரு நாள் கிளினிக்ல விடுறீங்களா?” எனப் பாவனி ஈஸ்வரிடம் கேட்க… ஊர்வசி அவனிடம் இருந்து பேத்தியை வாங்கிக் கொண்டார்.

அம்மாவும் அப்பாவும் பைக்கில் செல்வதைப் பார்த்து அவர்களின் மகள் சிணுங்க…

“உன் அப்பா அம்மாவை விட்டுட்டு திரும்பி வரும்போது நீ தனியா உட்கார்ந்து வர முடியாது அப்புறம் போகலாம்.” என ஊர்வசி பேத்தியிடம் சொல்ல… மகளை அழுக விட்டு ஈஸ்வர் கிளம்புவானா என்ன?

ஈஸ்வர் உள்ளே சென்று எதோ எடுத்து வந்தான். அவன் இடுப்போடு பெல்ட் அணிந்து, அவனுக்கு முன்புறம் மகள் இருப்பது போல உட்கார வைத்துக் கொண்டான். பாவனி தன் மாமியாரிடம் சொல்லிக் கொண்டு, வண்டியின் பின் இருக்கையில் ஏறி உட்கார்ந்தாள்.

இருபது நிமிடங்கள் பயணத்தில் மருத்துவமனையின் நுழைவாயிலில் மனைவியை ஈஸ்வர் இறக்கிவிட…

“மூஞ்சை இப்படியே உர்ருன்னு வச்சுக்காதீங்க.” என்றாள் பாவனி.

“நீ போடுற சோப்புக்கு எங்க அம்மா வேணா மயங்குவாங்க. ஆனா நான் இல்லை.”

“எப்படி எப்படி…. நான் வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொன்னா…. நீ கேட்டுட்டு வீட்ல உட்கார்த்திடுவ…. என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டே இருப்ப… ஏற்கனவே நீ அப்படிச் சொன்னவ தானே…. அங்கயே வச்சு உன்னைப் பிரிச்சு மேஞ்சிருப்பேன். அம்மா வருத்தபடுவாங்கன்னு விட்டுட்டேன்.” என்றான்.

“நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சில விஷயம் யோசிச்சு, அபவே நாம பேசி முடிவு எடுத்திருக்கணும். கல்யாணம் பண்ணிட்டு விட்டுட்டு போறேன்னு சொன்னது தப்பு தான்.” என்றாள்.

“இதையே நான் சொல்லி இருந்தா… நீ என்னைச் சும்மா விட்டிருப்பியா? போ டி.” என்றவன், வண்டியை திருப்பிக் கொண்டு சென்று விட்டான்.

“அம்மா…” என மகள் சொல்வது காதில் விழுந்தது. இப்போது தான் சின்னச் சின்ன வார்த்தைகள் பேசுகிறாள். அவர்கள் சென்ற பிறகும் சிறிது நேரம் அங்கே நின்றிருந்தவள், பிறகே மருத்துவமனை உள்ளே சென்றாள். அந்த மருத்துவமனையில் மருத்துவர்களுக்கும் யூனிபார்ம் உண்டு. பாவனி உடைமாற்றி விட்டு அவள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். காலை பத்து மணியில் இருந்து மாலை ஏழு மணி வரை அவள் வேலை நேரம்.

பகல் நேரம் வளர்மதியுமே வந்து பேத்தியை பார்த்துக் கொள்வார். அவர் இருக்கும் நேரம் ஊர்வசி மதிய சமையலை முடித்து விடுவார். ஈஸ்வருக்கும் அவன் வேலையைப் பார்க்க முடிந்தது. விமல் கல்லூரி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தான்.

மாலை பாவனி ஆட்டோவில் வீட்டுக்கு சென்று விடுவாள். மருத்துவமனையில் இருந்து செல்வதால் அவள் அம்மா வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு, பிறகுதான் அவர்கள் வீட்டுக்கு செல்வாள். மகள் அவளைப் பார்த்ததும் தாவி கொண்டு வருவாள் அதனால் தான்.

கார்ணிகாவுக்கு இரவு உணவு ஏழு மணிக்கெல்லாம் முடிந்து விடும். ஊர்வசி குழைய பால் சாதம் ஊட்டி விட்டு விடுவார். ஒன்பதரை மணிக்கெல்லாம் அவள் அம்மாவிடம் பால் குடித்துவிட்டு உறங்கி விடுவாள். காலை இரவு மட்டும், பாவனி அவளுக்குத் தாய்பால் கொடுத்து கொண்டிருந்தாள்.

படித்த படிப்புக்காக, பேஷனுக்காக, ஆசைக்காக என வேலைக்குச் செல்லும் பெண்கள் இருந்தாலும், பெரும்பாலும் குடும்பத்தில் இருக்கும் பொருளாதாரத் தேவைக்குத் தான் அதிகம் வேலைக்குச் செல்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் பிரச்சனையில் வேலை பார்க்கும் இடத்திலும் தொல்லைகள் இருந்தால் என்ன செய்வது?

பாவனி வேலையும் செய்யும் மருத்துவமனையில் அவளின் சீனியர் முரளி அதிக வயது இல்லை… நடுத்தர வயது ஆள் தான். ஆனால் பாவனியிடம் வெளிப்படையாகவே வழிவான்.

“எனக்குக் கல்யாணம் ஆகும் போதெல்லாம், என் கண்ணில நீங்க படாம போயிட்டீங்களே.” என்பான். அவளைத் தலைமுதல் கால் வரை பார்வையால் வருடியபடி, உங்க கணவர் கொடுத்து வைத்தவர் என்பான். அவன் என்ன அர்த்தத்தில் சொல்கிறான் எனப் பாவனிக்குப் புரியாமல் இல்லை.

இப்போது தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள்… இதை வேறு பெரிய பிரச்சனை ஆக்கினால்… வேலையை விட்டுச் செல்லும் சூழ்நிலை வரலாம். வீட்டில் தெரிந்தால் வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லி விட்டால் என மனதிற்குள் வைத்து குமைந்து கொண்டிருந்தாள். ஆனால் அதற்காக முரளி சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பாள் என்றில்லை. அவன் பேச வாய்ப்பே கொடுக்காமல் விலகி சென்று கொண்டு இருந்தாள்.

ஓய்வ நேரத்தில் கூட அவள் அறைக்குச் சென்றால் முரளியை பார்க்க வேண்டியது வரும் எனச் செவிலியர்கள் அறைக்குச் சென்று உட்கார்ந்து கொள்வாள். உடன் பணி புரியும் செவிலியர்களுக்கு முரளியை பற்றித் தெரியும். ஆனால் சில நேரம் பணியின் காரணமாக முரளியிடம் பேச வேண்டியது இருக்கும். வாய்ப்பு கிடக்கும் போதெல்லாம் முரளி அதைப் பயன்படுத்திக் கொள்ளவே பார்ப்பான். எப்போது வெடிக்கப் போகிறோம் எனப் பாவனி தெரியாமல் இருக்க…. ஆனால் அவள் வெடித்த இடம் தான் வேறு.

Advertisement