Advertisement

ஈஸ்வர் வீட்டில் இருந்ததால்… ருக்மணியும் அடக்கி தான் வாசித்தார். ஆனால் மகள் உறங்கும் போதே உண்டு விடுவோம் என்று பாவனி எழுந்து வந்தவள், ருக்மணியை ஹாலில் பார்த்ததும், அவரைப் பார்த்து வாங்க என்று சொல்லிவிட்டு அங்கேயே அவளும் உட்கார்ந்தாள்.

உடம்புக்கு எல்லாம் நல்லா இருக்கா?” என்றவர், ஊர்வசியைப் பார்த்து “உனக்குத் தான் வேலை அதிகம் இருக்கும். நீதான் ஆள் மெலிஞ்சு போய் இருக்க.” என்றார்.

பிள்ளை பெத்த வீட்ல வேலை நிறைய இருக்கும். அவங்க அம்மாவுக்கும் பார்க்க முடியாம போயிடுச்சு.” என அவர் வருத்தமாகப் பேச….

இதற்கு மேல் இவரைப் பேச விட்டால் வம்பு என்று நினைத்த ஊர்வசி, “அப்படி ஒன்னும் பெரிய வேலை இல்லை.” என்றவர், பாவனியை பார்த்து நீ போய்ச் சாப்பிடு என்றார்.

பாவனி சென்று உணவை எடுத்துக் கொண்டு வந்தவள், கணவன் இருந்த அறைக்குள் சென்று, அங்கருந்த இன்னொரு இருக்கையில் உட்கார்ந்து கொண்டு உண்ண… ஈஸ்வர் அவள் என்ன உண்ணுகிறாள் என்று பார்த்தான்.

நல்லெண்ணையில் நிறையப் பூண்டு, வெங்காயம் வதக்கி, அதோடு ஈரலை சேர்த்து வேக வைத்து, பாவனிக்கு இப்போது காரம் கூடாது என்று, வெறும் மஞ்சள் தூள், மிளகு சீரகம் மட்டும் சேர்த்து ஊர்வசி தொக்குச் செய்திருந்தார்.

அவள் அதைச் சாதத்தோடு பிசைந்து உண்டவள், கணவனுக்கும் ஒரு வாய் ஊட்டிவிட…. ஈஸ்வருக்கும் பிடித்து இருக்க… மேலும் அவள் அவனுக்குக் கொடுக்க… எனக்குப் போதும் நீ சாப்பிடு என்றான்.

பாவனி உண்டுவிட்டு எழுந்து வெளியே வர… ருக்மணி ஊர்வசியிடம் “அவன் தம்பிகிட்ட எல்லாம் குழந்தையைக் கொடுத்திடாத கவனமா இரு. அவன் எந்த நேரத்தில என்ன பண்ணி வைப்பனோ.” என ரகசியாமாகச் சொல்லிக் கொண்டிருக்க…. பாவனி வருவதைக் கவனித்த ஊர்வசி, “சாப்பிட்டியா… இன்னும் கொஞ்சம் சாப்பிடு.” என்றதற்கு, போதும் என்றவள், கைகழுவிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள்.

பாவனி காதில் எதாவது விழுந்திருக்குமோ என ஊர்வசிக்கு அச்சமாக இருக்க… ருக்மணியைக் கிளப்ப வழி தெரியாது, ஈஸ்வர் சாப்பிட வா என்று அவர் சத்தமாக அழைக்க… ஈஸ்வரின் பெயரைக் கேட்டதும் ருகம்ணி பாட்டியும் பிறகு வருவதாகச் சொல்லி சென்று விட்டார்.

பாவனியும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. பாவனிக்கு ருக்மணி சொன்னது கேட்டிருந்தால்… கண்டிப்பாக ஈஸ்வரிடம் அவள் எதாவது சொல்வாள் என ஊர்வசி எதிர்பார்த்தார். ஈஸ்வர் தான் உடனே குதிக்கத் தொடங்கி இருப்பானே… அப்படி எதுவும் நடக்காததால்… அவளுக்குக் கேட்கவில்லை என்று அவரும் விட்டுவிட்டார். ஆனால் சில நாட்களில் மாற்றத்தை நன்றாகவே உணர்ந்தார். விமல் இவர்கள் வீட்டிற்கு வருவதே இல்லை.

எதற்காவது வந்தால் கூட வெளியே இருந்தே அவன் அக்காவை அழைத்துச் சொல்லிவிட்டு சென்று விடுவான். ஆனால் தினமும் ஈஸ்வரை பார்க்க கடைக்குச் சென்று விடுவதால்… ஈஸ்வருக்கு ஒன்றும் தெரியவில்லை.

இப்போதெல்லாம் மகள் உறங்கும் நேரம் பாவனி அவள் அம்மா வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் இருந்து விட்டு வருவாள். அப்படி அவள் சென்றிருக்கும் போது… ஊர்வசியே அன்று ருக்மணி பேசியதை சொல்லியவர், “நான் பாவனிக்கு கேட்டிருக்காதுன்னு நினைச்சேன். ஆனால் விமல் இப்போ இங்க வர்றதே இல்லை.” என்றார் மகனிடம்.

ஐயோ சும்மாவே அவ ஏன் டா கல்யாணம் பண்ணோம்னு இருக்கா…. எங்க கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க அம்மாவுக்கு இப்படி ஆகி இருந்தா… அவ கல்யாணத்தைப் பத்தி யோசிச்சு கூட இருக்க மாட்டா… இதுல இப்படி எல்லாம் பண்ணி வைங்க.” என்றவன்,

அந்தக் கிழவி இனிமே இங்க வந்துச்சு அவ்வளவு தான்.” என,

நான் பார்த்துக்கிறேன். நீ எதாவது பேசி வைக்காத. உன் அத்தைக்குத் தான் கஷ்ட்டமா இருக்கும். ஏற்கனவே இந்த அவந்திகா அவங்களுக்குக் கொடுக்கிற பிரச்சனை போதாதா….”

அவளுக்கு என்னவாம்?”

இன்னும் கல்யாணத்துக்குச் சரின்னு சொல்ல மாட்டேங்கிறாளே….”

அவ கல்யாணம் பண்றா பண்ணாம போறா… ஆனா அதுல என்னைக் கோர்த்து விட்டா பாருங்க அதுதான் என்னால இன்னும் நம்ப முடியலை….”

ஆமா டா சொந்தகாரங்களை எல்லாம் எதோ நாம அவளை வேண்டாம்னு சொல்லிட்டு வேற இடம் பார்த்த மாதிரி பேச வச்சுட்டாங்க. இவங்க பண்றது எல்லாம் யாருக்கு தெரியுமோ இல்லையோ… கடவுளுக்குத் தெரியும்.” எனப் புலம்பினார் ஊர்வசி.

அன்று இரவு அறையில் மகளை மடியில் வைத்துக் கொண்டிருந்த ஈஸ்வர், “விமல் ஏன் வீட்டுக்கு வர்றது இல்லை.” என்றான்.

அவன் இங்க வந்தா அத்தை அவனைச் சாப்பிடாம விட மாட்டேங்கிறாங்க. அவங்களுக்குக் கூடுதல் வேலை தானே… இப்ப பாப்பாவும் இருக்கா… அதுதான் நானே வரேன், நீ வராதேன்னு சொன்னேன்.”

அது மட்டும் தான் காரணமா?” ஈஸ்வர் கேட்க….

அதுவும் ஒரு காரணம்.” என்றவள், “என் தம்பியை நினைச்சு யாரும் பயப்படாம இருக்கலாம் இல்லையா…” என்றாள்.

ருக்மணி பாட்டி பேச்செல்லாம் நீ மதிச்சு எடுத்துப்பியா என்ன?”

எங்களுக்கு இதெல்லாம் புதுசு இல்லை ஈஸ்வர். விமல் சில நேரம் ஹைப்பரா தான் இருப்பான். குழந்தையைச் சட்டுன்னு தூக்கிட்டா கூடச் சுளுக்கிக்கும் தான… அதனால இருக்கட்டும் விடுங்க.” என்றாள்.

அவன் மனசு கஷ்ட்டபடுற மாதிரி பேசிட்டியா?”

இல்லை… அத்தைக்கு வேலைன்னு தான் சொன்னேன்.” என்றாள்.

நீ எதுனாலும் என்கிட்ட சொல்ல வேண்டியது தான… நாமதான் இத்தனை பேர் வீட்ல இருக்கோமே… அதோட விமல் சொன்னா கேட்கிறவன் தான். நீ அவன்கிட்ட அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது. அவன் வீட்டுக்குள்ள கூட வர்றது இல்லைன்னு அம்மா வருத்தப்படுறாங்க.”

பரவாயில்லை ஈஸ்வர். உங்க வீட்ல நீங்க இவ்வளவு விட்டுக் கொடுத்து போறதே பெரிசு தான். அதுவும் குழந்தை விஷயத்துல கவனமா இருக்கிறது தப்பு இல்லை.”

விடியும் வரை பேசினாலும் பாவனி இறங்கி வரவே மாட்டாள் என ஈஸ்வருக்குத் தெரியும். அதனால் அப்போது விட்டுவிட்டான்.

மறுநாள் கடை மூடும் வரை விமல் ஈஸ்வருடன் தான் இருந்தான். இருவரும் சேர்ந்து தான் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வரும் நேரம் எனப் பாவனியும் வெளியே தான் நின்றிருந்தாள்.

ஈஸ்வர் விமலை வீட்டுக்குள் அழைக்க… தன் அக்காவை பார்த்தவன், “இல்ல நான் வீட்டுக்கு போறேன்.” என்றான்.

இங்க பாரு ஒன்னு உள்ள வா… இல்லைனா உங்க அக்காவையும் கூட்டிட்டு கிளம்பு.” என்றான் ஈஸ்வர் கோபமாக.

விமல் இருவரையும் மாறி மாறி பார்க்க… ஈஸ்வர் பாவனியை பார்த்து முறைக்க…

வா விமல்…” என பாவனியே அழைக்க… விமல் உள்ளே வந்தான். ஈஸ்வர் சென்று மகளைத் தூக்கிக் கொண்டு வர….

வெளியே இருந்து வந்திட்டு, கை கூடக் கழுவாம பேபியை தூக்குவாங்களா?” என்ற விமல் சென்று கை கழுவிவிட்டு வந்தவன், தன் மருமகளின் கன்னத்தில் மிருதுவாக வருட…. அந்தக் குட்டி வாண்டு கண் திறந்து பார்த்தது.

நீ தூக்கிக்கிறியா?” என ஈஸ்வர் கேட்க…

இல்லை… எல்லோரும் தூக்க கூடாதுன்னு அம்மா சொன்னாங்க. பாப்பாவுக்கு உடம்பு வலிக்குமாம்.” என்றான்.

பாரு அவன் அம்மாவே சொல்லித்தான் வைத்திருக்கிறார். அதற்குள் இந்த ருக்மணி பாட்டி என்னவெல்லாம் பேசி விட்டார் என ஊர்வசி நினைத்து வருந்தினார்.

ஈஸ்வர் சென்று கைகால் கழுவி விட்டு வரும் வரை விமல் விடவும் இல்லை. “எப்பவும் கழுவிட்டு தான் டா தூக்குவேன். இன்னைக்குத்தான் அப்படியே தூக்கிட்டேன்.” என்றான் ஈஸ்வர்.

ஊர்வசி அவனைச் சாப்பிட சொல்ல…. இல்ல அம்மா சமைச்சிருப்பாங்க எனச் சொல்லி விமல் ஓடி விட்டான்.

இனிமே நீயா எதாவது முடிவு எடுத்து விமல்கிட்ட பேசின… உன்னைக் கொன்னுடுவேன்.” என்றான் ஈஸ்வர் மனைவியைப் பார்த்து.

இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்களோ என ஊர்வசிக்குப் பயமாகப் போய்விட்டது.

போதும் ஈஸ்வர், இதோட இதை விடு.” என்றார் மகனிடம். பாவனியும் எதுவும் பேசவில்லை.

விமல் தினமுமே ஈஸ்வரோடு வருவான் சிறிது நேரம் இருப்பான் பிறகு சென்று விடுவான். இங்கே உண்ண மட்டும் மாட்டான். அவன் அக்கா சொல்லும் வரை அவன் இங்கே உண்ண மாட்டான் என ஈஸ்வருக்குத் தெரியும். ஆனால் ஊர்வசி அப்படியெல்லாம் விடுவிட மாட்டார். எதாவது நல்லதாகச் செய்யும் போது, அவர்கள் வீட்டிற்கே சென்று கொடுத்துவிட்டு வருவார்.

மூன்றாம் மாதம் ஈஸ்வர் பாவனியின் மகளின் பெயர் சூட்டும் விழாவை சிறப்பாகச் செய்தனர். ஈஸ்வர் மகளுக்குக் கார்னிகா எனப் பெயரிட்டான். ராகவி அப்போது வந்து இரண்டு வாரங்கள் தங்கிவிட்டு சென்றாள்.

ஊர்வசி காலையில் சமையல் முடித்துவிட்டு, மகன் கல்லூரி சென்றதும், கணினியில் வேலை பார்க்கக் உட்கார்ந்து விடுவார். எந்த வருமானமும் இல்லாமல் இருப்பதற்கு எதோ ஒரு வருமானம் வந்து கொண்டிருந்தது.

உட்கார்ந்து பார்க்கும் வேலை தானே…. அசதியாக இருந்தால் சிறிது நேரம் படுத்து கொள்வார். மாலையில் மகள் வீட்டின் முன்பு போர்டிகோவில் நடந்து கொடுப்பார். இந்த அளவு அவர் முன்னேறி இருப்பதே பெரிய விஷயம் தான்.

பாவனி அங்கே செல்லும் சமயத்தில் அவள் வேலை செய்து தருவதாகக் கேட்பாள். “இப்போ உடம்பை போட்டு அலட்டிக்காத… இப்போ தான் பொண்ணுங்க ரெஸ்ட் எடுக்க முடியும். அதோட ரெஸ்ட் எடுக்கணும்.” என்று விடுவார்.

பாவனி ஐந்து மாதங்கள் ஆகும் வரை பொறுத்துக் கொண்டு இருந்தாள். இருந்த சேமிப்பு வேறு குறைந்து கொண்டே வர… அதற்கு மேல் முடியவில்லை.

குழந்தை பிறந்த பிறகு இத்தனை நாட்கள் மனைவியை விட்டு விலகி இருந்த ஈஸ்வருக்கு அதற்கு மேல் முடியாது என்ற நிலை… அன்று இரவு அவன் மனைவியை நெருங்க…. பதிலுக்கு அவளும் அவனை ஆவலாக அனுகினாள்.

கணவனின் தேவையை நிறைவேற்றிய திருப்தியில்… “ஈஸ்வர் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா?” என்றவள்,

அவன் சொல்லு என்றதும்,

இப்போ தான் அஞ்சு மாசம் முடிஞ்சிடுச்சே… அத்தை தான் பாப்பாவை பார்த்துக்கிறாங்க. நான் வேலைக்குப் போகட்டுமா?” என்றாள்.

பத்து மாசமாவது ஆகட்டும் பாவனி.” என்றவன், அவளின் முக மாற்றத்தை பார்த்துவிட்டு, “அதுவரை வேணா முன்னாடி மாதிரி நம்ம கடையில வேலைப் பாரு. பாப்பாவையும் அடிக்கடி வந்து பார்த்துக்கலாம்.” என்றான்.

வேலைக்கே போகக் கூடாது என்று சொல்லாமல்… இதாவது ஒத்துக்கொள்கிறானே என்று நினைத்தவள், சரி என்றாள்.

ஆமாம் இதை ஏன் நீ இவ்வளவு நாள் இல்லாம இப்போ கேட்ட….” என ஈஸ்வர் கேட்க…

முதலில் புரியாமல் பார்த்தவள், பிறகு புரிந்ததும், “ஆமாம் நீங்க அப்படியே மயங்கிற ஆள் தான்.” என அவன் கன்னத்தில் இடிக்க…. ஈஸ்வரும் சிரித்து விட்டான்.

Advertisement