Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 13

பிரசவ நேரம் முழுவதும் ஈஸ்வர் தான் பாவனியுடன் இருந்தான். வளர்மதிக்கு அலைய முடியாது. அவர் வேறு தடுமாறி எங்காவது விழுந்து வைத்தால்… இன்னும் சிக்கலாகும் என அவரை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு, அவருக்குத் துணைக்கு விமலை விட்டு, ஈஸ்வர் தான் உடன் இருந்தான். விமல் கல்லூரி சென்ற நேரம் போக… மற்ற நேரம் கடையிலும் இருந்தான்.

பாவனிக்கு முன் தினம் நள்ளிரவில் ஆரம்பித்த வலி… இன்று மதியம் தான் குழந்தை பிறந்திருக்க…. ஊர்வசி குழந்தை பிறக்கும் வரை மருத்துவமனையில் இருந்துவிட்டு, மருமகளுக்குப் பத்தியமாகச் சமைத்து எடுத்து வர வீடு வரை சென்றிருந்தார்.

பாவனிக்கு சுகப் பரவசம் தான். எதற்கும் தேவைபட்டால் படும் எனக் கையில் ட்ரிப்ஸ் போட போட்டிருந்த ஊசியைக் கழட்டாமல் இருக்க…. அவளால் குழந்தையைக் கையில் கூட வாங்க முடியவில்லை. அதனால் அவள் கேட்டுக் கொண்டபடி ஈஸ்வர் மகளை மனைவியின் அருகில் கட்டிலில் விட்டான்.

ஊசி குத்திருந்த வலது கையால் மகளை வருடியவள், குழந்தை யாரை மாதிரி இருக்கிறது என ஆராய்ந்தாள்.

முகம் பார்க்க பாவனி போலக் கும்மென்று இருந்தாலும், ஈஸ்வர் மாதிரி அடர்த்தியான சிகையும், அவள் தந்தையைப் போல நல்ல உயரமாக வருவாள் என நீளமாக இருந்த கை விரல்களே சொல்ல…

கொஞ்சம் என்னை மாதிரி இருந்தாலும், நிறைய உங்களை மாதிரிதான்.”  என்றாள்.

என் குழந்தை என்னை மாதிரி இல்லாம வேற யார் மாதிரி இருக்கும்.” என அவன் திருப்பிக் கேட்க…. இவன்கிட்ட போய்ச் சொன்னோமே என நினைத்தவள், வாயை மட்டும் அல்ல… கண்ணையும் மூடிக் கொண்டவள், நிஜமாகவே உறங்கிப் போனாள்.

மாலை குழந்தை அழ ஆரம்பிக்க…. ஈஸ்வர் சேரில் உட்கார்ந்தபடியே உறங்கி இருந்தவன், எழுந்து குழந்தையைத் தூக்கி கைகளில் வைத்தபடியே இப்படியும் அப்படியும் நடக்க… அப்போதும் குழந்தை விடாமல் அழ… சத்தம் கேட்டு நர்ஸ் வந்துவிட்டார்.

அவங்களை எழுப்பிப் பால் கொடுக்கக் சொல்லுங்க.” என்றவர், அவரே சென்று பாவனியை எழுப்பிக் குழந்தைக்குப் பால் கொடுக்கக் சொன்னார்.

சரி என்றவள் எழுந்து உட்கார… நர்ஸ் அவளின் மடியில் குழந்தையை வைக்க…

நீங்க போங்க நான் கொடுக்கிறேன்.” என்றாள் கூச்சப்பட்டுக் கொண்டு.

எங்க கொடுங்க நான் பார்க்கிறேன்.” என்று நர்ஸ் சொல்ல… வெளியே செல்லும் எண்ணத்தில் இருந்த ஈஸ்வரும் இருந்த இடத்தில் இருந்தே திருப்பிப் பார்த்தான்.

இவள் கொடுத்தால் உடனே குழந்தை குடித்து விடும் என்று நினைத்திருந்தாள். ஆனால் குழந்தைக்குத் தெரியவேயில்லை. எடுத்ததும் குழந்தைக்குப் பால் குடிக்கத் தெரியுமா என்ன?

பசியில் கண்ணை மூடிக் கொண்டு கத்திய குழந்தையின் பின் கழுத்தில் கை வைத்து, அதன் அம்மாவிடம் எப்படிப் பசியாற்ற வேண்டும் என நர்ஸ் குழந்தைக்குக் காண்பிக்க… அதன் பிறகே அழுகையை நிறுத்திவிட்டு குழந்தை பால் குடிக்க ஆரம்பித்தது.

ஈஸ்வர் நர்சிடம் அவனுக்கு இருந்த சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டான். எவ்வளவு நேரம் பால் கொடுக்கலாம். எவ்வளவு நேரத்திக்கு ஒருமுறை கொடுக்கலாம் என எல்லா விவரமும் அவன் கேட்க…

அவனிடம் விவரம் சொன்னவர், “முன்னாடி எல்லாம் குழந்தை பிறக்கிற வரை தான் ஆம்பிளைங்க இருப்பாங்க. அதுவும் வெளியே தான். அவங்க போகலைனாலும் நாங்களே பிடிச்சு வெளியே தள்ளிடுவோம். ஆனா இப்போ பிரசவ அறை வரை கூட வர்றாங்க. குழந்தை பிறந்த பிறகும் கூட இருந்து பார்த்துக்கிறாங்க.”

இப்போ இருக்கப் பசங்க பரவாயில்லை… அந்தக் காலத்தில எல்லாம் என் புருஷன் ஒண்ணுமே பண்ணது இல்லை. பிள்ளை வளர்க்கிறது பொம்பளைங்க வேலைன்னு தான் நினைப்பாங்க. இப்போ காலம் அப்படி இல்லை.” எனச் சொல்லிவிட்டு சென்றார் அந்த வயதான நர்ஸ்.

இரவு உணவுடன் ஊர்வசி வர… அவர் களைப்பாக இருப்பதைப் பார்த்த ஈஸ்வர், முன் தின இரவும் அவர் தூங்காததால்… “நீங்க வீட்டுக்கு போங்க. நானே இருக்கேன்.” என்றான். ஊர்வசியும் காலை வருவதாகச் சொல்லி சென்றார்.

அன்று இரவு மகள் பசிக்காக அழும் போது, ஈஸ்வரே நர்ஸ் செய்தது போலச் செய்ய… அந்தக் குட்டி வாண்டும் சமத்தாகப் பால் குடித்தது. அடுத்த நாளில் இருந்து அந்தக் குட்டி வாண்டுக்கே எல்லாம் தெரிந்து விட்டது.

மறுநாள் நர்ஸ் வந்து பாவனியை குளிக்க அழைக்க…. நானே குளிச்சுக்கிறேன் என்றாள்.

இல்ல மா அதெல்லாம் தனியா குளிக்க விட முடியாது. உங்களுக்கு இன்னும் உடம்பில பலம் இருக்காது. எங்காவது விழுந்துடீங்கன்னா?” என்று அவர் சொல்ல…. பாவனியின் முகம் மாறி விட்டது.

பாவனியின் கூச்ச ஸ்வபாவம் ஈஸ்வர் அறிந்தது தான். ஆனால் குழந்தை என்று வந்த பிறகு, எத்தனை எத்தனை மருத்துவப் பரிசோதனைகள்… அவள் கூச்சத்தை எல்லாம் தள்ளி தான் வைத்திருந்தாள். ஆனாலும் அவள் முகம் காட்டிக் கொடுத்து விடும். ஈஷ்வருக்கு அது தெரியும்.

பாவனி கதவை தாழ் போட்டுக்காம குளி. எதுவும் முடியலைனா சத்தம் கொடு.” என ஈஸ்வர் சொல்ல… நர்சும் புரிந்து கொண்டு பக்கட்டில் வெந்நீர் நிரப்பி வைத்துவிட்டு வந்து விட்டார்.

ரொம்ப நேரம் தண்ணியில நிற்காம சட்டுன்னு குளிச்சிட்டு வாங்க.” என  நர்ஸ் சொல்லி அனுப்ப…. பாவனி நிம்மதியாகக் குளிக்கச் சென்றாள்.

அவள் வந்ததும் குழந்தையைக் குளிப்பாட்ட நர்ஸ் எடுத்து சென்றார். அப்போது ஊர்வசி வந்துவிட… அவரை மருத்துவமனையில் விட்டு ஈஸ்வர் வீட்டுக்குச் சென்றான்.

மூன்றாம் நாள் பாவனியை வீட்டுக்கு அனுப்பிவிட… அவள் அம்மாவுக்குப் பார்த்துக் கொள்வது சிரமாக இருக்கும் என இங்கே கணவனின் வீட்டில் தான் இருந்தாள்.

வளர்மதி வந்து மகளோடும் பேத்தியோடும் சிறிது நேரம் இருந்துவிட்டு சென்றார்.

சில மாதங்களாகவே வளர்மதி வீட்டில் இருந்து கணினி மூலம் ஒரு பதிப்பகத்திற்குப் பிழை திருத்தம் மற்றும் தட்டச்சு செய்யும் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தார். வீட்டு வேலைக்கும் ஒரு பெண்ணை வைத்திருந்தார். காலையில் வந்து பாத்திரம் கழுவி தேவையான காய்கறிகளை நறுக்கிக் கொடுத்துவிட்டு சென்று விடுவார். விமலுக்கு வீடு எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும் .அதனால் அவனே அந்த வேலையைச் செய்து விடுவான். இப்போது கொஞ்சம் சமைக்கவும் செய்கிறான். ஆனால் எப்போதும் செய்ய மாட்டான். அவனுக்கு மூட் இருக்க வேண்டும். அதனால் வேலை செய்யும் பெண் இருக்கும் போதே வளர்மதி சமையலை முடித்து விடுவார்.

வைஜயந்தியும் சதாசிவமும் மருத்துவமனையில் இருந்த போதே வந்து குழந்தையைப் பார்த்துவிட்டு சென்றிருந்தனர். அதே போலப் பாவனியின் தந்தையும், அவர் பக்க உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்து குழந்தையைப் பார்த்துவிட்டு சென்றிருந்தனர்.

ஊர்வசி வீட்டு வேலைக்கு இரண்டு நேரமும் ஆள் வைத்திருக்க… சமையல் மட்டும் அவரே செய்வர், பேத்தியையும் அவர்தான் பார்த்துக் கொண்டார். பாவனி அவள் வேலைகளை அவளே செய்து விடுவாள். ஊர்வசி எடுத்து வந்து தர வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க மாட்டாள். ஏற்கனவே அவருக்கு அதிக வேலை என்று அவளுக்குத் தெரியும்.

அதை உணர்ந்து ஈஸ்வரும் அவனே மனைவிக்குக் குடிக்க, உண்ண என்று அவன் வீட்டில் இருக்கும் நேரம் கொண்டு வந்து தருவான்.

ராகவியின் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் இருப்பதால்…. வந்தாலும் உடனே கிளம்ப வேண்டும். எதற்கு வீணாகச் செலவு செய்து கொண்டு என்று விடுமுறைக்கு வந்தால் போதும் என்று ஈஸ்வரும், ஊர்வசியும் சொல்லி விட்டனர். அவர்கள் வந்தாலும் இங்கே கூடுதல் வேலை தானே…. அதை நினைத்து ராகவியும் பிறகே சென்று கொள்ளலாம் என இருந்து விட்டாள்.

பதினாறு நாள் ஆனதும் வீட்டில் குழந்தைக்குப் புண்ணியாதானம் செய்தனர். பெயர் மெதுவாக மூன்று மாதத்தில் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்திருந்தனர்.

மகள் உறங்கும் நேரம் அவன் வேலைகளைப் பார்க்கும் ஈஷவர், மகள் விழித்திருக்கும் நேரம் எல்லாம் அவளோடு தான் இருப்பான். அதனால் பாவனிக்கு நன்றாக ஓய்வு எடுக்க முடிந்தது.

அவரது மகள் வீட்டிற்குச் சென்றிருந்த ருக்மணி பாட்டி, அன்றுதான் ஊர் திரும்பி இருந்தவர், ஈஸ்வரின் மகளைப் பார்க்க வந்திருந்தார்.

ஈஸ்வர் அறையின் கதவை சாற்றிக் கொண்டு வேலை பார்க்க… பாவனி இருந்த அறையின் கதவு திறந்து தான் இருந்தது.

இவர் வந்தாலே வில்லங்கமாக எதாவது பேசி வைப்பாரே என்று ஊர்வசிக்குப் பயம் தான். அதனால் பாவனி உறங்குவதாகச் சொன்னவர், பேத்தியை மட்டுமே எடுத்து வந்து காட்டினார்.

Advertisement