Advertisement

அவன் அறையில் இருந்து வேலை பார்த்தாலும் ஈஸ்வரின் கவனம் எல்லாம் மனைவியின் பேச்சில் தான். அவள் அம்மாவும் வேலை பார்க்க முடியாத நிலையில்…. அவளும் வேலைக்குச் செல்லாமல் இருப்பது அவளை ரொம்பவும் கவலை கொள்ள செய்கிறது என அவனுக்குப் புரியாமல் இல்லை.

அன்று இரவு உணவின் போது, “எனக்கு வேலை நிறைய இருக்கு. கடையில வேற இப்போ ஒரு ஆள் குறைவு தான். பில் போட வேற ஆள் தான் பார்க்கணும்.” என்பது போல அவன் சொல்ல…

நான் பண்றேனே… நான் சும்மா தானே இருக்கேன்.” என்றாள் பாவனி.

உன்னால முடியுமா?” என ஈஸ்வர் கேட்க…

உட்கார்ந்திட்டே பார்க்கிற வேலை தானே… இது கூடப் பண்ண மாட்டாங்களா.” என பாவனி அவனை முறைத்துக் கொண்டு சொல்ல…

சரி ஆனா சரியா வேலை செய்யலைனா வேலையில இருந்து தூக்கிடுவேன்.” என்றான்.

சம்பளம் ஒழுங்கா கொடுத்திடுவீங்க தான….” என பாவனியும் திருப்பிக் கேட்க… ஈஸ்வருக்குச் சிரிப்பு வந்தாலும், அவளைப் பார்த்து முறைத்து வைத்தான்.

இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஊர்வசி, ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு குறைஞ்சது இல்லை என நினைத்துக் கொண்டார்.

அடுத்த இரண்டு நாட்கள் ஈஸ்வர் மனைவியைக் கடைக்கு அழைத்துச் சென்று வேலையைப் பழக்கினான். பிறக்கு பாவனியே பார்த்துகொள்ள ஆரம்பித்தாள். காலையில் எழுந்து அவள் அம்மா வீட்டிற்குச் சென்று, அங்கே அவள் அம்மாவுக்குக் காய்கறி எல்லாம் நறுக்கி கொடுப்பாள். வளர்மதி அவரே நின்று கொண்டு சமைப்பார். மேலோட்டமான வேலைகளைப் பார்க்க முடிந்தது. பாவனியும் சமையலில் உதவுவாள்.

அங்கே வேலைகள் முடிந்ததும், காலை உணவை உண்டுவிட்டு கடைக்குச் சென்று விடுவாள். ஈஸ்வர் எப்போதும் போலக் கடையைத் திறந்து வைத்துவிட்டு இருப்பான். பாவனி வந்ததும் அவன் வீட்டிற்குச் சென்று விடுவான்.

அருகில் தானே வீடு பாவனியும் ஓய்வறைக்குச் செல்ல வேண்டிய சமயங்களில் வந்து செல்வாள். அந்நேரம் ஊர்வசி அவளுக்குக் குடிக்க, கொறிக்க எதாவது தருவார்.

மதியம் ஒரு மணிக்கு வந்தால்… பிறகு ஐந்து மணிக்குத்தான் செல்வாள். இரவு ஒன்பது மணிக்கு ஈஸ்வர் வந்ததும், இருவரும் சேர்ந்து கடையை அடைத்துவிட்டு வீடு வருவார்கள்.

சரியாக வீட்டிற்குக் குடி வந்து ஒரு மாதம் ஆனதும், பாவனி ஈஸ்வரிடம், “இந்தாங்க போன மாச வாடகை.” என்று கொடுக்க…

நான் கேட்டேனா?” என ஈஸ்வர் அவளை முறைத்தான்.

வாடகை வேண்டாம்னு சொல்ற ஹௌஸ் ஹோனரை நான் இப்பத்தான் பார்க்கிறேன்.” என்றாள் சிரித்துக் கொண்டு.

பாவனி உனக்குப் புரியவே இல்லையா… நீ என்னை எவ்வளவு தான் டி காயப்படுத்துவ…” ஈஸ்வர் பொறுமையை விட்டு கத்த துவங்க….

நீங்க தான் புரியாம பேசுறீங்க. முறையா பார்த்தா நாங்க அட்வான்ஸ் கொடுத்திருக்கணும். ஆனா நாங்க கொடுக்கலையே… நீங்க எங்களுக்கு நிறைய உதவி செஞ்சிருக்கீங்க… இனிமேயும் செய்வீங்க. ஆனா அதுக்காக உங்களையே செய்யப் போட்டுட்டு நான் சும்மா இருக்க முடியாது ஈஸ்வர். அதோட அம்மாவும் வருத்தப்படுவாங்க.”

நம்புங்க இது எங்களால கொடுக்க முடிஞ்ச வாடகை தான்.” என்றவள் அவனிடம் பணத்தைக் கொடுக்க… அவன் வாங்க மறுக்க… ஊர்வசியிடம் சென்று கொடுத்தாள்.

இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு தானே இருந்தார்.

இதுல என்னை இழுக்காத…” என்றார்.

திரும்ப கணவனிடம் வந்தவள், “சரி உங்க பொண்டாட்டியா நானே வாடகையை வாங்கி வச்சுக்கிறேன். என்கிட்டே இருக்கட்டும்.” என்றவள், அதைத் தனது கைபையில் வைத்தாள்.

என்னவோ பண்ணிட்டு போ…” என்பது போல ஈஸ்வர் இருந்தான்.

அன்று இரவு ஈஸ்வர் தாமதமாகத்தான் உறங்க வந்தான். அவன் வந்து கட்டிலில் படுத்ததும், பாவனி அவனிடம் நெருங்க….

உனக்குத்தான் எங்க தொட்டாலும் கூச்சமா தான இருக்கும், இப்போ மட்டும் என்ன? தள்ளியே படு.” என்றான்.

அது நீங்க தொட்டாத்தான். நான் தொட்டா இல்லை.” என்றவள், அவன் தோள் சாய்ந்து கொள்ள…

நான் சொல்றதை மட்டும் நீ கேட்காத… ஆனா நீ சொல்றதை மட்டும் நான் கேட்கணும்.” என்றவன், அவளை அணைத்தபடி கண் மூடிக் கொண்டான். பாவனிக்கு அவன் வேதனை புரியாமல் இல்லை.

ஈஸ்வரை விட பாவனி கடையைத் திறம்பட நிர்வகித்தாள். அவள் வந்த பிறகு கடை எப்போதுமே பளிச்சென்று இருக்கும். கடையில் வாடிக்கையாளர் இல்லை என்றால்…. அவளே கண்ணாடியை துடைப்பது, கலைந்திருக்கும் பொருட்களை அடுக்குவது எனக் கிளம்பி விடுவாள். அவள் செய்வதைப் பார்த்துப் பணியாளர்களே அதையெல்லாம் அடிக்கடி சுத்தம் செய்து விடுவார்கள்.

பொருட்களின் தேவை உணர்ந்து அவ்வபோது ஆர்டரும் போட்டு விடுவாள். எதாவது இல்லை என்றாலும், மறுநாளே அதைத் தருவித்துக் கொடுத்து விடுவாள். ஒரு வாடிக்கையாளரையும் விடுவது இல்லை.

அன்று வேலை செய்யும் ஆட்களுக்கு ஈஸ்வர் சம்பளம் அவர்கள் வங்கி கணக்குக்குப் போட்டுக் கொண்டிருந்தான்.

“எனக்கு எப்போ தருவீங்க?” என பாவனி கேட்க…

கடை உன்னோடது பாவனி. என்னைப் போட்டு கொல்லாதே.” என்றான் ஈஸ்வர் கடுப்பாக.

அப்போ எனக்குச் சம்பளம் தர மாட்டீங்களா?” பாவனி அதிர்ச்சியாக….அவளை பார்த்து முறைத்தவன், அப்போதே அவள் வங்கி கணக்கிற்குப் பணம் போட்டு விட்டான்.

அவன் நிறையவே போட்டிருக்க….

நிஜமா இவ்வளவு சம்பளம் தருவீங்களா?” என பாவனி ஆச்சர்யப்பட….

நீ வந்த பிறகு கடையும் இன்னும் நல்லா நடக்குது. எனக்குக் கடையைப் பத்தி கவலை இல்லாம இருக்க முடியுது. என்னோட வேலையையும் என்னால வேற தொந்தரவு இல்லாம பார்க்க முடியுது. இது உனக்கு உரிய சம்பளம் தான். அதனால மனசை குழப்பிக்காம இரு.” என்றான் ஈஸ்வர்.

தேங்க்ஸ் எனச் சந்தோஷமாகச் சொன்னவள், அவள் வீட்டிற்குச் சென்றுவிட… ஈஸ்வர் யோசனையிலேயே இருக்க…

என்ன டா?” என்றார் ஊர்வசி.

பாவனி வீட்டை பத்தி தான் யோசிக்கிறேன். அவங்க அம்மாவும் தம்பியும் வேற யாரையும் எதிர்பார்க்காம இருக்கிற மாதிரி செய்யணும். அப்போ தான் இவ நிம்மதியா இருப்பா. இல்லைனா இதை வச்சு எங்க ரெண்டு பேர்குள்ள பிரச்சனை வந்திட்டே இருக்கும்.” என்றான்.

அவங்க அம்மாவும் வீட்ல இருந்தே எதாவது செய்யணும்னு சொல்லிட்டு தான் இருக்காங்க. அவங்களுக்கு இன்னும் கொஞ்சம் சரியாகிட்டா… அவங்க சும்மா எல்லாம் இருக்க மாட்டாங்க.” என்றார் ஊர்வசி.

விமல் பள்ளி இறுதி ஆண்டு பொது தேர்வில், சில பாடங்களில் அதிக மதிப்பெண்ணும், சில பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும், எல்லாப் பாடத்திலும் தேர்வாகி இருந்தான். அதே எல்லோருக்கும் மகிழ்சியாக இருக்க…. அவனுக்குச் சமையல் கலையில் தான் விருப்பம் என்பதால்… அவனை அதற்குரிய கல்லூரியில் ஈஸ்வர் சேர்த்து விட்டான்.

அவன் படிப்பை முடித்ததும் சொந்தமாகவே எதாவது தொழில் தொடங்கலாம் என நினைத்தான்.

விமல் அவள் கல்லூரியில் கற்றுக் கொண்ட கலைகளையெல்லாம், இங்கே வீட்டில் வந்து செய்து பார்க்கிறேன் என ஊர்வசியின் சமையல் அறையை ஒருவழியாக்கி விடுவான்.

டேய் நீ என்னை வச்சுக் கூடச் சேம்பில் பாரு. ஆனா என் பொண்டாட்டியை விட்டுடு. என் பாப்பா பாவம்.” என ஈஸ்வர் சிரித்துக் கொண்டு சொல்ல…

பார்த்தியா அவர் பொண்ணு மேலத்தான் அக்கறை. பொண்டாட்டி மேல இல்லை.” என்றாள் பாவனி கணவனைப் பார்த்து முறைத்தபடி.

நாட்கள் வேகமாகச் செல்ல… பாவனியின் பிரசவமும் நெருங்கிக் கொண்டு இருந்தது.

மாதா மாதம் வீட்டு வாடகையைப் பாவனி அவளே சேர்த்து வைத்துக் கொண்டு வந்தாள். ஈஸ்வரிடம் கொடுத்தால்… அவன் வருந்துவான் என்று தெரியும். அதனால் அதைப் பற்றி இருவரும் வெளிப்படையாகப் பேசிக் கொள்வது இல்லை. அதனால் இருவருக்குள்ளும் சண்டையும் இல்லை.

குழந்தை நல்லபடியாகப் பிறந்தால் போதும் என்றிருந்தனர்.

வீட்டிலேயே வளைகாப்பை சில பேரை மட்டும் அழைத்துச் செய்தனர். பாவனியின் குடும்பம் இங்கயே வந்ததும், ருக்குமணி பாட்டி இங்கே வராமல் இருந்தார். எதோ அவர் வீடு சொத்தை கொடுப்பது போல….

இப்போது வளைகாப்புக்கு வந்தவர் கூட முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் இருந்தார்.

வந்தவர்களிடம் எல்லாம் எதோ ஈஸ்வர் தான் அவர்கள் குடும்பத்தைப் பார்ப்பதாகவும், பாவம் அவனுக்குதான் கஷ்ட்டம் என்பது போலச் சொல்ல… அதை அவர்கள் ஊர்வசியிடம் வேறு சென்று கேட்டு வைக்க…

ஐயோ… அவன் இருக்கிற வீட்டுக்கு கூட வாடகை கொடுத்திட்டு தான் இருக்காங்க. எங்கையோ இருக்கிறதுக்கு மகள் பக்கத்துல இருப்போம்னு இருக்காங்க அவ்வளவு தான்.” என்றார்.

அவர்கள் அதைச் சென்று மீண்டும் ருக்மணியிடம் சொல்ல…

நம்மகிட்ட அப்படித்தான் சொல்வாங்க.” என்றார் நம்பாமல்.

அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அவரது மகனும் மருமகளும் அவங்க வீட்டு விஷயம் உங்களுக்குத் தேவையா? உங்க வேலையைப் பாருங்க எனக் கண்டித்தனர்.

பாவனிக்கு அரசால் புரசலாக அவர் பேசியது தெரியத்தான் செய்யும். ஆனால் அது உண்மை இல்லையே… அவர் என்னவும் நினைக்கட்டும் என அமைதியாக இருந்தாள்.

வந்தவர்கள் எல்லாம் என்ன உங்க பேத்திக்கு இன்னும் கல்யாணம் வைக்கலையா என்றதும், ருக்மணி பாட்டி பதில் சொல்ல முடியாமல்… அங்கிருந்து கிளம்பி விட்டார். இவர் வீட்டிலேயே ஆயிரம் பிரச்சனை இருக்க… இவருக்கு அடுத்தவர் வீட்டு விஷயம் தேவையா என்றுதான் பாவனிக்கு தோன்றியது. நாட்டில் நிறையப் பேர் இவரைப் போலத்தான் இருக்கிறார்கள்.

பாவனி ஒன்பதாம் மாதம் வரை கடைக்குச் சென்று கொண்டு தான் இருந்தாள்.

கார்பரேட் கம்பனி மட்டும் தான் கொடுக்கனுமா என்ன? உனக்குச் சம்பளத்தோட பிரசவ லீவ் தரேன் டி பொண்டாட்டி.” என்று சொல்லி ஈஸ்வர் அவளை வம்பிழுக்க….

ரொம்பக் கொழுப்பு டா உனக்கு.” என ஊர்வசி மகனை திட்ட….

பின்ன உங்க மருமகள் தானே அப்படி இருக்கா….” என்றான் ஈஸ்வர்.

பொண்ணு பொண்ணுன்னு சொல்லிட்டு இருக்கீங்களே… பையன் பிறந்தா என்ன பண்ணுவீங்க?” எனப் பாவனி அவர்கள் அறையில் வைத்து கேட்க…

பையன் பிறந்தாலும் ஓகே தான். ஆனா அடுத்து பொண்ணு வேணும்.” என்றான்.

அப்போ போங்க பொண்ணே பிறக்கட்டும்.” என்றாள் பாவனி.

ஈஸ்வருக்கு அவன் ஆசைப்பட்டது போலப் பெண் குழந்தை தான் பிறந்தது. 

Advertisement