Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 12

பாவனி அடுத்த ஒருவாரம் நன்றாக உறங்கி ஓய்வெடுத்தாள். பகலில் ஒரு நேரம் சென்று அவள் அம்மாவுக்குத் தேவையான வேலைகளை முடித்து வைத்துவிட்டு வந்து விடுவாள்.

கடையின் பின்புறம் இருக்கும் வீட்டினர் காலி செய்திருக்க… அந்த வீட்டை ஆள் வைத்து பழுது பார்க்கும் பணி முடிந்து, இப்போது பெயிண்ட் அடிக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.

அந்த வீட்டிற்கு இவர்கள் வீட்டில் இருந்து செல்வது போல… போர்டிகோவில் இருந்து சின்ன வாயிலும் ஈஸ்வர் வைக்கச் சொல்லி இருந்தான். மாடியில் கூடக் குடித்தனக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தனி வாயில். இப்போது எதற்கு இந்த வீட்டை மட்டும் சேர்கிறான் என்று புரியவில்லை.

பாவனி கேட்டாலும் அவனிடம் இருந்து ஒழுங்கான பதில் இல்லை. இந்த விஷயம் என்றில்லை அவன் எந்த விஷயமும் அவளிடம் பேசுவது இல்லை. மனைவி ஒழுங்காக உண்கிறாளா… உறங்குகிறாளா என்று பார்ப்பதோடு சரி… மற்றபடி அவளைக் கண்டுகொள்வதே இல்லை.

இரவு படுக்கைக்கு வந்த பிறகு கைபேசியில் எதாவது சத்தமாக வைத்து கேட்டுக் கொண்டிருப்பான்.

இதற்கு இவன் தன்னை அப்படியே விட்டிருக்கலாம் என்று கூடப் பாவனிக்கு தோன்றியது.

அன்று நண்பகலில் அவள் அம்மா வீட்டில் இருக்கும் நேரம் ஈஸ்வர் வந்தான். அவன் வளர்மதியிடம் தான் பேச வந்திருந்தான்.

அத்தை, நம்ம கடைக்குப் பின்னாடி இருக்க வீடு காலியாகி இருக்கு. உங்களுக்கும் விமலுக்கும் அந்த வீடு இப்போதைக்குப் போதும். நீங்க அங்க வந்து இருந்தா… பாவனிக்கும் அலைச்சல் மிச்சமாகும்.” எனத் தன் மனைவிக்காகப் பார்ப்பது போல ஈஸ்வர் சொன்னாலும், அவன் தங்களுக்காகத் தான் யோசிக்கிறான் என்று வளர்மதிக்குப் புரியாமல் இல்லை.

இல்லை நாங்க வேற சின்ன வீடு பார்க்கிறதா தான் இருக்கோம்.” என பாவனி முந்திக் கொண்டு பேச….

நான் உன்னைக் கேட்கலை.” என்றான் ஈஸ்வர் பட்டென்று. அவன் வளர்மதியை பார்க்க….

இப்போது அவர்கள் இருக்கும் வீட்டின் வாடகையும் அதிகம் தான். இவ்வளவு பெரிய வீடு அவர்களுக்கு இப்போது தேவையும் இல்லை.

நீங்க சொன்னா சரி.” என்றார் வளர்மதி.

ஏற்கனவே வேறு வீடு மாறுவதாகத் தான் இருந்தனர். இதே பகுதியில் வாடகை குறைவாகப் பார்க்க வேண்டும் என நினைத்திருக்க…. இப்போது ஈஸ்வர் அவர்கள் வீடே இருக்கிறது என்றதும், வளர்மதி சரி என்று விட்டார். வீட்டின் உரிமையாளரிடமும் அப்போதே அழைத்து வீட்டை காலி செய்வதாகச் சொல்லி விட்டனர்.

வளர்மதியிடம் பேசிவிட்டு ஈஸ்வர் உடனே கிளம்பி விட்டான். என்னை எதாவது மதிக்கிறானா பாரு என பாவனியால் மனதிற்குள் தான் குமுற முடிந்தது.

மகளின் முகத்தைப் பார்த்த வளர்மதி, “இப்போ வேற இடத்துக்கு வீடு மாத்திட்டு போனாலும் உனக்குத் தானே அலைச்சல். அந்த வீட்டுக்கு என்ன வாடகையோ அதை நாம கொடுத்திடலாம்.” என்றார். பாவனியும் சரி என்றாள்.

மாலை பாவனி அவள் அம்மாவை அழைத்துச் சென்று வீட்டை காட்டினாள். ஒரு படுக்கை அறை என்றாலும், ஹால், சமையல் அறை, குளியல் அறை என எல்லாமே பெரிதாக இருந்தது. அவர்கள் இருவருக்கு அந்த வீடு தாராளமாகப் போதும்.

அந்த வீட்டின் வாடகை எவ்வளவு என்று பாவனி பலமுறை ஈஸ்வரிடம் கேட்டு விட்டாள்… அவன் பதில் சொன்னால் தானே…. அவள் ஊர்வசியிடம் கேட்டுப் பார்க்க… அதெல்லாம் ஈஸ்வருக்குத் தான் தெரியும் என்றுவிட்டார்.

இதற்கு முன் அந்த வீட்டில் இருந்தவர்கள் அவர்கள் பூ செடிகளை எடுக்கக் வந்திருக்க… அப்போது எவ்வளவு வாடகை அவர்கள் கொடுத்தார்கள் என்று பாவனி கேட்க….

ஏன் உனக்குத் தெரியாதா? உங்களால தான எங்களை வீட்டை காலி பண்ண வச்சாங்க.” என்ற அந்தப் பெண்மணி, “நாங்க வீட்டுக்கு வரும் போது ஒன்பதாயிரம் தான் கொடுத்தோம்… காலி பண்ணும் போது பத்தாயிரம். இபோ அந்த வாடகைக்கு இங்க எங்கையும் வீடு இல்லை. நாங்க ரொம்பத் தூரம் தள்ளித்தான் வீடு பார்த்திருக்கோம்.” எனத் தனது ஆதங்கத்தைச் சொல்லிவிட்டு சென்றார்.

அவர்களாகக் காலி செய்தது போலத் தானே ஈஸ்வர் சொல்லி இருந்தான். அவனிடம் கேட்டாலும் ஒழுங்காகப் பதில் வராது. அவன் தங்களுக்காக ஒவ்வொன்றும் யோசித்துச் செய்வது மனதிற்கு இதமாகவே இருந்தது.

அன்று இரவு அறையில் எப்போதும் போல ஈஸ்வர் கைபேசியை எடுக்க…. “ஹப்பா அதைக் கொஞ்சம் வைக்கிறீங்களா… தினமும் அதைக் கேட்கிறதுக்கு நீங்க பேச வேண்டியது தான… உங்க குழந்தையும் கேட்கட்டுமே.” என்றதும்,

வெளிய வந்ததும் நாங்க ரெண்டு பேர் மட்டும் பேசிப்போம்.” என்றான்.

நான் அப்போ தேவையில்லை.” என்றதும்,

யார் யாரை வேண்டாம்னு சொன்னாங்கன்னு அவங்கவங்க மனசாட்சிக்கு தெரியும்.” என்றவன், “இரு என் பொண்ணு வரட்டும், நீ பண்ணதை சொல்றேன். அவளும் தெரிஞ்சுக்கட்டும் அவங்க அம்மா எப்படின்னு.” என்றான் மிரட்டுவது போல…

ப்ளீஸ் ஈஸ்வர் சொல்லாதீங்க.” எனப் பாவனி கெஞ்சலாகப் பார்க்க… “அப்போ ஒழுங்கா இரு.” என்றான்.

ஈஸ்வர் படுத்துக் கொள்ள… இதற்கு மேல் பேசினால்… நன்றாக வைத்து வாங்குவான் என்று தெரியும். அதனால் அமைதியாகப் படுத்துக் கொண்டாள். ஆனால் உறக்கம் வராமல் அவள் புரண்டு புரண்டு படுக்க…

என்ன?” என்றான்.

லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு.” என்றதும், எழுந்து சென்றவன், அவளுக்கு ஆப்பிள் நறுக்கி கொண்டு வந்தான்.

ஒரு கையால் அதை வாங்கியவள், மறுகையால் அவன் வேஷ்ட்டியை பிடித்துக்கொள்ள…

என்ன வேண்டும் என்பது போல ஈஸ்வர் பார்க்க…

என்னோட எப்ப முன்னாடி மாதிரி பேசுவீங்க?” என பாவனி கேட்க…. ஈஸ்வர் பதில் சொல்லாமல் இருக்க…

வாயை திறந்து பதில் சொல்லுங்க. இல்லைனா வேட்டியை அவுத்து விட்டுடுவேன்.” என்றாள்.

முடிஞ்சா அவுரு டி…” என்றவன் கைகட்டிக் கொண்டு நிற்க….

பாவனியும் கையில் இருந்த தட்டை வைத்து விட்டு, வேட்டியை இழுக்க… எவ்வளவு இழுத்தும், வேட்டியை அவிழ்க்க முடியவில்லை.

அடப்பாவி இப்படியா இறுக்கக் கட்டுவீங்க.”

பின்ன அவுத்து விட்டுட்டு சுத்தனுமா உனக்கு.” என்றவன்,

இப்போ என்ன உனக்கு வேட்டியை அவுக்கனுமா?” என்றவன், அவனே அவிழ்க்க செல்ல…

இல்லையில்ல வேண்டாம்….. நான் சும்மா தான் பண்ணேன்.” என்றாள் பதட்டமாக.

அந்தப் பயம் இருக்கட்டும்.” என்றவன், “இப்போ என்ன தான் டி வேணும்?” என்றதும்,

என்னோட பேசிட்டு இருங்க.” என்றவள், அவன் கட்டிலில் உட்காரவும், அவன் தோள் சாய்த்து கொண்டாள். ஈஸ்வரும் அவளைக் கைக் கொண்டு அனைத்துக் கொண்டான்.

பாவனி நீ இல்லாம இத்தனை நாள் வீடு நல்லாவே இல்லை தெரியுமா?” ஈஸ்வர் சொல்ல….

நிஜமாவே சொல்றீங்களா? இல்லைனா எனக்காகச் சொல்றீங்களா?” என பாவனி ஆப்பிளை உண்டபடி கேட்க….

உனக்காக நான் ஏன் சொல்லப் போறேன்.” என்றான் அலட்சியமாக.

வீட்ல குடி இருந்தவங்களை நீங்களே காலி பண்ண சொல்லிட்டு… அவங்க காலி பண்ணதா சொல்லலை….”

இவளுக்கு எப்படித் தெரியும் என நினைத்தவன், “அது உனக்காக இல்லை…. என் மாப்பிள்ளை அப்புறம் மாமியாருக்காக.” என்றான் சமாளிக்கும் விதமாக.

நான் இல்லாம தான் அவங்க எல்லாம் வந்தாங்களா….”

என் மாப்பிள்ளை தான் முதல்ல வந்தான். அதனால நீ வந்தேன்னு சொல்லு.”

எப்பவுமே என்னைப் பிடிக்கும்னு நீங்க ஒத்துக்கவே மாட்டீங்க இல்ல ஈஸ்வர்.”

சொல்லி இருந்தா… என்னை வேணாம்னு சொல்லி இருக்க மாட்டியா?” என்று ஈஸ்வர் திருப்பிக் கேட்க…

உங்களைப் பிடிக்காம நான் அதைச் சொல்லலை ஈஸ்வர். என்னோட நிலைமை அது. உங்களுக்கு என்னோட நிலைமை புரியாது.”

புருஷன்கிட்ட இருந்து வாங்கிக்க நீ கவுரவம் பார்க்கிற. உன்னால உன் அம்மா, தம்பி, இப்போ என் குழந்தை எல்லாம் கஷ்ட்டபடனுமா?” என்றதும்,

எனக்கு நீங்க செய்யுறதை நான் என்னைக்கும் வேண்டாம்னு சொல்ல மாட்டேன். நீங்க நகை வாங்கிக் கொடுத்த போது நான் வேண்டாம்னு சொல்லவே இல்லையே… ஆனா என் குடும்பத்துக்கும் நீங்க பார்க்கிறது சரி வராது ஈஸ்வர்.” என்றாள்.

இதற்கு மேல் பேசினால் சண்டையில் முடியும் என்று ஈஸ்வருக்குத் தெரியும். சரி தூங்கலாம் என்றவன், கட்டிலில் படுத்துக்கொள்ள… பாவனி தண்ணீர் குடித்து விட்டு, கணவனை நெருங்கிப் படுத்து உறங்கிப் போனாள். ஈஸ்வர் வெகு நேரம் விழித்தே இருந்தான்.

இங்கே வீட்டு வேலை முடிந்ததும், ஆட்களை வைத்து ஈஸ்வரே வீட்டை மாற்றி விட்டான். பொருட்களும் அதிகமில்லை. அவர்களே பொருட்களை உரிய இடத்தில் அடுக்கிவிட. பாவனிக்கும் அதிக வேலை இல்லை.

விமல் பள்ளியில் இருந்து வந்தால்… ஈஸ்வருடன் தான் இருப்பான். இறுதி பரீட்சை நெருங்குவதால்…. ஈஸ்வர் அவனைப் படிக்க வைத்துக் கொண்டிருந்தான். பாவனி அவனுக்குச் சொல்லிக் கொடுக்க வந்தால்… இருவரும் சண்டை தான் போட்டுக் கொள்வார்கள். அதனால் ஈஸ்வரிடம் தான் படிப்பான்.

இப்போது பாவனிக்கு மூன்று மாதங்கள் முடிந்து இருக்க… முன்பு மாதிரி வாந்தி, சோர்வு இல்லை. வேலைக்குச் செல்லலாமா என யோசித்தாள். பிசியோதெரபிக்குப் பதில் வேறு ஏதாவது படித்திருக்கலாம் என இப்போது தோன்றியது.

குழந்தை பிறக்கும் வரை தானே எனப் பிறகு அவளே தேற்றிக் கொண்டவள், அதையே ஊர்வசியிடமும் சொன்னாள்.

இப்போ எதுவும் நினைக்காத டா… குழந்தை நல்லபடியா பிறக்கட்டும்.” என்றார் ஊர்வசியும்.

Advertisement