Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே 

அத்தியாயம் 11 

சிறிது நாட்கள் பவனியின் போக்கிலேயே ஈஸ்வர் விட்டுவிட்டான். பாவனி அவள் வீட்டிலும் ஈஸ்வர் இங்கே இவர்கள் வீட்டிலும் என இருக்க.. இருவரும் பேசிக்கொள்வது போலக் கூட ஊர்வசிக்கு தெரியவில்லை. 

இவர்களை இப்படியே விட்டால் சரி வராது என்று நினைத்தவர், “பாவனி இங்க நம்ம வீட்டுக்கு வரணும் ஈஸ்வர். அதுக்கு என்ன பண்ணணுமோ பண்ணு. ஏற்கனவே அக்கம் பக்கம் எல்லாம் ஒரு மாதிரி பேசுறாங்க. அவங்க அம்மாவுக்குப் பார்க்கிறது எல்லாம் சரிதான். அதுக்காக அவ ராத்திரி கூட அங்கயே இருக்கனுமா என்ன? இப்போ அவங்க அம்மாவும் அவங்க வேலையைப் பார்த்துக்கிறாங்க.” என்றார். 

பாவனி பேசியதை எல்லாம் ஈஸ்வரால் சொல்லவும் முடியவில்லை. அவள் இஷ்டம் போல விடவும் முடியாது. இதற்கு என்னதான் வழி என்பது போல… ஈஸ்வர் யோசனையில் இருந்தான். 

அன்று இரவு அவனைப் பார்க்க விமல் வந்திருந்தான். அவன் பள்ளியில் இருந்து பெற்றோரை அழைத்து வர சொல்லி தகவல் வந்திருக்க… எப்போது வர வேண்டும் என ஈஸ்வர் கேட்டுக் கொண்டான். 

மறுநாள் பன்னிரண்டு மணி போலத்தான் வர சொல்லி இருந்தனர். முதலில் ஈஸ்வர் தான் சென்றான். அடுத்து தான் பாவனி வந்தாள். பாவனி அவள் வேலை இடத்தில் இருந்து நேராக வர.. ஈஸ்வர் முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டு தான் அவளைப் பார்த்தான். ஆனால் அவள் மிகவும் களைப்பாகத் தெரிய… எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து கொண்டான். அவனை எதிர்பார்க்காத பாவனியும் திகைத்துப் போய்த் தான் பார்த்தாள். 

பிசியோதெரபி பயிற்சி ஒன்றும் உட்கார்ந்து கொண்டு பார்க்கும் வேலை இல்லையே… பயிற்சி கொடுப்பதில் பாவனிக்கும் உடல் களைத்து விடும். அதுவும் சமீப நாட்களாக அவளுக்குக் கை கால் கழண்டு விடுவது போலத்தான் வலித்தது 

பாவனி ரொம்பவும் ஒல்லி ரகம் இல்லை. ஆனால் இப்போது அவளுக்குச் சில நாட்களாகச் சரியாக உண்ண முடிவதில்லை. அம்மாவையும் தம்பியையும் பார்க்கவாவது தெம்பு வேண்டும் என்ற அளவில் புரிந்திருந்ததால்.. நன்றாக உண்ண முயற்சியும் செய்தாள். 

இருவரும் சேர்ந்து தலைமை ஆசிரியர் அறைக்குச் செல்ல… கடந்த மாதம் நடந்த பரிட்சையில் விமல் சில பாடங்களில் குறைந்த மதிப்பெண் எடுத்திருக்க… மீண்டும் அதே பல்லவியை ஆரம்பித்தனர். 

அவர்கள் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை எனப் பாவனி காரணம் சொல்ல… பள்ளி நிர்வாகம் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. இந்தமுறை என்ன பேசினாலும், அவர்கள் ஒத்துகொள்ள மாட்டார்கள் என்று ஈஸ்வருக்குத் தெரியும், இவர்களிடம் ஏன் கெஞ்ச வேண்டும் என நினைத்தவன்

பரீட்சை வரை பாடமெல்லாம் எப்போதும் போலப் பள்ளியில் சொல்லித் தர வேண்டும். பரீட்சை மட்டும் ப்ரைவேட்டாக எழுத வைக்க ஈஸ்வர் ஒத்துக் கொண்டான். அப்போதே விண்ணப்பத்தைப் பதிவு செய்து அந்த வேலையும் முடித்துவிட்டே கிளம்பினர் 

வெளியே வந்த பாவனியின் கலக்கத்தைக் கண்டவன், “அவன் பாஸ் ஆகிடுவான் பாவனி, அப்படி ஆகலைனாலும் ஒன்னும் இல்லை. இங்க படிப்பு மட்டும் எல்லாம் இல்லை புரியுதா.. படிச்சவங்க எல்லாம் லைப்ல செட்டில் ஆகிடுறாங்களா என்ன? மார்க்க்ஷீட் மட்டும் எதிர்காலத்தைத் தீர்மானிக்காது. சும்மா தேவை இல்லாம குழப்பிக்காத.” என்றான் 

இல்லை விமல் எப்படி எடுத்துப்பானோ…” என்றாள் தயக்கமாக. 

அதை நான் பார்த்துக்கிறேன். எனக்குத் தெரியும் அவன்கிட்ட எப்படிச் சொல்லனும்னு. நீ உங்க அம்மாகிட்ட பக்குவமா எடுத்து சொல்லு போதும்.” என்றான். 

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது உணவு வேளை என்பதால்… விமல் வந்துவிட்டான். உடன் அவனது நண்பர்களும் வந்தனர். 

அவனைக் கவலையாகப் பார்த்த விமலிடம், “எப்பவும் போல நீ ஸ்கூல் வரலாம், எக்ஸாம் மட்டும் வேற இடத்தில எழுதனும். நான் உன்னைக் கொண்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வருவேன்.” என்றதும், ஈஸ்வர் உடன் வருவேன் என்றதும், விமல் முகம் மலர… “எக்ஸாம் சென்டர் தான் டா வேற… நாம எக்ஸாம் முடிச்சதும், மீட் பண்ணிக்கலாம்.” என்றாள் விமலின் தோழி தீப்தி. 

விமலை வகுப்புக்கு அனுப்பிவிட்டு பாவனி கிளம்ப… 

நான் உன்கூடப் பேசணும் பாவனி. அம்மா நீ எப்போ வீட்டுக்கு வருவேன்னு கேட்டுட்டு இருக்காங்க.” என்றான் ஈஸ்வர். 

நான்தான் சொன்னேனே..” எனப் பாவனி ஆரம்பிக்க. 

நீ சொல்றது போல எல்லாம் என்னால ஆட முடியாது. கல்யாணம் பண்ணிகிறதுக்கு முன்னாடி நீ இதையெல்லாம் யோசிச்சிருக்கணும். கல்யாணத்துக்குப் பிறகு அதுவும் இத்தனை சீக்கிரம் பிரிஞ்சு போனா…. என்னையும் தான் மத்தவங்க தப்பா நினைப்பாங்க.” 

பொண்டாட்டி வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டா… இவனுக்கு என்னமோன்னு தானே என்னையும் நினைப்பாங்க உனக்கு அப்படித்தான் மத்தவங்க என்னைப் பேசணும்னு ஆசையா சொல்லு.” என்றபடி அவன் அவளைப் பார்க்க…. இந்தக் கோணம் வேறு இருக்கிறதா எனப் பாவனி அப்போதுதான் யோசிக்க ஆரம்பித்தாள். 

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே…. பள்ளி இடைவெளி நேரம் என்பதால் அவர்களை நிறையபேர் பார்த்துக் கொண்டே கடந்து செல்ல…. வெளிய போய்ப் பேசலாம் என்றான் ஈஸ்வர். 

பாவனிக்கும் இருக்கும் இடம் புரிந்திருந்தால்…. அவனுடன் சென்றாள். மதிய நேரம் என்பதால் ஈஸ்வர் அவளை உணவகத்திற்கு அழைத்துச் சென்றான். ஈஸ்வர் தனக்கு அளவு சாப்பாடு சொல்ல… நல்ல பசியில் இருந்ததால்… பாவனி முழுச் சாப்பாடு சொன்னாள். 

எதோ எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுபவள் போலத்தான் உண்ண ஆரம்பித்தாள். ஆனால் கொஞ்சம் உண்டதும் உண்ண முடியவில்லை. அவள் வைத்துக் கொண்டே உட்கார்ந்து இருக்க… அவள் அப்படி இருப்பதை ஈஸ்வரும் கவனித்துத் தான் இருந்தான். 

ஏன் வச்சிட்ட சாப்பிடு.” என்றான். 

இல்லை முடியலை…. இதுக்கு மேல சாப்பிட்டா நேசைக் கரிச்சிட்டே இருக்கும்.” என்றாள். ஈஸ்வரும் பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை. 

ஏற்கனவே உண்ண முடியவில்லை என வருத்தம், அதோடு இப்படி உணவை வீணாக்கி விட்டோமே என்ற குற்ற உணர்வும் சேர்ந்துகொள்ள… ஒருமாதிரி சோர்வாக உணர்ந்தாள். 

நாம பிரியறதுக்கு நீ ஒரு காரணம் சொன்ன இல்ல… அதையெல்லாம் ஏத்துக்க முடியாது.” 

உனக்கு எதுவும் என்னைப் பிடிக்கலையா? அதுக்காக உங்க வீட்டை நீ காரணமா சொல்றியா? அப்படி இருந்தா சொல்லு.” என அவன் கேட்க…. 

பிடிக்காம எல்லாம் இல்லை ஈஸ்வர். என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டதுனால… நீங்க காலமெல்லாம் எங்களைச் சுமக்கனும்னு அவசியம் இல்லை.” 

சுமைன்னு நான் சொன்னேனா… உங்க குடும்பம் நிலவரம் தெரியாம நான் உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டேன்னு நீ நினைக்கிறியா?” 

உங்களுக்குக் கஷ்ட்டமா தெரியாம இருக்கலாம். கடமை பட்டிருந்த எங்க அப்பாவே விட்டுட்டுத்தான் போனார். உங்களுக்கு மட்டும் பார்க்கனும்னு என்ன?” 

ஐயோ இவளுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது என ஈஸ்வருக்குத் தெரியவே இல்லை. பிரியமானவர்களுக்காக எதைச் செய்தாலும் அது எப்படிக் கஷ்ட்டமாகும்? ஆனால் இவன் பிரியத்தை அவளிடம் காட்டி இருக்கிறானா என்பதை இவனும் யோசித்துப் பார்க்கவில்லை. 

நேரத்தை பார்த்த பாவனி, “எனக்கு இப்போ ஹோம் விசிட் இருக்கு. நான் போகணும்.” என்றாள். 

இருவரும் ஹோட்டலில் இருந்து வெளியே வர…. “எங்கன்னு சொல்லு நானே விடுறேன்.” என்றான் ஈஷ்வர். 

இருக்கட்டும் பரவாயில்லை…நான் பஸ்ல போயிடுவேன்.” 

சரி பஸ் ஸ்டாப்ல விடுறேன்.” என்றவன், அவளை வண்டியில் அழைத்துக் கொண்டு செல்ல… பாவனிக்கு குமட்டிக் கொண்டு வர… ஈஸ்வர் வண்டியை ஓரமா நிறுத்துங்க என்றாள். 

எதற்கோ என்று நினைத்து ஈஸ்வர் வண்டியை நிறுத்த… சாலையின் ஓரம் சென்றவள், சிறிது நேரம் நின்று பார்த்தாள். ஆனால் வாந்தி எடுக்கவில்லை. 

அவளையே பார்த்துக் கொண்டிருந்த கணவனிடம், “ஒரு மாதிரி இருக்கு.” என்றாள். 

உடம்பு சரி இல்லையா… நீ சரியாவே சாப்பிடலை.” என்றான். 

பசிக்குது ஆனா சாப்பிட முடியலை…. ஆனா திரும்பக் கொஞ்ச நேரத்தில பசிக்கும்.” 

அவளின் வாடிய முகத்தைப் பார்த்தவன், எதாவது ஜூஸ் குடி எனக் கடைக்கு அழைத்துச் சென்று எலுமிச்சை சாறு வாங்கிக் கொடுத்தான். அதைக் குடித்ததும் கொஞ்சம் தெளிவாக இருந்தாள். 

இப்போ நீ வேலைக்குக் கண்டிப்பா போகனுமா?” 

அவங்ககிட்ட வரேன்னு சொல்லிட்டேன், வெயிட் பண்ணுவாங்க.” என்றாள். 

ஈஸ்வரே அவளிடம் விலாசம் கேட்டு அழைத்துச் சென்றான். அவளை அந்த வீட்டு வாயிலில் இறக்கிவிட…. தேங்க்ஸ் எனச் சொல்லிவிட்டு சென்றாள். 

Advertisement