Advertisement

இவளுக்கு நான் யாரோ போலவே பேசுகிறாளே…. இவளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என யோசித்துக் கொண்டே சென்றான். 

இப்போது சிறிது நாட்கள் முன்பு பக்க வாதம் வந்து சரியாகி இருந்த வயதான பெண்மணிக்கு தான் பிசியோதெரபி பயிற்சி கொடுக்க வேண்டும். அவர் படுக்கையில் படுத்துக் கொண்டு இருக்க…. அவருக்குக் கையையும் காலையும் தூக்கி பயிற்சி கொடுத்தாள். 

ஒரு மணி நேரம் சென்று ஐநூறு ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு அவள் வெளியே வந்த போது… சற்று வெலவெலத்துப் போய்த் தான் இருந்தாள். எப்படி வீடு சென்று சேரப் போகிறோம் என்று இருக்க…. அப்போது அவள் முன்பு சென்று ஈஸ்வர் வண்டியை நிறுத்த…. 

நீங்க இன்னும் போகலையா?” என்றவள், அவன் சொல்லாமலே அவன் பின்னே வண்டியில் சென்று ஏறிக் கொண்டாள். 

ஒரு மணி நேரம் தானே இருந்து உன்னைக் கூட்டிட்டு போயிடலாம்னு தான்.” என்றான். 

அந்த நேரம் அவளுக்கு இப்படியே எங்காவது ஈஸ்வருடன் சென்றுவிட வேண்டும் என்பது போலத்தான் இருந்தது. 

ஏன் இவனுடன் தன்னால் மகிழ்ச்சியுடன் வாழ முடியாமல் போனது என்ற எண்ணம் வர…. சாலையில் யாரை பார்த்தாலும் சந்தோஷமாக இருப்பது போலத் தோன்ற… தான் மட்டும் ஏன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என நினைத்தாள். 

இது எல்லோருக்குமே தோன்றுவது தான். நாம் கஷ்ட்டத்தில் இருக்கும் போது மற்றவர்களைப் பார்த்தால்… அவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருப்பது போலத் தோன்றும். உண்மையில் அவர்களுக்கு என்ன பிரச்சனையோ நமக்கு எப்படித் தெரியும்

ஏற்கனவே உடற் சோர்வோடு, மன சோர்வும் சேர்ந்துகொள்ள…. ரொம்பவும் ஒருமாதிரி இருந்தாள். 

ஈஸ்வர் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்வான் என்று பார்த்தால்… அவன் அவளை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான். 

நீ ஆளே சரி இல்லை…. எதுக்கும் டாக்டரை பார்த்திடலாம்.” என்றதும்

ஒன்னும் இல்லை ஈஸ்வர், அம்மாவுக்கு உடம்பு முடியாம போனதுல இருந்து சரியா சாப்பிடலை, தூங்கலை… எதாவது சத்துக் குறைவா தான் இருக்கும்.” என்றாள். 

அதை நீ சொல்லாத டாக்டர் சொல்லட்டும்.” 

இவர்கள் சென்ற நேரம் பொது மருத்துவர் தான் இருந்தார். ஈஸ்வர் பாவனியின் உடல் சோர்வை சொல்ல… 

அவளைச் சோதித்தபடி, “கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுது.” என்றார். 

பாவனி விவரம் சொல்ல…. “அனாமிக்கா இருக்கிற மாதிரி தான் தெரியுது.” என்றதும், நான் சொன்னேன் இல்ல என்பது போலப் பாவனி கணவனைப் பார்க்க…. அதற்குள் மருத்துவர், “லாஸ்ட்டா பீரியட்ஸ் எப்போ வந்தது?” எனக் கேட்க… அவள் சொன்ன தேதியைக் கேட்டதும், “எதுக்கும் கர்பத்தை உறுதி செய்யும் பரிசோதனை பண்ணிடுங்க.” என்றார். 

பாவனியின் அம்மா முடியாமல் இருந்த போது, விலகிதான் இருந்தனர். அவருக்குச் சற்று சரியானதும் பாவனியும் ஈஸ்வரை மறுத்தது இல்லை. ஆனால் அதுவும் இப்போது சமீப நாட்களாக எதுவம் இல்லாததால்… இருவரும் இப்படி ஒன்றை அப்போது சற்றுக் கூட எதிர்பார்த்து இருக்கவில்லை. பாவனி இருந்த குழப்பத்தில் இதையெல்லாம் யோசிக்கும் நிலையிலே இல்லை. அவள் சொல்லாமல் ஈஸ்வருக்கு எப்படித் தெரியும். 

மருத்துவர் அப்போதே செவிலியரை அழைத்துப் பரிசோதனை செய்யும்படி சொல்லி பாவனியை அனுப்பி வைத்தார். 

அடுத்த ஐந்து நிமிடத்தில் கர்ப்பம் உறுதியாகி விட… 

நீங்க இனிமே அதற்குரிய டாக்டரை பார்க்கிறது தான் நல்லது.” என்று சொல்லி மருத்துவர் அவர்களை அனுப்பி வைக்க…. ஈஷ்வர் அப்போது எப்படி உணார்ந்தான் என அவனுக்குத் தெரியவே இல்லை. 

ஈஸ்வர் எனப் பாவனி எதோ சொல்ல வர… 

இனிமேயும் நீ பேசுறதை நான் கேட்பேன்னு நினைச்சிட்டு இருக்கியா? உனக்கு உன் குடும்பம் எவ்வளவு முக்கியமோ…. அதே போல எனக்கும் என் குழந்தை அவ்வளவு முக்கியம். அதை நல்லபடியா பெத்து எடுக்கணும். அது மட்டும் தான் உன் சிந்தனையா இனி இருக்கணும். நீ என்ன சொல்றதா இருந்தாலும், குழந்தை பிறந்த பிறகு சொல்லு, நான் கேட்கிறேன். ” என்றவன், அவளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். 

நேராக அவன் வீட்டிற்குத் தான் சென்றான். அவர்கள் இருவரும் சேர்ந்து வருவதைப் பார்த்த ஊர்வசி சந்தோஷமாக அவர்களை வரவேற்க… 

அம்மா நாளைக்குப் பாவனியை கூட்டிட்டு டாக்டர்கிட்ட போயிட்டு வந்திடுங்க.” என்றவன் விவரம் சொல்ல… கேட்ட ஊர்வசிக்கு மிகவும் மகிழ்ச்சி. 

அதுகென்ன போயிட்டு வந்திடலாம்.” என்றவர், பாவனி களைத்திருப்பதைப் பார்த்து, “எதாவது குடிக்கிறியா?” என்றதும், அவ சரியாவே சாப்பிடலை என ஈஸ்வர் சொல்ல…. 

ஏன் பாவனி சரியா சாப்பிட முடியலையா?” என்றவர்

உடனே மருமகளுக்குத் தோசை ஊற்றிக் கொண்டு வந்தார். பாவனி ஒரு தோசையோடு போதும் என்று விட்டாள். 

ஒரே நேரம் நிறையச் சாப்பிட முடியலைனா கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடு. வாந்தி வருதுன்னு சரியா சாப்பிடாம இருந்துடாத.” என்றார். 

பாவனி அவள் அம்மாவுக்கு அழைத்துத் தான் ஈஸ்வர் வீட்டில் இருப்பதாகச் சொல்ல… “இங்க ஒன்னும் எந்த வேலையும் இல்லை. இருந்திட்டு வா.” என்றார். 

பாவனிக்கு அசதியாக இருக்க… அவள் சோபாவில் உட்கார்ந்து கொண்டே உறங்க… ஈஸ்வர் அவளை உள்ளே சென்று உறங்க சொன்னான். 

பாவனி உள்ளே சென்று படுத்தது தான் தெரியும், அவள் ஆறு மணி வரை எழுந்து கொள்ளவில்லை. அவள் எழுந்து கொள்ளும் நேரம் எழுந்து கொள்ளட்டும் என்று ஊர்வசியும் அவளை எழுப்பவில்லை. 

ஈஸ்வரும் கடைக்குச் செல்லாமல் வீட்டில் தான் இருந்தான். 

ஏழு மணி போலப் பாவனி அவளாகவே எழுந்துகொள்ள… ஊர்வசி அவளுக்குக் குடிக்கப் பால் கொண்டு வந்து கொடுத்தார். 

பாவனிக்கு அவள் வீட்டுக்கு செல்ல வேண்டும், ஈஸ்வர் என்ன சொல்வானோ என்று யோசனையில் உட்கார்ந்து இருக்க…. 

ஈஸ்வர் அவளைப் பார்த்து என்ன?” என்றான். 

எங்க வீட்டுக்கு போகணும்.” 

போ உன்னை யாரு போக வேண்டாம்னு சொன்னது. ஆனா உனக்கு இப்போ வேலைக்குப் போற அளவு தெம்பு இல்லை. அதனால கொஞ்ச நாள் போகாத அப்புறம் பார்க்கலாம்.” என்றான். 

பாவனி சரி என்று சொல்லிவிட்டு சென்றாள். அவளோடு ஊர்வசியும் சென்று வளர்மதியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு வந்தார். வளர்மதிக்கும் மகிழ்ச்சி தான். 

நீ இப்படி இருக்க நேரம் நான் உன்னைக் கவனிக்க முடியாம போயிடுச்சே…” என வருத்தபட்டார். “இப்போ உங்க வேலை செய்யுற அளவுக்கு வந்துடீங்க இல்ல மா… அதே போதும்.” என்றாள் பாவனி. 

அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த விமல், ஈஸ்வரிடம் வந்தவன், “அம்மாவுக்கு இனி வேலை பார்க்க முடியாது தான… அக்காவுக்குத் தான் ரொம்பக் கஷ்ட்டம். எனக்கு எதாவது வேலை வாங்கித் தர்றீங்களா? இல்லைனா நான் உங்க கடையிலேயே வேலை செய்யட்டுமா…” என அவன் கேட்க… 

ஈஸ்வரின் மீது எதோ ஒரு நம்பிக்கை இருப்பதுனால் தானே விமல் வந்து அவனிடம் என்ன செய்யலாம் என யோசனையாவது கேட்கிறான். தன் மனைவிக்கு மட்டும் ஏன் தன் மீது நம்பிக்கை இல்லாமல் போனது என நினைத்துக் கொண்டான் 

நீ இந்த வருஷ படிப்பை முடி, அப்புறம் பார்ட் டைமா என்ன செய்யுறதுன்னு யோசிக்கலாம்.” என்றான் ஈஸ்வர். விமல் சரியென்று சந்தோஷமாகவே அங்கிருந்து சென்றான். 

காலையில் வைத்த குழம்பே இருக்க… எல்லாருக்கும் தோசை ஊற்றிக் கொடுத்துவிட்டு பாவனியும் உண்டுவிட்டு உட்கார்ந்து இருந்தாள். 

வளர்மதி நேரமே படுத்து உறங்கிவிட… விமல் படித்துக் கொண்டு இருந்தான். மாலை உறங்கி எழுந்ததால் பாவனிக்கு உறக்கம் வரவில்லை. அவள் கைபேசியைப் பார்த்துக் கொண்டு இருக்க… அந்த நேரம் வாயில் மணி அடிக்க… பாவனி சென்று பார்த்தால் ஈஸ்வர் தான் வந்திருந்தான். 

இவன் எதுக்கு இப்போ வந்திருக்கான் என்பது போல அவள் பார்க்க… “உன்னோட இருக்க வரலை. நான் என் குழந்தையோட இருக்க வந்தேன்.” என்றான். 

குழந்தை உருவாகி இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் இவன் பண்ணும் அலும்பு இருக்கிறதே என்று நினைத்தவள், ஒன்றும் சொல்லாமல் அவனுக்கு வழிவிட்டு நிற்க…. விமலை சென்று பார்த்துவிட்டு அறைக்குச் சென்றுவிட்டான். 

அவன் உறங்கட்டும் செல்லலாம் எனப் பாவனி நேரம் கழித்துச் செல்ல… ஈஸ்வர் கைபேசியில் ஒரு சின்னப் பெண் பேசிய உபன்யாசத்தைக் கேட்டுக் கொண்டு இருந்தான். நடுநடுவே அந்தச் சிறுமி ஆன்மீக பாடல்களையும் பாட. 

பாவனி சற்று நேரம் பொறுத்தவள், “இப்படிச் சத்தமா வச்சுகிட்டா… எப்படித் தூங்கிறது?” என

இது உனக்கு இல்ல… வயித்துல இருக்க என்னோட குழந்தைக்கு… வயித்துல இருக்கும் போதே…என் குழந்தை நல்ல விஷயத்தைக் கேட்டு வளரணும்.” என்றான். 

ஈஸ்வருக்கு எப்போதுமே கடவுள் நம்பிக்கை உண்டு. அசைவம் உண்பது கூட நாள் கிழமை பார்த்து தான் உண்பான். 

எதிலுமே உங்களுக்கு ரொம்ப ஒட்டுதல் இல்லை. எப்படிக் கடவுள் நம்பிக்கை மட்டும் இருக்கு.” எனப் பாவனியே ஆச்சர்யபட்டு இருக்கிறாள். 

எனக்குக் கடவுள் இருக்காரா இல்லையா தெரியாது. ஆனா கடவுள் நம்பிக்கை என்னை ஒழுக்கமா இருக்க வைக்குது. நான் செய்யுற நல்லது கெட்டதை ஒருத்தர் பார்த்திட்டு இருக்காருன்னு நான் நம்புறேன்.” என்று சொல்லி இருக்கிறான். 

இப்பவே உங்க குழந்தையைப் படுத்தணுமா?” பாவனி கேட்க… 

கடவுள் நம்பிக்கை வர வைக்கிறதுக்காக இல்ல… குழந்தை உண்டாகி இருக்க நேரம் சந்தோஷமா இருக்கணும்னு சொல்வாங்க. ஏற்கனவே நீ மனசுல நிறையப் போட்டு குழப்பிக்கிற…. அது நம்ம குழந்தையைப் பாதிக்காம இருக்கத்தான். நல்லதை கேட்டு வளரட்டும்.” என்றவன்

தேவை இல்லாதது யோசிக்காத பாவனி, உனக்கு மனசுக்கு ஒரு மாதிரி இருந்தா… சினிமா பாட்டு கூடக் கேளு பரவாயில்லை.” என்றான். 

கைபேசியில் மெல்லிய சத்தத்தில் பாட்டு வைத்தவன், அதைக் கேட்டபடி உறங்கிப் போனான். பாவனிக்கு தான் உறக்கம் வரவில்லை. 

அவன் சொல்வது உண்மை தான். இப்போது இவர்கள் இருவர் மட்டும் இல்லை…குழந்தையும் இருக்கிறது. 

குழந்தையை நல்லபடியாகப் பெற்று எடுக்கும் பொறுப்பு அவளுக்கு இருக்கிறது. இருக்கும் சேமிப்பை வைத்து நாட்களை ஓட்ட வேண்டியது தான். மற்றதை பிறகு பார்க்கலாம் என அவளும் மற்றதை இப்போது ஒதுக்கி வைத்தாள். 

கணவனை விட்டு இப்போது பிரிய போவது இல்லை என்பதே…இத்தனை நாள் அவளுக்கு இருந்த இறுக்கத்தைத் தளர்த்தி இருக்க… மனதிற்குள் சொல்ல முடியாத மகிழ்ச்சி. 

உறங்கிக் கொண்டிருந்த கணவனை எழுப்பியவள், “நமக்கு என்ன குழந்தை பிறக்கும்?” என்றதும், இருந்த கடுப்பில், “எந்தக் குழந்தைனாலும் ஓகே…. ஆனா உன்னை மாதிரி இல்லாம இருந்தா போதும்.” என்றவன் திரும்பிப் படுத்துக் கொண்டான். 

பாவனிக்குக் கோபத்திற்குப் பதில் சிரிப்பு தான் வந்தது. 

Advertisement