Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 10

வளர்மதிக்குச் சங்கடமாக இருக்கக் கூடாது என்றே ஈஸ்வர் அங்கே அதிகம் செல்வது இல்லை. அவர் இப்போது முழு நேரமும் நைட்டி தான் அணிந்து கொண்டிருக்கிறார். தனது தனிப்பட்ட தேவைகளுக்குப் பிறரை எதிர்பார்த்து இருப்பது ஏற்கனவே அவருக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்திருக்கும், இதில் அதை மற்றவர் பார்க்கும் போது, இன்னும் கஷ்டமாக இருக்கும்.

ஈஸ்வர் அதனால் பகல் வேளையில் செல்வது இல்லை. இரவு வேளை தான் செல்வான். அப்போது வளர்மதியும் உண்டுவிட்டு மாத்த்திரை போட்டுக் கொண்டு படுத்துவிடுவார்.

திருமணமாகி சில நாட்கள் தானே ஆகியிருந்தது. அதனால் ஊர்வசி தான் இப்படி இருவரும் இங்கேயும் அங்கேயுமாக இருக்கிறர்களே எனப் புலம்புவார். அதனால் வளர்மதிக்கு ஓரளவு சரியானதும், சனிக்கிழமை இரவுகளில் மட்டும் ஈஸ்வர் அங்கே தங்கவும் ஆரம்பித்தான். மறுநாள் விமலுக்கும் பள்ளி விடுமுறை என்பதால்… இரவு வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு உறங்க செல்வார்கள். வளர்மதியும் அன்று மகளைக் கணவனோடு சென்று உறங்க சொல்வார். இப்போது இரண்டு வாரங்களாகத் தான் அவன் செல்லவில்லை. அவன் மனைவி தான் தள்ளி நிற்கிறாளே….

தன் மகனுக்காகவாவது தான் சரியாகி விடவேண்டும் என்ற வைராக்கியம் வளர்மதிக்கு இருந்தது. அதனால் அவர் ஒழுங்காக உண்டு மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, உடற்பயிர்சிகளையும் செய்து கொண்டு வந்தார். இப்போது பிடித்துக் கொண்டு நடக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பாவனி வீட்டில் தான் இருந்தாள். காலையிலேயே வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மாடி பால்கனியில் சென்று உட்கார்ந்து இருந்தாள்.

வாய் எதோ பாடலை முனங்கிக் கொண்டு இருந்தாலும், கண்கள் கலங்குவதும், அதை விரலால் துடைப்பதுமாக இருந்தாள்.

அந்த நேரம் ஈஸ்வர் வருவான் என்று அவள் எதிர்ப்பார்க்கவில்லை. அவனைப் பார்த்ததும் வாங்க என்றவள் புன்னகைக்க முயன்று தோற்றாள்.

அவள் எதிரில் தரையில் உட்கார்ந்தவன், “அப்புறம் எப்படி இருக்க? அம்மா எப்படி இருக்காங்க?” என்றான்.

இப்போ எவ்வளவோ பரவாயில்லை ஈஸ்வர்.” என்றவள், அவள் அம்மா என்ன செய்கிறார் என்று கீழே சென்று எட்டி பார்த்துவிட்டு வந்தாள். அவர் உறங்கிக் கொண்டு தான் இருந்தார். அவளின் பெரியம்மா நாளை வருவதாகச் சொல்லிவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

என்ன சரியானாலும் அவங்களால முன்ன மாதிரி ஆக முடியாது. அவங்க இனி வேலை பார்க்கிறது எல்லாம் கஷ்டம்தான்.” என்றவள், “அவங்களுக்கு ஏன் இப்படி ஆச்சு? இத்தனை நாள்தான் கஷ்ட்டபட்டாங்க இனியும் கஷ்ட்டபடனுமா? அவங்க ஏன் இதெல்லாம் அனுபவிக்கனும்? அவங்க என்ன தப்பு பண்ணாங்க. தப்பு பண்ண எங்க அப்பா எல்லாம் நல்லாத்தானே இருக்கார். அப்போ நல்லவங்களா இருந்து என்ன பயன்?” எனப் பாவனி கலங்கிய கண்களைத் துடைக்க…

முதல்ல ஒன்னு புரிஞ்சிக்கோ… நோய் எல்லோருக்கும் வரும். அது நல்லவன் கெட்டவன்னு எல்லாம் பார்த்து வராது.”

உங்க அப்பாவுக்கு என்ன ஸ்ட்ரெஸ் இருந்தது? அவர் நல்லா சாப்பிட்டு தூங்கி எழுந்துக்கிறார். ஆனா உங்க அம்மா அப்படியா? அவங்க அவங்களைப் பத்தி யோசிக்கவாவது நேரம் இருந்திருக்குமா? உன் தம்பியை பத்தி எவ்வளவு கவலைப்பட்டிருப்பங்க. அவங்களுக்குன்னு அவங்க எதாவது செஞ்சிருப்பாங்களா? அதெல்லாம் அவங்க உடலை பாதிக்காம இருக்குமா?”

நீ கேட்ட இல்ல… எங்க அம்மா நல்லவங்களா இருந்து என்ன பயன்? அவங்க இப்போ கஷ்ட்டம் தானே படுறாங்கன்னு. ஆனா அவங்க தனியா கஷ்ட்டபடாம கூட நாம இத்தனை பேர் இருக்கோம் பார்த்தியா… அவங்க எந்த நிலையில இருந்தாலும், நாம அவங்களை விட்டுடுவோமா… ஆனா உன் அப்பாவுக்கு யார் இருக்கா?”

எல்லோருக்கும் கஷ்ட்டம் வரும், ஆனா அந்த நேரத்துல அவங்க கூட யார் இருக்கா? அவங்க எப்படி அந்தக் கஷ்ட்டத்துல இருந்து மீண்டு வர்றாங்க. அதுதான் பார்க்கணும்.”

ஈஸ்வர் சொன்னது பாவனிக்குப் புரிந்தது. ஆனால் அப்போதும் அவள் முகம் தெளியவில்லை.

நீங்க சொல்றது சரிதான் ஈஸ்வர். எங்க அம்மாவுக்கு நாங்க இருக்கோம். அதுதான் நானும் சொல்லனும்னு நினைச்சேன். அம்மாவால பழைய மாதிரி வேலை எல்லாம் பார்க்க முடியாது. இனி அவங்க சம்பாத்தியம்னு எதுவும் இருக்காது.”

கொஞ்சம் சேவிங்க்ஸ் இருக்குதான், ஆனா அது விமலுக்கு இருக்கட்டும். நான்தான் என் குடும்பத்தைப் பார்த்துக்கனும். நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி ஆகியிருந்தா… நான் கல்யாணத்தைப் பத்தி யோசிச்சே இருக்க மாட்டேன்.”

என் அம்மாவுக்கு நான் பார்க்க கடமை பட்டிருக்கேன். எனக்கு உங்களை இதுல இழுத்துவிட இஷ்டம் இல்லை. நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன். நான் இனி குடும்பம் குழந்தைன்னு யோசிக்கிறது எல்லாம் கஷ்ட்டம். எனக்கு விருப்பமும் இல்லை.”

நீங்க என்னை விட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்க. ஏன் அவந்திகாவுக்குக் கூட உங்களைப் பிடிச்சிருக்கு தானே… நீங்க அவளைக் கல்யாணம் பண்ணிக்கோங்க.” என்றதும் ஈஸ்வர் சட்டென்று எழுந்து கொண்டான்.

அவன் எழுந்த வேகத்தைப் பார்த்து அடிக்கத்தான் போகிறான் போல எனப் பாவனி மருண்டு போய்ப் பார்க்க… அடித்துவிடப் போகிறோம் என்றுதான் ஈஸ்வரும் தள்ளி சென்று நின்று கொண்டான்.

ம்ம்… சொல்லி முடி.” என்றான்.

இத்தனை நேரம் பேசியது போல இப்போது பாவனிக்குச் சரளமாகப் பேச வரவில்லை.

அதுதான் சொன்னேனே… கல்யாணம் செஞ்சுக்கக் கூடாதுன்னு நான் முன்னாடியே நினைச்சது தான். எங்க அம்மாவுக்கு இப்படி ஆகும்னு தெரியாம பண்ணிகிட்டேன். ஆனா இப்போ பண்ணி இருக்க வேண்டாம்னு தோணுது.”

உன்னை வேலைக்குப் போக வேண்டாம்னோ இல்ல… உங்க அம்மாவை பார்க்க கூடாதுன்னோ நான் சொல்லவே இல்லையே…”

அது சரி வராது ஈஸ்வர். எப்பவோ ஒரு தடவை உதவி தேவைப்படும் போது செய்யுறது வேற… இப்போ அப்படியில்லை… என்னால இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் அல்லாட முடியாது. அதோட நான் இப்போ குழந்தையைப் பத்தி யோசிக்கிற நிலமையில இல்லை. என்னோட வேலையும் அப்படிப்பட்டது.”

இப்போ உன்னை யாரும் அவசரமா குழந்தை பெத்து தர சொல்லி சொல்லலை பாவனி.”

யாரும் சொல்லலைனாலும் எனக்குன்னு ஒரு மனசாட்சி இருக்கு. உங்க அம்மாவுக்கு ஆசை இருக்கும் தானே… என்னால ஏன் எல்லோரும் கஷ்ட்டபடணும்.”

இது அவசரப்பட்டு முடிவு எடுக்கிற விஷயம் இல்லை.”

ஆனா என்னோட முடிவு இதுதான் ஈஸ்வர்.”

அம்மா கிளாஸ் எடுக்கிறதுனால தான் பெரிய வீடு தேவைப்பட்டுச்சு. இனி இவ்வளவு பெரிய வீடு தேவை இல்லை. வாடகையும் அதிகம், அதுதான் வேற எங்காவது வீடு மாத்திட்டு போயிடலாம்னு பார்க்கிறேன்.”

மொத்தமா என்னை விட்டு போறதுன்னு முடிவு பண்ணிட்ட இல்ல….. நீ கல்யாணம் பண்ணிக்கணும்னா நான் கல்யாணம் பண்ணிக்கணும், உனக்கு வேண்டாம்னா நான் போயிடனுமா? நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா?” அவள் என்ன நினைத்து பேசுகிறாள் என ஈஸ்வருக்கு உண்மையிலேயே புரியவில்லை.

ஏன் ஈஸ்வர் இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க? தப்பு என் மேலத்தான். நான் தேவையில்லாம உங்க வாழ்க்கையில வந்திட்டேன். இப்போ விலகிக்கிறேன்னு சொல்றேன்.”

எவ்வளவு சுலபமா சொல்ற… உனக்கு உங்க அப்பா புத்தி தான். ஒரு கஷ்ட்டம்னு வந்ததும், உங்க அப்பா விலகின மாதிரி தான் நீயும் இருக்க.” என்றதும் பாவனி அவனை வெறித்துப் பார்க்க…

என்ன பார்க்கிற? என்னை வேண்டாம்னு சொல்றவ… எனக்கும் வேண்டாம். எங்க அப்பா எங்க அம்மாவுக்குப் பண்ண துரோகத்துக்குக் கொஞ்சமும் குறைச்சல் இல்லாதது… நீ இப்போ எனக்குப் பண்ணது.”

இப்படித்தான் எனக்கு ஒரு கஷ்ட்டம் வந்திருந்தா… என்னை விட்டு நீ போயிருப்பியா?”

நான் இதுக்குதான் கல்யாணம் எல்லாம் வேண்டாம்னு நிம்மதியா இருந்தேன். யார் வந்து ஆரம்பிச்சது. உன் மனசாட்சியைத் தொட்டு சொல்லு?” ஈஸ்வர் கேட்க….

நான்தான் இந்தக் கல்யாணம் நடக்கக் காரணம். ஆனா நான் அவசரப்பட்டு முடிவு பண்ணிட்டேன். இப்போ எனக்கே இது சரி வராதுன்னு தோணுது.”

பாவனி நமக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்லை… வெறும் பணம் மட்டும் தான். அதுக்காக இவ்வளவு பெரிய முடிவு தேவையா?”

பணம் இருக்கிறவங்க சொல்வாங்க பணம் முக்கியமில்லைன்னு. ஆனா தேவைக்குக் கூடப் பணம் இல்லாதவங்களோட நிலைமையில இருந்து பார்த்தா தான் தெரியும். இப்படியொரு சூழ்நிலை வர்றவரை எனக்குமே தெரியலை… எங்க அம்மா எங்க அப்பாகிட்டையே பணம் வாங்கிக்கலை…உன்கிட்ட இருந்து மட்டும் வாங்கிப்பாங்களா… இப்படியொரு நிலைமையில இருக்கோம்னு அவங்க மனசுக்குள்ள எவ்வளவு கஷ்ட்டப்படுவாங்க.”

இந்தக் காரணத்துக்காக நீ என்னை விட்டு பிரிஞ்சா மட்டும் அவங்க கஷ்ட்டப்பட மாட்டாங்களா…”

அவங்ககிட்ட யார் காரணம் சொல்லப் போறா… என் வாழ்க்கை என் இஷ்டம்.” என்றாள் அலட்சியமாக.

உன்கிட்ட போய்ப் பொறுமையா பேசுறேன் பாரு… என்னைச் சொல்லணும். அதே போல நீ என்னை விட்டு போன பிறகு நான் என்ன பண்ணனும்னு எல்லாம் நீ முடிவு எடுக்காத. என் வாழ்க்கையைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்.” என்றவன்,

உங்க அம்மாவுக்கு இப்போ தான் சரியாகிட்டு வருது. இப்போ எதாவது பண்ணி மொத்தமா அவங்க இல்லாம பண்ணிடாத… விமலும் பன்னிரெண்டாவது பரீட்சையை எழுதி முடிக்கட்டும். இன்னும் மூணு மாசம் போகட்டும். அதுவரையாவது கொஞ்சம் பொறுமையா இரு. அதுக்குப் பிறகு என்ன வேணா பண்ணிக்கோ.” என்றவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

ஈஸ்வர் சென்றதும் பாவனிக்கு என்ன கட்டுப்படுத்தியும் கண்ணீர் நிற்கவே இல்லை. ஆனால் அப்போதும் அவள் பேசியது தவறு என்று அவள் நினைக்கவில்லை. ஈஸ்வரையும் ஏன் கஷ்ட்டபடுத்த வேண்டும்? அதுதான் அவளது எண்ணமாக இருந்தது.

அறையில் படித்துக் கொண்டிருந்த விமல் வந்து பசிக்குதுக்கா என்றதும் எழுந்து சென்றாள்.

அதன் பிறகு வந்த நாட்கள் ஈஸ்வருக்கும் பாவனிக்கும் இடையே எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை. பாவனி வேலைக்குச் செல்லும் போதும், திரும்பி வரும் போதும், அவள் கண்கள் அவள் கட்டுப்பட்டையும் மீறி ஈஸ்வரை தேடி அலையும், அதை ஒருமுறை கண்டு கொண்ட ஈஸ்வர், பிறகு அவன் கடையில் இருந்தால் கூட அவள் கண்களில் படவே இல்லை.

வேண்டாம்னு தான் சொல்லிட்டாளே… அப்புறம் என்ன பார்வை வேண்டி கிடக்கு என ஈஷ்வரும் கொதித்துப் போய்த் தான் இருந்தான்.

சில விஷயம் பேசுவதற்குச் சுலபம். ஆனால் செயல்படுத்துவது சுலபமில்லை என பாவனி உணரும் நாளும் வரும்.

ஊர்வசி வளர்மதியை பார்க்க வந்தவர், “இந்த ஈஸ்வர் ஏன் இப்படி இருக்கான்? அவன்கிட்ட மனுஷி பேசவே முடியலை… எதுக்கு எடுத்தாலும் வள்ளுன்னு விழுகிறான். ஒழுங்கா சாப்பிடறது இல்லை… தூங்கிறது இல்லை. நானும் சொல்லிட்டேன் நான் தனியா இருந்துப்பேன், நீ உன் பொண்டாட்டி வீட்ல போய்க் கூட இருந்துக்கோன்னு… அதுவும் கேட்கிறது இல்லை.” எனப் பாவனியிடம் புலம்பிவிட்டு சென்றார்.

பாவனி முன்பெல்லாம் கிளினிக் வரும் நோயாளிகளை மட்டும் தான் பார்ப்பாள். ஆனால் இப்போது மதியம் வரை கிளினிக்கில் இருந்துவிட்டு, மதியத்திற்கு மேல் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று பிசியோதெரபி செய்ய ஆரம்பித்தாள். இவளே போனால் பணமும் கூடுதலாக வரும்.

பெண்கள் மற்றும் சிறு வயது பிள்ளைகளாகப் பார்த்துதான் செல்வாள். ஏழு மணி வரை வேலை பார்த்துவிட்டு தான் வீடு திரும்புவது.

அவங்க அம்மாவுக்கு முடியலைனதும் பாவம் பாவனிக்கு தான் வேலை அதிகம். வீட்லயும் வேலை பார்த்திட்டு வெளியேவும் வேலைக்குப் போறா…வர்ற நைட் ஆகிடுது.”

இன்னும் எவ்வளவு நாள் இப்படி அலைவா… கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் தான் ஆச்சு. அந்தப் பெண்ணால நிம்மதியா இருக்க முடிஞ்சுதா… பாவம்.” என ஊர்வசி புலம்ப…

இப்படி அம்மா எதுவும் பேசியதைத் தான் பாவனி தவறாகப் புரிந்து கொண்டாளோ… என ஈஸ்வர் யோசித்தான்.

இதுக்கு எதுவும் செய்ய முடியாதா ஈஸ்வர்.” என ஊர்வசி மகனிடம் கேட்க…

அவங்க அம்மாவுக்கு இன்னும் கொஞ்சம் சரி ஆகட்டும். இப்போ பேசினா பாவனி எதுவும் புரிஞ்சிக்க மாட்டா…” என்றான்.

ஏன் எதுவும் சொன்னாளா என்ன?” என்றதும்,

அவள் பேசியதை எல்லாம் சொன்னால் அவர் தாங்க மாட்டார் என ஈஸ்வருக்குத் தெரியும். “நம்மகிட்ட இருந்து பணம் வாங்கிக்க யோசிக்கிறா.. ஹாஸ்பிடலுக்குக் கொடுத்த பணத்தைக் கூடத் திருப்பிக் கொடுத்திட்டா…” என்றான்.

நாம அவங்க வீட்டு சூழ்நிலை தெரியாம ஒன்னும் அவளைக் கல்யாணம் செய்யலையே…. அவங்களுக்கு வேற யாரும் இல்லை… நீதான் பார்க்கனும்னு எனக்கோ உனக்கோ தெரியாதா என்ன?”

நம்மகிட்ட பணம் இருக்கு. குணமா இருக்கிற பொண்ணு வேணும்னு தானே நினைச்சோம். பணம் தான் முக்கியம்னு நினைச்சிருந்தா… உனக்கு வேற இடத்தில பார்த்திருப்போமே…” என்றார்.

அவன் அம்மா சொன்னதற்கு ஈஸ்வர் ஆமோதிப்பாகத் தலையசைத்தவன், “அவ இப்படி அவங்க அம்மாவுக்கு ஆகும்னு நினைக்கலை… இத்தனை நாள் சுயமா இருந்திட்டு… இப்போ மத்தவங்களை எதிர்பார்க்கிற நிலை வந்திடுமோன்னு, அவ ரொம்பக் குழப்பிகிறா…” என்றான்.

நீதான் அவளுக்கு எடுத்து சொல்லணும் ஈஷ்வர்.” என ஊர்வசி சொன்னதற்கு ஈஸ்வர் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

எந்த காரணத்திற்காக பேசி இருந்த போதும், பாவனி பேசியது அதிகம் என்ற எண்ணம் அவனுக்கு. இப்போது அவளிடம் சென்று எதையும் பேச அவனுக்கு மனம் இல்லை. 

Advertisement