சரண், கார்த்தியிடம் இன்று தென்காசியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டான்.
“ரிசார்ட் நமக்கு எப்போ கிடைக்கும்? இங்கிருந்து அங்கே போக எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேட்டான்.
அதற்கு போஸ், “சார், ரிசார்ட்டில் இப்போ இருக்கிற கெஸ்ட்டை காலி பண்ணிக் கொடுக்க ஒன்பது மணி வரைக்கும் டைம் கேட்டிருக்காங்க. அதோட நாம இங்கிருந்தும் ஆறு மணிக்கு முன்னாடியே கிளம்பணும். இங்குள்ள கெஸ்ட்ஸ் காலையிலேயே எழுந்து வெளியே வருவாங்க. அந்த நேரத்தில் அங்கே போகும் வழியில் ஒரு சின்ன கிராமம் இருக்கு. டிராஃபிக் அதிகமாகிடும்,” என்றார்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு, “சார், ஒரு கேரவனும் ரெடி பண்ணியாச்சு. அதோட நம்ம கார், முரளி மாமா கார்—இரண்டு வண்டி இருக்கு,” என்றார்.
சரண் கார்த்தியைப் பார்த்தான்.
“இப்ப என்ன பண்ணலாம்?”
“நாம இப்பவே கிளம்பினா மூணு மணி நேரம் ஆகும். நேரே அருவி பக்கத்துக்குப் போயிடலாம். அருவி பக்கத்திலேயே கேரவனை நிறுத்திக்கலாம். நமக்கு தேவையானதை அங்கே பார்த்துக்கலாம். அதுக்குள்ள ரிசார்ட் காலியாகும் நேரத்துக்கு போயிடலாம் ,” என்றான் கார்த்தி.
அந்த நேரத்தில், தீபிகா ஆகாஷுடன் சேர்ந்து ஜாஸ்மின் இருந்த இடத்திற்கு வந்தாள்.
அங்கே ஆகாஷின் தங்கை நீலிமா, மதுரையில் தன் தோழியின் திருமணத்திற்காக வந்திருந்தாள். தென்காசிக்கு போகும் விஷயம் தெரிந்ததும், அண்ணன் தீபிகாவுடன் எடுத்திருந்த ஒரு புகைப்படத்தை குடும்பத்தினர் மட்டும் இருக்கும் குழுவில், “தென்காசி அருவிக்கு போறேன்” என்று போட்டிருந்தான்.
ஏற்கனவே கொசுக்கடியால் சரியாகத் தூங்காமல் எரிச்சலில் இருந்த நீலிமா, அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் உடனே ஆகாஷுக்கு அழைத்தாள்.
“என்னை மட்டும் விட்டுட்டு நீங்க எல்லாரும் போறீங்களா? என்னையும் கூட்டிட்டுப் போங்க!”
அவளது பிடிவாதத்தைப் பார்த்த ஆகாஷ் சிரித்தான்.
சரண், “சரி. இப்ப கிளம்பலாம். சுபா, நீ தீபிகாவை டிரைவர் அங்கிள் கூட கூட்டிக்கிட்டு போ. ஆகாஷ், போஸ்… நீங்க ஒரு வண்டியிலே அவங்க தங்கச்சியை கூட்டிக்கிட்டு நேரே அங்கே வாங்க. கார்த்தி, நீ உன் மனைவியோட எங்க கூட வா,” என்றான்.
அப்போது தீபிகா கையை அசைத்தாள்.
சரணுக்கு அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியவில்லை.
ஜாஸ்மின் சின்னதாகச் சிரித்தபடி, “சரண் … தீபிகா சொல்றது, ஆகாஷ் கூட அவளும் சுபாவும், ஆகாஷோட தங்கச்சியும் ஒரே கார்ல வரணுமாம். அதுவும் ஆகாஷ் தான் கார் ஓட்டணுமாம்,” என்றாள்.
சரணின் முகம் உடனே மாறியது.
“மூணு மணி நேரப் பயணம். அதுவும் சின்ன ரோடு. முடியாது.”
தீபிகா அவனை முறைத்துப் பார்த்தாள்.
கரண் உடனே, “அண்ணா… பார்த்துக்கலாம்,” என்றான்.
சரண் ஏதோ சொல்ல வருவதற்குள் கரண் இடையில் வந்தான்.
“ஆகாஷோட தங்கச்சி எங்க இருக்கா?” என்று கார்த்திக்கிடம் கேட்டான்.
அவள் இருந்த இடத்தைச் சொன்னதும், “அது நாம போற வழியில்தான் இருக்கு. அங்கே போய் அவளை கூட்டிக்கிட்டு வரலாம். திரும்பி வர நேரம் ஆகும்,” என்றான்.
பின்னர் கார்த்தி ஆகாஷைப் பார்த்து, “அங்கே வரைக்கும் டிரைவர் அங்கிள்தான் ஓட்டுவார். அதுக்கப்புறம் நீ ஓட்டு. எங்க வண்டிக்குப் பின்னாடியே வரணும். சரியா?” என்றான்.
ஆகாஷும் சம்மதமாகத் தலையசைத்தான்.
அவன் தீபிகாவை நேராகப் பார்க்காமல், தன் தம்பியைப் பார்த்தபடியே பேசினான்.
அனைவரும் கிளம்பத் தயாரானார்கள்.
அப்போது கேரவனைப் பார்த்த ஜாஸ்மினும் அணுவும் பிரமித்துப் போனார்கள்.
“இங்கேயும் இந்த ஆடம்பரம் தேவையா?” என்று ஜாஸ்மின் முணுமுணுத்தாள்.
சரண் சிரித்தான்.
“நாம இன்னும் ரெஸ்ட் எடுக்கவே இல்லை. இனிமேல் எடுக்க முடியுமா என்றும் தெரியாது. அதனால்தான் இது.”
கேரவனுக்குள் மூன்று அறைகள் இருந்தன. கார்த்திக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டதும், அவன் முகமே மலர்ந்துவிட்டது. மனைவியுடன் உள்ளே சென்றவன், அத்தனை அசதி அவனுக்கு கதவை மூடிக்கொண்டான்.
அந்த நேரத்தில் போஸ், சுபாவிடம் ஒரு சிறிய கருவியைக் கொடுத்து, காதில் மெதுவாகச் சொன்னார்.
“மேடம், இதை காதில் மாட்டிக்கோங்க. உங்களோட தொடர்பில் இருப்போம். ஏதாவது பிரச்சனைன்னா நாங்க சொல்றதை மட்டும் செய்யுங்க.”
சுபா அமைதியாகத் தலையசைத்தாள்.
சிறிது நேரத்தில் நீலிமா இருந்த இடத்தை அடைந்தனர்.
அவளை அழைத்துக்கொண்டு தென்காசி நோக்கிப் புறப்பட்டார்கள்.
நீலிமா வந்தவுடனேயே தீபிகாவின் கையைப் பிடித்து வாழ்த்து தெரிவித்தாள். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இயல்பான நட்பு உருவானது. சுபாவிடமும் அவள் சலசலப்பாகப் பேசிக்கொண்டே வந்தாள்.
வழியில் தீபிகா அவளைப் பற்றி கேட்க, “CA முடிச்சுட்டேன்,” என்றாள்.
தீபிகாவின் வயது தான் அவளுக்கும். அவர்களைவிட மூன்று மாதம் மூத்தவன் ஆகாஷ்.
“அடுத்து என்ன பண்ணப் போற?” என்று கேட்டாள் தீபிகா.
“இன்னும் முடிவு செய்யல. சென்னை பிடிச்சிருக்கு. தனியா வேலை செய்யணும்னு ஆசை. ஆனா அப்பா அம்மா ஒத்துக்க மாட்டாங்க,” என்றாள்.
சிறிது நேரம் கழித்து தீபிகாவும் ஆகாஷும் மட்டும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக போஸ், தன் காதில் இருந்த கருவியை அணைத்துவிட்டான்.
“தேவைப்படும் போது பார்த்துக்கலாம்,” என்று விட்டுவிட்டான்.
தென்காசிக்குள் நுழையும் நேரம்.
ஒரு வளைவில் திடீரென குறுக்கே மூன்று பைக்குகள் வந்தன. அதில் ஒரு பைக் இரண்டு சிறுவர்கள் தடுமாறி கீழே விழுந்தனர்.
ஆகாஷ் சுதாரித்து உடனே காரை நிறுத்தினான். கீழே இறங்கப் போன நேரத்தில் சுபாவுக்கு போஸிடமிருந்து அழைப்பு வந்தது.
“ஏதோ சரியில்லை. கீழே இறங்காதீங்க. வண்டியை எடுக்கச் சொல்லுங்க.”
சுபா உடனே சுதாரித்தாள்.
“ஆகாஷ், வண்டியை எடு. பார்த்துக்கலாம். ஆட்கள் இல்லாத இடத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். அண்ணன் முன்னாடி போறாரு. நீ போ.”
ஆகாஷுக்கு மனம் வரவில்லை. தீபிகாவைப் பார்த்தான்.
அவள் முகத்தில் பயம் தெரிந்தது.
அவன் மீண்டும் கீழே விழுந்திருந்தவர்களைப் பார்த்தான். பெரிய காயம் இருப்பது போலத் தெரியவில்லை.
“ஆம்புலன்ஸுக்கு கால் பண்ணு,” என்று சுபாவிடம் சொல்லிவிட்டு, வண்டியை மெதுவாக இயக்கினான்.
அவர்களைப் பின்தொடர்ந்து வந்த அந்தச் சிறுவர்களின் நண்பர்கள் இரண்டு பைக்குகளில் வந்தனர்.
அதே நேரத்தில் பின்னால் வந்த போஸ் டீமும் அவசரமாக பின் தொடர அதுக்குள்,
அந்தச் சமயத்தில் பைக் பின்னே வந்த தீபிகா காரின் டிரைவர், ஆகாஷின் காரை நெருங்கும் முன்பே அந்தச் பைக்கில் உள்ள ஒருவரை இடித்துவிட்டார்.
அதிலிருந்து வாக்குவாதம் உருவாகி, போலீஸ் கேஸ் ஆகும் நிலை ஏற்பட்டது.
போஸ் உடனே சுபாவைத் தொடர்பு கொண்டார்.
“ஒரு பிரச்சனை. வண்டியை நிறுத்தக்கூடாது. யாராவது வண்டிக்கிட்ட நெருங்கினா, உங்க சீட்டுக்குப் பின்னால ஒரு பெட்டி இருக்கும். அதுல லைசென்ஸ் உள்ள பிஸ்டல் இருக்கு. தேவைப்பட்டா உங்களை பாதுகாத்துக்கோங்க.”
சுபா அந்தப் பெட்டியை எடுக்கும்போது நீலிமா பார்த்துவிட்டாள்.
சுபா உடனே பார்வையால் அமைதியாக இருக்கச் சொன்னாள்.
அதை எடுத்து கையில் வைத்துக்கொண்டாள். முன்புறம் இருந்த தீபிகாவின் பார்வையில் படாமல் கவனமாக மறைத்தாள்.
முன்னே நடந்த நிகழ்வுகள் தீபிகா அதிர்ந்து இருக்க ஆகாஷ் அவளை வேறு விஷயங்களைப் பேச வைத்து சிரிக்கச் செய்ய முயன்றுகொண்டிருந்தான்.
அடுத்த பத்து நிமிடங்களில் அவர்கள் ரிசார்ட்டை அடைந்தனர்.
அருவி இருக்கும் இடத்திற்கு அருகே வண்டிகள் நிறுத்தப்பட்டன.
அருவியின் இரைச்சல் தொலைவிலிருந்தே கேட்டது.
அந்த அழகைக் கண்டதும் தீபிகாவின் முகமே மாறியது.
ஆகாஷும் அவளுடன் செல்ல முயன்றான்.
சுபா, நீலிமாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஆகாஷ் , “நீ பத்திரமா பக்கத்துல பார்த்துக்கிட்டு இரு. நான் அண்ணனைப் பார்த்து டீ, ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரேன். அதுக்கப்புறம் அருவிக்கிட்ட போகலாம். இங்கே இந்த ஓடையைப் பார்த்துக்கிட்டு இரு,” என்று சொல்லிவிட்டு அவளை கேரவனுக்குள் அழைத்துச் சென்றாள்.
அங்கே சரண், போஸுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.
போஸ் மெதுவாகச் சொன்னான்.
“லோக்கல் பசங்க. அவங்க கிட்ட கத்தி இருந்தது. அவங்க நண்பர்கள் அடிபட்டதும் மேடம் காரைத் துரத்தினாங்க. பாதுகாப்புக்காக அங்கிள் வண்டியை வைத்து மோதிவிட்டார்.”
நீலிமா அதிர்ச்சியுடன் கார்த்தியைப் பார்த்தாள்.
“இது என்ன? பிஸ்டல் எல்லாம் இருக்கு. நீங்க எல்லாரும் புரொஃபஷனல் சோல்ஜர்ஸா?”
சரண் சிரித்தான்.
ஆகாஷுக்கு தெரியாமல் இருந்த அந்த விஷயம் இப்போது நீலிமாவுக்குத் தெரிந்துவிட்டது.
“இது சாதாரண பாதுகாப்பு கிடையாது. மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பிரத்யேக குழு. தீபிகாவுக்காக சிதம்பரம் ஏற்பாடு செய்தது. இதைப் பற்றி வெளியே யாருக்கும் தெரியக் கூடாது,” என்று சரண் விளக்கினான்.
அதைக் கேட்ட நீலிமா மயக்கம் வராத குறைதான்.
“அண்ணனுக்கு இது தெரியுமா?” என்று கேட்டாள்.
“இல்லை,” என்றாள் சுபா.
அவள் முகத்தில் கவலை தெரிந்தது.
“அண்ணன் பிடிவாதமாக இங்கே வந்தது தீபிகாவுக்காகத்தான் என்று கொஞ்ச நாளில் எனக்கே தெரியும்,” என்றாள்.
நீலிமா அமைதியாக யோசித்தாள் .
ஆகாஷ் இப்போது தீபிகாவிடம் இன்னும் நெருக்கமாகி இருந்தான். அவர்களுக்கிடையேயான பிணைப்பை அவள் பார்த்துவிட்டாள்.
அவளுக்குள் இன்னொரு பயம் எழுந்தது.
“என் அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் ஆகாஷைப் பற்றி வேறு எதிர்பார்ப்பு இருக்கு. அப்பா அவரால் முடியாத கிரிக்கெட் உலகத்தில் ஆகாஷை ஜொலிக்க வைக்க நினைக்கிறார். சித்தி தன்னைப் போலவும், தன் கணவரைப் போலவும் அவனை ராணுவத்தில் சேர்க்க நினைக்கிறார். இப்போ இது எப்படி சாத்தியம்?”
அவள் மனதைத் திறந்துவிட்டாள்.
“உங்க லெவல் வேற. நாங்க அப்பர் மிடில் கிளாஸ். எவ்வளவு வேறுபாடு. எங்க அம்மாவுக்கும் சித்திக்கும் அவன்தான் உயிர். இப்போ அவனைப் பிரிக்கிற மாதிரி ஆகிடுமே.”
சரண் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
“யாரையும் பிரிக்கணும்னு நாங்க நினைக்கல. இது தான் விதி. தீபிகா அவனை விரும்பிவிட்டாள். அவள் இத்தனை நாள் சந்தோஷமாக இருந்ததை நாங்க பார்த்ததே இல்லை. அவளுடைய உயரம் தெரியாமலேயே அவளை விரும்பும் ஆகாஷும் பெரியவன்தான்.”
“ஒருவருக்காக ஒருவர் புரிந்து வாழட்டும். யார் பக்கம் என்று இழுக்க வேண்டாம். அது அவர்களுடைய சந்தோஷம்.”
நீலிமா இன்னும் தயக்கத்துடன் இருந்தாள்.
“இது ஆகாஷ் பாட்டியின் முடிவு என்றால், சித்தி ஒதுங்குவாங்க. எங்களை எல்லோரையும் சமாதானப்படுத்துவாங்க. ஒத்துக்க வைபைப்பாங்க சித்தப்பா தன குடும்பத்தோட ஒட்ட முடியாம இருக்கிறாரேன்னு அவருக்கு உள்ளுக்குள் வருத்தம் இருக்கும்.”
சுபா அவளை அமைதிப்படுத்தினாள்.
“இதைப் பற்றி இப்போ நாம பேசிக்கிட்டே இருந்தா பிரச்சனை இன்னும் நீளும். நம்மைப் போல பெரியவர்கள் என்ன பேசிக்கிட்டிருக்காங்கன்னு நமக்குத் தெரியாது. இப்போ இங்கே வந்திருக்கிறோம். புதுசா கல்யாணம் முடிச்ச ஜோடிகள், கல்யாணம் நடக்கப் போற ஜோடி… அதனால இப்போ என்ஜாய் பண்ணுவோம்.”
அதன்பிறகு அவர்கள் அருவி, சுற்றியிருந்த இயற்கை, தங்கும் இடம் எனப் பேசிக்கொண்டனர்.
தீபிகா, ஆகாஷுடன் திரும்பி வந்தபோது, ஆகாஷ் சுபாவைப் பார்த்தான்.
“என்ன டீ கொண்டு வர்றேன்னு போனவ என்னாச்சு?”
அதற்குள் ரிசார்ட் ஊழியர்கள் டீ, ஸ்நாக்ஸ் எல்லாம் கொண்டு வந்து வைத்தனர்.
மேனேஜர் கார்த்தியிடம்,
“சார், அருவிக்குப் போகும்போது பாறை வழுக்கும். தண்ணீர் ஆழம் கம்மி. எங்கும் குதிக்காதீங்க. பாறை அடியில் இருக்கலாம். காலை உணவு நீங்கள் சொன்னவுடன் ரெடி பண்ணிடலாம். ரூம்களும் ரெடி,” என்றார்.
ஆகாஷ் மெதுவாக, “ரொம்ப ஆடம்பரமா இருக்கு,” என்றான்.
சரண் கரணைக் காட்டி,
“உங்க கல்யாண விஷயம் அவங்க அம்மாதானே பேச வராங்க. அதனால இவங்க ஹனிமூன் கூட போகல. அதோட சுபா இன்னும் கொஞ்ச நாள்ல அமெரிக்கா திரும்பிப் போயிட்டா, சில வருடம் ஆகும். அதனாலதான்,” என்றான்.
“அதுக்காக இவ்வளவு செலவு செய்யணுமா?” என்று ஆகாஷ் கேட்டான்.
சரண் அவனைப் பார்த்து சிரித்தான்.
“என் சம்பளம் தெரியுமா? சுபாவைவிட கொஞ்சம் அதிகம். இந்தச் செலவு அவங்க இங்கே வந்ததுக்கு நானும் சுபாவும் பண்றது. நாளைக்கு தீபிகாவும் இதே மாதிரி செய்வாள். அதுக்காக நீ அவளை வேலை விடச் சொல்லுவியா?”
ஆகாஷ் சிரித்தான்.
“தீபிகாவைப் பற்றி தெரியாமலா லவ் பண்ணினேன்? அவ நல்லா சம்பாதிக்கிற பொண்ணுன்னு எனக்குத் தெரியும். தனியா, சுயமா நிக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும்.”
கார்த்தி அவனைப் பார்த்து,
“அப்படின்னா இந்தச் செலவு உனக்கு மரியாதைக் குறைவா?”
“இல்லை அண்ணா.”
“அவங்க என் நிறுவனத்தின் பங்குதாரர்கள். இந்தச் செலவு அவங்களுக்கு நான் கொடுக்கிற ஒரு விருந்து மாதிரி. அதே மாதிரி தீபிகாவுக்கும்.”
தீபிகா உடனே அவனை அழைத்துக்கொண்டு ரிசார்ட்டுக்குள் வந்தாள்.
மேனேஜர் பதறினார்.
“என்ன சார்?”
தீபிகா சைகையில் ஏதோ சொல்ல முயன்றாள். மேனேஜருக்கு அவளது சைகை புரியவில்லை.
அவளுடைய பதற்றம் அதிகரித்தது.
அந்த நேரத்தில் நீலிமாவும் சுபாவும் வந்தனர்.
சுபா சொல்ல வருவதற்குள் ஆகாஷே,
“எனக்கு தலைவலி,” என்றான்.
“டாக்டர் வரச் சொல்லவா?” என்று மேனேஜர் பதறினார்.
நீலிமா சிரித்தாள்.
“அண்ணனே டாக்டர். பிளாக் டீ கொடுங்க. போதும்.”
பின்னர் தீபிகாவை நோக்கி,
“அண்ணி, நீங்க டென்ஷன் ஆகாதீங்க. அவனுக்கு டீ வேணும்னா இப்படித்தான் தலைவலின்னு சொல்லுவான். ஒரு நாளைக்கு இருபது டீ வேணும் அவனுக்கு,” என்றாள்.
தீபிகா ஆகாஷை முறைத்தாள்.
அவன் சிரித்தான்.
“எனக்கு டீ ரொம்ப பிடிக்கும். அதுதான்.”
அவள் பார்வையைப் பார்த்ததும்,
“சரி… குறைக்கிறேன். போதுமா?” என்றான்.
*
அப்போது சுபா என்று அழைத்த குரல் கேட்க, அவள் திரும்பிப் பார்த்தாள்.
அவளுடைய கணவன் இரண்டு இளம் பெண்களுடன் நின்றிருந்தான்.
ஒருத்தி அவனுடைய தங்கை ஐஸ்வர்யா.
மற்றொருத்தி சுபாவின் பெரியப்பா மகள் நந்தினி.
அவர்களை வரவேற்ற சுபா, கணவனைப் பார்த்தாள்.
அவன் கண்ஜாடை காட்டினான்.
நந்தினி சுபாவைப் பார்த்து,
“அக்காவுக்கு நாங்க வந்தது பிடிக்கலையா?” என்று கேட்டாள்.
“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. காலையிலேயே வரேன் என்று சொன்னார். கொஞ்சம் லேட்டா வந்துட்டாரு. அதுதான்,” என்று சுபா சமாளித்தாள்.
பின்னர் கணவனைத் தனியாக அழைத்து,
“நீங்க மட்டும் வர்றேன்னுதானே சொன்னீங்க?”
“ரிசார்ட்டுக்குப் போறேன்னு அம்மாகிட்ட சொன்னேன். அதை ஐஸ்வர்யா கேட்டுட்டு, போன தடவை இளம் ஜோடி தனியா போகட்டும்னு விட்டுட்டோமே… இப்போ கூட்டிட்டுப் போறோம் என்று வந்துட்டாங்க. நந்தினியையும் அவளே கூப்பிட்டுட்டா. நான் என்ன செய்ய?” என்றான்.
“இங்கே தீபிகா குடும்பம் இருக்கு. உங்க தங்கை ஏதாவது…” என்று சுபா சொல்ல வர,
“நான் பார்த்துக்கறேன்,” என்று அவன் நிறுத்தினான்.
அதற்குள் அனைவரும் வந்து சேர்ந்தனர்.
“முதல்ல டிபன் சாப்பிடலாம். எல்லாரும் ரூமுக்குப் போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க,” என்று கார்த்தி சொல்லிவிட்டான்.
பின்னர் கார்த்தி, சரணிடம் ஆகாஷ் தன்னிடம் பேசியதைச் சொன்னான்.
சரணுக்கு இங்கே நடந்த அனைத்தும் புரிந்தது.
அவர்கள் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் ஆகாஷின் கைபேசி ஒலித்தது.
அவன் பார்த்ததும் அது அவன் அம்மாவின் அழைப்பு.
“ஹலோ அம்மா…”
அவன் பேசத் தொடங்கிய அடுத்த நொடியே, மறுபுறம் இருந்து வந்த செய்தி அவனைத் திடுக்கிட வைத்தது.
அவர்கள் வருவதற்காக எடுத்திருந்த விடுமுறை ராணுவ அலுவலகத்தால் ரத்து செய்யப்பட்டிருந்தது. ராணுவத் தளபதியின் திடீர் வருகையால், ஆகாஷின் அப்பா அம்மா அங்கிருந்து கிளம்பி வர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த விஷயத்தை அவர்கள் இரவே ஆகாஷ் பாட்டியிடம் தெரிவித்திருந்தார்கள் .
ஆனால், மறுபுறம் நடந்திருந்த பேச்சு அவர்கள் எதிர்பாராத ஒன்றாக இருந்தது.
“அம்மா… இப்போ கல்யாணம் பற்றி ஏன் பேசுறீங்க? நாம இப்போதுதானே இதைப் பற்றி பேசினோம்…” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள், அவருடைய அம்மாகொதித்துக் கொண்டே பேசத் தொடங்கினார்.
“நீயே உன் கல்யாணத்தை எங்கள் முன்னாடி நடத்திக்கொள்ளவில்லை. உங்க அப்பாவின் நினைவாக மூன்று ஏழை ஜோடிகளுக்கு கல்யாணம் செய்து வைக்கணும்னு நான் முடிவு செய்திருந்தேன். அதில் ஒரு ஜோடிக்கு இப்போ ஒரு பிரச்சனை வந்திருக்கு.
அதனால்தான்… அந்த ஜோடியில் என் பேரனையே ஒருத்தனாக நிறுத்த முடிவு செய்துட்டேன்.”
ஆகாஷ் அப்பா அதிர்ச்சியுடன் அமைதியாக இருந்தார்.
“பொண்ணு வீட்டுலேயும் பேசி முடிச்சுட்டேன். அவங்களும் சம்மதிச்சுட்டாங்க. நீ வருவேன்னு நினைச்சேன். அதனாலதான் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன். ஆனா இப்போ நீ வர முடியாதுன்னு சொல்றே…”
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க, மறுபுறம் இருந்த ஆகாஷின் அம்மா இடையில் மெதுவாகத் தலையிட்டாள்.
“அத்தை… நீங்க உங்க விருப்பப்படியே செய்யுங்க.”
அவள் தன் குரலை அமைதியாக வைத்துக்கொண்டு பேசினாள்.
“நாளையிலிருந்து இரண்டு நாள் நாங்களால் வர முடியாது. அதனால நீங்க அந்தக் கல்யாண ஜோடியையும், அவங்க குடும்பத்தையும் இங்கே கூட்டிட்டு வாங்க.
நம்ம முறைப்படி, நம்ம குடும்பத்தினர் எல்லாரும் முன்னிலையில் இங்கேயே ஒரு கல்யாணத்தை நடத்துங்க.
அதையும் நீங்கள்தான் குடும்பத்தோடு இருந்து முன்னின்று நடத்திக்கொடுக்கணும்.”
சிறிது நேரம் மறுபுறம் அமைதி நிலவியது.
பின்னர் ஆகாஷின் அம்மா தன் கணவரிடம் திரும்பிப் பார்த்தாள்.
“நாமதானே அவர்களிடம் பேசச் சொன்னோம். அதை வைத்துத்தான் உங்க அம்மா இவ்வளவு தூரம் திருமணம் வரைக்கும் பேசி முடிச்சிருக்காங்க. இப்போ நாம்தான் வேண்டாம்னு சொன்னா, அது பெரியவர்களை அவமதித்த மாதிரி ஆகிடும்.”
அவள் கணவனைப் பார்த்தபடி மெதுவாகச் சொன்னாள்.
“அதுவும் இல்லாம…”
சிறிது நேரம் அவள் அமைதியாக இருந்தாள்.
“நம்ம கல்யாணத்தில் பிரிந்து போன உறவுகள், நம்ம மகன் கல்யாணத்திலாவது ஒன்று சேரட்டும்.”
அந்த வார்த்தைகளில் அவளுடைய நீண்ட நாள் ஏக்கம் இருந்தது.
“இங்குள்ளவர்களை நான் பேசிச் சரி பண்ணிக்கிறேன். எனக்கும் வருத்தம்தான். நம்ம பையன் கல்யாணத்தை அவன் அம்மா அப்பா முன்னாடி நடத்த முடியலையேன்னு.”
அவள் கண்களில் சிறிய வலி தெரிந்தது.
“ஆனா… இப்படி ஒரு வாய்ப்பு எத்தனை வருடமா நாம ஆசைப்பட்டோம் தெரியுமா?”
அவள் மெதுவாகச் சிரித்தாள்.
“நம்ம குடும்பத்திலேயே, நம்ம முறைப்படி, நம்ம எல்லாரும் முன்னாடி… இரண்டு வீட்டாரும் சேர்ந்து ஒரு கல்யாணம் நடத்தணும் என்பதுதானே இத்தனை வருட ஆசை.
அது நம்ம கல்யாணத்துல நடக்கல.
குறைந்தபட்சம் நம்ம மகன் கல்யாணத்திலாவது அந்தக் குறை தீரட்டும்.”
அவள் சொன்ன வார்த்தைகள் அறையில் இருந்தவர்களின் மனதிலும் மெதுவாக இறங்கின.
ஆகாஷின் அம்மாவுக்கும் தெரியும்.
இது இப்போது எதிர்பாராத அவசர முடிவாக இருந்தாலும், இதன் பின்னால் பல வருடங்களாகப் பிரிந்து கிடந்த உறவுகளை மீண்டும் ஒன்றாக நிறுத்த வேண்டும் என்ற ஆகாஷ் பாட்டிக்கு ஆசை இருந்தது.