சென்னையிலிருந்து தென்காசி நோக்கி அந்தக் கார் நள்ளிரவை நோக்கி பறந்து கொண்டிருந்தது.
நீண்ட தூரப் பயணம், சாலையின் இருபுறமும் இருள் மட்டுமே.
காருக்குள் மெல்லிய குளிர்சாதனக் காற்றின் சத்தத்தைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லை, ஸ்டியரிங்கில் இருந்தவன் சாதாரண டிரைவர் அல்ல. அந்தக் குடும்பத்திற்காக பல வருடங்களாக உயிரையும் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கைக்குரிய விசுவாசி .
பின்புற இருக்கையில் இரண்டு பெண்கள்.
அதில் ஒருத்தி…
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அவளுடைய முகத்தில் பயணக் களைப்பைக் காட்டிலும் ஏதோ ஒரு அமைதி தெரிந்தது.
அந்த அமைதியைப் பார்த்தபடியே அவளருகில் அமர்ந்திருந்த சுபா பெருமூச்சு விட்டாள்.
மதுரை நெருங்கிக் கொண்டிருந்தது.
நேரம்—
இரவுபன்னிரண்டுமணி.
இன்னும் இருவரும் சாப்பிடவே இல்லை.
“தீபி…”
சுபா மெதுவாக அவளை அழைத்தாள்.
பதில் இல்லை.
“தீபி… எழுந்திரு. மதுரை வந்துடுச்சு.”
மீண்டும் அவளை எழுப்ப முயன்றாள்.
ஆனால் அவள் எழவில்லை.
சுபாவால் அவளை எழுப்பவும் மனம் வரவில்லை.
இவ்வளவு நேரம் அவள் தூங்கட்டும் என்று விட்டுவிட்டாள்.
அவளுக்குத் தெரியும்.
தீபிகா தூங்கும் நேரம் குறைவு.
விழித்திருக்கும் நேரம் முழுவதும் அவளுடைய மூளை ஏதாவது ஒன்றை யோசித்துக் கொண்டே இருக்கும்.
அவள் ஒரு சாதாரணப் பெண் அல்ல.
வேல்ஸ்தொழில்குழுமத்தின்ஒரேபெண்வாரிசு.
மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு அந்தப் பரம்பரையில் பிறந்த ஒரே பெண் குழந்தை.
கொண்டாடப்பட வேண்டியவள்.
குலவிளக்காக வரவேற்கப்பட வேண்டியவள்.
ஆனால்…
அவள் பிறந்தது கொண்டாட்டமாக இல்லை.
ஒரு குடும்ப ரகசியத்தின் தொடக்கமாக இருந்தது.
அந்த ரகசியம் என்ன?
அதைத் தெரிந்தவர்கள் மிகச் சிலர் மட்டுமே.
அவர்களும் அதை வெளியில் சொல்ல விரும்பவில்லை.
வேல்ஸ்குடும்பம்
காரைக்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட ஜமீன் குடும்பம்.
அந்த குடும்பத்தின் தலைவன்—
சிதம்பரம்.
அவரது மனைவி உமா.
இவர்களுக்கு மூன்று மகன்கள்.
மூத்த மகன் அருள்வேலன்.
அவரது மனைவி கார்த்திகா.
அவர்களுக்கு சரண், கரண் என இரண்டு மகன்கள்.
இரண்டாவது மகன் செந்தில்வேலன்.
அவரது மனைவி தமயந்தி.
அவர்களுக்கு தீபக், கார்த்திக் என இரண்டு மகன்கள்.
மூன்றாவது மகன்—
ராம்வேலன்.
ராம்.
அவன்தான் சிதம்பரத்தின் செல்ல மகன்.
அந்த குடும்பத்தின் பழக்கவழக்கங்களை உடைக்கக் கூடும் என்று யாரும் நினைத்துப் பார்க்காதவன்.
ஆனால் அவனுடைய வாழ்க்கையில் அமுதா வந்தபோது…
எல்லாமே மாறியது.
அமுதா.
வேல்ஸ் குழுமத்தின் ஒரு சிறிய பிரிவின் ஆடிட்டராக இருந்த சிவம் ஐயர் மற்றும் சாந்தி தம்பதியரின் ஒரே மகள்.
சிவத்தின் கனவு ஒன்று மட்டுமே.
தான் பெரிய ஆடிட்டர்.
தன் மகள் தன்னைவிட பெரிய ஆடிட்டராக வேண்டும்.
அதற்காக அவளைப் படிக்க வைத்தார்.
அவளுடைய கல்லூரி இறுதி வருடம்.
அந்த நேரத்தில்தான் ராம் அவளை சந்தித்தான்.
அந்தச் சந்திப்பு…
ராமின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியது.
அமுதாவைப் பார்த்த முதல் நொடியிலேயே அவன் மனம் அவளிடம் சென்று விட்டது.
அதை காதல் என்று உணர்ந்தவனும் அவன்தான்.
அந்தக் காதலை விட்டுக் கொடுக்க மறுத்தவனும் அவன்தான்.
சிவம் காதலை எதிர்க்கும் பிற்போக்குவாதி அல்ல.
அவரே அந்தக் காலத்தில் உறவினர்களின் எதிர்ப்பை மீறி கலப்புத் திருமணம் செய்தவர்.
ஆனால் இப்போது நிலைமை வேறு.
ஒரே செல்ல மகள்.
அதுவும் ஜமீன் குடும்பத்தின் மகன்.
பணம்.
பரம்பரை.
அதிகாரம்.
மரியாதை.
எல்லாவற்றுக்கும் மேலாக அந்தக் குடும்பத்தின் பிடிவாதம்.
சிவத்திற்கு பயமாக இருந்தது.
அமுதா மட்டும் ராமை விட்டுப் பிரியத் தயாராக இல்லை, ராமும் பின்வாங்கவில்லை.இறுதியில்…
விஷயம் சிதம்பரத்தின் காதில் விழுந்தது.
அடையார்பங்களா
அன்று வீட்டில் ஒரு பஞ்சாயத்து போலவே கூடியிருந்தது.
ஒருபுறம் சிதம்பரம் அவரருகில் உமா,மறுபுறம் சிவம், சாந்தி,அவர்களுக்கிடையில்…
ராமும் அமுதாவும்.
சிதம்பரத்தின் கோபம் எல்லை மீறியிருந்தது.
“என் குடும்பத்துல இதுவரைக்கும் யாராவது இப்படி செய்திருக்காங்களா?”
ராம் அமைதியாக நின்றான்.
“சொந்தத்துல பெண் கொடுத்து பெண் எடுக்கிற குடும்பம் இது. அந்த வழக்கத்தையே ஒரே நாள்ல உடைச்சுட்டியே!”
உமாவின் கண்களில் கண்ணீர்.
சிவமும் சாந்தியும் கைகட்டி நின்றனர்.
அவர்களுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
அவர்கள் மகள் காதலித்திருக்கிறாள் என்பது இப்போது தான் சிதம்பரத்தின் முன்னால் தெரிய வந்தது.
அதற்குள் சிதம்பரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
எப்படியாவது அமுதாவை ராமிடமிருந்து பிரிக்க வேண்டும்.
ராமை வெளிநாட்டுக்கு அனுப்பலாம்,அல்லது வேறு திருமணம் செய்து வைக்கலாம்,எப்படியாவது இந்தக் காதலை முடித்துவிட வேண்டும்.அந்த நேரத்தில்…
ராம் செய்த ஒரு காரியம் மொத்த குடும்பத்தையும் அதிர வைத்தது.
அவன் அமுதாவின் கழுத்திலிருந்த தாலியை மெதுவாக வெளியே எடுத்தான்.
சிதம்பரம் அதிர்ந்து பார்த்தார்.
“ராம்… அது என்ன?”
ராம் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.
“அப்பா…”
ஒரு நொடி அமைதி.
“நானும் அமுதாவும் ஒரு மாதத்துக்கு முன்னாடியே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்.”அந்த வார்த்தை விழுந்ததும்…
வீட்டில் முழுவதும் அமைதியாகிப் போனது.
சிதம்பரம் ராமையே பார்த்துக் கொண்டிருந்தார்,அவர் எதிர்பார்க்காத அதிர்ச்சி அது,இனி என்ன செய்தாலும் திருமணத்தை உடைக்க முடியாது.
அமுதா அங்கேயே அழுது கரைந்துவிட்டாள்.
அவளுடைய கண்ணீரைப் பார்த்த சிதம்பரத்தின் கோபமும் மெதுவாகத் தணிந்தது.
இறுதியில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
ராமும் அமுதாவும் குடும்பத்தின் கெஸ்ட் ஹவுஸில் தங்க வேண்டும்.
அமுதா தனது குடும்பத்துடன் தொடர்பு கொள்ளக் கூடாது,ராம் அப்போது தான் ரஞ்சி அணியில் இடம் பிடித்திருந்தான்.அவன் கிரிக்கெட்டைத் தொடரலாம்,அல்லது தனியாக ஏதாவது சிறிய தொழில் செய்யலாம்.ஆனால் குடும்பத் தொழிலில் அவனுக்கு எந்தப் பங்கும் இருக்காது,வேறு வழியின்றி இருவரும் அந்த நிபந்தனைகளுக்கு சம்மதித்தனர்.
அந்த நாளில் சிவமும் சாந்தியும் இடிந்து போனார்கள்.
அவளின் காதலி பிரிக்காவிட்டாலும்…
அவளைத் தங்களிடமிருந்து பிரித்துவிட்டார்கள்.
இரண்டுவருடங்கள் கடந்திருக்க,ராம் அமுதாவை காதலில் குளிப்பாட்டினான்,அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டான்.அவர்களின் வாழ்க்கை காதலால் நிறைந்திருந்தது.
ஆனால் அமுதாவின் மனதில் மட்டும் ஒரு குறை.
தாய்.
தந்தை.
அவர்களைப் பார்க்க வேண்டும்,ஆனால் குடும்பத்தின் கட்டுப்பாடு அவளைத் தடுத்தது,அதற்குள் அவள் கர்ப்பமானாள்,ஒன்பதாவது மாதம்.
ராம் இந்திய அணி தேர்வுக்காக வெளியூரில் இருந்த நேரம்.
அன்று…
அமுதாவுக்கு பிரசவ வலி வந்தது,வேலைக்காரி அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.
செய்தி சிதம்பரத்தின் வீட்டிற்கும் சென்றது,உமா பதறினார்,மருமகள்களும் மகன்களும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர்.
சிதம்பரத்தின் கோபம் இன்னும் இருந்தது.
ஆனால் உயிர் ஆபத்து என்ற செய்தி வந்ததும்…
அந்தக் கோபத்தைவிட பயம் மேலோங்கியது.
மருத்துவமனையில் நிலைமை மோசமடைந்தது.
அமுதாவின் உயிருக்கு ஆபத்து.
அப்போது சிவமும் சாந்தியும் அங்கே வந்து சேர்ந்தனர்,பல வருடங்களுக்குப் பிறகு தங்கள் மகளை அந்த நிலையில் பார்த்த சாந்தி கதறி அழுதாள்.
சில மணி நேர போராட்டத்துக்குப் பிறகு…
ஒரு குழந்தையின் அழுகை மருத்துவமனையில் ஒலித்தது.
அழகான பெண் குழந்தை.
ஆனால் அந்தக் குழந்தையின் அம்மா…
இல்லை.
சாந்தி குழந்தையைப் பார்த்ததும் உடைந்து போனாள்.
“என் அமுதா…”
சிவம் குழந்தையைத் தூக்கிக்கொண்டார்.
சில நொடிகள் அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்தார்.
அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.
அந்தச் சிறு குழந்தைக்கு இன்னும் உலகம் தெரியவில்லை.
ஆனால் அவளுடைய வாழ்க்கை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.
சிவம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தன் வீட்டிற்குச் சென்றார்.
சிதம்பரத்தால் எதுவும் செய்ய முடியவில்லை.
அவர் மகனின் வாழ்க்கையையும் காப்பாற்ற முடியவில்லை.
மருமகளின் உயிரையும் காப்பாற்ற முடியவில்லை.
இப்போது…
சிவத்தை தடுக்கவும் முடியவில்லை.
அந்த நேரத்தில்தான் இன்னொரு செய்தி வந்தது.
ராம் விபத்தில் சிக்கியிருந்தான்.
டெல்லியில்.
சுயநினைவின்றி.
அவனுடைய நிலைமை கவலைக்கிடம்.
சிதம்பரம் நிலைகுலைந்து போனார்.
“ராம்…”
அவர் உடனே மகன்களுடன் டெல்லி புறப்பட்டார்.
அங்கே ராம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
பல அறுவைச் சிகிச்சைகள்.
பல நாட்கள்.
பல இரவுகள்.
இறுதியில் உயிர் பிழைத்தான்.
ஆனால்…
அவனுடைய கண்கள் திறக்கவில்லை.
கோமா.
இரண்டு வருடங்கள்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவன் கண்களைத் திறந்தபோது…
அவன் வாழ்க்கையில் சில வருடங்கள் காணாமல் போயிருந்தன.
அதில்…
அமுதாவும் இல்லை.
தீபிகாவும் இல்லை.
சிதம்பரம் இதை அறிந்தபோது…
அவருடைய மனதில் ஒரு பயம் எழுந்தது.
ஒருநாள் ராம் கேட்பான்.
“அமுதா எங்கே?”
“என் குழந்தை எங்கே?”
அந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது?
அதனால் அவர் ஒரு உண்மையை மட்டும் எல்லோரிடமும் கூறினார்.
“ராமுக்கு சில வருட நினைவுகள் இல்லை.” பழைய நினைவுகள் இப்போது அவன் உடல்நலயை பாதிக்கும் அது உண்மைதான்,ஆனால் முழு உண்மை இல்லை.
சிவத்திற்கும் இந்த நிலைமை ஓரளவு தெரிந்திருந்தது.
அவரும் அமைதியாக இருந்தார்.
அதில் அவருடைய சுயநலமும் இருந்தது.
அமுதாவை இழந்த தனிமையில்…
அவருக்கும் சாந்திக்கும் கிடைத்த ஒரே உயிர் தீபிகா,அந்தக் குழந்தையை அவர்களால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.
ஐந்துவருடங்கள்
காலம் ஓடியது.
தீபிகா வளர்ந்தாள்,சிதம்பரம் குடும்பம் அவளிடமிருந்து தூரமாக இருந்தது.அந்த இடைவெளியை நிரப்ப கார்த்திகா மட்டும் முயன்றாள்.