Advertisement

அத்தியாயம் 1

கோத்தகிரி மேட்டுபாளையம் நெடுஞ்சாலையிலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டரில் உள்ளது அரவேணு கிராமம். உயர் தர தேயிலை ரகங்கள் வளரும் இந்த மலைப்பிரதேசத்தில் கிட்டதட்ட முப்பத்தியைந்து ஏக்கரில் அமைந்திருந்தது மதுரம் தேயிலை தோட்டம். சில வருடங்களாக நலிவுற்று இருந்தது நான்கு வருடங்களுக்கு முன்னர் கை மாறியதிலிருந்து மீண்டும் பொலிவைப் பெற்றிருக்கிறது.

மதுரம் தேயிலை தோட்டத்து சமையல் கூடம் பரபரப்பாக இருந்தது. வந்த நான்கு வருடங்களில் அனேகமாக முதலாளிக்கும் அவர் நண்பர்கள் என்று வெகு சிலருக்காகவுமே சமைத்திருந்தவர்கள் இன்று பெரிய விருந்துக்கல்லவா தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

“முத்தண்ணா… ஐயா, நீட்டா ட்ரெஸ் பண்ண இரண்டு மூணு பேர் வரவங்களுக்கு ட்ரிங்க்ஸ், ஸ்டார்டர் செர்வ் பண்ணற மாதிரி ஏற்பாடு செய்ய சொல்றார். அந்த கேட்டரிங் ஆளுங்ககிட்ட பேசிட்டேன். இரண்டு பசங்க , ஒரு பொண்ணு வரும் அஞ்சு மணிக்கு. வேண்டியது ஏற்பாடு செய்துடுங்க”, மேனேஜர் சண்முகம் சொல்லிவிட்டு பரபரப்பு குறையாமல் சென்றுவிட்டார்.

“இத்தனை நாளா இல்லாம, திடீர்னு என்ன அண்ணா முதலாளி விருந்து வெக்கறாரு?”, உயர் ரக பீங்கான் டின்னர் செட்டை பத்திரமாக கையாண்டபடியே செம்பருத்தி கேட்டாள்.

“ஆமா…எங்கிட்ட கேட்டுட்டுதான் எதுவும் செய்வாரு பாரு…ஏதோ இத்தினி நாள்ல இன்னிக்காவது பங்களா பளபளன்னு ஆளு அம்போட இருக்கேன்னு சந்தோஷப்படு” என்று மேசை ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றார் முத்து.

கோத்தகிரியின் மற்றொரு முக்கியமான ஹல்மாரி டீ எஸ்டேட் எண்பது ஏக்கர் பரப்பளவில் கோத்தகிரியின் பாரம்பரியமான தேயிலை தோட்டம் என்ற புகழுடன் விளங்கியது. அதன் ஒரே வாரிசு வருண் கண்ணாடி முன் நின்று தன் கஃப்ளிங்கை   சட்டைகையின் பொத்தானாக மாட்டிக்கொண்டிருந்தான்.

“ரேக்ஸ்… ரெடியா? நாமளே லேட்டா போனா நல்லாயிருக்காது”, அவன் குரலில், பக்கவாட்டிலிருந்த உடை மாற்றும் அறையிலிருந்து வெளியே வந்தாள் அவனது மனைவி ரேக்ஸ் என்ற ரேகா.

ஹால்டர் நெக் டிசைனர் ப்ளவுஸ், ஆரஞ்சும் பிங்கும் சேர்ந்த டிசைனர் புடவை வழவழப்பாக அவள் உடலைத் தழுவியிருந்தது. மிதமான மேக்கப்பும் மலர்ச்சியான புன்னகையுமாய் வந்தாள் ரேகா.

“வாவ்…” விசிலடித்தான் வருண்.

“ஹேய்…” சிணுங்கியவள், “லாக்கர்லர்ந்து உங்க பாட்டியோட வைர மாலை செட் வேணும் வருண்” என்றாள் அவனது மற்றொரு கை கஃப்ளிங்க்சை மாட்டியபடி.

“பாருடா… இன்னிக்கு என்ன ஸ்பெஷல்? வழக்கமா குடும்ப  நகை பக்கம் தலை வெக்க மாட்டியே?” புருவம் உயர்த்திய கணவனை லேசாக முறைத்தவள்,

“உங்க அம்மா நான் என்னவோ அப்படியே களவாண்டுட்டு ஓடிட போறேனோன்னு பார்த்துகிட்டே இருப்பாங்க, அதுக்காகவே தொடறதில்லை. இப்பதான் அவங்க இல்லையே. கூட, இன்னிக்கு உங்களுக்கான பார்ட்டி, அதுக்கு நானும் ஹில்மாரி குடும்பத்து வாரிசோட மனைவின்னு காட்டிக்க வேண்டாமா?”

ரேகாவின் கேள்விக்கு சிரிப்பை பதிலாக தந்தவன், “அம்மாக்காக பார்க்காதே ரேக்ஸ், அந்த நகைகள் உன்னோடதும் கூட. லாக்கர்ல உன் ரேகை பதிவு பண்ணிக்கோன்னாலும் கேட்கறதில்லை நீ.”

“ம்க்கும்.. என் ரேகை இல்லைங்கறதாலதான் அத்தை நிம்மதியா பெங்களூர்ல இருக்காங்க. இல்லைன்னா எப்பவோ திரும்ப வந்துருப்பாங்க” உதட்டை சுழித்த மனைவியின் இதழைப் பிடித்து அழுத்தியவன்,

“லிப்ஸ்டிக் கலைக்க வேணாமேன்னு பார்க்கறேன். இருக்கட்டும் சேர்த்து வெச்சு இராத்திரி பனிஷ் பண்றேன். ரொம்பத்தான் எங்கம்மாவை கலாய்க்கற..” என்று காற்றில் முத்தமிட்டு அவள் கேட்ட வைர மாலையை எடுக்கச் சென்றான்.

கோத்தகிரி பஸ் நிலையத்தில் கால் மாற்றி நின்று கொண்டிருந்தாள் சஹானா. ஐந்து மணிக்கு மதுரம் எஸ்டேட்டில் இருக்க வேண்டும். இன்னும் பத்து நிமிடத்தில் நடந்து செல்ல வாய்ப்பேயில்லை. அந்த பக்கம் செல்லும் வாகனம் எதையும் பிடிக்கலாம் என்றால் ஒன்றும் அகப்படவில்லை.  பெருமூச்சுடன் நடக்க ஆரம்பித்தாள்.

இந்த இடமெல்லாம் இளவரசியாய் சுற்றி வந்தவள்தான். அது ஒரு கனாக்காலம். மதுரம் எஸ்டேட் அவள் இருந்த போது ஒரு வயசான தம்பதிகளிடம் இருந்தது. மதியம் போன் வந்ததும் பீட்டரிடம் கேட்டதற்கு, நான்கு  வருடங்களுக்கு முன் ஏதோ அமெரிக்கன் ரிடர்ன் பணக்காரர் வாங்கி பராமரிப்பதாக சொன்னார்.பீட்டர்தான் இந்த வேலையை சிபாரிசு செய்தது. மனம் முரண்டினாலும், சென்றால் நல்ல சாப்பாடு கிடைக்கும், மீதம் கொண்டு வந்தால் நாளை பொழுதும் ஓடிவிடும் என்றுதான் சம்மதித்திருந்தாள்.

“பெக்கர்ஸ் கெனாட் பீ சூசர்ஸ் சஹி” என்று முணு முணுத்துக்கொண்டே வேக எட்டுக்கள் வைத்தாள். அவள் மதுரம் எஸ்டேட் பின் வாசல் அருகில் வந்து நிற்கும்பொழுது மணி ஐந்து இருபது.

“நீதானாம்மா சர்வர் வேலைக்கு வந்த பொண்ணு? நேரத்துக்கு வர மாட்டியா? டென்ஷனா போச்சு” என்ற வசவுடனே வரவேற்றார் முத்தண்ணா.

‘ஆமாம் பெரிய கவர்னர் வேலை’ என்று எழுந்த எரிச்சல், “முதல்ல போய் டீயை குடி. களைப்பா தெரியற. அப்பறம் வேற உடுப்பு வெச்சிருக்க இல்லியா? கருப்பு வெள்ளைலதான் இருக்கணும்னு சொன்னாங்களே. போட்டுக்க” என்ற அவரது கரிசனத்தில் முகம் லேசான புன்னகையை பூசிக்கொள்ள,

“இருக்கு அண்ணா” என்று டீ வைத்திருந்த இடத்திற்கு சென்றாள் தன் பையுடன்.

அடுத்த பத்து நிமிடத்தில் டீயை குடித்து, கருப்பு ஸ்கர்ட், வெள்ளை சர்ட் டக்-இன் செய்து, அடர்ந்த முடியை ப்ரென்சு பின்னலிட்டு, லேசான ஒப்பனையுடன் பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள்.

“அய்யோ…அக்கா… சூப்பரா இருக்கீங்க”, செம்பருத்தி ஆச்சரிய விழிகளுடன் அவளை சுற்றி வந்தாள்.

ஐந்தடி ஏழங்குலம், ஒல்லியான தேகம், அகன்ற கண்கள், திருத்தமான முகவெட்டு என்று மாடலிங் செய்ய பத்து பொருத்தமும் பக்காவாக இருந்தது சஹானாவிற்கு. அவள் அழகு பற்றிய பேச்சை கேட்டு மகிழ்ந்த காலமெல்லாம் கடந்திருக்க, “இன்னும் இரண்டு பேர் சர்வர்ஸ் இருப்பாங்கன்னு சொன்னாங்களே, எங்க?” என்று விசாரித்தாள்.

தன்னை அலட்சியம் செய்வதாக நினைத்துக்கொண்டாள் வெள்ளந்திப் பெண் செம்பருத்தி. முகம் சுருக்கியவள் மறு வார்த்தை பேசாது எதிர் புறம் கைகாட்ட, இரண்டு ஆண்கள் கறுப்பு வெள்ளை பேண்ட் சர்ட் அணிந்து இருந்தார்கள்.

அவளைக்கண்டதும் இருவரும் ஈ என்ற இளிப்பை பரிசளிக்க, முகத்தில் அலட்சியத்தைக் கொண்டு வந்தாள் சஹானா.

“ஊருக்கு புதுசா? பேர் என்ன?”, என்றான் அதில் சற்றே உயரமானவன்.

“இந்த ஊர்தான், கொஞ்ச வருஷம் வெளிய வேலையில இருந்தேன். இப்பதான் திரும்ப வந்திருக்கேன்” என்றாள்.

“நான் கிரி, இவன் மதன். நீங்க?” என்றான் அடுத்தவன்.

“சஹானா. எனக்கு ஆள் இருக்கு. ஜிம் ட்ரெய்னர். வந்த வேலையை கவனிப்போமா கிரி?” என்று அவர்களின் ஆர்வத்தில் பக்கெட் தண்ணீரை ஊற்றியவள் திரும்ப,

முத்தண்ணா “இந்தாங்க ஆளுக்கு ஒரு ட்ரே. ஒரிஜினல் வெள்ளி ட்ரே. பத்திரம். இதை எங்கிட்டயே திரும்ப ஒப்படைக்கணும் பார்த்துக்கங்க. அங்க வெச்சேன் இங்க வெச்சேன்னு சொல்லி காணாம போனா உங்க முதலாளிதான் பொறுப்பு” என்ற எச்சரிக்கையுடன் அழகிய வேலைப்பாடோடான ட்ரேக்களை கொடுத்தார். ஒன்றே அரைகிலோவிற்கு இருக்கும் போல, கனமாக இருந்தது.

அவரது உத்தரவுகளை இவர்கள் கேட்டுக்கொண்டிருக்க, மாடியில் அந்த எஸ்டேட்டின் முதலாளி குளித்து அடர்ந்த முடியை ஜெல் தடவி பணிய வைத்துக்கொண்டிருந்தான். அலுவல்கள் இழுத்துக்கொண்டதில் தாமதமாகிவிட்டது. அந்த அறையில் மறுபுறம் இருந்த வேலைப்பாடுமிக்க கதவை திறக்க உள்ளே உடை மாற்றும் அறை. மூன்று சுவர்களிலும் அழகிய மர வேலைப்பாடுகள் நிறைந்த அலமாரிகள்.

இங்கே வந்து நான்கு வருடங்களானாலும், இங்கே இந்த அறைக்கு வரும்போது அதன் அழகு மீண்டும் மீண்டும் கவரும். அதை வடிவமைத்தவன் கலா ரசிகனாக இருந்திருக்க வேண்டும். தேக்கு மரத்தில் அத்தனை வேலைப்பாடுகள், அதே நேரம் அலமாரியைத் திறந்தால் எளிமையும், பயன்பாட்டுக்குத் தேவையான வடிவமைப்பு  என்று அழகியல், தரம், உபயோகம் என்பதை கச்சிதமாக கலந்து செய்திருப்பான். அவன் எண்ணவோட்டத்தை தெரிந்து அவனுக்காகவே செய்தது போல இருந்தது இந்த பங்களாவின் பல விடயங்கள்.

வெளிர் சாம்பல் வண்ண கோட் சூட்டை எடுத்தவன்,  நாவல் பழ கலர் சட்டையோடு அதைஅணிந்தான். டையை தவிர்த்து சில பல ஆயிரம் விலை கொண்ட ப்ரவுன் ஷூக்களை அணிந்தவன் சில லட்சங்கள் முமுங்கிய ரோலேக்ஸ் வாட்சை கையில் கட்டி கண்ணாடியைப் பார்த்தான்.

அம்சமான பாச்சிலர், மத்திய முப்பதுகளினால் ஒன்றிரண்டு வெள்ளி முடிகள், சீராக வடிவமைக்கப்பட்ட மீசை சிறிய தாடியோடு இணைந்து அதிகாரக் களையை கொடுத்திருந்தது.  ரிம்லெஸ் கண்ணாடிகளின் பின்னிருந்த கண்கள் இலகுத்தன்மை என்றால் என்னவென்றே தெரியாதது போல கூர் பார்வையை திருப்பிக்கொடுத்தது.

கடிகாரத்தைப் பார்த்தவன், மேசையிலிருந்த ஐ-போனை எடுத்துக்கொண்டு வேக நடையில் படியில் இறங்கினான்.

“என்ன சண்முகம்… எல்லாம் சரியா இருக்கா? ரெடியா?” என்று கேட்கவும், சண்முகம் பவ்யமாக,

“யெஸ் சர். கெஸ்ட்ஸ் வர நேரமாச்சு, நீங்க..” என்று நிறுத்த,

“வாசல்லயே வரவேற்கலாம் சண்முகம், இது இன்-ஃபார்மல் பார்ட்டிதான்” என்று வரவேற்பரையை நோக்கி நடந்தான்.

அவன் அங்கே செல்வதற்கும், பென்ஸ் கார் ஒன்று வந்து  நிற்க, அதிலிருந்து இறங்கியவர்கள் வருண் ரேகா ஜோடி. ஒரு மலர்ந்த புன்னகையோடு உள்ளே வந்தவர்கள்,

“ஹலோ சுதிர்” என்று ஒரே குரலில் முகமன் கூற ஒரு லேசான சிரிப்புடன்,

“என்னடா இன்னும் ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி கோரஸா ஹலோ சொல்றீங்க?” என்று வரவேற்றான் சுதிர் என்று அழைக்கப்பட்ட சுதர்ஷன்.

“அப்பப்ப எங்களுக்கு வாத்தியாரா இருந்தவர்னு நீங்களும் ப்ரூவ் பண்றீங்க பாருங்க சுதிர்” என்று பதிலுக்கு கலாய்த்தாள் ரேகா.

“ஆறு மாசம் கூட இருக்கலை, அதுக்குள்ள உங்க ப்ரெண்டு துரத்திட்டா என்னை. சோ நான் உங்க வாத்தியெல்லாம் இல்லைமா”, இப்போது புன்னகையோடு கூறினாலும், அன்று அவன் பட்ட அவமானமும், வலியும் மறக்கவே முடியாத சுவடுகள்.

“அஹ்… என் ப்ரெண்டு இல்லை… தோ நிக்கறாரே, உங்க முன்னாள் ஸ்டூடென்ட் கம் இன்னாள் ஃப்ரெண்டு…அவருக்குத்தான்” என்று ஆரம்பித்த ரேகாவை இடைமறித்து,

“பழசையெல்லாம் அப்பறம் பேசலாம், மத்த கெஸ்ட் எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க, நாம உள்ளே போலாம் வா”, என்று அழைத்துக்கொண்டு சென்றான் வருண்.

அடுத்த பத்து நிமிடத்தில் இருபது பேருக்கும் மேல் வந்திருக்க, சுதிர் பங்களாவின் பார்ட்டி அறைக்கு வந்தான். சண்முகத்திடம் கண்ணைக் காட்ட, அவர் விரைந்து சென்று “ட்ரிங்க்ஸ் ஜூஸ் எடுத்துட்டு போங்க “ என்று உத்தரவிட்டார்.

ஆண்கள் இருவரும் முன் செல்ல, கானப்பீஸ் எனப்படும் சிறு சிறு ஸ்டார்டர்களை எடுத்து அடுக்கி வைத்து அவர்களை பின் தொடர்ந்தாள் சஹானா.

அறைக்குள் நுழைந்தவள் முதலில் கண்டது அவளது பள்ளித் தோழன் வருண், அருகில் இருந்தது ரேகா.

“ஷிட்” முணுமுணுத்தாள் சஹானா. “வந்த உடனே, இப்படி ஒரு வேலையிலையா இவங்களை பார்க்கணும்? கடவுளே இன்னும் என்னை வெச்சு செய்யறதை நிறுத்தலையா நீ?“ வாய்க்குள் பேசியபடியே சட்டென்று அவர்களுக்கு முதுகு காட்டி, ட்ரேவை அருகிலிருந்த சில கனவான்களுக்கு முன் நீட்டினாள்.

Advertisement