Advertisement

கனமாக இருந்தவர்கள் பார்வை கபடாக இருந்தது. அதை புறந்தள்ளியவள் பொய்ப் புன்னகையை பூசிக்கொண்டு, “சம் கேனப்பீஸ் சர்?” என்றாள். உள்ளுக்குள், ‘பேசாம அப்படியே போயிருவோமா? இப்ப அங்க போய் நின்னு, அதுவும் ரேகா முன்னாடி’ என்று யோசிக்கும் போதே,

“இந்தா பொண்ணு, எல்லாருக்கும் தரணும். ஒரு இடத்துலயே நின்னா எப்படி, அங்க முதலாளி இருக்கார் பார், அங்க போ, முக்கியமானவங்க அங்க இருக்காங்க”, சண்முகம் வந்து காதை கடிக்க, ஒரு மூச்சுடன் அவர் காட்டிய திசையில் பார்த்தாள்.

ஒரடி எடுத்து வைத்தவள் அங்கே கண்டவனைப் பார்த்து உறைந்து நின்றாள். ‘சே… பிரம்மை.. இருக்காது’ என்று நினைத்தாலும், “சர்? அந்த க்ரே கலர் கோட்?” என்று சண்முகத்தைக் கேட்க,

“ம்ம் அவர்தான் முதலாளி மிஸ்டர் சுதர்ஷன். சீக்கிரம் போ” என்று விரட்ட “ஷிட்…ஷிட்…ப்ளடி ஷிட்” என்று தொடர்ந்து அர்ச்சித்தாள். யாரை வாழ்க்கையில் மீண்டும் பார்க்கக் கூடாது என்று நினைத்தாளோ அவன். ‘சோ, என் பாவக் கணக்கை மொத்தமா சேர்த்து பழி வாங்கப்போறியா கடவுளே? இன்னிக்கு வேணாம், இன்னொரு நாள் பார்க்கலாம்’ என்று நினைத்து திரும்பிவிட யத்தனித்தபோது, சுதர்ஷனின் கண்கள் அவளைக் கண்டு, கை விரல் அருகே வர ஆணையிட்டது. சாதாரணப் பார்வை  நொடி நேரத்தில் அகன்று ஒரு புருவம் மட்டும் உயர்ந்தது. அவளை மேலிருந்து கீழே பார்த்தவன், வா என்பதாக தலையை லேசாக அசைக்க,

“முழுசா நினைஞ்சாச்சு அப்பறம் என்ன? பார்த்துக்கலாம் போடி”, என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொண்டவள், ட்ரேயுடன் அருகே சென்றாள்.

சுதர்ஷனுடன் இருந்தவர்கள் வருணும் ரேகாவும் மற்றும் ஒரு மத்திய வயதுடைய ஜோடி. அவர்கள் முன் சென்று ட்ரேவை நீட்ட அப்போதுதான் வருண் அவளைப் பார்த்தான். யார் என்று தெரிந்து உறைந்து நின்றான். ரேகாவுமே அதிர்ச்சியில் பார்த்தவள் நிஜம்தானா என்பதாக இமைத்துப் பார்த்தாள்.

அவள் நீட்டிய தட்டில் இருந்து அந்த புது ஜோடி பாப்ரி சாட் டை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

சுதர்ஷன், வருண் ரேகா மூவருமே அவளை அளக்கும் பார்வை பார்க்க, சஹானா முகம் உணர்ச்சியின்றி அவர்களைப் பார்ப்பதை தவிர்த்தது.

அவள் திரும்ப முற்படுவதை அறிந்தவன் போல அழுத்தமான குரலில், “சர்வ் தெம்” என்றான் சுதிர்.

“சர்..” என்ற முணுமுணுப்புடன் வருண் ரேகா இருவர் முன்பும் ட்ரேவை நீட்டினாள்.

வருண் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாதிருக்க, ரேகா முகத்தில் இப்போது இகழ்ச்சி கலந்த ஒரு புன்முறுவல்.

“என்ன சுதிர்… இப்ப வேலைக்கு ஆள் கிடைக்கறதே கஷ்டமா இருக்கு. உங்களுக்கு மட்டும் எப்படி புதுசு புதுசா கிடைக்கறாங்க?”, என்றாள் தன் வைர மாலையை வருடியபடி.

‘ஓ.. ஹில்மாரி மருமக பரம்பரை நகையை போட்டிருக்கேன்னு காட்டிக்ககிறாளா? நான் வேணாம்னு தூக்கிப்போடதுடி இது’, என்ற அலட்சிய பாவனையை முகத்தில் ஓட விட்டாள் சஹானா.

“ம்ம்… இப்பல்லாம் மாடலிங் தொழில் அவ்வளவா வருமானம் தரதில்லை போல, அதான் வீட்டு வேலைக்கு வராங்க ரேகா” தன் பங்குக்கு அவமானப்படுத்தினான் சுதிர்.

இதில் இரு புறமும் அவஸ்தையாக நெளிந்தது வருண் மட்டுமே. அவன் முகத்தில் அவளுக்காக கண்ட பரிதாபம்தான் உண்மையில் சஹானாவிற்கு கடினமாக இருந்தது. சுதர்ஷன் ரேகா போல அலட்சியமும் அவமானமும் கூட கடந்துவிடலாம் ஆனால் இப்படியான பரிதாபப் பார்வைகள்தான் அவளை இரவு முழுதும் இம்சிக்கும். அதுவும் வருணிடமிருந்து இப்படியான பார்வையை அவளால் எதிர்கொள்ளவே முடியவில்லை. தொண்டையை அடைத்தது. ஆனால் எதுவும் முகத்தில் தெரியவில்லை.

இவர்கள் நால்வருடன் அந்த மத்திய வயது ஜோடி இருந்ததால் உடைத்துக் கேட்க முடியாத சூழலில் பூடகமாக சஹானாவை தாக்கினார்கள் ரேகாவும் சுதிரும். இருக்கும் உட்பூசல் தெரியாத புதியவரில் அந்த பெண்மணி, “எடுத்துக்கோ ரேகா. ஒல்லியாதானே இருக்க உனக்கென்ன டயட்” என்று ஊக்குவித்தாள்.

‘ஹ்ம்ம்… பார்க்க ரொம்ப நல்லாயிருக்கே. அதான் ரசிக்கறேன் மாலுக்கா” சிரித்தபடியே ஒரு பாப்டி சாட்டை எடுத்தவள் கை நழுவி விடுவதுபோல அவள் காலருகே போட்டாள்.

“ஊப்ஸ்…சாரி”, என்று ரேகா சுதர்ஷனைப் பார்த்து சிரிக்க, உதடு கடித்து அவள் குறும்பை ரசிப்பவன் போல புன்னகைத்த சுதர்ஷன் சஹானாவைப் பார்த்து, “க்ளீன் இட்” என்று ஆணையிட்டான்.

ரேகாவின் காலடியில் சில நொடிகள் வணங்குவது போலிருக்கும் அவள் கீழே விழுந்த அந்த பாப்டி சாட்டை சுத்தம் செய்தால் என்பது புரிந்து சஹானா உள்ளுக்குள் கனன்றாள். ஆனாலும் ‘இப்ப பூனைக்கு காலம்டி சஹி, செய்’ என்று தன்னை சமன்படுத்தி இடது கைக்கு ட்ரேவை மாற்றி அதிலிருந்து ஒரு டிஷ்யூவை எடுத்ததுதான் தாமதம் அவள் கைகளிலிலிருந்து அது பறிக்கப்பட்டது. அடுத்த நொடி வருண் அவன் மனைவியின் முன் மண்டியிட்டு சிந்தியிருந்தவற்றை சுத்தம் செய்தான்.

ஓரடி பின்னே நகர்ந்த ரேகா முகம் கோபத்தை மறைக்க பாடுபட, “வரு… நீங்க ஏன் செய்யறீங்க. வேலைக்காரின்னு அதுக்குத்தானே இருக்காங்க”, என்று கடிந்தாள்.

அதற்குள் சுத்தம் செய்து எழுந்த வருண், “ நாம சிந்தினதை  நாமளே க்ளியர் பண்ணிடனும் ரேகா” என்றான் ஒரு அழுத்தமான பார்வையுடன். தனக்காகப் பேசாமல் சஹானாவுக்கு பரிந்து வருண் செய்தது கண்டு பொறுக்கவில்லை ரேகாவிற்கு.

ஒரு வகையில் சஹானாவிற்கும் வருண் செயல் கஷ்டமாகத்தான் இருந்தது. இப்போது அவன் வாழ்க்கையில் ரேகா மட்டுமே என்றிருக்க, அவனை தூக்கி எறிந்துவிட்டு சென்ற தன் மீது இன்னமும் அக்கறை இருப்பது கண்டு அவளுக்குமே தாளவில்லை.

வருண் கையில் இருந்த டிஷ்யூவை வாங்கிக்கொண்டவள் வேறு எதையும் பாராமல் சட்டென்று திரும்பிவிட்டாள். வெடித்து வரும் அழுகை வெளிப்படும் முன் எங்காவது தனிமையில் சென்றுவிட வேண்டும் என்ற  நோக்கோடு வேக எட்டுக்கள் வைத்து அறையை காலி செய்தாள்.

நடந்தவற்றின் அடி நாதம் புரியாத மாலு அக்கா அந்த நேரம் பார்த்து, “நீ போட்டிருக்கறது ஹில்மாரி ஹாரம்தான ரேகா? வருண் பாட்டி போட்டு, அம்மா போட்டு இப்ப நீ போட்டும் பார்த்தாச்சு. எல்லாருக்குமே அம்சமா பொருந்தியிருக்கு” என்று புகழ, அந்த ஹாரத்தை கழற்றி வீசி எறியும் ஆவேசம் வந்தது ரேகாவிற்கு.

ரேகா தன் எண்ணத்தை புரிந்து கொள்ளாமல் தவறாக நினைத்தது வருணிற்குள் வருத்தத்தை விளைவித்தது. முகத்தில் லேசான ஒரு அதிருப்தி படருவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. அந்த அதிருப்தி சுதிர், ரேகா கண்களுக்கு தப்பவும் இல்லை. அதற்குக் காரணம் ரேகாவின் நடவடிக்கை என்பதாக அவர்கள் கற்பித்துக்கொண்டார்கள்.

இழுத்து வைத்த புன்னகையை மாலுவுக்கு பரிசளித்த ரேகா வெடித்துவிடாமல் இருக்க, “வெல்கம் ப்யூடிஃபுல் லேடீஸ் அண்ட் எஸ்டீம்டு ஜென்டில்மென், மதுரம் எஸ்டேட் சார்பாக உங்களை எல்லாம் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நம் கெஸ்ட் ஆஃப் ஆனர் ஹில்மாரி வாரிசு திரு. வருண் அண்ட் திருமதி ரேகா வருண்…”, என்று பார்ட்டிக்கான காரண ஆரம்ப உரையை துவங்கியிருந்தான் சுதர்ஷன்.

ஒரு புன்னகையுடன் வருண் ரேகாவின் இடுப்பணைக்க விறைப்பாக நின்ற மனைவியின் காதருகே சென்றவன், “இங்க வெச்சு எதுவும் சீன் போடாம சிரி” என்று சீறினான்.

கூடியிருந்தவர்கள் கரகோஷத்தை ஒரு புன்னகையுடன் ஏற்று தலையசைத்தவாறே, “என் சந்தோஷத்தை சிதைக்கறதுக்குன்னே அந்த சூனியக்காரி எங்கிருந்துதான் வருவாளோ! போனவ ஒரேடியா போய்த் தொலையவேண்டியதுதானே!” என்று கடித்துத் துப்ப,

வருணிடமிருந்து அடக்கப்பட்ட ஒரு கோவத்துடன் “ஷட்டப் ரேகா” என்ற பதிலே வந்தது.

ரேகாவிற்கு சற்றும் குறையாத எரிச்சலுடனே இருந்தான் சுதர்ஷன் “இப்ப இவ இங்க எதுக்கு வந்து எல்லார் வாழ்க்கையையும் கெடுக்கணும்?” என்றே ஓடியது அவனது எண்ணம். கண்டிப்பாக சஹானா வரவு யாருக்கும் நல்லது செய்வதற்கல்ல என்பது திண்ணம். அவளைப் போல ஒரு சுயனலவாதி இருக்க முடியாது. தன் எண்ணம் நிறைவேற யார் வாழ்க்கை கெட்டாலும் கவலையேயின்றி ஏறி மிதித்துச் செல்லும் குணம் படைத்தவள். மீண்டும் தாங்கள் மூவரும் அவளின் பலிகடா ஆகிவிடாது எச்சரிக்கையாக இருக்க என்ன செய்யவேண்டும் என்ற பாதையில் யோசிக்கலானான்.

இவர்களின் சிந்தனையில் இருப்பவளோ, காய்ந்த வயிறும் கனத்த மனதுமாக பேருந்தில் அமர்ந்து இருட்டை வெறித்துக்கொண்டிருந்தாள்.

Advertisement