Advertisement

அயாத்தனாவின் லாபியில் அமர்ந்தார் கமலம். செம்பருத்தி ஒரு வடக்கத்திய தம்பதியிடம் பேசிக்கொண்டு நின்ற சஹானாவை அளையாளம் காட்டியதும், ‘நீ போய் கார்ல இரு. நான் வேணும்னா போன் பண்றேன்”, என்று துரத்திவிட்டார்.

அமைதியாக சஹானாவை பார்த்தும் பார்க்காமலும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார். அந்த மனிதர் கேட்டதற்கு புன்னகை மாறாமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். ஒரு வழியாக அவர் மனைவி எதுவோ சொல்லி, இழுத்துச் சென்றார்.

மீண்டும் அவள் இருக்கைக்குத் திரும்பும் வழியில் கமலம் தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்து அவர் அருகில் வந்தாள் சஹானா. ஹோட்டல் கெஸ்ட்போலத் தெரியவில்லை.

“மேம்… செக்-கின் பண்ணக் காத்திருக்கீங்களா, இல்லை கெஸ்ட் யாருக்காகவும் வெய்ட் பண்றீங்களா?”, என்ற வினாவோடு எதிரில் அமர்ந்தாள்.

அவளைக் கிட்டத்தில் பார்த்தவர், “அம்மா…என்னா அழகு?” என்று அசந்துபோனார்.

“துடைச்சு வெச்ச குத்துவிளக்காட்டம் இருக்கற. உன் பேர் என்னம்மா?”, கமலம் கேட்டதில், ஒரு விரிந்த புன்னகையோடு.

“சஹானா மேம்” என்றாள்.

“சும்மா பாட்டின்னே கூப்பிடு. இந்த மேம் எல்லாம் எனக்கு புடிக்காது. நல்லாருக்கு பேரு. இப்பதான் இங்க சேர்ந்தியா? முன்னாடி பார்த்த மாதிரி தெரியலையே” என்று ஒரு நூல் விட்டார் கமலம்.

“ம்ம்.. சேர்ந்து ஒரு வாரம் ஆச்சு பாட்டி. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லவே இல்லையே?”, என்று மீண்டும் அவள் கேள்விக்கு வந்தாள்.

“ஹ்ம்ம்…அது இருக்கட்டும். உனக்கு கல்யாணம் ஆகலைதானே?” என்றார் அடுத்து.

உள்ளுக்குள் கண்களை உருட்டியவள், அவர் வயதின் காரணமாய், இல்லை என்று தலையசைத்தாள்.

“ம்ம்..என் பேரன் கூட ரொம்ப அழகு. அவனுக்கு பொண்ணு தேடறேன். நீ..” என்று நிறுத்தவும்,

“இப்படி ஹோட்டல் லாபியில வெச்சா பொண்ணு தேடுவாங்க பாட்டி? இது புதுசா இருக்கே!”, கலாய்த்தவள், “ஆனா பாருங்க, எனக்கு ஆள் இருக்கு”, என்று அவரை சந்தோஷப்படுத்தினாள்.

“ஓ… தெரியுமே”, கமலம் ஆர்பரிக்க, இப்போது சஹானா முழித்தாள். “எப்படி தெரியும் பாட்டி?”

அப்போதுதான் தான் உளறிவிட்டதை உணர்ந்தவர், “உன்னை மாதிரி அழகா இருக்கற பொண்ணை இதுவரைக்குமா விட்டுவைப்பாங்க. என்ன பண்றார் உன் காதலர்?” என்று சமாளித்தார் கமலம்.

“பாட்டி… இது டூ மச்… ஜிம் ட்ரெயினரா இருக்கார். இப்ப சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்?”, என்று சற்று கறாராக கேட்டாள்.

அவள் பதிலில் முழித்துக்கொண்டிருந்தார் கமலம். ‘என்னது ஜிம் ட்ரெயினரா? அப்போ என் பேரன்?’

அவர் எண்ணப்போக்கு அறியாத சஹானா, ‘இது என்னடா சோதனை. இப்ப எதுக்கு இந்த பாட்டி பேந்த பேந்த முழிக்குது. பார்த்தா பணக்கார பாட்டியாத்தான் தெரியுது. முன்னாடி இங்க வந்த மாதிரி சொல்லுச்சே. ஒரு வேளை மானேஜரைக் கூப்பிட்டா அவருக்குத் தெரியுமோ?’, என்று நினைத்தவள், “ஒரு நிமிஷம் பாட்டி”, என்று விரைந்தாள்.

அடுத்த சில  நிமிடங்களில் மானேஜர் சாமினாதன் வர, சற்றே உற்றுப்பார்த்தவர், ‘பெரியம்மா…சவுக்கியமா? நான்..”, என்று அவர் உறவு முறையை சொல்ல, “அட மல்லிகா புள்ளையா நீ”, என்று அடையாளம் தெரிந்தார்.

“இங்க எங்க பெரியம்மா நீங்க?”, சாமினாதன் விசாரிக்க, “ஏன்யா…இப்ப எங்கூட பேசிகிட்டிருந்ததே ஒரு பொண்ணு சஹானா? அது பத்தி விவரம் தெரியுமா?” என்று ஆரம்பித்தார்.

 “ஏன் பெரியம்மா, எதுவும் தப்பா பேசிடுச்சா என்ன? இப்பதான் புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கு. நல்ல பொண்ணுதான்”, என்று இழுத்தார்.

“நான் இல்லைன்னு சொல்லவே இல்லையே சாமி. அழகா இருக்கு, நல்லா தன்மையாத்தான் பேசுச்சு. அதான் விவரம் கேட்கறேன். நீ சொல்லு. எந்த ஊர் பொண்ணு?”, என்று ஆரம்பித்தார்.

வேலை நேரத்தில் இதென்னடா கதை கேட்கிறார், எம்.டி வரும் நேரமாச்சே என்று உள்ளுக்குள் பதறிய சாமினாதன், “அது பெரியம்மா, இந்த ஊர்தான். எதோ எஸ்டேட் பேர் சொல்லுச்சு அந்த வீட்டு பொண்ணு. அம்மா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க. அப்பாவும் போனப்பறம், அண்ணன் அண்ணி மட்டும்தான். என்னவோ வீட்ல பிரச்சனை, சண்டை போட்டு தனியா வந்துட்டேன்னுச்சு.அஞ்சாறு வருஷம் பம்பாய்ல வேல பார்த்துட்டு இப்ப திரும்பி வந்திருக்கு. எம்.டி பார்த்து சேர்த்துவிட்டுருக்கார்”, மடமடவென்று ஒப்பித்தார்.

‘ஓஹ்…சரிதான். அதுதான் பேரனும் எஸ்டேட் வாங்கிட்டானா? இப்ப அந்தஸ்த்து பிரச்சனை வராது’, வேகமாக யோசித்தவருக்கு எல்லாம் பொருந்திவருவதுபோலவே இருந்தது.

“எந்த எஸ்டேட் பொண்ணு?”, கமலம் விசாரிக்க, வெளியே முதலாளி வருவதற்கான அரவம் கேட்டது.

“மறந்துடுச்சும்மா. நான் கேட்டுட்டு அப்பறம் போன் செய்யறேன். இப்ப முதலாளி வரார். அவர் கேட்ட ரிப்போர்ட் நான் எடுத்து வைக்கணும் பெரியம்மா. நான் போகட்டுமா?, அவஸ்தையாக வாசலைப் பார்த்தபடியே கேட்டார்.

“சரிடா, ஆனா நான் கேட்டதா எதுவும் சொல்லிடாத. போ. அந்தப் பொண்ணு வீடு எங்க?”, அனுமதியும் கொடுத்து பேச்சை வளர்க்க சாமினாதனுக்கு எரிச்சல்.

“இங்கதான் குவார்ட்டர்ஸ்ல”, என்றபடியே அவசரமாக நடையைக் கட்டினார்.

மெதுவாக ட்ரைவருக்கு போன் செய்து வரச்சொல்லி கமலம் கிளம்பினார். மீண்டும் சஹானாவுடன் பேச முடியாதபடி முதலாளி வரவு அமைந்துவிட்டது.

காரில் வீடு திரும்பும் வழியில், எந்த எஸ்டேட் என்று எப்படி கண்டுபிடிப்பது என்ற தீவிர சிந்தனையில் இருந்தார் கமலம். பேரனைக் கேட்க முடியாது. “சண்முகத்தை விசாரிக்கச் சொல்லுவோமா? ஆனா பேரனுக்கு தெரிஞ்சிடாம பார்த்துக்கணுமே?” யோசனையோடே அறைக்குச் செல்லும் பாட்டியை பேரன் பார்த்திருந்தான்.

‘அம்மம்மாக்கு என்ன பலமான யோசனை? சொல்லாம கிளம்பி போயிட்டு எந்த ஷாப்பிங்கும் பண்ணாம வராங்க. லன்ச்ல கேட்போம்’, என்று தன் அறைக்குத் திரும்பினான் சுதர்ஷன் .

அறைக்கு வந்தவர், ‘அட இதை யோசிக்கலையே!’ என்று போனை எடுத்துக்கொண்டு அமர்ந்தார். அவர் அறிந்த வரையில், இந்த மாவட்ட எஸ்டேட்டுகள் அனைத்தையும் பற்றி அறிந்த ஒரு அகராதி மீனாட்சி. 

“ஹலோ மீனாட்சி? நான் கமலம். எப்படியிருக்க?” , உற்சாகமாக ஆரம்பித்தார்.

“அடே கமலாக்கா! எப்ப வந்தீங்க? பேரனோட சமாதானமாகிடுச்சா?”, மெல்லுவதற்கு புதிதாக ஒரு அவல் கிடைத்த ஜோரில் மீனாட்சியும் உற்சாகமாகப் பேசினார்.

‘இவ கிட்ட கொஞ்சம் உஷாரா பேசணும்’, என்று நினைத்துக்கொண்ட கமலம், “ஒரு சண்டையை போட்டாலாவது கல்யாணத்துக்கு சரிங்கறானான்னு பார்த்தா எங்க? நாமதான் இறங்கி வரவேண்டியிருக்கு!”, சற்று அங்கலாய்ப்பாய்க் கூறினார்.

“அதை சொல்லுங்கக்கா. இங்கேயும் இதேதான். எங்க என் பேச்சை மதிக்கறாங்க? குழந்தைக்கு பாருடான்னு சொன்னா வருண் கோவிக்கறான். மேல எதுவும் சொன்னா மருமவ மொகத்தை தூக்கி வெச்சிட்டு திரியறா!”, அவரது ஆஸ்தான வருத்தத்தை பகிர்ந்துகொண்டார்.

கண்களை உருட்டினாலும், மீனாட்சிக்கு ஏதுவாக சில பல ஆறுதல்களைக் கூறிய கமலம், “இங்க என் தங்கச்சி மகனைப் பார்த்து பேசிகிட்டு இருந்தேன். இங்க இருக்க எதோ எஸ்டேட் ஓனரோட பொண்ணு வீட்டுல சண்டை போட்டுட்டு போய் இப்ப தனியா இருக்காளாமே, யார்ன்னு தெரியுமா மீனா? பொண்ணு பேர் கூட சஹானான்னு சொன்னான்.”

“அட சஹானாவா. நல்லா தெரியுமேக்கா. மேகா எஸ்டேட் குரு பிரசாத் தங்கச்சி. அப்பா குரு நாதன் தவறிட்டார் சில வருஷம் முன்னாடி. என்னக்கா அவளைப் பத்தி?”

“பொண்ணு அழகா இருந்தா. யாருன்னு கேட்டேன் பாதி கதை சொல்லிட்டு இருக்கும்போதே கிளம்பிட்டான். அதான் உனக்குத் தெரியாம இருக்காதேன்னு போன் பண்ணேன்.”, கமலம் சற்று விவரம் சொன்னார்.

“அவ, வருண் எல்லாம் ஒன்னாத்தான் படிச்சாங்கக்கா. இரண்டும் எப்பவும் ஒன்னாத்தான் சுத்திகிட்டு இருக்கும். காதலிக்கறாங்கன்னுதான் நினைச்சோம். ம்ஹூம்… எனக்கு மருமகளா வருவான்னு கனா கண்டுட்டு இருந்தேன். பன்னெண்டாவது எழுதுன கையோட மாடலாகப் போறேன்னு பம்பாய் போயிட்டா. அவ அப்பா, அண்ணன் எவ்வளவு சொல்லியும் கேட்கலை.  அப்பா சாவுக்குக் கூட வரலை. இத்தனை வருஷம் கழிச்சு இப்ப வந்திருக்கா. ஹோட்டல்ல வேலை பார்த்துகிட்டு தனியாத்தான் தங்கியிருக்காம். வருண் சொன்னான்.  அவ அப்படி திடீர்னு கிளம்பிபோனதுல வருண் கூட ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டான்”, மீனாட்சி சொல்லச் சொல்ல கமலத்தின் கவலை கூடியது. சின்ன வயசு காதலாயிருக்குமோன்னு நினைச்சது சரி ஆனா பேரன் இல்லையா?

“கொஞ்ச நாள் முன்னாடிதான் நானும் கடையில பார்த்து வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து பேசினேன். உங்ககிட்ட சொல்றதுக்கு என்னக்கா. இப்பவும் அவளை மருமகளாக்கிக்க இஷ்டம்தான். இந்த ரேகா பொண்ணுக்கு குழந்தை பிறக்கறது கஷ்டம். என் பிள்ளைய கட்டிகிறியான்னு கேட்கவே கேட்டுட்டேன்”, அசராமல் அவர் வீசிய குண்டில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டார் கமலம்.

“ஏய்  மீனா! என்ன பேசற?”, அதட்டினார்.

“ஏங்க்கா? வருணுக்கு எப்பவும் அவன்னா இஷ்டம்தான். இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கான்னு போய் பார்த்திருக்கான் போல. அதுக்கே என் மருமவ சண்டை பிடிச்சிருக்கா. அரசல் புரசலா கேட்டுச்சு. வருண் வீடு தங்கறதே பெரிய விஷயம், ரேகா ஒன்னு சண்டை பிடிக்கறா, இல்லை அழறா. பாவம் என் பிள்ளை!”, மீனாட்சி பேசிக்கொண்டே போக,

“அதுக்குன்னு இப்படி கேட்பியா? “

“சஹானா மறுத்து ஒன்னும் சொல்லலை தெரியுமா?” என்றார் மீனாட்சியும் ரோஷமாக. “அவளுக்கும் இஷ்டமான்னு தெரியலை. சிரிச்சு மழுப்பினா. இந்த பாடாவதி சங்க எலக்ஷன் முடியறவரை பேசக்கூடாதுன்னு மட்டும்தான் சொன்னா. நான் அதுக்கப்பறம் பேசலாம்னுதான் இருக்கேன்” மீனாட்சி பேசப் பேச, ‘அடேய் என் பேரனுக்கு எத்தனை வில்லனுங்கடா கிளம்பியிருக்கீங்க? இருந்திருந்து அவனே ஒரு பெண்ணை பார்த்திருக்கான், அவ அவனுக்குத்தான், வேற யாரையும் விடமாட்டேண்டா!” என்று சூளுரைத்தவர்,

“இந்தா மீனா! நீ பாட்டு எதுவும் உன் இஷ்டத்துக்கு செஞ்சிடாதே. வருணும் ரேகாவுமே காதலிச்சுத்தான கல்யாணம் கட்டியிருக்காங்க. ஊடால நீ பாட்டுக்கு எதுவும் பேசி, வருண் கோச்சிக்கப் போறான். ஆறப்போடு!”

முடிந்த மட்டும் மீனாட்சியின் மண்டையைக் கரைத்தவர், இதை தடுக்க ரேகாவிடம் மீனாட்சியை போட்டுக்கொடுக்க முடிவு செய்தார்.

Advertisement