Advertisement

அத்தியாயம் – 6

காலையில் வழக்கமாக தேயிலை தோட்டத்தின் எதாவது ஒரு பகுதியை பார்வையிடுவதை வழக்கமாக வைத்திருந்தான் சுதர்ஷன். அன்றும் அதைப் போல முடித்துவிட்டு உள்ளே நுழையவும், சண்முகம் எதிர்பட்டார்.

“சர்… பாட்டிம்மா வந்திருக்காங்க” என்றார் பவ்யமாக.

அவரை ஆச்சரியப்பார்வை பார்த்தவன், “என்ன திடீர்னு? போன் கூட செய்யலை? நல்லா இருக்காங்கதானே?”, என்று விசாரித்தப்படியே விச்ராந்தையாக சோஃபாவில் அமர்ந்தான்.

“நல்லாத்தான் இருக்காங்க சர். எங்கிட்டையும் எதுவும் தகவல் சொல்லலை. பூஜையில இருக்காங்க”, என்றதோடு அவனுக்கு குடிக்க எடுத்துவரச் சென்றார்.

ஊதுபத்தி மணம் கமழ பூஜை முடித்து, ஒரு வெண் பட்டு சில்க் காட்டன் சேலைக்கு, போட்டி போடும் வெண் நிற முடியை கொண்டை போட்டு, தங்க ஃப்ரேமிட்ட கண்ணாடியில் கொஞ்சம் பழைய காலத்து நடிகை அஞ்சலிதேவி சாயலில் இருந்தார் கமலம்.

கடைசியாக அவனுடன் சண்டையிட்டுச் சென்று ஆறு மாதம் ஆகிறது. இவன் நேரே போய் சமாதானப்படுத்தியும் துரத்திவிட்டார். சுதர்ஷனும் முறுக்கிக்கொண்டான். அதன்பின் தொலைபேசி வாயிலாக என்ன என்றால் என்ன என்பதோடு ஓடிக்கொண்டிருந்தது.

“வாங்க அம்மம்மா நல்லாருக்கீங்களா?”, எழுந்து அவரை லேசாக கட்டிப்பிடிக்கவும், “படவா… குளிச்சியா?”, என்று தள்ளிவிட்டார்.

புன்னகைத்தவன், தள்ளி வந்து அமர்ந்து, “சரி..என்ன சொல்லாம கொள்ளாம திடுதிப்புன்னு வந்து இறங்கியிருக்கீங்க?” என்றான்.

“ஏன்… என் பேரன் வீட்டுக்கு வர நான் முன்னாடியே அனுமதி வாங்கணுமோ? என் இஷ்டம் வருவேன், எத்தனை நான் வேணுமோ தங்குவேன், உனக்கென்ன?” என்றார் முறுக்கிக்கொண்டு.

எங்கே வந்ததும் வராததுமாக கோபித்துக்கொள்ளப் போகிறார் என்று நினைத்தவன், கைகளைத் தூக்கி சரண்டெர் என்பதாகக் காண்பித்து, “உங்க வீடு அம்மம்மா. உங்க இஷ்டம். குளிச்சிட்டு வரேன். சாப்பிடலாம்”, என்று அதற்குள் வந்திருந்த ஜூசை சுவைத்தபடியே படியேறிச் சென்றான்.

பேரனைப் பார்த்து பெருமூச்சைத்தான் விட முடிந்தது கமலத்தால். பெண்ணையும் மாப்பிள்ளையையும் விபத்தில் ஒரே நேரத்தில் பறிகொடுத்த போது, சுதர்ஷன் ஐந்து வயது சிறுவன். நாற்பது சொச்ச வயதில் நின்ற கமலம் அம்மம்மாவிலிருந்து அவனுக்கு அம்மா ஆனார்.

கணவரும் பத்து வருடங்களுக்கு முன்னர் போய் சேர்ந்திட, பேரனுக்கு ஒரு நல்லது நடந்துவிட்டால் நிம்மதியாகக் கிளம்பிவிடுவார். ஆனால் அவன் எங்கே ஒத்துழைக்கிறான்? அமெரிக்காவில் இருந்தபோது எங்கே எவளாவது வெள்ளைக்காரியை இழுத்துக்கொண்டு வந்துவிடப் போகிறான் என்று பயந்தவர், ஒரு கட்டத்தில் எந்தப் பெண்ணை கல்யாணம் செய்தாலும் சரி என்றும் சொல்லிவிட்டார். அவன் எங்கே பிடி கொடுக்கிறான்? வந்த வரனெல்லாம் முடியாது என்றுவிட்டான். முதலில் அவன் வேலையில் தீவிர கவனம். முப்பதைத் தாண்டவும் இனிமேல் பொறுக்க முடியாது என்றார். அதற்கு ஏற்ற படி அவர் உடல் நிலையும் சற்று மோசமாக, இந்தியாவிற்கே திரும்பிவிட்டான். அப்போதிலிருந்து சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்.

சண்முகம் மெதுவாக அவர் அருகில் வந்தார். “ம்மா… என்னை மாட்டிவிட்டுடாதீங்கம்மா. மறு நிமிஷமே சீட்டை கிழிச்சிடுவார்”, என்று நடுங்கினார். விஷயத்தை சொன்ன இரண்டாவது நாளே கமலம் இப்படி வந்து குதிப்பார் என்று  நினைக்கவில்லை.

“ஷ்… நீயே பயந்து காட்டிக்குடுத்துடாதைய்யா. அவனைப் பார்த்த இல்ல ? எப்படி ஒன்னுமே நடக்காததுமாதிரி இருக்கான். அதே மாதிரிதான் நீயும் இருக்கணும், நானும் இருப்பேன். முதல்ல அந்த பொண்ணை பார்க்கணும் அவளுக்குத் தெரியாம. இவன் ஆஃபீஸ் ரூம் போகட்டும். நீ சமயம் பார்த்து வா. பேசலாம். தோட்டத்துல இருப்பேன்”, என்று சொல்லிவிட்டு, செம்பருத்தியையும் முத்துவையும் விரட்டச் சென்றார்.

மேசையில் சாந்தமாக அமர்ந்திருந்த அம்மம்மாவையும், ஒரு நடுக்கத்தோடே நின்றிருந்த செம்பருத்தியையும் பார்த்தவன் முகத்தில் ஒரு நமுட்டுச் சிரிப்பு தோன்றியது. ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை.

அமரவும், செம்பருத்தி கேட்டுக் கேட்டு பறிமாறினாள். அவள் உள்ளே செல்லவும், “ஹ்ம்ம்…அப்பறம் ஊர்ல எல்லாரும் சௌக்கியமா அம்மம்மா? சொந்தக்காரங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க?”, என்று கேட்டதுதான் தாமதம், சொந்தம், பக்கத்து வீடு, எதிர் வீடு என்று அத்தனை பேர் பற்றியும் செய்தி வாசித்தார்.

என்னதான் சிரிப்பாகப் பேசினாலும் பேரன் முகத்தில் ஒரு புன்னகையைத்தாண்டி வேறு ஒன்றும் வரவழைக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், “க்கும்… நான் பேசினா சிரிப்பியா, வயசுக்குத் தக்கனவ வந்து பேசினா சிரிப்பாணி பொத்துக்கும்” என்று தன்னை மீறி நொடித்தார்.

“ஹ? யார் வந்து பேசினா?”, என்று சுதர்ஷன் புருவம் சுருக்க, ஒரு நொடி திருதிருத்தவர், “அது…உனக்குன்னு ஒருத்தி வந்து அவ பேசினாவாவது வாய்விட்டு சிரிப்பியான்னு கோவத்துல கேட்டேன்” என்று பொய்யாக முறைத்துச் சமாளித்தார்.

அதில் ஒரு விரிந்த புன்னகையை படரவிட்டவன், “அம்மம்மா.. காலையில் எதுக்கு இரண்டு பேருக்கும் டென்ஷன் தர டாபிக். வாங்க காபி லான்ல சாப்பிடலாம்”, என்று அழைத்துப்போனான.

அம்மம்மா கேட்டதும் சஹானாவோடு அப்படி சிரித்துப் பேசியது நினைவில் ஆடியது. வெகு வருஷங்கள் சென்று அப்படி சிரித்திருக்கிறான். இத்தனைக்கும் அவள் அடித்த ஸ்டன்ட்டில்தான் பயந்து படிப்பு மட்டுமே குறிக்கோள் என்று ஓடியது. அடுத்து வேலை, அதில் தன் திறமை அது தந்த போதை என்று வேறு எதுவும் கவனத்தில் இல்லை. தாத்தா சென்றதும், பின்னர் அம்மம்மாவிற்கு வந்த அட்டாக்கும் எதற்காக இப்படி ஓடுகிறான் என்ற கேள்வியை விதைத்தது. மறு வருடம் இங்கே வந்துவிட்டான்.

கோயம்புத்தூரில் இருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. என்னவோ பம்பர் பரிசு மாதிரி அவனை சுற்றி வந்தார்கள். பெண்ணை பெற்றவர்கள் மட்டுமென்றாலும் பரவாயில்லை, அவர்கள் பெண்களும் வர, முடியவே முடியாது என்று இங்கே வந்துவிட்டான். தன் தன்மானம் அடிபட்ட இடத்தில்தானே தேடி அதை சரி செய்ய முடியும். எந்த ஊட்டியை விட்டு அவமானத்தோடு ஓடினானோ, அங்கேயே இப்போது மதிப்பும் மரியதையுமாக இருக்கிறான். என்ன ஒன்று, அவனை அற்பமாகப் பார்த்த அந்த பிரின்சிபால் இவன் வருவதற்குள் போய்ச் சேர்ந்துவிட்டார். பிரித்து மேய்ந்திருப்பான் அவர் மட்டும் உயிரோடிருந்திருந்தால்.

‘இப்ப என்ன, ஸ்டன்ட் அடிச்சவ மாட்டியிருக்காளே.. அவளை வெச்சு செய்வோம் பொறுமையா. எலக்ஷன் முடியட்டும்’, என்று நினைத்தவனை, பட்டென்று தோளில் ஒரு அடி கொடுத்து நினைவுக்குக் கொண்டு வந்தார் கமலம்.

“என்னடா, எங்க இருக்கு யோசனை? காபி வந்து அஞ்சு நிமிஷமாகுது!”, என்றவருக்கு உள்ளுக்குள் அப்படி ஒரு சந்தோஷம். ‘காதலிக்கறவங்க இப்படித்தான் அடிக்கடி தனியா யோசிப்பாங்களாமே, நிஜமாவே மாட்டிக்காட்டானா’, என்று முகத்தில் மகிழ்ச்சி மின்னியது.

அதைப் பார்த்தவன், “என்ன அம்மம்மா…என்னை அடிச்சதுல உங்களுக்கு இவ்வளவு சந்தோஷமா?” என்றான் கேலியாக.

“போடா… உன்னை பார்த்ததுல ஹாப்பியா இருக்கேன். இருக்கக்கூடாதா?”, என்று முறுக்கிக்கொண்டார். அதில் இளகியவன், “ நீதான் ஆறுமாசமா கொடி பிடிக்காத குறையா போராட்டம் பண்ணிகிட்டிருந்த அம்மம்மா. நான் என்ன செய்ய?”, எப்போதாவதுதான் இப்படி சிறு வயதில் அழைத்ததுபோல ஒருமையில் பேசுவான். அதுவே இன்று கமலத்திற்கு கண்கள் கலங்கிவிட்டது. “அப்ப இந்த கிழவிக்காகவாச்சம் கல்யாணம் பண்ணிக்கடா ராசா”, என்றார்.

“அம்மம்மா… இது பத்தி பேசாதீங்க ப்ளீஸ். எனக்கு சத்தியமா தோணலை. நான், என் ரொடீன்னு செட் ஆகிட்டேன். இப்ப இருக்க பொண்ணுங்கல்லாம் வாயைக்கோணி போட்டோ எடுக்கறதும், ரீல்ஸ் போடறதுமா சின்னபுள்ள கணக்கா இருக்குதுங்க. இதுக்கெல்லாம் நான் சரிப்பட மாட்டேன் அம்மம்மா”, ஏற்கனவே சொன்னதுதான். மீண்டும் பொறுமையாகக் கூறினான்.

“நான் பார்க்கலை. ஆனா நீயா எதாச்சம் பொண்ணு பிடிச்சிருந்தா வந்து சொல்லணும். சரியா?” என்று கை நீட்டினார்.

சத்தியமாக அவர் கைபிடித்து சரி என்று சொல்லும்போது  யார் நினைவும் இல்லை சுதர்ஷனுக்கு. இப்போதைக்கு அவர் சமாதானம் ஆனால் போதும் என்ற நினைப்பு மட்டும்தான் ஓங்கியிருந்தது. காலத்தின் கோலம் யாரறிவார் ?

ஒரு பதினோரு மணி வாக்கில் அவர் பொறுமையை முற்றிலுமாகச் சோதித்துவிட்டு வந்து சேர்ந்தார் சண்முகம். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, “என்னைய்யா இவ்வளவு நேரம்?”, என்று கடித்தார் கமலம்.

“அது, ஐயா இன்னிக்குன்னு பார்த்து வேலை மேல வேலை சொல்லிக்கிட்டே இருந்தாருங்க. இப்பவும் சீக்கிரம் திரும்பணும்”. திரும்பிப் பார்த்துக்கொண்டே சண்முகம் சொல்ல, “சரி…என்ன தெரியும் அந்தப் பொண்ணை பத்தி. முழுசா சொல்லு” என்று  நேரடியாக விஷயத்திற்கு வந்தார் கமலம்.

“அது பேரு சஹானா” என்று ஆரம்பித்தவர், இங்கே சர்வராக வந்ததும், பாதியிலேயே சென்றதும், மறுனாள் சுதர்ஷன் விசாரித்ததும் என்று அவருக்குத் தெரிந்ததெல்லாம் வரிசையாகக் கூறினார்.

“ஓ…ஒரு வேளை சின்ன வயசு காதலா இருக்குமா சண்முகம்? பணக்கார வீட்டுப் பொண்ணுன்னு, என் பேரன் அதுக்குத்தான் பேயா உழைச்சு இன்னிக்கு அவனும் எஸ்டேட் ஓனரா நிக்கறானா? அந்தப் பொண்ணு அதுக்குள்ள ஏழையாகிடுச்சா?”, கமலம் தானே திரைக்கதை எழுதினார்.

“ம்மா… நீங்களா நாலு சினிமா, சீரியல் சேர்த்து அதுக்குள்ள கற்பனை பண்ணாதீங்க” என்ற சண்முகம் தீடீரென்று முதலாளி சஹானாவை காரில் அழைத்து வந்து அலுவலக அறையில் உணவருந்தியதை விவரித்தார்.

“யோவ்…இன்னும் என்னையா வேணும்? அவளை கூப்பிட்டு வந்து அவளுக்காக வாங்கியிருக்க எஸ்டேட்டைக் காட்டியிருக்கான் என் பேரன். ஆனா விட்டுட்டு போன கோவத்துல இருந்திருப்பா என் பேத்தி”, பெருமையாகப் பார்த்தார்.

“பேத்தின்னே முடிவு பண்ணிட்டீங்களா?”, சண்முகம் ஆச்சரியப்பட்டார்.

“நீ மேல சொல்லுய்யா!” உந்தினார் கமலம்.

“தம்பிதான் சஹானாவுக்கு அயாத்தனா ரிசார்ட்ல வேலை வாங்கிக் குடுத்திருக்கு”,  எனவும் அகமழ்ந்துபோனார் கமலம்.

“இன்னுமாய்யா உன்னால நம்ப முடியலை? அவன் வேற எந்த பொண்ணுகிட்டயும் இந்த அளவுக்கு இருந்ததேயில்லை சண்முகம். இது அதுதான். நான் அயாத்தனா போகணும். இப்பவே”, என்று எழுந்துவிட்டார்.

“தனியாவா? இருங்கமா தம்பிகிட்ட நீங்க ஷாப்பிங் போகக் கேட்கறீங்கன்னு சொல்லி  நானும் வரேன்” என்றார்.

“அட…உன்னைப் பார்த்தா பேத்திக்கு நான் யாருன்னு தெரிஞ்சுடும். வேணாம். நீ செம்பருத்திய வரசொல்லு. என் ட்ரைவர் என்னை கூட்டிட்டுப் போவான். நீ பேரனுக்கு நான் கிளம்பின அப்பறம் தகவல் சொல்லு. இல்லைன்னா, நானே வரேன்னு நின்னாலும் நிப்பான்” பரபரப்பாக உத்தரவிட்டுக் கிளம்பச் சென்றார்.

“இந்த வயசுக்கு என்னமா யோசிக்கறாங்க!”, வியந்தபடியே கட்டளைகளை நிறைவேற்றச் சென்றார் சண்முகம்.

Advertisement