Advertisement

“எங்க இருக்க சஹானா?”, கைபேசி அழைப்பை எடுத்தவுடன் சுதர்ஷனனின் குரல் அதிகாரமாக வந்தது.
“ஏன்”, மொட்டையாகக் கேட்டாள் சஹானா.
“ம்ப்ச்… பேசணும். சொல்லு” என்றான் சற்று எரிச்சலாக.
“சரி… சொல்லு”, என்றாள் வேண்டுமென்றே.
“சஹானா…” எச்சரிக்கும் குரலில் அழைத்தான் சுதர்ஷன்.
“ஹே… என்ன? போன் பண்ணது நீ. என்ன விஷயமோ சொல்றதுன்னா சொல்லு. இல்லையா ஆளை விடு” எரிந்து விழுந்தாள் சஹானா.
இனிமையாகச் சென்ற பின்மாலைப் பொழுதை கலைத்து கடுப்படிக்கவென்றே போன் செய்திருப்பான் போல.
“அதை சொல்றதுக்குத்தான் எங்க இருக்கன்னு கேட்டேன்!”
“ஏன் போன்ல சொல்ல முடியாதா? நேர்ல பார்த்து பேசற அளவுக்கு எந்த ரகசியமும் இல்லை நம்மகிட்ட”
“மனுஷனை கடுப்படிக்கறதுக்குன்னே எதாவது கோர்ஸ் படிச்சியா? எங்க இருக்கன்னு சொன்னா என்ன குறஞ்சிடும்? எதுக்கு வருண் வீட்டுக்கு போன?”
“ஓஹ்… ஏன் அவன் பொண்டாட்டி உங்கிட்ட வந்து ஒப்பாரி வெச்சாளா? “ என்று எள்ளலாக கேட்டாள்.
“நீ ரேகாவை பார்த்தியா?”
“ஏன்… ஒப்பாரி வெச்ச குழந்தை என்ன சொன்னா?”, என்று அவனுக்கு நேரடியாக பதில் கூறாமல் மீண்டும் கேள்வி கேட்க, பல்லைக் கடித்தான் சுதர்ஷன்.
“அஞ்சு மணிக்கு நான் உன் ஹோட்டல் ரெஸ்டாரண்ட் வருவேன். நீ என்னை வந்து பார்க்கற” கட்டளையாகக் கூறினான்.
“நோப்… இன்னிக்கு இராத்திரி லேட்டாத்தான் ஹோட்டலுக்கு திரும்புவேன்” விட்டேத்தியாக பதிலளித்தாள் வேண்டுமென்றே.
அவள் வேலையில் கவனமில்லாமல் பொறுப்பற்று சுற்றுகிறாள் என்று வசைபாடுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு,
“இன்னிக்கு லீவா? எங்க சுத்திட்டு இருக்க?” என்று சரியாகக் கண்டுபிடித்துக் கேட்டு, ஆச்சரியம் தந்தான்.
அதனாலேயே, “கமெர்ஷியல் ரோட்”, என்று கூறினாள்.
அங்கே ஒரு உணவகத்தின் பெயர் சொன்னவன், “இருவது நிமிஷத்துல அங்க இருப்பேன். வெயிட் பண்ணு”, என்றதோடு அழைப்பை துண்டித்தான்.
“ரைட்டு…டின்னர் செலவு மிச்சம்”, என்று நினைத்து பொறுமையாக பராக்கு பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் சொன்ன நேரத்துக்கு போனால் அப்பறம் சஹானாவுக்கு என்ன மதிப்பு!
சொன்ன  நேரம் உணவகத்திற்கு வந்தவன் அவள் இல்லாததைக் கண்டு இரண்டொரு கெட்ட வார்த்தைகளை சத்தமில்லாமல் உதிர்த்தான். போனை எடுத்து அழைக்கவும், அவள் எடுக்கவேயில்லை.
“ஹ்ம்ப்…எல்லாத்துலையும் திமிர்”, என்று அணைப்பை துண்டித்தவன், உணவகத்தில் ஒரு ஓரம் சென்று அமர்ந்தான். பேரரிடம் ஒரு காபியை ஆர்டர் செய்துவிட்டு பொறுமையை இழுத்துப் பிடித்து அமர்ந்திருந்தான்.
பத்து நிமிடங்கள் போல அவனை காத்திருக்க வைத்துவிட்டு, பொறுமையாக வந்து சேர்ந்தாள். வாசலில் நின்று ஒரு பார்வை பார்த்தவள், அவன் இருக்கும் இடம் பார்த்து வந்து சேர்ந்தாள். சுதர்ஷன் வரவேற்று எழுந்திருக்கவும் இல்லை, அவளை அமர சொல்லவும் இல்லை.
‘லேட்டா வந்ததால கோவத்துல இருக்காராமா’, என்று நினைத்து ஒரு அலட்சிய புன்னகையை முகத்தில் ஓட விட்டவள், தாமதமாக வந்ததற்கு மன்னிப்பும் கேட்கவில்லை. நேராக மெனு கார்ட்டை ஆராய்ந்தாள்.
பேரரைக் கூப்பிட்டு ஒரு சிக்கன் பிரியாணி என்று தன் ஆர்டரைக் கொடுத்தாள். சுதர்ஷன் அதுவரையிலும் பேசாமல் இருந்தான். அவளே, ‘ஷேர் பண்ணிக்க, இரண்டு ப்ளேட்டா குடுத்திருங்க’ என்றாள் பேரரிடம். சுதர்ஷன் இப்போது அவளை முறைக்கவும்,
“ம்ம்..சொல்லு. என்ன பேசணும்?” என்றாள் எதுவும் உணராததுபோல்.
“எனக்கும் சேர்த்து நீ ஆர்டர் பண்ணுவியா?”
தோளை குலுக்கியவள்,”நல்ல பசியில இருக்கேன். பட் முழுசா என்னால முடிக்க முடியாது. அதான் உனக்கு ஷேர். பிடிக்காட்டி பார்சல் பண்ணிக்கலாம். நோ இஷ்யூஸ்” என்றாள் அலட்சியமாக.
“அப்ப நீயே பே பண்ணு. என் காஃபிக்கும் சேர்த்து”, என்றான் இடக்காக.
“ஹ…கூப்பிட்டது நீ. அப்போ பில் உன்னோடது. அவ்வளவு பெரிய அப்பாடக்கர் எஸ்டேட் ஓனர், ஒரு சிக்கன் பிரியாணி வாங்க முடியாதாமா? முடியாதுன்னா, என் பேரை சொல்லி வருண்கிட்ட வாங்கிக்கோ. அவன் இப்படில்லாம் சில்லரை கணக்கு பார்க்கமாட்டான்”, ஒரு பெரிய ஒட்ட வைத்த புன்னகையோடு சஹானா கூறவும், நற நறவென்று பல்லைக் கடிக்கத்தான் தோன்றியது சுதர்ஷனுக்கு. ஆனால் அவள் அதைத்தான் எதிர்பார்க்கிறாள் என்பதை உணர்ந்தவன், “சேச்சே…இன்னிக்கு நான் செய்த தர்மம்னு நினைச்சிக்கறேன். பசியில இருக்கவங்களுக்கு சோறு போட்டா புண்ணியம். கொஞ்சம் சேர்த்துக்கறேன்” என்றான் அவளைப் போன்றே ஒட்ட வைத்த புன்னகையோடு.
பிச்சையிடுகிறேன் என்பதை சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறான் என்று புரிந்தாலும், வருத்தத்தைக் காட்டாதவள், “ஷ்… இதை பேசத்தான் கூப்பிட்டியா?”, என்றாள் அடுத்து.
மீண்டும் மீண்டும் அவள் ஏழ்மையிலும், வாழ்க்கையில் தோல்வியோடு நிற்பதையும் குத்திக்காட்டுவதற்கு சுதர்ஷனின் மனம் ஒப்பவில்லை. ‘அவளோட பேச்சுல போட்டி போட முடியலைன்னா இதை சொல்லியே மட்டம் தட்டற. என்னடா இது பிஹேவியர்?’ என்று மனசாட்சி தலையில் குட்ட,
ஒரு மூச்சை இழுத்தவன், “ஐ அம் சாரி சஹானா. நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. நான் இன்வைட் பண்ணேன். அஃப்கோர்ஸ் நான் தான் பே பண்ணனும். இது தான தர்மம் கிடையாது. வேற எதுவும் வேணும்னாலும் ஆர்டர் பண்ணு ஷேர் பண்ணிக்கலாம்”, என்றான் அமைதியாக.
இம்முறை சஹானா முகத்தில் ஆச்சர்யம். மெல்ல ஒரு மென் புன்னகை அரும்பியது இதழிலும் கண்களிலும்.
ஏற்றுக்கொள்வதாய் ஒரு தலையசைப்பைக் கொடுத்தவள், “நீ சொல்லியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன்னை ரொம்பவே சீண்டினேன். பட் சொன்னதுக்கு தாங்க்ஸ். இப்ப பிரியாணி டேஸ்ட் பண்ணி எஞ்சாய் பண்ணி சாப்பிடுவேன்” என்றாள்.
ஒரு குறும்புத்தனம் முகத்தில் தோன்ற, பேரரை அழைத்து, “ஒரு மஷ்ரூம் சூப், ஒன் பை டூ முதல்ல கொண்டு வாங்க. பசியில இருக்காங்க” என்றான்.
இது என் இஷ்டம், நீ பங்கிட்டு சாப்பிடு என்றவனைப் பார்த்து இந்த முறை சத்தமாகவே சிரித்துவிட்டாள் சஹானா.
அந்த சிரிப்புச் சத்தம்தான் பார்சல் சர்வீசில், மனைவி வாங்கிவரச் சொல்லியிருந்த சிக்கன் பிரியாணிக்குக் காத்திருந்த சண்முகம் கவனத்தைக் கவர்ந்தது. அட இந்தப் பொண்ணு என்று உணரும் முன், அவள் எதிரில் புன்னகையோடு அமர்ந்திருந்த தன் முதலாளியைக் கண்டவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டார்.
இதற்குத்தானா, இருக்கும் தோட்டப் பிரச்சனையை விட்டுவிட்டு ஓடி வந்திருக்கிறார்? அனுப்பிய தேயிலை சரக்கின் தரம் குறித்து திடீரென்று ஒரு புகார். எல்லாம் அந்த பாண்டி க்ரூப்பின் மிரட்டலாகத்தான் இருக்கும். அதை பேசி பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்த மனிதர், “போறும் சண்முகம். எந்த பக்கம் நிக்கறதுன்னு அவன் யோசிக்கட்டும். அப்புறம் பார்த்துக்கலாம். நான் அவசரமா கிளம்பணும்” , என்று அவரை துரத்திவிட்டு இங்கே வந்து சிரித்துக்கொண்டிருக்கிறான்.
சஹானா நல்ல மூடில் இருக்கும்போதே கேட்போம் என்று, “வருண் அம்மாவை எங்க பார்த்த சஹானா?’, என்று எளிதாக ஆரம்பித்தான்.
“வெர்ட்யூ பேக்ஸ் கேக் ஷாப்ல. ஸ்கூல் டேய்ஸ்ல தினமும் நானும் வருணும் அங்க ப்ரௌனி சாப்பிடுவோம். போற வழியில பார்க்கவும், திடீர்னு ஆசை. ப்ரவுனி எல்லாம் சாப்பிட்டு எத்தனையோ வருஷமாச்சா? அதான், லெட்ஸ் இன்டல்ஜ்னு வாங்கி சாப்பிட்டுகிட்டு இருந்தேன். திடீர்னு ஆன்ட்டி எதிர்க்க நிக்கறாங்க! வருண் இன்னமும் இஷ்டமா சாப்பிடுவானாம். அவனுக்கு வாங்க வந்திருந்தாங்க”, என்று வருண் பற்றி சொல்லும் போதே முகத்தில் ஒரு இளக்கம்.
சூப் வரவும், ஒரு வாய் சுவைத்தார்கள். “ம்ம்… அப்பறம்? ஆள் கிடைச்சா, வாய் ஓயாம பேசுவாங்களே வருண் அம்மா”, என்று எடுத்துக் கொடுத்தான்.
“ஹாஹாஹ்ஹா…” சிரித்தவள், “ஆமாம் உன்னைக் கூட திட்டினாங்க”, என்றாள் மகிழ்ச்சி பொங்க.
என்னையா என்று புருவம் தூக்கிய சுதர்ஷனைப் பார்த்து முறுவலித்தவள், “ஒண்டிக்கட்டை நீ எலக்ஷன்ல நிக்காம “ என்பது வரை சொன்னவள் குரலை சற்று தாழ்த்தி, “குழந்தைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்க வருணை ட்ஸ்ட்ராக்ட் பண்ணி எலக்ஷன்ல சிக்க வெச்சிட்டியாம்! சச் அ பேட் பாய்!”, என்று பொங்கிச் சிரித்தாள்.
அவள் சிரிப்பு அவனையும் தொற்றிக்கொண்டது. “ஆக என்னை யாரும் திட்டினா போதும்  நீ சந்தோஷப்படுவ?” என்றான்.
“அஃப்கோர்ஸ்” என்றாள்.
இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க, சண்முக நாதன் கண்களுக்கு அனைத்தும் காதலர்கள் கொஞ்சுவதைப் போலவே இருந்தது. முதலில் சூப் பங்கிடப்பட, அடுத்து பிரியாணியும் பங்கிடப்பட்டதைப் பார்த்தவர் இரவில் சாதம் அறவே தவிர்ப்பார் முதலாளி. இது என்னடா புதுப் பழக்கம் என்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார்.
“பை த வே… நீ கேட்க நினைக்கறதை நானே சொல்லிடறேன். ஜஸ்ட் பிகாஸ் ஐ அம் ஹாப்பி. நானா அவங்க கூட போகலை. ஆன்ட்டி எனக்கு ஆப்ஷனே குடுக்காம கூடவே இழுத்துட்டு போயிட்டாங்க”, என்றவளை பொய் சொல்கிறாள் என்று நினைக்கத் தோன்றவில்லை.
“சரி, ஆனா வருணை கல்யாணம் பண்ணிக்கறியான்னு கேட்டாங்களாம்? நீயும் மாட்டேன்னு சொல்லாம எலக்ஷன் வரை பேசாதீங்கன்னு சொன்னியாம்?”, உடைத்தே கேட்டுவிட்டான்.
அதிருப்தியாய் ஒரு பார்வை அவனைப் பார்த்தவள், “தன்னோட பிரச்சனையை தன்னால சமாளிக்கக் கூட வேணாம், எதிர்த்து கேள்வி கூட கேட்க முடியாம, நீ வந்து பேசு, நீ ஹெல்ப் பண்ணுன்னு உன் பின்னாடியே ஒளிஞ்சக்கிட்டு, அவளுக்காக நீயும் திரௌபதிக்கு கிருஷ்ணரா ஆஜர் ஆகறியே உனக்கு டயர்ட் ஆகலையா சுதர்ஷன்?”என்றாள்.
அவள் கேட்டது முற்றிலும் உண்மை. இன்று கிளம்பி வரும்போது இதேதான் அவன் மனதிலும் ஓடியது. எலக்ஷன் முடியும் மட்டும் என்றுதான் கிளம்பி வந்தான். ஆனாலும் ரேகாவிற்காக பேசாமல் இருக்க முடியவில்லை.
“எல்லாரும் உன்னை மாதிரி தைரியசாலி இல்லை சஹானா. உனக்கு குருட்டுத் தைரியம் அதிகம். அவளுக்கு குருட்டு பயம் அதிகம். நான் இங்க ஒரு ஸ்டெபிலைசிங் ஃபாக்டர். இதே வருண் சொன்னா பேச்சு எமோஷனலா போகும்.  நான் மூணாவது ஆள். அதனால எங்கிட்ட சொல்றா. எப்பவும் இந்த மாதிரி கிடையாது. வருண் அம்மா குழந்தைக்காக ரொம்பப் பேசவும் இவ அப்செட் ஆகறா” என்று மெதுவாக வாதிட்டான்.
“ரேகா குட்ட குட்ட குனியற டைப் அதனாலதான் அவளை ஏறி மிதிக்கறாங்க. நான் வெளியாள். இத்தனை வருஷம் கழிச்சு பார்க்கறாங்க. அவளுக்கு என்ன பிரச்சனைங்கறதிலர்ந்து, வருண் இப்பல்லாம் அவளுக்கு  நேரம் குடுக்கறதில்லைங்கற வரை ஹால்ல வெச்சு பேசாறாங்கன்னா எங்கிருந்து வருது அந்த தைரியம்? இந்த மாங்கா மடையன் அம்மான்னா சரண்டராகிடுவான். ஒன்னு நாங்க தனிக் குடித்தனம் போகணும். இல்லை வேணவே வேணாம் உங்க பிள்ளைக்கு வேற கல்யாணம் கட்டுங்க, ஆனா நான் டைவர்ஸ் தரமாட்டேன்னு சொல்லி ஒரு சண்டையை அதே மாதிரி நடு ஹால்ல போட்டுட்டு கிளம்பச் சொல்லுங்க ரேகாவை. இதான் சாக்குன்னு வருணை மாமனார் வீட்டுக்குப் போய் அங்கேயே இருக்கச் சொல்லுங்க. ஒரு வாரம் தாங்க மாட்டாங்க ஆன்ட்டி. கதறிகிட்டு வந்து மன்னிப்பு கேட்பாங்க. அவங்க உதாரை யாரும் அசைச்சு பார்க்க மாட்டேங்கறீங்க.”, வெறுப்புடன் சஹானா முகத்தை சுளித்துக்கூற, அவளது ஐடியாவில், சுதர்ஷன் தான் கண்ணில் நீர் வர சிரித்துக்கொண்டிருந்தான்.
“என்ன?”, என்றாள் ஒரு புன்சிரிப்புடன்.
“இல்ல.. நீ.. இல்ல நீ சொன்னதை அப்படியே கற்பனை பண்ணிப் பார்த்தேன். ரேகா ஹால்ல நின்னு கத்தினா, அனேகமா வருண் மயக்கம்போட்டு ப்ளானை கெடுத்திடுவான்” என்று சிரிப்பினூடே சொல்லி முடித்தான்.
சஹானாவின் புன்னகையும் அழகாக விரிந்தது. “அந்த லூசு செஞ்சாலும் செய்யும். முன்னாடியே ஸ்கிரிப்டை குடுத்து ப்ரிப்பேர் பண்ணனும்.”
“இத்தனை பேசறவ, அங்க ஏன் எலக்ஷன் வரை பேசாதீங்கன்னு சொன்ன சஹானா?” என்றான் மீண்டும்.
“ஹ்ம்ம்… ஒட்டுக்கேட்டவங்க எப்பவும் தங்களைப் பத்தி நல்லதா கேட்டதா சரித்தரம் இல்லைன்னுவாங்களே. நாம மட்டும் அதை மாத்தலாமா? ஆன்ட்டி அல்ரெடி அவங்க பங்குக்கு சிறப்பா செஞ்சாங்க. நான் சும்மா ஒரு பிட்டைத்தான் போட்டேன். ஒளியாம இவ நேரா உள்ள வந்திருந்தா இத்தனை பேச்சு பேசியிருப்பாங்களா? சினிமா ஹீரோயின் மாதிரி, குடுகுடுன்னு மாடிக்கு ஓடி பெட்ல விழுந்து ஒரு மூச்சு அழுது உங்கிட்ட ஒப்பாரி வெச்சா சரியாகிடுமா?”, என்று முறைத்தாள்.
அவள் விவரித்ததில் அவனையும் மீறி புன்னகை மிளிர, “அவ ஓடிப்போய் பெட்ல விழுந்ததை நீ பார்த்த?” என்றான் கிண்டலாக.
“ஓடி போனதைப் பார்த்தேன். எதிர்க்க இருக்க மிரர் படிகட்டோட ஒரு ஓரம் காட்டும். மிச்சம் “, என்று கைகளை காற்றில் அளைந்தாள்.
சண்முகத்திற்கு இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. கோயம்புத்தூர் அழைத்து அனைத்தையும் ஒப்பித்துவிட்டார். எதிர்பக்கம் கேட்டவருக்கு அதற்குமேல் அதிர்ச்சி? “என்ன… பொண்ணு கூட டின்னரா? கண்ல தண்ணி வர அளவுக்கு சிரிச்சானா?” என்றவர் கண்கள் ஒளிர்ந்தது. சிக்கினானா ஒரு வழியா! என்று நினைத்துக்கொண்டார்.

Advertisement