Advertisement

அத்தியாயம் – 5

சஹானா இந்த ஒரு வாரமாக உற்சாகமாக இருந்தாள். அயத்தானா ரிசார்ட், ஊட்டியின் உயர்தர ரிசார்ட் வகை ஹோட்டல்.   ஹாஸ்பிட்டாலிடி எக்சிகீயுட்டிவ் வேலை. அதே வருவோரை வரவேற்று, புக்கிங் பார்த்து என்ற வழக்கமான வேலைகள்தான், பெயரில், அணியும் உடையில், பேசும் தொனியில் கொஞ்சம் பந்தா, கொஞ்சம் நாகரிகப் பூச்சு.

உணவு, தங்குமிடம், பாதுகாப்பு எல்லாம் உறுதியாகிவிட, மனதின் அழுத்தம் சற்று மட்டுப்பட்டிருந்தது. உயர்தர ரிசார்ட் என்றாலும், பணியாளர்கள் குவார்ட்டர்ஸ் நடுத்தரமாகத்தான் இருந்தது. மும்பையில் இருந்ததைவிட தேவலாம், அதுவும் தனி ரூம் என்பதே போதுமானதாக இருந்தது.

வேலையை எளிதாகக் கற்றுக்கொண்டாள், அங்குள்ள மற்றவர்களையும் அனுசரித்துப் போக பழகிக்கொண்டாள். ஆண்களிடம் ஜிம் ட்ரெயினர் பாய் ஃப்ரெண்டு பற்றி மறக்காமல் கூறி விட, வழிவதோடு நிறுத்திக்கொண்டார்கள். உடன் வேலை செய்யும் மற்ற பெண்கள் இவள் அழகை பேசும் மொழிகளைக் கண்டு சற்று பொறாமை கொண்டாலும், தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருக்கும் சஹானாவை அவர்கள் வட்டத்தின் ஓரத்தில் வைத்திருந்தார்கள்.

சஹானா அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இவர்களின் மானேஜர் சாமிநாதன் முதலில் இவள் அழகையும், எம்.டி. அனுப்பிவைத்திருக்கிறார் என்பதையும் முடிச்சிட்டு சற்று ஏளனமாகப் பேசவும், தனியே அழைத்து அவரிடம் உண்மையும் பொய்யும் கலந்து வேறோர் கதை சொல்லியிருந்தாள்.

“உங்ககிட்ட மட்டும் சொல்றேன் சர். மனசோட வெச்சிக்கங்க. ஆக்சுவலி நான் மேகா எஸ்டேட் குடும்பத்தை சேர்ந்தவ. குருபிரசாத் என் அண்ணாதான். அம்மா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க. அப்பாவும் போனதுக்கப்பறம் குடும்பத்தோட சண்டை, தனியா வந்துட்டேன். உங்க எம்.டிகிட்ட இன்டர்வ்யூக்கு மட்டும் அண்ணா ஃப்ரெண்ட் ஏற்பாடு செய்தார். என் திறமை பார்த்துதான் வேலைக்கு எடுத்தார் உங்க எம்.டி. மும்பைல ஒரு ஆறு  வருஷமா ஃபாஷன் ஹௌசஸ்ல வேலைல இருந்திருக்கேன். இந்த வேலை உங்க ஹெல்ப் இருந்தா சீக்கிரமே கத்துக்குவேன் சர். நாலு மொழி சரளமா பேசுவேன், இன்னும் மராத்தி, மலையாளம் புரியும், கொஞ்சம் பேசுவேன்” என்று சரமாரியாக அடுக்க, அண்ணி கொடுமையால் பாவம் தனித்து வந்துவிட்டாள். அப்பா இல்லாத பெண்ணிற்கு கல்யாணம் செய்து வைக்காமல் இப்படி விட்டுவிட்டார்களே என்று அவரே கோட்டிட்ட இடங்களை நிரப்பிக்கொண்டார். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் சோக புன்னகையை சஹானா வீச, மனிதர் அவள் கையில் பெட்டிப்பாம்பாக அடங்கினார்.

அன்றிலிருந்து அவரே அவளுக்கு கார்டியனாக தன்னை நினைத்துக்கொண்டு பாசத்தைப் பொழிந்து வேலை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.

புதன் கிழமை அவளுக்கு விடுமுறை நாள். இன்றுதான் முதல் விடுமுறை. கிளம்பி சேரிங்க் க்ராஸ் வந்தவள், சிறு வயதில் அலட்சியமாக சுற்றித் திரிந்த இடங்களை மெதுவாக பார்த்துக்கொண்டிருந்தாள். சில பழைய கடைகள் இன்னமும் இருந்தது, பல புதிய தெரியாத பெயர்களும் முளைத்திருந்தன. கால்கள் தாமாக வெர்ச்சு பேக்ஸ் வாசலில் வந்து நின்றன. வருணுக்கும் அவளுக்கும் இதுதான் ஆஸ்தான இடம். பழைய நினைவுகளின் தாக்கத்தில், அவர்கள் எப்போதும் உண்ணும் வால்னட் ப்ரவுனியை வாங்கி ஒரு வாய் சுவைக்க, மனம் அந்த பதின்ம வயதுக்கே மீண்டும் சென்றுவிடமாட்டோமா என்று ஏங்கியது.

மறுவாய்ப்பு கிடைத்தால் யார்தான் தன் வாழ்க்கையை இன்னும் சிறப்பாக வாழாமல் இருப்பார்கள் ? எதுவும் மாறாவிடினும், அவள் தந்தையை இப்படி தன் வாழ்க்கையிலிருந்து ஒதுக்கியிருக்காமல் கொஞ்சமாவது இணக்கமாக இருந்திருப்பாள். அவள்தான் அவருடைய மிகப்பெரிய மனக்குறை. செல்லமளித்துக் கெடுத்துவிட்டோம், பெண் வளர்ப்பில் தோல்வியுற்றோம் என்பதே திமிறிக்கொண்டு சென்ற மகளை இறுக்கிப்பிடிக்க வைத்தது. அது அப்பா மகள் உறவை முற்றிலுமாக உடைத்துப் போட்டது.

தந்தையின் இறப்புகூட ஒரு வாரம் கழித்து, இரண்டு மூன்று நபர் மாறி இவளிடம் செய்தியாக வந்து சேர்ந்தது. தன் கைப்பேசி எண் மாறியதை அவள் வீட்டிற்கு தெரிவிக்கவில்லை. விஷயம் தெரிந்து குருவை அழைத்தபோது, அத்தனை கோவத்தில் கத்தரித்தார்போல பேசினான். சொத்தில் சல்லிகாசு தேறாது என்று மேலும் சொல்ல, ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது சஹானாவிற்கு.

“உண்மையான்னு தெரிஞ்சிக்கத்தான் போன் செய்தேன். வேண்டாம்னு சொன்னதை திரும்ப கேட்கற ஆள் நானில்லை” என்று வைத்துவிட்டாள்.

ஒரு வாரம் பத்து நாள் கழித்து குரு மீண்டும் அழைத்திருந்தான். இந்த முறை சற்று சமாதானமாகப் பேசினான். அவளை தொடர்பு கொள்ள முனைந்ததை பற்றி பேசி, அவள் வருவதாக இருந்தால் காரியத்திற்கு வர அழைத்தான். அவர் இருக்கும்போது வராதவள், கடைசியாக அவர் முகத்தைக்கூட பார்க்க வராதவள், காரியத்திற்கு வந்து என்ன செய்யப்போகிறேன், தேவையில்லை” என்பதோடு முடித்துவிட்டாள்.

“ஹே..சஹானா ? சஹானாதான நீ?” , என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நிகழ்காலத்திற்கு வர, எதிரில் கண்ணாடியை ஏற்றிவிட்டு நின்று கொண்டிருந்தவர் வருணின் அம்மா மீனாட்சி.

ஒரு புன்னகையுடன், “ஹாய் ஆன்ட்டி… ஆமா சஹானாதான். எப்படி இருக்கீங்க?”, என்றாள்.

“வருண் சொன்னான், நீ திரும்ப வந்துட்டன்னு. அப்படியே வருண் மாதிரியே இன்னமும் நீயும் வால்னட் ப்ரவுனியை விடாம இருக்கியா?”, அவள் கையில் இருந்த மிச்சத்தைப் பார்த்து மலர்ந்து சிரித்தார்.

“சாப்பிட்டு ரொம்ப வருஷம் ஆச்சு ஆன்ட்டி, அதான் வாங்கினேன்”, ட்ஷ்யூவில் கையை துடைத்தாள்.

“வருணுக்கும் அப்பப்ப வாங்கிட்டு போவேன். இஷ்டமா சாப்பிடுவான். வா வா வீட்டுக்குப் போகலாம். எத்தனை வருஷமாச்சு உன்னை பார்த்து பேசி”, என்று மறுக்க இடம் கொடாதபடி அவளையும் கையோடு அழைத்துக்கொண்டு காரில் ஏறினார்.

“அப்பா இறப்புக்குக் கூட வரலை நீ. குருவைக் கேட்டா, நம்பர் தெரியலை, ஃப்ரெண்டுங்க கிட்ட சொல்லியிருக்கேன்னு சொல்றான். ஏன்மா, அப்படியே உறவை வெறுத்திட்ட?”, மீனாட்சி மனதில் உள்ளதை பட்டென்று கேட்டுவிடும் சுபாவம், அவளிடம் கேட்டுவிட்டார்.

ஒரு வகையில் சுற்றி வளைத்து விஷயத்தை வாங்க முற்படுபவர்களுக்கு மத்தியில் இப்படி கேட்பவர்கள் எவ்வளவோ தேவலாம்.

“ம்ப்ச்..முடிஞ்சு போனது பத்தி என்ன ஆன்ட்டி. அப்ப புரியாதது இப்ப புரியுது, ஆனா சரி பண்ண முடியாதபடிக்கு அப்பா போயிட்டார். விடுங்க. நீங்க எப்படி இருக்கீங்க? இந்த பத்து வருஷத்துல வயசு ஏறின மாதிரியே தெரியலை? டை அடிக்கறீங்களா?”, என்று திசை திருப்பினாள்.

வீட்டை அடையும் வரை பேச்சு இலகுவாக சென்றது. வரவேற்பறையில் வந்து அமர்ந்தாள். முன்பு இருந்ததற்கு சற்றும் மாறவில்லை.

“என்ன ஆன்ட்டி, அப்படியே வெச்சிருக்கீங்க வீட்டை? பெயிண்ட் கலர் கூட மாத்தலை?”

வேலையாளிடம் குளிர் பானம் எடுத்துவர சொன்னவர், “ஹ்ம்ம்.. போன வருஷம் வருண் மாத்தலாமான்னு கேட்டான். எல்லாம் பொண்டாட்டி சொல்லியிருப்பா, இல்லைன்னா இத்தனை வருஷமா கேட்காதவன், இப்ப ஏன் கேட்கப்போறான். வேணாம்னு சொல்லிட்டேன்” என்றார் பெருமையாக.

அடுத்து, “உங்ககூட படிச்ச ரேகாவைத்தான் கட்டியிருக்கான். தெரியும் இல்லையா?” என்று எதோ ஒரு எதிர்பார்ப்புடன் அவளைப் பார்த்தார்.

“தெரியும் ஆன்ட்டி”, என்றாள் மையமான ஒரு புன்முறுவலுடன்.

“என்னவோ போ.. நீ திடீர்னு கிளம்பி போயிட்ட, அவனுக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு, அப்பறம் கோயம்புத்தூர் காலேஜ் அது இதுன்னு பிசியாகிட்டான். இவளும் அதே காலேஜ் போய் சேர்ந்தா. இவன் டிகிரி முடிச்சு வந்து  இரண்டு வருஷத்துல நான் கல்யாணப் பேச்செடுக்கவும், இவளைத்தான் கட்டுவேன்னு ஒத்தக்கால்ல நிக்கறான்!” அங்கலாய்ப்பாக முடிக்கவும், வேலையாள் மாதுளம்பழரசத்துடன் வரவும் சரியாக இருந்தது.

அவளுக்கும் கொடுத்து, தானும் எடுத்துக்கொண்டவர், “ஹ்ம்ம்… நானும் இன்னொரு எஸ்டேட் வாரிசுதான் மருமகளா வருவான்னு நினைச்சிருந்தேன்…”, என்று மீண்டும் அவள் முகம் பார்த்தார்.

சிரித்தவள், “என்னை பார்க்காதீங்க ஆன்ட்டி… உங்களுக்கு ஆல்ரெடி மருமக வந்தாச்சு. இல்லை எனக்குத் தெரியாம இன்னொரு மகன் இருக்கானா?” என்றாள் கேலியாக.

“இந்த ஒரு பிள்ளையை பெத்து வளர்த்து, ஒரு பேரனை பார்க்க குடுப்பினை இல்லாம இருக்கேன் நான்.  உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைதானே? ஏன் வருணை கட்டிக்க மாட்டியா?” அவரும் நகைச்சுவையாகவே கேட்டாலும் கேட்டுவிட்டார்.

லேசாக அதிர்ந்தவள், “ஆன்ட்டி…எலக்ஷன்ல வேற நிக்கறான். சும்மா விளையாட்டுக்குக்கூட இப்படி பேசாதீங்க” என்று செல்லமாக அதட்டினாள்.

“அதுலவேற அவனை இழுத்துவிட்டு படுத்தறாங்க. அந்த சுதர்ஷன் பையன் ஒண்டிகட்டை. அவன் நிக்கலாம் இல்லையா? இந்த ரேகா பொண்ணுக்கு கரு முட்டை சரியா சத்தா வளர மாத்திரையெல்லாம் குடுத்திருக்காங்க. இவனும் கொஞ்சம் ரிலாக்சா இருந்தா தானே ஒரு நல்லது நடக்கும்? இப்பதான் கால்ல சக்கரத்தைக் கட்டிகிட்டு ஓடறான். எப்பவும் இந்த நினைப்புலயே டென்ஷனா இருக்கான். நீயாவது அவங்கிட்ட பேசு சஹானா. நீ சொன்னா அவன் கேட்பான்”, மீனாட்சி தன் மனக்குறையை விளக்கிக்கொண்டிருக்க, மாடியிலிருந்து வந்த ரேகா, மாமியார் குரல் கேட்டு வரவேற்பறை பக்கம் திரும்ப, அவளது அந்தரங்கம் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்ததை வெளியிலிருந்தே கேட்கமுடிந்தது. அதுவும் சஹானாவிடம் பேசுகிறார் என்று தெரிந்ததும் உடல் முழுதும் எரிவது போலிருந்தது. ‘ஓ அவளை கட்டி வெச்சிருவீங்களா? என்ன ஒரு கேடுகெட்ட எண்ணம்? இந்த பிசாசு கட்ட மாட்டேன்னு சொல்லுதா… எலக்ஷன் வரைக்கும் பேசக்கூடாதா? அப்ப, அப்பறம் பேசுவாளா? முதல்ல எதுக்கு வீடு தேடி வந்திருக்கா? சுதிர் வருண் கிட்ட பேசக்கூடாதுன்னு சொன்னதுல அத்தைகிட்ட உறவு கொண்டாடறாளா? இதை யாரும் தப்பு சொல்ல முடியாதேன்னு கணக்கா?’ கோபத்தில் எண்ணங்கள் நாலாபுறமும் சிதற கண்களில் கண்ணீர் அரும்பியது.

சஹானா என்னவோ சொல்வதும் இருவரும் சிரிப்பதும் கேட்க, அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் மீண்டும் அவள் அறைக்கே அடைக்கலம் புகுந்தாள்.

மனம் கலக்கமாகவே இருக்க, சுதர்ஷனை அழைத்தாள்.

“சுதிர், வருண்கிட்ட பேசக்கூடாதுன்னு சொன்னீங்கல்ல ? அந்த சூனியக்காரி, அத்தையோட பேசிகிட்டு இருக்கா. வீட்டுக்கே வந்து பேசறா. இவங்களும் ஏன் வருணை கட்டிக்கமாட்டியான்னு கேட்கறாங்க…”கேவலுடன் நிறுத்தியவள் மீண்டும் துண்டு துண்டாக தான் கேட்டதை சொல்லி புகார் படிக்கவும்,  நெற்றியை தேய்த்துக்கொண்டான் சுதர்ஷன்.

‘காலை சுத்தின பாம்புங்கறது இவதானா? இருக்கற பிரச்சனை பத்தாதுன்ன்னு இவ வேற குடைச்சல் குடுத்துகிட்டு இருக்காளே!’, என்று சுதர்ஷனுக்கு சஹானாவின் மேல் ஆத்திரம் கூடியது.

“வருண் என்ன முட்டாளா? உன்னை வேணாம்னு சொல்லி அவளைக் கட்ட? இவங்க என்னவாவது சொல்லிட்டு போகட்டும் விடும்மா. நான் சஹானாகிட்ட பேசறேன். வார்ன் பண்றேன். அவ வந்தபோது வருண் இருந்தானா வீட்டுல?”

“இல்லை சுதிர். அவர் காலையிலேயே கிளம்பிட்டார்.”

“அப்பறம் என்ன? பார்த்துக்கலாம் விடு”, என்று சமாதான வார்த்தைகள் சொல்லி அழைப்பை முடித்தான்.

அவனது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவள், வருணிடம் லேசில் ஒத்துக்கொள்ளவில்லை.

“உங்கம்மா பேசறது அசிங்கமா இல்லை? நீங்க ரிலாக்சா இருந்தாதான் நல்லது நடக்குமாம். அவகிட்ட சொல்றாங்க. எனக்கு கூசிடுச்சு. எனக்குத்தான் பிரச்சனை, மாத்திரை சாப்பிடறேன்னு எதுக்கு அவகிட்ட சொல்லணும்? இதுல அவகிட்ட, ஏன் வருணை கல்யாணம் பண்ணிக்க மாட்டியான்னு கேட்கறாங்க?”, உக்கிரப்பார்வையும் உஷ்ண மூச்சுமாய் பேசிக்கொண்டிருந்த மனைவியை என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தான் வருண்.

“பத்து வருஷம் மும்பைல எப்படி இருந்தாளோ என்னவோ? ஆனா அவ நல்லவ உங்க அம்மாவுக்கு” என்று ரேகா வார்த்தைகளை விட, “ரேக்ஸ்… இதுதான் லிமிட். சஹானா பத்தி இப்படி பேசாத. அம்மா பண்ணது தப்பு, அது பத்தி மட்டும் பேசு. “ என்று எச்சரித்த மாத்திரத்திலேயே, தலையணை பறந்தது.

“ஓ…உங்க காதலிய சொன்னா பொத்துகிட்டு வந்துடுமே! இவ்வளவு நேரம் உங்க அம்மா என்னை நடு ஹால்ல கேவலப்படுத்தினாங்கன்னு சொல்றேன். அப்ப கோவம் வரலை. கம்முனு இருந்தீங்க. இப்ப அவ பத்தி ஒரு வார்த்தை பேசினது தாங்கமுடியலை இல்ல? விட்டா உங்க அம்மா மாதிரி நீங்களும் அவளோட கல்யாணத்துக்கு ரெடின்னுவீங்க போல?” ரேக்காவிற்கு குரல் கோபத்தில் கிறீச்சிட்டது.

“ம்ப்ச்… எல்லாத்துக்கும் தப்பர்த்தம் எடுக்காதே ரேகா. அடுத்தவங்க காரக்டரைப் பத்தி இஷ்டத்துக்கும் பேசக்கூடாது. அப்பறம் அம்மாக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? சே… சீக்கிரம் வேலையை முடியவும் நாலஞ்சு நாளா பிசியா சுத்தறோமே இன்னிக்காவது உங்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு வந்தேன்” வருண் தலைமுடியை அழுந்த தேய்த்துக்கொண்டே சொல்லி நிறுத்தவும்,

“எது, உங்கம்மா சொன்ன மாதிரி எங்கூட ரிலாக்சா இருக்கவா?”, என்று ரிலாக்சாவை அழுத்தி, இரு விரலால் மேற்கோள் இடுவது போலக் காட்டி நக்கலடித்தாள்.

சுத்தமாக வெறுத்துவிட்டது வருணுக்கு. “எல்லாம் உங்க இஷ்டத்துக்கு ஆடுங்க. நான் எதுவும் பேசலை”, என்று கைகளை காற்றில் உதறியவன், வந்த வழியே வெளியேறினான்.

அதில் ரேகாவிற்கு இன்னும் அழுகைதான் கூடியது. அவளுக்காக அவன் தாயிடம் சண்டையிட வேண்டாம், சற்று பரிந்து கூட பேசவில்லை என்பது பெரும் குறையாகிப்போனது.

Advertisement