Advertisement

அத்தியாயம் – 4

இறுக்கமான ஜீன், குளிருக்கு இதமான புல் ஒவர் டாப், காலில் சாக்ஸ், ஏனோ தானோவென்று தூக்கி கட்டிய முடியிலிருந்து சில கற்றைகள் வெளியே வந்து மேக்கப் துடைத்த அவள் முகத்தை வருடியது. அழகிதான். புற அழகு உள்ளிருக்கும் அழுக்கை மறைத்திருக்கிறது என்ற நினைப்போடு ஒரு அலட்சியப் பார்வையை வீசினான் சுதர்ஷன்.

பலப்பல அளவிடும் பார்வைகளையும் அதற்கும் மேலான அழுக்குப்பார்வைகளையும் கடந்து வந்த சஹானாவிற்கு அவன் பார்வை சங்கடமளிக்கவில்லை.

“எதுக்கு இங்க திரும்ப வந்திருக்க?”, சுதர்ஷன் சுத்தி வளைக்காமல் விஷயத்திற்கு வந்தான்.

“அமெரிக்கா போன நீ எதுக்கு இங்க வந்த? இத்தனைக்கும் இது உன் சொந்த ஊர் கூட கிடையாதே?”, அவளைவிட மூத்தவன் என்றாலும் அவன் கொடுத்த மரியாதைதான் திரும்பத் தந்தாள்.

“நான் நினைச்சிட்டு போன இலக்கைவிட அதிகமா அச்சீவ் பண்ணேன், சீக்கிரமாவே. அதுதான் போதும்னு திரும்ப வந்தேன். டீ எஸ்டேட் ஓனராகணும்னு அடுத்த கனவு, அதை நிறைவேத்திகிட்டு இருக்கேன். நீ எப்படி?” அவள் நிலை தெரிந்தே ஊசி ஏற்றினான்.

உள்ளுக்குள் எழுந்த அவமானத்தை விழுங்கியபடி, இந்த சுற்றில் வெற்றி உனதே என்பதாக கையை அவன் புறம் நீட்டி, தலையை லேசாக சாய்த்தாள் சஹானா.

அதை அலட்சியப்படுத்தியவன், “போக்கிடமில்லைன்னு வந்திருக்கியா இல்லை  அடுத்தவன் வாழ்க்கையை ஆட்டையை போட வந்திருக்கியா?” என்று உற்று நோக்கினான் அவளை.

அவன் சொன்ன இரண்டுமே ஒவ்வாததாய் இருக்க, ஏன் பதில் சொல்லப்போகிறாள்?

“ஏன் வருண்கிட்ட மட்டும்தான் பேச்சு வருமா உனக்கு?”, சுதர்ஷன் மீண்டும் நக்கலடிக்க இந்த முறை தன் ஏளனத்தை வெளிப்படையாகவே காட்டினாள் சஹானா. “அவளால பேச முடியலைன்னு ரேகா உன்னை ஏவி விட்டிருக்காளா?”

“நீ அவ புருஷனை கட்டிபிடிச்சிட்டு நின்னா எந்த பொண்டாட்டிதான் சும்மா இருப்பா? குளிருக்கு கட்டிபிடிக்க வேற ஆள் கிடைக்கலையா உனக்கு?” சுதர்ஷனின் தொனி அவளை சீண்டிப்பார்க்க,

“ஏன்… அந்த போஸ்ட்க்கு நீ அப்ளிகேஷன் போடப் போறியா?”  என்றாள் திமிராய்.

“ஒன்னும் செய்யாதப்போவே கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்க ட்ரை பண்ணேன்னு ஆரம்பிச்சு என்னென்னவோ  சொன்னவதானே நீ? இப்ப இன்னும் என்ன சொல்லி மாட்டிவிடுவன்னு தெரியாதா எனக்கு? இன்னும் அப்பாவி லேப் இன் சார்ஜ்ன்னு நினைச்சிட்டு இருக்கியா?”, என்றான் சுதர்ஷன் சற்று கடுப்பாய்.

“ஷப்பா… நீ எஸ்டேட் ஓனராவே இரு… இப்ப எதுக்கு வந்திருக்க? ரேகா போட்ட அதே என் புருஷந்தான் ரெக்கார்டை நீ கொஞ்சம் மாத்தி ஓடவிடப்போறியா?” சலிப்பாய் கேட்டாள் சஹானா.

‘உடம்பெல்லாம் திமிர்’ என்று உள்ளுக்குள் கரித்துக்கொட்டியவன், “நான் சொன்னா நீ கேட்டுட்டுதான் மறுவேலை பார்ப்பன்னு தெரியாதா எனக்கு? நான் அதுக்கு வரலை”, என்று சுதர்ஷன் சொல்லவும், சற்று கவனம் வந்து பார்வையை அவன் புறம் செலுத்தினாள்.

“உனக்கு வேலை வேணும்னு கேட்டிருந்தான் வருண்”

“கேட்டிருக்க மாட்டான்” இடைமறித்தாள் சஹானா.

கேள்வியாய் சுதர்ஷன் புருவம் உயர்த்த, “என்ன வேலை யார்கிட்ட கேட்கப்போறேன்னு சொல்லிட்டுதான் என் சம்மதம் வாங்கினான். அதுல நீ எங்கேயும் வரலை. உன் மூலமா எனக்கு எந்த ஹெல்ப்பும் தேவையில்லை”, முடிவாய் வந்தது சஹானாவின் பதில்.

“லிசன், உன்னோட சின்னத்தனமான எண்ணங்களுக்கு இங்க யாருக்கும் நேரமில்லை. ஹோட்டல்ல வேலை  நான்தான் ஏற்பாடு செய்வேன். உனக்காக இல்லை. வருண், ரேகாவுக்காக. அதே மாதிரி நீயும் வருணுக்காக அதை அக்செப்ட் பண்ணிட்டு ஜாயின் பண்ற” கட்டளையாக சொல்லவும் கடுப்பானாள் சஹானா.

“ம்ப்ச்… வீட்டுக்குள்ள கூப்பிடமாட்டியா? இல்லை வேற எங்கயாவது போயிகிட்டே பேசலாம். எனக்கு இப்படி வாசல்ல நிக்கறது பிடிக்கலை”, சுதர்ஷன் மீண்டும் பேச,

“யாரும் உன்னை இங்க நின்னு பேச சொல்லலை. தாராளமா கிளம்பிப்போ!” என்றாள் சஹானா.

“ஷ்ஷ்…”, என்று மூச்சை விட்டு பொறுமையை இழுத்துப் பிடித்தவன்,

“வந்து கார்ல ஏறு. கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு”, என்று சொல்லி அவன் காருக்கு சென்றான்.

போகவேண்டாம் என்று தோன்றினாலும், ‘அப்படி என்ன பேச வேண்டியிருக்கும்? ஏன் வருண் எனக்கு வேலை வாங்கிக்கொடுக்காது இவன் செய்ய வேண்டும்?’ என்ற கேள்விகள் அவள் ஆர்வத்தை தூண்டின.

அதன் பொருட்டு அவன் பின் சென்றவள், காரில் ஏறியபடியே, “எங்கையாவது லன்ச் சாப்பிட்டுகிட்டே பேசலாம். என் லன்ச் ப்ளானை கெடுத்ததுக்கு இதையாச்சம் செய்” என்று அதிகாரமாய் கூறிக்கொண்டே சீட் பெல்ட்டை போட்டுக்கொண்டாள். ‘வேண்டுமென்றே இவன் காரை இடித்துவைத்தால் என்ன செய்வது’ என்று ஒரு தற்காப்பு எண்ணம்.

நேராக அவன் அழைத்து வந்தது அவன் வீட்டிற்கு. அதுவே ஆச்சரியம்தான் சஹானாவிற்கு. உள்ளே நுழைந்த அவளைப் பார்த்து சண்முகத்துக்கு முதலில் அடையாளமே தெரியவில்லை.

“இரண்டு பேருக்கும் சாப்பாட்டை உள்ளே அனுப்புங்க சண்முகம்” என்று உத்தரவிட்டு அவன் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றான்.

“உங்கிட்ட என்ன காரணத்துக்கும் வேலைக்கு சேரதா உத்தேசமே இல்லை” என்று உடனே தெளிவுபடுத்தினாள் சஹானா.

“உன்னைப்போய் கிட்ட சேர்ப்பேனா?” என்று பதிலுக்கு கரியைப் பூசினான் சுதர்ஷன்.

“ரைட்… அப்ப சொல்லு என்ன விஷயமா பேசணும்?” என்றாள் அவன் பேச்சை விடுத்து.

 “உட்கார்.. சாப்பாடு வரட்டும். அதுக்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் டீடெயில் வேணும்” என்று அவளுக்கு இருக்கையைக் காட்டி அவனும் எதிரில் அமர்ந்தான்.

பதில் பேசவில்லை என்றாலும் அவள் கண்கள் நொடியில் அந்த அறையை எடைபோட்டன. தேக்கு மர மேசை, மாக் கணினி, மேசையில் அவன் வைத்த புது ரக  ஐபோன், காதில் இருந்த ப்ளூடூத், வசதியான சுழல் நாற்காலி என்று அவன் செழுமையை உள்வாங்கிக்கொண்டது.

அவள் பதிலுக்குக் காத்திராதவன், “இங்கேயே தங்கப் போறியா? இல்லை திரும்ப போயிருவியா?” என்று ஆரம்பித்தான்.

“ஏன்?”

“உன்னை வேலைக்கு எடுக்கறவன் ஒரு வருஷமாவது இருப்பன்னு நினைச்சுதான் எடுப்பான். நீ பாட்டு இரண்டு மாசத்துல கிளம்பினா, உன்னை அனுப்பிவெச்ச என்னைத்தான் தப்பா நினைப்பான்?” போதுமா விளக்கம் என்பதாக பார்க்க,

“நீ வேலை வாங்கித் தர நான் சரின்னு சொல்லவே இல்லையே?”

‘அவனவன் வேலை கிடைக்காதான்னு இருக்க, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லைன்னாலும் தெனாவெட்டுக்கு ஒன்னும் குறைச்சலில்லை’ என்று வந்த கடுப்பை மறைக்காது முகத்தில் காட்டியவன்,

“ஏன் மகாராணிக்கு வேலை லைன்ல நிக்குதோ?” என்றான் நக்கலாக.

“வேலை லைன்ல நிக்குதோ, நான் லைன்ல நிக்கறனோ அது உனக்கு தேவையில்லாதது. என்ன பேச வந்தியோ அதை பேசு”, சஹானாவும் சிடுசிடுத்தாள்.

“இன்னும் மூணு மாசத்துல டீ ப்ரோடூசர் சங்க தேர்தல் வரப்போது. வருண் இந்த முறை தலைவராகறதுக்கு  நிக்கப்போறான். ஏற்கனவே இருந்த க்ரூப்புக்கு இவன் பாப்புலாரிட்டி பிடிக்கலை. எதாவது செஞ்சு அவன் இமேஜை உடைக்க காரணம் தேடிட்டு இருக்காங்க. இப்படி அவன் பப்ளிக்கா கட்டி பிடிச்சிட்டு, உன் கூட சுத்திகிட்டு இருக்க மாதிரி ஒன்னு இரண்டு வாட்டி பார்த்தா கூட போதும் மசாலா சேர்த்து படமே ஓட்டுவாங்க” சுதர்ஷன் சொல்லிவிட்டு நிறுத்த, இந்த முறை அவள் கவனம் முழுதும் அவன் மேல் இருந்தது.

தேயிலை உற்பத்தியாளர் சங்கத்தின் முக்கியத்துவம் அவளுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

“வழக்கமா பழம் தின்னு கொட்டை போட்ட பெருந்தலை யாராச்சம்தான நிப்பாங்க?”

“போன தேர்தல்லுக்கு முன்னாடி ஒரு பொறுக்கி காசை இறைச்சு பதவிக்கு வந்தான். இரண்டாவது வாட்டியும் அடாவடியா அவனே ஜெயிச்சான். இந்த நாலு வருஷமா ரொம்ப ஆட்டம். சிண்டிகேட் மாதிரி நடத்தறான். சின்ன ப்ரோட்யூசர்ஸ்க்கு ரொம்ப பாதிப்பு. இந்த முறையும் அவனே வந்தா, பெரிய தோட்டங்களையும் டார்கெட் பண்ணுவான். அதுதான் வருண் மேல நம்பிக்கை வெச்சு இந்த தேர்தல்ல அவனை  நிக்க வைக்கறோம். ஹில்மாரி பாரம்பரியமும், அவன் நல்ல பேரும், இளவயசுங்கறதும் ப்ளஸ். அந்த பாண்டி க்ரூப்பால பணத்தைக் காட்டி விலைக்கும் வாங்க முடியலை, பயம் காட்டி ஓடவும் விட முடியலை. சோ, அவன் பர்சனலை டார்கெட் பண்ணுவாங்க”

“யார் அந்த பாண்டி க்ரூப்? எந்த எஸ்டேட்?”

“மார்த்தாண்டம் எஸ்டேட் வாங்கிட்டு வந்தாங்க, பூர்வீகம் ஆந்திரா பக்கம். பக்கத்தில இருக்க சின்ன சின்ன எஸ்டேட் வாங்கி இப்ப ஒரு நூறு ஏக்கர் கிட்ட வெச்சிருக்காங்க. கொஞ்சம் கஞ்சாவும் சேர்த்து விளையறதா கேள்வி”, தோளை குலுக்கி சொல்லவும், கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது.

செம்பருத்தி வந்து சாப்பாட்டு ட்ரேக்களை மேசையில் வைக்கும்போதுதான் சஹானாவை பார்த்து அடையாளம் கண்டு கொண்டாள். அவளது ஆச்சரியப் பார்வை சஹானா கருத்தில் பதியவில்லை. தாளி ஸ்டைலில் ஒரு முழு சாப்பாடு, சப்பாத்தியுடன் அவள் எதிரில் இருக்க, இரண்டு நாட்களாய் வெறும் காய்கறி, தயிர் சாத பொட்டலம் என்று இருந்தவளுக்கு எச்சில் ஊறியது.

செம்பருத்தியின் பார்வையைக் கண்டுகொண்ட சுதர்ஷன், இன்று கிச்சனில் இவர்கள்தான் அவல் என்று உணர்ந்தான். ஆனால் அதற்காக கவலைப்படவில்லை.

மிருதுவாய் இருந்த சப்பாத்தியை ஒரு விள்ளல் பிய்த்து, சன்னாவுடன் சேர்த்து சாப்பிட்டவள் கண்கள் மூடி ரசித்து உண்டாள்.

‘இங்க நான் என்ன சொல்லிகிட்டு இருக்கேன், இவ அக்கறையே இல்லாம சாப்பிடறதலயே குறியா இருக்கா’, என்று முறைத்திருந்தான் சுதர்ஷன்.

அடுத்த விள்ளலுக்கு கண் திறந்தவள், அவன் முறைப்பைப் பார்த்து, “டயட்லையே இருந்துட்டு, இப்படி என்னிக்காவது ஒரு நாள் சாப்பிடும்போது, செம்ம ஃபீல், சாரி… நீ சொல்லு. சோ அந்த பாண்டி க்ரூப்புக்கு பயந்துட்டு, நான் வருண்கிட்ட பேசக்கூடாது, பார்க்கக் கூடாது அதான?”, அடுத்த விள்ளல் நாசூக்காக உண்டாள்.

“ஹ்ம்ம்… அவன் உனக்கு வேலை வாங்கி தரதுகூட பேச்சாகலாம். அதான் அந்த வேலையை நான் ரெக்கமண்ட் பண்ணி வாங்கி தர மாதிரி இருக்கட்டும்”, என்று கூறி முடித்து, அவன் தட்டில் கவனமானான்.

Advertisement