Advertisement

“சார்… நீங்க அந்த சர்வர் பொண்ணு பத்தி கேட்ட விவரம்..”, என்று வந்து நின்றார் சண்முகம்.

“சொல்லுங்க சண்முகம்”, என்று நடப்பிற்கு வந்தான் சுதர்ஷன்.

வீடு வரை வந்த ரேகாவிற்கு சஹானாவின் மேல் ஆத்திரம் பொங்கியது. சுதிர் ட்ரைவரை அனுப்பியவள், அடுத்த நிமிடம் சஹானாவின் வீடு நோக்கி காரெடுத்துச் சென்றாள். வருண் குருவிடமிருந்து தகவலைப் பெற்றான். சஹானா அவள் தோழி மூலமாக அதை அறிந்தாள். நேற்றிரவே தன் நண்பர்கள் குழுவிற்கு செய்தியை அனுப்பியிருந்தாள். அதில் ஒருத்தி தனக்கு தெரியும் என்றதும், இன்று காலையில் அழைத்து விஷயத்தை சேகரித்திருந்தாள்.

சஹானா வீட்டு வாயிலை அடைந்து கதவை தட்டினாள் ரேகா. ஓரிரு நிமிடங்களில் சஹானா கதவைத் திறந்தாள். கையில் ஒரு ஊட்டி காரெட்டின் மறு பாதி இருந்தது.

ரேகாவைப் பார்த்ததும், சஹானாவின் ஒரு புருவம் மேலேறியது. வாய் கடித்திருந்த காரெட் துண்டை மென்றுகொண்டிருந்தது. பார்வை ரேகாவை அளந்தது. அழுது சிவந்திருந்த கண்கள், இப்போது தன்னை நோக்கி கோவமும், வெறுப்புமாக இருப்பதைப் பார்த்த சஹானா ஒன்றுமே பேசவில்லை.

சஹானாவின் முகத்தில் எதுவும் கண்டறிய முடியாத எரிச்சலும் சேர, “என்ன சஹானா? எதுக்கு வந்திருக்கேன்னு கேட்க மாட்டியா?” என்றாள்.

“நீதான என்னை தேடி வந்த? நீதான் சொல்லணும்”, என்றாள் நிதானமாக, இன்னொரு துண்டு காரெட்டை கடித்தபடி.

“இப்படித்தான் வெளிய நிக்க வெச்சு பேசுவியா?”

“உள்ள கூப்பிடற அளவுக்கு நீ எதுவும் பேசப் போறியா?”, கேள்விக்கு கேள்வியே பதிலாக வந்தது சஹானாவிடம்.

“இத்தனை வருஷமாகியும் இன்னும் மரியாதை தெரியலை. ம்ப்ச்”, ரேகா சலிக்க,

“இதை சொல்லவா காரை எடுத்துட்டு வந்த? இது எனக்கே தெரியும்” என்றாள் சஹானா நக்கலாக.

“என் புருஷன் கிட்டயிருந்து விலகி நில்லுன்னு வார்ன் பண்ணிட்டு போக வந்தேன்” என்றாள் ரேகா அவளை முறைத்தபடி.

சஹானாவிற்கு ரேகா வருணை சந்தேகப்படுவது அறவே பிடிக்கவில்லை. “இல்லைன்னா என்ன பண்ணுவ?” என்று வம்பிற்கிழுத்தாள்.

“ரெகார்ட் நோட்டை கேட்டு அழுத ரேகா இல்லை நான். ஒரு வாட்டி நீயா ஊரை விட்டு போன, இந்த முறை நானா விரட்டி அடிப்பேன்” கனல் தெறித்தது ரேகாவின் வார்த்தைகளில்.

ஆனால் சஹானா சட்டையே செய்யாது, உதட்டை பிதுக்கினாள். “ஓ.. வருணை எங்கிட்டருந்து காப்பாத்த என்னை மிரட்டற. ஹ்ம்ம்.. அவனை என்ன செஞ்சிட்டு வந்த?  நாங்க கட்டிபிடிச்சிட்டு இருந்ததைப் பார்த்துட்டு அப்படி வேகமா போன?”

சஹானா மீண்டும் அந்தக் காட்சியை நினைவுபடுத்த மேலும் ஆத்திரம் பொங்கியது ரேகாவிற்கு, முகம் சிவந்து சூடானது.

“என் புருஷனை நான் என்ன செய்யறன்றது பத்தி உனக்கு அக்கறை வேணாம். இன்னொரு வாட்டி அவரோட நீ இருந்ததைப் பார்த்தேன், அன்னிக்குத்தான்  நீ இங்க இருக்கற கடைசி நாள். மைண்ட் இட்” என்றாள் கர்ஜனையாக.

சஹானாவின் முகம் இன்னும் அலட்சியத்தைப் பூசிக்கொண்டது. “வாய்க்கு வாய் என் புருஷன் என் புருஷன்ற? நான் வேணாம்னு விட்டுக்கொடுத்ததுதான் உன் வாழ்க்கை. நான் வேணும்னு நினைச்சா…” சிட்டிகை இட்டாள் வார்த்தைகளை முடிக்காமல்.

“நீ வேணாம்னு சொல்லி, உன்னால ஒரு வாட்டி வருண் சாகப்போனது போதும். மறுபடியும் அந்த நிலைக்கு விடமாட்டேன். எதுக்குடி திரும்ப வந்த? எல்லார் நிம்மதியும் கரைக்கவா?”, ரேகா ஆவேசமாக பேச, தன்னால் வருண் சாக இருந்தானா என்பதிலேயே திகைத்து நின்றாள். நொடி நேர திகைப்பு மறைந்து மீண்டும் முகத்தில் ஆணவம் மட்டுமே  நிறைந்தது, ரேகா பார்க்கவில்லை. குதிகால் உயர செருப்பில் உயிர் போகும் வலியென்றாலும் முகத்தில் வாடாது புன்சிரிப்போடு நின்று நடந்து என்ற மாடலிங் அனுபவம் தானாக இப்போதும் சஹானாவிற்குக் கைகொடுத்தது.

“அடுத்தவங்க வயித்தெறிச்சலை கொட்டிகிட்டதாலதான் இப்படி தோத்துப்போய் வந்திருக்க. ஆனாலும் திமிர் அடங்கலை. வருணை விட்டு குடுக்கமாட்டேன். அவர் மேல கொஞ்சமாவது உனக்கு பாசம் இருந்தா, அவர்கிட்டயிருந்து தள்ளி நில்லு” அதற்கு மேலும் அங்கிருக்க முடியாதவளாக விருட்டென்று திரும்பி நடந்தாள் ரேகா.

கடைசியாக ரேகா எய்த அம்பு ஆழத் தைத்து சஹானாவின் கண்களில் வலி ஏற்படுத்தியதைப் பார்த்திருந்தால் ரேகா சற்று ஆசுவாசமடைந்திருப்பாள். பார்க்காததனால் இன்னுமே கனன்று கொண்டிருந்தாள்.

ஹில்மாரி வீட்டில், மெல்ல அவர்கள் படுக்கையறைக் கதவு திறந்து வருண் எட்டிப் பார்த்தான். அவனை முறைத்தவள், “அதான் தனியா இருக்கணும்னு சொன்னேனே” என்றாள்.

“சாப்பிட கீழ வரலைன்னு தரணி சொன்னா. டாப்லெட் எடுக்கற. நேரத்துக்கு சாப்பிடணும் ரேக்ஸ்”, என்றதும்தான் கிட்டதட்ட இரண்டு மணி நேரமாக இந்த விஷயத்தைப் பற்றி புழுங்கிக்கொண்டிருக்கிறோம் என்றே உணர்ந்தாள்.

“அப்பா.. என்ன ஒரு அக்கறை?” நக்கல் வழிந்தது ரேகாவின் குரலில்.

ஒரு பெருமூச்சுடன், “ரேக்ஸ்… அவ வருத்தமா இருக்கவும், சும்மா ஒரு ஃப்ரெண்ட்லி ஹக் குடுத்தேன்மா. வேற எதுவும் இல்லை. நீ இவ்வளவு ஆத்திரப்படற அளவு ஒன்னுமே இல்லை. தப்பு பண்ணனும்னு நினைக்கறவன் ஏன் வாசல்ல நின்னு செய்யப் போறேன்? என் மேல நம்பிக்கை இல்லையா?” பாவமாகக் கேட்டான்.

“இதை என் பக்கமா திருப்பாத வருண். நேத்து என்ன சொன்ன? இன்னிக்கு காலையில் அவ வீட்டுவாசல்ல போய் நிக்கறதென்ன?”, பொறுமையை இழுத்துப்பிடித்து வைத்து கேட்டாள்.

“அது… அவ அண்ணன் குருவை கேட்டேன். காலையிலதான். அவன் சொல்லவும் மனசு கேட்காம போய் பார்த்தேன் ரேகா. அவ..” என்று சொல்லப்போனவனை,

“ஸ்டாப். உன் பழைய ஃப்ரெண்டு, காதலி. சரி மனசு கேட்காம போய் பார்க்க நினைக்கற. அதுக்கு அவ அண்ணனுக்கு எப்ப பேசின, அவ வீட்டுக்கு ஏழரைக்கெல்லாம் போய் நின்ன? அப்ப இராத்திரி நான் சண்டை போடாம இருந்திருந்தா அப்பவே அவ வீட்டுக்கு போயிருப்ப. அப்படித்தான?”, ரேகா சற்று மூச்சிரைக்க கேட்டாள்.

“ஸ்… ரேகா.  நீ இவ்வளவு அப்செட் ஆக ஒன்னுமே இல்லை’, மீண்டும் வருண் ஆரம்பிக்க,

“ம்ம்.. எங்கிட்ட ஒன்னுமே இல்லைன்னு சொல்லிட்டு அவளை கட்டிபிடிச்சிட்டு நிப்ப. அவ தெனாவட்ட எங்கிட்ட இது  நான்  விட்டுக்குடுத்த வாழ்க்கை, எனக்கு வேணும்னான்னு சிட்டிகை போட்டு காட்டறா. ஆனா நான் அப்செட் ஆகக்கூடாது. எப்படி வருண்?”

“என்ன..என்ன சிட்டிகை போட்டா? நீ எப்ப அவளை பார்த்த?”, வருண் திகைப்பாய் கேட்டான்.

“சுதிர் வீட்டுலர்ந்து கிளம்பி வந்து திரும்ப அவ வீட்டுக்கு போனேன்” என்று ஆரம்பிக்கவும் “அவ வீடு உனக்கெப்படி ரேகா தெரிஞ்சது?” என்றான் வருண் இடைமறித்து.

“ம்ம்… உனக்கு சொல்றதுக்கு ஒரு ஆள் இருக்க மாதிரிதான் எனக்கும் ஒரு ஆள் இருக்கு” முகத்தை திருப்பினாள்.

“திரும்ப எதுக்குமா அவகிட்ட சண்டைபோட போன?” என்றான் அடுத்து. யார் அந்த ஆள் என்று இப்போது கேட்டால் சொல்ல மாட்டாள் என்று தெரியும்.

“ஓ…அவகிட்ட நான் சண்டை போட போககூடாதோ? ஏன் போனா என்ன பண்ணுவ?” அவனிடம் சண்டைக்கு நிற்பவளைப் பார்த்து சிரிப்பு வந்தது வருணுக்கு.

“இல்ல ரேக்ஸ். அவகிட்ட நீ பேசினா, உன்னைத்தான் அப்செட் ஆக்குவா. ஒருத்தவங்களை எப்படி இரிட்டேட் பண்றதுங்கறது அவளுக்கு நல்லா தெரியும். அதனாலதான் சொன்னேன்”, வருண் சமாதானமாகப் பேசவும்,

“நீதான் என்னை டிஸ்ட்ராக்ட் செஞ்சு இரிட்டேட் செய்யற! என்ன ஒரு திமிரு இருந்தா, உன்னை சிட்டிகை போட்டு அவ பக்கம் வரவெப்பேன்னு சொல்லுவா. அதைக் கேட்டும் உனக்கு கோவம் வரலை, என்னைத்தான் சமாதானம் பண்ற. அப்ப, அவ சொல்றது உண்மையா? அவ கூப்பிட்டா நீ போயிடுவியா அவ கூட?”, மீண்டும் ஆற்றாமையால் ரேகாவிற்கு கண்ணீர் பொங்கியது.

இங்கே இந்த சண்டை நடந்துகொண்டிருக்க, மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டு எரிச்சலானாள் சஹானா. ஏற்கனவே பசி. சாப்பிட்ட இரண்டு காரெட்டும் ஆவியாக, மதியத்திற்கு ஒரு தயிர் சாதம் வாங்கிசாப்பிடலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க, “புருஷனும் பொண்டாட்டியும் சும்மா இருக்கமாட்டாங்களா?” என்று முனகியபடியே வந்து திறந்தவள் பார்த்தது சுதர்ஷனை.

ஒரு நொடி ஆச்சரியம் முகத்தில் வந்து போக, “அடடா… ஊட்டில யாருக்கும் வேற வேலையே இல்லையா? எல்லாருக்கும் என்னை பார்த்து பேசி அவலை மெல்லணும்தான் தோணுமா?”, என்றாள் சற்று நக்கலாய்.

ஏற்கனவே இறுக்கமாய் இருந்தவன் முகம் மேலும் இறுகியது.

Advertisement