Advertisement

அத்தியாயம் – 9

வருண் டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்து இரண்டு நாட்களாகியிருந்தன. கஹுத்தில் காலரைப் போடுக்கொண்டு வீட்டிலிருந்தபடியே வேலை செய்து கொண்டிருந்தான். சற்றே பயந்து போயிருந்த அவனை ஆதரிக்கும் சிறிய எஸ்டேட் முதலாளிகளுடன் பேசி இது எதேர்சையாக நடந்து விபத்து.  பாண்டி ப்ரதர்ஸ் தாங்களால் என்று சும்மா கிளப்பிவிட்டு பயப்படுத்துகிறார்கள் என்று நம்பிக்கையாகப் பேசினான்.

ஆனாலும் ஆதரவில் சற்று சரிவு என்பது போலத்தான் பட்டது. சுதர்ஷன் வந்திருக்க, இது பற்றித்தான் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.

“சஹானா கூட சொன்னாடா. அவங்க பண்ணிருக்கலாம், இல்லைன்னாலும் இதை யூஸ் பண்ணிக்க வாய்ப்பு நிறைய இருக்குன்னு. அதேதான் நடக்குது. எதுக்கும் ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணுவோம் வருண். இந்த முறை இங்கேயே, நீயே குடு. உனக்கு ஒன்னும் இல்லை, நீ எதுக்கும் பயப்படலைன்னு எல்லாருக்கும் தெரியட்டும்”, சுதிர் கூறிக்கொண்டு இருக்க,

“சஹானா உங்ககிட்ட எப்ப சொன்னா சுதிர்?”, என்று பாயிண்ட்டை பிடித்தான். வந்த நாளாக ரேகா எப்போது பேசப்போகிறீர்கள் என்று ஒரு பக்கம் கேட்டுக்கொண்டிருக்க, அவனை பார்க்க வருவது போல நேற்று கமலமும் வந்து கேட்டுவிட்டு சென்றிருந்தார்.

“அது ஒரு இரண்டு நாள் முன்ன போன் பண்ணிருந்தா. அப்ப பேசிகிட்டு இருக்கும்போது சொன்னா. அப்பவே அரசல் புரசலா பேச்சு கிளம்பியிருந்தது.”, சுதிர் மீண்டும் வதந்தியைப் பற்றி பேச, அதை விடுத்த வருண்,

“ஓ…அடிக்கடி உங்ககிட்ட பேசறாளா சுதிர் ? அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல பார்த்ததோட சரி. வீட்டுக்கு வந்த அப்பறமும் கூட எங்கிட்ட பேசவே இல்லை”, என்று குறை கூறினான்.

“டேய்…பேச ஆரம்பிச்சு, அடுத்து பார்க்க ஆரம்பிச்சா, திரும்பவும் நீ சமாதானம் பண்றேன், ஆறுதல் சொன்னேன்னு கட்டி பிடிப்ப, ரேகா டென்ஷனாவா. இப்பதான் கொஞ்சம் அமைதியா இருக்காங்கல்ல மாமியாரும் மருமகளும். அப்படியே விடுடா”, சுதர்ஷன் சொன்னதும்,

“ஆமாம், இப்படியே எதாவது சொல்லுங்க. அவளுக்கு ஒரு கல்யாணம்னு ஆனாத்தான் திரும்ப என் கூட பேச எல்லாரும் விடுவீங்கன்னு நினைக்கறேன்!”, என்று வருண் முகத்தை சுளிக்கவும் சுதர்ஷன் சிரித்தான்.

“நல்ல யோசனை டா. அவளை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லு.”, என்று ஆமோதித்தான்.

“ஏன் சுதிர், பேசாம நீங்க அவளை கல்யாணம் செய்துக்கோங்களேன்? பாட்டியும் எத்தனை மாசமா கேட்டுகிட்டு இருக்காங்க”, வருண் சொல்லவும், கையை உயர்த்தி நிறுத்தும்படி சைகை செய்த சுதர்ஷன்,

“இரு இரு. எங்க இருந்து எங்கடா தாவற? சஹானாவை கல்யாணம் பண்ணிக்க சொல்லுறியா அது சரி. அதுக்கு நான் ஏன் அவளை பண்ணிக்கணும்? வேற ஆளே கிடைக்கலையா உனக்கு?”, என்று படபடத்தான்.

“இல்லை சுதிர். வேற யாரோன்னா என்னோட பேச அனுமதிப்பானோ என்னவோ, ரேகா மாதிரி புரியாத யாரோ விட, நீங்கன்னா எல்லாருக்கும் பெட்டர்தானே?”, வருண் ஆர்வமாய்ப் பார்க்க,

“ஆங்… ஆக நீயும் சஹானாவும் உங்க அமர நட்பை தொடர, இங்க நான் தக்காளி தொக்கா? நல்லாருக்குடா உங்க நியாயம்?”, சுதர்ஷன் கலாய்த்தான். அதன் பின் தான் சொன்னதை உணர்ந்த வருண் தலையில் தட்டிக்கொண்டு “அப்படி இல்லை சுதிர்”, என்று சிரித்தவன், சற்று யோசனையாக, “சுதிர் ஒரு வேளை நீங்களும் ரேகா மாதிரி நாங்க ஸ்கூல் டைம்ல காதலிச்சோம்னு நினைக்கறீங்களா?”, என்று சற்று இறுக்கமாகக் கேட்டான்.

“ஓஹ்… அப்ப நீங்க காதலிக்கலையா? உங்க அம்மா, பொண்டாட்டி எல்லாருமே அப்படித்தானடா சொன்னாங்க? நீங்களும் அப்ப எல்லா நேரமும் ஒன்னாத்தான் சுத்துவீங்க?”, சுதிர் கேட்கவும், இல்லை என்பதாக தலையசைத்தான் வருண்.

“சுதிர். சின்ன வயசுலர்ந்து இரண்டு பேரும் ஒன்னாதான் சுத்துவோம். எங்களுக்குள்ள சீக்ரெட்டுன்னு ஒன்னும் இருந்ததில்லை. மே பீ, அவ இங்கேயே இருந்திருந்தா கண்டிப்பா அவளைத்தான் கல்யாணம் பண்ணக் கேட்டிருப்பேன்.  நேச்சுரலா நடந்திருக்கலாம்”, தோளைக் குலுக்கினான். இதைக் கேட்டுக்கொண்டே வந்த ரேகாவும்,

“ஆமாமாம். இங்கேயே இருந்திருந்தா வேற எந்த பொண்ணையும் கிட்ட விட்டிருக்கமாட்டா உங்க பெஸ்டிஸ்டி”, என்று நொடித்தாள். கையில் இருந்த ட்ரேயை சுதிரிடம் நீட்ட அவன் தேனீரை எடுத்துக்கொண்டான். அடுத்து பழச்சாறு கோப்பையை எடுத்து கணவனிடம் கொடுத்தாள் ரேகா.

“ஹே… நிஜத்தை சொன்னேன்.  நீ சொல்றதும் வாஸ்தவம்தான். அவ கொஞ்சம் பொசசிவ் டைப்தான்”, என்று வருண் சொல்லவும்,

“அவ்வா”, என்று வாயில் அடித்துக்கொண்டாள் ரேகா. “கேளுங்க சுதிர், கொஞ்சம் பொசசிவ்வாம். ஸ்கூல் டைம்ல இந்த அழகு சுத்தரத்தை நான் பார்த்தேன். ஒன்னு இரண்டு டைம் பேசினேன், இவரும் பதில் சொன்னார். அவ்வளவுதான், அதுலர்ந்து என்னமா என் மேல வன்மத்தைக் கக்கினா தெரியுமா? “, கண்களை உருட்டியபடி புகார் படித்தாள் ரேகா.

ஒன்றும் சொல்ல முடியாது அசட்டு சிரிப்பொன்றை வருண் சிந்த, “ஓ… அப்பவே வருண் மேல ஒரு கண்ணுதானா உனக்கு? “, என்று கலாய்த்தான் சுதர்ஷன்.

“ம்க்கும், இப்படி ஒரு வில்லிக்கு அடிமை ராஜாவா இருப்பாருன்னு அப்ப என் புத்திக்கு உரைக்கலை. நல்லாவே புரிய வெச்சுட்டா அவர் பெஸ்ட்டி..ஆமா, லவ் இல்லைன்னா அப்பறம் கெமிஸ்ட்ரி லேப் பின்னாடி கட்டிபிடிச்சிட்டு இருந்ததெல்லாம் என்னாவாம்?”, ரேகா நோண்டினாள். இதுவரை அவர்கள் சஹானாவைப் பற்றிப் பேசிக்கொண்டதில்லை. ஓரிரண்டு முறை பேச்சு வாக்கில் ரேகா எதுவும் சொன்னாலும், வருண் அந்தப் பேச்சை தவிர்த்திடுவான். பிடிக்காத , அவர்கள் வாழ்க்கையில் இல்லாத ஒரு பெண்ணைப் பற்றி இப்போது ஏன் பேசுவானேன் என்று ரேகாவும் கேட்டுக்கொண்டதில்லை. இப்போது சந்தர்ப்பம் அமைய, ரேகா விடுவதாக இல்லை.

அவளை முறைத்தான் வருண். “லிசன், உனக்கு எப்படி தோணுச்சோ தெரியாது. குரு கல்யாணம் முடிஞ்சு, அவ அண்ணிக்கும்  அவளுக்கும் தேவை இல்லாம முட்டிக்கவும் அப்செட்டா இருந்தா. குருவும் கண்டுக்கலை, அவ அப்பாவும் கேட்டுக்கலை. அங்க ஹர்ட் ஆகாத மாதிரி திமிரா பேசிட்டு வந்துடுவா, ஆனா எங்கிட்டத்தான் கஷ்டப்படுவா. அம்மான்னு ஒருத்தர் இருந்திருந்தா, கண்டவல்லாம் என்னை வந்து சீண்டுவாளா வருண். நான் தள்ளிப் போனாலும் கூட தேடி வந்து எரிச்சலாக்கறா. நான் சூடா திருப்பி குடுத்துட்டா, ஓன்னு ஒப்பாரி வெச்சு குருவை ஏத்தி விடறான்னு கஷ்டப்படும்போது, என்ன ஆறுதல் நான் சொல்ல முடியும்? நீ தனியா இல்லை. நான் இருக்கேன்னு ஒரு ஹக். அவ்வளவுதான்”, வருண் விவரிக்க, சுதர்ஷனும், ரேகாவுமே ‘அடக் கடவுளே!’ என்றுதான் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“அதனாலதான் மும்பைக்கு ஓடிப்போயிட்டாளா?”, சுதிர் சற்று பக்குவமாகக் கேட்க நினைத்ததை பட்டென்று கேட்டாள் ரேகா.

“ம்ப்ச்… ரேகா! “, என்று அதிருப்தியைக் காட்டிய வருண், “அவ எல்லாரையும் விட்டு தூரமா போகணும்னு நினைச்சதுக்கு அவ குடும்பமும் ஒரு காரணம். ப்ளஸ் அவளுக்கு மாடலிங்ல இன்ட்ரெஸ்ட் இருந்தது. என்ன அதுக்கான கோர்ஸ் எதுவும் படிச்சு முறையா போயிருப்பா, இவங்க பண்ணதுல டக்குனு கிளம்பிட்டா”, வருத்தமாகப் பேசினான் வருண்.

“உங்கிட்டக் கூட சொல்லிட்டு போகலையா வருண்?”, சுதிர் கேட்கவும், இல்லை என்று தலையசைத்தான். “எங்கிட்ட சொல்லியிருந்தா அப்படி தனியா போக விட்டுருக்க மாட்டேன் சுதிர். தடுத்திருப்பேன், இல்லை நானும் கூட போயிருப்பேன். கூட, நான் வேண்டாம்னு சொல்லி, என்னை மீறிப் போகவும் அவ இஷட்டப்படமாட்டா”, வருண் சொல்லிக்கொண்டிருக்க,

“நல்ல வேளை சொல்லாம போயிட்டா. நீங்களும் அவ கூட சேர்ந்து போயிருந்தா, ஊரே நீங்க இரண்டு பேரும் ஓடிப்போயிடீங்கன்னு உங்களையும் சேர்த்து அசிங்கப் படுத்தியிருப்பாங்க”, என்று ரேகா சொல்லவும், வருண் கண்களை உருட்டினான்.

“டேய்…. அவ கவலை அவளுக்கு, விடுடா! எங்கேயோ ஆரம்பிச்சு பேச்சு எங்கேயோ போயிடுச்சு. ”

“எங்க ஆரம்பிச்சுது?”,ரேகா சுதிரைக் கேட்டாள்.

“ம்ம்… சஹானா இவனோட ஃப்ரீயா பேச பழக இருக்கணும்னு நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கணுமாம். சார் ஐடியா சொல்றார்”, என்று சுதர்ஷன் சொல்லவும்,

“ஐய்ய…இப்படியா சொதப்புவ”, என்று தன் கணவனை அற்பமாகப் பார்த்தாள் ரேகா.

“அவர் சொன்னது மொக்கை காரணமா இருந்தாலும், ஐடியாவை நீங்க கன்சிடர் பண்ணலாமே சுதிர். வாழ்க்கையை சுவாரசியமா வெச்சிருப்பா சஹானா”, என்று சமாளித்தாள்.

“வேணாம்மா. இப்ப எனக்கு இருக்க சுவாரசியமே போதும். அட எதுவும் இல்லாம டல்லா இருந்தாக்கூட சந்தோஷம்தான். எல்லா பரபரப்பும் அவளோடவே இருக்கட்டும். என்னை கோர்த்துவிடாதீங்க!”, என்றவன் கிளம்புவதாகக் கூறிவிட்டு, மீண்டும் பார்ட்டி வைப்பதைப் பற்றி யோசிக்குமாறு வருணிடம் சொல்லிவிட்டுச் சென்றான்.

தீவிரமாக கணிப்பொறியில் ஆழ்ந்திருந்தவனின் கைப்பேசி அழைத்தது. அதில் கவனம் கலைந்தவன், யாரென்று பார்க்க அதில் சஹானா பெயர் ஒளிர்ந்தது. புருவம் சுருக்கியவன் மணியைப் பார்க்க, அது மாலை ஏழு என்றது.

“ஹலோ…என்ன சஹானா இந்த நேரத்துல?”

“ஒரு முக்கியமான விஷயம். அந்த ராஜவேல் அவன் பேர்லயே ஒரு ரூம் புக் பண்ணிருக்கான். அதே க்ரெடிட் கார்ட்.” , என்று சஹானா சொல்லவும்,

“ஷ்… மெதுவா. எங்கிருந்து பேசற? பக்கத்துல யாரும் இருக்காங்களா?”, அவசரமாக இடைமறித்தான்.

“ம்ப்ச்… அதுகூடவா தெரியாம இருப்பேன். டூட்டி முடிஞ்சு ரூமுக்கு வந்துட்டேன். அப்பறம்தான் கூப்பிடறேன். இந்த விஷயம் நான் இரண்டு மணி நேரம் முன்னாடியே பார்த்துட்டேன்”, என்றாள் ரோஷமாக.

“ஓஹ்… குட். சரி. என்னிக்கு புக் ஆகியிருக்கு , எத்தனை நாள்?”, சுதிர் விசாரிக்க,

“ஒரு நைட் தான். கெஸ்ட் நாளைக்கு செக்-இன் பண்ணணும்.” என்றாள்.

“யாருன்னு நான் பார்க்கணுமே? இதுக்கு முன்னாடி அவன் பேர்ல ரூம் போட்டிருக்கானா?”

“உடனே பார்த்தா அது வேற எதாவது ட்ராக்  ஆகுமோன்னு யோசனை. நாளைக்கு காலையில எனக்குத்தான் கெஸ்ட் செக்-இன் டூட்டி. அந்த மனுஷன் வரட்டும் பேசிப் பார்க்கறேன்.  ரெக்கார்ட்ஸ் அது பேஸ் பண்ணி செக் பண்றேன். யாரும் கேட்டாலும், கெஸ்ட் ப்ரெஃபரென்ஸ் பார்க்கறதுக்காகன்னு சொல்லிக்கலாம். வாய்ப்பு கிடைச்சா ஒரு ஃபோட்டொ எடுக்கறேன்”, அவள் திட்டங்களை கூற, அவள் வேகம் கண்டு ஆச்சரியம் கொண்டான் சுதர்ஷன்.

“இந்த மாதிரி வேவு பார்க்கறதுல முன் அனுபவம் எதுவும் இருக்கா உனக்கு? இவ்வளவு யோசிக்கற?”, சுதர்ஷன் விளையாட்டாகத்தான் கேட்டான், ஆனால் அந்தப் பக்கம் சில நொடிகளுக்கு மௌனம், பின், “திரும்பவும் சொல்றேன். வருணுக்காக எதுவும் செய்வேன். முடிஞ்சா ஹெல்ப் பண்ணு. இல்லை நானே பார்த்துக்கறேன்”, என்றாள்  இறுக்கமான குரலில்.

“ஹே.. நீ பாட்டு யோசிக்காம சிக்கல்ல மாட்டிக்காத. ஏற்கனவே வருண் பயப்படறான்.  நீ உன்னை பார்த்துக்கோ முதல்ல. சந்தேகம் வர மாதிரி எதுவும் செய்யாதே. போட்டோ இல்லைன்னாலும் பரவாயில்லை. மறு நாள் அவன் செக்-அவுட் பண்ற டைம் சொல்லு, நான் அங்க ரெஸ்டாரென்ட் வரேன். அவன் லன்ச்  இல்லை டின்னர் எதுவும் புக் பண்ணா எனக்கும் புக் பண்ணிட்டு சொல்லு, நான் வரேன். யாரை பார்க்கறான்னு தெரிஞ்சாக் கூட போதும்”, சுதிர் பேசப் பேச சற்று தெளிந்தவள், “சரி… நாளைக்கு நான் வாட்சப் பண்றேன்”

“ம்ம்.. மெசேஜ் விலாவரியா எதுவும் டைப் பண்ணாதே. கவனம்”, என்று எச்சரித்து வைத்தான்.

மறு நாள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் பளிச்சென்று அவள் பணியில் இருந்தாள். அவள் எதிர்பார்த்த விருந்தினன் தவிர்த்து மற்றவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். மதியம் பன்னிரெண்டு மணி வாக்கில் உள்ளே வந்தான் ஒருவன். நாற்பதுகளில் இருந்தான். பான் கறையேறிய பற்களும், பழுப்பு நிற கண்களும், செம்பட்டை முடியும் அக்மார்க் வடக்கத்திக்காரன் என்று சொல்லியது.

இந்தியில் வரவேற்று புக்கிங் செய்ததற்கான அத்தாட்சியை சஹானா கேட்க, , “நீயும் மும்பையா? அழகா இந்தி பேசற?” என்றான் ஒரு தாளை அவளிடம் தந்து. இராஜவேல் பெயரில் இருந்தது. ஆனால் அதைத் தந்தவன் கண்டிப்பாக இராஜவேலாக இருக்க வாய்ப்பில்லை. எதையும் முகத்தில் காட்டாமல்,

“ஆமாம் மும்பைதான்” என்றாள் சஹானா புன்னகையுடன். அப்படியாவது இன்னும் கொஞ்சம் பேசுவான் என்று எதிர்பார்த்தது போலவே, உடனே ஈ என்று இளித்தான்.

“ஓஹ்? எந்த இடம்?”, என்று விசாரிக்க, ஒரு இடத்தை சொல்லி, “ஆப்கா ஆதார் கார்ட் மிஸ்டர் இராஜவேல்” என்றாள் எதுவும் தெரியாததுபோல்.

“ஹஹா..என்னைப் பார்த்தா இராஜவேல் மாதிரியா தெரியுது? நீ புதுசு, அதான் தெரியலை. கால் மீ பங்கஜ் ஸ்வீட்டி. ஆதார் எல்லாம் அப்பறமா இராஜவேல் வந்து தருவான். ரூம் அலாட் பண்ணு. டேனி இல்லையா? அவனுக்கு தெரியுமே ப்ரொசீசர்?”, என்றான் உப தகவலாக.

“ஓஹ்…. ஓகே சர். இராஜவேல் எப்ப வந்து ப்ரூஃப் தருவார்? “

“போன் பண்ணுவான். நீ ரூம் கீ தா. மிச்சம் டேனியை கூப்பிட்டு சொல்லு. அவன் பார்த்துக்குவான்”, என்று நீண்ட பழக்கம் போல கையை  காற்றில் அபினயம் பிடித்தான்.

சரி என்பதாகக் கூறியவள், ரூம் அலாட் செய்யப் பார்க்க, அதற்குள் அரக்கப் பரக்க ஓடி வந்தான் டேனி.

பங்கஜிடம் குழைந்தவன், அவளை நகர்த்திவிட்டு “உங்க யூசுவல் ரூம் சர்”, என்று பவ்வியமாக சொல்லி கீ கார்ட்டை தந்தான்.

Advertisement