Advertisement

அத்தியாயம் – 2

கிளம்பி சென்றபோது இருந்த குதூகலம் முற்றும் தொலைந்து, கனத்த மௌனம் சூழ்ந்திருந்தது வருண் ரேகா வந்து கொண்டிருந்த உயர் ரக பென்ஸ் காரில். ஓட்டுனரை தவிர்த்து இருவர் மட்டுமே சீண்டிக்கொண்டு வந்த தருணங்கள் கனவு போல இருந்தது ரேகாவிற்கு. இரவு அவன் செய்யப் போவதாக சூளுரைத்ததெல்லாம் அவளைப் பார்த்து நகைப்பதைப் போல தோன்றியது.

கண்களில் அவளையும் மீறி கண்ணீர் பெருகி வழிய, அதைக் கண்ட வருண், “ரேகா… இப்ப எதுக்கு அழுகை? நீ அழற அளவுக்கு என்ன ஆயிடுச்சு?” என்று சினந்தான். காதில் கேட்காததுபோல அமர்ந்திருந்தாள் அவன் மனையாள்.

சுதர்ஷன் கூட இவர்கள் இருவரும் பார்ட்டியை முடித்து கிளம்புகையில் எதுவோ கூற வந்து பின் அமைதியாக விடை தந்திருந்தார். ஒரு வகையில் அது வருணுக்குமே நிம்மதியாக இருந்தது. சஹானாவை பார்த்ததே அதிர்ச்சி என்றால், அவளை அந்த வெயிட்டர் கோலத்தில், தாங்க முடியவில்லை.

ஹில்மாரியை விட சற்று சிறியது சஹானா குடும்பத்தின் மேஹா தேயிலை தோட்டம். சஹானாவின் தாய் மேஹவாணியின் பெயரை வைத்திருந்தார் அவள் தந்தை குருனாதன் என்று அவன் தாய் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறான். இப்போது தோட்டம் சஹானாவின் அண்ணன் குருபிரசாத்தின் வசம் இருப்பது தெரியும். ஆனால் அவன் நின்று பார்க்காமல் குத்தகைக்கு விட்டிருக்கிறான். தேயிலை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் போட்டியில் தேர்வு பெற வருண் நிற்க, அனேக தோட்ட உரிமையாளர்களைத் தெரியும். இன்று சுதர்ஷன் வைத்த பார்ட்டி கூட அவர் ஆதரவைக் காட்டவும், மற்ற பெரிய உற்பத்தியாளர்களை சந்தித்து, வருண் ஆதரவு திரட்டவும் ஏதுவாக இருக்கத்தான். சஹானா தந்த அதிர்ச்சியில் முழு மனதாகக்கூட வருணால் அதை செய்யமுடியவில்லை.

அவள் அண்ணனிடம் செல்லாமல் ஏன் இங்கே, இப்படி என்பதே அவனைக் குடைந்துகொண்டிருந்தது. யாருடன் எங்கே தங்கியிருக்கிறாள்? யாரைக் கேட்பது என்று சென்று கொண்டிருந்தது அவன் யோசனை.  போர்ட்டிகோவில் கார் நின்றதும்தான், அனிச்சையாக ஓட்டிக்கொண்டு வந்ததை உணர்ந்தான் வருண். நல்ல வேளையாக எதுவும் ஆகவில்லை.

தலையை உலுக்கி திரும்பிப் பார்க்க, ரேகா காரை விட்டு இறங்கி உள்ளே செல்வது தெரிந்தது. ஒரு பெருமூச்சுடன், காரை லாக் செய்து உள்ளே நுழைந்தான்.

உள்ளே நுழைந்தவன் பார்த்தது ஹில்மாரி வைர மாலை தோடு என்று மனைவி கழட்டி அந்த பெட்டியில் நிறைப்பதை.  இவனைக் கண்டதும், எடுத்து வந்தவள்,

“இந்தாங்க, உங்க குடும்ப சொத்து. திருப்பி பத்திரமா குடுத்துட்டேன். வெச்சிருங்க” ரேகாவின் முறைப்பிற்கு சற்றும் குறையாமல் வருணும் முறைத்தான்.

“எங்க குடும்பமா? அப்ப நீ யாரு?”

“அதான் கல்யாணமாகி வந்த முதல் நாளிலேயே சொன்னாங்களே உங்கம்மா? எஸ்டேட் ஒனர் மக மருமகளா வருவான்னு நினைச்சேன், மாச சம்பளக்காரவங்க மகளைத்தான் கட்டுவேன்னு நிக்கறான். ஹில்மாரி மருமகங்கறது பெரிய அந்தஸ்து. தக்கபடி நடந்துக்கோன்னு அடவைஸ் மழை பொழிஞ்சாங்களே? நான் மாச சம்பளக்காரர் பொண்ணு. உங்க ஹில்ம்மமாரி நகையை ஆட்டையை போட்டுட போறேன்!” என்று ஹில்மாரியை கோபத்தில் நீட்டி முழக்கினாள் ரேகா.

அவள்  நீட்டிய  நகைப்பெட்டியை கையில் வாங்காமல் ட்ரெஸ்சிங் டேபிள் பக்கம் சென்றவன் தன் கை கஃப்ளிங்க்ஸை கழட்டினான். அதுவும் ரேகாவை கோவப்படுத்தியது. “அவ்வளவு அலட்சியம் ?”, என்று தகிப்புடன் சொன்னவள் நகைப்பெட்டியை படுக்கையில் வைத்து அதன் அருகிலேயே அமர்ந்தாள்.

இறுகியிருந்த வருணின் முகம் கண்டு இன்னும் கடுப்பாக, “அந்த சூனியக்காரி ஒழிஞ்சாளே…அப்படியே மொத்தமா ஒழிய வேண்டியதுதானே? எல்லார் குடியையும் கெடுக்கன்னே இங்க வந்து தொலைஞ்சிருக்கா!”, என்று பழித்ததுதான் தாமதம், அவள் தாடையை இறுகப்பற்றியிருந்தான் வருண்.

“ஸ்டாப் இட் ரேகா! “ என்று அடிக்குரலில் சீறியதும், கண்ணீர் பொலபொலவென மஸ்காராவைக் கரைத்துக்கொண்டு வழிந்தது அவள் கண்களில்.

வருணின் கைகளைத் தட்டி விட்டவள், “ஆமாம். அதான் உங்க ஆஸ்தான காதலி வந்துட்டாளே, இனி ரேகா யாரோதான்” என்றாள் கோபமாக.

“தேவையில்லாம பேசாதே ரேகா…” எச்சரித்தான் வருண்.

“யாரு? நான் தேவையில்லாம பேசறேன்? நீங்க செஞ்சது மட்டும் ரொம்ப நியாயமா?”

“என்னடி செஞ்சிட்டேன்? நீ வேணும்னுதான அந்த பப்டிசாட்டை உன் கால்கிட்ட போட்ட ? வஞ்சம் வெச்சுத்தான அவளை அதை க்ளீன் பண்ண சொன்ன? எனக்கு அது பிடிக்கலை. அதனால் என்ன குறைஞ்சுது இப்ப?”

“நான் வேணும்னுதான் செய்தேன். ஒத்துக்கறேன். அதை சுத்தம் பண்ண அவளுக்கு ஒரு நாலஞ்சு செகண்ட் ஆகியிருக்குமா? என் கால்கிட்ட குனிஞ்சு செஞ்சா அவளுக்கு என்ன குறைஞ்சுடும்? அவ பார்க்க வந்த வேலையில அதுவும் ஒன்னுதானே? அவ இல்லாம வேற யாராவதா இருந்தா இப்படித்தான் நீங்க பாஞ்சு வந்து க்ளீன் பண்ணிருப்பீங்களா?” மூக்கு விடைக்க எழுந்து நின்று பேசினாள் ரேகா.

நெற்றிப் பொட்டை அழுத்தி நிதானித்தவன், அவளை நிமிர்ந்து நோக்கி, “வேற யாராவதா இருந்தா, நீ சாரி கேட்டு அவங்க சுத்தம் செய்யட்டும்னு தள்ளி போயிருப்ப. இப்படி என் கால்ல விழுன்னு சட்டமா நின்னிருக்கமாட்ட”, அவன் பிடித்தமின்மையைக் காட்டியது குரலும் முகமும்.

உள்ளம் குமைந்தாள் ரேகா, “ஓ.. அன்னிக்கு அவ கால் ஷூவுக்கு என்னை முத்தம் தர வெச்சாளே, அதைப் பார்த்துகிட்டு இருந்த போது இதெல்லாம் தப்பா தெரியலை, இன்னிக்கு அவ என் கால் பக்கத்துல குனிஞ்சு இரண்டு செகண்ட் சுத்தம் பண்றதைக் காண உங்களுக்கு சகிக்கலை. அப்படித்தானே?” மூச்சிரைக்கக் கேட்டாள் அவன் மனையாள்.

ஐயோ என்றானது வருணுக்கு. “ரேகா… எப்பவோ ஸ்கூல்ல நடந்த விஷயம்.இத்தனை வருஷம் கழிச்சு…” என்றவனை இடைமறித்தவள்,

“இருக்கே.. பட்ட அவமானம் எத்தனை வருஷமனாலும் எப்படி மறக்கும்? அவ செஞ்ச அட்டூழியமும், அதை வேடிக்கைப்பார்த்த அல்லக் கைகளும் அப்படியே ஞாபகம் இருக்கே”, முகத்தில் அறைந்து கொண்டவளின் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

“ரேகா.. ரேக்ஸ்… ரிலாக்ஸ்” என்ன சமாதானப்படுத்தினாலும் அவள் சொன்ன அல்லக்கைகளில் அவனும் ஒருத்தனாகத்தான் இருந்தான். தான் எதுவும் பரிந்து பேசினால் சஹானா இன்னமும் ரேகாவை வைத்துச் செய்வாளே என்றுதான் அன்று அமைதியாக இருந்தது. ஆனாலும் அந்த நாள் மறக்க முடியாத வடுதான்.

அவளை அணைக்க, அவன் மார்பிலேயே அழுது கரைந்தாள் அவன் மனைவி. “ரேகா…ப்ளீஸ். நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு. சஹானாவைப் பார்த்தது ஷாக்தான். நீ அவளை அப்படி செஞ்சதும் உன் முகத்துல அந்த நொடி தெரிஞ்ச அந்த வன்மம், அது இன்னும் அதிர்ச்சி. என் மனைவி அந்த மாதிரி கீழ்த்தரமா நடந்துக்க என்னால விடமுடியலை. அதனாலத்தான்  அவளை செய்ய விடாம நானே செஞ்சேன். அந்த நேரம் எனக்கு வேற எந்த எண்ணமும் இல்லைமா. ப்ராமிஸ்”

மார்பிலிருந்து விலகியவள் அவன் கண்களை உற்று நோக்கினாள். அவள் பார்வையை சந்தித்து, “நிஜமாதான் சொல்றேன். நம்புடாம்மா” என்ற கணவனைப் பார்த்து மூக்கை உறிஞ்சியவள், “யோசிக்கறேன்”, என்று சொல்லி முகம் அலம்பச் சென்றாள்.

தீவிர சிந்தனையில் சுதர்ஷனும் அமர்ந்திருந்தான். ‘எங்கேயிருந்து திடீரென்று முளைத்தாள் இந்த வில்லி? எப்படி நான் இருக்கும் இடம் தெரிந்து இங்கே வந்தாள். சர்வராக வந்தது வேஷமா? பணக்கார வீட்டுப் பெண் என்ற ஹோதாவில்தானே சுற்றுவாள்?’

 நேரத்தைக்கூட பார்க்காமல் சண்முகத்தை அழைத்தான்.

“சார்… எதுவும் வேணுங்களா?”, சற்று அசதியாக வந்த குரலைக் கேட்டபின்தான் மணியைப் பார்த்தான்.

“ஓஹ்… சாரி மணியை பார்க்கலை சண்முகம். காலையில என்னை வந்து பார்த்துட்டு அப்பறம் தோட்டத்துக்கு போங்க”, என்றதோடு வைத்துவிட்டு உறங்கச் சென்றான்.

காலை அவன் காபியை பருகும் நேரமே வந்துவிட்டார் சண்முகம்.

“குட் மார்னிங் சார்”

பதில் முகமன் கூறியவன், “நேத்து கேட்டரிங் ஆளுங்களுக்கு எல்லாம் செட்டில் பண்ணிட்டீங்களா சண்முகம்?”

“அஹ்… நேத்து நைட்டே குடுத்து அனுப்பிட்டேனே சர். எதுவும் பிரச்சனையா?” கொஞ்சம் குழப்பமாகவே கேட்டார். இத்தனை நாட்களில் முதலாளி இப்படி விசாரித்ததில்லையே? ‘இப்படி பெரிசா பார்ட்டி கூட வெச்சதில்லையே?’ மனம் எடுத்துக்கொடுத்தது.

“இல்லை… சர்வ் பண்றதுக்கு மூணு பேர் வந்தாங்களே? அவங்களை யார் புக் பண்ணது?”

“ஓஹ்… தெரியலை சர். அந்த கேட்டரிங் ஆளை இன்னிக்கு பிடிச்சு திட்டணும்னுதான் நானும் இருக்கேன் சர். அந்த பொண்ணு வந்ததே லேட்டு, பார்ட்டி ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலேயே சொல்லாம கொள்ளாம போயிடுச்சு. அதுக்கு பேமென்ட் குடுக்கலை சார். அதுகிட்ட இருந்த வெள்ளிதட்டு முத்தண்ண வாங்கிட்டுதான் அனுப்பினார். ஆனா மிச்ச இரண்டு பசங்க ஈடு கட்டிட்டாங்க சர். குறையா தெரியலை” முதலாளி கேள்வி கேட்டதற்கான காரணம் தெரிந்துவிட்டதாக எண்ணி விலாவாரியாக சண்முகம் பேசினார்.

நெற்றி சுருங்க, “ம்ப்ச்…அதில்லை… யார் மூலமா அந்த பொண்ணு நேத்து இங்க வந்தான்னு விசாரிங்க. அவ போன், அட்ரெஸ் கலக்ட் பண்ணி எங்கிட்ட குடுங்க”, சுதர்ஷன் சொல்ல, கண்கள் விரிய திகைப்பாய் பார்த்திருந்தார் சண்முகம்.

“சார்… அது..வந்து.. நமக்கு எதுக்கு சார் அந்த விவரமெல்லாம்…”, என்று இழுக்கவும் அவரை புரியாமல் ஒரு நொடி பார்த்தவன், அவர் எண்ணம் தவறான பாதையில் சென்றதை உணர்ந்து உஷ்ணமானான்.

“சண்முகம்! என்னைப்பத்தி இப்படித்தான் நினைக்கறீங்களா? “, அவன் கடுமையைப்பார்த்து தலை குனிந்தவர்,

“மன்னிச்சுக்கங்க சர்… இதுவரை இல்லாம திடீர்னு பொண்ணு பத்தியும் விசாரிக்கவும்…தப்புதாங்க ஐயா”, தலை குனிந்தார்.

“அந்த பொண்ணு பேரு சஹானா. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி தெரியும். பணக்கார வீட்டு பொண்ணு. பல வருஷமா வடக்க இருந்ததா கேள்விப்பட்டேன். திடீர்னு இங்க, அதுவும் சர்வர் வேலைக்கு ஏன் வரணும் ? அதனாலதான் விசாரிக்க சொன்னேன். நீங்க எதுவும் காட்டிக்காம சீக்கிரம் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணுங்க”, சற்று விவரித்து சொல்லிவிட்டு நடந்துவிட்டான்.

“ச்சேய்… இவ பத்தி பேசனாக்கூட என்னைத்தான் சந்தேகப்படறாங்க!” முனகிக்கொண்டே அன்றைய அலுவல்களைப் பார்க்கக் கிளம்பினான்.

காலையில் எழுந்துவிட்ட வருணுக்கும் சஹானாவின் நினைப்பே. அருகில் களைத்துப் படுத்திருந்த மனைவியை எழுப்பிவிடாமல் மெல்ல எழுந்து கிளம்பி வந்தான். இரவு தூக்கத்தில் கூட ரேகா விசும்பியது பாவமாக இருந்தது. அணைத்து ஆறுதல் படுத்த மீண்டும் தூங்கிவிட்டாள்.

Advertisement