Advertisement

அங்கு சென்று சேர்ந்த அடுத்த நாள் அதிகாலையில்  இருந்து மருத்துவம் ஆரம்பித்தது.. முதல் நாள் மருத்துவம் முடிந்ததும். முத்தரனும் தமிழும் மதுரை புறப்பட்டுவிட்டார்கள். அறிவிற்கு உதவியாக ஜானை அங்கு விட்டுவிட்டார்கள்..

ராணியை இனி பார்க்கமுடியாதே என்ற கவலை அவனுக்கு.. ராணி மேல் காதல் தான் என உணர்ந்துகொண்டான்.

ஆனால் அதை தற்போது சொல்ல நினைக்கவில்லை நிலைமை சற்று சீராகட்டும் என காத்திருந்தான்..

அவளுடைய கைபேசி எண் இருந்தது. அழைப்போமா வேண்டாமா என ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருந்தான் ஜான்சன்..

சித்த மருத்துவர் ஒரு தைலம் கொடுத்து தினமும் இரண்டு வேலை பூசி மசாஜ் பண்ணச்சொன்னார்கள்.  நெற்றிப்பொட்டு , பிடரி , மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் மூன்று சொட்டு தைலம் விட்டு தினமும் தேய்த்தால் சீக்கிரம் விழித்தெழுவான் என்றார்..

அறிவு தீவிரமா யோசித்து அவளை ஆராய்ந்து அவளினுள் ஒழிந்திருந்த இசையின் மேலுள்ள காதலை கண்டுகொண்டாள்..

வெறுப்பிற்காகவும் அவனையே நினைத்து தான் அவளின் நாட்கள்  நகர்ந்தது..

மீனாட்சியின் கட்டாயத்தில் காதலிப்பதாக நடித்து. ஆனால் ஏதோ ஒரு வகையில் அன்பு செலுத்தி மனிதநேயத்துடன்

அவனை நன்கு கவனித்துக்கொண்டாள்..

ஆனால் நடிப்பது போய்… அவளின் ஆழ் மனதில் இருந்த காதல் உயிர்பெற்று அவளையும் மீறி இசையிடம் வெளிப்பட்டது..  அதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.. அதன்பின் அவளே அவளின் வாழ்வை ஆராய்ந்து இனி அவளின் வாழ்வு இசையுடன் தான் என முடிவெடுத்து காதலை நன்கு வெளிப்படுத்தினாள் அறிவுமணி..

இங்கு லாவகமாக மென்மையாக தைலம் தேய்த்துவிடுவாள். அவனை நன்றாக கவனித்துக்கொள்வாள்..

காலையில் எழுந்து அவளே அவனை குளிக்கவைத்து உடை உடுத்திவிட்டு தலைவாரி நெற்றியில் முத்தமிட்டு. அவனை கொஞ்சி மகிழ்வாள். அவனுடன் தினமும் ஆசையாக அன்பாக பேசுவாள். இயற்கை அழகை அவனிடம் காட்டி புரியவைக்க முயல்வாள்..

அவனிடம் எவ்வித பிரதிபலிப்பும் இல்லை என்றாளும் மனம் சோர்ந்துபோகாமல் அவளின் முயற்சியை தொடர்வாள்..

இடையில் தமிழ் மலர் தாமரை குழந்தையுடன் அங்கு வந்து அவர்களுடன் மூன்று நாள் இருந்துவிட்டு சென்றார்..

தாமரைக்கு மனம் நிறைந்து போனது. அவரது மகன் சீக்கிரம் குணமாகிவிடுவான் என அந்த தாய் மனநிறைவோடு நினைத்து அறிவை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு ஆசிர்வதித்துவிட்டு சென்றார் தாமரை..

இசைவேந்தன் தேடிய அவனது உண்மை காதல் கிடைத்ததும். அவனது இளமை பருவம் கட்டுக்கோப்பான உடல் முறையான மருத்துவ சிகிச்சை என அளிக்கப்பட்டதால். அங்கு வந்த ஆறுமாதத்தில் அவனிடம் அதிக மாற்றம் தெரிந்தது.

குணமாகிவிடவேண்டு என்ற அவனது போராட்டம் அவனை எட்டாவது  மாதத்தில் நன்கு குணப்படுத்தியது..

இது யாருக்கும் தெரியாது.. இறுதி மருத்தவ நாள் அன்று சிகிச்சை முடிந்ததும். வீல்சேரில் வைத்து தள்ளிக்கொண்டு அவர்களுக்கென ஒதுக்கியிருந்த குடிலுக்கு சென்றாள் அறிவு..

அறிவு குளித்துவிட்டு வந்து காஃபி குடித்துக்கொண்டிருந்தாள்..

இசை அவளையே பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். அவனால் அவனை கட்டுபடுத்த முடியவில்லை. ஆனாலும் அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக காத்திருந்தான். குழந்தை பிறந்தது அவனுக்கு தெரியாது..

அன்று இரவு இசையை ஜான் படுக்கையில் படுக்கவைத்துவிட்டு அவனின் குடிலுக்கு சென்றுவிட்டான்..

அறிவும் அவனின் அருகில் படுத்துக்கொண்டாள்.. படுத்தவள் அவனின் தலையை கலைப்பதும் மீசையை பிடித்து இழுப்பதும் கன்னத்தை கிள்ளுவதும்.. நெற்றியில் முத்தமிடுவதும்.. அவனை ரசிப்பது. என காதல் வந்தபின் அவளின் அனைத்து சேட்களையும் இன்றும் செய்தாள்.

செய்துவிட்டு ” என்னையே மாத்திட்டியேடா கள்ளனே! என் காதலை ஆயுசு முழுக்க உன்கிட்ட கொட்டணும். இப்ப நான் அறிவுமணி இசைவேந்தன். மனசளவில அப்டினு கத்தணும். சீக்கிரம் எழுந்து வாடா! பிலீஸ்..” என இசையின் மூக்கை பிடித்து ஆட்டியபடியே கண்ணீர் விட்டாள்..

” நான் யார் தெரியுமா?  உன் அத்தை ஜானிகியோட சொந்த பொண்ணாம்.. உன்னோட முறை பொண்ணுடா மண்டு..  உனக்காக காத்திருக்கிறேன்..” என்று வழமை போன்று இசையுடன் பேசியபடியே அவனை அணைத்துக்கொண்டு உறங்கமுயன்றாள்..

உறக்கம் அவளை நெருங்குவேணா என சண்டித்தனம் பண்ணியது..

உறக்கம் வராமல் எழுந்து வெளியே சென்று வானை வெறித்தபடி நின்றாள் அறிவு..

இசை மெதுவாக எழுந்து கை காலை அசைத்து அறிவின் அருகில் சென்று பின்னிருந்து அவளை அணைத்து கழுத்தில் முத்தமிட்டான்..

அணைத்ததுமே யாரோ என்று பயந்து தள்ளி விட்டாள். ஆனால் அவனோ உடும்பு பிடியாக பிடித்திருந்தான்..

” நான் தான் டி தக்காளி உன் ஆசை புருசன் முறை மாமன் இசைவேந்தன்.” என்றான்.

அவளால் நம்பமுடியவில்லை. அவனும் பனியில் நிற்காமல் உள்ளே அழைத்துவந்து. அவளின் சந்தேகங்களை தீர்த்துவைத்தான்..

அவளையும் அவளின் காதலையும் தேடி சென்றவன் விபத்துக்குள்ளாகி. மீண்டும் அவளின் உண்மையான காதலால் உயிர் பெற்றான் இசைவேந்தன்.

அறிவை இறுக்கமாக அணைத்துக்கொண்டு உறங்கிவிட்டான்.. அவளும் நீண்ட நாட்களின் பின் நன்கு அவனின் அணைப்பில் தோள் சாய்ந்து உறங்கினாள் அறிவு..

அடுத்த நாள் காலை வழமையான நேரத்திற்கு ஜான் வந்தான். அவர்களின் குடில் கதவு திறக்கவில்லை. அறிவு எழுந்ததுக்கான எந்த அறிகுறியும் இல்லை. அறிவிற்கு உடல் நிலை சரி இல்லையோ என பதட்டமடைந்து அவளின் கைபேசிக்கு அழைத்தான்.

இரண்டு வருடமாக கோமாவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன் கைபேசி அழைத்த முதல் அழைப்பிலேயே அதை எடுத்தான். அதில் ஜான் ப்ரோ என பதிவு செய்யப்படிருந்தது. கைபேசியை அனைத்துவிட்டு எழுந்து முகம் கழுவி வெளியே வந்தான் இசைவேந்தன்..

ஜானின் அருகில் வந்து ” ஹாய் ஜான் ஹவ் ஆர் யூ மேன்..” என்றான்.

இசை ஹாய் சொன்னதுமே திரும்பியவன். இசையை பார்த்து சாக்காகி நின்றான்.

” சாக்கை குற சாக்கை குற நானே தான் இசைவேந்தன். குணமாகிட்டேன். மணி எழுந்ததும் காலை சாப்பாடு சாப்பிட்டு சாப்பிங்கும் போயிட்டு அப்டியே ஊருக்கு போயிடலாம். யாருக்கும் சொல்ல வேணாம்.” என்றான்.

உள்ளே சென்று அறிவை எழுப்பாமல் அவன் தவறவிட்ட தருணத்தை அனுபவித்தான். அவள் கால்களை மடக்கி தூங்கும் அழைகை ரசித்து பார்தபடி இருந்தான் இசை.

நேரம் காலை எட்டுமணி. அப்பொழுது தான் அறிவு அசைந்து தூக்கம் கலைந்து எழுந்தாள்.

” ஹாய் டி தக்காளி.. பிரஸ் குட் மார்னிங்.” என்றான் இசை.

அவளும் எழுந்து பெட்டில் இருந்துகொண்டு கொட்டாவி விட்டபடியே. ” ஹாய் கஞ்சூஸ். ம் மார்னிங் மார்னிங்.” என்றாள் சலித்தபடி.

” அடியேய் என்ன லந்தா? யாருடி கஞ்சூஸ். நானா? நீயா?. புருசன் இவ்வளவு காலம் கழித்து குணமாகி வந்திருக்கானே. முறைபடி நேத்து இரவே செக்கன்ட் முதலிரவு ஆரம்பிச்சிருக்கவேணாம். அதவிட்டு கும்பகர்ணணுக்கு தங்கச்சி மாதிரி இம்புட்டு நேரம் தூக்கி எழுந்துருக்கா தூங்குமூஞ்சி. நான் கஞ்சூஸாம். எல்லாம் கலிகாலம் டி..” என்று வார்த்தையால் அவளை சீண்டிவிட்டு. அவளை நெருங்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் எழுந்து குளியலறை சென்றான் சூடு கண்ட பூனை  இசைவேந்தன்.

சற்று நேரத்தில் இசை குளித்து இடுப்பில் ஒரு துண்டு கட்டி.  டவலால் தலையை துடைத்தபடியே வெற்று மார்பில் நீர்  துளி துளியாக காட்சி தர வெளியே வந்தான்.

கல்யாணம் பண்ணி முதலிரவு அவளின் விருப்பம் இல்லாமல் நடந்தது. அதன்பின் அவனை ஒரு நோயாளியாகத்தான் அறிவு பார்த்திருந்தாள்..

ஆடை மாற்றி விட்டிருக்கிறாள். அப்பொழுது அவனிடம் எவ்வித அசைவும் இல்லை. அதனால் இப்பொழுது ஆறடி ஆண்மகனாக திடகாத்திரமான உடலமைப்புடன் வந்து நின்றவனை பார்த்ததும் உடல் சிலிர்த்து அடங்கியது அவளுக்கு. வியர்வை  முத்துக்களாக முகத்தில் பூத்திருக்கவும்  ஓரக்கண்ணால் அவனை பார்த்தபடி எழுந்து குளியலறைக்குள் சென்று மறைந்தாள் அறிவுமணி..

பதட்டத்தில் மாற்று உடை எடுத்து செல்லாமல் சென்றுவிட்டாள். அதை பார்த்த இசை அவளது பெட்டியை திறந்து உடை எடுத்து கதவை தட்டி கொடுத்தான். அவளும் வாங்கிக்கொண்டு கதவை அடைத்துவிட்டாள்..

” டேய் பெரிய இவனா நீ?.. உடுப்பு எடுத்துக்குடுக்காட்டி அவளும் டவளை கட்டிக்கிட்டு வெளியே வந்துருப்பா. புடவை மாத்தணும் திரும்புங்க வெளிய போங்கணு சொல்லிருப்பா. அப்டியே ஒரு ரொமன்ஸ் சீனே ஓடியிருக்கும். இப்டி நல்லவனாட்டம் புடவையை எடுத்துகொடுத்து எல்லாத்தையும் கெடுத்துட்டியே.  இவரு நல்லவர்னு நிரூப்பிக்கிறார்.. எல்லாம் என் நேரம் டா சாமி. இவனுக்கு பல்பு எரியனும்னா நாம ஓவர் டைம் பண்ணணும் போலயே!.. ” என்று அவனது மனசாட்சி குத்தியது. அதை ஒரு தூசி போல் தட்டிவிட்டான் இசை.

” ஆரம்பத்தில்  ரொம்ப சொதப்பிட்டேன். இப்ப திருபவும் ஏதாவது சொதப்பி இருக்கிற நல்ல நிலைமையை நான் கெடுத்துக்க விரும்பல. இன்னும் கொஞ்சம் காலம் போகட்டும். அவளே முதல் அடியை எடுத்துவைக்கட்டும்..” என்று நினைத்துக்கொண்டு கைபேசியில் ஜானை அழைத்து பேசியபடியே கதவை லாக் பண்ணிவிட்டு வெளியே சென்றான் இசை..

அவன் அறிவிடம் மனசார மன்னிப்புகேட்டு அவளின் தற்போதைய மனநிலையை அறிந்து பேசலாம். என்று நினைக்காமல். மீண்டும் அவளே வரவேண்டும் என நினைக்கிறான் இசை..

அறிவு குளித்து வெளியே வந்து அங்கு இசை இல்லாததை பார்த்து சிரித்துவிட்டு. புடவையை நேர்த்தியாக கட்டி சாதாரண அலங்காரம் பண்ணி பொட்டுவைத்து கண்ணாடியில் அவளை பார்த்து திருப்தி பட்டுக்கொண்டு ” அழகுடி நீ.” அவளின் கன்னத்தை கிள்ளி கொஞ்சிவிட்டு சிரித்தமுகத்துடன் வெளியே வந்தாள்..

இசை தொழிலை பற்றி ஜானிடம் கேட்டுக்கொண்டிருந்தான். அவர்களின் பாதி பேச்சில் அறிவு இடைபுகுந்து.           ” தொழில் எங்கையும் ஓடிடாது. இன்னும் ஒரு மாதம் வீட்டுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு. டாக்டர் பெர்பெக்ட்லி ஆல்ரைட், அப்டினு டாக்டர் சொன்னதும். நீங்க எங்கவேணா போகலாம். என்னவேணா பண்ணலாம்.. இதை மீறினா பிச்சு பிச்சு..” என்றாள்.

சிரித்துக்கொண்டு ” சரிங்க டீச்சர் அம்மா. தங்களின் சித்தமே அடியேனின் பாக்கியம்..” என்றான் நக்கலுடன் சற்று குனிந்தபடி..

அதன் பின் அவர்கள் மூவரும் மருத்துவரிடம் சென்று இசை இனி எவ்வாறு இருக்கவேண்டும்.,உணவு முறை கட்டுப்பாடு. என அனைத்தையும் இசையை அருகில் வைத்தே கேட்டுக்கொண்டு. அவரின் ஆசியை பெற்றுக்கொண்டு அங்கிருந்து காரில் புறப்பட்டார்கள்.

டிரைவர் காரை எடுக்கவும் அவரின் அருகில் ஜான். பின் சீட்டில் அறிவும் இசையும். இருந்தார்கள். கார் அவ்விடம் விட்டு புறப்பட்டது..

 நேராக சைவ உணவகம் சென்று எளிதாக காலை உணவை முடித்துக்கொண்டு. இசைக்கு அதிக அலைச்சல் வைக்காமல் அவனை காரில் இருக்கவைத்துவிட்டு ஜானும் அறிவும் ஷாப்பிங் மால் உள்ளே சென்று. அனைவருக்கும் வேண்டிய பொருட்களை சீக்கிரமாக வாங்கி இருவரும் எடுத்துவந்தார்கள். டிக்கியில் வைத்துவிட்டு காரினுள் ஏறியதும்.  எங்கும் நிற்காமல் நேரே மதுரை நோக்கி சென்றது கார்..

கொடிமங்கலத்தில் மலர் தமிழை எதிர்பார்த்து லேகாவை தூங்கவைத்துவிட்டு காத்திருந்தாள்..

” அக்கா நீ போய் படுக்கா மாமா வந்தா நான் எழுப்புறேன். எனக்கு படிக்கணும். அதனால நான் இருக்கிறேன்..” என்றாள் நீலா..

” எனக்கு தூக்கம் வர நீலாமா. நீ போய் படி. காஃபி தரவா?.” என்றாள் வாஞ்சையாக.

” வேணாம் கா இப்பதானே சாப்பிட்டேன்.” என்றுவிட்டு உள்ளே சென்றாள் நீலா..

நேரம் இரவு பத்துமணி தமிழும் ராமுவும் பேசியபடியே வந்தார்கள்..

 வெளியே மலரை பார்த்தவன் ராமுவை உள்ளே அனுப்பிவிட்டு அவளின் அருகில் இருந்தான்.

” என்னடி கொடியழகி மாமன பார்க்காம தூக்கம் வரலயோ!..” என்றான் கள்ளச்சிரிப்புடன்..

” ம் ஆசை தான் மாமனாம் மாமன்.” என்றாள் முகத்தை திருப்பிகொண்டாள்..

” ஏய் என்னடி வழமையா நான் வரும்போது தூங்கியிருவ. நான்தான் வந்து எழுப்புவேன். இன்னைக்கு என்னடான்னா வாசல்ல காத்திருக்கிற. என்னன்னு கேட்டா சிலிர்த்துக்கிற..” என்றான் தமிழ்.

” நான் எப்ப சொன்னேன். இசை அண்ணாகிட்ட வேலை பண்ணுற ஜான் ராணியை அடிக்கொருதரம் பார்த்தார். அவளுக்கும் அவங்க வீட்டுல கல்யாணம் பேசுறாங்க. நானும் அவகிட்ட யாரையும் மனசுல நினைத்து வச்சிருக்கியான்னு கேட்டேன். இல்லனு சொல்லிட்டா!. இதோ இன்னைக்கு வந்து பார்த்துட்டு போன இடம் சரிவரும் போல. அவளுக்கும் இருபத்தி இரண்டு வயசாகுது. அவளோட ஒத்தவ நான் இரண்டு வயது பிள்ளைக்கு அம்மா ஆகிட்டேன்.. எனக்கு என்னவோ ஜான் ஸார் அவரோட விருப்பத்தை இன்னும் ராணிகிட்ட சொல்லல போல.. நீங்கதான் அவரோட பேசுறிங்க பழகுறிங்க கொஞ்சம் போன்லயாவது பேசி கேட்டு அவரு ஆமா சொன்னா.. நாம இங்க நடக்கிறதை கொஞ்சம் தள்ளிப்போடலாம்.. இன்னும் தாமதம் பண்ணினா எல்லாம் கை மீறி போயிடும் அப்புறம் நாம ஒண்ணும் பண்ணமுடியாது. நீங்க காலையில மொத வேலையா ஜான் சார்கிட்ட பேசி எனக்கு பதில் சொல்லுறிங்க..” என்றுவிட்டு எழுந்து உள்ளே சென்றாள் மலர்க்கொடி..

Advertisement