Advertisement

அத்தியாயம் 08.

மலரின் தங்கை கார்த்திகாவை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்த பெண்கள் சந்திராவின் காதில் விழும்படி மலரை அவதூறாக பேசிச்சென்றார்கள்.

” ஏன்டி உனக்கு ஒரு விசயம் தெரியுமா? நம்ம மலர் இருக்கிறாளே அவளுக்கு திடீர்னு கோவில்ல கல்யாணம் பண்ணி வச்சாங்க ஆனா அன்னைக்கே புருசன் வீட்டுல இருந்து இங்க வந்துட்டாளே இப்ப எப்டி கர்ப்பமா இருக்கிறாளோ தமிழும் இங்க வந்துபோனதை நாம பார்க்கல அப்போ எப்டி இது நடந்திருக்கும். இவளை மாதிரி அமைதியா இருக்கிறவங்களை நம்பவேக்கூடாது. பாருடி நேத்து தங்கை பெரியமனுசி ஆகிட்டா அதை எடுத்து பண்ணக்கூட வீட்டு பொண்ணு வீட்டுல இல்ல ஏதோ இரவு வேலையாம் வரமுடியலயாம் நம்ம வாணி மக ராணி சொன்னா. என்ன வேலையோ என்னவோ? யார் பார்த்தா பிள்ளை பிறந்ததும் யார் ஜாடைன்னு பார்த்தா தெரியப்போகுது இவ வேலைக்கு போற இலட்சணம். ” என்று மலரின் மனதை காயப்படுத்தி சென்றார்கள் கொடியமனம் படைத்த அரக்கிகள்.

அரசல் புரசலாக இந்த செய்தி தமிழின் காதிலும் விழுந்தது.

“அண்ணே நீங்க அண்ணியைவிட்டு தள்ளி இருக்கிறதால எப்டி வாய்க்குவந்தபடி பேசுறாளுக இதை இப்டியே விட்டா நம்ம அண்ணி நமக்கு இல்லாம போயிடுவாங்கண்ணே பாவம் அவங்க தவறா ஒரு சொல் தாங்கமாட்டாங்க தயவு செய்து இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கண்ணே நீங்க அப்பாவா ஆகப்போறிங்க அந்த பிள்ளைக்கும் நாளைக்கு கெட்டபேர். உங்களுக்கு உங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும்னு சொல்லுவிங்களே. அண்ணி ரொம்ப நல்லவங்க உங்க அம்மா சித்தி மாதிரி இல்லண்ணே நீங்க அவங்களை அழைச்சிக்கோங்க சண்டையோ பிரச்சினையோ இரண்டு பேரும் ஒரே வீட்டுல இருந்தா யாரும் எதுவும் சொல்லமாட்டாங்கண்ணே உங்களை விட சின்னவன் உங்களுக்கு எடுத்துச்சொல்ல எனக்கு தகுதி இல்ல தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்கண்ணே..” என்றான் ராமு.

ராமு இவ்வாறு சொன்னதும் தமிழ் உடனே பட்டறையில் இருந்து வீட்டிற்கு வந்தான். வந்தவன் குளித்து நல்ல உடை உடுத்தி வெளியே வந்து கடைவீதியில் பூ பழம் ஸ்வீட் இவையனைத்தும் வாங்கிக்கொண்டு நேரடியாக மலரின் வீட்டிற்கு சென்றான்.

அவன் வீட்டிற்கு வந்ததும் வீட்டின் முன் மலரின் இரண்டாவது தங்கை நீலா விளையாடிக்கொண்டிருந்தாள். அவளை அழைத்து ” இங்க வா பாப்பா உங்க மலர் அக்காவை வரச்சொல்லேன். ” என்று கூறினான்.

அவளும் உள்ளே சென்று மலரின் கையை தட்டினாள். அதில் தலை நிமிர்ந்தவள் ” என்ன நீலா. ” என்றாள்.

” அக்கா மாமா வெளிய நிக்கிறாங்க உன்னை வரட்டுமாம்.” என்றுவிட்டு மீண்டும் விளையாட சென்றுவிட்டாள் நீலா.

தமிழ் நீண்ட நேரம் வெளியே நின்றான் ஆனால் மலர் வந்து அழைக்கவில்லை. சகஜமாக அவனால் வீட்டிற்குள் செல்லமுடியவில்லை. மரகதம் பாட்டிதான் பயணக்களைப்பில் சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு சந்திராவை பார்க்கவந்தவர் வெளியே தமிழை பார்த்துவிட்டு வந்து உள்ளே அழைத்தார். ஆனால் தமிழ் வீட்டினுள் போகவில்லை.” இல்ல அவளே வந்து கூப்பிடட்டும்.” என்றான்.

மரகதம் உடனை மாலதியை அழைத்துவந்து மலரிடம் பேசினார்கள்.

” என்ன மலர் நீ மாப்பிள்ளை வெளிய நிக்கிறாரு வந்து உள்ள அழைச்சிக்கோமா ஊரே வேடிக்கை பார்க்குது இன்னும் ஏதாவது தப்பா நடக்கும் முன்ன நீ அவரை ஏத்துக்கோ.” என்றார்கள்.

அப்பொழுதும் அவள் இருந்த இடத்தை விட்டு எழவில்லை. இவற்றை பார்த்துக்கொண்டிருந்த சந்திரா மலரை அழைத்து மெதுவான சத்ததில் ” மலர்மா உங்களுக்கு இடையில என்ன நடந்துன்னு அம்மாக்கு தெரியாது என்னவும் நடக்கட்டும் நம்ம வீட்டு மாப்பிள்ளை வெளிய நிக்கிறது அவருக்கு மரியாதை இல்ல நீ முழுகாம இருக்க நல்ல செய்தி கேட்டுதான் வந்திருப்பாரு உள்ள அழைச்சிட்டுவா.” என்று சிரமத்துடன் பேசி வேகமாக மூச்சுவிட்டார்.

மலர் எழுந்து தாயின் அருகில் போனாள். அவர் சைகையில் வெளியே என்று கைகாட்டினார். ” நீ அவரை கவனி மலர் நாங்க அம்மாவை பார்க்கிறோம்.” என்றார் மாலதி.

தாயின் சொல் தட்ட முடியாமல் மலர் வெளியே வந்தவள். ” உள்ள வாங்க.” என்றாள்.

மேலிருந்து கீழ்வரை மலரை நோட்டமிட்டவன் ‘ இவ சாப்பிடுவாளா இல்லயா? இப்டி குச்சி மாதிரி இருக்கிறாளே அடிக்கிற காத்து கொஞ்சம் பலமா அடிச்சா பறந்துடுவா போலயே. ‘ என்று மனதில் நினைத்தபடி உள்ளே சென்றான்.

தமிழ் வரவும் சிரமத்தின் மத்தியில் சந்திரா எழுந்தார் ஆனால் அவரால் முடியவில்லை அதை பார்த்தவன் ” வேணாம் நீங்க பாடுங்க கஷ்டப்படாதிங்க.” என்றுவிட்டு வாங்கிவந்தவற்றை மலரிடம் கொடுத்தான். தாய் பார்ப்பதை உணர்ந்து அதை வாங்கி உள்ளே வைத்தாள்.

மாலதி காப்பிவைத்து எடுத்துவந்து மலரிடம் கொடுத்தார். ” இதை தமிழுக்கு குடு மலர்.” என்றார்.

அதையும் வாங்கி குடுத்துவிட்டு நின்றாள். வாங்கி குடித்துவிட்டு ” அதுவந்து இனிமேலும் இந்த நிலையில வேலைக்கு போகவேணாம் வா நம்ம வீட்டு போகலாம். நானே எல்லாரையும் பார்த்துக்கிறேன்.” என்றான் தமிழ்.

அன்று மதுரையில் இருந்து வந்ததும் தாயையும் தங்கையையும் பார்த்து அவர்களை கவனித்துவிட்டு தலையை மடியில் சாய்த்தபடி இருந்தவள் சோர்வில் நன்கு உறங்கிவிட்டாள். அதன் பின் அந்த பெண்களின் பேச்சில் விழித்தவள் ஒரு முடிவெடுத்தவளாக இருந்தாள்.

ஆனால் அவளின் முடிவிற்கு எதிராக தமிழ் வீட்டிற்கு வந்திருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அதை வெளியே காட்ட முடியாமல் அவளின் அஸ்த்திரமான அமைதியை கையிலெடுத்தாள் மலர்.

மாலதியின் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து ” நாளைக்கு இதே நேரம் வருவேன் அவளை நல்ல முடிவா எடுக்கச்சொல்லுங்க நான் வாங்கி கொடுத்தா வாங்க மாட்டா இந்த பணத்துல அவளுக்கு நல்ல சேலை வாங்கிக்கொடுங்க அதோட அவ தங்கச்சிக்கும் தேவையானதை வாங்கிகங்க நான் வாறேன்.” என்று விட்டு சென்றவன் ராமுவை அழைத்துக்கொண்டு மலரை தவறாக பேசிய பெண்களின் வீட்டின் முன் நின்று கத்தினான்.

” ஏய் எவடி அவ என் பொண்டாட்டியை தப்பா பேசினவ வெளிய வாங்கடி நீங்க யாருக்கு பொறந்திங்க நீங்க பெத்ததுகளை யாருக்கு பெத்திங்கன்னு நான் சொல்லவா?. அவளை விட்டு தள்ளி இருந்தா நீங்க வாய்க்கு வந்ததை பேசுவிங்களாடி எங்களுக்குள்ள எப்டி நடந்துது அவ எப்டி முழுகாம இருக்கான்னுதானே தெரிஞ்சிக்கணும் உங்க புருசங்களை என்கிட்ட அனுப்புங்க விளக்கமா சொல்லுறேன். இனி யாராவது அவளையோ அந்த குடும்பத்தையோ தப்பா பேசினா நான் மனுசனா இருக்கமாட்டேன். உங்க குடும்பத்துல இருக்கிற நாத்தம் வெளிய தெரியாம மூடி வச்சிக்கோங்க அடுத்த வீட்டை நோட்டம்விட்டு உங்க வீடு நாறிடப்போகுது ஒழுங்க இருந்துக்கோங்க அவ என் பொண்டாட்டி அது என் பிள்ளைதான். யாருக்கெல்லாம் இதுல சந்தேகமோ வாங்க நான் என் வழியில தீர்த்துவைக்கிறேன்.” என்று இன்னும் கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றான் தமிழ்.

இதை பார்த்த ராணி மலரிடம் சொன்னாள். ” உனக்கு ஒரு கஷ்டம் வந்ததும் அண்ணா அதுக்கு அவளுங்களை உண்டு இல்லன்னு பண்ணிடுச்சி பார்த்தியா? இதுதான் பாசங்கிறது. ” என்றாள். அவள் சொன்னதை கேட்ட மலர் முறைத்துக்கொண்டே ” பாசமும் இல்ல பகோடாவும் இல்ல எல்லாம் நடிப்பு இந்த பாசம் நேத்து நான் பட்ட கஷ்டத்துக்கு ஏன் வரலயாம். சும்மா அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு நீ என்னை பார்க்க வராதடி.” என்றாள் மலர் கோபமாக.

மதுரையில் மீனாட்சி இல்லத்தின் முன் வெளியே நின்ற இசை சற்று நேரம்தான் செய்வதறியாது நின்றவன். அவனின் படிப்பு அறிவு திறமை என அனைத்தையும் வைத்து அவனால் நன்றாகவே வாழமுடியும் ஆனால் அந்த தனிமையான வாழ்வில் எவ்வித சந்தோஷமும் இல்லை என்று நினைத்துக்கொண்டு மீண்டும் வீட்டுக்கதவை தட்டினான் இசை.

தட்டும் சத்தம் பெல் சத்தம் என தொடர்ந்து கேட்கவும் தாமரை வந்து கதவை திறந்தார். அவரின் பின் அறிவு மீனாட்சி முத்தரசன் அன வந்தவர்கள் அங்கு இசையை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டார்கள். அவனிடம் பேசுவதற்கு முன்பிருந்த தயக்கம் எதுவுமின்றி முத்தரசன் தான் பேசினார். தாமரை மீனாட்சி யாரும் அவனின் முகத்தை கூட பார்க்கவில்லை.

” என்ன இசை திரும்ப ஏன் வந்த.” என்றார்.

” இங்க பாருங்க என்னை வீட்ட விட்டு அனுப்பிட்டிங்க சரி அதனால நான் உங்க யாரோடையும் உறவு கொண்டாட வரல இது என் தாத்தா வீடு தாத்தா பாட்டி சொத்து முறைபடி பேரனுக்குதான் முதல் உரிமை அப்புறம் தான் வேற யாரா இருந்தாலும். இனி நான் வீட்டை விட்டு வெளியபோய் யாருகிட்டயாவது வேலை கேட்டு இருக்க வீடு பார்த்து இதெல்லாம் யாராவது பார்த்தா தாத்தா நேம் தான் கெடும். நான் வீட்டுல பண்ணின தவறு ஊர் ஃபுல்லா தெரிஞ்சிடும் அப்புறம் உங்க விருப்பம் நான் வெளிய போறது அதுக்காக பெத்தவங்க மேல கோர்ட்டில் கேஸ் போடுவேன்னோ சொத்த பிரிக்கவோ நான் சொல்லமாட்டேன் நான் அப்டி தரங்கெட்டு போகல இதுக்கு மேல உங்க விருப்பம்..” என்றான்.

” டேய் நீ என்ன பெரிய இவனா பாயம்காட்டுறியா? கோர்ட்டுக்கு போயிடுவேன்னு உன்னால ஆனதை பாரு நீ என்ன சொன்னாலும் உனக்கு இந்த வீட்டுல இடமில்ல அப்டியே நீ இங்க இருக்கணும்னு ஆசைபட்டா தாராளமாக இரு நாங்க நாலுபேரும் இங்க இருந்து போயிடுறோம். இப்ப உன் விருப்பம்.” என்றார் மீனாட்சி அவனுக்கு சளைத்தவரில்லை என்று காட்டினார்.

‘ ஐயோ என்ன இது நாம இப்டி பேசினா இந்த பாட்டி முதலுக்கே ஆப்பு வச்சிடுச்சே இது சரியில்ல கெத்த விட்டுடாத இசை.’ என்று மனதில் நினைத்தபடியே. ” இங்க பாருங்க நான் ஒருத்தன் வெளிய போனாலே தப்பா பேசுவாங்க தாத்தா நம்ம குடும்ப நேம் கெடும்னு சொல்லுறேன். இப்ப நீங்க எல்லாரும் நல்லா இருந்தும் வெளிய போனா நேம் கெடாதா என்ன?. நானும் வெளிய போகமாட்டேன். உங்களையும் போகவிடமாட்டேன். உங்க யாரோடையும் பேச்சுவார்த்தை வச்சிக்கமாட்டேன். இன்னையில இருந்து நான் யாரோ நீங்க யாரோ பெயின் கெஸ்ட்டா இருக்கிறேனே ஒரு ரூம்ல எனக்கு சாப்பாடு எல்லாம் நானே பண்ணிக்கிறேன். உங்க யாரையும் தொல்லை பண்ணமாட்டேன்.” என்றான் இசை.

இதை கேட்ட அறிவு ” இங்க பாருங்க எனக்கு விருப்பமில்லாம நடந்த கல்யாணம் இது அதனால ஒண்ணா இருந்த நீங்க யாரும் வெளிய போகவேணாம் நானே போறேன். நான் போறதால யார் பேரும் கெடாது தானே.” என்றாள்.

இசை பேசியது எதற்கும் வாய் திறக்காமல் இருந்த தாமரை ” இங்க பாருமா நீ எங்களுக்கு யாரோ இல்ல எங்க ஜானகி பொண்ணு அதோட இந்த வீட்டு மருமக இதை நீ எப்பவும் மனசுல வச்சிக்கணும் யாரும் இல்லன்னு இனி பேசக்கூடாது நீ ஏன் வெளியபோகணும் போகவேண்டியவனே சட்டம் பேசுறான் நீ ஏன் போகணும்.? ” என்றார்.

” மாமாவோட மரியாதை கெடவேணாம் அவரோட பேரை பேரன் காப்பாத்தமுடியாட்டியும் கெட்டுபோகவைக்க வேணாம். அதனால இந்த குடும்பத்து ஆளுங்க யாரும் அவனோட எந்த தொடர்பும் வச்சிக்ககூடாது பச்சதண்ணி கூட வாங்கவோ கொடுக்கவோ கூடாது இதுக்கு சம்மதம்ன்னா வீட்டு பின் ரூம்ல இருந்துக்க சொல்லுங்க அவனோட திங்ஸ் எல்லாம் அந்த ரூமுக்கு சிப்ட் பண்ணிடச்சொல்லுங்க அத்தை. ஏங்க உங்களுக்கும் தான் சொல்லுறேன் பிசினஸ் விசயம் எல்லாம் ஆபிஸ்ல பேசிடுங்க பண்ணுற வேலைக்கு மாதசம்பளம் என்னவோ அதை கொடுத்துடுங்க இதுதான் இறுதி முடிவு. நீ உன் ரூமுக்கு போம்மா அறிவு.” என்றுவிட்டு சென்றார் தாமரை.

” இவ்வளவு நாளும் அமைதியா இருந்த அம்மாவா இது. இந்தப்போடு போடுது பொண்ணுங்களை புரிஞ்சிக்கமுடியாதுனு சொல்லுறது சரிதான் போல. நாம ரொம்ப கவனமாக இருக்கணும்.” என்றுவிட்டு உள்ளே வந்த குசியில் விசிலடித்தபடி சென்றான் இசைவேந்தன்.

கொடிமங்கலத்தில். மலரின் வீட்டின் முன் ஆட்கள் கூடியபடி இருந்தார்கள்.

Advertisement