Advertisement

அத்தியாயம் 07.

அதிகாலையில் ராணியின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. அவளின் அம்மா வாணிதான் எழுந்து வந்தார். அங்கு ராமு நின்றான். ” யாருப்பா நீ என்ன வேணும்.” என்றார்.

” உங்க பொண்ணு ராணி இல்லயா?. நான் கொஞ்சம் அவங்களை அவசரமா பார்க்கணும் கூப்பிடுங்களேன்.” என்றான் ராமு.

” என்னபா நீ வந்து இந்த நேரத்துல ஒரு பொண்ணை கூப்பிடச்சொல்லுற இது சரியில்ல மொத இங்கயிருந்து போ இதை ராணி அப்பா பார்த்தார்ன்னா தப்பாகிடும் இனி ராணியை பார்க்க வராத இங்க.” திட்டிவிட்டு கதவை அடைத்துவிட்டு சென்றார் வாணி.

ராமு சற்று நேரம் செய்வதறியாது நின்றுவிட்டு ஒரு முடிவெடுத்தவனாக உடனே மாலதி வீட்டிற்கு சென்றான். அங்கும் சென்று கதவை தட்டினான் சற்று நேரம் கழித்து வந்து கதவை திறந்தார். ” என்ன ராமு இந்த நேரத்தில வந்திருக்கிற நீ.” என்றார் பயத்துடன்.

அதுவந்து என்று அவன் தயங்கவும் அவனை உள்ளே அழைத்துச்சென்றார். ” இப்ப சொல்லு என்ன.” என்றார்.

” நம்ம மலர் அண்ணியை கைது பண்ணி சிறையில வச்சிருக்காங்கலாம் அக்கா. ராணி வந்து சொன்னா போய் காப்பாத்தி கூட்டிட்டு வரச்சொல்லி ஆனா அண்ணே குடிச்சிட்டு மட்டையாகிட்டு எழுப்பியும் எழும்பமாட்டுது நீங்க ஏதாவது பண்ணி கூட்டிட்டுவாங்களேன். பாவம் அவங்க இந்த அண்ணே ஏன் இப்டி பண்ணுதோ தெரியல.” என்றான் ராமு கவலையுடன்.

” அதெல்லாம் குடும்ப விசயம் அப்டிதான் இருக்கும் புருசன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும் அதை மலர்தான் சரி பண்ணணும். இது வேற யாருக்கும் தெரியாது தானே நீயும் சொல்லாத நான் பார்த்துக்கிறேன். இந்த ராணியும் விசயத்தை சொல்லலயே கழுத சரி நான் என்ன பண்ணுறதுனு பார்க்கிறேன் நீ போ ராமு.” என்று அனுப்பிவிட்டு மாலதி மரகதம் பாட்டி வீட்டிற்கு சென்றார்.

அங்கு சென்று அவரிடமும் கூறிவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு நன்கு விடிந்ததும் ராணியுடன் அவள் வேலை செய்யும் இடத்திற்கு சென்றார்கள்.

அங்கு சென்று விசாரித்துவிட்டு மூவரும் போலீஸ்டேஷன் சென்றனர்.

அங்கிருந்த பெண் கான்ஸ்டபிலிடம் விசாரித்தபோது மலரை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் அங்கு ஒரு பெண் போலீஸ் இருப்பதாகவும் கூறினாள்.

மீண்டும் அங்கிருந்து ராஜாஜி மருத்துவமனைக்கு சென்றார்கள். மரகதம் பாட்டி வயது முதிர்வினால் இந்த பயண களைப்பில் சோர்ந்துபோனார்.

வீட்டில் யாருக்கும் தெரியாமல் அறிவை தூக்கிக்கொண்டு அவனது ஆடிக்காரில் போகும் வழியில் அவனின் பி,ஏ வையும் ஏற்றிக்கொண்டு அருகிலிருக்கும் ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றான். அங்கு சென்றதும் உடனடியாக அவளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

பெரிய காயம் இல்லை என்றும் கட்டுபோட்டு ஊசி போட்டிருப்பதாகவும் சேலைன் ஏறி முடிந்ததும் பயமின்றி அழைத்துச்செல்லலாம் என்று கூறிவிட்டுச்சென்றார் டாக்டர்.

அதன் பின் அறிவு இருந்த அறைக்குள் சென்று அவளின் அருகில் அமர்ந்து காயத்தை தடவியபடி இருந்தான் இசை அவனது கண்ணில் நீர் வந்ததை யாரும் பார்க்கவில்லை. ஆறடி ஆண்மகனையும் கண்ணீர்விட வைப்பது தான் காதலோ?.

” உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு தெரியுமாடி உனக்கு. நீ என்னை விட்டு போயிடக்கூடாதுன்னுதான் இப்டி முறையில்லாத காரியத்தையும் என் மனசை கல்லாக்கி ஒரு அம்மா பிள்ளைக்கு காய்ச்சல் சரியாகணும்னா கசப்பு மருந்து குடுப்பாங்கலாம் எங்க அம்மா சொல்லிருக்காங்க. அப்டி எல்லாத்தையும் நினைத்து நீ நான் சாகும் வரை என்னோட இருக்கணும்னு தான் நான் இப்டி நடந்துக்கிட்டேன் இது தப்புன்னு எனக்கும் தெரியும். நீ ஏன் என்னை வேணாம்னு சொன்ன அதுதான் என்னால தாங்கமுடியல. நீ கண்முழிச்சி நல்ல படியா எழுந்து வா அதுவே போதும் எனக்கு. இனி உன் விருப்பம் இல்லாமல் என் நிழல் கூட உன்மேல படாது. என் கண் எதிர நீ இருந்தாலே எனக்கு போதும்..” என்று மனதில் நினைத்து அவளின் கையை பிடித்து கண்ணீர்விட்டபடி இருந்தான் இசைவேந்தன்.

அப்பொழு கதவை தட்டி பி ஏ ஜான்சன் உள்ளே வந்தான். அவன் வருவது தெரிந்ததும் இசையின் முகம் மீண்டும் கம்பீரமாக மாறியது. ” என்ன ஜான்..” என்றான் இசை.

” சார் நரி ஒண்ணு இந்த ஹாஸ்பிடல்ல உலாவுது அவனுக்கு இங்க என்ன வேலையா இருக்குமோ தெரியலயே..” என்றான் ஜான்.

இசையும் எழுந்து வெளியே சென்றான்.” எங்க ஜான் பார்த்திங்க..”

ஜான் வாயில் கைவைத்து சத்தம் போடவேண்டாம் என்று சைகை காட்டி இசையை ஒரு அறையின் பக்கம் அழைத்துச்சென்றான்.

அந்த அறையில். ” என்ன சார் உங்க திட்டம் எதுவும் நடக்காது போல இந்த மலர் இங்கவந்து படுத்திருக்காளே இப்ப என்ன பண்ணப்போறிங்க?..” என்றான் வசந்.

” பிளவர் பேபி மயக்கத்துல இருக்கும் போதே தூக்கப்போறேன் அதுக்கு நம்ம ஆள் வெளிய ரெடியா இருக்கிறான். ” என்று இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதை கேட்ட இசை உடனே அறிவு இருக்கும் அறைக்கு வந்துவிட்டான்.

” நீ அவனை அவனுக்கு தெரியாம எல்லாத்தையும் பாலோவ் பண்ணு ஜான் ஓகே..” என்றுவிட்டு அறிவின் பக்கம் திரும்பினான்.

வருவேன் என்று சொன்ன முகுந்தன் மீண்டும் போலீஸ்டேஷன் வந்தான். ஆனால் மலர் மயங்கியதும் தண்ணீர் தெளித்தும் கண் திறக்காமல் இருக்கவும் அந்த பெண் போலீஸ் பயந்து உடனே மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வேறு பெண் போலீஸை அருகில் இருக்குமாறு கூறிவிட்டு ஸ்டேஷன் வந்துவிட்டாள்.

போலீஸ்டேஷன் வந்தவன் இதை தெரிந்துகொண்டு அவனும் அவனின் ஆட்களுடன் மருத்துவமனை வந்தான்.

அங்கு முகுந்தனை பார்த்துவிட்டுத்தான் ஜான் இசையை அழைத்துவந்து அவர்கள் பேசியதை கேட்டதும் தான் அவனை பாலோவ் பண்ணச்சொன்னான் இசை.

முகுந்தன் ஆடைத்தொழிற்சாலையில் வேலைக்கு வரும்முன் இசையின் பிரின்டிங் பிரஸில்தான் மேனஜராக இருந்தான். அங்கு பணம் கையாடல் பண்ணி கையும் களவுமாக ஆதாரத்துடன் இசையிடம் மாட்டிக்கொண்டான். இது மட்டும் இல்லாமல் அங்கும் வேலை செய்யும் பெண்களிடம் அவனது சேட்டையை காட்டி அதிலும் மாட்டிக்கொண்டான். இதை எல்லாம் ஆதாரத்துடன் இசை போலீஸில் காட்டவும் அவனை கைது பண்ணினார்கள். ஒருவருடத்திற்கு பின் வெளியே வந்தவன். வேறு வேலை தேடினான். அப்பொழுதுதான் ஆடைத்தொழிற்சாலையில் மேனஜர் பதவிக்கு ஆள் வேண்டும் என பத்திரிகையில் பார்த்துவிட்டு நேர்முகத்தேர்வில் தெரிவாகி அங்கு வேலைக்கு சேர்ந்தான்.

அவனின் திட்டப்படி முகுந்தன் வாட்பாய் கெட்டப்பில் மலரின் அறைக்குள் சென்றான். அப்பொழுதுதான் அவளுக்கு ஏற்றிய சேலைன் முடிந்தது அதை அகற்றிவிட்டு. ஸ்ட்ரெச்சரில் அவளை மாற்றி வெளியே தள்ளிக்கொண்டு வந்தான். லிப்டில் ஏறி கீழே வந்து சுற்றி பார்த்துவிட்டு மலரை உள்ளே வைத்துவிட்டு கதவை மூடி திரும்பும் போது அங்கு ஜான் .இசை. போலீஸ் கமிஸ்னர். போலீசார். அவன் வேலை செய்யும் ஆடைத்தொழிற்சாலை உரிமையாளர். என அனைவரும் அவனை சுற்றிவளைத்தனர்.

இசை அவனை முதல் கேஸில் கைது பண்ணியதை பற்றி சொல்லி அதற்குரிய ஆதாரத்தையும் இன்று மலரை தூக்குவது பற்றி பேசியது அவனை பின் தொடர்ந்து ஜான் எடுத்த வீடியோ என அனைத்தையும் கமிஸ்னரிடம் இசையே ஒப்படைத்தான்.

அப்பொழுதுதான் மலர் கண்விழித்தாள். அவளையும் கைதாங்களாக அழைத்துக்கொண்டு ராணி முகுந்தன் மலரை ஏற்றிய சுமோவில் இருந்து இறங்கினாள்.

இறங்கி முகுந்தனின் அருகில் வந்து கன்னத்தில் அறைந்தாள். ” என்னம்மா பண்ணினான் ஏன் அவனை நீ அடிக்கிற.” என்றார் கமிஸ்னர்.

ஆடைத்தொழிற்சாலையில் நடந்தவற்றை கூறினாள். ” தினமும் மலர்கிட்ட வம்பு பண்ணுவான் சார் தப்பா பேசுவான் நேற்று அதுக்கெல்லாம் சேர்த்து இவ மேல திருட்டு கேஸ் போட்டு போலீஸ்ல பிடிச்சிகொடுத்துட்டான் சார். மலர் ரொம்ப ஏழை பெண் சார் இவ உழைச்சிதான் இவங்க குடும்பமே நடக்குது அதனால இவளும் வெளிய யார்கிட்டயும் இதை சொல்லல பயந்தவ அதனால அவளோட குடும்பத்துக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயம் இவன் பண்ணின அனைத்தையும் மனசுலயே வச்சிப்பா சார் எங்க மலர் கஷ்டப்பட்டாலும் களவு பொய் ஏமாற்றுவேலை எல்லாம் பண்ணமாட்டா அதெல்லாம் அவளுக்கு தெரியாது. அவனை நல்லா அடிச்சு விசாரிங்க சார் அப்போதான் அந்த திருட்டு யார் பண்ணினதுன்னு தெரியும்..” என்று நடந்ததை கூறினாள் ராணி.

இசையும் இவனை நன்றாக கவனிக்கும் படி கூறிவிட்டு அவனை இனி எங்கும் வேலை செய்யமுடியாத படி இரண்டு கம்பெனி சேர்மனும் கையொப்பம் போட்டு அதை எம்லாய்மெண்ட் ஆபிஸில் ஜான் மூலம் ஒப்படைத்தார்கள்.

அனைவருக்கும் அழைத்ததும் அவனை மதித்து வந்ததற்காக நன்றி கூறிவிட்டு மருத்துவமனைக்குள் சென்றுவிட்டான். மலர் ராணி, மாலதி மரகதம்பாட்டி என அனைவரும் உள்ளே சென்றார்கள்.

முகுந்தனிடம் பணம் வாங்கி எந்த விசாரணையோ ஆதாரமோ இல்லாமல் எப் ஐ ஆர் பதிவு செய்யாமல் மலரை சிறையில் வைத்ததால் அந்த பெண் போலீஸை சஸ்பன்ஸ் பண்ணிவிட்டு வசந் முகுந்தனின் ஆட்கள் என அனைவரையும் கைது பண்ணி அழைத்துச்சென்றார்கள் போலீசார்.

உள்ளே வந்ததும் மலரிடம் விசாரித்தான். ஏன் மருத்துவமனை வந்தாள் அவள் யார்?. என்று அதற்கு ராணி அவளையும் தமிழையும் மலரின் திருமணம் அவளின் குடும்ப நிலை என அனைத்தையும் கூறினாள்..

அதை கேட்டுவிட்டு ” ஐயோ எல்லாரும் நம்மல மாதிரியா? இருக்கிறாங்க ஆனா நாம காதலுக்காக தவறா நடந்தோம் ஆனா இந்த பொண்ணோட புருசன் நம்மலை விட மோசம்..” என்று மனதில் நினைத்துக்கொண்டு மலரை அவளை பார்த்த பெண் மருத்துவரிடம் அழைத்துச்சென்றான். அவனும் மற்ற மூவரும் சென்றார்கள்.

மலரை பார்த்த டாக்டர் ” நீங்க இவங்களுக்கு யார்?. என்றாள் இசையை பார்த்து.

” நான் அண்ணன் மேடம். ” என்றான் இசை. அவன் சொன்ன அண்ணன் என்ற வார்த்தையை கேட்டதும் மலரின் கண்ணில் கண்ணீர் வந்தது. ராணி அதை துடைத்துவிட்டாள்.

” இவங்க கணவர் எங்க?.” என்றார் டாக்டர்.

” அவரு வேலை விசயமா வெளியூர் போயிருக்கிறார் மேடம் தகவல் சொல்லிட்டோம் வந்துடுவார். இவ என் தோழிதான் இவ அம்மாக்கு உடம்பு முடியாது இது அக்கா இது பாட்டி மலருக்கு உடம்புக்கு என்னன்னு சொல்லுங்க மேடம்.” என்றாள் ராணி.

” பயப்புடும்படி ஒண்ணும் இல்ல இரண்டு மாதம் கர்ப்பமா இருக்கிறாங்க பட் ரொம்ப அனிமிக்கா ரொம்ப வீக்கா இருக்கிறாங்க இவங்க இப்டியே இருந்தா தாய் சேய் இரண்டு பேருக்கும் ரொம்ப ஆபத்து கவனமா பார்த்துக்கோங்க.” என்று ராணியிடம் கூறிவிட்டு. மலரிடம் பேசினார். ” இப்ப இந்த மாத்திரையை எடுத்துக்கோங்கமா நீங்க தான் உங்களையும் உங்க குழந்தையையும் கவனிச்சிக்கணும் சேப்பா இருங்க..” என்று கூறி அனுப்பிவைத்தார் டாக்டர்.

கமிஸ்னரே மலரை வீட்டிற்கு அழைத்துபோகும்படி கூறிவிட்டு சென்றார். அதன் பின் ஆடைத்தொழிற்சாலை உரிமையாளர் மீண்டும் மலரை அங்கு வேலைக்கு வரும்படி அழைத்தார். அதற்கு ” இல்ல சார் இனி நாங்க வேலைக்கு அங்க வரமாட்டோம் அதவிட மலர் இப்ப இருக்கிற நிலையில வேலை எல்லாம் பண்ணமுடியாது.” என்றாள் ராணி.

அதன் பின் அவரும் அவர்களிடம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு மலருக்கு சேரவேண்டிய பிராபிட் பணம் இம்மாத சம்பளம். ராணிக்கு சேரவேண்டிய பணம் என அனைத்துக்கும் செக்கில் சைன் பண்ணி கொடுத்துவிட்டு சென்றார்.

அதன்பின் மலரை அழைத்துக்கொண்டு அறிவின் அறைக்குள் சென்றான் இசை. அங்கு மலருக்கும் அறிவிற்கும் ஒரே மாதிரி நிறத்தில் சேலை இருந்தது ராணிக்கு சுடிதார் இருந்தது. ” நீ கொடிமங்கலம்ன்னு சொன்னதுதான் நியாபகம் வந்துச்சிமா என்னை மன்னிச்சிடு வேலை டென்ஷன்ல அன்னைக்கு உன்மேல சேற்றை அடித்து உன்னை கஷ்டப்பட வச்சிட்டேன் இந்தா இந்த புடவையை அண்ணன் வாங்கிதந்ததா நினைத்து வேணாம்னு சொல்லாம வாங்கிக்க..” என்றான்.

அவளும் வாங்கிக்கொண்டாள். அதன் பின் ராணிக்கும் சுடிதார் கொடுத்தான் அதையும் அவள் வாங்கினாள். இதை எல்லாம் அறிவு பார்த்துக்கொண்டிருந்தாள். இசை சாலினிக்கு அழைத்து மருத்துவமனை வரச்சொல்லிவிட்டு ஜானை அழைத்து அறிவு மலர் ராணி மூவருக்கும் காலை உணவு வாங்கி வரும்படியும் மாலதியையும் மரகதம் பாட்டியையும் உணவு உண்ண அழைத்துப்போகும்படியும் கூறிவிட்டு அவன் அறையைவிட்டு வெளியே வந்தான்.

அதன் பின் ராணிதான் அறிவுடன் பேசினாள் கையில் என்ன நடந்தது என கேட்டாள் அதற்கு அறிவு அவளது விருப்பமில்லாமல் நடந்த திருமணம் அதன்பின் நடந்தது என அனைத்தையும் கூறினாள். அதன் பின் மலரை பற்றி ராணி அறிவிடம் கூறினாள். மலர் என்ன நினைத்தாளோ அறிவை கட்டி அணைத்து கதறி அழுதாள். சற்று நேரம் மலரை அழவிட்டு அதன் பின் அவளை சமாதானப்படுத்தினாள். சற்று நேரத்தில் அவர்களுடன் சாலினியும் இணைந்துகொண்டாள்.

கவலை மறந்து அவர்களின் சிரிப்பு சத்தம் அறையை நிறைத்தது.

அதன் பின் மணி காலை எட்டு ஆனதும் இசையை தவிர அனைவரும் உணவு உண்டதும். மலரை வரும் புதன் கிழமை கொடிமங்கலத்தில் அவனை வந்து பார்க்குமாறு கூறிவிட்டு அவனின் விசிட்டிங்கார்ட்டை ராணியிடம் கொடுத்தான். பின் அவர்களை டாக்சி பிடித்து அனுப்பிவைத்துவிட்டு இசை மீண்டும் மருத்துவமனைக்குள் வந்தான்.

கடும் சிரமத்தின் மத்தியில் சாலினி மூலம் அறிவை புடவையை மாற்றவைத்து அழைத்துக்கொண்டு அவனின் வீட்டிற்கு சென்றான்.

மீனாட்சி இல்லத்தில் காலையில் இருந்து இவர்களை காணாமல் தேடினார்கள் பின் இசையின் கைபேசிக்கு அழைத்தும் அவன் எடுக்கவில்லை. இருவரும் சேர்ந்து வெளியே போயிருப்பதால் எந்த பயமும் இல்லாமல் வரட்டும் என்று காத்திருந்தார்கள்.

ஆனால் அறிவு வந்து இறங்கிய கோலம் அவளின் கையில் இருந்த கட்டு என பார்த்ததும் தாமரை ஓடிவந்து அறிவை வீட்டினுள் அழைத்துச்சென்று என்னவென்று கேட்டார்.

அதற்கு அறிவும் எதையும் மறைக்காமல் இசை நடந்துகொண்டதை கூறினாள். அதற்கு தண்டனையாக அவள் கையை கிழித்துக்கொண்டதையும் கூறினாள்.

இவற்றை கேட்டதும் தாமரை இசையிடம் வந்து அவனை அறைந்துவிட்டார். ” அடேய் நீ இந்த வயித்துலதான் வந்து பொறந்தியா? நாங்கதான் உன்னை தாலாட்டி சீராட்டி வளர்த்தமா? எங்க வளர்ப்பு இந்த குடும்ப மானமரியாதை எல்லாத்தையும் கெடுத்துட்டியேடா சண்டாலபயலே. உங்க அப்பா தாத்தா எல்லாரும் பெண்களை எவ்வளவு மதிப்பாங்க எங்களை எப்டி அன்பா மரியாதையா நடத்துவாங்கன்னு பார்த்ததானே நீ அதைத்தானே நாங்களும் உனக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்தோம். ஒரு பொண்ணு மனசை புரிஞ்சிக்காம இப்டி பாதக செயலை பண்ணிட்டியேடா உன் பிடிவாதம் கோபம் எல்லாம் சரியாகிடும்ன்னு நினைத்தோமே. இதுவே உன் தங்கை குழலிக்கு இப்டி ஒரு அநியாயம் நடந்திருந்தா நீ அவ புருசன் தானே பண்ணினான்னு சும்மா இருந்திருப்பியா?. அண்ணனா அவனை அடிச்சே சாவடிச்சிருப்ப ஆனா அறிவை என்ன பண்ணினாலும் கேட்க ஆள் இல்லன்னு நினைச்சியா?. இப்ப ஜானகிக்கு நாங்க என்ன பதில் சொல்லுவோம். சரி ஏதோ ஆசைபட்டு கல்யாணம் பண்ணிகிட்ட உன் குணாத்தால அறிவை மாத்திடுவ அப்புறம் சந்தோசமா இருப்பிங்க யாருக்கும் தெரியாம கல்யாணம் முடிச்சிட்டிங்க பெரியவங்க நாங்க ஊருக்கு சொல்லி ரிசப்ஷன் நடத்தி எங்க வீட்டு மருமகளை முறைப்படி அறிமுகப்படுத்தலாம்னு இருந்தோம். நீ பண்ணின கல்யாணத்தை ஏற்றுக்கொண்ட மாதிரி எல்லாத்தையும் ஏற்றுக்கொள்வோம்ன்னு திமிரா நடந்துகிட்டியா?. இப்டி பொண்ணை மதிக்கதெரியாதவன் என் மகனா இருக்கமுடியாது. நீ ஆயிரம் காரணம் சொல்லலாம் ஆனா தப்பு தப்புதான் அவளை இப்டி பண்ணிட்டியேடா பாவிமகனே. “என்று திட்டி அழுதபடியே இசையின் மார்பில் குத்தினார் தாமரை.

அதன் பின் அவனின் கையை பிடித்து வீட்டிற்கு வெளியே அழைத்துவந்து.

” இதோ பாருடா! அறிவு உன்னை எப்ப மன்னிச்சி புருசனா ஏற்றுக்கொள்ளும் வரை நீ இந்த வீட்டு வாசல்படி மிதிக்ககூடாது. போ இங்க இருந்து உன்னை பெத்ததை நினைத்து எனக்கே அசிங்கமா இருக்கு வீட்டைவிட்டு வெளியபோடா என் கண்ணுல படாத. அத்தை உங்க பேரன் வேணும்னா நீங்களும் அவனோட போகலாம் இல்ல நாங்க வேணும்னா உள்ள வாங்க..” என்றுவிட்டு அறிவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

” என் மருமகளோட முடிவுதான் என்னோட முடிவும் பொண்ணை மதிக்காதவனுக்கு இந்த வீட்டுல இடமில்ல போ வெளிய..” என்றுவிட்டு மீனாட்சியும் உள்ளே சென்றுவிட்டார்.

அவனது வீட்டில் அவனிற்கு இடமில்லை அவனது அன்பிற்குரியவர்களை பார்ப்பது பேசுவது அதற்கு மேல் யாருக்காக இவ்வளவும் பண்ணினானோ அவளையும் இனி பார்க்கமுடியாது என்கின்ற நிலை வரவும் த கிரேட் பிஸ்னஸ் கிங் இசைவேந்தன் செய்வதறியாது ஸ்தம்பித்து வீதியில் நிற்கிறான்.

Advertisement