Advertisement

அத்தியாயம் 03

மலர்க்கொடி அடுத்த நாள் காலையில் எழுந்து வீட்டுவேலைகள் செய்துவிட்டு அவளும் ரெடியாகி மரகதம் பாட்டிவீட்டிற்கு சென்றாள்.

” பாட்டிமா.” அழைத்தபடியே உள்ளே சென்றாள்.

” வாம்மா மலர் நானும் உன்னை பார்க்கத்தான் வரணும்னு இருந்தேன். கும்பிட போன சாமி குறுக்கே வந்தமாதிரி நீயே வந்துட்ட.” என்றார். அவரின் முகத்தில் கவலை தெரிந்தது.

” என்ன? பாட்டிமா.”

” எப்டி சொல்லுறதுன்னு தெரியல மலர்.” என்றார். தவிப்புடன்.

” சொல்லுங்க பாட்டிமா.” என்றாள் வேலைக்கு செல்வதற்கு நேரமாவதை உணர்ந்து.

” இன்னைக்கு உனக்கு உன் ராசிபடி சந்திராஷ்டமம் அது கூடாதாம். ஏதாவது சிக்கல் வம்பு வழக்கு தரும் நமக்கு ஒரு சிக்கல் வந்தா யாரும் உதவிக்கு இல்லயே இப்டி தான் முதலும் ஒரு சந்திராஷ்டமம் அன்னைக்குதான் உனக்கு அந்த தமிழ் பையனால பிரச்சினை வந்தது இன்னைக்கும் ஏதாவது தப்பா நடந்திடுமோன்னு பயமா இருக்கும்மா நீ இன்னைக்கு லீவு சொல்லிடு மலர்.” இந்த அப்பாவி பெண்ணிற்கு ஏதாவது நடந்துவிட்டால் அவளோடு அவளின் குடும்பமும் பாதிக்கப்படும் என்ற கவலையுடன் சொன்னார்.

” லீவா அது கிடைக்காது இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு ஒரு ஆடர் ஒண்ணு முடிச்சிக்கொடுக்கணும் பாட்டிமா. அப்புடி லீவு வேணும்னாலும் இந்த காரணத்தை சொல்லி எப்டி லீவு கேட்கமுடியும் சிரிப்பாங்க அப்புறம் லீவெல்லாம் தரமாட்டாங்க பாட்டிமா இந்தமுறை எதுவும் ஆகாது நீங்க பயப்படாம இருங்க அதுமட்டுமில்லாம ஒருநாள் லீவுபோட்டா அது சம்பளத்துல பிடிப்பாங்க. எல்லா வகையிலும் கஷ்டம்தான் பாட்டிமா நீங்க அம்மாவை பேசவைத்து நீங்களும் பேச்சிக்குடுத்து பார்த்துக்கோங்க பாட்டிமா ராணி காணோம்னு தேடுவாள் போய்ட்டுவாறேன் பாட்டிமா.” என்றுவிட்டு சென்றாள் மலர்.

ராணியும் மலரை தேடி வந்துகொண்டிருந்தாள். இருவரும் இடையில் சந்தித்து பேசியபடியே பஸ் நிலையம் சென்றனர்.

” ஏன்டி மலர் பஸ் போயிடுச்சின்னா ஆட்டோல போக நம்மகிட்ட அவ்வளவு வசதியா இருக்கு ஏன்டி லேட்” என்றாள்.

மரகதம் பாட்டி சொன்னதை மலர் ராணியிடம் சொல்லிக்கொண்டே வந்தவள் இடையில் நின்றுவிட்டாள்.
திரும்பி பார்த்த ராணி ” என்னடி?.” என்றாள்.

” செருப்பு பிஞ்சிட்டுடி ராணி.” அவள் முகத்தில் கவலை அப்பிக்கிடந்தது இன்று மீண்டும் ஒரு செலவு வந்ததை எண்ணி கவலையுற்றாள் மலர்.

செருப்பிற்கு ஊசி குத்தி மீண்டும் அதை அணிந்து கொண்டாள் மலர். அதை பார்த்த ராணி ” எனக்கும் நீ லீவு போடுறது சரின்னு படுதுடி நீ வீட்டுக்கு போ நான் உனக்கு லீவு சொல்லிக்கிறேன்.” என்றாள்.

” வேணாம்டி ராணி நான் வீட்டுல இருந்து வேற பிரச்சினை வந்தா என்னபண்ணமுடியும் பிரச்சினை வரணும்னு இருந்தா வானத்துல இருந்தாலும் வரும்டி அதைபத்தி பேசாம இரு சரியா?.” என்றுவிட்டு வேகநடையிட்டு சென்றாள்.

பஸ்ஸில் ஏறி அவர்கள் இறங்கும் இடத்தில் இறங்கி சோதனை செய்துகொண்டு தொழிற்சாலைக்குள் சென்றார்கள்.

ஒரு ஆடரை முடித்துக்கொடுப்பதற்கு நாட்கள் மிக குறைவாக இருப்பதனால் கட்டிங் தையல் அயர்னிங் பெக்கிங் என்று வேலைகள் வேகமாக நடக்கிறது.

யாரும் யாரையும் நிமிர்ந்து பார்த்து பேசுவதற்கோ அவர்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட நேரமின்றி அதிக வேலைசெய்து மதிய உணவு நேரம் கடந்து உணவை உண்டுவிட்டு மீண்டும் அவளின் வேலையை செய்கிறாள் மலர்.

வேலையை முடித்துவிட்டு வெளியே வருவதற்கு வழமையை விட லேட்டாகிவிட்டது. அவளின் அடுத்த வேலைக்கு போவதற்கும் லேட் ஆகும் என்பதை உணர்ந்து ராணியின் பட்டன் கைபேசியை கேட்டாள்.

” நான் எடுத்துவரலடி லேட்டாகிடுச்சா மறந்துட்டேன்.” என்றாள்.

அவர்களின் பையை சோதனை போடுவதற்கு வரிசையில் நின்றார்கள் பெண்கள் இருவரும்.

ராணியின் பை சோதனை முடிந்ததும் மலர் போனாள்.

அவளின் உடல் சோதனை முடிந்ததும் பையை விரித்தாள்.

அதில் நேற்று அவள் தைத்த விலை உயர்ந்த அழகிய பேபி ஃப்ராக் இருந்தது.

” என்ன இது” என்றாள் பெண்களை சோதனை போடும் பெண் காவலாளி.

” இது நேத்து நான் தைத்தது மேடம்.”

” அது தெரியுது இது எப்டி உன் பேக்ல வந்துச்சினு கேக்கிறேன்.” என்றாள் கோபத்துடன்.

” தெரியலிங்க மேடம் நான் மதியம் டிப்பன் பாக்ஸ் வைக்கும்போது கூட இது இல்லையே இப்ப எப்டி வந்ததுனு தெரியலயே கடைசி பஸ்ஸும் போயிடும்னு பேக்கை லாக்கர்ல இருந்து பார்க்காம எடுத்துட்டுவந்துடேன் மேடம்.” என்றாள் மலர் தவிப்புடன்.

காவலாளி தையல் பிரிவு மேனஜரை அழைத்து விசயத்தை சொன்னாள்.

அவரும் வந்து பார்த்துவிட்டு “என்னம்மா இது நீ ரெண்டு வருசமா இங்க வேலை பண்ணுற நீ இப்டி எந்த பிளாக் மார்க்கும் வாங்கினதே இல்லையே அடுத்த தையல் பிரிவு சூர்பவைசர் லிஸ்ட்ல நான் உன்பேரை சேர்த்துருக்கிறேன். இந்த டைம்ல உன் மேல திருட்டு குற்றச்சாட்டு வந்தா என் வேலையும் சேர்ந்தே போயிடும்மா நான் ஜெனரல் மேனஜரை வரச்சொல்லுறேன்.” என்றுவிட்டு சென்றார்.

அவளை அடுத்து வந்தவர்கள் வெளியே சென்று மலர் உடையை திருடிவிட்டாள் என்று கேலிபேசிவிட்டு சென்றனர்.

இதை கேட்ட ராணி என்னவோ என்று பதட்டத்துடன் அங்கு வந்தாள்.

ஜி எம் வந்ததும் பார்த்து என்னவென்று விசாரித்து இந்த உடை இருந்த பகுதி சிசிடிவி கமராவை பார்த்தார் அது வேலை செய்யாமலிருந்தது.

அங்கு கட்டிங் மேனஜர் முகுந்தனும் வந்தான்.

” என்ன சார்.”

” இந்த பொண்ணு பேக்ல இது இருந்தது சார்.” என்றார் பேபி ஃப்ராக்கை காட்டி ஜி எம்

” நான் அப்பவே சொன்னேன் இந்த பட்டிக்காடுகளை வேலைக்கு வைக்காதிங்க நாகரிகம் தெரியாததுகள் இப்ப இவ திருட்டு புத்தியை காட்டிட்டா.” என்றான்.

அவளுக்கு அடுத்து தையல் மிசினில் தைக்கும் பெண் வந்தாள். ” ஏன்டி மலர் இன்னைக்கு லஞ் டைம்ல சொன்னியே வீட்டுச்செலவுக்கு பணமில்ல செருப்பும் பிஞ்சிட்டு புதுசு வாங்கணும் அம்மாக்கு பால் மா வாங்கணும் இதுக்கெல்லாம் பணம் வேணும் என்ன பண்ணுறதுன்னே தெரியலன்னு அதுக்காகவா இதை திருடின நானும் கஷ்டப்பட்ட பொண்ணு கைமாத்தா பணம் கொடுப்போம் சம்பளம் வந்ததும் தரட்டும்னு நினைத்தேன் அதுக்குள்ள இப்டி பண்ணிட்டியே இன்னைய பிரச்சினையை சரி பண்ண திருடப்போய் இருந்த ஒரே வேலையும் போயிடுச்சே ஐயோ பாவம்.” என்றுவிட்டு அவள் நினைத்து வந்த வேலையை செய்துவிட்டு சென்றாள்.

முகுந்தன் தகவல் சொன்னதும் போலீசாரும் வந்துவிட்டார்கள்.

” சார் எங்க மலர் அப்டி செய்யமாட்டா சார் அவ அதை எடுக்கல அந்த பொண்ணு சொன்னமாதிரி மலர் அப்டி எதுவும் பேசல சார் இதை நம்புங்க சார் இதெல்லாம் அவளுக்கு தெரியாது.” என்று கெஞ்சிபார்த்தாள் ராணி.

ராணியின் பேச்சு அங்கு எடுபடவில்லை.

” என்ன முகுந்தன் ஏன்? இப்டி பண்ணுறிங்க யாரை கேட்டு போலீஸை வரச்சொன்னிங்க இதனால கம்பெனிக்கு கெட்டபேர் வரும்னு உங்களுக்கு தெரியாதா?” என்றார் ஜி எம் கோபத்துடன்.

” என்ன சார் பேசுறிங்க நீங்க. இதை இப்புடியே விட்டா இந்த பொண்ணு மட்டுமில்ல மத்தவங்களும் கை வைப்பாங்க சார் திருடினா தண்டனை கிடைக்கும்னு காட்டினாத்தான் இங்க வேலை செய்ற மத்தவங்களுக்கும் ஒரு பயமிருக்கும் நீங்களே அரஸ்ட் பண்ண சொல்லுறிங்களா? இல்ல நான் மேலிடத்துல பேசிகட்டுமா?.” என்றான் திமிருடன்.

” இந்த பொண்ணுதான் எடுத்ததுக்கு எந்த ஆதாரமும் இல்லையே முகுந்தன்.”

” ஏன் சார் நீங்க இவளை காப்பத்தவே முயற்சி பண்ணுறிங்க இவ அழகுக்கு மயங்கிட்டிங்களா? இல்ல செட்டப்பா. திருடுறவங்க நான் தான் திருடுறேன்னு படம் போட்டு காட்டுவாங்களா என்ன? ” என்றான் வாய் கூசாமல் முகுந்தன்.

மலரின் அருகில் சென்று ” ஹாய் ப்ளவர் பேபி நீ மட்டும் ம்னு ஒரு வார்த்தை சொல்லு இவங்க எல்லாம் நம்ம ஆளுங்கதான் நல்லாவே பணம் வாங்கியிருக்காங்க போங்கடா நாய்களேன்னா ஓடிடுவாங்க நீ சொலுற ஒரு வார்த்தையிலதான் இருக்கு எல்லாமே. என்னன்னு பார்கிறியா? நீ இன்னைக்கு ஒரு நைட்டுக்கு மட்டும் என் படுக்கைக்கு வரணும். இதுக்கு உனக்கு ஓகேன்னா ஏதோ சின்னப்பொண்ணு பண ஆசையில தெரியாம பண்ணிட்டா இந்த முறை விடுங்கன்னு சொல்லுவேன். இல்லன்னா நீ கம்பி எண்ணத்தான் வேணும். அதை யாராலும் மாத்தமுடியாதுடி ப்ளவர் பேபி இன்னும் பைவ் மினிட்ஸ் உனக்கு டைம் நீ டீலுக்கு ஒத்துவரலன்னா அடுத்து உன் நிலமை அம்பேல்.” என்றான் காமுகன்.

இவ்வளவு நடந்தும் மலர் வாய் திறந்து பேசவில்லை அமைதியாகத்தான் இருக்கிறாள்.

” சார் இது சரிவராது நீங்க கூட்டிட்டு போய் உங்க ஸ்டைல்ல கவனிங்க அப்பயாவது வாய் திறந்து உண்மை வருதான்னு பார்க்கலாம்.” என்றான் அவன் நினைத்தது நடந்துவிட்ட திருப்தியில்.

” என் பொண்ணு மாதிரிமா நீ உன்னைப்போய் அவன் தப்பா பேசிட்டானே நீ அமைதியா இருந்தா என்னமா அர்த்தம் எதாவது பேசு நானும் இங்க நீ வேலைக்கு வந்த நாள் இருந்து பார்கிறேன் நீயும் உன்வேலையும் அது முடிஞ்சா வீடுன்னு இருக்கிற இந்த காலத்துல இப்டி பொறுப்பான ஒரு பொண்ணான்னு நினைத்திருக்கிறேன் மா எனக்கும் மேல ஆட்கள் இருக்கிறாங்க அதனால இதுல என்னால எதுவும் செய்யமுடியாது எடுத்ததுக்கு ஆதாரம் இல்லன்னாலும் கையோட இது உன்கிட்ட இருந்து எடுத்துருக்காங்க அதனால உன் மேல திருட்டுக்கேஸ் போடுவாங்க நீ தான் இனி ஏதாவது பண்ணி இதுல இருந்து வெளிய வரணும் வந்ததும் இந்தா இது என் வீட்டு அட்ரஸ் வந்து என்னை பாரு உனக்கு வேற இடத்துல வேலை வாங்கி தாறேன் என்னால இதை மட்டும் தான் பண்ணமுடியும்.” என்று மலரின் கையில் அவரின் விசிட்டிங் கார்ட்டை வைத்துவிட்டு மனக்கவலையுடன் சென்றார் ஜி எம்.

போலீசார் மலரை கைது பண்ணி அழைத்துசென்றதும். ராணி செய்வதறியாது நின்றுவிட்டு அவளும் பின்தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் போனாள். அங்கு பெண் போலீஸ் மலரை கன்னத்தில் அடித்து அது சிவந்திருந்தது ” கான்ஸ்டபில் இவளுக்கு தண்ணி சாப்பாடு எதுவும் குடுக்காதிங்க வாயை திறந்து நான் தான் எடுத்தேன்னு அவளே ஒத்துக்கனும் அதுவரை அவளை நம்ம ஸ்டையில்ல கவனிங்க நான் வெளிய போய்ட்டு இதோ வாறேன்.” என்றுவிட்டு சென்றாள் ராட்சசி.

ராணி ஸ்டேஷன் சென்றும் எந்த பயனுமில்லை ஒரு முடிவெடுத்துவிட்டு அங்கிருந்து பஸ்ஸிற்கு காத்திராமல் ஆட்டோவில் அவர்களின் ஊருக்கு சென்றாள்.

ராணி வெளியே வந்ததும் முகுந்தன் உள்ளே சென்றான். அவனை பார்த்ததும் அவனிடம் பணம் வாங்கிய போலீஸ் இளித்தபடி வணக்கம் வைத்தான்.

மலர் இருந்த லாக்கப்பின் முன் சென்று ” ஏன்டி உனக்கு எவ்வளவு திமிரு கொஞ்சமும் அசைந்து கொடுக்கமாட்டியோ நான் இப்ப ஒண்ணு சொல்லுறேன் நல்லா கேளு நீ கம்பி எண்ணுறதை உன் நோயாளி அம்மாகிட்ட சொன்னேன்னு வை அப்புறம் அவ கெதி அதோ கெதிதான் இலுத்துக்கிட்டு படுக்கையில கெடக்கிறவ ஒரேடியா மண்டையை போட்டுடுவா எப்டி வசதி இப்பவும் நீ அமைதியாதான் இருப்பியா என்ன? சீக்கிரமா ஒரு முடிவெடு ப்ளவர் பேபி உன் குடுமி இப்போ என் கையில உனக்கு வேற சாய்ஸே இல்ல என் படுக்கைக்கு நீ வந்துதான் ஆகணும் உன்னோட சம்மதத்தை சொல்ல ரெடியா இரு ஓகே உன் அம்மா உயிர் இப்போ உன் கையில இன்னும் கொஞ்ச நேரத்துல திரும்பி வருவேன்.” என்றுவிட்டு சென்றான் முகுந்தன் என்னும் நாய்.

தொடர் வேலை சரியான ஓய்வின்மை மனவுளைச்சல் பயம் என்பன ஒன்றாக சேர்ந்து மயங்கி சரிந்தாள் மலர்.

கொடிமங்கலத்தில் இரண்டு அறை சிறிய ஹால் கொண்ட மலரின் சிறிய வீடு பெண்களினால் நிறைந்திருந்தது.

மலரின் தங்கை கார்த்திகா இன்று சாயந்தரம் பெரியமனுசியாகிவிட்டாள். அப்பொழுதிருந்து ராணியின் கைபேசிக்கு மாலதி அக்கா அழைத்துக்கொண்டிருகிறார். ஆனால் அது எடுக்கப்படவில்லை.

” மரகதம்மா என்ன மணி ஏழாகுது இன்னும் மலரை காணல நல்ல நேரமும் முடியப்போகுது கார்த்திகாவுக்கு தண்ணிவாக்கனுமில்ல.” என்றார் மாலதி.

” அதுதான் எனக்கும் தெரியல மாலதி ஒரு நாளும் இவ்வளவு தாமதமா வரமாட்டாங்க இன்னைக்கு இன்னும் காணோமே இரு ராணிட அம்மாகிட்ட கேட்போம். ஏன்டியம்மா உன் பொண்ணு ராணி போன் ஏதும் பண்ணுச்சா?.”என்றார் பாட்டி

” இல்லம்மா நானும் அவங்களைதான் பார்த்திட்டு இருக்கிறேன் இன்னைக்கு ராணி போன் எடுத்துட்டுபோகலயே பஸ்ஸ தவறவிட்டுடாங்களோ என்னவோ. “என்றார் மகளை காணவில்லை என்ற பதட்டத்தில் இருகிறார் வாணி.

” இன்னும் ஐந்து நிமிசம் பார்த்துட்டு பெரியவங்க நாமலே கண்ட தண்ணி ஊத்திடுவோம் இதெல்லாம் காக்கவைக்ககூடாது. என்றார் மரகதம் பாட்டி.

அவருக்கு கவலை அதிகம் அவர் கோக வேண்டாம்னு சொல்லியும் மலர் கேட்காமல் வேலைக்கு போனதுமே பூஜையறையில் தெய்வங்களை வேண்டிக்கொண்டார். அவளுக்கு இன்று எந்த தீங்கும் நேராமல் இருக்கவேண்டும் என்று ஆனால் காலத்தின் விதிபடி நடப்பது நடந்துதானே ஆகவேண்டும்.

மலரை இன்னும் காணவில்லை என்றதும் சந்திரா அழ ஆரம்பித்துவிட்டார்.

நல்ல நேரம் போவதை உணர்ந்து பெரியவர்களே கார்த்திகாவிற்கு தண்ணீர் ஊற்றி அவளை ஒரு அறையில் விட்டு மாலதி அவளுக்கு தேவையான அனைத்தையும் அவரே வாங்கி அதன் பாவனை முறையும் தெளிவாக சொல்லிக்கொடுத்தார். பின் முட்டை நல்லெண்ணை என்பவற்றை அருகிலிருந்து கொடுத்துவிட்டு நீலாவை அவளின் அருகில் இருக்கவைத்துவிட்டு சந்திராவை பார்க்க சென்றுவிட்டார்.

அதே கொடிமங்கலத்தின் அடுத்த பகுதியில் ஒரு கொல்லர் பட்டறை அங்கு வேலை நடந்துகொண்டிருந்தது. அப்பொழுது ராணி ஆட்டோவில் வந்து இறங்கி நேரே கத்தி ஒன்றை சம்மட்டியால் அடிக்கும் ஒருவனிடம் சென்றாள்.

” அண்ணே உன்கிட்ட பேசணும் இங்க கொஞ்சம் தள்ளி வா.” என்றாள் பதட்டத்துடன்.

அவள் சொன்னதை அவன் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.

” ஐயோ அண்ணே உன் பிடிவாதத்தை விட்டு நான் சொல்லுறதை கேளு பிலீஸ்.” என்று கெஞ்சினாள்.

அவனும் வேலையை நிறுத்திவிட்டு திரும்பி ” இப்ப உன் பிரச்சினைதான் என்ன? ஏன் என்னை இம்சை பண்ணுற முத இங்கயிருந்து போ.” என்றான் கோபத்துடன்.

” நான் உன்னை கூட்டிட்டு போகத்தான் வந்திருக்கேன் நீ என்னோட மதுரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரணும்.” என்றாள்.

” நான் ஏன் அங்க வரணும் நான்தான் எந்த தப்பும் பண்ணலயே நானுண்டு என் வேலை உண்டுன்னு இருக்கிறேன்.” என்று சற்று தள்ளாடியபடியே அவளின் அவசரம் புரியாமல் பேசினான்.

” ஐயோ ஒரு பொய் கேஸுல நம்ம மலரை பிடிச்சிட்டு போயிருக்காங்க நீ வந்து அவளை வெளிய எடுண்ணா பிலீஸ்.” என்றாள்.

” அதுசரி யாரு மலர்.”

” மூணு மாசத்துல எல்லாம் மறந்துபோயிடுச்சா இல்ல மறந்த மாதிரி நடிக்கிறியா? சந்திராம்மாவோட பெரிய பொண்ணு அதாவது உன்னோட பொண்ணாட்டி மலர்க்கொடி நியாபகம் இருக்கா? இல்ல எங்கயோ கேள்வி பட்ட மாதிரி இருக்கா?.” என்றாள் நக்கலுடன்.

” கட்டின புருசன் நீ இருக்கும் போதே அவளை ஒரு பொறுக்கி நாய் கேவலமா அசிங்கமா பேசி பொய் கேஸ் போட்டு கைது பண்ண வைச்சிட்டான். அப்புறம் நீ எல்லாம் என்ன மனுசன். புருசன் இருந்தும் ஒரு பொண்டாட்டி வெளிய வேலைக்கு போய் கண்டவன் வாயால கேவலமா கதை கேட்க வேண்டியதா இருக்கு. அவ மேல இருக்கிற கோபத்தை தூக்கிப்போட்டு சீக்கிரமா வாண்ணா நீ என்ன பண்ணுவியோ மலர் வீட்டுக்கு வரணும் நான் போய் அவளுக்கு நைட் வேலை இருக்கு காலையில வந்திடுவான்னு சந்திராம்மாகிட்ட சொல்லுவேன் அவங்க யாருக்கும் இதெல்லாம் தெரியவேணாம் தாங்கமாட்டாங்க போ சீக்கிரம் அவ பாவம்ணா வாய் திறக்கலன்னாலும் உள்ளுக்குள்ள பயந்திருப்பா அந்த பொறுக்கி முகுந்தன் மேலதான் எனக்கு சந்தேகம் அவன்தான் நம்ம மலரை ஒரே தொல்லை பண்ணுவான் இது தான் அவன் இருகிற அட்ரஸ் நீ அவனை பிடிச்சி இரண்டு தட்டு தட்டி விசாரிச்சா உண்மை தெரியும்.” என்று அங்கு நடந்தவற்றை சொல்லிவிட்டு அவள் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

அவனிடம் வேலை செய்யும் ராமு என்பவன் ” என்ன அண்ணே அண்ணிக்கு இம்புட்டு பெரிய கஷ்டம் வந்திருக்கு நீ மசமசன்னு நிக்கிற இந்தா உன் புல்லட் சாவி எடுத்துகிட்டு போ சீக்கிரம்.” என்றான்.

” யாருடா அவ மலரு நான் எவளுக்காகவும் எங்கையும் போகமாட்டேன்.” என்றான். தமிழ் அருகில் மீதமிருந்த மதுபானத்தை குடித்தபடி

மலரின் போதாத காலம் சரியாக வேலை செய்கிறதா? இல்லை மலரோ தமிழோ நினைத்திருந்தால் சதியை மதியால் வெண்றிருக்கலாமோ? காலத்தின் கையில்.

Advertisement