” ஏய் அறிவு கெட்டவளே அறிவு இது ஒண்ணும் உன் வீடு இல்லடி நாம தங்கியிருக்கிற ஆஸ்டல் அது தெரியுதா?. உனக்கு அந்த வாடன் ஹிட்லர் பொம்பளை நீ தினமும் லேட்டா எழுறதனால என்னையும் சேர்த்து திட்டியே காதுல ரெத்தம் வர வைக்குதுடி அறிவு. அம்மா தாயே இனி என்னால முடியாதுடி சீக்கிரமா எழுந்து ரெடியாகு இப்ப டைம் செவன் தேர்ட்டி ஆகிடுச்சிடி ஹிட்லர் வந்து ரூம் கதவை தட்டும் முன்ன எழுடி சரியா.” என்றுவிட்டு செல்லக்கோபத்துடன் சென்றாள் சாலினி.
தினமும் அறிவு எப்படியோ வாடனிடமிருந்து தப்பித்துவிடுவாள் திட்டுவாங்காமல் அவளுக்கும் சேர்த்துவைத்து சாலினி தான் திட்டுவாங்குவாள். கடந்த ஒரு வருடத்தில் சாலினி திட்டுவாங்காத நாளை விரல்விட்டு எண்ணிவிடலாம் அதனால் இன்று சாலினியின் பிறந்தநாள் ஆகையால் இன்றாவது ஹிட்லரிடம் திட்டுவாங்காமல் தப்பித்துவிடலாம் என நினைத்து தோழியிடம் காலில் விழாதளவு கெஞ்சி கேட்டுக்கொண்டு அவள் பாடசாலைக்கு செல்ல குளித்து ரெடியாக குளியலறைக்குள் சென்றுவிட்டாள்.
அறிவும் சாலினியும் திருச்சியில் ஒரு ஆதரவற்றோர் ஆசிரமத்தில் ஒன்றாகத்தான் வளர்ந்தனர். இருவரும் அங்கிருந்தே நெருங்கிய தோழிகளாகிவிட்டனர்.
ஒன்றாக படித்து இருவரும் ஒரே பாடத்திற்கு ஆசிரியர்களாகிவிட்டார்கள்.
முதல் நியமனமே மதுரையில் கிடைத்து வருடம் ஒன்றாகிவிட்டது.
“ஏன்டி அறிவு நானும் குளிச்சிட்டு வந்துட்டேன் இன்னுமாடி நீ எழுந்துக்கல இன்னைக்கும் திட்டு வாங்குறது உறுதி நல்ல மனசுடி உனக்கு மகராசியா, தூங்கு நீ.” என்றாள்.
” சிவ சிவா இந்த ப்ரெண்ட்ஸை ஏன் தான் படைச்சியோ தொல்லைங்க என்னடி இப்ப உன் பிரச்சினை அந்த ஹிட்லர்கிட்ட இருந்து நீ திட்டுவாங்காம தப்பிக்கனும் அவ்வளவுதானே இந்த அறிவை நம்பு நான் எப்பவும் உன்னை கைவிடமாட்டேன் இரு இன்னும் பத்து நிமிசத்துல நான் ரெடியாகலன்னா என்னன்னு கேளுடி சாலு ம் மறந்துட்டேன் பாரு தமிழ் ஆசிரியர் சாலினி அவர்களின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.” என்று அவளை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் அறிவு.
” சீ போடி எச்சி வாயால அசிங்கம்பண்ணிட்டு.” என்று கன்னத்தை தொடைத்துவிட்டு அறிவின் பேக்கை சரி பார்த்தாள் சாலினி.
” ரொம்பத்தான் சிலுத்துகிற உதட்டுல கொடுக்கத்தான் உனக்கு ஆள் இருக்கே அதுதான் நான் கன்னத்துல உம்மா கொடுத்தேன் ஆசைய பாரு கள்ளிக்கு இன்னைக்கு என்னை டீல்ல விட்டுட்டு நீயும் உன் ஆளும் பர்த்டே கொண்டாட ஊர் சுத்த போயிடுவிங்க நான் தான் பாவம்.” என்று தோளில் இடித்துக்கொண்டு குளிக்க சென்றாள் அறிவு.
அறிவு வந்ததும் அவள் ரெடியாவதற்கு வசதியாக சேலையிலிருந்து அனைத்தும் கட்டிலில் வைக்கப்பட்டிருந்தது சாலினியை மனதிற்குள் கொஞ்சியபடியே ரெடியாகி அவளின் தோள்பையை எடுத்துக்கொண்டு அறிவின் பிளான் படி ஹிட்லர் குளிக்கச்சென்றதும் அவரின் ரூம் சென்று கண்ணாடியை ஒழித்துவைத்துவிட்டாள் அது இல்லாமல் வாடன் அவரின் ரூமை விட்டு வெளியே வந்ததில்லை இன்றும் வரமாட்டார் என்று நம்பி ஒழித்துவிட்டு வந்து சாலினியின் கையை பிடித்து அழைத்துச்சென்றாள்.
” அப்பாடா என்ன தங்கம் பண்ணின நீ சொன்ன மாதிரியே திட்டுவாங்காம தப்பிச்சிட்டமே.” என்றாள் தெரிந்துகொள்ளும் ஆவலுடன்.
” அதுவா சொன்னா அடிக்க மாட்டியே டி சாலு.”
” இல்ல தங்கம் ஓவரா பண்ணாம என்னன்னு சீக்கிரமா சொல்லேன்டி.”
” அது ஒண்ணுமில்ல அந்த குண்டு பூசனி போடுமே சோடா புட்டி கண்ணாடி அதை ஒழிச்சிவச்சிட்டேன்டி அது போட்டுகிட்டு என்ன சிலுப்பு என்ன நடை அதனால தான் அப்புடி பண்ணினேன் அது இல்லாம வெளிய வராது நாம திட்டுவாங்காம தப்பிச்சிட்டோமே.” என்றாள் ஏதோ சாதனை பண்ணியது போன்று சிரித்துக்கொண்டிருக்கின்றாள்.
” அட சீ நானும் என்னவோன்னு நினைச்சேன் நீ இன்னும் பால்வாடி பாப்பா மாதிரி சில்லியா நடந்துக்கிறியேடி ஒரு B,A தமிழ் டீச்சர் மாதிரி நடந்துக்கோ எப்பதான் வளருவியோ போ அதுதான் இன்னும் உன்னை எவனுமே திரும்பியும் பார்கலபோல நீ எப்ப லவ் பண்ணி கல்யாணம் பண்ணுறது நான் அதுக்குபிறகு எப்ப பண்ணிக்கிறது ஒரேடியா எனக்கும் சுரேஸுக்கும் அறுவதாங்கல்யாணம்தான் நடக்கும் போலயே நீ பண்ணுறத பார்த்தா அப்புடிதான் தெரியுது.” என்றாள் சாலினி.
அவர்கள் இருவரும் சிரித்து கேலி பேசியதை இரு கண்கள் பார்த்துச்சென்றது அந்த கண்ணில் கோபமா? பாசமா? காதலா? எதுவென்று சரியாக சொல்லமுடியாத உணர்வொன்றை காட்டிவிட்டு அவர்கள் பாடசாலைசெல்லும் பஸ்ஸும் வந்ததும் அக்காரும் அங்கிருந்து சென்றது.
கடந்த ஆறுமாதமாக இது தினமும் நடக்கும் ஒன்றுதான் ஆனால் இது நாள் வரை இதை பெண்கள் இருவரும் அறிந்துகொள்ளவில்லை.
தனியார் பாடசாலைக்கு அவர்களிருவரும் வரவும் பிரயர் பெல்லும் அடித்தது ” சரியான நேரத்துக்கு வந்துட்டோம் பார்த்தியா?.” என்றாள் அறிவு.
” ம் என்ன இன்னும் கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா சுரேஸை பார்த்திருக்கலாம் எங்க எல்லாம் உன்னாலதான்டி கும்பகர்ணி.” என்றாள் பிறந்தநாளன்று அவளின் வருங்கால மணவாளனை பார்க்கமுடியவில்லை என்கின்ற மனவருத்ததில் இருந்தாள் சாலினி.
முதலாவது பாட பெல் அடிக்கவும் இருவரும் வகுப்பறைக்குள் சென்றனர்.
ஆசிரமத்தில் சாலினி அமைதியானவள் ஆனால் அறிவு மிகவும் துடினமானவள். அங்கு அவர்களும் இன்னும் பல குழந்தைகளும் இருந்தாலும் ஆசிரம நிர்வாகி ஜானகியம்மாவிற்கு அறிவின் மீது தனிப்பாசம் பிள்ளைகள் இல்லாத அவருக்கு ஆசிரமம் நடத்தும் திட்டம் வரவும் அவரின் கணவரின் துணையுடன் சில சொத்துக்களை விற்று ஆசிரமம் ஆரம்பித்தார்.
கணவரின் தொழிலில் வரும் லாபத்தில் ஆசிரமத்திற்கு ஒரு பங்கு என பிரித்து நடத்தினார்.
அவரின் கணவனும் வயது முதிர்வினால் இறந்துபோனதும் ஆபிஸ் ஆசிரமம் என அனைத்தையும் இவரே பார்த்க்கொள்கின்றார்.
அவரின் ஆதரவில்தான் சாலினியும் அறிவும் படித்து ஆசிரியர் பணியை தேர்வுசெய்து மேலும் படித்து இன்று பணியிலிருக்கின்றார்கள்.
இருவரும் மாதசம்பளத்தில் ஒருபங்கை ஆசிரமத்திற்கு மாதம் மாதம் அனுப்பிவைத்துவிடுவார்கள். விடுமுறை நாட்களில் சென்றுவருவதும் உண்டு.
அழகிய முகவடிவம் மெல்லிய உடல்வாகு இடைவரை நீண்ட கூந்தல் பார்ப்பவரை மீண்டும் பார்க்கவைக்கும் தோற்றம். நேர்த்தியாக சேலைகட்டி சிறிதாக முகத்தை அழகுபடுத்தி நடந்துவந்தால் ஓவியம் ஒன்று அசைந்துவருவது போன்று இருப்பாள் இவள்தான் அறிவுமணி.
பாடசாலை இடைவேளை நேரத்தில் சுரேஸிடம் சென்று பேசி சமாதானப்படுத்தி அழைத்துவந்து சாலினியின் முன் நிறுத்தினாள் அறிவு.
” இந்தாடியம்மா உன் வருங்கால புருசனை உன் கையில ஒப்படைச்சிட்டேன் இனி நீயாவது அவராவது ஆளை விடு.” என்றுவிட்டு அவளின் அடுத்த வகுப்பிற்கு சென்றுவிட்டாள்.
சுரேஸ் அறிவியல் ஆசிரியர் இந்த பாடசாலையில் தான் இருவரும் சந்தித்து பழகி அது காதலில் ஆரம்பித்தது அது சுரேஸின் குடும்பத்திலும் சொல்லப்பட்டு அவர்களும் சாலினியின் குணம் பிடித்துப்போய் சம்மதித்துவிட்டனர்.
அவர்களும் நடுதரவர்கத்து குடும்பம்தான் ஆனால் சாலினிதான் அவள் திருமணம் முடித்து சென்றுவிட்டாள் அறிவு தனித்துவிடுவாள் என்று சுரேஸின் குடும்பத்தில் சொல்லி கொஞ்சம் கால அவகாசம் கேட்டிருக்கின்றாள்.
அன்று மாலைநேரம் சுரேஸும் சாலினியும் வெளியே சென்றுவிட்டனர்.
அறிவையும் அழைத்தார்கள் ஆனால் அவளோ அவர்களுக்கு நடுவில் தொல்லையாக இருக்கவிரும்பாமல் ஆஸ்டல் போவதாகசொல்லிவிட்டு பஸ்ஸிற்காக காத்திருக்கின்றாள்.
அப்போது அவளின் கைபேசி அழைத்தது அதை எடுத்து காதில் வைத்தவள் ” ஹலோ ” என்றாள்.
ஆனால் அந்த பக்கம் எந்த சத்தமும் இல்லை.
மீண்டும் இரண்டு முறை அழைப்பு வந்தது அதையும் எடுத்து காதில் வைத்தாள் அப்போதும் அதேபோன்று எவ்வித சத்தமும் இல்லை.
சற்று தொலைவில் அவள் போகும் பஸ் வந்தது அதை பார்த்துவிட்டு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏறும் இடத்திற்கு வருவதற்கு வந்தாள். அப்போது அவளை மறைத்து கார் ஒன்று வந்து நின்றது கார் கதவை திறந்து வெளியே ஒரு கையை நீட்டி அவளின் கையைபிடித்து உள்ளே இழுத்துப்போட்டுக்கொண்டு மின்னல் வேகத்தில் அவ்விடம் விட்டு மறைந்துவிட்டது.
” ஏய் வாயைதிறந்து கத்தினா இந்த கத்தியால சொருகிடுவேன் பார்த்துக்க மூச் சத்தமே கேட்க கூடாது புரிஞ்சுதா?” என்று தடியன் ஒருவன் கத்தியைகாட்டி மிரட்டினான்.
அவளும் யார் இவ்வாறு செய்தார்கள் என்று யோசித்தபடி சத்தமில்லாமல் செய்வதறியாது இருந்தாள் பேதை.
” ஓஹோ உன்னோட தினமும் வருமே அந்த பாப்பாவா?.” அதுவும் சோக்கானதுதான் ஆனா பாரு எங்க பாஸுக்கு நீ தான் வேணுமாம்.” என்றான் நக்கல் சிரிப்போடு.
மீனாட்சி இல்லம்.
மீனாட்சி பாட்டி பேரனை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தார். ” டேய் நீ ஏன் இப்புடி எங்களை கெஞ்சவைக்கிற முக்கியமான விசயம் பேசணும்னு சொல்லுறேன் நீ பிடிகொடுக்கமாட்டேங்கிற உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கிற நீ இன்னைக்கு நீ பேசிதான் ஆகனும்.” என்று பிடிவாதம் பிடித்தார்.
” பாட்டி நான் சொல்லுறத கேளுங்க நீங்க என்ன பேசப்போறிங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் சரியா?. அதுக்கு இன்னைக்கே உங்களுக்கு சரியான பதில் சொல்லுறேன் அதுவிசயமாத்தான் நான் இப்ப வெளியபோறேன். போய் திரும்பி வந்ததும் சொல்லுறேன் இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவுகட்டுறேன்.” என்று கோபமாக கூறிவிட்டு வேக எட்டுக்கள் வைத்து சென்றுவிட்டான்.
மீனாட்சி அம்மன் கோவில்.
சாலினியும் சுரேஸும் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அவளின் கைபேசி அழைப்புவிடுத்தது அதை எடுத்து காதில்வைத்தாள். ” ஹலோ.” என்றாள்.
மறுபக்கம் ” ஹலோ யாரு சாலினியா?. நீங்க என்ன பெரிய படிப்பு படிச்ச டீச்சர் ஒரு பொறுப்பில்ல அக்கறை இல்ல ஆஸ்டல் வர லேட் ஆகும்னா ஒரு தகவல் சொல்லுற பழக்கமில்ல என்ன பொருப்பில்லாத பொண்ணுங்களோ போங்க அறிவும் போன் ஆன்சர் பண்ணமாட்டுறா இரண்டு பேரும் வாங்க இன்னைக்கு உங்க ஆசிரம நிர்வாகிட்ட சொல்லி உங்களை இங்கயிருந்து அனுப்பனும் காலையில அந்த சண்டிராணி அறிவு என் ரூமுக்கு வந்து என் கண்ணாடியை எடுத்து ஒழிச்சிவச்சிட்டாள். பாமாதான் இதை சொன்னா இன்னைக்குதான் உங்க லாஸ்ட் டே இந்த ஆஸ்டல்ல..” என்று கோபத்தில் சாலினி பேசவந்ததையும் கேட்காமல் கத்திவிட்டு வைத்துவிட்டார் பெண் ஹிட்லர்.
” ஏங்க இன்நேரம் அறிவு ஆஸ்டல் போயிருக்கனுமே நாம அவளை பஸ் நிலையத்துல விட்டுவந்து இரண்டு மணிநேரமாகுது ஹிட்லர் வேற இன்னும் அறிவை காணோம்னு சொல்லுது என்னங்க நானும் கால் போட்டேன் ஆன்சர் பண்ணல சரி போய் பேசுவான்னு விட்டுட்டேன் என்னாச்சோ தெரியல வாங்க போவோம்.” சுரேஸையும் அழைத்துக்கொண்டு கோவிலில் இருந்து வெளியேறுகின்றாள்.
” இந்த பாமா பிசாசை என்னதான் பண்ணுறதோ தெரியல அவளுக்கு அறிவை சுத்தமா பிடிக்கிறதே இல்ல குண்டு பூசனிகிட்ட போட்டுக்குடுத்துட்டா அதுவேற தாம்தூம்னு குதிக்கிது. இதுக்கு என் தங்கத்துக்காக காலையில சின்ன திட்டே வாங்கிருக்கலாம் போல ஹிட்லர்ட்ட சே.” அறிவின் மீது வைத்த அன்பிற்காக கோபம் பதட்டம் என்று பல உணர்வுகளுடன் போராடுகின்றாள் சாலினி.
பாமாவை திட்டியபடியே வெளியேவந்தவளின் கையை பிடித்து நிறுத்தி அடுத்த பக்கம் பார்க்குமாறு கூறி சாலினியின் முகத்தை திருப்பினான் சுரேஸ்.
பார்த்தவள் ” தங்கம்.” என்று கத்தியபடியே நடக்க இருக்கும் விபரீதம் தெரியாமல் ஓடினாள்.